செவ்வாய், பிப்ரவரி 07, 2012

இஸ்லாத்தின் பார்வையில் இத்தா கடமையும் இல்லாத விதிமுறைகளும்

o கணவனை இழந்த பெண்களின் இத்தாக் காலம்
o விவாகரத்து செய்யப்பட்ட பெண்களின் இத்தாக் காலம்
o மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்
o கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்
o எதற்காக இறைவன் இத்தாக் காலத்தை ஏற்படுத்தியுள்ளான்?
o இத்தாக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள்
o இத்தாவிலிருந்து வெளிவரும் போது
o இத்தாவில் இல்லாத விதிமுறைகள்
இத்தா என்பதற்கு கணித்தல், எண்ணுதல் என்று பொருள்படும். இஸ்லாமிய மார்க்கத்தில் கணவனை இழந்த பெண்களும் தலாக் (மணவிலக்கு) செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் மறுமணம் செய்யாமல் காத்திருப்பது கடமையாகும். இவ்வாறு காத்திருப்பதற்கு அரபியில் ‘இத்தா’ என்று சொல்லப்படும்.
இத்தாவின் வகைகள்
இஸ்லாம் இத்தா அனுஷ்டிக்கும் பெண்களைப் பொறுத்து இக்காலத்தை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றது.
1. கணவனை இழந்த பெண்களின் இத்தாக் காலம்:
கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனது திருமறையில்,
‘ உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 2:234)
2. விவாகரத்து செய்யப்பட்ட பெண்களின் இத்தாக் காலம்:
விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் மறுமணம் செய்யக் கூடாது என இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனது திருமறையில்,
‘விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அழ்ழாஹ் மிகைத்தவன் ஞானமிக்கவன்.’ (அல்குர்ஆன் 2:228)
குறிப்பு: தலாக் சொல்லப்பட்ட பெண்களைப் பொருத்து தலாக்குடைய இத்தாக் காலம் மாறுபடும். (பார்க்க: ஸூரதுத் தலாக் அத்தியாயம்)
3. மாதவிடாய் அற்றுப் போன பெண்களின் இத்தாக் காலம்:
மாதவிடாய் அற்றுப் போன பெண்கள் மூன்று மாதங்கள் ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனது திருமறையில்,
‘உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.’ (அல்குர்ஆன் 65:04)
4. கர்ப்பிணிப் பெண்களின் இத்தாக் காலம்:
கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை ‘இத்தா’ இருக்க வேண்டும் என்று இஸ்லாம் குறிப்பிடுகின்றது. இறைவன் தனனது திருமறையில்,
‘உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக்கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக்கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அழ்ழாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.’ (அல்குர்ஆன் 65:04)
எதற்காக இறைவன் இத்தாக் காலத்தை ஏற்படுத்தியுள்ளான்.
இத்தாக் காலத்தை எதற்காக இறைவன் ஏற்படுத்தினான் என்ற காரணங்கள் அல்குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ குறிப்பிடப்படவில்லை. எனினும் நடைமுறை ரீதியாக ஏற்படுகின்ற பின்வரும் சில பிரச்சினைகளுக்கு தீர்வுகாண இந்த இத்தாக் காலம் துணையாக உள்ளது.
குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படாதிருத்தல்
ஒரு பெண் கணவனை இழந்த அல்லது தலாக் சொல்லப்பட்ட மறுநிமிடம் திருமண பந்தத்தில் இணையும் போது ஏற்கனவே உள்ள கணவனின் கருவை சுமந்தவளாக இருந்தால் இரண்டாமவரை திருமணம் முடித்து குழந்தை பெற்றெடுக்கும் போது அக்குழந்தையை இரண்டாவது திருமணம் செய்தவன் சந்தேகிப்பதற்கு வாய்ப்புள்ளது. அவ்வாறு சந்தேகித்தால் ஒன்றுமறியாத அக்குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
கருவுற்றதை அறிந்து அவள் மறைக்க முயற்சிக்காமலிருத்தல்.
ஒரு பெண் தான் கருவுற்றுள்ளதை முதல் மாதத்திலேயே அறிந்து கொள்வாள். இவ்வாறான நேரத்தில் அதை வெளியில் சொல்லாமல் அப்பெண் மறைக்க முற்படலாம். ஆனால் இத்தாக் காலத்தினை முழுமையாக அனுஷ்டிக்கும் போது அதை மறுக்க முடியாமல் போய்விடும்.
இரண்டாம் கணவன் சந்தேகிக்காதிருத்தல்.
குறைப் பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். இதனால் மணவாழ்க்கையில் குழப்பங்கள் ஏற்படும். நான்கு மாதங்கள் பத்து நாட்கள் இத்தா இருக்கின்ற போது இவ்வாறு கூற முடியாது. இவ்வாறான நடைமுறை ரீதியான பிரச்சினைகளுக்கு தீர்வாக இந்த இத்தாக்காலம் அமைவதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.
இத்தாக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அம்சங்கள்
இத்தா அனுஷ்டிக்கும் பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று இஸ்லாமிய மார்க்கம் தெளிவாகச் சொல்லித் தருகின்றது. இவ்வாறான நாட்களில் சுர்மா இடவோ, மணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ, திருமணம் முடிக்கவோ, திருமணப் பேச்சை வெளிப்படையாக பேசவோ கூடாது. ஆனால், நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்படும் ஆடைகளை அணியலாம். அதனை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
‘இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப் பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர!
(அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) சுருமா தீட்டவோ, நறுமணம் பூசவோ, சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.)
எங்களில் ஒரு பெண் மாதவிடாயிலிருந்து நீங்கக் குளிக்கும்போது, ளிஃபார், நகரத்து குஸ்த் (கோஷ்டம் அல்லது அகில்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும் நாங்கள் ஜனாஸாவைத் தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடைவிதிக்கப் பட்டிருந்தோம்’ (அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா நுஸைபா பின்த் அல்ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரி-313)
இறைவன் திருமறையில்,
‘(காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!’ (அல்குர்ஆன் 2:235)
இத்தாவில் இல்லாத விதிமுறைகள்
இன்று முஸ்லிம்கள் இத்தா அனுஷ்டிக்கும் பெண்களை மார்க்கம் காட்டித் தராத அடிப்படைகளில் வழிநடத்துவதைக் காணலாம்.
இருட்டறையில் அடைத்து வைப்பது, ஆண்களைப் பார்க்க கூடாது என்று தடைவிதிப்பது, அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்களைப் பார்க்க விடாது தடுப்பது, இத்தா இருக்கும் பெண்ணுக்கு நோய் ஏற்பட்டால் ஆண் வைத்தியரிடம் கொண்டு செல்வது கூட தடையெனக் கருதுவது,
மற்றும் இன்னும் சிலர் வருடம் முழுவதும் துக்கமாகவே கருதுதல் இவ்வாறான மூட நம்பிக்கைள் திருமறைக் குர்ஆனின் (2:235) வசனத்திற்கு மாற்றமாகும்.
மேற்சொன்ன விடயங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. மாறாக, அவர் வீட்டிலிருந்து வெளியே சென்று யாரையும் பார்த்து பேச வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதற்கும் இஸ்லாம் அனுமதி வழங்குகின்றது. அதை பின்வரும் ஹதீஸ் தெளிவு படுத்துகின்றது.
‘என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் (இத்தாவில் இருந்த போது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)த போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஆம், நீ சென்று உமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும், அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்’ என்றார்கள்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹ் முஸ்லிம்-2972)
மேற்கூறப்பட்ட ஹதீஸில் இத்தாவில் இருந்த பெண் தேவை ஏற்படும் வேளையில் வெளியே சென்று ஆணாக இருந்த நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இத்தாவிலிருந்து வெளிவரும் போது
இத்தா இருக்கும் பெண்கள் வெளிவரும் போதும் முரணான காரியங்களைச் செய்வதைக் காணலாம். யாரையும் பார்ப்பதற்கு முன் குர்ஆனைப் பார்ப்பது, ஆலிம்களுடைய முகத்தில் முழிப்பது, ரொட்டி சுட்டு ஃபாத்திஹா ஓதுவது, சில ஊர்களில் யாரும் பார்க்காத வேளையில் வெளியேறி எங்காவது சென்றுவிட்டு இரவு நேரத்தில் திரும்புவது அவைகள் எல்லாம் மூடநம்பிக்கைகளும், மார்க்கத்தில் இல்லாத நிபந்தனைகளும், விதிமுறைகளுமாகும். இவையனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டியவைகளாகும்.
‘அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களிடையே (உரையாற்ற) எழுந்து நின்று, அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி, அவனைப் புகழ்ந்துரைத்துவிட்டு, சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்து விட்டது அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளையெல்லாம் விதிக்கின்றாகளே! அழ்ழாஹ்வின் சட்டத்தில் இல்லாத நிபந்தனை எதுவாயினும் அது செல்லாததாகும்.
அவர்கள் நூறுமுறை நிபந்தனையிட்டாலும் சரியே. அல்லாஹ்வின் தீப்பே பின்பற்றத் தக்கதாகும். அழ்ழாஹ்வின் நிபந்தனையே உறுதியானதும் (கட்டுப் படுத்தக் கூடியதும்) ஆகும்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: ஸஹீஹுல் புகாரி-2729)
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
நாம் பின்பற்றும் மார்க்கம் இலகுவானது. அதில் நாமாக சில நிபந்தனைகளையும், விதிமுறைகளையும் ஏற்படுத்தி நமக்கு நாமே சிரமத்தை ஏற்படுத்திக் கொள்கின்றோம். மாற்று மதத்தில் இருந்து பிரதியெடுக்கப்பட்ட இவ்வாறான விதிமுறைகள் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து தூரமாக்கப்பட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டியது இறைவனும் இறைத்தூதரும் சொன்ன விடயங்களை மாத்திரம் எமது வாழ்வில் எல்லா சந்தர்ப்பத்திலும் எடுத்து நடப்பதாகும். அதுவே ஈருலக வெற்றிக்கும் வழிவகுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக