வெள்ளி, ஜூலை 03, 2015

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்
ü  வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்
''கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிஇருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1443, 1444, 5797)
ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை
உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும். மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் ''அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் ''அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1402)
ü  நிதி சேகரிப்பு! நெருப்பில் சஞ்சரிப்பு!
அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும். (அல்குர்ஆன் 70:11-18)
குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும். (அல்குர்ஆன் 104:1-9)
ü  செலவிடாதவர்கள் நஷ்டவாளிகள்
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் கஅபாவின் நிழலில் இருந்தவாறு, ''கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள்'' என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், ''என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகின்றதா? என் நிலை என்னாவது?'' என்று சொல்இக் கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள், ''என்னால் பேசமாஇருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான், ''என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு கைகளால் சைகை செய்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6638)
ü  சேர்த்து வைப்போருக்குப் போடப்படும் சூடு
நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். ''அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ''இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 9:34,35)
ü  இன்றைய பணமழை நாளைய பாம்பு மாலை
அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக் கொண்டு தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக் கொண்டே, ''நான் தான் உனது செல்வம், நான் தான் உனது புதையல்'' என்று கூறும் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
பின்னர், அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், 'அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் என்ற (அல்குர்ஆன் 3:180) வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1403)
ü  ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும்
அந்தத் தோட்டத்துக்குரியோரைச் சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். ''காலையில் அதை அறுவடை செய்வோம்'' என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர். இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை. எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிட மிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது. அது காரிருள் போல் ஆனது.
''நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்'' என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள். தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள். அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்ட போது, ''நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம்'' என்றனர். இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம்.
அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர், ''நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும்'' என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று கேட்டார். ''எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்'' என்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள். ''எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறிவிட்டோமே!'' என்றனர். ''இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்'' (என்றும் கூறினர்) இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா? (அல்குர்ஆன் 68:17-33)
ü  பூகம்பத்தில் புதைந்த பொருளாதாரம்
காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வஇமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். ''மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக!
அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).
''என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். இவனை விட அதிக வஇமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.
தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். ''காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். ''உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூஇ தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.
அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.
தர்மம் செய்வதில் சிறந்த வகைகள்!
நாம் செய்ய‌வேண்டிய தர்மங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? இஸ்லாம் எந்த வகையில் தர்மம் செய்ய‌வேண்டும் என்று நமக்கு சொல்கிறது?
குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்வோம்:
ü  இரகசியமாக தர்மம் செய்தல்:
வலது கரம் செய்ததை இடது கரம் அறியாத விதத்தில் இரகசியமாக செய்வது சிறப்பிற்குரியதாகும் என்று இஸ்லாம் கூறுகிறது. தர்மம் செய்யும் போது அல்லாஹ்வின் திருப்தி மட்டுமே நோக்கமாக இருக்கவேண்டும். எனவேதான் தர்மம் செய்வதை வலியுறுத்தியுள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரகசியமாக தர்மம் செய்பவரை ‘வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு தர்மம் செய்பவர்’ என வர்ணித்துள்ளார்கள்.
"வேறு எந்த நிழழும் இல்லாத அந்த நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தன் நிழலிருந்து நிழல் தருகிறான். வலது கை தருவதை இடது கை அறியாது மறைத்து தருபவர் அந்த ஏழு பேரில் ஒருவர்" என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)
அல்லாஹ்தஆலா கூறுகிறான்,
யார் தங்கள் பொருள்களை (தான தர்மங்களில் )இரவிலும், பகலிலும் இரகசியமாகவும் பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 2:274)
மேலும் மற்றொரு இடத்திலே அல்லாஹ் கூறுகிறான்,
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும் அனாதைக்கும் சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும் நெருக்கடியும் நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்" (எனக் கூறுவார்கள்.) எனவே அந்த நாளின் தீங்கி ருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றி னான். அவர்களுக்கு முக மலர்ச்சியையும் மகிழ்ச்சியையும் வழங்கினான். அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும் பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான். (அல்குர்ஆன் 76:8-12)
இதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் என யாருக்கும் தெரியாத வண்ணம் (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து ஒரு திருடனிடம்(தெரியாமல்),கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப்பட்டுள்ளது எனப் பேசிக் கொண்டனர். (இதைக் கேட்ட) அவர், அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும். (நாளை) நான் தர்மம் செய்வேன் என்று கூறினார்.
மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) வெளிவந்து அதை ஒரு விபச்சாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், இன்றிரவு விபச்சாரிக்குத் தர்மம் கொடுக்கப்பட்டுள்ளது எனப் பேசினர். (இதைக் கேட்ட) அவர் அல்லாஹ்வே! விபச்சாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே சகலப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்! எனக் கூறினார்.
(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளிவந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், பணக்காரருக்கு ஸதகா கொடுக்கப்பட்டள்ளது எனப் பேசினர். உடனே அவர், அல்லாஹ்வே! திருடனிமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும் எனக் கூறினார்.
பிறகு அம்மனிதர் அன்றிரவு ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் ஒருவர் வந்து, நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைவிட்டுத் திருந்தக் காரணமாகிவிட்டது. விபச்சாரிக்கு நீ கொடுத்த தர்மம், அவள் விபச்சாரத்திலிருந்து திருந்தி வாழ்வதற்கு வழியமைத்துவிட்டது. செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் காரணமாகிவிட்டது" எனக் கூறினார். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
இந்த ஹதீஸின் மூலம் இரகசியமாக தர்மம் செய்தவர், தர்மத்தைப் பெற‌ தகுதியில்லாதவர்களுக்கு தர்மம் செய்திருந்தாலும், யாருக்கும் தெரியாமல் தர்மம் செய்யவேண்டும் என்ற அவருடைய தூய எண்ணத்திற்காக அல்லாஹ்தஆலா அந்த தர்மத்தை ஏற்றுக்கொள்கிறான் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த அழகிய சம்பவத்தின் மூலம் நமக்கு இங்கே உணர்த்துகிறார்கள்.
ஆக, நாம் செய்யும் தர்மத்தின் முதல் நிலை, அது நம்மால் முடிந்தவரை இரகசியமானதாக இருக்கவேண்டும்.
ü  ஆர்வத்தோடும் தாமதிக்காமலும் தர்மம் செய்தல்:
ஏழை மக்கள் கேட்டுவிட்டார்களே என்பத‌ற்காக அலட்சியமாக ஆர்வமின்றி செயல்படாமல், அல்லாஹ்வின் அருள் மீது ஆசைக்கொண்டவர்களாக தர்மம் செய்யவேண்டும்.
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் மறுத்ததும் சோம்பலாகவே தொழுது வந்ததும் விருப்பமில்லாமல்(நல்வழியில்)செலவிட்டதுமே அவர்கள் செலவிட்டதை அவர்களிடமிருந்து ஏற்கப்படுவதற்கு தடையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 9:54)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மையுள்ள தர்மம் எது? எனக் கேட்டார். 'நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும், செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே(தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும்வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உமது பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1419)
'பொருள் தேவை உடையவர்' என்றும் 'வறுமையைப் பயப்படுபவர்'என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள். அதாவது, வறுமைக்கோட்டிற்கும் சற்று மேலுள்ள‌ நடுத்தர சம்பாத்தியம் உள்ளவர்கள் தர்மம் செய்யும்போது அதுவே சிறந்த தர்மம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி இருக்கிறார்கள் என்றால், செல்வந்தர்கள் இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதுவும் தனது செல்வங்களிலிருந்து தர்மம் செய்யாமல் சேமித்து வைத்துவிட்டு, இதற்கு மேல் வாழமுடியாது என்று தெரியும் வரை, மரண நெருக்கடியில் உள்ள அந்த சக்ராத்துடைய நேரம்வரை நாம் தர்மம் செய்யாமல் தாமதிக்கவேண்டாம் என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு போதித்துளார்கள்.
ü  தாராளமாக தர்மம் செய்தல்:
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபித்தனம் தெய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம். அவ்வாறன்று அது அவர்களுக்கு தீங்குதான் அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும். (அல்குர்ஆன் 3:180)
சிலபேர் பிறருக்கு உதவுவதில் கணக்கிட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்;
''இவ்வளவுதான் என்று வரையறுத்து தர்மம் செய்யாதே. அல்லாஹ் உம்மீது பொழியும் அருளை வரையறுத்து விடுவான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தர்மம் செய்ததின் அளவை கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''நீ தர்மம் செய். அதை வரையறுத்து விடாதே! அவ்வாறு கணக்கிட்டால் அல்லாஹ் உம்மீது வழங்கும் அருட்கொடையை கணக்கிட்டு விடுவான் என்றார்கள்.'' (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூதாவூத்)
மேலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கஞ்சத்தனம் செய்பவர்களை ஒரு உதாரணத்துடன் கூறியிருக்கிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, (தர்மம் செய்யாது)கருமித்தனம் செய்பவர் மற்றும் தர்மம் செய்பவருக்கு உதாரணம், அவ்விருவரின் மீதும் இரும்பினால் ஆன கேடயம் (முழக்க அவ்விருவரையும் மூடிக் கொண்டவாறு)உள்ளது. (அந்நிலையிலிருக்கும்)தர்மம் செய்து கொண்டிருந்தவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரானால் அது அவருக்கு விஸ்தீரணமாகிக் கொடுக்கும். முடிவாக அவரிலிருந்து ஏற்பட்ட தவறுகளின் அடிச்சுவடுகளை அது அழித்து விடும். கருமித்தனத்தை உடையவர் ஒரு தர்மத்தை செய்ய நாடுவாரனால் (அவர் மீது இருக்கும்) கவசமானது அவரை நெருக்கும். அவருடைய இரு கைகளும் அவரது கழுத்தின்பால் இணைந்து கொள்ளும். (அதிலுள்ள) ஒவ்வொரு வளையமும் அவரை இருக்கிக் கொள்ளும். அதை அவர் விசாலமாக்கிக் கொள்ள அவர் பெரிதும் முயல்வார். ஆனால் அதற்கு சக்தி பெறமாட்டார். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
அதாவது செல்வம் கொடுக்கப்பட்ட பெரும்பாலான மக்களிடம் கஞ்சத்தனம் தானாகவே வந்துவிடுகிறது. எவ்வளவு செல்வங்களை அல்லாஹ்தஆலா அவருக்கு கொடுத்தாலும் பிறருக்கு கொடுத்து உதவும் தன்மை அவரிடம் காணாமல் போய்விடுகிறது. நமக்கும் அல்லாஹ்தஆலா செல்வங்களைக் கொடுத்தால் அதை தேவையுடைய பிறருக்கு தாராளமாக அள்ளிக்கொடுக்கும் எண்ணத்தையும் சேர்த்தே தரும்படி நாம் இறைவனிடம் துஆ செய்யவேண்டும். அதைதான் அல்லாஹ்வும் விரும்புகிறான்.
ü  சிறந்தவற்றையும் ஹலாலானவற்றையும் தர்மம் செய்தல்:
தர்மம் பெறுபவர்கள் தாமாக விரும்பி கேட்கும் சூழ்நிலையிலே தவிர, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பொருட்கள் அல்லது சாப்பிட முடியாத அளவுள்ளவற்றை தர்மம் செய்வதைக் கண்டிப்பாக‌ தவிர்க்க வேண்டும். ஆனால், நாம் செய்யும் தர்மப்பொருட்களில் பெரும்பாலானவை நாம் யாசகம் கேட்கும் நிலையில் அல்லது அதை பெறக்கூடியவனின் நிலையில் இருந்து எதை வாங்கமாட்டோமோ அதுவாகத்தான் இருக்கும். இதுமாதிரியான பொருளை தர்மம் செய்வது கூடாது. நாம் செய்யும் தர்மப் பொருட்கள் ஓரளவாவது நல்ல பொருட்களாக இருக்கவேண்டும்.
நீங்கள் விரும்புவதை (நல்வழியில்)செலவிடாதவரை நன்மையை அடைந்துக் கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை(நல்வழியில்)செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன். (அல்குர்ஆன் 3:92)
இந்த வசனம் இறங்கியவுடன் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனக்கு மிகவும் விருப்பமான பைருஹா என்ற தோட்டத்தை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்) (நூல்: புகாரி 4554)
மேலும் மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும்போதும் மக்களுக்கு தர்மங்கள் செய்யும்போதும் ஹலாலான சம்பாத்தியங்களிலிருந்து செலவிடவேண்டும். உழைப்பு ஆகுமானதாகவும் தூய்மையானதாகவும் இருத்தல் அவசியமானதாகும். சிறந்த, உயர்தரமான பொருட்களையே மக்களுக்கு வழங்கவேண்டும். தர்மம் செய்கிறோம், இனாமாக வழங்குகிறோம் என்பதற்காக பழுதடைந்த, மட்டகரமான, மோசமான பொருட்களை வழங்கிடக் கூடாது என இஸ்லாம் தடைவிதிக்கிறது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ளமாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:267)
"அல்லாஹ் நல்லதை தவிர வேறெதனையும் ஏற்றுக் கொள்வதில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்." (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
நமக்கு யாராவது எதையாவது கொடுத்தால் அது நல்லதாக தரமானதாக பயன்படுத்துவதற்கு உகந்ததாக இருப்பதையே விரும்புவோம். மட்டகரமானதை தந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஏற்றுக்கொள்ள மாட்டோம். இதுபோலவே நாம் மற்றவர்களுக்கு கொடுக்கும்போது கூட நல்லதையே கொடுக்க வேண்டும். நாம் விரும்புவதையே மற்றவர்களுக்கும் விரும்ப வேண்டும். அதனையே அல்லாஹ்வும் அங்கீகரிக்கிறான்.
நீங்கள் விரும்புவதை செலவிடாதவரை நன்மையை அடைந்து கொள்ளவே மாட்டீர்கள். நீங்கள் எப்பொருளை செலவிட்டாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை அறிந்தவன் (3:92)
மேலே கூறிய 2:267 வசனம் அருளப்பட்டது தொடர்பாக பராஉ பின் ஆஸிப் ரளியல்லாஹு அன்ஹு பின்வருமாறு கூறுகிறார்கள்,
பேரீத்த‌ மரத்திலிருந்து பேரீத்த‌ம் கனிகள் பறிக்கும் நாட்களில் அன்சாரித் தோழர்கள் தம் தோட்டங்களிலிருந்து செங்காய் குலைகளைப் பறித்து வந்து மஸ்ஜிதுந் நபவி பள்ளிவாசலின் இரண்டு தூண்களுக்கிடையே கயிற்றில் கட்டித் தொங்கவிடுவார்கள். ஏழை முஹாஜிரீன்கள் அதை எடுத்து உண்பார்கள்.
ஒரு தடவை ஓர் அன்சாரித் தோழர் அந்த செங்காய் குலைகளுக்கிடையே மட்டமான காய்ந்த பேரீத்த‌ம் குலையைத் தொங்கவிட முற்பட்டார். அது அனுமதிக்கப்பட்டதுதான் என அவர் எண்ணிக் கொண்டார்.(அது கூடாது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு)அவர் தொடர்பாகவே இந்த வசனத்தை அல்லாஹ் அருளினான். (நூல்: இப்னு மாஜா)
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் நன்மைதான் எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் 2:215)
ஆக, மக்களுக்கு தர்மம் செய்யும்போது நல்லவைகளை வழங்கவேண்டும், அல்லாஹ்வுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று இரகசியமாக வழங்கவேண்டும், சிறந்த பொருட்களையே வழங்கவேண்டும் என்ற இஸ்லாத்தின் போதனைகளை எப்போதும் மனதில் கொண்டு, அதன்படி செயல்பட எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் துணை புரிவானாக! ஆமீன்!
ஜக்காத், ஸதகா – என்ன வேறுபாடு?
ஜக்காத் என்பது ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து இஸ்லாமிய ஷரீஅத் வரையறுத்துள்ளபடி குறிப்பிட்ட சிலருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஒரு இறை வணக்கமாகும்.
ஸதகா
 என்பது இஸ்லாமிய ஷரீஅத்தின் படி கடமையாக இல்லாவிட்டாலும் ஒருவர் தம்முடைய பொருள்களிலிருந்து பிறருக்கு கொடுப்பதன் மூலம் செய்யும் ஓர் இறை வணக்கமாகும். சில சமயங்களில் கடமையான ஜக்காத்தும் ஸதகா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
ஸகாத்தின்பொருள்
இதன் பொருள் தூய்மையுறச் செய்தல் என்பதாகும். ஒருவன் தன் உடைமைகளிலிருந்து நாற்பதில் ஒருபகுதியை எடுத்து ஏழைகளுக்கு அறம் செய்வதன் மூலம் அவனிடம் எஞ்சியுள்ளவை தூய்மை பெறுவதாலும், அவனுடைய உள்ளமும் உலோபித்தனத்திலிருந்து தூய்மை பெறுவதாலும் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது
ஸகாத்தின் நோக்கம் என்ன ?
செல்வம் செல்வந்தர்களை மட்டுமே சுற்றி வரக்கூடாது. அது  சமுதாயத்தின் எல்லா நிலை மக்களையும்சென்றடைந்து எல்லோரும் வளமாக வாழ வேண்டும் என்ற உயரிய நெறிபை; போதிப்பதாகும். இதுவேபொருளாதாரத்தின் ஏற்றத்தாழ்வை போக்குவதற்கு சிறந்த வழி என்று இஸ்லாம் உலகிற்கு பிரகடனம்செய்கிறது. இதைத்தான் அருள்மறை அல்-குர்ஆன் பின் வருமாறு இயம்புகிறது
مَّا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنكُمْ ۚ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
அவ்வூராரிடமிருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்கு (மீட்டுக்) கொடுத்தவை, அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்குமாகும்; மேலும், உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது); 59:7.
ஸகாத்தின் விதிகள் என்னென்ன?
1) ஸகாத் பொருள் தனக்கு உரியதாக இருக்க வேண்டும்.
2) அளவு (நிஸாப்) முழுமை பெறவேண்டும்.
3) ஓராண்டு காலம் நிறைவு பெறவேண்டும்.
4) (கடன்கள் இல்லாமலிருக்க வேண்டும்.
5) சொந்த தேவைகள் போக மீதயிருக்க வேண்டும்.)
ஸகாத் கொடுப்பதற்கு கடமைப்பட்டோர் யார் ?
ஸகாத் வரி குறிப்பிட்ட அளவு (நிஸாப்), பொருள் படைத்த ஒவ்வொரு முஸ்லிமின்மீதும் இஸ்லாம்விதியாக்கியுள்ளது. தொழுகை நோன்பு, ஹஜ்ஜு போன்ற வணக்கங்களில் சிறுவர்களுக்கும், புத்தி சுவாதீனம் இல்லாதோருக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுவது போல் ஸகாத்தில் விதிவிலக்கு வழங்கப்படவில்லை.அவர்களிடம்குறிப்பிட்ட தொகை இருந்தால் அவர்களின் பொறுப்பாளர்கள்,அவர்களிடமிருந்து ஸகாத்தைப் பெற்று வழங்கியாகவேண்டும். ஏனெனில் இது ஏழைகளுக்கு போய் சேர வேண்டிய உரிமையாகும்.
ஸகாத் விதியானோர் ஐந்து பேர்
1.   முஸ்லிமாக இருத்தல்
2. சுதந்திரமானராக இருத்தல்
3. நிஸாபை அடைதல் (85 கிராம் தங்க மதிப்புடைய பொருளைப் பெறுதல்)
       
4. பொருளுக்கு உரியவராக ( Owner) இருத்தல்.
5. விளை பொருளைத்தவிர அனைத்தும் ஓராண்டு பூர்த்தியாகுதல் இத்தகுதிகளைப்பெற்ற அனைவரும் ஸகாத் கொடுக்க வேண்டும்.
   ஜகாத்  மாற்றுமத  சகோதர்களுக்கு கொடுக்கலாமா, புதியதாக  இஸ்லாம் மாறியவர் அவர் உறவினர்ர்களுக்கு கொடுக்கலமா?  ஜகாத் பெறத் தகுதியுள்ளவர்கள் யார் யார்?
உலகில் தேவையுள்ளவர்கள் என்று ஏராளமானோர் இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஒரே தரத்திலிருப்பவர்களல்ல. இவர்களில் நிரந்தர தேவைக்குட்பட்டவர்கள், தற்காலிக தேவையுள்ளவர்கள் என்று வேறுபடுவார்கள். பொருள் வசதியற்றவர்கள் மட்டும் தான் தேவையுடையவர்கள் அந்த வசதியைப் பெற்றவர்களுக்கு எந்த தேவையும் இருக்காது என்றெல்லாம் இஸ்லாம் முடிவு செய்யவில்லை. என்னதான் பொருளாதார வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் சூழ்நிலையால் சில நேரம் அவர்கள் கூட தேவையுள்ளவர்களாகி விடலாம் என்பதால் ஜகாத் பெற தகுதியானவர்களை இஸ்லாம் மிக விரிவாக பட்டியலிட்டுள்ளது.
யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் ?
  8 பிரிவினர்)
إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِّنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ
1)யாசிப்போர் (ஃபக்கீர்)
2) ஏழைகள் (மிஸ்கீன்)
3) ஸகாத் வசூலிப்போர்.
4) இஸ்லாத்தை தழுவ விரும்புவோர்.
5) அடிமைகளை விடுதலை செய்வதற்காக!
6) கடன்பட்டோர்.
7) இறைவழியில் அறப்போர் செய்வோர்.
8) பயணிகள் (வழிப்போக்கர்)
(இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்( அல்-குர்ஆன் 9:60 )
யார் யாருக்கு கொடுக்ககூடாது ?
1) வசதியுள்ளோர்.
2) உடல் வலிமை பெற்றோர்.
3) தனது பெற்றோர்.பிள்ளைகள் ( அல்-அஸ்லு வல்ஃபர்உ)
4) நபியின் குடும்பத்தினர்.
5) முஸ்லிமல்லாதோர்.
6) தீயவர்கள்.
எப்போது வழங்க வேண்டும் ?
இது ரமளானில் தான் வழங்கவேண்டுமென பலரும் எண்ணிக்கொண்டு அம்மாதத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனர். இஸ்லாம் அவ்வாறு குறிப்பிடவே இல்லை.
பின் எப்போது கொடுக்க வேண்டும் ?
ஒருவருக்கு உணவு,உடை, வீடு, வாகனம், தொழிலுக்குத் தேவையான பொருட்கள் (கருவிகள்) போன்றஅவசியத் தேவைகள் போக ஒருகுறிப்பிட்ட அளவு அல்லது அதற்கு மேல் செல்வமிருந்தால் கணக்கிட்டு நூற்றுக்கு இரண்டரை சதவிகிதம் கொடுக்கவேண்டும்.
அதுவும் குறிப்பிட்ட அளவை (நிஸாபை) பெற்றவுடன் அல்ல.               அந்த தொகை ஒர் ஆண்டு முழுவதும் அவனிடம் இருந்து, ஆண்டு இறுதியில் கொடுத்தால் போதுமானது.
எந்த அளவுக்கு ஸகாத் வழங்கவேண்டும் ?
20 தீனாருக்கு குறைவானவற்றில் ஸகாத் கடமையில்லை.             20தீனார்கள் ஓராண்டு முழுவதும் உம்மிடமிருந்;தால் அதற்கு நீர் ஸகாத் கொடுக்க வேண்டும்’ என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : அஹ்மது, அபூ தாவூது, பைஹகீ)     மேற் கண்ட நபி மொழியில் 20 தீனார் அளவு அல்லது அதற்கு மேற்பட்ட அளவு வைத்திருப்போர்தான் ஸகாத் கொடுக்க கடமைப்பட்டுள்ளனர். என்பது தெரிய வருகிறது.
நபிகள் நாயகம் காலத்தில் செல்வம் என்பது தங்க வெள்ளி நாணயங்களாகவோ, கால்நடைகளாகவோ சொத்தாகவோ இருந்தது. இப்போதுள்ளது போல் விலையுயர்ந்த வைரங்கள், பிளாட்டினங்கள் இருந்ததில்லை. கரன்ஸி நோட்டுகள் இருந்ததில்லை. தங்கத்தின் மதிப்பை வைத்தே நோட்டுகள் அச்சடிக்கப் படுவதால் தங்கத்தின் விலையையும் வைத்தே இன்று அனைத்தையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஸகாத் கடமையான பொருட்கள்:
ஸகாத் ஐந்து வகை பொருட்கள் மீது கடமையாகிறது:
1) தங்கம், வெள்ளி,
2) வியாபாரப் பொருட்கள்
3) கால் நடைகள்
                                                           
4) விவசாய விளைச்சல்கள்
5) புதையல்கள்
ஸகாத்தின் சதவிகித அளவுகள்

1. 2.5 (இரண்டரை)சதவிகிதம்
2. 5 சதவிகிதம்
3. 10 சதவிகிதம்
4. 20 சதவிகிதம் என பொருளின் இனம் மாறுபடும் போது சதவிகிதமும் மாறு படுகிறது.இனி இவற்றை விரிவாகா
imamhabeeb.blogspot.com

ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்!


இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை.
முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது.
அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.
இறைவனது இந்த சட்டதிட்டங்களை அனைத்துத் தரப்பு மனிதர்களும் ஏற்று நடப்பார்களேயானால், இவ்வுலக வாழ்க்கையே சுவர்க்கலோக வாழ்க்கையாக ஆகிவிடும்.
இறைவனது இறுதித் தூதரையும், இறுதி வேதத்தையும் ஏற்று நடக்கும் முஸ்லிம்கள், தாங்கள் பெரும் சிரமப்பட்டு, கடல் கடந்து சென்று, மனைவி மக்களைப் பிரிந்து, நெற்றி வியர்வை சிந்தி ஈட்டும் அதிகப்படியான செல்வத்தில் ஏழைகளதும் பங்கு இருக்கிறது என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது அவர்களுக்குரிய பங்கை முறையாகக் கணக்கிட்டு அந்த ஏழை மக்களைக் கண்டறிந்து அவர்களிடம் சேர்த்து விடுவதே ஓர் உண்மை முஸ்லிமின் நீங்காக் கடமையாக இருக்கிறது.
நான் கஷ்டப்பட்டு, சிரமப்பட்டு நெற்றி வியர்வை சிந்தி சம்பாதித்த செல்வத்தில் ஏழைகளின் பங்கா? அவர்களுக்கு அதிலிருந்து கொடுப்பதா? என்ற இறுமாப்பு எண்ணம் ஓர் உண்மை முஸ்லிமுக்கு ஒருபோதும் கூடாது. அல்லது கஞ்சத்தனத்தால் தேடிய செல்வத்தை இரும்புப் பெட்டியில் பூட்டி வைத்துக் கொண்டு காவல் காப்பதும் ஓர் உண்மை முஸ்லிமுக்கு அழகல்ல.
அகில உலக மக்களுக்கும், அவர்களின் இறைவன் அவனது இறுதி நெறிநூலில் ஏழைகளின் பங்ாகன ஜகாத் பற்றி அல்குர்ஆன் 2:43,83,110,177,277, 4:77,162, 5:12,55, 7:156, 9:5,11,18,71, 18:81, 19:13,31,55, 21:73, 22:41,78, 23:4, 24:37,56, 27:3, 30:39, 31:4, 33:33, 41:7, 58:13, 73:20, 98:5 ஆக 32 இடங்களில் மடக்கி மடக்கிக் கூறியுள்ளாான். இந்த அத்தனை வசனங்களையும் குர்ஆனை திறந்து பாருங்கள். கண்டிப்பான கடமையான தொழுகையுடன் இணைத்தே ஜகாத் பற்றியும் கூறியுள்ளான்  இறைவன். முஸ்லிம் சமுதாயத்திழன் பெருத்த கைசேதம் முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையோர் கட்டாயக் கடமையான தொழுகையிலும் பொடுபோக்காக இருக்கின்றனர். ஏழைகளின் பங்கான ஜகாத்தை முறைப்படி கொடுப்பதிலும் கஞ்சத்தனம் காட்டுகின்றனர்.
முஸ்லிம் செல்வந்தர்கள் அனைவரும் தங்களின் செல்வத்திலுள்ள ஏழைகளின் பங்கான ஜகாத்தை முறைப்படி கணக்கிட்டுக் கொடுத்து விட்டால், முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு ஏழையைக் கூட பார்க்க முடியாது. ஏழைகளின் பங்கு எனும்போது இறைவன் ஏழைகளுக்குக் கொடுக்கச் சொல்லி நம்மிடம் அந்தப் பங்கை கொடுத்துள்ளான். அது இறைவனால் நம்மிடம் கொடுக்கப்பட்ட அமானிதம் என்பதை முஸ்லிம் செல்வந்தர்கள் உணர வேண்டும். உதாரணமாக நாம் மிகவும் மரியாதை காட்டும் ஒரு பெரும் செல்வந்தர் நம்மிடம் ஒரு பத்து ஆயிரம் ரூபாயைக் கொடுத்து நமக்கு மிகவும் அறிமுகமான ஒரு நபரைச் சொல்லி அவரிடம் கொண்டு கொடுத்து விடும்படிச் சொல்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது நமது கடமை என்ன? நாணயமாக அந்த பத்தாயிரத்தை உரிய நபரிடம் சேர்த்து விடுவதுதானே நமது நீங்காக் கடமை அவ்வாறு செய்யாமல் இப்போது ரூபாய் பத்து ஆயிரம் நமது கையில்தான் இருக்கிறது. எனவே அது நமக்கே சொந்தம் என்று தவறாக எண்ணி அந்தப் பணத்தை உரியவரிடம் கொடுக்காமல் வைத்துக் கொண்டால் அது அமானத மோசடியா இல்லையா? நீங்களே சொல்லுங்கள். நாம் மிகவும் மரியாதை வைத்திருக்கும் அந்த செல்வந்தருக்கு, அவர் கூறியபடி அவர் கூறிய நபருக்கு அந்த பத்து ஆயிரத்தை நாம் கொடுக்கவில்லை என்பது தெரிய வரும்போது நமது நிலை என்னவாக இருக்கும்? நம்மை அவர் மனிதராக மதிப்பாரா? ஒருபோதும் மதிக்கமாட்டார்.
இதுபோல்தான் இறைவன் நமக்குத் தந்த செல்வத்திலிருந்து ஏழைகளது பங்கை அவர்களுக்கு உரிமையானதை அவர்களிடம் ஒப்படைக்காமல் நாமே சேமித்து வைத்துக் கொண்டால் அது அமானித மோசடியாகும். இது பற்றி அல்லாஹ் அவனது இறுதி நெறிநூலில் கூறுவதைப் பாரீர்!
"எவர்கள் பொன்னையும். வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கிறார்களோ, (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக! அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுதூன் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது. ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் : 9 : 34.35)
இவ்வளவு கடுமையான எச்சரிகையைப் பார்த்த பின்னரும் ஒரு முஸ்லிம் கஞ்சனாக இருப்பானேயானால் அவன் மறுமையை உறுதியாக நம்பும் ஓர் உண்மை முஸ்லிமாக ஒருபோதும் இருக்கமாட்டான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறந்தவுடன் முஸ்லிம்களில் ஒரு கூட்டத்தினர் ஜகாத் கொடுக்க மறுத்தனர். அப்போது முதல் கலீஃபாவாகப் பொறுப்பு ஏற்றிருந்த அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் எவர்கள் தொழுகைக்கும் ஜகாத்திற்கும் வேறுபாடு காட்டுகிறார்களோ அவர்களோடு போர் புரிந்ரேத தீருவேன். (சென்ற வருடம்) நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்ததிலிருந்து ஒட்டகத்தைக் கட்டும்ட ஒரு சிறிய கயிறைக் கூட (இந்த வருடம்) தர மறுத்தால், அவர்களுடன் போர் புரிவேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்.
இந்த ஹதீஸிலிருந்து ஜகாத் வருடா வருடம் கொடுக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் சில தவ்ஹீத் மவ்லவிகள் "ஜகாத்' என்றால் கரித்துச் சுத்தப்படுத்துதல், ஒருமுறை சுத்தப்படுத்தினால் சுத்தமாகிவிடும். மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்த வேண்டியதில்லை. எனவே வருடா வருடம் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை என்று செல்வந்தர்களைத் திருப்திப்படுத்த புதிய சட்டம் சொல்கிறார்கள். இதற்காக அவர்களின் யூகத்தைச் சொல்கிறார்களே அல்லாமல் குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் தரவில்லை.
"ஒரு முறை குளித்தால் சுத்தமாகி விடுகிறோம். மீண்டும் மீண்டும் குளிக்க வேண்டியதில்லை" என்று ஒருவன் சொன்னால் அது எந்த அளவு அபத்தமான கருத்தோ அது போன்றதொரு அபத்தமான கருத்தோ அது போன்றதொரு அபத்தமான கருத்தே இது. அது சரி! ஒரு முறை ஜகாத் கொடுத்தால் அந்தப் பொருள் சுத்தமாகிவிடுகிறது; மீண்டும் கொடுக்க வேண்டியதில்லை என்றால் பாட்டனுக்குப் பின் மகன். மகனுக்குப் பின் பேரன் என்று தலைமுறை, தலைமுறையாக வாரிசு அடிப்படையில் சொத்து வந்து சேர்ந்தாலும் ஜகாத் கடமை இல்லைதானே. காரணம் பாட்டன் ஜகாத் கொடுத்து சுத்தப்படுத்தி விட்டார். மகனுக்கு, பேரனுக்கு அந்தக் கடமை இல்லைதானே. இதற்கும் புதுச் சட்டம் சொல்வார்களா? அப்போது சுத்தமாகி விட்டது என்ற சுய விளக்கம் காற்றில் பறந்து விடுமே? என்ன புது சுய விளக்கம் தரப்போகிறார்கள்?
ஜகாத் ஒரு முறை கொடுத்தால் போதும் என்றிருந்தால் செல்வம் கையில் கிடைத்தவுடன் ஜகாத் கடமையாகிவிடுமே. விவசாயம் அறுவடையானவுடன் ஜகாத் கடமையாவது போல், மேலும் விவசாயத்தில் பத்தில் ஒரு பங்கு என்றிருப்பது போல் இங்கும் பத்தில் ஒரு பங்கு அல்லவா ஜகாத் கொடுக்கவேண்டும். ஆனால் மிகவும் குறைவான நாற்பதில் ஒன்று என்றும் அதுவும் ஒரு வருடம் பூர்த்தியான பின்னர் கொடுக்க வேண்டும் என்று ஏன் இருக்கிறது? சிந்திக்க வேண்டாமா?
மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான உணவுப் பொருளை விட தனி மனிதன் சொத்துச் சேர்க்க இஸ்லாம் அதிக சலுகை கொடுத்திருக்க முடியுமா? பொது மக்களின் உணவுத் தேவையை விட தனிமனிதன் சொத்து சேர்ப்பதற்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்திருக்க முடியுமா? இந்த நேர்மையான சிந்தனைகளை நாம் புரோகித மவ்லவிகளிடமிருந்து எதிர் பார்க்க முடியாது.
செல்வந்தர்களே! நடுநிலையோடு விளங்கிக் கொள்ளுங்கள். சொத்துக்களுக்காக நீங்கள் ஜகாத் கொடுக்கவில்லை. அந்த சொத்துக்கள் உங்கள் கையை விட்டுப் போகாமல் உங்களிடமே ஒரு வருடம் இருந்ததற்காகத்தான் ஏழை வரி கொடுக்கிறீர்கள். 'செல்வம்' என்பது நிலையாக எங்குமே தங்கி இருப்பதில்லை. கைமாறி, கைமாறி சென்று கொண்டே இருப்பதால்தான் அதனை செல்வம் என்கிறோம். அப்படிப்பட்ட செல்வம் அப்படி கைமாறிச் செல்லாமல் ஒரு வருடம் முழுமையாக உங்களிடம் இருந்ததால்தான் அதில் நாற்பதில் ஒன்று ஏழை வரியாகக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.
இப்படி அந்தச் செல்வம் கைமாறிச் செல்லாமல் ஒருவரிடம் இருக்கும் காலம் எல்லாம் அவர் வருடா வருடம் அதற்கு நாற்பதில் ஒன்று ஜகாத் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார். இது நமது யூகம் அல்ல. வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்றே நேரடியாகச் சொல்லும் ஹதீஸும் இருக்கிறது. அதையும் பாரீர்:
மூன்று காரியங்களைச் செய்பவர்கள் இறை விசுவாசத்தின் ருசியைச் சுவைத்துக் கொள்வார்கள்.
1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்ற அடிப்படையில் அவனை மட்டுமே வணங்குபவர்.
2. தமது செல்வத்தின் ஜகாத்தை பரிசுத்த எண்ணத்துடனும், உளப்பூர்வமாகவும் வருடா வருடம் கொடுப்பவர்.
3. பல் உடைந்த, மட்டமான, நோய்வாய்ப்பட்டவைகளை கொடுக்காமல் இருப்பவர். அல்லாஹ் உங்கள் பொருளிலிருந்து மிக உயர்ந்தவைகளைக் கொடுக்கச் சொல்லவும் இல்லை. மிகக் கீழானவைகளையும் கொடுக்கச் சொல்லவில்லை. (நடுத்தரமானதையே கொடுக்கச் சொல்கிறான்) (நூல்: அபூதாவூத் 1349)
மேலும் 1342 ஹதீஸையும் பார்வையிடவும்.
ஜகாத் வருடா வருடம் கொடுக்கக் கட்டளையிட்டு நேரடியான ஹதீஸ் இருக்கும்போது, மனிதர்களின் சொந்தக் கற்பனைகளை ஏற்றுச் செயல்படுகிறவர்கள் மோசம் போகிறவர்களே. அது மட்டுமல்ல வருடா வருடம்ட ஜகாத் கொடுப்பதற்கு புகாரி, முஸ்லிமில் காணப்படும் முதலாவது கலீஃபா அபூபக்கர்(ரழி) அவர்களது ஹதீஸும், அபூதாவூதில் காணப்படும் இந்த ஹதீஸும் வலுவான ஆதாரங்களாகும்.
வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கருத்தில் (மத்தன்) அமைந்த அறிவிப்பாளர் வரிசையில் கோளாறுள்ள இதர ஹதீஸ்களும் 'ஹஸன்' தரத்தில் அமைகின்றன. எனவே இந்த தவ்ஹீத் மவ்லவிகளின் சுயவிளக்கத்தைக் கேட்டு தங்களது சொத்துக்களுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்காதிருப்பவர்கள் 9:34,35 குர்ஆன் வசனங்களைப் பார்த்து உணர்வு பெறுவார்களாக. அல்லாஹ்வை பயந்து கொள்வார்களாக.
வருமானத்தை நோக்கமாகக் கொண்டு முதலீடு செய்யப்பட்டிருக்கும் கட்டிடங்கள். நிலங்கள். வாகனங்கள் மற்றும் இதர பொருள்கள் அனைத்துமே முதலீடாகக் கருதப்பட்டு அவற்றிற்கும் அவற்றிலிருந்து பெறப்படும் வருமானத்திற்கும் கணக்கிட்டு வருடா வருடம் ஜகாத்-ஏழைகளுக்குரிய பங்கை அவர்களது உரிமையை அப்படிப்பட்டவர்களைக் கண்டறிந்து அவர்களிடம் ஒப்படைத்து விடுவது செல்வந்தர்களின் கடமையாகும்.
அப்படி அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஏழைகளுக்குரியதை முறைப்படி அவர்களிடம் கொடுத்து விடும் செல்வந்தர்களின் சொத்து சுகங்களில் மேலும் மேலும் அபிவிருத்தி (பரக்கத்) ஏற்படுவதுடன். அவற்றின் பாதுகாப்பிற்கும் அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான்.
அது மட்டுமல்ல; நாளை மறுமையில் அவர்களுக்கு அல்லாஹ்வின் பொருத்தமும், மகத்தான பதவிகளும், உன்னத சுவர்க்கலோக வாழ்க்கையும் நிரந்தரமாகக் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எனவே செல்வந்தர்கள் தங்களின் சொத்து சுகங்களைக் கணக்கிட்டு வருடா வருடம் அவற்றிற்கு முறையாக ஜகாத் கொடுக்க முன்வருவார்களாக

நோன்பாளிக்கு அனுமதிக்கப்பட்டவைகள் - சல்லாபம்

நோன்பு நாளில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நடந்து கொள்ளும் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன?
o நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா?
o பிறரது எச்சிலை விழுங்குவது சம்பந்தமான சட்டம்
o நோன்பிருக்கும் நிலையில் கணவனும் மனைவியும் சல்லாப விளையாட்டில் ஈடுபடுவது
o ரமளான் மாதத்தின் இரவில் உடலுறவு கொண்ட ஒருவர் (ஜனாபா), அதிகாலை நேரம் வரை குளிப்பதைப் பிற்படுத்தலாமா?

நோன்பு நாளில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நடந்துகொள்ளும் அனுமதிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன?
கேள்வி : நோன்பு வைத்திருக்கின்ற கணவன் நோன்பு வைத்திருக்கின்ற மனைவியிடம் நடந்து கொள்ளக் கூடிய அனுமதிக்கப்பட்டவைகள் யாவை?
பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! ஷெய்க் இப்னு உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் இது பற்றிக் கேட்ட பொழுது அவர் இவ்வாறு பதில் கூறினார் :
கடமையான நோன்பு வைத்திருக்கின்ற ஒருவர், தன்னுடைய விந்து வெளியாகும் அளவுக்கு தன்னுடைய மனைவியிடம் (நெருக்கம் கொள்வதற்கு) அனுமதிக்கப்பட்டவரல்ல. உச்சகட்டத்தை அடைவதென்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். சிலருக்கு உடனடியாகவும், இன்னும் சில நபர்களுக்கு மெதுவாகவும், தங்களை முழுமையாகக் கட்டுப்படுத்திக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த நபிமொழியில், ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் மிகவும் வலிமையுள்ளவர்களாக இருந்தார்கள்'' என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
சில நபர்களுக்கு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாது, விரைவாக விந்தினை வெளியேற்றி விடுவார்கள். இத்தகைய நபர்கள் தன்னுடைய மனைவியிடம் நெருக்கமாக இருக்கக் கூடாது, கடமையான நோன்பிருக்கும் நிலையில் அவளைத் தொடலாம், முத்தமிடலாம் இன்னும் இது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்பதை அவர் மிகவும் அறிந்திருப்பாரென்றால், கடமையான நோன்பிருக்கும் நிலையில் அவன் அவளை முத்தமிடலாம், கட்டி அணைக்கலாம், ஆனால் உடலுறவு கொள்வதனின்றும் எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் ரமளான் மாதத்தில் பகல் வேளைகளில் மனைவியிடம் உடலுறவு கொள்வது என்பது ஐந்து தவறுகளுக்கு இட்டுச் செல்லக் கூடியது :
o பாவமானது
o நோன்பை முறித்து விடும்
o மீதி இருக்கின்ற பகல் காலங்களில் எதனையும் உண்ணாதிருத்தல் வேண்டும். இஸ்லாமிய சட்ட வரையறைகளுக்குள் தடை செய்யப்படாத நிலையில் நோன்பை முறித்து விட்டாலும், அவர் மீதமிருக்கின்ற பகல் காலங்களில் உண்ணாதிருத்தல் வேண்டும். மீண்டும் அந்த நோன்பை மறுபடியும் நோற்க வேண்டும்.
o கடமையாக்கப்பட்டதொரு கடமையை அவர் மீறி விட்டதன் காரணமாக, அந்த நாளை மறுபடியும் நோன்பு நோற்றாக வேண்டும்.
o அதற்குப் பரிகாரமும் செய்ய வேண்டும், இது அவருக்கு மிகவும் சுமையானதொரு பரிகாரமுமாகும். அவர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். அவ்வாறு அவரால் செய்ய இயலாது எனில் அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும். அவ்வாறு அவரால் செய்ய இயலாது எனில், அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.
அது கடமையான நோன்பாக இருந்து, ரமளான் அல்லாத நாட்களில் அதனை நோற்கிறீர்கள் என்றால் - அதாவது ரமளானில் விடுபட்ட நோன்பு அல்லது பரிகாரமாக நோற்கப்படும் நோன்பு போன்றவைகள், இதனை முறித்து விட்டால் அது இரண்டு விஷயங்களைக் கொண்டு முடியும்:
அதாவது பாவமானதும், இன்னும் மீண்டும் அதனை நோற்க வேண்டியதும் அவசியமாகும். இன்னும் அது விருப்பத்துடன் நிறைவேற்றப்படும் நஃபிலான நோன்பாக இருந்தால், இன்னும் அதனை நோற்றிருக்கின்ற நிலையில் உடலுறவில் ஈடுபட்டு விட்டால், அதனை மீண்டும் நோற்க வேண்டியதில்லை, பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா?
கேள்வி : நோன்பு நாளில் (பகல் வேளையில்) கணவன் தன்னுடைய மனைவிக்கு அருகில் படுத்துறங்கலாமா?
பதில் :  எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..! 
ஆம், அனுமதிக்கப்பட்டதே. நோன்பிருக்கும் நிலையில் கணவன் தன்னுடைய மனைவியிடம் நெருக்கமாக இருந்து கொள்ள அனுமதியிருக்கின்றது, (அதாவது) அவர்கள் இருவரும்உடலுறவில் ஈடுபடாமலும் அல்லது விந்து வெளியாகாமலும் இருக்கும் வரையிலும் (இந்த அனுமதி பொருந்தும்). புகாரீ (1927) மற்றும் முஸ்லிம் (1106) ல் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்திருப்பதாவது, ''நோன்பிருக்கும் நிலையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னை முத்திமிட்டார்கள்,
இன்னும் என்னுடன் நெருக்கமாக இருந்தார்கள். இன்னும் உங்கள் அனைவரிலும் அவர்கள்
தனது ஆசைகளை கட்டுப்படுத்திக் கொள்வதில் அதிகம் இயலுமானவர்களாக இருந்தார்கள்.''
அல் சிந்தி அவர்கள் கூறுகின்றார்கள் : மேற்கண்ட நபிமொழியில் இடம் பெற்றிருக்கின்ற வார்த்தையான 'யுபாஷிர்" (அதன் மொழி பெயர்ப்பு நெருக்கமாக) என்பதன் அர்த்தமானது, மனைவியின் தோல் கணவனையும் மற்றும் கணவனின் தோல் மனைவியையும் ஒட்டிக் கொண்டு நெருக்கமாக இருப்பது, அதாவது அவனுடைய கன்னத்தை இவளுடைய கன்னத்தோடு கன்னம் வைத்திருப்பது, இன்னும் இது போன்றவைகள். இங்கே குறிப்பாக தெரியவருவது என்னவென்றால் தோலோடு தோல் ஒட்டியிருப்பது தானே ஒழிய, உடலுறவில் ஈடுபடுவதல்ல.

பிறரது எச்சிலை விழுங்குவது சம்பந்தமான சட்டம்
கேள்வி : நோன்பின் பொழுது ஒருவர் தன்னுடைய எச்சிலை தவிர்த்து, தன்னுடைய மனைவியினுடைய எச்சிலை விழுங்குவதன் சட்டம் என்ன?
பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!
மனைவியின் எச்சிலை விழுங்குவது சம்பந்தமாக, இப்னு குதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவதாவது: தன்னுடைய எச்சில் அல்லாத இன்னுமொருவரின் எச்சிலை விழுங்குவதைப் பொறுத்தவரை, அது நோன்பை முறித்து விடும், ஏனென்றால் அவரது வாயிலிருந்து ஊறக்கூடிய எச்சிலை அவர் விழுங்கவில்லை, மாறாக அவர் இன்னொரு பொருளை விழுங்குவதாக இருப்பது தான் காரணமாகும்.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பிருந்த நிலையில் அவர்களை முத்தமிட்டார்கள் என்றும், இன்னும் அவர்களது நாக்கை (பற்றி) உறிஞ்சினார்கள்'' என்றும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிப்பதாக ஒரு ஹதீஸ் அபூதாவூது-ல் வந்துள்ளது. (அபூ தாவூது, 2386), இது அபூதாவூது-ல் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் சரியானதல்ல. இன்னும் மேற்கண்ட ஹதீஸில் வரக்கூடிய 'நாக்கை (பற்றி) உறிஞ்சினார்கள்" என்ற தொடர் பலவீனமானதாகும் என்று அல்பானி அவர்கள் தனது 'ழயீஃப் சுனன் அபீ தாவூது'-ல் குறிப்பிட்டுள்ளார்கள். இப்னு குதாமா அவர்கள், இதனை ஸஹீஹ் ஆன ஹதீஸ் என்று நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் இதனை இருவழிகளில் நாம் அணுக வேண்டும் என்று கூறுகின்றார்கள்.
ஒன்று : இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதல்ல. அவர் கூறினார் :
நோன்பிருந்த நிலையில் (தனது மனைவியை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) முத்தமிட்டிருக்கலாம் என்றும், இன்னும் இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நாக்கை(ப் பற்றி) உறிஞ்சியிருக்கலாம் என்ற நிலையில் இந்த ஹதீஸை அணுக முடியும்.இரண்டு : மேலும் இந்த ஹதீஸ் (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா
அவர்களின்) எச்சியை விழுங்கவில்லை, ஏனென்றால் அவர்களது நாக்கில் உள்ள ஈரப்பதம் (இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) வாய்க்குச் செல்லவில்லை. அல் முக்னீ 3-17. மேற்கண்ட முடிவுப்படி, தம்பதிகளில் ஒருவர் மற்றவரது எச்சிலை விழுங்கினாலும், நோன்பு முறிந்து விடாது.
ஆனால் இவ்வாறு செய்வது, பொதுவாகப் பார்க்குமிடத்து தம்பதிகளில் ஒருவர் மற்றவரது நாக்கைப் பற்றி உறிஞ்சும் நிலையானது அவர்களை உடலுறவின் பால் கொண்டு சென்றுவிடும், இன்னும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி முத்தமிட்டுக் கொள்வதும் உடலுறவின்பால் இட்டுச் சென்று விடும் என்றும் அதன் மூலம் விந்து வெளிப்பட்டு விடும் என்ற பயமிருக்குமென்றால், அது தடைசெய்யப்பட்டதாகும்.
ஆனால், அவர் தன்மீது நம்பிக்கை இருந்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் என்றிருந்தால், அதன் சரியான முடிவுஎன்னவென்றால் அவ்வாறு முத்தமிடுவதும், மனைவி அல்லது கணவன் - ஒருவர் மற்றவரின் நாக்கைப் பற்றி உறிஞ்சுவது அனுமதிக்கப்பட்டதாகும், ஆனால் இது மக்ரூஹ் என்ற நிலையில் இருக்கும், ஏனென்றால் 'இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பிருந்த நிலையில் தனது மனைவியை முத்தமிட்டிருக்கின்றார்கள்" என்பதனாலாகும். (Al-Bukhaari, 1927; Muslim, 1106) Al-Mumti’ 6/433.
ஆனால், அவர் தனது நோன்பை முறிக்கக் கூடிய காரணிகளில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், குறிப்பாக இத்தகைய செயல்கள் நோன்பின் இரவுக் காலங்களில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நோன்பிருக்கும் நிலையில் கணவனும் மனைவியும் சல்லாப விளையாட்டில் ஈடுபடுவது
கேள்வி : நோன்பைப் பற்றிய கேள்வி இது, நோன்பிருக்கும் நிலையில் கணவனைப் பார்த்து 'ஐ லவ் யு" என்று சொல்லலாமா, நோன்பிருக்கும் நிலையில் இவ்வாறு கூறுமாறு எனது கணவர் என்னைக் கேட்டுக் கொள்கின்றார், நான் இது அனுமதிக்கப்பட்டதல்ல என்று கூறினால், அது அனுமதிக்கப்பட்டது தான் என்று அவர் கூறுகின்றார்? இதன் சட்டம் என்ன?
பதில்: எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!
ஒரு ஆண் தன்னுடைய மனைவியிடம் சல்லாபத்தில் ஈடுபடுவது ஒன்றும் தவறல்ல, அல்லது மனைவி கணவனிடமும் அவ்வாறு ஈடுபடுவதும் தவறல்ல, நோன்பிருக்கும் நிலையில் (ஐ லவ் யு என்று) இவ்வாறு கூறுவது, இருவரில் ஒருவர் உச்சகட்ட நிலைக்குச் செல்லும் ஆபத்து ஏற்படாத வரைக்கும் இது தடுக்கப்பட்டதல்ல.
இவ்வாறு விளையாடுவது உச்சகட்ட நிலைக்குத் தள்ளிச் செல்லும் என்றிருக்கும் பொழுது, ஈடுபடக் கூடிய இருவரில் ஒருவருக்கு அதிக காம உணர்வுகள் இருக்குமென்றால், அவ்வாறு விளையாடுவது விந்தணுவை வெளியேற்றக் காரணமாக அமைந்துவிடும் என்று பயப்படுவாரென்றால், அவ்வாறு செய்வது அவருக்கு அனுமதிக்கப்பட்டதல்ல.
ஏனென்றால், நோன்பு முறிந்து விடும் ஆபத்தான நிலைக்கு அவர் சென்று விடுவதே இதன் காரணமாகும். மேலும், அவரிலிருந்து 'மதீ" (உணர்ச்சி மேலீட்டால் வெளியாகக் கூடிய திரவம்) வெளியாகி விடும் என்ற அச்ச நிலை இருந்தாலும் மேற்கண்ட விதி பொருந்தும். (al-Sharh al-Mumti’, 6/390).
யாருக்கு உச்சகட்ட நிலையை அடைய மாட்டோம் என்ற நம்பிக்கை இருக்கின்றதோ அவர்களுக்கு இது ஆகுமானதாகும். (புகாரீ, 1927) முஸ்லிம் (1106), ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: ''இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பிருந்த நிலையில் (தனது மனைவியர்களை) முத்தமிட்டும், இன்னும் தொட்டும் இருக்கின்றார்கள், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வதில் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்.''
ஸஹீஹ் முஸ்லிம் (1108) ல் அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், (தனது மனைவியை) நோன்பிருக்கும் மனிதன் முத்தமிட முடியுமா? என்று கேட்டதற்கு, ''உம்மு ஸலமா"வைக் கேளும் என்றார்கள். அதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவ்வாறே செய்தார்கள்" என்று உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பதில் கூறினார்கள்.
ஷெய்க் உதைமீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள் : முத்தமிடுவதன்றி மற்ற காரணங்கள் ஒருவரை உடலுறவின்பால் இட்டுச் சென்று விடும், கட்டிப் பிடிப்பதும் இன்னும் இதைப் போன்றதும், முத்தமிடுவதற்கு என்ன சட்டமோ அதே சட்டம் தான் இதற்கும், இவற்றிற்கிடையே வேறுபாடு இல்லை. (al-Sharh al-Mumti’, 6/434). மேற்கண்ட விளக்கங்களின்படி, உங்களது கணவரைப் பார்த்து, 'ஐ லவ் யு" என்றோ அல்லது அவர் அவ்வாறு கூறுவது, நோன்பை எந்தவிதத்திலும் பாதிக்காது. இறைவன் மிக அறிந்தவன்.

ரமளான் மாதத்தின் இரவில் உடலுறவு கொண்ட ஒருவர் (ஜனாபா), அதிகாலை நேரம் வரை குளிப்பதைப் பிற்படுத்தலாமா?
கேள்வி : நோன்பு நேரத்து இரவில் தனது மனைவியுடன் உடலுறவு கொள்கின்ற ஒருவர், அதன் பொழுது புலர்கின்ற அதிகாலைப் பொழுது வரை குளிப்பதைப் பிற்படுத்த அனுமதி இருக்கின்றதா? அதைப் போலவே மாதாந்திரத் தீட்டு நீங்கிய பெண், அதன் பொழுது புலர்கின்ற அதிகாலைப் பொழுது வரை குளிப்பதைப் பிற்படுத்த அனுமதி இருக்கின்றதா?
பதில் : எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே..!
அதிகாலை பஜ்ர் நேரத்திற்கு முன்பதாக தான் சுத்தமான நிலையில் இருப்பதாக ஒரு பெண் கருதினால், அவள் அந்த நாளைய நோன்பை நோற்க ஆரம்பிக்க வேண்டும், இன்னும் பொழுது புலரும் வரை அவள் குளிப்பதைப் பிற்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. ஆனால் கண்டிப்பாக அவள் சூரியன் உதயமாகும் வரை பிற்படுத்தலாகாது.
இதே சட்டம் ஜுனுபாளியாக, அதாவது தனது மனைவியுடன் உடலுறவு கொண்டவருக்கும் பொருந்தும், இன்னும் சூரியன் உதயமாகும் வரைக்கும் அவர் தனது குளிப்பைப் பிற்படுத்தக் கூடாது, ஆண்களைப் பொறுத்தவரை - அவர்கள் குளித்து விட்டு அன்றைய ஃபஜ்ர் - அதிகாலைத் தொழுகையை கூட்டாக (ஜமாஅத்துடன்) நிறைவேற்றுவதற்காக பள்ளிக்குச் செல்வதற்கு ஏதுவாக தயாராகி விட வேண்டும்

இரவு வணக்கத்தை அனைவரும் சுவைக்க முயற்சி செய்வோம்

இரவு வணக்கமென்பது நாம் அனைவரும் சுவைக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கான ஆசை எம்மனைவரிலும் இன்னும் இன்னுமின்னும் வளர வேண்டும். நாம் எமது முன்னைய சமுதாயத் தவர்களோடு நன்மைகளால் போட்டுபோடுவதற்கான மிகப் பெரும் சந்தர்ப்பம் இந்த இரவு வணக்கமாகும்.
உடம்பு சோம்பல் பட்டாலும் கூட நாம் முனைப்போடு செய்யவேண்டிய ஒரு அமலாக இது காணப்படுகிறது. கல்வி கற்கும் மாணவனுக்கு கல்வியில் தேற இது ஒரு கட்டுச்சாதம். கற்பிக்கும் ஆசான் கற்பித்தலில் தேற இது ஒரு கட்டுச்சாதம். வாழ்வை ருசிக்க வேண்டுமென விரும்பும் இளைஞனுக்கான ஒரு கட்டுச் சாதம். இல்லர வாழ்வில் சந்தோசம் விளைய வேண்டுமென விரும்பும் தம்பதியினருக்கான ஒரு கட்டுச்சாதம்.
கியாமுல் லைல் வீட்டின் சிறந்த தலைவனாக இருக்க விரும்புபவருக்கான ஒரு கட்டுச்சாதம். வீட்டின் சிறந்த தலைவியாக இருக்க வேண்டுமே என விரும்பும் பெண்ணுக்கான ஒரு கட்டுச் சாதம். தனது தொழிலை திறன் பட செய்ய வேண்டும் என விரும்பும் தொழிலாளியின் கட்டுச் சாதம். வியாபாரத்தில் இலாபம் கிடைக்க வேண்டுமென பாடுபடும் வியாபாரிக்கான கட்டுச் சாதம். இஸ்லாமிய அழைப்பாளனுக்கான மிகப்பெரும் கட்டுச் சாதம். எனவேதான், மிகப்பெரும் தாஈயான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இரவில் நின்று வணக்குவது ஃபர்ளாக காணப்பட்டது.
"போர்வை போர்த்திக் கொண் டிருப்பவரே! இரவில் -சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் அல் குர்ஆனைத் தெளிவாக தஜ்வீத் முறைப்படி ஓதுவீராக. நிச்சயமாக, நாம் விரைவில் கனதியான ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்." (அல்குர்ஆன் 73:1-5)
நாம் இரவு வணக்கத்தின் பயன்களை அறிந்து கொள்வது எமக்கு இன்னும் ஒரு உத்வேகத்தை தருவதாக இருக்கும் என்ற வகையில் அதன் சில பயன்களை இங்கு நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.
கியாமுல் லைலின் பயன்கள் : 
  01. அல்லாஹ்வின் திருப்தி கிட்டும். 
"ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை (யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக. இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக. இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக இதனால் (நன்மை களடைந்து) நீர் திருப்தி பெறலாம்." (அல்குர்ஆன் 20:130)
  02. இரவு வணக்கம் அல்லாஹ்வைப் பற்றிய தெளிவைத் தரும். 
"நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு) வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்தக் கூடியது." (அல்குர்ஆன் 73:6)
  03. நல்லடியார் களின் பழக்க மாகும். 
"நீங்கள் கியாமுல் லைல்லை பேணிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு முன்னிருந்த நல்லடியார்களின் பழக்கமாகும்." (அல் ஹதீஸ்)
  04. பொடுபோக்கை நீக்கும். 
"யார் அல்குர்ஆனின் 10 வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் பொடுபோக்கானவர்களின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். யார் அல்குர்ஆனின் 100 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களில் சேர்க்கப்படுவார். யார் அல்குர்ஆனின் 1000 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் பலமடங்கு நன்மைகள் செய்தவர்களில் சேர்க்கப்படுவார்." (அல் ஹதீஸ்)
  05. கியாமுல் லைல் அல்லாஹ்வுடனான உறவையும் நெருக்கத் தையும் தரும். 
"நீங்கள் இரவு நேர வணக்கத்தைப் பேணிக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு முன்னிருந்தோரின் பழக்கமாகும். மட்டுமன்றி, அது அல்லாஹ்வுடனான நெருக்கத்தையும் தரும்." (அல் ஹதீஸ்)
இமாம் ஹஸனுல் பஸ்ரி கூறுவார்: "இரவின் நடுப்பகுதியில் எழுந்து, தொழுவதை விட அல்லாஹ்வை ஒரு அடியான் நெருங்குவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக வேறொன்றையும் நான் அறியவில்லை."
  06. கியாமுல் லைல் பாவத்தை விட்டும் தூரமாக்கும், பாவமன்னிப்பைக்கொண்டு தரும், உடம்பிலுள்ள நோயை அகற்றும். 
"இரவு நேர வணக்கம் அது அல்லாஹ்வுடனான நெருக்கத்தை தருவதோடு, பாவங்களை விட்டும் தடுக்கும், பாவமன்னிப்பைத் தரும், உடம்பிலுள்ள நோயையும் நீக்கிவிடும்." (அல் ஹதீஸ்)
  07. கியாமுல் லைல் தொழுபவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் ஒளி வழங்குவான். 
"அந்நாளில் சில முகங்கள் ஒளியினால் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80: 38,39) இந்தப் பிரகாசம் கியா முல் லைலின் காரணமாகவே ஏற்படுகிறது என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு இவ்வசனத்திற்கு விளக்க மளிக்கிறார்.
"இரவு நேரத்திலே நின்று வணங்கும் மனிதர்களின் முகங்கள் மிக அழகாக இருப்பதற்கான காரணமென்ன?" என இமாம் ஹஸனுல் பஸ்ரியிடம் வினவப்பட்ட போது, அவர்: ‘ஏனெனில், அவர்கள் தம்மை இறைவனுக்காக அர்ப்பணித்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு பிரகாசத்தை வழங்கினான்" என பதிலளித்தார்.
  08. துஆ ஏற்றுக்கொள்ளப்படும். 
நாம் சில மனிதர்களிடம் எமக்காக துஆக்கேட்குமாறு வேண்டியிருப்போம். அவர்களும் எமக்காக அல்லாஹ்விடம் துஆக் கேட்டிருப்பார்கள். அது எமது வாழ்விலும் தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கும். நாம் அதற்கான காரணத்தைத் தேடிப் பார்த்திருக்க மாட்டோம். அவர்கள் இரவுநேர வணக்கவாளிகளாக இருப்பதே அதன் காரணமாகும்.
"யார் இரவு நேரத்தில் எழுந்து,
‘லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், அல்ஹம்து லில்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்’
எனக் கூறி, யா அல்லாஹ் எனது பாவங்களை மன்னித்தருள்வாயாக என பிராத்திக்கிறாரோ அல்லது துஆக் கேட்கிறாரோ அவரின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்." (நூல்: புகாரி)
  09. கியாமுல் லைல் ரஹ்மத்தைப் பெற்றுத்தரும். 
"எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (அல்குர்ஆன் 39:9)
"யார் இரவு நேரத்தில் எழுந்து தொழுது, தனது மனைவியையும் எழும்பி தொழச்செய்து, அவள் எழும்ப மறுத்தால் அவளின் முகத்தில் நீரைத் தெளிப்பவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும். அதுபோல ஒரு பெண் இரவு நேரத்தில் எழுந்து தொழுது, தனது கணவனையும் எழும்பி தொழச் செய்து, அவன் எழும்ப மறுத்தால் முகத்தில் நீரைத் தெளிப் பவளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்." (அல் ஹதீஸ்)
  10. சுவனத்தில் உயர் அந்தஸ்து களைத் தரும். 
மற்ற மனிதர்கள் தூங்கும் நேரத்தில் எமது படுக்கையிலிருந்து எழுந்து வணக்கம் செய்வது என்பது மிகப் பெறுமதியான ஒன்றாகும். அதற்கு அல்லாஹ் அதிக கூலிகளைத் தருவான் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதனைப் பின்வருமாறு தெளிவு படுத்துகிறார்கள்:
"சுவனத்திலே சில அறைகள் காணப்படுகின்றன. அவற்றின் உட்புறமிருந்து பார்த்தால் வெளிப்புறம் தென்படும். வெளிப்புற மிருந்து பார்த்தால் உட்புறம் வெளிப்படும். யார் உணவளித்து, ஸலாத்தைப் பரப்பி, மனிதர்கள் தூங்கும் வேளையில் நின்று வணங்குகிறாரோ அவருக்காக அல்லாஹ் அவ் வறைகளைத் தயார்படுத்தி வைத்திருக்கிறான்." (அல் ஹதீஸ்)
  11. எதிரிகளோடு வெற்றிகிடைப்பதற்கான வழி கியாமுல் லைல். 
வரலாற்றில் முஸ்லிகளுக்கு கிடைத்த வெற்றிகளை எடுத்து நோக்கினால் கூட அவை கியாமுல் லைலுடன் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணமுடியும்.எனவே, சகோதர சகோதரிகளே இவ்வாறான பல பலன்களைச் சுமந்திருக்கும் கியாமுல் லைலை பேணித்தொழுபவர்களாக அல்லாஹ் எம்மையும் உங்களையும் மாற்றியருள்வானாக. ஆமீன்.