வெள்ளி, மே 29, 2015

வரலாறு படைத்த மிஃராஜ்


அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை கொண்டுவருகிறான்.
உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான்.
அந்த வரிசையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஹிஜ்ரத்திற்குப்
பின் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தை ஏற்ப்படுத்தினான்.
இந்த பயணம் நபியவர்களுக்கு பாரிய திருப்பு முனையாக அமைந்தது.
மக்களுக்கு மத்தியில் வரலாறு படைத்தது.
மிஃரஜூம் அதன் நோக்கமும்
மிஃராஜின் நோக்கத்தை அல்லாஹ் குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான். ‘தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, மஸ்ஜிதுல் அக்ஸா வரை பயணம் செய்வித்த அல்லாஹ் தூய்மையானவன். அது எத்தகைய இடம் என்றால், அதனை சூழாக பரகத்தை ஏற்படுத்தியுள்ளோம். மேலும் நமது அத்தாட்சிகளை காட்டுவதற்காக (அவரை அழைத்துச் சென்றோம்) அல்லாஹ் செவியேற்கக் கூடியவனாகவும், பார்க்க கூடியவனாகவும் இருக்கிறான். (17- 01)
இந்த வசனத்தின் மூலம் தனது அத்தாட்சிகளை நபியவர்களுக்கு காட்டுவதற்காக அழைத்து செல்லப் பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். மேலும் அல்லாஹ்வின் வல்லமையையும் உலகிற்கு காட்டுவதற்காகவும் இந்த விண்வெளிப் பயணத்தை நிகழ்த்தி காட்டியுள்ளான்.
ஓவ்வொரு நபிமார்களுக்கும் ஒவ்வொரு விதமான அற்புதங்களை அல்லாஹ் வழங்கினான். நபியவர்களுக்கு வழங்கிய இந்த அற்புதம் வித்தியாசமான முறையில், உலகமே வியக்க கூடிய அளவிற்கு அல்லாஹ் நிகழ்த்திக் காட்டினான்.
நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அருகாமையில் பாதி வழிப்பிலும் பாதி தூக்கத்திலும் இருந்த சந்தர்ப்பத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் ஏனைய இரண்டு மலக்குமார்களுடன் வந்து நபி (ஸல்) அவர்களை ஸம்ஸம் நீரூற்றுக்கு அருகாமையில் அழைத்து சென்று அவரது நெஞ்சை பிழந்து இதயத்தை வெளியில் எடுத்து ஸம்ஸம் நீரால் கழுவி ஈமான் என்ற நம்பிக்கையாலும், அறிவு என்ற நுண்ணறிவாலும் நிரப்பி, மீண்டும் நெஞ்சில் வைத்து தடவினார்கள். நபி (ஸல்) அவர்கள் சிறு வயதாக இருக்கும் பொழுதும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது.
நபி (ஸல்) அவர்கள் பைத்துல் ஹராமில் (கஃபாவில்) இருந்து பைத்துல் அக்ஸாவுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் அழைத்து செல்லப்பட்டார்கள்.
புராக்
புராக் என்ற வாகனம் கோவேறு கழுதையை விட சிறியதும், கழுதையைவிட பெரியதும், அது வெள்ளை நிறமானது. அந்த புராக் வாகனம் தன் பார்வை எட்டும் அளவிற்கு அடி எடுத்து வைத்து வேகமாக செல்லக் கூடியது.
பைத்துல் முகத்திஸ்
நபி (ஸல்) அவர்கள் கஃபாவில் இருந்து பைத்துல் முகத்திஸூக்கு செல்லும் வழியில் செம்மண் குன்றுக்கு அருகில் மூஸா (அலை) அவர்களின் மண்ணரையில் மூஸா நபியை தொழுத வண்ணமாக கண்டார்கள். இது நபியவர்களுக்கு காட்டிய அல்லாஹ்வின் அத்தாட்சியாகும்.
நபி (ஸல்) அவர்கள் பைத்துல் முகத்தஸிற்கு சென்ற உடன் நபிமார்கள் தனது வாகனங்களை கட்டிவைக்கும் இடத்தில் புராக் வாகனம் கட்டிவைக்கப்பட்டது. அங்கு மீண்டும் மூஸா நபியை அல்லாஹ் எடுத்துக் காட்டினான் மூஸா நபி ஷனூஆ குலத்தை சார்ந்த உயரமான மனிதரின் தோற்றத்தில் காணப்பட்டார்கள். அதே போன்று ஈஸா (அலை) அவர்களையம் அல்லாஹ் எடுத்துக் காட்டினான். ஈஸா (அலை) அவர்கள் உர்வா பின் மஸ்ஊத் அஸ்ஸகபி அவர்களைப் போன்ற தோற்றத்தில் காணப்பட்டார்கள். அதே போன்று இப்றாஹீம் (அலை) அவர்களை அல்லாஹ் எடுத்துக் காட்டினான் அவர்கள் நபி அவர்களுடைய சாயலில் காணப்பட்டார்கள். அந்த இடத்தில் எல்லா நபிமார்களுக்கும் தலைமை தாங்கி நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடாத்தினார்கள். தொழுகை முடிந்வுடன் இவர்தான் நரகத்தின் காவலாளி என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் மாலிக் (அலை) அவர்களை அறிமுகப்படுத்தி ஸலாம் சொல்லும்படி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொல்ல ஆரம்பிக்கும் போது மாலிக் (அலை) அவர்கள் முந்திக்கொண்டு நபி அவர்களுக்கு ஸலாம் கூறினார்.
அதன் பின் ஜிப்ரீல் (அலை) அவர்களுடன் புராக் வாகனத்தில் ஏறி விண்னை நோக்கி பயணமானர்கள். முதலாவது வானத்தை அடைந்வுடன் அதன் கதவை தட்டினார்கள். முதலாவது வானத்தில் உள்ள வானவர்கள். யார் வந்திருப்பது என்று கேட்டார்கள். ஜிப்ரீல் வந்துள்ளேன் உங்களுடன் வேறு யாரும் வந்துள்ளாரா? ஆம்! முஹம்மத் நபி வந்துள்ளார். அவர் இங்கே அழைத்து வருவதற்கு அனுமதி உள்ளதா? ஆம்! அல்லாஹ்வுடைய அனுமதியினால் அழைத்து வந்துள்ளேன். இப்போது முதலாம் வானத்தில் கதவு திறக்கப்படுகிறது. நபி (ஸல்) அவர்களும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் உள்ளே செல்கிறார்கள். முதலாவது வானத்தில் ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் எடுத்துக் காட்டினான் ஆதம் நபிக்கு நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொல்கிறார்கள். இப்பொழுது ஆதம் நபி வலது பக்கமாக திரும்பி சிரிக்கிறார்கள். இடது பக்கமாக திரும்பி அழுகிறார்கள். அதற்கான காரணத்தை நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் கேட்டபோது வலது பக்கமாக உள்ளவர்கள் உங்கள் சமுதாயத்தில் சொர்கம் செல்லக் கூடியவர்கள். இடது பக்கமாக உள்ளவர்கள் உங்கள் சமுதாயத்தில் நரகம் செல்லக் கூடியவர்கள். என்று கூறினார்கள்.
இதன் பின் இரண்டாவது வானத்திற்கு செல்கிறார்கள். இரண்டாம் வானத்தின் கதவை தட்டுகிறார்கள் முதலாவது வானத்தில் நடந்தைப் போன்றே சம்பாசனை நடக்கிறது. இரண்டாவது வானத்திற்குள் சென்றவுடன் அங்கு ஈஸா (அலை) அவர்களையும் யஹ்யா (அலை) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சந்திக்கிறார்கள். மூன்றாம் வானத்தில் யூசுப் நபியை சந்திக்கிறார்கள். நான்காம் வானத்தில் இத்ரீஸ் நபியை சந்திக்கிறார்கள். ஐந்தாம் வானத்தில் ஹாரூன் நபியை சந்திக்கிறார்கள். ஆறாம் வானத்தில் மூஸா நபியை சந்திக்கிறர்கள் ஏழாம் வானத்தில் இப்றாஹீம் நபியை சந்திக்கிறார்கள்.
இப்றாஹீம் (அலை) அவர்கள் பைதுல் மஃமூர் பள்ளிவாசலில் தனது முதுகை சாய்த்தவர்களாக அமர்ந்திருந்தார்கள்.
பைத்துல் மஃமூர்
பைத்துல் மஃமூர் என்பது மலக்குமார்களால் அல்லாஹ்வை வணங்குவதற்காக அமைக்கப்பட்ட பள்ளியாகும். அந்த பைத்துல் மஃமூர்க்குள் ஒரு நாளைக்கு எழுபது ஆயிரம் மலக்குமார்கள் உள்ளே செல்வார்கள். உள்ளே சென்ற மலக்குமார்கள் மீண்டும் வெளியேவர மாட்டார்கள். மறுநாள் புதிதாக எழுபது ஆயிரம் மலக்குமார்கள் உள்ளே செல்வார்கள் இப்படி ஒவ்வொரு நாளும் நடந்துகொண்டே இருக்கும்.
ஸித்ரதுல் முன்தஹா
ஸித்ரதுல் முன்தஹா என்பது இலந்தை இலை மரமாகும். இதனுடைய வேர் பகுதி ஆறாம் வானத்தில் இருந்து ஆரம்பமாகி ஏழாம் வானத்தில் விருட்சமாக அல்லாஹ் படைத்துள்ளான். அதன் இலைகள் யானையுடைய காதுகள் அளவுக்கு இருக்கும். அதனுடைய பழங்கள் பெரிய பெரிய கூஜாக்களைப் போன்று இருக்கும். அந்த இலந்தை மரத்தை சூழாக பிரகாசமாக வெளிச்சமாக இருக்கும். தங்கத்திலாலான வெட்டுக் கிளிகள் அதனை சூழாக பறந்து கொண்டே இருக்கும்.
நான்கு நதிகள்
ஸித்ரதுல் முன்தஹா மரத்தின் வேர் பகுதியில் இருந்து நான்கு நதிகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதில் இரண்டு நதிகள் (ஸல்ஸபீல், கவ்ஸர்) சொர்கத்திற்குள்ளும் மற்ற இரண்டு நதிகள் (நைல், யூப்ரடீஸ்) சொர்கத்திற்கு வெளியேயும் உள்ளது.
இந்த இடத்தில் வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் பாலுள்ள கிண்ணத்தையும், மது உள்ள கிண்ணத்தையும் கொடுக்கும் போது நபி (ஸல்) அவர்கள் பாலுள்ள கிண்ணத்தை தெரிவு செய்தார்கள். அப்போது நீங்கள் இயற்க்கை மார்க்கத்தை தெரிவு செய்துவிட்டீர்கள். என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள். மேலும் அந்த இடத்தில் வைத்து மூன்று கட்டளைகள். நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டன.
1. தொழுகை
2. ஸூரதுல் பகரா அத்தியாயத்தின் கடைசி மூன்று வசனங்கள்.
3. இணைவைக்காத நிலையில் பெரும்பாவங்கள் செய்திருப்பின் அவர்களுக்கு மன்னிப்பு என்ற மூன்று கட்டளைகள் வழங்கப்பட்டன.
மூஸா நபியும் தொழுகையும்
நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பேசிவிட்டு திரும்பும் போது மூஸா நபி அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ் என்ன சொன்னான் என்று கேட்ட போது ஐம்பது நேரத்து தொழுகையை அல்லாஹ் என் சமுதாயத்தின் மீது கடமையாக்கினான் என்று சொன்ன உடன் அதற்கு மூஸா நபி உமது மக்கள் ஐம்பது நேரத் தொழுகையை தொழ மாட்டார்கள். அல்லாஹ்விடம் சென்று குறைத்து வாருங்கள். என்று சொன்னவுடன் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் சென்று பேசிக் குறைக்கின்றார்கள். இறுதியில் ஐந்து நேரத் தொழுகையை பெற்றுக்கொண்டு வரும்போது மீண்டும் மூஸா நபி ஐந்து நேரத் தொழுகையையும் உமது சமுதாயம் தொழமாட்டார்கள். இதையும் அல்லாஹ்விடம் சென்று குறைத்து வாருங்கள். என்று கூறிய போது நபி (ஸல்) அவர்கள் எனக்கு வெட்கமாக உள்ளது என்று வந்து விடுகின்றார்கள். எவர் ஐந்து நேரத் தொழுகையை சரியாகத் தொழுகிறாரோ அவர் ஐம்பது நேரத் தொழுகையை தொழுததிற்கு சமனாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்களும், பைத்துல் முகத்திஸூம்
நபி (ஸல்) அவர்கள். மிஃராஜ் சென்று வந்த செய்தியை மக்களிடத்தில் சொல்லிய போது முஷ்ரிகீன்கள் அதை மறுத்தார்கள். அத்துடன் கேலி செய்ய ஆரம்பித்தார்கள். குறிப்பிட்ட இந்த இரவில் யாரும் போய்வர முடியாத இந்த பயணத்தை இவர் சென்றுவந்தாராம். என்று பரிகாசம் செய்ய ஆரம்பித்தனர். இப்பொழுது பைத்துல் முகத்திஸூக்கு சென்றுவந்தவர்கள். நபி அவர்களிடம் சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தனது வாழ்க்கையில் ஒரு தடவை கூட பைத்துல் முகத்திஸூக்கு சென்று வந்தது கிடையாது. இவர்கள் நபியவர்களிடம் பைத்துல் முகத்திஸ் பள்ளியில் உள்ள சில வர்ணனை பற்றி கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைப் பற்றிய சரியாக தெரியாததினால் தடுமாற்றத்திற்குள் ஆளான போது இப்பொழுது அல்லாஹ் அந்த பைத்துல் முகத்திஸ் பள்ளியை நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் அப்படியே கொண்டுவந்து காட்டினான். அதைப் பார்த்துக்கொண்டே நபி (ஸல்) அவர்கள் முஷ்ரிகீன்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள் (முஸ்லிம்: 278)
நபியவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்களா?
மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரழி) அவர்கள் ஆயிஷா (ரழி) அவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது ஆயிஷா (ரழி) அவர்கள் மூன்றில் ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிவிட்டார். என்று கூறிவிட்டு முதலாவது யார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாக பார்த்ததாக கூறுகிறாரோ அவர் அல்லாஹ் மீது இட்டுக் கட்டிவிட்டார். என்று கூறியதும் சாய்ந்திருந்த மஸ்ரூக் அவர்கள் உம்முல் முஃமினீன் அவர்களே! நிதானித்துக் கூறுங்கள். அவனை அவர் தெளிவான அடிவானத்தில் கண்டதாக அல்லாஹ் கூறுகின்றனே என்று கேட்டபோது அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் இதைப் பற்றி முதன் முதலாக அல்லாஹ்வின் தூதரிடம் நான் தான் கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரடியாகக் கண்ட செய்தியைத் தான் அந்த வசனத்தின் மூலமாக அல்லாஹ் கூறுகிறான். என்று கூறினார்கள். (நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை இரண்டு தடவை அவர்களின் நிஜ உருவத்தில் நேரடியாக கண்டார்கள். ஒரு தடவை ஹிராக் குகையில் இருந்து வெளிவரும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்கள் வானத்திற்கும் பூமிக்கும் இடைப்பட்ட பெரிய ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்தவராக இறக்கையை விரித்த வண்ணமாக காணப்பட்டார்கள். இரண்டாவது தடவை சித்ரதுல் முன்தஹாவில் வைத்து ஜிப்ரீல் (அலை) அவர்களின் நிஜ உருவத்தில் நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்.) இதைத்தான் அல்லாஹ் குர்ஆனில் ‘அவர் தெளிவான அடிவானத்தில் அவரைக் கண்டார்’ (அல்குர்ஆன் 81:23) ‘மற்றொரு முறையும் அவரை அவர் கண்டார்’ (அல்குர்ஆன் 53:13) இந்த இரண்டு வசனங்களும் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை நேரடியாக கண்டதாக தெளிவு படுத்தப்படுகிறது.
இரண்டாவது அல்லாஹ்வின் தூதர் இறைவேத்தில் எதையாவது மறைத்து விட்டார்கள் என்று எவராவது கூறினால் அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டியவராவார்.
மூன்றாவது நபி (ஸல்) அவர்களுக்கு மறைவான அறிவு இருக்கிறது என்று யாராவது கூறினால் அவரும் அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டியவராவார். என்று ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்.
மிஃராஜின் போது நபி (ஸல்) அவர்களுக்கு நரகத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் அல்லாஹ் எடுத்துக் காட்டினான். அதே போன்று சுவர்க்கத்தில் ஒவ்வொரு இன்பங்களையும் அல்லாஹ் எடுத்துக் காட்டினான்.
எனவே இந்த மிஃராஜின் மூலம் அல்லாஹ் அவனது ஆற்றலை வெளிக்காட்டுவதோடு நபி (ஸல்) அவர்களுக்கு தனது அத்தாட்சிகளை காட்டி உலக மக்களுக்கு இந்த செய்தி வரலாறு படைத்ததாக அமைத்துள்ளான்.
Share
·         ஒவ்வொரு வருடமும் ரஜப் மாதத்தின் 27 ம் நாள் மிஃராஜுடைய தினம் என குறிப்பிட்டு அதில் நோன்பு வைப்பதும், பள்ளிகளில் கந்தூரிகள் வைத்து மௌலிதுகள் ஓதுவதும் பரவலாகக் காணக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. இவைகள் அனைத்தும் வழிகெட்ட பித்அத்துகளாகும். இவைகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமோ, அடிப்படையோ இல்

விண்ணுலகப் பயணம்அந்நஜாத்

 “தன் அடியாரை (முஹம்மதை) (கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ்) என்ற மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஓரே இரவில் அழைத்துச் சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்” (அல்குர்ஆன் 17:1)
அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஒரு இரவுக்குள் வெகு தொலைவு அழைத்துச் சென்றதை அல்லாஹ் மேற்கூறிய வசனத்தின் மூலம் தெளிவாக்ககின்றான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அங்கிருந்து புராக் வாகனத்தின் மூலம் விண்ணுலகம் சென்று பல்வேறு காட்சிகளைக் கண்டுவிட்டு, இறைவனுடன் உரையாடிவிட்டு வந்ததை” கூறியுள்ளனர்.
அல்லாஹ்வின் ஆற்றலில் முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ள எவருக்கும் இதில் எள்ளளவும் ஆச்சரியம் இருக்க முடியாது. ஒவ்வொரு முஸ்லிமும் “மிராஜை” கட்டாயம் நம்பியே ஆக வேண்டும்.
இன்றைய இஸ்லாமியர்கள் மிஃராஜ் பற்றி கொண்டுள்ள தப்பான அபிப்பிராயங்களை நீக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை.
மிஃராஜ் எந்த மாதம் எந்த நாள் ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம். அறிஞர் “ஸதீ” அவர்கள் “துல் கஃதா மாதத்தில் ஏற்பட்டது” என்கிறார்கள். இமாம் ஜுஹ்ரியும், இமாம் உர்வா அவர்களும் ரபீவுல் அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகின்றனர். அதனை உறுதி செய்யும் விதமாக, நபி தோழர்கள் ஜாபிர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) இருவரும் ரபீவுல் அவ்வல் 12ல் மிஃராஜ் ஏற்பட்டதாக இயம்புகின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரக் குறிப்போடு “ரஜப் 27ல் நடந்தது” என்கிறார்.
மிஃராஜ் எந்த மாதம் ஏற்பட்டது என்பதில் கருத்து வேறுபாடு தோன்றக் காரணம் என்ன? மிஃராஜ் நடந்ததை நம்ப வேண்டும் என்பதைத் தவிர அந்த நாளுக்கு என்று விசேஷத் தொழுகையோ, விசேஷ நோன்பையோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஹாபாக்களுக்கு கூறவில்லை.
ஏதேனும் ஒரு விசேஷமான அமலை அவர்கள் தம் தோழர்களுக்குச் சொல்லி இருந்தால் நபித்தோழர்கள் அனைவரும் அந்த அமலைச் செய்வதற்காக அந்த நாளை நினைவுவைத்திருப்பாாகள். இரண்டு, மூன்று அபிப்பிராயங்களை கொண்டிருக்க முடியாது.
ஆஷுரா நாளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்கக் கூறியதால் அந்த நாள் எது என்பதை நன்றாகவே சஹாபாக்கள் நினைவில் வைத்திருந்தார்கள். முஹர்ரம் பத்தாம் நாள் தான் ஆஷுரா என்று ஒரு குரலில் சொன்னார்கள். மிஃராஜைப் பொறுத்தவரை அந்த நிகழ்ச்சியை நம்பவேண்டும் அவ்வளவுதான். எந்த தேதியில் நடந்தது என்று முடிவு கட்டுவது அதற்காக நாமாக விசேஷ வணக்கங்களை ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுடைய அதிகாரத்தில் தலையிடுவதாகும்.
இப்னு அப்பாஸ் (ரழி) ஜாபிர் (ரழி) உாவா, ஜுஹ்ரி ஆகிய இமாம்கள் ரபிவுல் அவ்வலில் மிஃராஜ் ஏற்பட்டதாக உறுதி செய்கின்றனர். ஹாபிழ் அப்துல் கனி அவர்கள் பலவீனமான ஆதாரத்துடன் ரஜப் 27ல் மிஃராஜ் ஏற்பட்டது என்கிறார்.
பலமான ஆதாரத்தின் அடிப்படையில் அறிவிக்கப்படும் ரபிவுல் அவ்வலை விட்டுவிட்டு, பலவீனமான ஆதாரத்துடன் அறிவிக்கப்படும் “ரஜப் 27″ ஐ தேர்ந்தெடுத்த மர்மம் என்ன? இதனை நாம் சிந்திக்க வேண்டும். சொறிபொழிவாளர்கள் இதனை வலியுறுத்திக் கூறக் காரணம் என்ன?
ரபிவுல் அவ்வலில் தான் மிஃராஜ் நடந்தது என்று கூறினால் அதில் அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். மீலாது விழாக்கள் என்று தனி வியாபாரம். பிறகு ரஜபில் மிஃராஜ் விழாக்கள் என்று இன்னொரு வியாபாரம். இப்படி இரண்டு மாதங்களிலும் வந்து கொண்டிருக்கும் வருமானம் பாதிக்கும். ரபிவுல் அவ்வலில் மிஃராஜ் என்பதை மக்களுக்குச் சொன்னால் மீலாத் மிஃராஜ் இரண்டுக்கும் ஒரு விழா நடத்தி போதுமாக்கிவிடுவார்கள். ரஜபு மாதம் வருவாயற்றுப் போய்விடும். எல்லா மாதங்களிலும் பயான் பாதிஹா என்று வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எவ்வித வருமானமுமில்லாமல் இருந்த ரஜப் மாதத்தில் மிஃராஜ் நடந்ததாக மக்களை நம்ப வைத்தார்கள். அதன் சிறப்பை மெருகூட்ட வேண்டும் என்பதற்காக, அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத் தராத புதுப்புது வணக்கங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்
இன்று மிஃராஜ் நல்லதொரு வியாபாரமாக ஆகிவிட்டது. பயான் செய்வோருக்கு நல்ல அறுவடை. “பெண்ணின் முகம், குதிரை உடல்” கொண்ட விந்தைப் பிராணியை பிரிண்ட் செய்து இதுதான் புராக் என்று விற்பது ஒரு பக்கம். அதனை வீகளில் மாட்டிக் கொண்டு தாங்களே மிஃராஜ் சென்று விட்டதாக பூரிக்கும் கூட்டம் இன்னொரு பக்கம். மிஃராஜ் வணக்கங்கள், விசேஷத் தொழுகை, விசேஷ நோன்பு என்று அதன் முறைகளை விவரிக்கும் பிரசுரங்களின் வியாபாரம் இன்னொரு பக்கம். அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத இந்த விசேஷ வணக்கங்கள் கண்ணாடி பிரேம் போட்டுத் தொங்கவிட்டுக் கொண்டிருக்கும் பள்ளிவாசல்கள் இன்னொரு பக்கம்.
பள்ளிவாசல்களின் அலங்காரம் என்ன? பூக்கட்டுக்கள் என்ன? புத்தாடை அணிவது என்ன! நெய்ச்சோறு விநியோகம் என்ன! நன்றாகவே மிஃராஜை ஜமாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தொழுகை கடமையாக்கப்பட்ட மிஃராஜ் இரவில் விடிய விடிய விழித்து விழாக் கொண்டாடி விட்டு சுபுகள் தொழ பள்ளியில் இமாமையும் மோதினாரையும் விட்டு விட்டு செல்லும் ஊர்கள் எத்தனை?
அன்புமிக்க இஸ்லாமியர்களே! மிஃராஜை நம்புங்கள்! அது நமக்கு உணர்த்தும் பாடத்தை படியுங்கள்! இறைவனின் ஆற்றலை இறை தூதரின் சிறப்பை, தொழுகையின் மகத்துவத்தை மனதில் இருத்துங்கள்! இது போன்ற ஏமாற்று வலைகளில் விழாதீர்கள்.
மூஃமின்களின் மிஃராஜாக இருக்கின்ற மிஃராஜ் இரவில் கடமையாக்கப்பட்ட ஐந்து வேளை தொழுகையை தொழுது வருவோமாக!
·          


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக