சனி, நவம்பர் 05, 2011

ஒத்தி வீட்டை உபயோகிப்பது ஹராமா? ஹலாலா?


  பொருட்களை அடைமானமாக வைத்து உதவி பெற்றுக் கொள்வது ரஸுல் (ஸல்) அவர்கள் காலத்திலேயே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அவ்வகையில் அசையா மற்றும் அசையும் சொத்துக்களை அடைமானமாகக் கொடுத்து, வாங்கி அதற்கு ஈடான உதவியை (பொருளாதாரமாகவோ, பண்டமாற்றாகவோ) பெறலாம், கொடுக்கலாம். பெரும்பாலும் தற்காலத்தில் பண்டமாற்று இல்லையென்பதால் மக்கள் பொருளாதார உதவியையே பெற்று வருகின்றனர்.
    இந்த இடத்தில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அடைமானமாக ஒன்றைப் பெறுபவர். அதனைக் கொடுத்தவர் மீட்டுச் செல்லும் வரை, அதனைப் பாதுகாக்கும் உரிமையைத்தான் பெறுகிறாரே அல்லாமல் பயன்படுத்தும் உரிமையை அல்ல. இதனைப் புரிந்து கொள்ளாமல் பலர் அடைமானமாகப் பெற்றவற்றை பயன்படுத்துகின்றனர். இது தவறாகும். குறிப்பாக அடைமானமாகப் பெறப்படும் நகைகள் மற்றும் வீடு தற்காலிக பாதுகாவலரால் பரவலாக பயன்படுத்தப் படுகின்றன. இது ரஸுல் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறைக்கு மாற்றமானதாகும். தவிர இதனை வட்டி என்றே ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஸஹீஹுல் புஹாரி 2511,2512 ஆகிய ஹதீஸ்களில் இது குறித்து விபரமாக விளக்கப்பட்டுள்ளது.
    'அடகு வைக்கப்பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவன்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 2511)
    'அடகு வைக்கப்பட்ட பிராணிக்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் முதுகில் (அடகு வாங்கியவன்) சவாரி செய்யலாம். பால் கொடுக்கும் பிராணி அடகு வைக்கப்பட்டிருப்பின் அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக அதன் பாலை (அடகு வாங்கியவன்) அருந்தலாம். சவாரி செய்பவனும், பாலை அருந்துபவனும் தான் அதன் (பராமரிப்புச்) செலவை ஏற்க வேண்டும்' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புஹாரி 2512)
    இதன்படி அடைமானமாகப் பெற்ற பொருளை உபயோகிக்க நாடுபவர் அதற்கான கூலியை உரியவருக்கு சேர்ப்பிக்க வேண்டும். கால்நடைகளை அடைமானமாகப் பெற்றவர் அவற்றை பராமரித்து வரும் காலம் வரை அவற்றிலிருந்து பால் அருந்தலாம். இவ்வகையில் நகைகள் மற்றும் வீடு போன்றவற்றை அடைமானமாகப் பெறுபவர் அவற்றை உபயோகப்படுத்தினால் அவற்றுக்கான கூலியை (வாடகையை) உரியருக்கு கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட வில்லையாயின் நாம் அனுபவிப்பது வட்டியாகும் என் ரஸுல் (ஸல்) அவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கையை நாம் உணர்ந்து கொள்வது அவசியம்.
    இந்நிலையில் வீட்டை அடைமானமாகப் பெற்றவர் அவ்வீட்டைப் பராமரித்து விடுவதனால் அதனைப் பயன்படுத்துவது தவறல்ல என்ற கருத்து பரவலாக எடுத்து வைக்கப்படுகின்றது. இது ஒரு தவறான வாதமாகும்.
    முதலில் பராமரிப்பு அவசியப்படக்கூடிய சிதிலமடைந்த பழுதடைந்த வீட்டை யாரும் அடைமானமாகப் பெற்றுக் கொள்வதில்லை. எனவே பராமரிப்பு என்று வாதிடுவதெல்லாம் தனது கருத்தை உறுதிப்படுத்தத் தானே அல்லாமல் நியாயப்படுத்த அல்ல. ஒருவேளை அப்படிப்பட்ட வீட்டை ஒருவர் பெற்றுக் கொண்டாலும் கூட சந்தை நிலவரப்படி வாடகை கணக்கிட்டு அதிலிருந்து பராமரிப்பு செலவை கழித்துக் கொண்டு மீதத்தைக் கொடுக்க வேண்டும். இதுவே நியாயமான தீர்வாக இருக்க முடியும். ஆனால் விட்டை அடைமானமாகப் பெறும் எவரும் இவ்வாறு நடந்து கொள்வதில்லை. பராமரிப்பு அவசியப்படாத வாழத்தகுதியான வீட்டையே அடைமானமாகப் பெற முன்வருகின்றனர். பின்னர் அதனை சொந்த உபயோகத்திற்கோ அல்லது வாடகைக்கு விடுவதற்கோ பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஒரு வகை சுரண்டலேயாகும். ஒருவரது தேவையை பயன்படுத்தி அவரது உரிமையை பறிப்பதாகும். எனவே தான் ரஸுல் (ஸல்) அவர்கள் இதனை (இவ்வாறு பயன்படுத்துவதை) வட்டி என குறிப்பிட்டு எச்சரித்துள்ளார்கள்.
    மேலும் வேறு ஒரு அறிவிப்பில் பிற்காலத்தில் வட்டி வேறு பெயர்களில் பரவலாக பயன்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல் இதுவும் 'ஒத்தி' என்ற பெயரில் பரவலாக நடைமுறைப்படுத்தப் படுகிறது.
    நாம்தான் எச்சரிக்கையாக இதிலிருந்து தவிர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக