யாருக்கு குளிப்பு கடமை?


கட்டாயக் கடமைகளில் இதுவும் ஒன்றாகும். ஆண், பெண் இருபாலருக்கும் தூக்கத்தில் (கனவினால்) (Wet Dream) விந்து வெளிப்பட்டால் குளிப்பது அவசியமாகிறது.

'இந்திரியம் வெளிப்படுவதால் குளிப்பு கடமையாகிறது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவிக்கிறார். (நூல் - புகாரீ, முஸ்லிம்).

'நபி(ஸல்) அவர்கள் பெருந்துடக்கின் காரணத்தாலும், வெள்ளிக் கிழமை தினத்தன்றும், இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டதற்காகவும், மைய்யித்தைக் குளிப்பாட்டிய காரணத்தாலும் ஆக, நான்கு காரியங்களுக்காகக் குளித்து வந்தார்கள்' அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) (நூல் - அபூ தாவூது). இது இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டு 'ஸஹீஹ்' எனும் தரத்தில் உள்ளது.

அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: ஸுமாமா இப்னு உஷால் அவர்களைப் பற்றிக் கூறும்போது, 'அவர் இஸ்லாத்தை ஏற்ற போது நபி(ஸல்) அவர்கள் குளிக்கும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள்'. (நூல்கள் - புஹாரீ, முஸ்லிம்;). இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்கள் குளிப்பது அதுவே முதல் கடமையாகிறது.

'உங்களில் ஒருவர் மனைவியிடம் சென்று (உடலுறவு கொண்டு) விட்டு, பின்னர் மீண்டும் (உடலுறவு கொள்ள) நாடினால், அவர் அவ்விரண்டிற்கிடையே ஒளூச் செய்து கொள்ளட்டும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) (நூல் - முஸ்லிம்).

'குளிப்புக் கடமையானவர்களும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும், பள்ளிக்கு தொழவருவதை நான் அனுமதிக்க மாட்டேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், அறிவிப்பாளர்; ஆயிஷா(ரலி);அவர்கள் (நூல் - அபூ தாவூது). 

இதுவும் இப்னு குஸைமாவில் இது 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதியப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்டவைகள் ஏன் குளிப்பு (தூய்மை-ஒளூ) அவசியம் என்பன பற்றி விளக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: நபி (ஸல்) அவர்களின் ஆரம்பகால (ஏகத்துவ) இஸ்லாமிய எழுச்சி பணியின் போது விந்து (இந்திரியம்) வெளிப்பட்டால் குளிப்பு கடமையாயிருந்தது, பின்பு உடலுறவின் போது விந்து வெளியேறினாலும் வெளியேறாவிட்டாலும் குளித்தாhக வேண்டுமென கட்டளையிட்டுள்ளார்கள். (அறிவிப்பாளர் : உபை பின் கஅபு (ரலி) நூல்கள் - திர்மிதி, அபூதாவுத்).

கடமையான குளிக்கும் முறை – (ஆண், பெண்)

நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பைக் குளிக்க ஆரம்பித்தால், முதலில் தம்முடைய கரங்களைக் கழுவிக்கொள்வார்கள். பின்பு தமது வலக் கரத்தால் இடக் கரத்தின் மீது தண்ணீரை ஊற்றி, தம்முடைய மர்ம ஸ்தானங்களை கழுவுவார்கள். அதன் பின் உளூச் செய்வார்கள். பின்னர் தண்ணீரை கைகளால் கோரி எடுத்துத் தம்முடைய கை விரல்களால் (தலை) முடியின் அடிப்பாகத்தில்; நுழைத்து (கோதி)விட்டு, பிறகு தமது தலை மீது தண்ணீரை மூன்றுமுறை இரண்டு கைகளையும் கூட்டி அள்ளி ஊற்றிக்கொள்வார்கள். பிறகு உடல் முழுவதும் தண்ணீரை முழுமையாக ஊற்றிக் கொள்வார்கள். பின்னர் அவர்களது இரண்டு கால்களையும் கழுவுவார்கள். அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி). (நூல்கள் - புஹாரீ, முஸ்லிம்).

நபி (ஸல்) அவர்கள் குளித்து முடித்த பின் ஒளூச் செய்யவதில்லை, அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) நூல்கள் - புஹாரீ மற்றும் முஸ்லிம்.

மைமூனா (ரலி) வாயிலாக, புஹாரி மற்றும் முஸ்லிமின் மற்றுமோர் அறிவிப்பில்: 'பின்னர், அவர்கள் தம்முடையய மர்ம உறுப்பின் மீது தண்ணீரை ஊற்றி அதனை தம் இடக் கரத்தினால் கழுவுவார்கள். பின்னர் அதை (இடக் கரத்தை) தரையில் தேய்த்துக் கழுவுவார்கள்' என்றும், 'தரையில் கையைத் துடைத்தார்கள்' என்றும்; அவர்களிடம் நான் கைக்குட்டையைக் கொண்டு சென்றேன். அதை அவர்கள் மறுத்து விட்டு, தம்முடைய கரத்தால் தண்ணீரை உதறினார்கள்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார்கள் : 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் (தலைமுடி அதிகம் உள்ளவளாக இருப்பதால்) என் தலை முடியினைக் கட்டிக் கொள்கிறேன். குளிப்புக் கடமை ஏற்பட்டு நான் குளிக்கும் முன்; என்னுடைய தலைமுடியை அவிழ்த்து கொள்ளவேண்டுமா?' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள், '(வேண்டியது) இல்லை. மூன்று தரம் உன் தலையில் தண்ணீரை ஊற்றிகொண்டால் அதுவே போதுமானது' என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம்.

மற்றுமோர் ஹதீஸ் அறிவிப்பில் 'மாதவிடாய் குளிப்பின் போதும் என்னுடைய தலைமுடியை அவிழ்க்க வேண்டுமா?' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள் : 'நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே தண்ணீர் பாத்திரத்தில் (ஒரே நேரத்தில்) கடமையான குளிப்பை குளித்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் மாறிமாறி (அப்பாத்திரத்தில்) போய் வந்து கொண்டிருந்தன' (நூல்கள் : புஹாரீ, முஸ்லிம்).

இப்னு ஹிப்பானில் 'எங்களது கைகள் ஒன்றோடொன்று சந்தித்துக் கொண்டுமிருந்தது' என்ற குறிப்பு கூடுதலாக அதில் பதியப் பெற்றுள்ளது.

பெண்களின் மாதவிடாய்:

ஃபாத்திமா பின்து அபீ ஹுபைஷ் என்ற பெண்மணிக்கு தொடர் இரத்தப்போக்கு இருந்து வந்ததுள்ளது. அவர், நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்து இதன் விஷயமாய் சட்டம் கேட்க வந்துள்ளார்கள் அப்போது நபி (ஸல்) அவர்கள் 'மாதவிடாய் இரத்தம் கறுப்பு நிறத்துடன் இருப்பதைக் கொண்டு அறியப்படும். உனக்கு அது ஏற்பட்டிருந்தால் தொழுகையை விட்டு விடு, அதுவல்லாத வேறேதும் நிறத்தில் (இரத்தம்) ஏற்படுமாயின் உளூச் செய்துவிட்டு தொழுது கொள்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்கள் : அபூ தாவூது, நஸாயீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாம்மில் 'ஸஹீஹ்' என்ற தரத்தில் இது பதியப்பட்டுள்ளது. 

ஹம்னா பின்த்து ஜஹ்ஷ்(ரலி) அறிவிக்கிறார்கள்: எனக்கு அடிக்கடி கடுமையான தொடர் உதிரப்போக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. நான் (இது பற்றி) சட்டம் கேட்க நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்)கூறினார்கள் 'நிச்சயமாக அது ஷைத்தானின் வேலைகளில் ஒன்றாகும். ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிடாய் நாட்களாகக் கணக்கிட்டுக் கொள். பின்னர் குளித்துவிட்டு தூய்மையாகி விட்டால், இருபத்தி நான்கு அல்லது இருபத்தி மூன்று நாட்கள் தொடர்ந்து தொழுது கொள், நோன்பும் நோற்றுக் கொள், நிச்சயமாக இது உனக்குப் போதுமானதாகும். (மற்ற) பெண்கள் எவ்வாறு மாதவிடாய்க் காலத்தைக் கணக்கிட்டு கழிக்கின்றார்களோ, அதுபோன்றே ஒவ்வொரு மாதமும் கணக்கிட்டுக் கொள். லுஹரைப் பிற்படுத்தியும் அஸரை முற்படுத்தியும் தொழ உன்னால் இயலுமானால், நீ தூய்மையடையும் போது குளித்துவிட்டு, லுஹரையும் அஸரையும் (ஒன்றாக இணைத்துத்) தொழுது கொள். பின்னர் மக்ரிபைப் பிற்படுத்தி; இஷாவை முற்படுத்தி குளித்து விட்டு இரண்டையும் சேர்த்துத் தொழுது கொள். பின்னர் ஃபஜ்ருடைய தொழுகையை குளித்து விட்டுத் தொழுது கொள். இவை இரண்டிலும் இது எனக்கு மிகவும் பிடித்தமானது'.என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல்கள்: அபூ தாவூது, திர்மிதீ, இப்னு மாஜா மற்றும் அஹ்மத்.

ஆன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கும் நீண்ட ஹதீஸின சுருக்கம்: நாங்கள் ஸரிஃப எனும் இடத்தை அடைந்ததும், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. 'நீ தூய்மையாகும் வரை தவாஃப்பை (கஅபாவை வலம் சுற்றுவதைத்) தவிர்த்து மற்ற ஹாஜிகள் செய்கின்ற அனைத்தையும் செய்து கொள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் நூல்கள் - புஹாரீ, முஸ்லிம்.

இன்னும் இது போன்று ஏராளனமான ஹதீஸ் விளக்கங்கள் உள்ளன சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது 

பெண்களுக்கான பிரசவ இரத்த போக்கு:

பெண்கள் குழந்தை பேறுக்கு பின் தொடர்ந்து இரத்தம் வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் இதனை நிஃபாஸ் என்றழைப்பர். 
இதுமாதியான நேரங்களில் தொழ கூடாது, அது நின்றபின் முறையாக குளித்துவிட்டுத்தான் தொழவேண்டும். இந்த நிலையில் விடுபட்ட தொழுகைகளை 'களா' செய்ய வேண்டியதில்லை.

'நபி(ஸல்) அவர்களது காலத்தில் பெண்கள் (நிஃபாஸ் என்னும்) பிரசவ கால உதிரப்போக்குக்குப் பின்னர் நாற்பது நாட்கள் தனித்திருப்பார்கள்' அறிவிப்பாளர் : உம்மு ஸலமா (ரலி) நூல்கள் - அபூ தாவூது, அஹ்மத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. 
அபூ தா¥தின் மற்றோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் நிஃபாஸுடைய காலத்தில் விடுபட்ட தொழுகைகளை 'களாச்' செய்யுமாறு பெண்களுக்குக் கட்டளையிடவில்லை என்பதும் இடம் பெறுகிறது. இது ஹாம்மில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுதொடக்கு:

இச்சைநீர்:

அலி இப்னு அபூ தாலீப் (ரலி) அறிவிக்கிறார்கள் : நான் காம நீர் (இச்சை நீர்) சுரக்கும் தன்மையைப் பெற்றவனாக இருந்தேன். இதைப்பற்றி நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்க வெட்கப்பட்டு, மிக்தாதிடத்தில் நபி(ஸல்) அவர்களிடம் கேட்குமாறு நான் கட்டளையிட்டேன். அவரும் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''அதற்காக உளூ செய்வது கட்டாயமாகும்'' என்று கூறினார்கள். (புகாரீ, முஸ்லிம்) இங்கு புகாரியின் வாசகம் இடம்பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்டுள்ள விபரம் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்: ஃபாத்திமா பின்த் அபீ ஹுபைஷ் (ரலி) என்பவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதர் அவர்களே, எனக்கு தொடர்ந்து இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) வந்துகொண்டேயிருக்கிறது. நான் தூய்மை அடைவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா? என்று கேட்டார்கள், அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கூடாது, அது மாதவிடாய் இரத்தமல்ல, ஒரு நரம்பு நோய். ஆகவே (வழக்கப்படி) உனக்கு மாதவிடாய் ஏற்படும் போது நீ தொழுகையை விட்டுவிடு, அதற்கான காலம் சென்றதும் இரத்தத்தைக் கழுவி விட்டுத் தொழுது கொள்' என்று கூறினார்கள் (புகாரீ, முஸ்லிம்). பிறகு, நீ ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து கொள் என்று கூறியதாகவும் புகாரீயில் உள்ளது.

இதுவல்லாது சில பெண்களுக்கு வெள்ளைபடுதல் இருக்கும். வெட்ட சூடு என்பார்கள், சில ஆண்களுக்கும் இருக்கும். சிறுநீர் கழிக்கும் முன்போ அல்லது மலம் கழிக்கும் நேரத்திலும் வெளியாகும் இதுவும் ஒரு வகை நோயே, இதற்கு தகுந்த மருத்துவர்கள் இடம் சென்று ஆலோசனை பெற்று குணமடையலாம். மேலே கொடுக்கப்பட்டுள்ள நபி (ஸல்) அவர்களின் குறிப்பே இதற்கும் போதுமானதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001