வெள்ளி, ஜூன் 12, 2015

இரவு தொழுகை (ஸலாத்துல் லைல்) ஓர் ஆய்வு


இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்த வரை ஒரு வணக்கத்தைச் செய்வதாக இருந்தால் அருள்மறைக் குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளிலோ இடம்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் அது ஒரு போதும் அழ்ழாஹ்வால் வணக்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்கின்ற அடிப்படையை மனதில் இருத்தியவர்களாக இரவுத் தொழுகை தொடர்பான ஆய்வுக்குள் நுழைவோம்.
  يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். 47:33                    எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமழான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-37).
இரவுத்தொழுகையின் சிறப்புகள்: இந்த‌ இரவுத்தொழுகையான‌து, நமக்கு விதிக்கப்பட்ட கடமையான தொழுகைகளுக்கு பிறகு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், அதிக நன்மையை பெற்றுத்தரக்கூடியதாகவும் விளங்குகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .ரமலான் மாதத்திற்குப் பிறகு சிறந்த நோன்பு, அல்லாஹ்வின் மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை, இரவில் தொழும் தொழுகையாகும் .அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); நூல்:முஸ்லிம்
ஒரு முறை நபி(ஸல்)அவர்கள் நடுநிசியின் போது புறப்பட்டு பள்ளியில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது மக்களில் சிலர் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். காலையில் மக்கள் (இதுபற்றி) பேச ஆரம்பித்துவிடவே (மறுநாள்) அவர்களைவிட அதிகமானோர் கூடிவிட்டார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள் தொழ, அவர்களைப் பின்பற்றி (மக்களும்) தொழுதார்கள். காலையில்(முன்போல்) மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். மூன்றாம் நாள் இரவு பள்ளிக்கு வந்தவர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. அன்றும் நபி(ஸல்)அவர்கள் புறப்பட்டு வந்து, அவர்களின் தொழுகையைப் பின்பற்றி தொழப்பட்டது.
நான்காம் நாள் இரவு வந்த மக்களால் பள்ளி கொள்ளாத நிலை ஏற்பட்டுவிட்டது. அன்று நபி(ஸல்)அவர்கள் சுப்ஹு தொழுகைக்குத்தான் வந்தார்கள். (இரவுத்தொழுகைக்கு வரவில்லை.) சுப்ஹு தொழுகை தொழவைத்து முடித்தவுடன் (எப்போதும் சொற்பொழிவுக்குமுன் ஓதக்கூடிய) "தஷஹ்ஹுது, அம்மா பஃது" ஆகியவற்றை ஓதிவிட்டு மக்களை நோக்கி, 'நீங்கள் இருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை.எனினும் நான் உங்கள் மீது இவ்விரவுத் தொழுகை கடமையாக்கப்பட்டு அவற்றை நீங்கள் தொழ இயலாது போய்விடுவீர்களோ என்று பயந்தே
 (நான் இரவு வெளியில் வராமல்) இருந்துவிட்டேன் என்று கூறினார்கள். இவ்வாறு ரமழானில் நிகழ்ந்தது. அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி
நபி(ஸல்)அவர்கள் இரவுத்தொழுகை விஷயமாக (மக்களுக்கு) வலியுறுத்திக் கட்டளையிடாமல், "ரமலானில் ஈமானோடும், நன்மைகிட்டும் என்ற நல்லாதரவோடும் நின்று வணக்கம் புரிவோரின் முன்செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்" என்று கூறி ஆர்வமூட்டிக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில் நபி(ஸல்)அவர்கள் மரணித்துவிட்டார்கள். பின்னர் அபூபக்ர்(ரலி) அவர்களின் ஆட்சி காலத்திலும், உமர்(ரலி)அவர்களின் ஆட்சியின் ஆரம்ப கட்டத்திலும் நிலைமை இவ்வாறே நீடித்திருந்து வந்தது என்று இதன் அறிவிப்பாளரில் ஒருவரான இமாம் ஜுஹ்ரி அவர்கள் அறிவித்துள்ளார்கள். அறிவிப்பாளார்: அபூஹுரைரா(ரலி) நூற்கள்: புகாரி, முஸ்லிம்
மேற்காணும் அறிவிப்புகளின் மூலம் ரமலான் இரவுத்தொழுகையின் மகத்தான பலன்களை நாம் அறியலாம்.
இரவுத் தொழுகையின் நேரம்:
இஷா தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம்
நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ரு தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ரு (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி
இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும்:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கிவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி
ஆக, இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாக தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கைக் கொண்ட வித்ரு தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.
இரவுத் தொழுகை தவறி விட்டால்...
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களுக்கு நோய்முதலியவற்றால் இரவுத் தொழுகை தவறி விட்டால் (அதற்கு ஈடாகப்) பகலில் பன்னிரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். நூல்: முஸ்லிம்
தராவீஹ் என்றால் என்ன?
‘தர்வீஹதுன்’ என்றால் ஓய்வு என்று பொருள்படும். ‘தர்வீஹதுன்’ என்பதன் பன்மையே தராவீஹ் ஆகும். தராவீஹ் தொழுகை என்றால் ‘ஓய்வுத் தொழுகைகள்’ எனப் பொருள்படும். ஆனால், தராவீஹ் என்ற சொற்பிரயோகம் அல்குர்ஆனிலோ, அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான நபிமொழிகளோ பயன்படுத்தப்படவில்லை.
எனவே, இதிலிருந்து தராவீஹ் என்ற பெயர் பிற்பட்ட காலத்தவர்களாலேயே உருவாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம். இரவுத் தொழுகை தொடர்பாக அல்குர்ஆன், ஆதாரபூர்வமான நபிமொழிகளில்
1.கியாமுல் லைல் (இரவில் நிற்றல்)
2.ஸலாத்துல் லைல் (இரவுத் தொழுகை)
3. வித்ர் (ஒற்றபை;படை)
4.தஹஜ்ஜத் (விழித்தெழுந்து தொழும் தொழுகை)
 என ஒரே தொழுகைக்கு பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதனால் இந்த தொழுகைகளை வெவ்வேறு தொழுகைகள் என சிலர் தவறாக விளங்கியுள்ளனர்.
ரமழானுக்கு என்று விஷேட தொழுகைகள் உண்டா?
நபிமொழிகளை ஆய்வு செய்கையில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரழமான் அல்லாத காலங்களில் தொழுது வந்த 11 ரக்அத்களையே ரமழானிலும் தொழுதுள்ளார்கள். மாறாக, ரமழானுக்கு என்று எந்த விஷேட தொழுகைகளையும் கற்றுத் தரவில்லை என்பது தெளிவாகின்றது. ஆனால், ஏனைய மாதங்களை விட ரமழானில் தொழுவதற்கு அதிகமதிகம் ஆரவமூட்டியுள்ளார்கள்.
தஹஜ்ஜத்தும் தராவீஹும்
சில மார்க்க அறிஞர்கள் தஹஜ்ஜத் தொழுகை வேறு, தராவீஹ் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். ஆனால், அவர்களின் வாதம் தவறானது என பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகின்றன.
‘ரமழான் மாதத்தின் இருபத்து மூன்றாவது இரவில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் மூன்றில் ஒரு பகுதி வரை நாங்கள் தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் பாதிவரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவிற்குத் தொழுதோம்’
(அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷிர் (ரழி), நூல்: நஸயீ-1606, அஹ்மத்-18402)
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 11 ரக்அத்களை, இரவில் வெவ்வேறு நேரங்களில் தொழுதுள்ளார்கள் என்பதை மேலுள்ள நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
இரவுத் தொழுகையும், வித்ரும்
சில மார்க்க அறிஞர்கள் வித்ர் தொழுகை வேறு, இரவுத் தொழுகை வேறு என வாதிடுகின்றனர். இந்த வாதமும் தவறானதாகும்.
‘உங்களின் கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்.’ (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-472,998)
‘வித்ர்’ என்ற வார்த்தைக்கு ‘ஒற்றைப்படை’ என்று பெருளாகும். எனவே, குறித்த நபிமொழியை ‘இரவுத் தொழுகையில் கடைசியை ஒற்றைப்படையாக்கி கொள்ளுங்கள்’ என முழுமையாக மொழிபெயர்க்கும் போது இரண்டும் தனித்தனி தொழுகை என்கின்ற வாதம் தவறானது என்பது தெளிவாகின்றது.
இரவுத் தொழுகையின் ரக்அத்கள் எத்தனை?
‘நான் (அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரழி) அவர்களிடம், ரமழான் மாதத்தி(ன் இரவுகளி)ல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது, என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள், என்று விடையளித்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூசலமா பின் அப்திர்ரஹ்மான் (ரஹ்),
 நூல்: ஸஹீஹுல் புஹாரி-1147,2013,3569)
மேலுள்ள நபிமொழியை நாம் நடுநிலையோடு ஆய்வுக்குட்படுத்துகையில் நமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாகின்றது. அன்னை ஆயிஷா (ரழி) அவர்களிடம் ‘ரமழான் மாதத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?’ என்றே கேட்கப்படுகின்றது.
ஆனால், அன்னையவர்கள் ‘ரமழானிலும் ரமழான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.’ என்று மிக அழுத்தமாக ரமழான் அல்லாத காலங்களையும் குறிப்பிட்டு பதிலளிக்கின் றார்கள்.
மேலுள்ள நபிமொழியில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் கால இரவுத் தொழுகையின் ரக்அத்களை அதிகப்படுத்தாது, வழமையாக இரவுத்தொழுகை எத்தனை ரக்அத்கள் தொழுது வந்தார்களோ அதே பதினொரு ரக்அத்களையே ரமழானிலும் தொழுது வந்தார்கள்
என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்தெளிவுபடுத்துகின்றார்கள்.
தறாவீஹ் தொழுகை இருபது ரக்அத்துகள் என்று வாதிடக்கூடியவர்கள் எடுத்து வைக்கின்ற தவறான வாதங்களும் தக்க பதில்களும்
தவறான வாதம்: ‘உமர் (ரழி) அவர்களது காலத்தில் நாங்கள் இருபது ரக்அத்துக்கள் தொழுது வந்தோம்.’ (அறிவிப்பவர்:ஸாயிப் பின் யஸீத், நூல்: பைஹகீ-833)
தக்க பதில்:
1.குறித்த செய்தியில் நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் சம்பந்தப்படவில்லை. மாறாக, உமர் (ரழி) அவர்கள் காலத்தில் நடந்ததாகவே குறித்த செய்தி குறிப்பிடுகின்றது.
2.மேலும் ‘ஸாயிப் பின் யஸீத்’ அவர்களே நபித்தோழர் உமர் (ரழி) அவர்கள் 11 ரக்அத்துகள் தொழுவிக்குமாறு கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கக் கூடிய செய்தி ஆதாரபூர்வமாக இடம்பெற்றுள்ளது. ‘மக்களுக்கு பதினொரு ரக்அத்கள் தொழுவிக்குமாறு உபை பின் கஅப், தமீமுத்தாரி ஆகிய இருவருக்கும் உமர் (ரழி) அவர்கள் கட்ளையிட்டார்கள்.’ (அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத், நூல்: முஅத்தா-379)
தவறான வாதம்: ‘உமர் (ரழி) அவர்கள் காலத்தில் ரமழான் மாதத்தில் மக்கள் இருபத்து மூன்று ரக்அத்கள் தொழுது வந்தனர்’
(அறிவிப்பவர்: யஸீத் பின் ரூமான், நூல்: பைஹகீ-4802, முஅத்தா-380)
தக்க பதில்: குறித்த செய்தியை அறிவிக்க கூடிய ‘யஸீத் பின் ரூமான்’ என்பவர் உமர் (ரழி) அவர்களது காலத்தில் பிறந்தவர் கிடையாது. எனவே, இச் செய்தி ஆதாரபூர்வமற்றது.
.மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹரமில் 23 ரக்அத்கள் தொழுவிக்கப்படுகின்றதே?
நாம் மார்க்க விடயத்தில் முன்மாதிரியாக கொள்ள வேண்டியது அருள்மறைக் குர்ஆனையும், அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது ஆதாரபூர்வமான பொன்மொழிகளையும் மாத்திரமே. மாறாக, அழ்ழாஹ்வோ, அவனது தூதர் (ஸல்) அவர்களோ மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளுமாறு கட்டளையிட்டது கிடையாது.                                                                           இதனையே அருள்மறைக் குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
   اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ
‘உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!’(அல்குர்ஆன் 07:03)
இதில் ஆச்சரியம் என்னவென்றால், மக்காவில் கப்ரு வணக்கம், மௌலூத், கத்தம், பாத்திஹா, தகடு, தாயத்து, தரீக்கா போன்ற வழிகேடுகள் கிடையாது.
இவற்றிலெல்லாம் மக்காவை முன்மாதிரியாகக் கொள்ளாத இவர்கள் இரவுத் தொழுகை விடயத்தில் மாத்திரம் மக்காவை முன்னுதாரணமாகக் காட்டுவது இவர்களின் இரட்டை நிலையை தெளிவாகப் படம்பிடித்துக்காட்டுகின்றது.
‘நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும் என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: ஆயிஷா(ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி-2697)
‘செய்திகளில் மிகவும் உண்மையானது அழ்ழாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய நடை முறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்கள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.’ (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: நஸயீ-1560)
மேலுள்ள நபிமொழிகள் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்ததற்கு மாற்றமாக மார்க்கத்தில் புதுமைகளை ஏற்படுத்துவது எம்மை நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என எச்சரிக்கின்றது. இன்னும், நாம் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவுத்தொழுகையின் ரக்அத்கள் தொடர்பாக தெளிவுபடுத்தியதன் பின்னர் நன்மை என்ற பெயரில் அதிகப்படுத்துவது மார்க்கத்தின் சொந்தக்காரனான அழ்ழாஹ்வுக்கே பாடம் கற்பிக்க முனைவதாகும். இதனையே திருமறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது.‘
 قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۚ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ நீங்கள் உங்கள் மார்க்க (வழிபாடுகள்) பற்றி அல்லாஹ்வுக்கு கற்றுத் தர விரும்புகிறீர்களோ? அல்லாஹ்வோ வானங்களிலுள்ளவற்றையும், பூமியிலுள்ளவற்றையும் நன்கு அறிகிறான் - அன்றியும், அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் நன்கறிகிறவன்” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் 49:16)
எனவே, அழ்ழாஹ்வும், அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களும் கற்றுத் தந்த முறையில் இரவுத் தொழுகை உட்பட அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றுவதற்கு வல்லோன் அழ்ழாஹ் அருள்புரிவானாக
இரவு தொழுகை "தராவிஹ்" கடமையா! கடமையில்லையா!!
நோன்பு மாதம் வந்துவிட்டால் இரவு தொழுகைக்கு நாம்கொடுக்கும் முக்கியத்துவம் மற்ற நல்ல விசயங்களுக்கு கொடுப்பதுயில்லை இரவு தொழுகைக்கு முக்கியத்துவம் அனுமதிக்க பட்டவையா?இல்லையா? நினைத்தல் வேதனையான உள்ளது நாம் ஏன் இன்னும் அறியாமையில் இருந்து கொண்டுள்ளோம்.
 நாம் அனைவரும் எதற்காக தொழுகிறோம்? நன்மைகிடைக்கும் என்ற நோக்கில் தான். ரமலான் மாதம் நாம் செய்யும் ஒரு நன்மைக்கு ஆயிரம் நன்மைகள் என்பது அனைவர்களும் அறிந்த ஒன்றுதான். நாம் செய்யும் தவறுகளால் இறைவன் எப்படி நமக்கு எப்படி நன்மை கிடைக்கும் தவறு செய்கிறோம் என்று தெரிந்து செய்தால் எப்படி இறைவன் மன்னிப்பான்
சுன்னத் ஜமாஅத்என்று சொல்ல கூடியவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எட்டு ரகாயத் தான் தொழுதார்கள் என்று தெள்ள தெளிவாக தெரிந்த பின்பும் 20 ரகாயத்தான் தொழுவோம் என்று அடம்பிடிக்கிறார்கள் சரி அது தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர்கள் தொழும் வித்ரு தொழுகையாவது சரியா என்றால் அதுவும் நபிவழிப்படி இல்லை. வித்ரு தொழுகை தொழும் முறையில் மாற்றம் இருப்பது பலரால் இன்னும் கவனிக்க படாமலே இருக்கின்றதால் இங்கே தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது.
"வித்ரு தொழுகை அவசியமானதாகும். யார் நாடுகிறாரோ அவர் ஐந்து ரக்அத் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் மூன்று ரக்அத்கள் வித்ர் தொழட்டும்; யார் நாடுகிறாரோ அவர் ஒரு ரக்அத் தொழட்டும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு நூல்கள்: நஸயீ 1692, அபூதாவூத் 1212, இப்னுமாஜா 1180)
   தொழுகையில் நிதானம்  
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத் தராத இருபது ரக்அத் என்ற வழிமுறையை நாமாக உருவாக்கியதால் தொழுகையில் கடைப் பிடிக்க வேண்டிய பல ஒழுங்குகளை நாம் அலட்சியம் செய்து வருகிறோம். குறிப்பிட்ட நேரத்துக்குள் இருபது ரக்அத்களைத் தொழ வேண்டும் என்று வரையறுத்துக் கொண்டு தொழுவதால் அனைத்துக் காரியங்களும் மிக விரைவாகச் செய்யப்படுகின்றன. ருகூவு, ஸஜ்தாக்களில் ஓத வேண்டியதை ஓதி நிதானமாகக் குனிந்து நிமிர வேண்டும். இந்த ஒழுங்குகளைப் பேணாமல் தொழுத ஒரு மனிதரைக் கண்ட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர் தொழவே இல்லை என்று கடுமையாக எச்சரித்தனர்.(: புகாரி 389, 757, 793, 6251, 6667)
இந்த எச்சரிக்கையும் இருபது ரக்அத் என்ற பெயரில் மீறப்படுகிறது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதியதைப் போன்றும், ருகூவு, சுஜுது செய்ததைப் போன்றும் ஒருவர் தொழுவதாக இருந்தால் இவர்கள் இருபது ரக்அத் தொழும் நேரத்தில் எட்டு ரக்அத்கள் தொழுவது கூடச் சாத்தியமாகாது. அல்லாஹ் எண்ணிக்கையை விட தரத்தைத் தான் பார்ப்பான் என்பதை அறிந்தால் வேகமாக தொழுகையை விட்டுவிட்டு இருபது ரக்அத்திலிருந்து விலகி அதை விட அதிக நேரம் செலவிட்டு நபிவழியில் தொழ முன் வந்திடுவோம்.
   முழுக் குர்ஆனையும் ஓதுதல்  
ரமளான் மாதத்தில் முழுக் குர்ஆனையும் தொழுகையில் ஓத வேண்டும் என்ற நம்பிக்கை மக்களிடம் பரவலாகக் காணப்படுகிறது. இதற்காகக் குர்ஆன் மனனம் செய்தவரைத் தொழ வைப்பதற்காக நியமிக்கின்றனர். தினமும் ஒரு ஜுஸ்வு என்ற கணக்கில் ஓதி அவர் தொழ வைத்து ரமளான் மாதத்தில் குர்ஆனை முடிப்பார் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த ரமளான் மாதத்திலும் முழுக் குர்ஆனையும் ஓதியிருக்கவே முடியாது.
குர்ஆன் ஓரே சமயத்தில் ஒட்டு மொத்தமாக அவர்களுக்கு அருளப்படவில்லை. சிறிது சிறிதாக 23 ஆண்டுகளில் குர்ஆன் அருளி முடிக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
அவர்கள் நபியாக நியமிக்கப்பட்ட முதல் வருடத்தில் குர்ஆனின் மிகச் சிறிய பகுதிகளே அவர்களுக்கு அருளப்பட்டன.
இப்படியே ஒவ்வொரு வருடமும் சிறிது சிறிதாகக் குர்ஆன் இறங்கிக் கொண்டே வந்தது.
அவர்களின் கடைசி ரமளானில் கூட முழுக் குர்ஆனும் அருளப்பட்டிருக்க முடியாது.
அவர்களின் கடைசி ரமளானுக்குப் பின்னர் ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ஸஃபர் ஆகிய ஐந்து மாதங்களும் ரபீயுல் அவ்வல் பன்னிரண்டு நாட்களும் வாழ்ந்தனர். இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதும் சேர்த்தே முழுக் குர்ஆன்.இந்தக் கால கட்டத்தில் அருளப்பட்டதை ரமளானில் ஓத வேண்டுமானால் மறு ரமளானில் தான் சாத்தியம். ரபீயுல் அவ்வலில் அவர்கள் மரணித்து விட்டதால் நிச்சயமாக முழுக் குர்ஆனையும் எந்த ரமளானிலும் அவர்கள் ஓதியிருக்க முடியாது.மேலும் ரமளானில் முழுக் குர்ஆனையும் ஓதுங்கள் என்று வாய்மொழி உத்தரவு எதுவும் அவர்கள் பிறப்பிக்கவில்லை.
இரவுத் தொழுகையில் ஓதுவது பற்றிக் குர்ஆன் கூறும் போது பின்வருமாறு தெளிவாக விளக்குகின்றது.
'(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (திருக்குர்ஆன் 73:20)
எனவே சிரமமில்லாமல் எந்த அளவுக்கு ஓத இயலுமோ, திருத்தமாக எந்த அளவுக்கு ஓத இயலுமோ அந்த அளவுக்கு ஓதித் தொழுவது தான் நபிவழியாகும்.
நான்கு ரக்அத் முடிவில் தஸ்பீஹ்?
 ஒவ்வொரு நான்கு ரக்அத் முடிந்த பின் நீண்ட திக்ருகளை ஓதுகின்றனர்.முதல் நான்கு ரக்அத் முடிவில் அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் புகழ்ந்து போற்றும் வகையிலும்,
இரண்டாவது நான்கு ரக்அத் முடிந்த பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும், மூன்றாவது நான்கு ரக்அத் முடிவில் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும், நான்காவது நான்கு ரக்அத்துக்குப் பின் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களைப் போற்றிப் புகழும் வகையிலும் அமைந்த வாசகங்களை ஓதுகின்றனர். இவர்களைப் பற்றியெல்லாம் ஓதுவதிலிருந்தே இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் உள்ள நடைமுறை இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம். தொழுகைக்கு இடையே இவர்களின் பெயர்களைக் கூறும் போது அவர்களுக்காகத் தொழுதது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.தொழுகை முடிந்த பின் எவரையும் புகழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் காட்டிய வழி முறை அல்ல என்பதால் இதை விட்டொழிக்க வேண்டும்.
கடமையான தொழுகை ஜமாஅத்தாகத் தொழுவது ஆண்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இரவுத் தொழுகை இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளதா என்றால் இல்லை.
   ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால்... 
சிலர் விரும்பி ஜமாஅத்தாகத் தொழ விரும்பினால் நபிவழியில் அதற்கு அனுமதி உள்ளது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
மைமூனா ரளியல்லாஹு அன்ஹா வீட்டில் தங்கிய இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இஷா தொழுது விட்டு வீட்டுக்கு வந்தார்கள். நான்கு ரக்அத்கள் தொழுது விட்டுத் தூங்கினார்கள். பின்னர் எழுந்தார்கள். சிறுவன் தூங்கி விட்டானா?' என்று கேட்டு விட்டுத் தொழலானார்கள். நான் எழுந்து அவர்களின் வலது புறம் நின்றேன். என்னைத் தமது இடது புறத்தில் ஆக்கினார்கள். அப்போது ஐந்து ரக்அத், பின்னர் இரண்டு ரக்அத் தொழுதார்கள். அவர்களின் குறட்டைச் சத்தத்தை நான் கேட்டும் அளவுக்குத் தூங்கினார்கள். பின்னர் தொழுகைக்குப் புறப்பட்டார்கள். (நூல்: புகாரி 117, 138, 183, 697, 698, 699, 726, 728, 859)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவுத் தொழுகை தொழுத போது இப்னு அப்பாஸ் தனியாகத் தொழாமல் நபிகள் நாயகத்துடன் ஜமாஅத்தாகச் சேர்ந்து தொழுதார். இது மார்க்கத்தில் இல்லாதது என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதைக் கண்டித்திருப்பார்கள். தொழுது முடித்த பிறகு, இப்படி நடக்கக் கூடாது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. எனவே இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழ அனுமதி உள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது அறையில் இரவுத் தொழுகை தொழுவார்கள். அந்த அறையின் சுவர் குட்டையாக இருந்ததால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மக்கள் பார்க்க முடியும். விடிந்ததும் இது பற்றிப் பேசிக் கொண்டனர். இரண்டாம் இரவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுத போது நபிகள் நாயகத்தைப் பின்பற்றி மக்களில் சிலரும் தொழலானார்கள். இப்படி இரண்டு அல்லது மூன்று இரவுகள் நடந்தன. இதன் பின்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (அறைக்கு வராமல்) அமர்ந்து விட்டனர். சுபுஹ் நேரம் வந்ததும் இது பற்றி நபிகள் நாயகத்திடம் மக்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'இரவுத் தொழுகை உங்கள் மீது கடமையாக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சினேன்' என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 729)


இந்தக் கருத்தில் இன்னும் பல அறிவிப்புக்கள் உள்ளன.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நாட்கள் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாக நடத்தினார்கள் என்பதும், பின்னர் அதை விட்டு விட்டார்கள் என்பதும் இதிலிருந்து தெரிகிறது.இந்த ஹதீஸை நாம் சரியான முறையில் புரிந்து கொள்ள வேண்டும்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே ஜமாஅத்தாகத் தொழுதுள்ளதால் மூன்று நாள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுவதே நபிவழி என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள்.மூன்று நாட்கள் ஜமாஅத்தாகத் தொழுத நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்னர் அதை விட்டு விட்டதால் அதையே நாம் சட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; அதாவது இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவது கூடாது. தனித் தனியாகத் தான் தொழ வேண்டும் என்று மற்றும் சிலர் புரிந்து கொள்கிறார்கள்.இந்த இரண்டு கருத்துக்களுமே தவறாகும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு செயலைச் செய்தால் அல்லது செய்ததை விட்டு விட்டால் நாமும் அவ்வாறே நடக்க வேண்டும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.ஆனால் செயலைச் செய்வதற்கோ, விடுவதற்கோ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணம் ஏதாவது கூறியிருந்தால் அதைப் பொதுவானதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. அந்தக் காரணம் இருக்கும் வரை அதைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்தக் காரணம் விலகி விட்டால் கடைப்பிடிக்கத் தேவையில்லை என்று புரிந்து கொள்ள வேண்டும்.இன்னொரு ஹதீஸை உதாரணமாகக் கொண்டு இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.இரவில் தூங்கச் செல்லும் போது விளக்கை அணைத்து விடுங்கள். இல்லாவிட்டால் எலிகள் விளக்கை இழுத்துச் சென்று வீட்டைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3316)
விளக்கை அணைத்து விடுங்கள் என்று மட்டும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி, அதற்கான காரணம் எதையும் கூறாமல் இருந்தால் எந்த விளக்கையும் நாம் இரவில் அணைக்க வேண்டும் என்றே புரிந்து கொள்ள வேண்டும். மின் விளக்குகளைக் கூட தூங்கும் போது அணைத்தாக வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வருவோம்.ஆனால் எலிகள் இழுத்துச் சென்று வீடுகளைக் கொளுத்தி விடும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதற்கான காரணத்தையும் கூறுகிறார்கள். அதாவது எலிகள் இழுத்துச் செல்வதால் வீடுகள் தீப்பற்றி விடும் என்பதே இத்தடைக்குக் காரணம்.
எண்ணெய் ஊற்றி எரிக்கும் விளக்குகளால் தான் இது போன்ற நிலைமை ஏற்படும். மின் விளக்குகளால் இது போன்ற நிலை ஏற்படாது. எனவே நைட் லாம்ப் போன்ற வெளிச்சத்தில் உறங்குவது இந்த நபிமொழிக்கு எதிரானதாக ஆகாது.இது போல் தான் நபிகள் நாயகம் அவர்கள் மூன்று நாட்கள் மட்டும் ஜமாஅத்தாகத் தொழுது விட்டுப் பின்னர் ஜமாஅத்தை விட்டதற்கு ஒரு காரணத்தைக் கூறுகிறார்கள்.
இரவுத் தொழுகையில் மக்கள் காட்டும் பேரார்வம் காரணமாக இறைவன் இத்தொழுகையை முஸ்லிம்கள் மீது கடமையாக்கி விடுவானோ என்ற அச்சத்தின் காரணமாகவே தொழுகை நடத்த வரவில்லை என்பதே அந்தக் காரணம்.எந்த ஒரு காரியமும் கடமையாவது என்றால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழியாகத் தான் இறைவன் கடமையாக்குவான். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின்னர் எதுவும் கடமையாக முடியாது.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்துக்குப் பின் இரவுத் தொழுகையில் மக்கள் எவ்வளவு தான் ஆர்வம் காட்டினாலும் அத்தொழுகை கடமையாகவே போவதில்லை. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதற்காக அஞ்சி ஜமாஅத் தொழுகை நடத்த வரவில்லையோ அந்த அச்சம் அவர்களின் மரணத்திற்குப் பின் இல்லாததால் இரவுத் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடையேதும் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
   வீடுகளில் தொழுவதே சிறந்தது  
பள்ளிவாசல்களில் ஜமாஅத்தாகத் தொழ அனுமதி இருந்தாலும் வீடுகளில் தொழுவதே சிறந்தது என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுரை கூறியுள்ளார்கள்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமளான் மாதத்தில் பாய்களால் ஒரு அறையைத் தயார் செய்தார்கள். அதில் சில இரவுகள் தொழுதார்கள். அவர்களின் தோழர்களில் சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். இதை அறிந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலேயே அமர்ந்து கொண்டார்கள். பின்னர் மக்களிடம் வந்து, 'உங்கள் செய்கையை நான் அறிந்திருக்கிறேன். மக்களே! உங்கள் வீடுகளிலேயே தொழுங்கள். ஏனெனில் கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை ஒருவர் தனது வீட்டில் தொழுவதே சிறந்தது' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 731)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக