வெள்ளி, ஆகஸ்ட் 03, 2012

ஜகாத் பற்றிய ஐயங்களும் விளக்கங்களும்.

கேள்வி - ஒரு பெண்ணுக்கு மளையளவு தங்க நகைகள் இருந்தாலும் அவற்றிர்க்கு ஜகாத் கடமையில்லை என்று நபி(ஸல்) சொன்னதாகக் கூறுகிறார்களே இது உண்மையா..? taj@hotmail.comஅப்படியெல்லாம் எந்த ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை.
'உங்கள் செல்வத்திலிருந்து நீங்கள் அவர்களுக்கு செலவு செய்யுங்கள்' (அல் குர்ஆன் 24:33)இங்கு இறைவன் 'உங்கள் செல்வம்' என்று செல்வத்தை அதற்குயரிவர்களுடன் சேர்த்துப் பேசுகிறான். நகைகள் மதிப்பு மிக்க செல்வம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. நகைகள் செல்வம் தான் என்று தீர்மானித்தால் 'உங்கள் செல்வத்திலிருந்து செலவு செய்யுங்கள்' என்ற கட்டளை நகைகளையும் உட்படுத்தி விடும்.
'(நபியே) இவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை வசூல் செய்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப் படுத்துவீராக...' (அல் குர்ஆன் 9:103)
நகைகள் செல்வத்திற்குள் அடங்கும் என்றால் இந்த வசன அடிப்படையிலும் அவற்றின் மீது ஜகாத் கடமையாகி விடுகிறது.
'எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு' (அல் குர்ஆன் 9:34)
தங்கத்தை சேமித்து வைத்து செலவிடாமல் இருக்கிறார்களோ... என்ற வாசகத்தை கவனிக்கும் போது தங்கத்தின் மீதான ஜகாத் கடமையை தெளிவாக உணரலாம். தங்கக்கட்டிகளுக்கு தான் இது பொருந்தும் நகைகளுக்கு பொருந்தாது என்றெல்லாம் சிலர் செய்யும் வாதம் வெறும் அனுமானத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். தங்கக் கட்டிகள் தான் நகைகளாக வடிவ மாற்றம் பெறுகிறது. தங்கம் கட்டிகளாக இருப்பது ஒரு சிலரிடம் மட்டும் தான் அதிலும் குறிப்பாக நம் பெண்களிடம் தங்கத்தை கட்டிகளாக பார்ப்பது ரொம்ப அபூர்வம். 100 பவுன் மதிப்புள்ளத் தங்கம் கட்டியாகவே நம் பெண்கள் கையில் கிடைத்தாலும் அடுத்த சில தினங்களில் அவற்றை வித விதமான வடிவங்களில் நகைகளாக மாற்றி விடுவார்கள். எனவே தங்கத்தை கட்டிகள் என்று தீர்மானித்தால் நம் நாட்டு முஸ்லிம்களிடமிருந்து அவற்றிர்க்கான ஜகாத்தை பெற முடியாமலே போய்விடும்.

இன்னும் தெளிவாக சொல்லப் போனால் எந்த வசனத்தை தங்க கட்டிக்கு ஆதாரமாக்குகிறார்களோ அந்த வசனம் வெறும் தங்கம் என்று மட்டும் தான் பேசுகிறதே தவிர தங்கக்கட்டி என்று சொல்லவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

தங்கக்கட்டிகள் வடிவ மாற்றம் பெறும் போது அது தன் மதிப்பை குறைத்துக் கொள்வதில்லை என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் தன் மகளை அழைத்து வந்து பேசும் போது அந்த பெண்ணின் கைகளில் இருந்த இரண்ட கணமான தங்கக் காப்புகளை கண்ட நபி(ஸல்) இதற்கு ஜகாத் கொடுத்து விட்டாயா.. என்றார்கள். அந்தப் பெண் இல்லை என்றதும் இதற்கு ஜகாத் கொடுத்து விடு இல்லையெனில் நீ நரகம் போவதற்கு இதுவே காரணமாக அமைந்து விடும் என்றார்கள். அந்தப் பெண் தன் காப்புகளை கழற்றி இதை அல்லாஹ்வின் பாதையில் கொடுத்து விடுகிறேன் என்று கூறிவிட்டது. (அம்ர் பின் ஷூஐப்(ரலி) அபூதாவூத். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும்)

தங்கக்கட்டிகளோ அல்லது நாணயங்களோ தான் வடிவமாற்றம் பெற்று காப்பாக அந்த பெண் அணிந்துள்ளார் அதற்கு தான் இறைத்தூதர் ஜகாத்தை வசூல் செய்துள்ளார்கள். இது மட்டுமின்றி பெருநாள் தினத்தில் 'அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்' என்ற நபி(ஸல்) அவர்களின் உரையைக் கேட்டு விட்டு பெண்கள் தங்கள் உடம்பில் உள்ள நகைகளை கழற்றி தர்மம் செய்த செய்தி புகாரி உட்பட ஏராளமான நூட்களில் இடம் பெற்றுள்ளது. எனவே பெண்களின் நகைகளுக்கும் ஜகாத் கடமைதான். அதை யாரும் புறக்கணிக்கக் கூடாது.

368)கேள்வி: ஜகாத் பற்றி விளக்கம் தேவை. நகைக்கு ஜகாத் உண்டா? சொந்த வீடு மற்றும் கடைக்கு கொடுக்க வேண்டுமா? வீட்டில் உள்ள பொருள்களுக்குக் கொடுக்க வேண்டுமா? வீட்டு மனை நிலங்கள் இருந்தால் அவைகளுக்கும் கொடுக்க வேண்டுமா? நூருல்லாஹ்.
நாம் உபயோகிக்கக் கூடிய வீடு, வீட்டுப் பொருள்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டுமா அல்லது சிலதை கழித்துவிட்டு ஜகாத் கொடுக்க வேண்டுமா என்பதுபற்றி கருத்து வேறுபாடு நிலவுகிறது. எனவே இதுபற்றி முதலில் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
நாம் உபயோகிக்கும் பொருட்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்போர் அதற்குச் சான்றாக இரண்டு இறை வசனங்களைக் காட்டுகிறார்கள்.
'(நபியே) அவர்களுடைய பொருட்களிலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை உள்ளும் - புறமும் தூய்மைப் படுத்துவீராக' (அல் குர்ஆன் - 9:103)
இந்த வசனத்தில் 'மின் அம்வாலிஹிம்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 'அம்வால்' என்றால் பொருட்கள் - செல்வம், நகைகள், கரன்ஸி, இதர நமது சம்பாத்தியத்தில் வந்த அல்லது நமக்குப் பிறர் கொடுத்த, வாரிசு முறையில் வந்த எல்லாச் சொத்துக்களையும் குறிக்கும். இறைவன் 'அம்வாலி' லிருந்து தர்மம் செய்யச் சொல்வதால், நமது வீடு அதிலுள்ள பொருள்கள் உட்பட எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகிறார்கள். இக்கருத்தை வழுப்படுத்தும் இன்னொரு வசனத்தையும் இவர்கள் கூறுகிறார்கள்.
'எந்த செல்வத்திற்கு இறைவன் உங்களை பிரதிநிதியாக்கினானோ அந்த செல்வத்திலிருந்து செலவு செய்யுங்கள்' (அல்குர்ஆன் - 57:7)
இறைவன் பிரதிநிதியாக்கியுள்ளான் என்றால் அதில் நாம் உபயோகிக்கும் பொருட்களும் அடங்கும் என்பது எல்லாவற்றிற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது இவர்களின் நிலைபாடு.
இதில் நமக்கு உடன்பாடில்லை. காரணம்: 'அம்வால்' என்பதை இறைவன் எந்த அர்த்தத்தில் பயன்படுத்தியுள்ளான் என்பதை மற்ற வசனங்களைப் பார்க்கும்போது விளங்கலாம்.
'(நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக' (2:219)
இந்த வசனம் தெளிவாகவே 'அம்வாலை' இரண்டு அர்த்தத்தில் பிரித்துவிடுகின்றன - ஒன்று முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரியவை மற்றொண்டு மேலதிகமானவை.
வாழ்வாதார தேவைக்குரியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார் பயன்படுத்திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.
முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரியது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு வந்துவிட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கும்போது அந்த மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை அனைத்தும் மேலதிகமானதே. வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர் சாதனப் பெட்டிகள், தெலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக்கேற்ப மனிதனுக்கு அவசியமாகி விடுகிறது. பேரரிவாளனான இறைவன் இதையெல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். 'தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை' என்று.
தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் 'அம்வால்' பயன்படுத்தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.
'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (அபுஹுரைரா ரலி - புகாரி 14:26)
வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டிருந்தால், அவை வீடு கட்டுவதற்குரிய அளவுள்ள இடமாக இருந்தால் அதற்கு ஜகாத் இல்லை. ஏனெனில், அவை நமது தேவைக்கு உட்பட்டதாகும். அதிகப்படியான நிலங்கள் மேலதிகமான சொத்தாக இருந்தால் அவற்றிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
வருமானம் இல்லாமல் வீட்டு மனைகள் வாங்கப்பட்டிருந்தால் அவற்றின் மதிப்பிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும். ஏனெனில் வங்கிகளில் பணம் சேமிக்கப் படுவது போன்று இங்கு நிலங்களின் மீது பணம் சேமிக்கப் படுகிறது. மேலதிக 'அம்வால்' களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமென்ற இறைவனின் கட்டளையில் இந்த காலிமனைகள் அனைத்தும் அடங்கிவிடும்.
பெண்கள் அணியும் நககைகள், பீரோவில் உள்ள நகைகள், லாக்கரில் பூட்டப்பட்டுள்ள நகைகள் இவற்றிற்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
'யார் தங்கத்தையும் - வெள்ளியையும் சேமித்து வைத்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு' (அல்குர்ஆன் - 9:34,35)
இறைவழியில் செலவு செய்யாமல் சேமித்து வைப்போருக்குத் தண்டணையுண்டு என்று கூறுவதால் அவற்றின் மீதும் ஜகாத் கடமையாகிறது. பெண்கள் தங்கத்தைச் சேர்த்து வைக்கவில்லை, அதன் மூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள் அதனால் அதற்கு ஜகாத் தேவையில்லை என்றெல்லாம் யாரும் சமாதானம் சொல்ல முடியாது. தம்மை அழகுபடுத்திக் கொண்டு தொழ வந்த பெண்களிடம்தான் நபி (ஸல்) அவர்கள் உபதேசம் செய்கிறார்கள். உடனே பெண்கள், தமது காது வளையங்கள், கால் மெட்டிகள், வளையல்கள் எல்லாவற்றையும் கழற்றி அவற்றை இறைவனின் பாதையில் கொடுக்கிறார்கள். (புகாரி)
பெண்கள் தமது கைகளில் அணிந்திருந்த தங்கக் காப்புகளுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜகாத் கொடுக்கச் சொன்ன விபரம் அமீரிப்னு ஷுஐப்(ரலி) அறிவித்து அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் தங்க நகைகளுக்கு ஜகாத் கொடுக்கத்தான் வேண்டும்.

கேள்வி : நாங்கள் இப்போது வேளாண்மை செய்கிறோம் இதை அறுவடை செய்ய இன்னும் காலம் எடுக்கும். இப்போது அவசரமாக ஒரு சகோதரருக்கு பணம் தேவைப்படுகிறது. வேறு பணத்திலிருந்து அவருக்கு பணம் கொடுத்து விட்டு அறுவடைக்கு பின்னுள்ள ஜகாத் தொகையிலிருந்து இதை கழித்துக் கொள்ளலாமா..? இலங்கையிலிருந்து முனவ்வர் - ஹாட் மின் அஞ்சலில்.அறுவடைக்கு பின் கொடுக்கக் கூடிய ஜகாத் எவ்வளவு என்று முன்கூட்டியே கணிப்பது சிரமம். மழை, வெயில், போதிய நீரின்மை, வீரியமற்ற விதைகள், மண்வளக் கோளாறுகள், உரத்தால் வரும் கெடுதிகள் இப்படியாக மகசூல் குறைந்துப் போகும் வாய்ப்புகள் அனேகம் உள்ளன. அறுவடைக்கு முன்னரே நிறைய மகசூல் வரும் என்று நம்பி நிறைய ஜகாத் தொகையை வழங்கிவிட்டு அறுவடைக்கு பின் மகசூல் குறைந்திருந்தால் நிலத்திற்குரியவர் நஷ்டமடைய வேண்டி வரும். இப்படி எல்லாம் சிக்கல் உருவாகிவிடக் கூடாது என்பதால்தான், அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய ஜகாத்தை கொடுங்கள் என்கிறான் இறைவன். (அல் குர்அன் 6:141)
பிறருடைய அவசர அவசிய தேவைகளுக்கு கடனாக, அன்பளிப்பாக உதவ தூண்டும் அனேக வசனங்கள் குர்ஆனில் இருக்கின்றன.
புண்ணியம் என்பது உங்கள் முகத்தை கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. மாறாக புண்ணியம் என்பது அல்லாஹ்வை நம்பி...... இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக சொந்தங்களுக்கும், அனாதைகளுக்கும், (வாய்திறந்து கேட்காத) ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வதாகும். மேலும் தொழுகையை கடைப்பிடித்து ஜகாத் கொடுத்து வருவதுமாகும்.... (அல் குர்அன் 2:177)
இஸ்லாத்தின் எந்த ஒரு சட்டமும் அர்த்தமுள்ளவைதான் என்பதை சொல்லும் வசனங்களில் இதுவும் ஒன்றாகும்.
கஃபத்துல்லாவை நோக்கி முகத்தை திருப்பி வணங்கி வருவதால் மட்டும் புண்ணியம் கிடைத்து விடும் என்று யாரும் கற்பனை பண்ணிக் கொள்ள வேண்டாம். புண்ணியம் கிடைக்க வேண்டுமானால் உங்கள் பொருளாதாரத்தை தேவையுள்ளளோருக்காக செலவு செய்யுங்கள் என்று கூறி தேவையுள்ளோர் யார் என்பதையும் இறைவன் எடுத்துக் காட்டியுள்ளான். இவர்களுக்கு செலவு செய்வதில் புண்ணியம் உண்டு என்று கூறிவிட்டு பிறகு ஜகாத் கடமைப் பற்றியும் நினைவூட்டுகிறான்.
இதிலிருந்து ஜகாத் மட்டுமில்லாமல் பொருளாதாரத்தின் மீது இன்னும் சில கடமை உண்டு என்பதை விளங்கலாம். எனவே அறுவடைக்கு முன் ஜகாத்தை கொடுத்து சட்ட சிக்கலை உருவாக்கிக் கொள்ளாமல் இதர வழிகளில் அவருக்கு உதவுவதுதான் சரியான முறையாகும்.

 கேள்வி : என்னிடம் ஒரு லட்ச ரூபாயை கொடுத்து ஜகாத்தாக வினியோகிக்க சொல்லப் பட்டால் அதை ஏழாக பிரித்து அதிலிருந்து ஒரு பகுதியை நான் எடுத்துக் கொள்ளலாமா.. நான் ஏழையல்ல என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது. எங்களூரில் பைத்துல்மால் எதுவுமில்லை. முழு தொகையையும் ஏழைகளுக்கு கொடுத்து விடவேண்டுமா.. அல்லது ஒரு பங்கை மட்டும் தான் கொடுக்க வேண்டுமா..? புதுப்பட்டினம் - அவ்ரங்கசீப், அல் குரையாத்.ஜகாத் வசூலிப்பவர்கள் அந்த தொகையிலிருந்து கூலி பெறலாம் என்று குர்ஆன் வசனம் கூறுகிறது. (பார்க்க 9:60) இதை அடிப்படையாகக் கொண்டு அந்த தொகையிலிருந்து ஒருப் பகுதியை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமா.. என்றால் 'கூடாது' என்பதே சரியாகும். அந்த வசனத்தில் கூலி பெறும் தகுதியை இறைவன் கூறும் போது 'ஆமிலீன அலைஹா' என்று கூறுகிறான். இதற்கு அதன் மீது நியமிக்கப்பட்ட அதிகாரிகள் - வேலையாட்கள் என்பது பொருள். ஜகாத்தை கணக்கிட்டு வசூல் செய்வதற்காக அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகளையும், இந்த துறையின் விஸ்தீரனத்திற்கேற்ப உடன் வேலை செய்யும் ஊழியர்கள், எழுத்தர்கள். கணக்கர்கள்.. என்று பலரை அந்த சொற்கள் கட்டுப்படுத்துகிறது. ஜகாத்தை வசூலிக்க நியமிக்கப்பட்டவர்களுக்கு நபி(ஸல்) கூலி கொடுத்துள்ளார்கள் என்பதற்கு புகாரி - முஸ்லிமில் சான்றுகள் கிடைக்கின்றன.
ஜகாத் வசூலின் மீது நியமிக்கப்படாமல் பிறர் நம்மிடம் கொடுத்து வினியோகிக்க சொல்லும் தொகையிலிருந்து வசூலிப்பதற்குரிய கூலியை நாம் எடுக்க முடியாது. ஏனெனில் இந்த பணிக்காக நாம் நியமிக்கப்படவில்லை.
இதுவல்லாமல் மற்ற ஆறுபேருடைய தகுதிகளில் ஏதாவது ஒன்று நம்மிடம் இருந்தால் அப்போது அதிலிருந்து தேவைக்கேற்ப தொகையை பிரித்தெடுக்கலாம்.
உண்மையில் ஜகாத் என்பது வறுமையை கட்டுப்படுத்துவதற்குரிய திட்டமாகும். ஜகாத் தொகையை பலருக்கு பிரித்து கொடுத்து சில வேளை பசியைப் போக்குவதை விட தேவைக்கேற்ப ஒருவருக்கு கொடுத்து அவரது சுமையிலிருந்து அவரை மீட்டெடுப்பதே முக்கியமாகும். நபி(ஸல்) காலத்தில் தேவைக்கேற்ப ஜகாத் வழங்கப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இஸ்லாமிய ஆட்சி நடக்காத இடங்களில் வாழும் முஸ்லிம் செல்வந்தர்கள் தாமாக முன் வந்து ஜகாத் தொகையை சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். அல்லது அந்த நற்பணியில் ஈடுபடுபவர்களிடம் கொடுத்து வினியோகிக்க சொல்லி விட வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் பைத்துல் மால் ஏற்படுத்தும் அவசியத்தை முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒவ்வொரு ஊர் மக்களும் உணர வேண்டும். இதன் மூலம் வறியவர்கள் ஓரளவாவது முன்னுக்கு வர முடியும்.

 கேள்வி - ஒருவர் இஸ்லாமிய முறைப்படி வியாபாரம் செய்து அதற்குரிய ஜகாத்தையும் கொடுத்து வருகிறார். மேற்கொண்டு அரசாங்கம் வருமானவரி, விற்பனை வரி என்று வரியை திணிப்பது அவர் போன்றவர்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. அப்படி பெறப்படும் வரி மக்களுக்கு சரியாக போய் சேருவதும் இல்லை. இந்நிலையில் அந்த வியாபாரி தனது வருமானத்தைப் பற்றிய முழு விபரத்தையும் அரசாங்கத்திடம் கொடுக்காமல் ஒரு குறிப்பட்ட பகுதியை மட்டும் காண்பித்து அதற்குரிய வரியை மட்டும் கட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அவர் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார். இத்தகையோர் பற்றி இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவு படுத்தவும். சிக்கந்தர் - இ,டி,எ அஸ்கான் மெயில் வழியாக.
அரசாங்கத்திடம் திருட்டு கணக்கு காண்பிக்கும் அளவிற்கு போகிறவர்களுக்கு வருமானம் எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தங்கள் தேவைக்கு போக மேலதிகமாக சில லட்சங்களை வைத்திருப்பவர்கள் திருட்டு கணக்கு காண்பிக்க வேண்டும் என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள். பல லட்சங்களையும் கோடிகளையும் வைத்திருப்பவர்களே இத்தகைய போக்கை மேற் கொள்வார்கள். அரசாங்க வரி சுமையை ஏற்படுத்துகிறது என்று எண்ணும் அளவிற்கு இவர்களிடம் இருக்கும் பொருளாதாரம் குறைவானதல்ல. எனவே அரசிடம் தங்ககள் சொத்தை குறைத்து காண்பிக்கலாம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
முஸ்லிம்களிடம் இருக்கும் சொத்திற்கு கணக்கு பார்த்து ஜகாத் வழங்கி விட்டால் போதும் மேற் கொண்டு அந்த சொத்திற்காக எந்த செலவும் இல்லை என்றெல்லாம் முடிவு செய்துக் கொள்வதால் தான் இந்த சிந்தனைகளெல்லாம் எழுகின்றன. பொருளாதாரத்தின் மீதிருக்கும் பேராசையே இந்த சிந்தனைக்கு அவர்களைத் தள்ளுகிறது.
திருக்குர்ஆன் எந்த ஒரு இடத்திலும் பொருளாதாரத்தின் மீது ஜகாத் மட்டும் தான் கடமை என்ற கருத்தை சொல்லவேயில்லை. ஜகாத் பற்றி பேசும் பல்வேறு வசனங்களில் ஜகாத்தை குறிப்பிட்டு விட்டு பொருளாதாரத்தின் மீதிருக்கும் இதர செலவீனங்களையும் சுட்டிக் காட்டவே செய்கின்றது. உதாரணத்திற்கு ஒரு வசனத்தைப் பார்ப்போம்.
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்). (அல் குர்ஆன் 2:177)
இந்த வசனத்தில் ஜகாத்  என்ற கடமையை சுட்டிக் காட்டுவதற்கு முன்பே ஒருவர் தம் பொருளாதாரத்திலிருந்து விரும்பி செலவு செய்ய வேண்டிய இதர வழிகளை இறைவன் இங்கு சுட்டிக் காட்டுகிறான். இது போன்று ஏராளமான வசனங்களை குர்ஆனில் பார்க்கலாம்.
ஜகாத் என்பது எட்டு வகையினரை மீட்டெடுப்பதற்காக ஒதுக்கப்பட வேண்டிய தொகையாகும். அவர்கள் மட்டுமே உலகில் பொருளாதார தேவையுள்ளவர்கள் வேறு எவருக்கும் பொருளாதார தேவையில்லை என்று முடிவு செய்ய முடியுமா?
பொருளாதாரத்தின் மீது ஜகாத் போக இதர பொறுப்புகளும் உண்டு என்பதை சுட்டிக் காட்டவே இந்த விளக்கமாகும்.
அரசாங்கங்கள் விதிக்கும் வரி என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். அரசாங்கங்கள் வரியை வசூலித்து அதை முறையாக பல்வேறு துறைகளுக்குப் பகிர்ந்தளிக்கா விட்டால் (உதாரணமாக கல்வி - வறுமை ஒழிப்பு) என்ன விளைவு ஏற்படுமோ அதே விளைவு வரி ஏய்பு செய்யும் போதும் நடக்கும். எனவே அரசின் முறைகேடுகளை காரணம் காட்டிக் கொண்டு வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படும் வரித் தொகையை நாம் ஏப்பம் விடக் கூடாது.
இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இல்லாத இடத்தில் ஜகாத் கடமையில்லை என்று எப்படி நாம் முடிவுசெய்ய முடியாதோ, ஜகாத் தொகையை முறையாக செலவு செய்யாத இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இருந்தால் 'இவர்களிடம் நான் ஜகாத் கொடுக்க மாட்டேன்் என்று எவ்வாறு முடிவு செய்ய முடியாதோ அதே போன்று தான் இதுவும்.
செல்வந்தர்களிடமிருந்து ஜகாத் தொகையை வசூல் செய்து வறுமையை ஒழித்த நபி(ஸல்) அவர்கள் நாட்டு பாதுகாப்பிற்காக பல்வேறு சந்தர்பங்களில் நிதி வசூல் செய்துள்ளார்கள் என்பதையும் வெற்றிக்குப் பின் கிடைக்கும் போர்தளவாடங்கள் மீது வரி விதித்துள்ளார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரேயொரு சந்தர்பத்தில் மட்டும் தமது சொத்து விபரத்தை முறையாக வெளியிடாமல் இருக்கலாம். அதாவது எந்த ஒரு அரசாவது சொத்துக்கு உச்சவரம்பு விதிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அரசு விதித்த உச்சவரம்பை கடந்து சொத்துக்கள் இருந்தால் அதை அரசு பறிமுதல் செய்து அரசு சொத்தாக அறிவிக்கும் நிலை இருந்தால் அப்போது சொத்துக்குரியவர் தமது சொத்து விபரம் முழுவதையும் வெளியிட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஏனெனில் இஸ்லாம் சொத்துக்கு உச்சவரம்பு எதையும் நிர்ணயிக்கவில்லை. எத்துனை கோடிகளுக்கு வேண்டுமானாலும் ஒரு முஸ்லிம் அதிபராக இருக்கலாம். சொத்திற்கான ஜகாத், இதர நற்பணிகளில் அவர் தமது சொத்திலிருந்து செலவு செய்தால் போதும்.
சொத்திற்கு உச்சவரம்பு இல்லை என்றால் எந்த ஒரு செல்வந்தரும் தமது சொத்தை பினாமி பெயரில் வைத்துக் கொண்டு வரி ஏய்பு செய்வது நியாயமில்லை.

 கேள்வி - எனக்கு திருமணம் முடிந்து பத்து வருடங்கள் கழித்த பிறகுதான் சென்ற வருடம் நகைகளுக்கு கணக்கிட்டு அந்த வருடத்திற்குரிய ஜகாத்தை கொடுத்தேன். பத்து வருடங்கள் ஜகாத் கொடுக்கவில்லை. இப்போதுள்ள சந்தேகம் பத்து வருடத்திற்குரிய ஜகாத்தையும் மொத்தமாக கொடுத்துவிட வேண்டுமா...(அவ்வளவு பெரிய தொகையை புரட்டுவது சிரமம்) அல்லது வரும் ஆண்டுகளுடன் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து விடலாமா... அப்துல் பாரி - ஹாட்மெயில் வழியாக.
ஜகாத் என்பது செல்வந்தர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கடனாகும். அந்தக் கடனோடு ஒருவர் மரணித்தால் அவர் இறைவனிடம் பெரும் பிரச்சனைகளை - விசாரணைகளை சந்திக்க வேண்டி வரும். எனவே விரைவில் கடந்தக் காலத்திற்கான ஜகாத் தொகையை வழங்கிவிடுவதுதான் நல்லது. ஒரே நேரத்தில் பெரிய தொகையை கொடுப்பது சாத்தியமில்லை என்றால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த கடமையை பூர்த்தி செய்து விடுங்கள். தொழுகையை மட்டும் தான் களா செய்ய அனுமதியில்லை. பிற நோன்பு - ஜகாத் போன்ற கடமைகளை உரிய நேரத்தில் செய்யமுடியாமல் போயிருந்தால் அவசியம் களா செய்ய வேண்டும்.

 கேள்வி - ஜகாத் பணத்தின் ஒரு சிறு பகுதியை கூட்டாக சேர்த்து வட்டியிலிருந்து விடுப்படும் நோக்கில் ஒரு இஸ்லாமிய வங்கி ஆரம்பிக்கலாமா... இலங்கையிலிருந்து அபூ ஆதிப் - ஹாட் மெயில் வழியாக.
நபி(ஸல்) ஜகாத் நிதியை சேமித்து வைத்திருந்தார்கள் அதற்கு பாதுகாவலரை நியமித்திருந்தார்கள் என்பதெற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன. ஜகாத் தொகை வசூலிக்கப்பட்டவுடன் தாமதமின்றி அவற்றை செலவிட்டு விட வேண்டும் என்றெல்லாம் சட்டமில்லை. அதற்கான அவசியங்களின் போது மட்டுமே அது செலவிடப்பட வேண்டும். ஜகாத் பணம் தேவையுள்ளவர்ள் இருக்கும் போது அவர்களைக் கண்டுக் கொள்ளாமல் ஜகாத் தொகையை சேமித்து வைக்கக் கூடாது. தேவையுள்ளவர்கள் இருக்கும் போது தன்னிடம் இருந்த ஜகாத் பங்கை வினியோகிப்பதில் நபி(ஸல்) காலதாமதம் செய்ததில்லை. இன்றைக்கும் தேவையுள்ளவர்களின் நிலை நீடிப்பதால் வங்கிக்காக அந்த பணத்தை முடக்குவதில் சாத்தியக் கூறுகள் குறைவாகும்.
மட்டுமின்றி வங்கி என்பது குறிப்பிட்ட சாராருக்கு மட்டும் பயன்படக் கூடியதல்ல. அது அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் தளமாகும். அங்கு ஜகாத் பணத்தை முடக்கும் போது பல்வேறு நிலைப்பாடுகளை நாம் ஆய்வு செய்யவேண்டி வரும். இஸ்லாமிய வங்கியில் பற்றிய கட்டுரை வரும் போது இதன் சாத்தியக் கூறுகளை அலசலாம் இன்ஷா அல்லாஹ்.

 கேள்வி - ஒரு தொழிலில் இரண்டு லட்சம் முதலீடு செய்கிறோம் என்றால் முதலீட்டுக்கும் வருமானத்திற்கும் சேர்த்து ஜகாத் கொடுக்க வேண்டுமா..? வீடு, வாகனம், நிலம், தங்கம் இவற்றில் எதற்கு ஜகாத் கொடுக்க வேண்டும். தங்கம் 11 பவுனுக்கு மேலிருந்தால் அதிகப்படியான தங்கத்திற்கு மட்டும் கொடுக்க வேண்டுமா.. அல்லது முழுமைக்குமா... புதிய வருமானங்களுக்கு எப்படி ஜகாத் கொடுப்பது? ஜக்கி தாஜூத்தீன் - ஹாட் மெயில் வழியாக.
எவற்றின் மீது ஜகாத் கடமையாகும் என்பதை 'ஜகாத் சட்டங்கள்' கட்டுரையில் விரிவாக விளக்கியுள்ளோம்.
தொழிலில் முதலீடு செய்யும் தொகை அன்றாட குடும்ப செலவுக்காகத்தான் என்ற நிலை இருந்தால் அந்த தொகைக்க ஜகாத் கடமையாகாது. ஏனெனில் செய்யப்பட்ட முதலீடு சேமிப்பிற்கான முதலீடல்ல. செலவீனத்திற்கான முதலீடேயாகும். சேமிப்பிற்கான முதலீடு என்றால் முதலீட்டிற்கும் வரும் வருமானத்திற்கும் சேர்த்து ஜகாத் கொடுக்கத்தான் வேண்டும். செலவீட்டிற்காக முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து சேமிக்கும் அளவிற்கு வருமானம் கிடைக்கின்றதென்றால் இப்போது அந்த சேமிப்பு ஜகாத் கடமையாகும் தகுதிக்குள் வந்து விடும்.
11 பவுனுக்கு மேல் எவரிடம் இருக்கிறதோ அவர்கள் அந்த 11 பவுன் உட்பட அனைத்திற்கும் ஜகாத் கொடுக்க வேண்டும். குடும்ப செலவு போக 87 கிராம் தங்கம் அல்லது அந்த மதிப்பிற்கான தொகை. (வேறெந்த செல்வமும் இல்லாமல்) ஓராண்டு காலம் இருந்தால் அந்த மொத்த மதிப்பின் மீது ஜகாத் கடமையாகி விடும். இதற்கான ஆதாரங்களை நாம் ஜகாத் சட்டங்கள் தொடரில் வெளியிட்டுள்ளோம். மற்ற செல்வங்கள் இருந்தால் அப்போது இந்த ஓராண்டு காலம் என்பது அடிப்பட்டுப் போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக