மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம்



மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிப்பதைக் கண்டு கொள்ளாமல் தங்கள் தங்கள் சுய பெயர்களில் பதிவு செய்து ஆதிக்கம் செய்கின்றனர். அல்லாஹ்வின் தெளிவான இந்தக் கட்டளையைப் புறக்கணித்து ஒவ்வொரு பிரிவாரும் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறுபோட்டுள்ளனர். மற்றவர்களின் சொத்துக்களைப் போலிப் பத்திரங்கள் தயாரித்து தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் படுகிறபாடுகளை இப்போது ஊடகங்களில் பார்த்து வருகிறோம் அல்லவா? இங்கு கூட தங்களின் பண பலம் அரசியல் செல்வாக்குக் கொண்டு தண்டனையிலிருந்து சிலர் தப்பி விடலாம்.
ஆனால் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை போலிப் பத்திரங்கள் மூலம் ஆதிக்கம் செய்து, அட்டூழியம் செய்கிறவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் தப்ப முடியுமா? ஒருபோதும் தப்ப முடியாது. அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான பள்ளிகளை இந்த அறிவீனர்கள் கூறு போட்டு ஆதிக்கம் செலுத்தி வருவது உண்மை தான். ஆயினும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் கடமை என்ன? இதற்கு நபி(ஸல்) அவர் கள் 33:21 கூறுவது போல் வழிகாட்டவில்லையா? நிச்சயம் வழிகாட்டி இருக்கிறார்கள். அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ் முஷ்ரிக்குகளிலும் மிகக் கொடிய முஷ்ரிக்குகளான தாருந்நத்வா மதகுருமார்கள் கையில் சிக்கி இருந்தது. அங்கு எண்ணற்ற சிலைகளும், சமாதிகளும் நிறைந்து காணப்பட்டன.
இந்த நிலையிலும் நபி(ஸல்) அங்கு சென்று தான் அல்லாஹ்வைத் தொழுதார்கள். அப்போது அந்த தாருந்நத்வா குருகுல மடத்தின் தலைமை இமாமாகவும் அந்த மக்களால் அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தை எனப் போற்றப்பட்ட, நபி(ஸல்) அவர்களால் அபூ ஜஹீல்- மடமையின் தந்தை என அடையாளம் காட்டப்பட்டவனும், இந்த அபூ ஜஹீலின் தோழர்களும் நபி(ஸல்) கஃபாவில் அல்லாஹ்வைத் தொழும்போது பெரும் துன்பங்களைக் கொடுத்தார்கள்.
ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் தொழுது கொண்டிருக்கும்போது அவர்கள் மீது அழுகிய ஒட்டகக் குடலை அபூ ஜஹீல் வகையறாக்கள் போட்டதால் நபி(ஸல்) மூச்சுத் திணறி பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். அந்த காஃபிர்களோ கைகொட்டிச் சிரித்து மகிழ்ந்தார்கள் என்ற வரலாற்றைப் பார்க்கிறோம்.
இதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன? கஃபதுல்லாஹ் எண்ணற்ற சிலைகளைக் கொண்டும், சமாதிகளைக் கொண்டும் நிரப்பப் பட்டிருந்தாலும் அது அல்லாஹ்வின் வீடு என்பதில் எவ்வித மாற்றமும் பெறவில்லை. அதனால் தான் நபி(ஸல்) அங்கு சென்று மிகமிக ஆபத்தான, துன்புறுத்தல்கள் நிறைந்த நிலையிலும் அல்லாஹ்வைத் தொழுது தமது உம்மத்திற்கு வழி காட்டி இருக்கிறார்கள். சிலைகளும், சமாதிகளும் இருக்கும் நிலையிலேயே மதீனாவிலிருந்து கஃபாவை நோக்கியே தொழுதார்கள். இது இறைவனின் கட்டளையாகும்.
அதேபோல் அல்லாஹ்வின் பள்ளிகளைக் கூறு போட்டு அவரவர்கள் பெயர்களில் பதிவு செய்து பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற அட்டூழியங்களை நடைமுறைப்படுத்தி வந்தாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள் என்ற நிலையிலிருந்து மாறப் போவதில்லை.
எனவே நபி(ஸல்) அவர்கள் காட்டித் தந்த அழகிய முறைப்படி நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் அப்பள்ளிகளில் சென்று அல்லாஹ்வைத் தொழுவதே சமுதாய ஒற்றுமைக்கு வழி வகுக்கும். அவர்கள் எவ்வளவு பெரிய ´ஷிர்க், பித்அத்களில் மூழ்கி இருந்தாலும், அடிப்படை விஷயங்களில் தொழுகையில் நபி(ஸல்) காட்டித் தந்ததையே பின்பற்றுகின்றனர். ஐங்கால தொழுகைகளில், ரகாஅத்களில், ருகூஃ, சுஜூதுகளில், இருப்பில் நபி(ஸல்) காட்டித் தந்தபடிதான் செய்கின்றனர். 39:17,18 இறைக் கட்ட ளைகள்படி அவர்கள் செய்யும் இந்த அழகானவற்றில் நேர்வழி நடக்க விரும்பும் முஸ்லிம்கள் பின்பற்றுவதில் குர்ஆன், ஹதீஸுக்கு முரண்பட்ட செயல் ஒன்றுமில்லை.
ஒருவருடைய சுமையைப் பிரிதொருவர் சுமக்க மாட்டார் என்று குர்ஆன் 6:164, 17:15, 35:18, 39:7, 53:38 போன்ற பல இடங்களில் அல்லாஹ் நேரடியாகக் கூறியுள்ளான். தொழவைக்கும் இமாமின் பித்அத், குஃப்ர், ´ஷிர்க் காரணமாக அவரின் தொழுகை அவரது முகத்தில் எறியப்பட்டாலும், அவர் பின்னால் தொழும் நேர்வழி நடக்கும் முஸ்லிம்களின் தொழுகையில் அணுவளவு கூட குறைவு செய்ய மாட்டான் அல்லாஹ்.
அவர்கள் பின்னால் நின்று தொழக்கூடாது என்று சட்டம் சொல்லும் மதகுருமார்கள் 9:31, 42:21, 49:16 வசனங்களின் வழிகாட்டல்படி தர்கா, மத்ஹபினரை விட கொடிய ´ஷிர்க் செய்கிறவர்களாகவே இருக்கிறார்கள். காரணம் முன்னவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் முன் சென்ற இமாம்கள், வலிமார்கள் போன்றோரை வசீலாவாக-இடைத்தரகர்களாக மட்டுமே ஆக்குகிறார்கள்.
இவர்களோ அல்லாஹ் விதிக்காத சட்டங்களை விதித்து 42:21 வசனப்படி அல்லாஹ்வுக்கே இணையாளர்களாக ஆகிறார்கள். 21:92, 23:52 இறைக் கட்டளைக்கு முரணாகச் சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறார்கள். தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால் இங்கே அவர்களுக்கு மிகக் கடுமையான தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும்; தீர்ப்பு மறுமையில் என்றிருப்பதால் இவ்வுலகில் அவர்கள் விருப்பப்படி 9:34 வசனம் கூறுவது போல் மக்கள் சொத்துக்களைத் தவறான முறைகளில் சாப்பிடுகிறார்கள். 49:16 வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க முற்படுகிறார்கள்.
குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாய் கிழியப் பேசும் இவர்கள் குர்ஆன், ஹதீஸ்படி நடப்பதில்லை என்பதே உண்மை. ஈமானுக்கு அடுத்து அடிப்படையான ஐங்காலத் தொழுகைகளையே உள்ளச்சத்தோடு, பேணுதலோடு அன்றாடம் தவறாமல் ஜமாஅத் தோடு சேர்ந்து தொழாத இவர்கள் வேறு எந்த மார்க்க விஷயங்களில் குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றப் போகிறார்கள்?
அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளை 18:28, 20:16, 25:43, 28:50, 38:26, 45:23, 79:40,41 இத்தனை இறைவாக்குகளில் மனோ இச்சைப் பற்றி எச்சரித்திருந்தும் அவற்றைக் கண்டு கொள்ளாமல் நிராகரித்து விட்டு தங்கள் மனோ இச்சை சரிகாணும் பெயர்களில் பத்திரப் பதிவு செய்து அபகரித்துக் கொண்டாலும் அவை அல்லாஹ்வின் பள்ளிகள்தான். இது அன்று குறைஷ் குஃப்பார்கள் அல்லாஹ்வின் வீடான கஃபதுல்லாஹ்வை அபகரித்து வைத்திருந்த செயலுக்கு ஒப்பானதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001