பராஅத் [பித்அத்] இரவு


லைலத்துல் பராஅத்’;,‘பராஅத் இரவு’,‘ஷபே பராஅத்’;என்று பல பெயர்களில் கொண்டாடப்பட்டுவரும் இந்த இரவு, நமது மக்களால் மாண்பார் இரவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டுவருகிறது.‘லைலத்துல் கத்ரு, லைலத்துல் ஜும்ஆ’ போன்ற இரவுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன.

ஆனால் ‘லைலத்துல் பராஅத்’ என்ற சொல் குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ இடம் பெறவில்லை. இந்த இரவைக் கொண்டாட வேண்டுமென்றோ இபாதத்துகளில் ஈடுபட வேண்டுமென்றோ குர்ஆன், நபிமொழிகளில் எந்தவித ஆதாரமும் இல்லை.
பின் ஏன் இந்த இரவைக் கொண்டாடுகிறார்கள்?
இந்த இரவைக் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். இதைப்பற்றி நமது மக்களின் நம்பிக்கை என்ன? அவர்கள் இதை கொண்டாடுவதற்குக் கூறும் காரணங்கள் என்ன? என்பதைப் பார்ப்போம்.
1. பராஅத் இரவு.
பராஅத் இரவு குர்ஆன் அருளப்பட்ட இரவு என்றும் ‘நிச்சயமாக நாம் பாக்கியம் மிக்க இரவில் இந்த குர்ஆனை அருளினோம். (44:03) என்று வரும் குர்ஆன் வசனம் இந்த பராஅத் இரவையே குறிக்கிறது என்று கூறுகின்றனர்.
இந்த வசனம் ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளான பராஅத் இரவைக் குறிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
‘பாக்கியம் மிக்க இரவு’ எது என்பதை வேறு சில வசனங்கள் தெளிவு படுத்துகின்றன.
‘திருக்குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது’என்று திருக்குர்ஆன் 2:185-வது வசனம் கூறுகிறது.
இதிலிருந்து இந்த பாக்கியம் மிக்க இரவு ரமளான் மாதத்தில் தான் இருக்கிறது என்று மிகத் தெளிவாகவே தெரிந்து கொள்ளலாம். அது ரமளானின் எந்த இரவு என்பதை நாம் தேடிப்பார்க்கும் போது ‘லைலத்துல் கத்ர் இரவுpல்’ நாம் திருக்குர்ஆனை அருளினோம் (97:01)என்று அல்லாஹ் மற்றொரு வசனத்தில் கூறுகிறான்.
எனவே இவ்வசனத்தில் கூறப்படுகின்ற ‘பாக்கியம் மிக்க இரவு’ என்பதும்,’லைலத்துல் கத்ர் இரவு’என்பதும் ரமளான் மாதத்தில் வருகின்ற ஒரே இரவு தான் என்பது தெளிவாகிறது.
எனவே அந்த இரவு ஷஃபானின் 15-வது இரவு என வாதிடுவோருக்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த வித ஆதாரமும் இல்லை. அவ்வாறு திருக்குர்ஆன் ஷஃபானின் 15-வது இரவில் அருளப்பட்டது எனக் கூறுவது ‘ரமளானில் தான் குர்ஆன் அருளப்பட்டது’ என்ற இறைவனின் சொல்லுக்கு மாற்றமானதாகும்.
44:03 என்ற வசனத்தை ஆதாரமாகக் கொண்டுதான் பராஅத் என்று ஒரு இரவை முஸ்லிம்கள் அவர்களாகவே உருவாக்கிக் கொண்டாடி வருகின்றனர்.
இல்லாத ஒரு இரவைக் கற்பனை செய்து சிலர் அல்லாஹ்வின் வசனத்திற்கு பொருத்த மற்ற விளக்கம் கொடுத்து அந்தநாளுக்கென சிலசடங்குகளை உருவாக்கி அறியாத மக்களை தவறான வழிகளில் வழிநடத்துகின்றனர்.
அடுத்து, ஷஃபான் மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதாக நம்புவதும் ‘ரமளானில் அருளப்பட்டது’ என நம்புவதற்கு எதிரானதாகும்.
ஷஃபானில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்போர் மேலும் சில காரணங்களை முன் வைக்கின்றனர். அதாவது:-
குர்ஆன் இரண்டு இரவுகளில் அருளப்பட்டது. பாதுகாக்கப்பட்ட ஏட்டிலிருந்து முதல் வானத்திற்கு அருளபட்டது ஒரு இரவு. அங்கிருந்து சிறிது சிறிதாக நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது மற்றொரு இரவு எனக் கூறுகின்றனர். இதற்கு ஏற்கத்தக்க எந்த நபிமொழியும்; சான்றாக இல்லை. இந்த இரவுக்கும் பராஅத் இரவுக்கும் சம்பந்தமே இல்லை.
2. மனிதனின் விதி.
இந்த இரவில் தான் மனிதனின் விதி நிர்ணயிக்கப் படுகிறது என்று நபி (ஸல்)
அவர்கள் சொன்னார்கள் என உத்மான் பின் முஹம்மது பின் முகீரா
அறிவிக்கிறார்கள் என்ற ஒரு நபிமொழியை பராஅத் இரவின் மாண்புக்கு ஆதாரமாக
முன் வைக்கின்றனர்.
இந்த அறிவிப்பாளர் தாபியீன்களில் இறுதியானவர் என்றும்,தபஉத் தாபியீன்களைச்
சார்ந்தவர் என்றும் இருவிதமான கருத்துகள் உள்ளன. இந்த ஹதீஸில் ஸஹாபியின்
தொடர்விட்டுப் போனதால் இந்த நபி மொழி ஏற்கத்தக்கதல்ல.
3. ஆடுகளின் முடிஅளவு மன்னிப்பு :-
நபி (ஸல்) அவர்கள்,
‘ஷஃபானில் வரும் பராஅத் இரவின் பாதியில் இறைவன் கீழ் வானத்தில் இறங்கி பனீ கலபு கூட்டத்தினரின் (ஆயிரமாயிரம்) ஆடுகளுக்கு இருக்கும் உரோமங்களின் எண்ணிக்கையிலும் அதிகமானவர்களை மன்னிப்பான் என்றும்;, நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்வான் என்றும் கூறினார்கள்’
என்னும் நபிமொழியை ஆயிஷh(ரலி)அவர்கள் அறிவித்ததாகக் கூறுகின்றனர். (அறிவிப்பவர்: உர்வா அவர்கள்) இந்த நபி மொழியை அபூகதீர் என்பவர் யஹ்யாவிடமிருந்தும், யஹ்யா என்பவர் உர்வாவிடமிருந்தும், உர்வா என்பவர் இதை அறிவிப்பதாகக் கூறுகின்றனர். இவர்களில் எவரும் நேரில் சந்திக்கவில்லை என்பதால் இந்த ஹதீஸும் ஏற்பதற்கில்லை.
4. அடுத்து, பராஅத் நோன்பு:-
ஷஃபானின் பதினைந்தாவது இரவு வந்தால் நோன்பு வையுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சில ஹதீஸ்கள் உள்ளன.இதை அறிவிக்கும் அபூ ஸப்ரா பின் அப்துல்லாஹ் பின் அபீபக்ர் என்பவர் பொய்யர் என இமாம் அஹ்மத் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ஆதாரபூர்வமான ஹதீஸ்களில்; ஷஃபானின் பாதி வந்தால் நோன்பு வைக்கக்கூடாது என வருகிறது.
ஷஃபான் மாதத்தில் அதிகமாக நோன்பு நோற்று வந்த  நபி (ஸல்) அவர்கள் பிந்திய 15 நாட்களில் நோன்பு நோற்பதை தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஷஃபான் மாதத்தின் பாதியை அடைந்து விட்டால் நோன்பு வைக்காதீர்கள்! (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அஹ்மத், அபூதாவூது, நஸயீ,திர்மிதி,இப்னு மாஜா).
இதில் அய்யாமுல் பீள்,வியாழன் வெள்ளிக் கிழமைகளில் வழமையாக நோன்பு நோற்போர் விதிவிலக்காவார்கள்.
எனவே பராஅத் இரவுக்கென தனியாக நோன்பு எதுவும் கிடையாது.
இந்த ஆதாரமற்ற ஹதீஸ்களையும் தகவல்களையும் வைத்து பின் வருமாறு பல பித்அத்கள், சடங்குகள், சம்பிரதயங்கள் முதலியற்றை மார்க்கத்தின் பெயரால் அரங்கேற்றியுள்ளனர்.
5. விசேச ஆராதனைகள்,யாஸீன்கள்,ராத்தீபுகள்.
1.முதலில் மூன்று யாஸீன்கள்:-
இந்த இரவில் அடுத்தடுத்து விசேச வணக்கங்கள் தொடர்ந்து
நடை பெற்றுக்கொண்டிருக்கும்.
முதலாவதாக மஃரிப் தொழுததும் மூன்றுயாஸீன்கள் ஓதிஹதியா செய்யவேண்டும் என முல்லாக்கள் கூறி அதைவியாபாரமாக்கி விட்டார்கள்.  எனவே போட்டி போட்டுக்கொண்டு,
1. பாவ மன்னிப்பிற்கும்
2. ரிஸ்கு-இரண பாக்கியத்திற்கும்
3. நீண்ட ஆயுளுக்கும்
என மூன்று யாஸீன்கள் ஓதுவார்கள்.
2. அடுத்து ஆங்காங்கே திக்ருகள், ராத்தீபுகள், குத்பிய்த்துகள்,
மவ்லிதுகள் என வரிசையாக நடைபெறும்.
மார்க்கத்தின் பெயரால் நடக்கும் இந்தப் போலிச் சடங்குகளுக்கு
எந்த ஆதாரமும் கிடையாது.
6. விசேச உணவு படைப்புகள் 
இந்த இரவில் அல்லாஹ் வின் அருள் பெருகிடவும் உணவு பாக்கியங்கள் பெற்றிடவும் ஊருக்கேற்றாற் போல் பல் வேறு விதமான பலகாரங்களையும், உணவுகளையும் படைத்து அமர்க்களப்படுத்து வார்கள். (யாஸீன் ஓதியவர்களை மகிழ்விக்கத்தான்.)
7. கப்று ஸியாரத்:-
இவ்வளவு நாட்களும் நினைவு படுத்த முடியாது போனதற்காக இறந்த போன பெற்றோர்கள்,உறவினர்கள், அவ்லியாக்கள் சமாதிகளுக்குச் சென்று விசேச ஸியாரத்,பிரார்த்தனைகள் நடை பெறும்.
8. விசேச வணக்கங்கள்:- 
முதல் தொழுககை : இஷhத் தொழுகைக்கு முன் இரண்டிரண்டு ரக்அதகளாக நான்கு ரக்அத்கள் தொழவேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹா வுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 25 முறைகள் ஓதவேண்டும்.
இரண்டாவது தொழுகை: இஷhத் தொழுகைக்குப் பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 30 ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 3 முறைகள் ஓதவேண்டும்.
மூன்றாவது தொழுகை : இஷாத் தொழுகைக்கு பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 12 ரக்அத்கள் தொழவேண்டும்.ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 5 முறைகள் ஓதவேண்டும்.
நான்காவது தொழுகை : இஷhத் தொழுகைக்குப் பின் இரண்டிரண்டு ரக்அதகளாக 100 ரக்அத்கள் தொழவேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் சூரா பாத்திஹாவுக்குப்பின் குல்ஹுவல்லாஹ் சூராவை 3 முறைகள் ஓதவேண்டும்.
‘அலியே! ஷஃபானின் 15-வது இரவில் 100 ரக்அத்துகள் தொழுவதை மறந்து விடாதே! அவற்றில் குல்ஹுவல்லாஹ் 100 தடவைகள் ஓதுவதை மறந்து விடாதே!’ போன்ற பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளன. என இப்னுல் கையூம் (ரஹ்) அவர்கள் தமது நக்லுல் மன்கூள் நூலில் குறிப்பிடுகிறார்கள்.
ஐந்தாவது தொழுகை : தஸ்பீஹ் தொழுகை. முன்னூறு தஸ்பீஹ்கள் ஓதித் தொழும் இந்தத் தொழுகைக்கும் ஆதாரபூர்வமான எந்த ஹதீஸீம் கிடையாது.
இவற்றையெல்லாம் தெடர்ந்து நடத்திவிட்டு இறுதியாக நோன்பையும் நோற்றுக் கொள்வார்கள்.
மார்க்கத்தின் பெயரால் உலா வரும் இந்தப் போலிச் சடங்குகளையும் பித்அத்களையும் இனம் கண்டு தவிர்த்துக் கொண்டு நமது ஈமானைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். வல்ல ரஹ்மான் அதற்கு அருள் புரிவானாக!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001