ஹலால் - ஹராம் பேணல்

ஜாபிர் (றழி) கூறுகிறார்: (ஒரு முறை) ஒரு மனிதர் நபியவர்களிடம் வந்து,'(அல்லாஹ்வுடைய றஸுல்) நான் கடமையான தொழுகைளை நிறைவேற்றி, றமழானில் நோன்பும் நோற்று, ஹராமானதை ஹராமானதாகக் கருதி (தவிர்த்து வாழ்ந்து) ஹலாலை ஹலாலாகக் கருதி வாழ்ந்தால் சுவர்க்கம் புகுவேனா, என்பதை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு, 'ஆம்' என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது அவர், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக இவற்றை விட அதிகமாக எதனையும் நான் செய்யமாட்டேன்' எனக் கூறினார். (ஆதாரம்: முஸ்லிம்)
றஸுலுல்லாஹ்வின் பாசறையில் பயிற்சி பெற்ற அன்னாரின் தோழர்கள் எவ்வளவு தூரம் சுவர்க்கத்தை அடைவதில் ஆசையும் ஆர்வமும் கொண்டோராயும், அதனை அடைந்து கொள்வதற்கு உரிய வழிகளைத் தெரிந்து கொள்வதில் தீராத வேட்கை கொண்டோராயும் இருந்தனர் என்பதற்கு ஓர் உயர்ந்த உதாரணமாக இந்த ஹதீஸ் காணப்படுகிறது. நபித் தோழர்கள், சுவர்க்கத்தையும் நரகையும் உலகிலேயே தம் கண்களால் காண்பது போன்ற உணர்வைப் பெற்றிருந்தனர் என்பதற்கும், இத்தகைய ஹதீஸ்கள் நல்ல சான்றுகளாகத் திகழ்கின்றது.
நாம் விளக்க எடுத்துக்கொண்டுள்ள இந்த ஹதீஸில் ஸக்காத், ஹஜ் போன்ற கடமைகள் குறிப்பிடப்படாமைக்குக் காரணம், கேள்வி எழுப்பப்பட்ட காலத்தில் அவை கடமையாக்கப்பட்டிருக்காததேயாகும் எனச் சில அறிஞர்களும், ஹராத்தை ஹராமாகக்கருதி, ஹலாலை ஹலாலாகக் கருதி வாழ்தல் எனும் சொற்றொடரில் அனைத்துக் கடமைகளும் அடங்கி விடுவதனால்தான் அவை குறிப்பிடப்படவில்லை என வேறு சில அறிஞர்களும் கூறுகின்றனர்.
இங்கு, 'ஹர்ரம்துல் ஹராம்' எனும் சொற்றொடரே ஹராத்தை ஹராமாகக் கருதுதல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது இரு விடயங்களை உள்ளடக்குமென்றும் ஹராமானதை ஹராமாக நம்புவதும், பின்னர் அவற்றைத் தவிர்ந்து வாழ்வதுமே அவ்விரண்டு அம்சங்களுமாகுமென்றும் இமாம் இப்னு ஸலாஹ் குறிப்பிடுகிறார். ஹலாலானவற்றைப் பொறுத்தவரையில், அவற்றை ஹலாலானவை என நம்பினால் மாத்திரம் போதுமானது என்றும் மேலும் அவர் கூறுகிறார்.
இந்த ஹதீஸ் எல்லாவற்றுக்கும் மேலாக ஹலால் - ஹராம் விடயத்தில் ஒரு முஸ்லிம் எவ்வளவு தூரம் கவனமாக நடந்துகொள்ளல் வேண்டும் என்பதை மிகச்சிறப்பாக விளக்குகின்றது. இத்தகைய ஹதீஸ்களை வைத்துத்தான் சுவர்க்கம் புகுவதற்கு நிபந்தனையாக இருப்பது ஹராம் - ஹலாலைப் பேணுவதாகும் என்றும், ஸுன்னத்துக்களைப் பொறுத்தவரையில் அவை அந்தஸ்துகளைக் கூட்டுவதற்கும், நற்கூலியை அதிகரிப்பதற்கும் உதவுகின்ற துணை அமல்களே என்றும் இமாம்கள் கூறுகின்றனர்.
இவ்வகையில், முதலில் ஹராமானதை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும். தொடர்ந்து பர்ளுகளைப் பேணவேண்டும். பின்னர்தான் ஸுன்னத்து களைப் பின்பற்ற வேண்டும். இதுவே 'தீனை' முறையாகப் பின்பற்று வதற்குரிய சரியான வழியாகும் என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள்.
இந்நபிமொழியின் அடிப்படையில் மார்க்கம் ஹராமாக்கியவற்றையே ஹராம் எனக் கருதவேண்டும் என்பதும், அது ஹலால் எனக் கூறுபவற்றையே ஹலாலாக ஏற்கவேண்டும் என்பதும் தெளிவாகத் தெரிகின்றது. உண்மையில், மார்க்கம் ஹராமாக்கிய ஒன்றை ஹலாலாக்குகின்ற அதிகாரமோ, அது ஹலாலாக்கிய ஒன்றை ஹராம் எனக் கருதுகின்ற அதிகாரமோ எந்த மனிதனுக்கும் கிடையாது. ஆட்சியாளருக்கோ, அரசர்களுக்கோ மதத்தலைவர்களுக்கோ அத்தகைய அதிகாரம் இல்லை. இவ்விடயத்தில் கைவைப்பவர், தன்னை 'றப்'பாக (இறைவனாக) ஆக்கிக் கொண்ட மாபெரும் குற்றத்தைச் செய்தவராவார். அத்தகையவர்களை அங்கீகரித்துப் பின்பற்றுவோர் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் 'முஷ்ரிக்'களாகக் கருதப்படுவர்.
''அல்லாஹ் அனுமதிக்காத எதனையும் அவர்களுக்கு மார்க்கமாக்கிவைக்கக் கூடிய இணைகளும் அவர்களுக்கு இருக்கின்றனவா?'' (42:21) எனக் குர்ஆன் கேட்கின்றது.
ஹராம் ஹலால் விடயத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைத் தமது மதத் தலைவர்களுக்கும், பாதிரிமாருக்கும் கொடுத்த, வேதத்தையுடை யோர்களைக் குர்ஆன் கீழ் வருமாறு சாடுகிறது.
''இவர்கள் அல்லாஹ்வையன்றித் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் மர்யமுடைய மகன் மஸீஹையும் தங்கள் தெய்வங்களாக (றப்புகளாக) எடுத்துக்கொண்டிருக்கின்றனர். எனினும் ஒரே ஆண்டவனைத் தவிர மற்றெவரையும் வணங்கக் கூடாதென்றே இவர்கள் ஏவப்பட்டிருக்கின்றனர், வணக்கத் துக்குரிய நாயன் அவனையன்றி வேறெருவருமில்லை. அவர்கள் இணைவைக்கும் இவைகளை விட்டு அவன் மிகவும் பரிசுத்தமானவன்.'' (9:31)

இத்திருவசனம் இறங்கியபோது, ஆரம்பத்தில் கிறிஸ்தவராக இருந்து பின் இஸ்லாத்தையேற்ற அதீ இப்னு ஹாதிம் (றழி) நபி (ஸல்) அவர்களிடம், 'அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் (யூத-கிறிஸ்தவர்கள்) அவர்களை (தமது மதத் தலைவர்களை) வணங்குவோர்களாக இருக்கவில்லையே' எனக் கூறினார்கள். அதற்கு றஸுலுல்லாஹ், உண்மைதான், ஆனால், அவர்கள் ஹலாலை ஹராமாக்கியும், ஹராத்தை ஹலாலாக்கியும் கூறியபோது அவற்றை அவர்கள் பின்பற்றினார்களல்லலவா? அதுதான் இவர்கள் அவர்களுக்குச் செய்த வணக்கமாகும்' எனக் கூறினார்கள்.
ஹலால்-ஹராம் விடயத்தில் தமது சொந்தக் கருத்துக்களைக் கூறிய முஷ்ரிக்குகளைக் குர்ஆன் கீழ்வருமாறு சாடுகிறது:
''உங்கள் நாவில் வந்தவாறெல்லாம் பொய் கூறுவதைப் போல் இது ஹலாலாகும். இது ஹராமாகுமென்று அல்லாஹ்வின் மீது பொய் கூறாதீர்கள். எவர்கள் அல்லாஹ்வின் மீதே பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாகச் சித்தியடையவே மாட்டார்கள்.'' (16:114)
குறிப்பாக, ஹலாலானவற்றை ஹராமாகக் கருதுவது பாரதூரமான குற்றமாகும். ஷிர்க்காகும். ஹலாலானவற்றையும் பேணுதல் எனும் பெயரில் தமக்கு ஹராமாக்கிக் கொள்ளவிழைகின்ற போக்கைக் குர்ஆன் பல இடங்களில் சாடுகின்றது. இக் கண்ணோட்டம் மதீனாவில் சில முஸ்லிம்களிடம் தலைதூக்குவதை அவதானித்த குர்ஆன், அதனைத் தடுத்து நிறுத்திச் சரிசெய்யும் விதத்தில் கீழ்வரும் வசனத்தை இறக்கியது.
''விசுவாசிகளே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி வைத்திருக்கும் பரிசுத்தமானவைகளை நீங்கள் ஹராமான வைகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள். அன்றி நீங்கள் வரம்பு மீறியும் செலலாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதே இல்லை.'' (5:87)
ஹதீஸில் வந்துள்ள நபித்தோழர் அந்நுஃமான் இப்னு கவ்கல் (றழி) உஹது யுத்தத்தில் தன் உயிரை நீத்த உத்தமர் என்பது குறிப்பிடத்தக்கது. நொண்டியாக இருந்த இவர், உஹத் யுத்தததின் போது தனது வாளை ஏந்தியவாறு, 'இறைவனே, உன்மீது சத்தியமாக இன்று சூரியன் மறைவதற்கு முன்னால் நான் எனது இந்த முடத்துடன் சுவர்க்கத்தை மிதிப்பேன்' எனக் கூறியவராகக் காபிர்களை நோக்கி விரைந்தார். மிகவும் வீராவேசத்தோடு போராடி இறுதியில் ஷஹீதானார். பின்னர் இவரைப்பற்றிக் குறிப்பிட்ட நபி(ஸல்)அவர்கள், 'நான் அவரைச் சுவனத்தை மிதிக்கும் நிலையில் கண்டேன். அவரது காலிலோ முடம் இருக்கவில்லை' எனக் கூறினார்கள். இந்த இப்னு கவ்கல் (றழி) அவர்களை உஹது யுத்தத்தில் கொலை செய்த அபான் இப்னு ஸஈத் என்பார் பிற்காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுச் சிறந்ததொரு முஸ்லிமாக வாழ்ந்த நபித்தோழர் என்பதும் ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும்.
Bottom of Form



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001