சமூகப்பிரச்சினைகளைதீர்க்கஇஸ்லாம்கையாளும்வழிமுறைகள்!!



சமூகத்தில் நடைபெறும் அவலங்களையும் பிரச்சினைகளையும் அதிகாரத்தின் மூலமும் அடக்கி ஒடுக்குவதன் மூலமும் தீர்க்க முடியும். இது ஒருவகை. ஆனால் அதற்கு ஆட்சி தேவை. எனினும் எல்லோரும் இதற்குக் கட்டுப்படுவார்கள் என்றும் கூறமுடியாது.
அதேவேளை சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இஸ்லாம் கையாண்ட வழிமுறைகள் சற்றே வித்தியாசமானவை. யோசித்துப் பார்த்தால் ஆச்சரியமே மிஞ்சும்.
அநேக சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறையாக, இஸ்லாம் எடுத்து வைக்கும் முக்கியமான தீர்வுகளில் ஒன்று– சுவனம் குறித்த உத்தரவாதம் மட்டுமே.
ஆம், இந்தச் செயலைச் செய்... உனக்கான வெகுமதி சுவனம் என்று உத்தரவாதம் வழங்கி அந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழிகண்டது இஸ்லாம். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றது என்றே சொல்ல வேண்டும்.
இவ்வாறு சுவனத்தை உத்தரவாதமாகப் பெறுபவரின் உள்ளத்தில் ஒருவகை நிம்மதி பிறக்கும். அந்த உத்தரவாதத்தைப் பெற்றுக்கொண்டவர் சுவனத்தைச் சொந்தமாக்குவதற்காக எந்த இன்னலையும் தாங்கிக்கொள்வார். அத்துடன் இழந்ததை நினைத்து கவலையும் கொள்ளவும் மாட்டார். அத்தனை சிறப்பு மிக்க சுவனத்தை தரும் செயல்களில் முக்கியமானவற்றை காண்போம்....
பெற்றோர் பணிவிடை
எவ்வளவுதான் பெற்றோர் பணிவிடை குறித்தும், அவர்களின் உரிமை குறித்தும் பேசினாலும், பெற்றோரை அலட்சியப்படுத்தும் மனோபாவம் இன்றும் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
தனிக்குடித்தனம் விரும்பும் நகர்புற குடும்பங்களுக்கு மத்தியில் வயதான பெற்றோர் இன்றும் ஒரு தலைவலி போன்று பாரமாகவே பார்க்கப்படுகின்றனர். இதுதான் நிதர்சன உண்மை. இஸ்லாமிய சமூகத்துக்கு மத்தியிலும் இந்த மனோபாவம் கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவத்தான் செய்துள்ளது. அறவே இல்லை என்று கூறமுடியாது. ஆயினும் பிற சமூகங்களுடன் ஒப்பிடும்போது மிகமிக குறைவு என்றே கூறவேண்டும். ஏன்..? என்ன காரணம்...?
பெற்றோரைப் பராமரிக்கும் விஷயத்தில் இஸ்லாம் காட்டும் கரிசனமும், அவ்வாறு பராமரிக்காவிட்டால் கிடைக்க இருக்கும் தண்டனையும்தான். பெற்றோரை அலட்சியம்செய்யும் பிள்ளைகள் விஷயத்தில் இஸ்லாம் சற்று கடுமையாக நடந்துகொள்கிறது. மறுமையில் இழிவுதான் எனும் எச்சரிக்கையை அவர்களுக்கு விடுக்கிறது.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ''அவன் மூக்கு மண்ணாகட்டும்'' (அதாவது அவன் இழிவடையட்டும்!) இவ்வாறு மூன்று முறை கூறினார்கள்.
மக்கள் வினவினார்கள்: ''இறைவனின் தூதரே! யார்?'' (அதாவது யார் இழிவடையட்டும்? யாரை இப்படிக் கடிந்துகொள்கிறீர்கள்?).
''முதுமைப் பருவத்தில் தன் தாய் தந்தையரில் ஒருவரையோ – இருவரையுமோ பெற்றிருந்தும் (அவர்களுக்குப் பணிவிடை புரிந்து) சுவனம் புகாதவன்'' (முஸ்லிம்)
அதிலும் குறிப்பாக ''சுவனம் தாயின் காலடியில் உள்ளது'' என்று கூறி.. இந்த உலகத்தில் கண்முன் நடமாடும் சுவனமாக தாயைக் குறிப்பிடுகிறது இஸ்லாம்.
பெற்றோரைப் பேணுவதால் சுவனம்! அலட்சியம் செய்தால் ஆபத்து! என்ற உள்ளுணர்வு தான் ஒவ்வொரு முஸ்லிமையும் ஓரளவாவது பெற்றோருடன் நல்ல முறையில் நடக்க வைக்கிறது.
கல்வி
பிற சமூகங்களுடன் ஒப்பிடும்போது இஸ்லாமிய சமூகம் கல்வியில் பின்தங்கியே உள்ளது. 1400 வருடங்களுக்கு முன்னரே இதற்கான ஆசையை இஸ்லாம் விதைத்துள்ளது. கற்பதின் மூலமாகவும், கற்றுக்கொடுப்பதன் மூலமாகவும் சுவனப்பேற்றை அடையலாம் என்று அன்றே இஸ்லாம் சொல்லிச் சென்றது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''கல்வியைத் தேடி யார் புறப்படுகின்றாரோ, அவருக்கு சுவனத்தின் பாதையை அல்லாஹ் லேசாக்குகின்றான்''.
கல்வியைத் தேடி ஒருவர் புறப்படுகின்றார் எனில் அவர் நடக்கும் பாதை சுவனத்தை நோக்கிய பாதை என்பதை அண்ணலார் (ஸல்) இங்கே அழகுற வலியுறுத்தியுள்ளார்கள்.
ஆயினும் இஸ்லாமிய சமூகத்தில் இது குறித்த விழிப்புணர்வு இன்னும் சரிவர ஏற்படவில்லை. இன்னும் வெகுதூரம் செல்லவேண்டியுள்ளது.
நோய் நலம் விசாரித்தல்
அடுத்த வீட்டுக்காரர் நோயாளியாக இருந்தாலும் நலம் விசாரிக்க நேரம் இல்லாமல் ஓயாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். ஒரு நோயாளியை நலம் விசாரிப்பதன் மூலம் சுவனப்பேற்றை அடைந்துகொள்ள முடியும் என்ற பெரும் பாக்கியத்தை இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் வழங்குகிறது.
மனித உள்ளத்தில் எப்போதும் மனிதாபிமான உணர்வு இருந்துகொண்டே இருக்க வேண்டும். அது மறைந்து விடலாகாது. ஒரு நோயாளிக்கு மருந்துகளால் தர இயலாத நிவாரணத்தை சிலபோது நாலு நல்ல வார்த்தைகள் தரும்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''நோயாளியை நலம் விசாரிப்பவர் திரும்பி வரும்வரை சுவனப் பூஞ்சோலையில் இருக்கின்றார்''



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001