புதன், மார்ச் 16, 2016

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அரசியல் கட்சியினர் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை

தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், அரசியல் கட்சியினர் செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை
எவை என்ற விவரம், தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது:


செய்யக்கூடியவை:தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் துவங்கப்பட்ட திட்டங்களை, தொடர்ந்து மேற்கொள்ளலாம்வெள்ளம், வறட்சி, கொள்ளை நோய்கள் மற்றும் பிற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும் பகுதிகளில், மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்
தீராத மற்றும் மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முன் அனுமதி பெற்று, மருத்துவ உதவிகள் மற்றும் நிதி உதவி வழங்கலாம்
திடல் போன்ற பொது இடங்களை, தேர்தல் கூட்டம் நடத்த, எவ்வித சார்புமின்றி வழங்க வேண்டும். ஹெலிகாப்டர் இறங்கு தளங்களும், எவ்வித சார்புமின்றி வழங்க வேண்டும்
பிற கட்சி வேட்பாளர்களின் கொள்கை, திட்டம், சாதனைகள் மற்றும் பணி தொடர்பாக மட்டுமே, விமர்சனங்கள் இருக்க வேண்டும்
தனி மனித உரிமை மற்றும் அவர்களின் அமைதியான வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காமல் இருக்க வேண்டும்
தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து, முன் அனுமதி பெற வேண்டும். தடை இருந்தால், மீறக்கூடாது; தேவைப்பட்டால், முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெறலாம்
ஒலிப்பெருக்கி பயன்படுத்த, ஊர்வலம் நடத்த அனுமதி பெற வேண்டும்
அமைதிக்கு ஊறுவிளைவிக்கும் அல்லது இடையூறு செய்பவர்களை கட்டுப்படுத்த, போலீஸ் உதவியை நாடலாம்
வாக்காளர்களுக்கு வழங்கப்படும், அலுவல் முறையில் அல்லாத அடையாள சீட்டுகளில், சின்னமோ, வேட்பாளர் பெயரோ இருக்கக் கூடாது
பிரசாரம் மற்றும் ஓட்டுப்பதிவு நாளில், தேர்தல் நடத்தை விதிகளின்படி, அனைத்து வாடகை வாகனங்களையும் பயன்படுத்த வேண்டும்
தொகுதியைச் சேர்ந்த வாக்காளராக, வேட்பாளராக அல்லது வேட்பாளரின் முகவராக இல்லாதவர்கள், பிரசாரம் முடிந்ததும், தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

செய்யக்கூடாதவை:அரசு செலவில் செய்யப்படும், ஆளும் கட்சி சாதனைகள் தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுவாக்காளராகவோ அல்லது வேட்பாளராகவோ இல்லாதபட்சத்தில், எந்த ஒரு அமைச்சரும், ஓட்டுச் சாவடிக்குள்ளோ அல்லது ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்குள்ளோ நுழையக்கூடாது
பிரசாரம் மற்றும் தேர்தல் பணியுடன் சேர்ந்து, அலுவலகப் பணி மேற்கொள்ளக் கூடாது
பணம் கொடுத்தோ, வேறு வகையிலோ, வாக்காளர்களை துாண்டி விடக்கூடாது. ஜாதி, இன ரீதியான உணர்வுகள், தேர்தலில் எதிரொலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது
பல்வேறு ஜாதிகள், சமூகங்கள், மதம் அல்லது மொழி குழுக்கள் இடையே, வேறுபாடுகளை அதிகரிக்கும் வகையிலோ அல்லது வெவ்வேறு தரப்பினரிடையே வெறுப்பை ஏற்படுத்தும் விதத்திலோ, பதற்றம் ஏற்படுத்தும் வகையிலோ, எந்த செயலையும் மேற்கொள்ளக் கூடாது
தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விமர்சனங்களை செய்யக் கூடாது
எந்த ஒரு கட்சியினரோ அல்லது தொண்டரோ உறுதிப்படுத்தப்படாத குற்றச்சாட்டுகள் குறித்தோ, அவற்றை திரித்தோ யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது
கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் அல்லது பிற வழிபாட்டுத் தலங்களில், பிரசாரம் செய்வது, தேர்தல் குறித்து பேசுவது, சுவரொட்டிகள் ஒட்டுவது, பிரசார பாடல்களை இசைப்பது போன்ற எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது
ஊழல் செயல்களில் ஈடுபடுதல், கையூட்டு அளித்தல், தேவையற்ற செல்வாக்கை பயன்படுத்துதல், வாக்காளர்களை அச்சுறுத்துதல், ஆள்மாறாட்டம் செய்தல், ஓட்டுச் சாவடியில் இருந்து, 100 மீட்டர் தொலைவுக்குள் ஓட்டு சேகரித்தல், போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
தனி நபர்களின் கருத்தை எதிர்க்கும் வகையில், அவர்களின் வீடு முன் போராட்டம் அல்லது மறியல் செய்தல், ஆர்ப்பாட்டம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது
பிற கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் சுவரொட்டிகளை, நீக்குவதோ, சேதப்படுத்துவதோ கூடாது
ஒலிப்பெருக்கியை, காலை, 6:00 மணிக்கு முன்னரும், இரவு, 10:00 மணிக்கு பின்னரும் பயன்படுத்தக் கூடாது
தேர்தல் நேரத்தில், மது வகைகளை வழங்கக் கூடாது
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நபர், ஓட்டுப்பதிவு நாளன்று, தன்னுடைய பாதுகாப்பு காவலருடன், ஓட்டுச்சாவடிக்கு, 100 மீட்டருக்குள் செல்லக்கூடாது. பாதுகாப்பு காவலருடன், தொகுதிக்குள் வலம் வரக்கூடாது. ஓட்டு செலுத்துவதற்கு மட்டுமே, பாதுகாவலருடன் வரலாம்.
இவ்வாறு தேர்தல் நடத்தை விதிகளில் கூறப்பட்டு உள்ளன.- நமது நிருபர் -


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக