வெள்ளி, மார்ச் 18, 2016

மண்ணறை வேதனை 002மனிதன் இறந்தபின் அவனை மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டு . பிறகு அவனுக்கு அங்கே என்ன நடக்கும் ? என்ன ஆகும் ? என்பதை நபிமொழிகள் மூலமாக நாம் அறிய முடியும். மண்ணறையில் வேதனை செய்யப்படுபவர்களும் உண்டு , வேதனையிலிருந்து பாதுக்காப்பு பெற்றவர்களும் உண்டு. அண்ணல் நபி [ஸல்] அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து  [அல்லாஹ்விடம்] பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை  என்று ஒரு நபிமொழி  கூறுகிறது. நாமும் ஒவ்வொரு தொழுகையிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து பாதுகாப்புக் அல்லாஹ்விடம் கோரவேண்டும்.
அல்லாஹ்வின் பாதையில் இறந்தவனைத்தவிர மற்ற அனைவருக்கும் கப்ரு வேதனை உண்டு. கியாமத் நாளுக்கு ( இறுதி நாள் ) முன்பு வேதனைகள் வெளிக்கொணரப்பட்ட முதல் சம்பவம் இதுவாகும்.
"ஜனாஸா (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும்போதுஇ அந்த ஜனாஸா நல்லறங்கள் புரிந்தாக இருக்குமானால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருக்குமானால்இ கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள் என்று கூறும். இவ்வாறு கூறும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும் மனிதன் அதைச் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி:1314 அபூஸயீத் அல்குத்ரி (ரலி))
அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான்.
பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும் 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். 
அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள் ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான் என நபி (ஸல்)
இதுவெல்லாம் நடக்கவா போகிறது என்று வீண் அலட்சியத்தில் இருப்பவர்களுக்கு இது அல்லாஹ்வின் இறுதி எச்சரிக்கையாக இருக்ககூடுமோ?
ஹதீஸில்தானே சொல்லப்பட்டிருக்கின்றது. இதுவெல்லாம் நமக்கு வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம் என்று அலட்சியப்படுத்திவிடாதீர்கள் நண்பர்களே. மண்ணறையின் வேதனையை மட்டும் மனிதர்களுக்கு கேட்குமானால் அவன் மயக்கமுற்று விடுவான் என்கிற அளவுக்கு வேதனைகள் கடுமையாக இருக்கும்.
அய்யோ வேதனையைத் தாங்க முடியவில்லையே.. அலட்சியமாக இருந்துவிட்டோமே என்று அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவுதான் மன்றாடினாலும் வேதனைகள் விட்டு விலகாது..
ஒன்று புரிந்து கொள்ளுங்கள் : எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது வரும் என்று திட்டமிட்டு தெரியாததால் நாம் இவ்வளவு அலட்சியமாக இருக்கின்றோம்
இறந்தவரின் உடலை ஜனாஸா பெட்டில் வைத்து தூக்கிச் செல்லும் போது அது நல்லறம் புரிந்தவரின் ஜனாஸா என்றால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறும் . அது நல்லறங்கள் புரியாத ஜனாஸா என்றால் என் கைசேதமே என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள் எனக் கூறும்.இவாறு கூறும் சப்தத்தை மனிதன் தவிர அனைத்தும் செவியுறும் .அந்த சப்தத்தை மனிதன் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் (புஹாரி 1314 )
நபி(ஸல் அவர்கள் மதீனாவின் தோட்டம் ஒன்றிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது கப்ரில் வேதனைப் பட்டுக் கொண்டு இருந்த இரண்டு மனிதர்களின் கூக்குரலை செவி ஏற்றார்கள் .அப்போது நபி(ஸல்)அவர்கள் , இந்த இருவரும் மண்ணறைக்குள் வேதனை பட்டுக் கொண்டு இருகின்றனர்.இவர்கள் செய்தது மிகப்பெரும் பாவசெயல் இல்லை என்றாலும் இதும் ஒரு பாவ செயலே ,ஒருவர் 'சிறு நீர்க் கழிக்கும் போது தமது உடலை மறைக்காமல் இருதவர்' . 'மற்றொருவர் மக்களிடையே கோள் சொல்லி கொண்டு திரிந்தவர் 'எனக் கூறினார்கள் .
நபி அவர்கள் எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும் கப்ரின் வேதனையில் இருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யாமல் இருததில்லை என ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிகிறார்கள் .

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B )க்க மினல் ஜுபு(B )னி அவூது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி அவூது பி(B )க்க மின் பி(F )த்னதித் துன்யா வஅவூது பி(B )க்க மின் அதாபி(B )ல் கப்(B )ரி .
பொருள் :
இறைவா! கோழைத்தனத்தை விட்டும்,தள்ளாத வயது வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ் உலகின் அனைத்து சோதனைகளில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ணறை இன் வேதனையில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் .(ஆதாரம் : புகாரி 2822 )
பாவச்செயல் செய்தால் நமக்கு தண்டனை மண்ணறைலேயே கிடைக்க ஆரம்பிக்கும் .மணறை இருள் சூழ்ந்து இருக்கும், நெருப்பு படுக்கை விரிக்கபெறும் .நரகத்தின் வாசல் திறந்து வைக்கப்படும்,ஒருவர் புரிந்த தீயச் செயல் துர்நாற்றமுள்ள ஒரு மனிதனைப் போல் உருவெடுத்து அவர் அருகிலேயே அமர்ந்து இருக்கும் இன்னும் பல வகைகளில் வேதனை படுதப்படுவோம் .
ஒருவர் மரணம் அடைந்து அவரை அடக்கம் செய்தவுடன் அவரிடம் நீல நிற கண்களை உடைய முன்க்கர் ,நகீர் என்ற இரண்டு மலக்குகள் வருவார்கள் ,அவர்கள் இறந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்களிக் குறித்து ,இந்த மனிதரை பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று கேட்ப்பார்கள்.அவன் மூமினாக இருந்தால் 'நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய திருத்தூதரும் ஆவார்கள் 'எனப் பதில் கூறுவான் .
அப்போது மலக்குகள் கூறுவார்கள் நீ இவ்வாறு கூறுவாய் என நாம் ஏற்கனவே அறிந்தோம் .அதனை தொடர்ந்து அவனது கப்ர் 70 முழங்கள் விசாலமாக்கப்படும் .ஒளி ஏற்றப்படும் .அப்போது மலக்குகள் அவனிடம் 'நீ உறங்குவாய்யாக .மிக விருப்பத்திற்குரிய ஒருவரை தவிர வேறு யாரும் உன்னை எழுப்பாத வரை நீ உறங்குவாயாக' என கூறுவார்.அன்றிலிருந்து அவன் மறுமை நாள் வரை உறங்கிக் கொண்டே இருப்பான் .
இறந்தவர் ஒரு முநாபிக்காக இருந்தாலும் அவரிடம் இதே கேள்வி கேட்கப்படும் ; அப்போது அவன் 'எனக்கு அவரைப்பற்றி தெரியாது மக்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்' எனக் கூறுவான். அவனிடம் மலக்குகள் 'நீ இவ்வாறு கூறுவாய் என நாம் அறிவோம் எனக் கூறுவார்.
அப்போது அவன் மண்ணறைக்கு அவனை நெருக்குமாறு உத்தரவு இடப்படும் .அவனது விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று பிண்ணிக் கொள்ளும் அளவிற்கு அவனை மண்ணறை நெருக்கும் .மேலும் இரும்பு சுத்திகளால் அவன் அடிக்கபடுவான். அப்போது அவன் அலறும் அலறல் மனிதர்கள்,ஜின்கள் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவிற்கு அவன் அலறல் இருக்கும் .அல்லாஹ் அவனை எழுப்பும் மறுமை நாள் வரை அவன்வேதனைப்படுத்தப்பட்டு கொண்டே இருப்பான்.(திர்மிதி: அபூஹுரைரா (ரலி )
நல்லறங்கள் செய்தால் மண்ணறை லையே அவனுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் , மண்ணறை விசாலமாக்கப்படும் , ஒளி பெரும் ,சொர்கத்தின் வாசல் திறக்கப்படும் அதன் வழியாக நறுமணம் வீசும், சொர்கத்தின் விரிப்புகள் விரிக்கப்படும் ,நாம் செய்த நற்செயல் அழகிய வடிவம் பெற்று நம்மை மகிழ்விக்கும் .
ஆகவே ஈமான் கொண்டோரே , நாம் செய்த தீவினைகளை எலாம் நினைத்து பார்த்து .அதற்காக பிழை பொறுக்க அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோம் ,நாம் தெரிந்தோ தெரியாமலோ ,வேண்டும் என்றோ செய்த அனைத்து பாவச் செயலுக்கும் மன்னிப்பு வழங்குமாறு இறைவனிடம் அழுது கேட்போம் . மரணம் நம்மை வந்தடைந்து விட்டால் மன்னிப்பின் கதவுகள் அனைத்தும் மூடப்படும் .
எனவே இரவிலும் பகலிலும் பிராத்தனை ,குர் ஆன் ஓதல், தொழுதல் ,பாவத்திகாக மன்னிப்பு,இறைவனை புகழ்வது ,நல்லறங்கள் செய்வது என நல்லவற்றில் ஈடுபட்டு நமது மறுமை வாழ்க்கைகாக நன்மையை சேர்ப்போம் .எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் பாவச் செயல்கள் அனைத்தையும் மன்னித்து நம்மை சொர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக
ஆயிஷா [ரலி] அவர்கள் கூறியதாவது..
மதீனாயூதமூதாட்டிகளில்இருவர்என்னிடம்வந்து  [பேசிக்கொண்டிருந்தபோது]  ''மண்ணறைவாசிகள் மண்ணறைகளில் வேதனை செய்யப்படுகின்றனர் '' என்று கூறினர் . அவர்கள் இருவரும் கூறியதை நான் நம்ப மறுத்தேன். அவர்கள் கூறியதை நம்புவது எனக்குச் சரியாகப்படவில்லை . பிறகு அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர். நபி [ஸல்] அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் , ''அல்லாஹ்வின் தூதரே! இரு மூதாட்டிகள் [என்னிடம் வந்து இப்படி இப்படிச் சொன்னார்கள்] என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு நபி [ஸல்] அவர்கள்,  ''இருவரும் உண்மையே சொன்னார்கள். [மண்ணறையிலிருக்கும் பாவிகள்] கடுமையாக வேதனை செய்யப்படுகிறார்கள். அந்த வேதனை [யால்  அவதியுறும் அவர்களின் அலறல்] தனை எல்லா மிருகங்களும் செவியுருகின்றன'' என்று சொன்னார்கள். அதற்குப்பின் நபி [ஸல்] அவர்கள் எல்லாத் தொழுகைகளிலும் மண்ணறையின் வேதனையிலிருந்து [அல்லாஹ்விடம்] பாதுகாப்புக் கோராமல் இருந்ததில்லை.
ஆதாரம் .. புகாரீ]
ஆயிஷா [ரலி] அவர்கள் கூறியதாவது..ஒருவர் நிரந்தரமாக [த் தொடர்ந்து] செய்யும் நற்செயலே அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்களுக்கு மிகவும்விருப்பமான செயலாக இருந்தது.
. நற்செயல்கள் எதுவும் ஒருபோதும் காப்பாற்ற முடியாது , மாறாக அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் காப்பாற்றப்படுவார்கள்.]
அபூஹுரைரா [ரலி] அவர்கள் கூறியதாவது ..
அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள்  ''உங்களில் யாரையும் அவரது நற்செயல்  ஒருபோதும் காப்பாற்றாது.  [மாறாக அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே  எவரும் காப்பாற்றபடுவார்] '' என்று கூறினார்கள்  . மக்கள்  ''அல்லாஹ்வின் தூதரே! தங்களையுமா [தங்களது நற்செயல் காப்பாற்றாது?] என்று வினவினார்கள். நபி [ஸல்] அவர்கள்  ''[ஆம்] என்னையும்தான் ,, அல்லாஹ்  [தனது] அருளால் என்னை அரவணைத்துக்கொண்டால் தவிர '' என்று கூறிவிட்டு  ''[ஆகவே] நேர்மையோடு [நடுநிலையாகச்] செயல்படுங்கள் . நிதானமாக நடந்துகொள்ளுங்கள். [வரம்பு மீறிவிடாதீர்கள்] காலையிலும், மாலையிலும், இரவில் சிறிது நேரமும் நற்செயல் புரியுங்கள். [எதிலும்] நடுநிலை  [தவறாதீர்கள்] நடுநிலை [யைக் கடைப்பிடியுங்கள்]  [இவ்வாறு செய்தால் இலட்சியத்தை] நீங்கள் அடைவீர்கள் '' என்று சொன்னார்கள்.ஆதாரம் .. புகாரீ]
நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை
சந்தோஷமான செய்தி கூறப்படும்
நல்லவர்கள் மரணிக்கும் போது வானவர்கள் சந்தோஷமான வார்த்தைகளை அவர்களிடம் கூறுவார்கள். மரியாதையுடன் நடத்தப்படுவார்கள். சொர்க்கம் பரிசாக கிடைக்கப் போகிறது என்ற சுபச் செய்தியை மரணிக்கும் தறுவாயில் வானவர்கள் கூறுவார்கள். எனவே தனது நிலை என்னவாகுமோ என்ற கவலை நல்லவர்களுக்கு இருக்காது. அவர்கள் நிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் மண்ணறை வாழ்க்கைக்குள் பிரவேசிப்பார்கள். 
அமைதியுற்ற உயிரே! திருப்தியோடும் (இறைவனால்) திருப்தி கொள்ளப்பட்டும் உனது இறைவனிடம் செல்வாயாக!. எனது அடியார்களில் சேர்ந்து கொள்வாயாக!. எனது சொர்க்கத்தில் நுழைவாயாக! (எனக் கூறப்படும்.) 
அல்குர்ஆன் (89 : 27) 
''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ''அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!'' எனக் கூறுவார்கள். 

இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர். 
அல்குர்ஆன் (41 : 30) 
இன்பமான வாழ்வு உறுதி செய்யப்பட்டுவிட்டதால் விரைவாக தன்னை அடக்கம் செய்யுமாறு நல்லவர் விரும்புவார். ஆனால் தீயவரோ தனக்குக் கிடைத்த கொடூரமான வாழ்வை நினைத்து தன்னை மண்ணறைக்குள் அடக்கிவிட வேண்டாம் என்று அலறிக் கொண்டிருப்பார். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரேதம் (பெட்டியில்) வைக்கப்பட்டு அதை ஆண்கள் தங்கள் தோள்களில் தூக்கிச் செல்லும் போது, அந்தப் பிரேதம் நல்லறங்கள் புரிந்ததாக இருப்பின், ''என்னை விரைந்து கொண்டு செல்லுங்கள்'' என்று கூறும். அது நல்லறங்கள் புரியாததாக இருப்பின், ''கைசேதமே! என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?'' என்று கூறும். இவ்வாறு கூறப்படும் சப்தத்தை மனிதனைத் தவிர அனைத்தும் செவியுறும். மனிதன் அதை செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான். அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : புகாரி (1316) 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்'' என்று சொன்னார்கள். அப்போது நான், ''அல்லாஹ்வின் தூதரே! மரணத்தை வெறுப்பதையா (நீங்கள் சொல்கிறீர்கள்)? அவ்வாறாயின், (மனிதர்களாகிய) நாங்கள் அனைவருமே மரணத்தை வெறுக்கத்தானே செய்வோம்?'' என்று கேட்டேன். 
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''(அல்லாஹ்வைச் சந்திப்பது என்பதற்குப் பொருள்) அதுவல்ல. மாறாக, இறை நம்பிக்கையாளருக்கு, (மரண வேளையில்) இறைவன் கருணை புரியவிருப்பதாகவும் அவரைப் பற்றி அல்லாஹ் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவருக்குச் சொர்க்கத்தை வழங்கவிருப்பதாகவும் நற்செய்தி கூறப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புவார், அல்லாஹ்வும் அவரைச் சந்திக்க விரும்புவான். இறை மறுப்பாளருக்கு, (மரணவேளை நெருங்கும் போது) அல்லாஹ் வழங்கவிருக்கும் வேதனை குறித்தும் அவர்மீது அல்லாஹ் கோபம் கொண்டிருப்பது குறித்தும் அறிவிக்கப்படும். அப்போது அவர் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுப்பார். அல்லாஹ்வும் அவரைச் சந்திப்பதை வெறுப்பான்'' என்று (விளக்கம்) சொன்னார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் (5208) 

நல்லவர்களுக்கு வானவர்களின் வரவேற்பு
நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்வில் அழகான வரவேற்வு வானவர்களால் கொடுக்கப்படுகிறது. 
மதீனாவாசி ஒருவருடைய ஜனாஸாவைப் பின்தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டதும் நபியவர்கள் கப்ருக்கருகில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் சிறிய கம்பு ஒன்றினால் நிலத்தைக் கீறிக் கொண்டிருந்தார்கள். திடீரென தன் தலையை உயர்த்தி கப்ருடைய வேதனையை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடிக் கொள்ளுங்கள் என்று மூன்று தடவை கூறினார்கள். பின்பு மரணத் தறுவாயிலுள்ள ஒரு இறை நம்பிக்கையாளனுடைய நிலை பற்றிக் கூறினார்கள். 
மூமினான ஒரு அடியான் உலகத் தொடர்புகளைத் துண்டித்து விட்டு மறுமையை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் போது சூரிய ஒளிக்கொப்பான பிரகாசமான முகத்துடன் வானிலிருந்து சில வானவர்கள் அவனிடம் வருவார்கள். அவர்கள் தங்களுடன் சுவர்க்கத்துத் துணிகளையும் சுவர்க்கத்தின் நறுமணங்களையும் வைத்துக் கொண்டு அவனுடைய பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருப்பார்கள். 
அப்போது உயிரைக் கைப்பற்றும் வானவர் வந்து அவனருகில் அமருவார். அவனை நோக்கி நல்ல ஆத்மாவே நீ இந்த உடலிலிருந்து வெளியேறி அல்லாஹ்வின் மண்ணிப்பை நோக்கியும் அவனுடைய பொருத்தத்தை நோக்கியும் செல் என்று கூறுவார். தோல் பையொன்றிலிருந்து நீர் வழிந்துவிடுவது போன்று அந்த ஆத்மா வெளியேறிவிடும். அவர் அதனை எடுத்துச் செல்வார். 
அதனை அவர் எடுத்ததும் அருகிலுள்ள மலக்குகள் உடனே சுவர்க்கத்துத் துணியிலும் நறுமணத்திலும் அதனை வைத்துவிடுவார்கள். அதிலிருந்து கஸ்தூரி வாடை வீசும். அந்த மலக்குகள் அதனைச் சுமந்தவர்களாக முதலாவது வானத்தை நோக்கிச் சென்று வானத்தைத் திறந்து விடுமாறு அதிலுள்ள மலக்குகளிடம் கூறுவார்கள். 
அம்மலக்குகள் வானத்தைத் திறந்து அந்த ஆத்மாவை வரவேற்பார்கள். ஒவ்வொரு வானத்திலும் இவ்விதமே நடைபெறும் ஏழாவது வானத்தைக் கடந்து சென்றதும் அல்லாஹ் ஆத்மாவைச் சுமந்து சென்ற மலக்குகளை நோக்கி எனது இந்த அடியானுடைய செயல்களை இல்லிய்யீனிலே (இறை நம்பிக்கையாளர்களின் உயிர்கள் இருக்குமிடம்) பதிவு செய்துவிட்டு பூமியிலுள்ள அவனது உடலில் அவனுடைய ஆத்மாவைச் சேர்த்து விடுங்கள் என்று கூறுவான். அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல் : அஹ்மத் (17803) 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளரின் உயிர் பிரியும் போது அதை இரு வானவர்கள் எடுத்துக் கொண்டு (வானுலகிற்கு) ஏறிச் செல்கிறார்கள். அப்போது வானுலகவாசிகள் (வானவர்கள்), ''ஒரு நல்ல ஆன்மா பூமியிலிருந்து வந்திருக்கிறது. அல்லாஹ் உனக்குப் பேரருள் புரிவானாக. நீ குடியிருந்துவந்த உடலுக்கும் பேரருள் புரிவானாக!'' என்று பிரார்த்திப்பார்கள். பிறகு அந்த உயிர் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் கொண்டு செல்லப்படுகிறது. பிறகு அல்லாஹ், ''இதை இறுதித் தஹ்ணை வரை (மறுமை நாள்வரை தங்க வைக்கப்பதற்காகக்) கொண்டு செல்லுங்கள்'' என்று கூறுவான். 
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரரி) நூல் : முஸ்ரிம் (5510) 
இலேசான விசாரனை
அடக்கம் செய்யப்பட்டவுடன் மரணித்தவருக்கு விசாரணை ஆரம்பித்து விடுகிறது. வானவர்கள் மிகச் சில கேள்விகளை மட்டும் கேட்பார்கள். நல்லடியாராக இருந்தால் இலகுவாக கேள்விகளுக்கு பதில் கூறிவிடுவார். பிறகு அவருக்கு இன்பமான வாழ்வு ஆரம்பித்து விடுகிறது. 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரண்டு வானவர்கள் இறந்தவரிடம் வந்து அவரை எழுந்திருக்கச் செய்து அமர வைப்பார்கள். அவர்கள் அந்த அடியானை நோக்கி உனது இறைவன் யார்? என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது இறைவன் அல்லாஹ் என்று கூறுவார். பிறகு உனது மார்க்கம் என்ன? என்று கேட்பார்கள். அதற்கு அவர் எனது மார்க்கம் இஸ்லாம் என்று கூறுவார். உங்களிடத்தில் அனுப்பப்பட்ட இவர் யார்? என்று வானவர்கள் கேட்பார்கள். அதற்கு அவர் இவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார் என்று கூறுவார். இதை நீ எவ்வாறு அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள். அதற்கு அவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதினேன். அதனை விசுவாசம் கொண்டேன். அதனை உண்மைப்படுத்தினேன் என்று கூறுவார். 
எனது அடியான் உண்மை கூறி விட்டான். அவனுக்காக சொர்க்கத்தின் விரிப்புகளை விரித்து விடுங்கள். சுவர்க்கத்தின் ஒரு கதவை அவனுக்காகத் திறந்து விடுங்கள் என்று ஒருவர் வானிலிருந்து அப்போது கூறுவார். அவனுடைய கண்பார்வை எட்டும் அளவிற்கு அவனுடைய கப்ரு விசாலமாக்கப்படும். 
அப்போது நறுமணம் கமழ அழகிய ஆடை அணிந்து வசீகரமான தோற்றத்துடன் ஒரு மனிதர் அவரிடத்தில் வருவார். அம்மனிதர் அவரை நோக்கி உனக்கு வாக்களிக்கப்பட்ட உனக்கு மகிழ்வூட்டக்கூடிய நன்னாள் இதுவாகும் என்று கூறுவார். 
அந்த இறைநம்பிக்கையாளர் அம்மனிதரை நோக்கி நீ யார்? என்று கேட்பார். அதற்கு அம்மனிதர் நான் தான் (நீ உலகில் செய்து வந்த) உனது நல்ல காரியங்கள் என்று கூறுவார். அப்பொழுது அந்த இறை நம்பிக்கையாளன் இறைவா நான் தேடிவைத்துள்ள செல்வமான (நன்மையையும்) எனது குடும்பத்தினர்களையும் சென்றடைய மறுமை நாளை இப்போதே ஏற்படுத்திவிடு என்று கூறுவார். மரண வேளையின் போது ஒரு இறை நம்பிக்கையாளரின் நிலை இதுவாகும். 
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) நூல் : அஹ்மத் (17803) 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவருடைய தோழர்கள் திரும்பும் போது அவர்களது செருப்பின் ஓசையை பிரேதம் (மய்யித்) செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து 'முஹம்மத் எனும் இந்த மனிதரைப் லிபற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?'' எனக் கேட்பர். அதற்கு ''இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சியம் கூறுகின்றேன்'' என்பார். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவரிடம் கூறப்பட்டதும் அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். 
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (1338) 
இறை நம்பிக்கையாளரின் ஆத்மா சொர்க்கத்து மரத்தில் வாழும் பறவையாக (மாற்றப்படும்.) மறுமை நாளில் அவரது உடம்புடன் அல்லாஹ் அவரை எழுப்புகின்ற வரை (சொர்க்கத்துப் பறவையாகவே) இருப்பார். 
அறிவிப்பவர் : கஃப் பின் மாலிக் (ரலி) நூல் : நஸயீ (2046) 
நெருக்கத்திற்குப் பிறகு விசாலமாக்கப்படும்
நல்லவர்களாக இருந்தாலும் தீயவர்களாக இருந்தாலும் இறந்தவரை கப்ரில் வைத்தவுடன் மண்ணறை அவரை ஒரு முறை நெருக்கும். மரணித்தவன் கெட்டவனாக இருந்தால் விலா எலும்புகள் ஒன்றோடொன்று கோர்த்து கொள்கின்ற அளவிற்கு அது தொடர்ந்து நெருக்கிக் கொண்டே இருக்கும். நல்லவனாக இருந்தால் தொடர்ந்து நெருக்காமல் அவனை விட்டு விடுகிறது. பிறகு அவருடைய மண்ணறை விசாலமாக்கப்பட்டு அவர் நெருக்கடியில்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வை அனுபவிப்பார். 
சிறந்த நபித்தோழரான சஃத் பின் முஆத் என்ற நபித்தோழரையும் மண்ணறை நெருக்கியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மண்ணறை நெருக்கும் பண்புடையது. அதனுடைய நெருக்கலிலிருந்து யாரேனும் ஒருவர் தப்பிப்பதாக இருந்தால் சஃத் பின் முஆத் அதிலிருந்து தப்பித்திருப்பார். (ஆனால் அவரையும் மண்ணறை நெருக்கியது.) 
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : தஹதீபுல் ஆஸார் (797) 

உங்களுடன் இருந்த இந்த மனிதர் குறித்து நீ என்ன சொல்லிக் கொண்டிருந்தாய் ? என்று நபி (ஸல்) அவர்களைப் பற்றி (நல்லவரிடம்) கேட்கப்படும். அதற்கு அவர் இறைவனின் தூதர் என்று நான் நம்பினேன். அவர் எங்களிடத்தில் தெளிவான சான்றுகளைக் கொண்டுவந்தார். அவர் உண்மையாளர் என்று கருதி அவர நாங்கள் பின்பற்றினோம் என்று கூறுவார். அதற்கு நீ உண்மையே கூறினாய். இவ்வாறே நீ வாழ்ந்து மரணித்தாய். இதே நிலையிலே அல்லாஹ் நாடினால் நீ எழுப்பப்படுவாய் என்று அவரிடம் கூறப்படும். பிறகு அவருடைய பார்வை எட்டுகின்ற அளவிற்கு அவருடைய கப்ரு விசாலமாக்கப்படும். 
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரரி) நூல் : தப்ரானி பாகம் : 3 பக்கம் : 105 
இருள் அகற்றப்பட்டு ஒளி பாய்ச்சப்படும்
பொதுவாக மண்ணறைகளில் இருள் சூழ்ந்திருக்கும். நல்லவர்களின் மண்ணறைகளில் இருள் அகற்றப்பட்டு தேவையான ஒளி கொடுக்கப்படும். எனவே நல்லவர்கள் எந்த விதமான அச்சமும் இல்லாமல் நிம்மதியாக மண்ணறை வாழ்வைக் கழிப்பார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். 
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த 'பெண்' அல்லது 'இளைஞர்' ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். 'அவர் இறந்து விட்டார்' என மக்கள் தெரிவித்தனர். ''நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள். பிறகு ''இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. அல்லாஹ், எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவான்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரரி) நூல் : முஸ்லிம் (1742) 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறை நம்பிக்கையாளன் மண்ணறையில் பசுமையான தோட்டத்தில் இருப்பார். எழுபது முழம் வரைக்கும் அவருடைய மண்ணறை விசாலமாக்கப்படும். பௌர்ணமி இரவில் சந்திரனின் ஒளியைப் போல் அவருக்கு வெளிச்சம் தரப்படும். 
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரரி) நூல் : முஸ்னத் அபீ யஃலா (6504) 

மரணித்தவரின் மண்ணறையில் விசாலமாக்குமாறும் ஒளிகொடுக்குமாறும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள். இதன் மூலம் நல்லவர்களுக்கு மண்ணறையில் ஒளி தரப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 
(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு, ''உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப் பின் தொடர்கிறது'' என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் 'ஆமீன்' கூறுகின்றனர்'' என்று கூறினார்கள். மேலும், ''இறைவா! அபூசலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள். 
அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி நூல் : முஸ்லிம் (1678) 
அழகான மாளிகை
மண்ணறை வாழ்வு என்று சொல்லப்படுவதால் புதைக்கப்பட்ட இடத்தில் தான் இறந்தவர்கள் இருப்பதாக எண்ணிவிடக் கூடாது. மரணிக்கும் மக்களில் அதிகமானோரை மண்ணில் புதைப்பதால் மண்ணறை வாழ்க்கை என்று நாம் அழைக்கிறோம். கடலில் மூழ்கி மீனிற்கு இரையாகியவர்கள் தீயில் கருகி சாம்பலானவர்கள் மிருகங்களால் வேட்டையாடப்பட்டு உண்ணப்பட்டவர்கள் இவர்களுக்கெல்லாம் கப்ரு என்பது கிடையாது. ஆனால் மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் சந்திக்கும் மறைமுகமான வாழ்வை இவர்களும் கண்டிப்பாகச் சந்திப்பார்கள். 
இறந்து விட்ட நல்லடியார்களுக்கு அற்புதமான அழகான வீடு தயார் செய்து தரப்படும். அங்கே அவர்கள் மண்ணறை வாழ்வு என்ற மறைமுகமான வாழ்வை இன்பமாகக் கழித்துக் கொண்டிருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவின் போது நல்லவர்களுக்கு இப்படிப்பட்ட பாக்கியம் இருப்பதை உவ்ர்ந்து கொண்டார்கள். 
பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இது வரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும் இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும் சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும் ''இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!'' எனக் கேட்டேன். அதற்கு இருவரும் ''ஆம்,.. நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்த் தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்' என்று கூறிவிட்டு, 'இப்போது உமது தலையை உயர்த்தும்!' என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் 'இதுவே (மறுமையில்) உமது இருப்பிடம்' என்றதும் நான் ''எனது இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்' என்றேன். அதற்கு இருவரும் 'உமது வாழ் நாள் இன்னும் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர்' என்றனர்'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர் : சமுரா பின்த் ன்துப் (ரரி) நூல் : புகாரி (1386) 
சொர்க்கம் எடுத்துக் காட்டப்படும்
நல்லடியார் சந்தோஷமாக மண்ணறை வாழ்வைக் கழிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவருக்கு சொர்க்கம் காட்டப்படும். அதைப் பார்த்து அவர் சந்தோஷம் அடைந்து கொண்டே இருப்பார். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்திலிருப்பதாகவும் நரகவாசியாக இருந்தால் நரகத்திலிலிருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், ''அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்றே) உனது தங்குமிடம்'' என்றும் கூறப்படும். 
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : புகாரி (1379) 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்லடியாருக்கு நரகத்தின் ஒரு வாசலைக் காட்டுங்கள் என்று கூறப்படும். நரகத்தின் ஒரு வாசல் அவருக்கு காண்பிக்கப்பட்டு நீ அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்திருந்தால் இது தான் உனது இடமாக ஆகியிருக்கும். (ஆனால் நீ மாறு செய்யவில்லை. எனவே இதிலிருந்து தப்பித்து விட்டாய்.) என்று கூறப்படும். அப்போது அவர் மிகவும் சந்தோஷமும் பரவசமும் அடைவார். பிறகு இவருக்கும் சொர்க்கத்தின் ஒரு வாசலைத் திறந்து விடுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத்தின் வாசல் அவருக்காக திறக்கப்பட்டு இது தான் அல்லாஹ் உனக்கு ஏற்படுத்திய உனது இடமாகும் என்று கூறப்படும். அப்போது அவர் சந்தோஷமும் பரவசமும் அடைவார். 
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரரி) நூல் : தப்ரானி (2680) 
திருப்தியான வாழ்கை
உலக வாழ்வில் எவ்வளவு தான் இன்பங்களை மனிதன் அடைந்தாலும் திருப்தி அவனுக்குக் கிடைப்பதில்லை. இதனால் நிம்மதியின்றி செல்வத்தைத் தேடிக் கொண்டே வாழ் நாளைக் கழித்து விடுகிறான். ஆனால் நல்லவர்களுக்கு மண்ணறை வாழ்க்கை என்பது திருப்திக்குரியதாகவும் சந்தோஷத்திற்குரியதாகவும் இருக்கும். சத்தியத்திற்காக உயிர் நீத்த நபித்தோழர்கள் இப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். 
'பிஃரு மஊனா' (என்னுமிடத்தில் பிரசாரத்திற்காகச் சென்ற தமது) தோழர்களைக் கொன்றவர்களுக்குத் தீங்கு நேர லி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூசுலைம் கோத்திரத்தைச் சேர்ந்த) ரிஅல், தக்வான் மற்றும் உஸய்யா ஆகிய குலத்தினருக்குக் கேடு நேர லி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முப்பது காலை (தொழுகை) நேரங்கüல் பிரார்த்தித்தார்கள். பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்று அருளப்பட்டது. அதை நாங்கள் ஓதி வந்தோம்; பின்னாüல் அது (இறைவனால்) நீக்கப்பட்டு விட்டது. '' 'நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; நாங்கள் அவனைக் குறித்து திருப்தியடைந்தோம்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்'' என்பதே அந்த வசனம். 
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (2814) 
மண்ணறை வெற்றிக்கான காரணங்கள்
இறை நம்பிக்கை வேண்டும்
அல்லாஹ்வை நம்புகின்ற விஷயத்தில் தவறிழைக்காமல் அவனை நம்ப வேண்டிய முறைப்படி நம்பியவர்களுக்கு வெற்றி கிடைப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே அல்லாஹ்விற்கு யாரையும் இணையாக ஆக்காமல் அவனை மட்டுமே விசுவாசம் கொண்டு வணங்கி வர வேண்டும். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கப்றில் ஒரு இறை நம்பிக்கையாளர் (முஃமின்) எழுப்பி உட்கார வைக்கப்பட்டதும் அவரிடம் (இரு வானவர்களைக்) கொண்டு வரப்ப(ட்டு கேள்வி கேட்கப்ப)டும்; பிறகு (அவர்களிடத்தில்) அந்த இறை நம்பிக்கையாளர், ''அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய தூதராவார்கள்'' என சாட்சியம் கூறுவார். இதையே அல்லாஹ், ''எவர் நம்பிக்கை கொள்கிறாரோ அவர்களை இவ்வுலக வாழ்விலும் மறுமையிலும் உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகின்றான்'' (14:27) எனக் குறிப்பிடுகிறான். 
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)நூல் : புகாரி (1369) 
நற்காரியங்கள் செய்ய வேண்டும்
இறந்த பிறகு நாம் சம்பாதித்த செல்வமோ பெற்றெடுத்த குழந்தைகளோ நமக்குத் துணையாக வர மாட்டார்கள். மாறாக நாம் இந்த உலகில் செய்த நல்ல காரியங்கள் மட்டும் தான் நம்முடன் துணைக்கு வரும். எனவே நல்ல காரியங்களை அதிகமாகச் செய்து கொள்ள வேண்டும். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகிறது. அவரை அவருடைய குடும்பமும் செல்வமும் அவர் செய்த செயல்களும் பின்தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும் செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும். 
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (6514) 
குறிப்பாக இறந்த பிறகும் நன்மைகளை பெற்றுத் தரக்கூடிய நல்லறங்களைச் செய்து கொள்ள வேண்டும். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மனிதன் இறந்து விட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்று விடுகின்றன; 1. நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. 
அறிவிப்பவர் : அபூஹரைரா (ரரி) நூல் : முஸ்லிம் (3084) 
சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்
மறுமையில் நிறைய பலன்களை அடைய வேண்டும் என்பதற்காக இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்கு நோய்களையும் சிரமங்களையும் தருகிறான். இதை சகித்துக் கொள்ளாதவர்கள் இறைவனை ஏசி நன்றி கெட்ட தனமாக நடந்து கொள்கிறார்கள். இது தவறாகும். 
எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு மருத்துவம் செய்பவர்களுக்கு இறைவனின் அன்பும் அருளும் கிடைக்கிறது. வயிற்று வலியால் இறந்தவர்கள் கப்ரில் வேதனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
சுலைமான் பின் ரத் மற்றும் ஹாரித் பின் உர்ஃபுதா ஆகியோருடன் நான் அமர்ந்திருந்தேன். வயிற்று நோயால் இறந்து போன ஒருவருரை (புதைப்பதற்காக) பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அவ்விருவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது வயிற்று நோயால் இறந்து விடுபவர் மண்ணறையில் வேதனை செய்யப்பட மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இல்லையா? என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார். அதற்கு ஆம் என்று இன்னொருவர் பதிலளித்தார். 
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸார் (ரஹ்) நூல் : அஹ்மத் (17591) 
அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தல்
அல்லாஹ்விற்காக உயிர் தியாகம் செய்தவர்களுக்கு தனிச் சிறப்பு மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. மரணத்திற்குப் பிறகு சந்தோஷமான வாழ்வு இவர்களுக்குக் கிடைக்கிறது. மண்ணறை வேதனையிலிருந்து இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். 
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் அருளை எண்ணி மகிழ்கின்றனர். அவர்களுடன் (இது வரை) சேராமல் பின்னால் (உயிர் தியாகம் செய்து) வரவிருப்போருக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் என்பதை எண்ணி மகிழ்ச்சியுடன் உள்ளனர். அல்குர்ஆன் (3 : 169) 
இந்த வசனத்திற்குரிய விளக்கத்தை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் எவ்வளவு இன்பமாக வாழ்கிறார்கள் என்பதை பின்வரும் சம்பவத்தின் மூலம் அறியலாம். 
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், ''(நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப்பெறுகின்றனர்'' (3:169) எனும் இந்த இறை வசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம். 
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும். 
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, ''நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா?'' என்று கேட்பான். அதற்கு அவர்கள், ''நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே!'' என்று கூறுவர். 

இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்படமாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, ''இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும்'' என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள். 
அறிவிப்பவர் : மஸ்ரூக் (ரஹ்) நூல் : முஸ்லிம் (3834) 
அல்லாஹ்வின் வழியில் உயிர் தியாகம் செய்தவர்கள் உலகிலேயே சிரமங்களை அனுபவித்துவிட்டதால் மண்ணறையில் அவர்கள் விசாரனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 
அல்லாஹ்வின் தூதரே உயிர் தியாகியைத் தவிர மற்ற இறை நம்பிக்கையாளர்கள் மண்ணறைகளில் (விசாரனையின் மூலம்) சோதனை செய்யப்படுகிறார்களே ஏன்? என்று ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (போரின் போது) மின்னுகின்ற வாட்கள் ஷஹீதுடைய தலையில் ஏற்படுத்திய சோதனையே போதுமானதாகும். (எனவே அவர் மண்ணறையில் சோதனை செய்யப்பட மாட்டார்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
நூல் : நஸயீ (2026) 
உயிர் தியாகம் செய்யாதவருக்கும் ஷஹீதுடைய அந்தஸ்து
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட வேண்டிய நிலை வந்தால் உயிரைத் தியாகம் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். அல்லாஹ்விற்காக போரிட்டு மரணிக்கும் பாக்கியத்தை மனப்பூர்வமாக இறைவனிடம் கேட்க வேண்டும். 
இதனால் போரிட்டு இறக்காமல் சாதாரணமாக இறந்தாலும் கூட அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகள் நமக்குக் கிடைக்கும். விசாரனை இல்லாமல் மண்ணறை வேதனையிலிருந்து ஷஹீதுகள் பாதுகாக்கப்படுவதைப் போல் நாமும் பாதுகாக்கப்படுவோம். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் (தற்குரிய அந்தஸ்)தை அடைந்து கொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே! அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி நூல் : முஸ்லிம் (3869) 
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீர மரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே! 
அறிவிப்பவர் : சஹ்ல் பின் னைஃப் நூல் : முஸ்லிம் (3870) 


---------------------------------------------------------------------------------