துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்புகளும் உழ்ஹிய்யாவின் சட்டங்களும்



ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக.
சிறப்புகள்
1- துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவுமா? என நபித்தோழர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதை விடவும்தான் ஆனால் அல்லாஹ்வின் பாதையில் பொருளையும் உயிரையும் அர்ப்பணித்து வீரமரணம் அடைந்தவரைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் : புகாரி
2- நாட்களில் மிகச்சிறந்த நாள் அரஃபாவுடைய நாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் : ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
சிறப்பான இந்த நாட்களில் செய்யும் அமல்கள்
1- ஹஜ் உம்ரா:- ஒரு உம்ரா மற்ற உம்ராவுக்கு இடைப்பட்ட பாவங்களுக்கு பரிகாரமாகும் மேலும் ஏற்றுக்கொள்ப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சுவர்க்கத்தைத்தவிர வேறு எதுவும் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் – புகாரி முஸ்லிம்
2-உபரியான தொழுகைகள் நோன்புகள் தர்மங்கள் உறவினர்களுக்கு உதவுவது குர்ஆன் ஓதுவது பாவமன்னிப்பு தேடுவது நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது போன்ற நல் அமல்களில் ஈடுபடுவது.
குறிப்பு:– துல் ஹஜ் மாதத்தின் பத்தாம் நாளாகிய பெருநாளன்று நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது.ஆதாரம் – புகாரிமுஸ்லிம்
3- அரஃபா நோன்பு :- அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம்-முஸ்லிம்
குறிப்பு:– அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது.

அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை என்பதை மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்கள்.ஆதாரம் புகாரி முஸ்லிம்
4- தக்பீர் கூறுவது:- கடமையான தொழுகைகளுக்குப் பின்னரும் பள்ளிவாசல் வீடு கடைவீதி போன்ற எல்லா இடங்களிலும் தக்பீர் கூறுவது
துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் நல் அமல்களும் அல்லாஹ்வுக்கு மிகப்பிரியமானவைகளாக இல்லை. ஆகவே லாஇலாஹா இல்லல்லாஹ் அல்லாஹ{ அக்பர் அல்ஹம்து லில்லாஹ் போன்ற திக்ருகளை அதிகமாக செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் : அஹ்மத்
இப்னு உமர் (ரலி) அபூஹுரைரா (ரலி) ஆகிய இரு நபித்தோழர்களும் துல்ஹஜ் (மாதம் ஆரம்ப) பத்து தினங்களிலும் கடைவீதிகளுக்கு செல்லும் போதெல்லாம் தக்பீர் கூறுவார்கள் இவ்விருவரும் கூறுவதை கேட்கின்ற மற்ற மக்களும் தக்பீர் கூறுவார்கள்.ஆதாரம் – புகாரி
பெருநாளைக்காக கூறக்கூடிய தக்பீரை அரஃபா நாளின் ஸுப்ஹு தொழுகையிலிருந்து பிறை 13ம் நாள் அஸ்ர் தொழுகை வரைக்கும் கூறுவது.
5- ஹஜ் பெருநாள் தொழுகை இன்னும் குத்பா பிரசங்கத்தில் கலந்து கொள்வது
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப்பெருநாளிலும் கன்னிப்பெண்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் (உட்பட) முஸ்லிம்களின் பிரார்த்தனைகளிலும் நல்ல அமல்களிலும் கலந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு கட்டளையிட்டார்கள். மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தொழுகை நடக்கும் பகுதிக்கு வெளியே இருந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.ஆதாரம் :- புகாரி முஸ்லிம்
6- உழ்ஹிய்யா:- உழ்ஹிய்யா என்பது ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கு பின் இறை திருப்தியை நாடி அறுக்கப்படும் பிராணிக்கு சொல்லப்படும் இது நபியவர்கள் வலியுறுத்திய சுன்னத்தாகும்.
கொம்புள்ள கறுப்பு நிறம் கலந்த இரண்டு வெள்ளை நிற ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் உழ்ஹிய்யாவாக கொடுத்தார்கள் அப்போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி அவ்விரண்டின் ஒரு பக்கத்தின் மீது தனது காலை வைத்து கையால் அறுத்தார்கள்.ஆதாரம் – புகாரி
உழ்ஹிய்யா கொடுப்பதற்கு தகுதியான பிராணிகள்
– ஆடு. மாடு ஒட்டகம் (புகாரி)
– ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆடு போதுமாகும் – (திர்மிதி)
– மாட்டிலும் ஒட்டகத்திலும் ஏழு பேர்கள் பங்கு கொள்ளலாம் – (திர்மிதி)
உழ்ஹிய்யாவிற்கான கால் நடைகளில் கீழ்க்கண்ட குறைகள் இருக்கக்கூடாது:
கண் குறுடு கடுமையான நோயானவை மிகவும் மெலிந்தவை நொண்டியானவை அங்கங்கள் குறையுள்ளவை.
நேரம்
ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகைக்கு பின் அறுக்க வேண்டும்
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது உழ்ஹிய்யாவாக ஆகாது அவர் தன் குடும்பத்தின் தேவைக்காக அறுத்ததாகவே கணக்கிடப்படும்.
யார் தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அவர் இன்னும் ஒரு முறை குர்பாணி கொடுக்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.ஆதாரம் – புகாரி, முஸ்லிம்
யார் (பெருநாள்) தொழுகைக்கு முன் அறுக்கின்றாரோ அது அவரின் குடும்பத்தேவைக்காக அறுத்ததாக கணக்கிட்டுக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
அறுக்கும் முறை
– ஆடு மாடுகளை படுக்கவைத்து ஒருக்கணித்து அறுக்க வேண்டும் (முஸ்லிம்)
– ஒட்டகத்தை நிற்கவைத்து அறுபடும் நரம்புகள் வெட்டப்படும் அளவுக்கு அறுக்கும் கருவியால் கீறிவிடவேண்டும். (முஸ்லிம்)
– அறுக்கும் போது பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். (புகாரி)
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளை பயன்படுத்தும் முறை
உழ்ஹிய்யா கொடுக்கப்பட்ட பிராணிகளின் முடிகளையோ தோல்களையோ மாமிசங்களையோ அறுத்தவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது.
குர்பானி கொடுப்பதற்கான ஒட்டகங்களை மேற்பார்வை செய்வதற்கு என்னை நபி (ஸல்) அவர்கள் நியமித்தார்கள் அவைகளின் மாமிசம் தோல் ஆகியவற்றை தர்மமாகவே கொடுக்க வேண்டும் என்றும் அவற்றில் எதையும் அறுப்பவருக்கு கூலியாக கொடுக்கக்கூடாது என்றும் கூறினார்கள் அறுப்பதற்குரிய கூலியை நாங்கள் தனியாகவே கொடுப்போம் என அலி (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
ஆதாரம்:- புகாரி, முஸ்லிம்
உழ்ஹிய்யா கொடுப்பவர் செய்யக் கூடாதவைகள்
துல் ஹஜ் மாதம் பிறந்ததும் உழ்ஹிய்யா கொடுக்க நாடியவர் தன்னுடைய முடி மற்றும் நகத்திலிருந்து எதையும் அகற்றக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.ஆதாரம்:- முஸ்லிம்
குறிப்பு:– இத்தடை உழ்ஹிய்யா கொடுப்பவருக்கு மாத்திரம்தான் அவரின் குடும்பத்தினருக்கு அல்ல.                        
 ஒட்டகம், ஆடு, மாடு இம்மூன்றும் குர்பானி கொடுக்கத் தகுதியான பிராணிகள். இதைத் தவிர வேறு எதையும் குர்பானி கொடுக்கக் கூடாது.

கால்நடைகளை அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியதற்காக அறியப்பட்ட நாட்களே அல்லாஹ்வின் திருநாமத்தை அவர்கள் துதிப்பார்கள். அதில் இருந்து நீங்களும் உண்ணுங்கள், வறிய ஏழைகளுக்கும் வழங்குங்கள்.
(அல்குர்ஆன் 22 : 28)
இந்த வசனத்தில் குர்பானிக்கான பிராணிகளைப்பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது அன்ஆம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான். அன்ஆம் என்றால் ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய மூன்று பிராணிகளை மாத்திரம் குறிக்கும். எனவே ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றையே குர்பானி கொடுக்க வேண்டும்.
ஆடுகளில் சில இனத்தைக் கொடுக்கக் கூடாது என்ற தவறான நம்பிக்கை நிலவுகிறது. வெள்ளாடு செம்மறியாடு ஆகிய எதுவானாலும் கொடுப்பதில் குற்றமில்லை. பலியிடப்பட வேண்டிய பிராணிகளை இறைவன் பட்டியலிடும் போது செம்மறியாடு வெள்ளாடு மாடு ஒட்டகம் இவற்றையே குறிப்பிடுகிறான்.
(பலியிடக் கூடிய பிராணிகளில்) எட்டு வகைகள் உள்ளன. செம்மறியாட்டில் (ஆண் பெண் என) இரண்டு, வெள்ளாட்டில் இரண்டு உள்ளன. (இவற்றில்) ஆண் பிராணிகளையா (இறைவன்) தடுத்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவற்றையா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அறிவுடன் எனக்கு விளக்குங்கள்!'' என (முஹம்மதே!) கேட்பீராக!
 ஒட்டகத்தில் இரண்டு, மாட்டில் இரண்டு உள்ளன. இவற்றில் ஆண் பிராணிகளையா தடை செய்திருக்கிறான்? அல்லது பெண் பிராணிகளையா? அல்லது பெண் பிராணிகளின் கருவில் உள்ளவைகளையா?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! அல்குர்ஆன் (6 : 143)
 மேலும் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகம், ஆடு, மாடு ஆகியவற்றை மட்டும் குர்பானி கொடுத்ததாக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன. எனவே இம்மூன்று பிராணிகள் மட்டுமே குர்பானிப் பிராணிகளாகும்.
எருமை மாட்டை குர்பானிக் கொடுப்பதில் அறிஞர்களுக்கிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த பூமியில் எருமை மாடு இல்லாததால் குர்ஆன் ஹதீஸில் இதைப் பற்றி தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே சிலர் ஹதீஸ்களில் இல்லாததை குர்பானி கொடுக்கக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் எருமை மாடு மாட்டு இனத்தில் உள்ளதால் மாட்டை எப்படிக் கொடுக்கலாமோ அதைப் போன்று இதையும் கொடுக்கலாம் என்கின்றனர்.
சில ஊர்களில் சேவல், கோழி போன்றவற்றை குர்பானி கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வது கூடாது. இதற்கு ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் கிடையாது.
 வெள்ளிக் கிழமை அரஃபா தினமாக இருந்தால் நோன்பு நேற்கலாமா ?
 அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்)  அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந் தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)அவர்கள்நூல் : முஸ்லிம் (2103)
நாம் நோற்கும் அரஃபா நோன்பு வெள்ளிக் கிழமையை மட்டும் சிறப்புப் படுத்தும் நோக்கில் வைக்கப்படுவதில்லை. நாம் ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் பிறை 9ல் அரஃபா நோன்பு வைக்கிறோம். அது இந்த வருடம் வெள்ளிக்கிழமையில் வந்தாலும் சனிக்கிழமையில் வந்தாலும் அன்றுதான் வைப்போம். வேறு எந்த கிழமையில் வந்தாலும் அன்றுதான் வைப்போம். இது வெள்ளிக் கிழமைக்காக குறி வைத்து வைக்கப்படும் நோன்பல்ல. மாறாக துல்ஹஜ் பிறை ஒன்பதில் வைக்கும் நோன்பாகும்.
இதனால் தான் நபியவர்கள் 'உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!''
என்று கூறியுள்ளார்கள். அதாவது அரஃபா நோன்பு வழமையாக துல்ஹஜ் பிறை 9ல் தான் நோற்க வேண்டும். வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது என்ற கட்டளை நபியவர்கள் நமக்கு கற்றுத் தந்த நோன்புகளுக்கு அல்ல. மாறாக நாமாக விரும்பி வைக்கின்ற நோன்புகளுக்குத்தான்.
நபியவர்கள் இறைஉதவியால் கற்றுத் தந்த அரஃபா நோன்பை வெள்ளிக்கிழமை மட்டும் வைத்தால் அது நபியவர்களின் கட்டளைக்கு மாறு செய்வதில்  வராது.

எதார்த்தமாக அந்த நாளில் அமைகிற நிகழ்வாக பார்க்க வேண்டும்,நோன்பு வைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001