இஸ்லாமிய பார்வையில் வளர்ப்பு பிள்ளை

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

உங்களின் இணைய தளத்தில் பிரசுரிக்கப்படும் கேள்வி பதில்கள் அனைவராலும் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிமையாகவும், பதிலளிக்கும் முறை மிக நன்றாகவும் உள்ளது.

எங்களுக்கு ஒரு சந்தேகம் உள்ளது. இஸ்லாமிய அடிப்படையில் அதற்குத் தெளிவான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்.
தத்தெடுக்கப்படும் குழந்தைகள் அவர்களின் உண்மையான தந்தை பெயரிலேயே அறியப்பட வேண்டும் என்பது இஸ்லாமிய விதிமுறை என்று தெரியும். தந்தை யாரென்று அறியப்படாத ஒரு (திருமணமாகாத) பெண்ணுக்குப் பிறந்த குழந்தை, அப்பெண்ணின் எதிர்காலம் கருதி குழந்தை பிறந்த நிமிடம் முதல் அது வேண்டாம் என அப்பெண்ணால் கைவிடப்பட்ட நிலையில் இறைவனின் கருணையினால் எங்களுக்குக் கிடைக்கப்பெற்றது.

பிறந்த நிமிடம் முதல் எங்களிடம் இக்குழந்தை இருக்கும் நிலையிலும், உண்மையான தந்தை யாரென்று அறியப்படாத நிலையிலும், பெற்ற தாய்க்கும் வேண்டாத நிலையில் நாங்கள் பால் கொடுத்து வளர்த்தினால் அதனை எங்கள் குழந்தையாக வளர்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றதா ?

அல்லாஹ் உங்களின் செயல்களுக்கு தக்க கூலிகளை வழங்கிடுவானாக. நம் அனைவரையும் நேர் வழியில் இறுதிவரை உறுதியுடன் இருக்கச் செய்வானாக. ஆமீன்.

தெளிவு:

அன்புச் சகோதரருக்கு, வ அலைக்கும் ஸலாம் (வரஹ்) சத்தியமார்க்கம்.காம் இணையத் தளத்திற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளில் இன்னாருக்கு இன்னார் வாரிசு என இறைவன் படைத்திருக்க, உண்மையான தந்தை, மகன், மகள் உறவை மாற்றுவது இறைவனின் அதிகாரத்தில் கைவைப்பதாகும். இறைவனுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தில் மனிதன் தலையிட்டு இங்குப் படைப்பின் வம்சா வழியைப் பொய்ப்பிக்கிறான் என்று இச்செயலுக்குப் பொருள் ஆகும். காட்டாக, ஹஸன் என்பவருக்குப் பிறந்த உஸ்மான் என்ற குழந்தையை அப்துல் காதர் என்பவர் தத்தெடுக்கிறார் எனக் கொள்வோம். ஹஸனின் மகன் உஸ்மான் என்று இறைவன் படைத்திருக்க, அப்துல் காதரின் மகன் உஸ்மான் என்று மனிதர்கள் மாற்றுவதை இஸ்லாம் கண்டிக்கிறது.

"யார் தம் தந்தை அல்லாத ஒருவரை - அவர் தம் தந்தை அல்லர் என்று தெரிந்து கொண்டே - தந்தை என்று கூறுவாரோ அவர் மீது சொர்க்கம் தடை செய்யப்பட்டதாகிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6766, முஸ்லிம் 115)

மேற்காணும் நபிமொழி, மரியாதையின் நிமித்தம் பெரியோர்களை அப்பா என்று வெறும் வார்த்தையாக அழைப்பதைத் தடுக்கவில்லை. மாறாக, இரத்த சம்பந்தமான உறவு ஏற்பட்டு விட்டது போல் தந்தை அல்லாத ஒருவரை, அவர் தந்தை அல்லர் என்று தெரிந்து கொண்டே தந்தை என்று குறிப்பிட்டுக் கூறுவதைத் தடை செய்கிறது.

இந்நபிமொழியின் அடைப்படையில் தனக்குப் பிறக்காத மகனை, அவர் தன் மகன் இல்லை என்று தெரிந்து கொண்டே மகன் என்று கூறுவதும் கண்டிக்கத்தக்கது.

இனி திருமறை வசனத்தைப் பார்ப்போம்.

"எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை. உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை. இது உங்கள் வாய்களால் கூறும் (வெற்று) வார்த்தை, அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்." (அல்குர்ஆன் 033:004)

இந்த இறைவசனம், "எந்த மனிதருக்குள்ளும் இரண்டு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை" எனத் துவங்கி, "உங்களின் மனைவியரில் யாரைத் தாயுடன் ஒப்பிட்டீர்களோ அவர்களை உங்கள் தாயார்களாக அவன் ஆக்கவில்லை." எனத் தொடர்கிறது.

இன்னும்,

"உங்களில் மனைவியரைத் தாய் எனக் கூறுவோருக்கு அவர்கள் தாயாக இல்லை. அவர்களைப் பெற்றெடுத்தவர்களைத் தவிர மற்றவர் அவர்களின் தாயாக ஆக முடியாது" (அல்குர்ஆன் 058:002)

தாய் என்றால், பிள்ளையைச் சுமந்து பெற்றெடுத்திருக்க வேண்டும் அவர் தான் தாய் என்ற அந்தஸ்தைப் பெற முடியும். வெறும் வார்த்தையால் மனைவியைத் தாய் என்று சொல்லி விட்டதால் அவர் தாயாகி விடமாட்டார் .

இவ்வாறு கூறுவது,

"வெறுக்கத்தக்க சொல்லையும், பொய்யையும் அவர்கள் கூறுகின்றனர்'' (அல்குர்ஆன் 058:002) என்ற இறைக் கூற்றை மெய்ப்பிக்கிறது.

இங்குக் குறிப்பிடப்பட்ட இறைவசனங்களிலிருந்து பெறும் படிப்பினையாவது:

தாய், தகப்பன் என்றால் அவர்கள் நம்மைப் பெற்றெடுத்திருக்க வேண்டும். மகன், மகள் என்றால் அவர்கள் நாம் பெற்றெடுத்தப் பிள்ளைகளாக இருக்க வேண்டும். சகோதரன், சகோதரி என்றால் அவர்கள் உடன் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். சித்தப்பா, மாமி என்றால் தந்தையுடன் பிறந்திருக்க வேண்டும். சித்தி, தாய் மாமன் என்றால் தாயுடன் பிறந்திருக்க வேண்டும். இவ்வாறு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளே இறைவனின் படைப்பில் உண்மையான உறவுகள்.

இரத்த சம்பந்தப்பட்ட உறவில், உடன் பிறந்த சகோதரி திருமணம் செய்து கொள்ள விலக்கப்பட்டவராவார். இதே தகுதியில் உடன் பிறவாத, ஒரே தாயிடம் பால் குடித்திருக்காத, வேறொரு பெண்ணைச் சகோதரி என்று சொல்லுவதால் அந்தப் பெண் மணமுடிக்க விலக்கப்பட்டவராக ஆகி விடுவதில்லை. சகோதரி என்று குறிப்பிட்டதால் மணமுடிக்க ஆகாதவர் என்று எண்ணுவது இறைவன் அனுமதித்ததை மறுப்பதாகும் என்பதை நினைவில் கொண்டு எச்சரிக்கை பெற வேண்டும்.

இப்போது 033:004வது வசனம் தொடர்ச்சியாக, ''உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் (சொந்தப்) பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை'' என்றும் கூறுகிறது.

பெற்றெடுத்தவளைத் தவிர மற்ற எவரும் தாயாக ஆக முடியாது என்பது போல் தத்தெடுத்து வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் சொந்தப் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை என இறைவன் கூறுகிறான். அதாவது, வளர்ப்புப் பிள்ளைகள் பெற்றெடுத்தப் பிள்ளைகளாக ஆக முடியாது என்பது இங்கு ஆழ்ந்த சிந்தனைக்குரிய விஷயம். இஸ்லாம் அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பதை ஆதரிக்கவில்லை என்று விமர்சிப்பவர்கள் இந்த வசனத்தைத் தவறாக விளங்கியே விமர்சிக்கிறார்கள்.

ஒரு ஆண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியர்க்கு அவர்கள் பெற்றெடுத்த ஒரு பெண் குழந்தை இருக்குமெனில் இந்த இருவரிடையே அண்ணன் தங்கை என இரத்த சம்பந்தப்பட்ட உறவு இல்லை. இவர்கள் பருவமடையும்போது இருவரும் மணம் புரிந்து கொள்ள நாடினால், இஸ்லாமிய அடிப்படையில் அது ஆகுமானதாகும் என்பதை மறுக்கக்கூடாது, இருவரும் ஒரே தாயிடம் பால் குடித்திருந்தாலே தவிர. அவ்வாறு மறுப்பவர்கள் இறைவன் ஹலாலாக்கியதை ஹராமாக்குகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாது, தத்தெடுத்து வளர்க்கும் தம்பதியரின் குடும்பத்தாரோடு வளர்ப்புப் பிள்ளைக்கு எவ்விதத்திலும் இரத்த உறவு இல்லை. அதனால் சித்தி, தாய்மாமன், மாமி, சித்தப்பா போன்ற மேலே குறிப்பிட்டுள்ள இரத்த உறவுகள் ஏற்படா. அதாவது இங்கு மஹரம் ஒரு போதும் ஏற்படாது. குழந்தை பிறந்த குடும்பத்தில் தான் இரத்த உறவுகளும், மஹரமும் ஏற்படும்.

இவ்வளவு விஷயங்களையும் உள்ளடக்கியே, "உங்களால் வளர்க்கப்படும் பிள்ளைகளை உங்கள் பிள்ளைகளாக அல்லாஹ் ஆக்கவில்லை" என்ற வசனம் அமைந்திருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

தொடர்ந்து,

"இது உங்கள் வாய்களால் கூறும் (வெறும்) வார்த்தை, அல்லாஹ் உண்மையே கூறுகிறான். அவனே நேர்வழி காட்டுகிறான்" என தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் என்று சொல்வது (வெறும்) வார்த்தைதானே தவிர நீங்கள் அவ்வாறு சொல்வதில் எந்த உண்மையும் இல்லையென இவ்வசனம் நிறைவடைகிறது.

அடுத்த வசனம்:

"அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ருடனே சேர்த்து அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் நீதியானது. அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் கொள்கைச் சகோதரர்களும், நண்பர்களுமாவர். தவறுதலாக நீங்கள் கூறி விடுவதில் உங்கள் மீது குற்றமில்லை. மாறாக உங்கள் உள்ளங்களால் தீர்மானித்துக் கூறுவதே (குற்றமாகும்) அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்" (அல்குர்ஆன் 033:005)

மேலதிக விரிவுரை தேவையில்லை எனும் அளவுக்கு இந்த வசனம் தெளிவாக அமைந்திருக்கிறது. கேள்வி கேட்ட சகோதரர், "தந்தை யாரென அறியப்படாத நிலையில் எங்கள் குழந்தையாக நாங்கள் கொள்ளலாமா? என்ற ஐயத்திற்கு நேரடி விளக்கமாக ''அவர்களின் தந்தையரை நீங்கள் அறியாவிட்டால் அவர்கள் உங்களின் மார்க்க சகோதரராவர்'' என்று இறைவசனம் தெளிவுபடுத்துகிறது.

இந்த இறைவசனத்தின் பின்னணியைச் சற்று நோக்குவோம்:

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்குமுன் தம்மிடம் அடிமையாக இருந்த ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை விடுதலை செய்து, பின்னர் அவரை வளர்ப்பு மகனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். "எனக்கு ஸைது வாரிசாவார், ஸைதுக்கு நான் வாரிசாவேன்" என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்திருந்தார்கள். நபித்துவ வாழ்விற்கு முன்பு நடந்தது இச்சம்பவம். நபித்துவம் பெற்று மதீனா வந்த இரண்டாம் ஆண்டில் மேற்கண்ட வசனங்கள் அருளப்படும் வரை, வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தப் பிள்ளையாகக் கருதி, வளர்ப்புத் தந்தையின் சொத்துக்கு வளர்ப்பு மகன் வாரிசாக வருவதும் நடைமுறையில் இருந்தது. 033:005வது வசனம் அருளப்பட்ட பின்னர் இந்த நடைமுறைக்குத் தடை விதிக்கப்பட்டது.

"வளர்ப்புப் புதல்வர்களை அவர்களின் சொந்தத் தந்தை(யின் பெயர்) உடன் சேர்த்து அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்'' எனும் (033:005) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ஸைத் பின் முஹம்மது (முஹம்மதின் மகன் ஸைத்) என்றே அழைத்து வந்தோம்" (புகாரி, 4782)

வளர்ப்புப் பிள்ளை வாரிசாக்கப்பட்டும், வளர்ப்புத் தந்தையின் பெயரைச் சேர்த்தே வளர்ப்பு மகன் அழைக்கப்பட்டும் வந்த அறியாமைக் கால வழக்கத்தைத் தடை செய்து, தத்தெடுக்கும் சுவீகாரப் புத்திரர்களை வளர்ப்புப் பிள்ளை என்ற எண்ணத்தில் மகன் என அழைத்துக் கொள்ள இறைவன் அனுமதிக்கிறான். இதற்கு மாறாக, வளர்ப்புப் பிள்ளையை சொந்த மகனாகவோ, மகளாகவோ உள்ளத்தால் தீர்மானிப்பதைக் குற்றமென இறைவசனம் கூறுவதால் அதிலிருந்து விலகி விடுவதே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும்.

சுவீகாரப் பிள்ளைகள்:

எடுத்து வளர்க்கும் சுவீகாரப் பிள்ளைகளை உங்களுடைய வளர்ப்பு பிள்ளையாக மட்டுமே வளர்க்க இஸ்லாத்தில் அனுமதி உண்டு. அக்குழந்தை உங்களிடம் பால் குடிக்கும் பருவத்தில் பால் குடித்திருந்தால் அவர் உங்கள் பால்குடிப் பிள்ளையாகவும், உங்களின் சொந்தப் பிள்ளைகளுக்குப் பால்குடி சகோதரராகவும் ஆவார். ''உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும்,'' (004:023) என பால்குடி உறவுகளையும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
மாறாக, எடுத்து வளர்க்கும் குழந்தைக்கு வளர்ப்புத் தந்தை ஒருக்காலும் சொந்தத் தந்தை ஆக முடியாது. வளர்க்கும் பிள்ளையின் தந்தையின் பெயர் தெரியா விட்டாலும் சுவீகாரப் பிள்ளைக்கு வளர்ப்பவர் தந்தை ஆக முடியாது என இறைவசனங்கள் வலியுறுக்கிறது. இதை நன்கு நினைவில் கொள்வது அவசியம்.
உள்ளங்கள் சரி காண்பதைத் தவிர்ப்போம், இறைவழி நடப்போம்.

(அல்லாஹ் மிக அறிந்தவன்)

குறிப்பு:

அரசுப் பதிவுகளிலும், பள்ளிச் சான்றிதழ்களிலும் குழந்தையின் தந்தை  பெயரை அறிந்திருந்தால் அதைக் குறிப்பிடலாம். தந்தையின் பெயர் அறியாத நிலையில் எடுத்து வளர்ப்பவர், காப்பாளர் - கார்டியன் எனத் தம்மைக் குறிப்பிட்டுக் கொள்ளலாம்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001