வெள்ளி, பிப்ரவரி 24, 2012

என்ன செய்யப்போகிறோம்...?பையன் பல்லாவரம். பெண் பெசண்ட் நகர். வசதியான குடும்பத்துப் பெண். இருவரும் முஸ்லிம்கள். படிக்கும்போது முகிழ்த்த நட்பு காதலாகத் துளிர்த்தது. பெண் வீட்டாரிடம் இருவரும் தம் காதல் குறித்துத் தெரிவித்துத் திருமணத்திற்காக ஏங்கியுள்ளனர்.

ஏற்கெனவே மாப்பிள்ளை பேசி முடிவாகிவிட்டது; இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை என்று பெண் வீட்டார் கதவை அழுத்தமாகச் சாத்திவிட்டனர். பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையுடன் பெரிய இடத்துப் பெண்ணின் திருமணமும் நடந்து முடிந்துவிட்டது. இப்போது அவள் ஐந்து மாத கர்ப்பிணி.

இந்நிலையில், அப்பெண் தன் பழைய காதலனுடன் பெங்களூர் ஓடிவிட்டாள். அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கிக்கொண்டு, "நாங்கள் சேர்ந்துவாழ விரும்புகிறோம். பிரித்தால் தற்கொலை செய்து கொள்வோம்'' என்று பையனும் பெண்ணும் மிரட்டல் விடுக்கிறார்கள்.

என்ன செய்யப்போகிறோம்...?

பெண் படித்துக்கொண்டிருந்தபோது டியூஷன் சென்டர் போவது வழக்கம் -இதுவும் சென்னையில்தான்- அங்கு டியூஷன் எடுத்த ஆசிரியர் இந்து. மாணவி முஸ்லிம். இருவருக்கும் இடையே ஆசிரியர் - மாணவி என்ற உறவுக்கு மேலே காதல் தலைதூக்கியது.

பெண்ணின் வீட்டாருக்கு விவரம் தெரியுமோ தெரியாதோ, ஒரு கல்லூரி விரிவுரையாளருக்கு மணமுடித்து வைத்துவிட்டனர். மாப்பிள்ளை முஸ்லிம். சேர்ந்துவாழ்ந்தனர். அடையாளமாக வயிற்றில் ஏழு மாதக் குழந்தை.

இந்நிலையில் திடீரெனப் பெண் காணாமல் போய்விட்டாள். பிறகுதான் தெரிந்தது, அவள் தன் பழைய காதலனுடன் எங்கேயோ சுற்றித் திரிகிறாள் என்று. பின்னர் வீடு திரும்பிய அவளை, விவாகரத்துச் செய்துவிட வேண்டும் என்று மாப்பிள்ளை வீட்டார் ஒற்றைக் காலில் நிற்கிறார்கள். கணவனோ, மனைவியை மன்னித்து ஏற்கத் தயார்.

என்ன செய்யப்போகிறோம்...?

பிராமணப் பெண். பையன் முஸ்லிம். தேனி மாவட்டம். கல்லூரியில் உருவான காதல், இரு வரையும் கண்காணாத இடத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டது. இருவரும் இப்போது சேர்ந்து வாழ்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். எங்கே, எப்படி, திருமணம் ஆனதா, இல்லையா எதுவும் பையன் வீட்டாருக்குத் தெரியாது.

கிட்டத்தட்ட இதே பாத்திரம், வேலூர் மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில்.

என்ன செய்யப்போகிறோம்...?

இப்படி ஒன்றல்ல; இரண்டல்ல. பல நூறு சம்பவங்கள். நகரம், கிராமம் என்ற வித்தியாசமில்லாமல் நம் குடும்பங்களில் அரங்கேறிவருகின்றன. மேலைநாட்டுக் கலாசாரம், சின்னத்திரை, வண்ணத்திரை என்றெல்லாம் காரணங்களைச் சொல்லிவிட்டால் போதுமா? மலைப் பாம்பாய் வாய் பிளந்து மிரட்டிக்கொண்டிருக்கும் இந்தப் பேராபத்தைச் சமுதாயம் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? இந்த வைரஸுக்கு வைத்தியம் என்ன?

பெண் கல்வி

முஸ்லிம் பெண்கள் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்; பிரச்சினைகளைத் துணிவோடு எதிர்கொண்டு சாதிக்க வேண்டும் என்பதற்காகப் பெண் கல்வியை அனைவரும் வலியுறுத்துகிறோம். அது உண்மையும்கூட.

இப்போதெல்லாம் பெரிய நகரங்களில் மட்டுமன்றி, முஸ்லிம் ஊர்களிலும்கூட சமுதாயக் கண் மணிகள் நிறையவே படிக்கின்றனர். உயர்கல்வியில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கிவிட்டனர். இளநிலைப் பட்டப் படிப்புக்கும் மேலாக, உயர்நிலைப் பட்டப்படிப்பிலும் முஸ்லிம் மாணவிகள் ரேங்க் ஹோல்டர்களாக ஜொலிக்கின்றனர். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால், கல்வி ஒரு பக்கம் வளர்ந்தால், மறுபக்கம் கலாசாரச் சீரழிவு தேள் போல் கொட்டுகிறதே! முன்பு நம் இல்லங்களை அலங்கரித்த ஒழுக்கம், நாணம், அடக்கம் ஆகிய உயர் பண்பாடு களெல்லாம் சிறிது சிறிதாக மலையேறத் தொடங்கிவிட்டனவே!

நாம் என்ன செய்யப்போகிறோம்?

இதற்காகப் பெண் கல்வியை ஓர் எல்லைக்குள் முடக்கிவிட முடியுமா? அப்படியானால், நம் வீட்டு ஆண் பிள்ளைகளும்கூட மாற்றார் தோட்டத்து மான்களுக்குப் பின்னால் ஓடிப்போய் விடுகிறார்களே! ஆண்களும் படிக்கக் கூடாது என்று தடை போட்டுவிட இயலுமா?

கோ எஜுகேஷன்தான் இதற்கெல்லாம் காரணம். எனவே, ஆண்கள் பள்ளியில் ஆண்களையும், பெண்கள் பள்ளியில் பெண்களையும் சேர்த்துவிட்டால், இந்தப் பிரச்சினை வராது என நாம் கூறலாம். ஆனால், இது எல்லா இடங்களுக்கும் பொருந்துமா? பெண்களுக்கெனத் தனியாகப் பள்ளியோ கல்லூரியோ இல்லாத பல ஊர்களில் நம் குழந்தைகள் உயர்கல்வி கற்பது எப்படி?

அடிப்படை மார்க்கக் கல்வி

சிறு வயதிலேயே இஸ்லாமிய மார்க்க சம்பந்தமான அடிப்படைக் கருத்துகளை குழந்தைகளின் உள்ளங்களில் ஆழமாகப் பதிய வைத்துவிட்டால், இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுத்து விடலாம். உண்மைதான்.

சிறு வயதிலேயே "குர்ஆன் மதரசா' எனப்படும் ஆரம்ப அரபிப் பாடசாலையில் குழந்தைகள் சேர்ந்து, குர்ஆன் ஓதக் கற்று, மார்க்கச் சட்டங்களையும் அடிப்படைக் கோட்பாடுகளையும் அறிந்து கொண்டால், பின்னாளில் எவ்வளவு பெரிய படிப்புகளைப் படித்தாலும் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் இருப்பார்கள். முந்தைய தலைமுறையினர் அப்படித்தான் வளர்ந்தார்கள்.

இதற்குக் காரணம் இல்லாமலில்லை. பசு மரத்தில் ஆணி அறைந்தார் போன்று, இளம் உள்ளத்தில் இறையுணர்வு, இறையச்சம், மறுமை நம்பிக்கை, பெற்றோரின் உரிமைகள், பிள்ளைகளின் கடமைகள், பாலியல் தவறுகளால் விளையும் தீமைகள் உள்ளிட்ட பால பாடங்களைப் பதித்துவிட்டால், அது என்றென்றும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும்.

தினகரன் நாளிதழில் வந்த ஒரு செய்தி
ஆனால், இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் இதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது தான் பெரும் கொடுமை. காலையில் எழுந்தவுடன் அரைகுறையாகக் காலைக் கடனை முடித்துக் கொள்ளும் மழலையர், புத்தக மூட்டைகளைச் சுமந்துகொண்டு பள்ளிக்குச் சென்றுவிடுவர். பல வீடுகளில் குழந்தைகள் பள்ளிக் கூடத்துக்குச் செல்லும்வரை பெரியவர்கள் எழுந்தே இருக்கமாட்டார்கள்.


மதியம் அல்லது மாலை நேரம் வீடு திரும்பியபின் சிறிது நேர விளையாட்டு. பின்னர் மீண்டும் வீட்டுப்பாடம். அத்துடன் டியூஷன். பெரியவர்கள் வீடு திரும்புவதற்கு முன்பே குழந்தைகள் உறங்கிவிடுவார்கள். இப்படி தந்தை - மகன் சந்திப்பே பல நாட்கள் நடக்காமல் போய்விடுவதும் உண்டு. இந்த நிலையில் மதரசாவுக்குக் குழந்தைகளை அனுப்ப நேரம் எங்கே? இப்படி பெற்றோர் அலுத்துக்கொள்கிறார்கள்.

தனி உஸ்தாதை நியமித்து வீட்டிலேயே மார்க்க வகுப்பு நடத்தலாம். ஆனால், இது எல்லாருக்கும் சாத்தியமா? வசதி இல்லாதோர் எத்தனையோ பேர்! வசதி இருந்தாலும் உஸ்தாது கிடைக்க வேண்டும். அவர் பொறுப்போடு வந்து கற்பிக்க வேண்டும். குழந்தைகளும் பெற்றோரும் ஒத்துழைக்க வேண்டும்.

நாலு நல்ல வார்த்தை

இதுதான் இல்லை. வளரும் பிள்ளைகள் நாலு நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டுமல்லவா? அந்த வாசலும் அடைபட்டுக் கிடக்கிறது. பள்ளி, கல்லூரிகளின் வகுப்பு நேரங்கள், மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயானைக் கேட்பதற்குக்கூட அவகாசம் அளிப்பதில்லை. விடுமுறை நாட்களோ வெளியூர் பயணங்கள், குடும்ப நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் கிளாஸ்கள் எனக் கழிந்துவிடுகின்றன.

மாணவிகளின் நிலை இதைவிட மோசம். மார்க்க உரைகளைக் கேட்பதற்கான முகாந்தரமே அவர்களுக்குக் கிடையாது. ஜும்ஆ இல்லை; சிறப்பு பயான்கள் இல்லை; நல்ல புத்தகங்கள் நம் வீடுகளில் கிடைப்பதில்லை. பல வீடுகளில் இஸ்லாமிய இதழ்களோ நூல்களோ மருந்துக்குக்கூட கண்ணில் படுவதில்லை.

தொலைக்காட்சி உரைகளிலோ -சிலவற்றைத் தவிர- விவரங்களைவிட விரசங்களே அதிகம். அடையாளப்படுத்தவே, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காசு கொடுத்து நடத்துகிறார்கள். தற்புகழ்ச்சிதான் அதில் மிகைக்கிறது; இறைநெறிகள் சொற்பமே. குறிக்கோல் விளம்பரம். அதில் உண்மையான குறிக்கோல் அடிபட்டுப்போகிறது.

தேர்ந்தெடுப்பு முக்கியம்

இதற்கு ஒரே தீர்வாக, முஸ்லிம்கள் நடத்தும் பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கலாம் என்றால், அங்கு மட்டும் என்ன வாழ்கிறது என்றே கேட்கத் தோன்றுகிறது. முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் பலவற்றில், பெயருக்குக்கூட இஸ்லாத்தைக் காண முடியவில்லை. அரபி மொழி வகுப்புகளோ, இஸ்லாமிய நீதி போதனை வகுப்புகளோ அங்கு நடப்பதில்லை. நடக்கும் ஒருசில இடங்களிலும் வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகின்றன; மாணவர்கள் வருவதில்லை.

பாடத்திட்டத்திலேயே இஸ்லாமியப் பாடங்கள் இடம்பெற்றிருக்கும் முஸ்லிம் பள்ளிக் கூடங்கள் சில உள்ளன. எல்.கே.ஜி.யில் தொடங்கி மேல்வகுப்புவரை குர்ஆன் பாடங்களும் மார்க்க விளக்கங்களும் அங்கு வழங்கப்படுகின்றன. ஆனால், இந்தப் பள்ளிகளைக் கைவிட்டு எண்ணிவிடலாம். அவற்றிலும், பள்ளிப் பாடங்களின் தரம் குறையாவண்ணம், தீனிய்யாத்தையும் கற்றுக் கொடுக்கும் பள்ளிகளின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு.

இதுதான் இன்றைய எதார்த்தம். மறைக்க வேண்டியதில்லை. இந்தச் சூழ்நிலையில் கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களும் மாணவிகளும் "காதல்' வலையில் சிக்கிக்கொண்டு சீரழிவது நாளுக்கு நாள் பெருகி வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. சுருங்கச்சொன்னால், மார்க்கமே இல்லாத மற்ற மாணவர்களின் நிலைதான் நம் பிள்ளைகளின் நிலையும்.

என்ன செய்யப்போகிறோம்...?

சமுதாய இளவல்களை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? நம் வீட்டுப் பெண்கள் மாற்றானுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் அவலம் தொடரலாமா? நம் இளைஞர்கள் மாற்றாளுடன் இல்லறம் நடத்தி, நம் வாரிசுகள் அவளது மடியில், அரவணைப்பில், இணைவைப்பில் வாழ்ந்துவரும் கொடுமை நீடிக்கலாமா? சமூக ஆர்வலர்களும் சீர் திருத்தவாதிகளும் சீரியஸாகச் சிந்திக்க வேண்டிய விவகாரமாகும் இது.

இதைத் தடுத்து நிறுத்த வழிகாணத் தவறினோம் என்றால், ஒரு தலைமுறையே மார்க்க மில்லாத தலைமுறையாக, வேற்று மதத் தலைமுறையாக மாறிவிடும் அபாயம் உண்டு. இதன் பாவம் இன்றைய தலைமுறையையே சாரும். நம்மை அல்லாஹ் சும்மா விடமாட்டான்.

அனைவரும் யோசியுங்கள். நல்ல முடிவு காணுங்கள். சுனாமி எச்சரிக்கை செய்தாகி விட்டது. தற்காப்பு நடவடிக்கை மேற்கொள்வது ஒவ்வொரு வரின் கடமை ஆகும்.

நான் ஒன்று சொல்வேன். பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். இதுதான் முதல் தரமான முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.

பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகத் தந்தை கடுமையாக உழைக்கிறார். உறக்கத்தைத் தியாகம் செய்கிறார். உணவைக்கூட உதறித் தள்ளுகிறார். மகனுக்கு, அல்லது மகளுக்கு வேண்டிய எல்லா வசதி களையும் செய்து கொடுக்கிறார். படிக்க வைக்கிறார்; பட்டமும் பணியும் வாங்கிக் கொடுக்கிறார். ஆனால், அவனது எண்ணவோட்டத்தைக் கணிக்கத் தவறிவிடுகிறார்.

தாயும் நாவுக்கு ருசியாகச் சமைத்துப் போடுகிறாள். வகை வகையான ஆடை அணிகலன்களை அணிவித்து அழகு பார்க்கிறாள். பிள்ளையின் மனம் கோணாமல் நடந்துகொள்கிறாள். ஆனால், பிள்ளைகளின் அசைவுகளைக் கண்டு விழித்துக்கொள்ள தவறிவிடுகிறாள். பேணி வளர்த்தல் என்பது உணவு உடையில் மட்டும் அல்ல. பண் பாடு, நாகரிகம், கலாசாரம், மறுமை வாழ்க்கை அனைத்தையும் கண்காணித்துச் சீரமைப்பதும் வளர்ப்புதான்.

நம் வீட்டுப் பிள்ளைகள் யார் யாருடன் பழகுகிறார்கள்? யாருடன் அதிகமாகத் தொலை பேசியில் பேசுகிறார்கள்? ஏன் குழப்பமாக இருக்கிறார்கள்? அவர்களுக்கு என்ன பிரச்சினை? முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதன் பின்னணி என்ன? தடுமாற்றம் தெரிகிறதே! கலகலப்பு இல்லையே! எதிலும் ஒட்டுதல் காணவில்லையே? காரணம் என்ன?

இப்படியெல்லாம் யோசிக்க வேண்டும். பிள்ளைகளுடன் மனம் விட்டுப் பேச வேண்டும். நீங்கள் காட்டும் பாசத்தால் அவர்கள் மனதில் உள்ளதை மறைக்காமல் உங்களிடம் கொட்ட வேண்டும். அதைக் கேட்டு அவர்களைப் பெற்றோர்கள் நல்வழிப்படுத்த வேண்டும்.

அடுத்து எப்பாடு பட்டேனும், சிறு வயதிலேயே அடிப்படை மார்க்கக் கல்வியை நம் குழந்தை களுக்குக் கொடுத்துவிட வேண்டும். அவரவர் சூழ்நிலைக்கும் வசதி வாய்ப்புக்கும் ஏற்றவாறு இதற்கு நேரம் ஒதுக்கியாக வேண்டும். மார்க்க அறிவும் இறையச்சமும்தான் பிள்ளைகளைத் தீமைகளிலிருந்து காக்கும் கேடயமாகும்.

வேலைக்குச் செல்லும் பெண்களே!

படித்து முடித்தவுடன் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. முஸ்லிம் பெண்களும் கணிசமான எண்ணிக்கையில் வேலைக்குச் செல்கிறார்கள். இவர்கள் திருமணத்திற்குமுன், பணியாற்றும் இடத்திலேயே ஆண் துணையைத் தேடிக்கொண்டுவிடுகிறார்கள். அவன் முஸ்லிமா இல்லையா, நல்லவனா ஏமாற்றுக்காரனா என்பதையெல்லாம் பரிசோதித்துப் பார்க்காமல், இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, ஒரு பெண்ணின் பொருளாதாரத் தேவைகளைத் தந்தையோ கணவனோதான் நிறைவேற்ற வேண்டும். பிறந்த வீட்டில் தந்தையும் உடன்பிறப்புகளும் அதற்குப் பொறுப்பு. புகுந்த வீட்டில் கணவன் பொறுப்பு. தன் தேவைகளைத் தானே நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு ஒரு பெண்ணை நமது மார்க்கம் ஒருபோதும் தவிக்க விடவில்லை.

முஸ்லிம் பெண் தன்னையும் தன் குழந்தை களையும் தானே கவனித்தாக வேண்டும் என்ற நிலை மிகவும் அபூர்வமாக எப்போதாவதுதான் ஏற்படும். பெற்றோர், உடன்பிறப்புகள், கணவன், உறவினர், அரசாங்கம் என யாருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் இல்லாமல் ஒரு பெண் திண்டாடுகின்ற நிலையில்தான், அவள் வேலை செய்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் நேரும்.

தகப்பன் அல்லது கணவனின் கையாலாகாத் தன்மை, ஆடம்பரம் மற்றும் சொகுசு வாழ்க்கை, சுய தம்பட்டம், அடங்காத் தன்மை போன்ற காரணங்களுக்காக இளம்பெண்கள் வேலைக்குச் செல்வதும், அதை முன்னிட்டு குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்ற வழிவகுப்பதும் தேவைதானா? யோசியுங்கள்.

ஆக, கற்பா கல்வியா என்று வந்தால் கற்பையே தேர்ந்தெடுங்கள். இது ஆண்களுக்கும்தான்.

சமூக மாற்றத்தில் பள்ளிவாசலின் பங்கு


பள்ளிவாசல் என்பது ஓரிறைவனான அல்லாஹ்வைத் தொழுது வழிபடுவதற்கான இறையில்லம் ஆகும். அரபியில் மஸ்ஜித்’ என்பர். இதற்கு சிரவணக்கம்’ (சஜ்தா) செய்யும் இடம் என்று பொருள்.

தமிழில் பள்ளி’ எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் அகராதியில் காணப்படுகின்றன. கடவுள்,வழிபாட்டுத்தலம்அறச்சாலைஆசிரமம்பள்ளிக்கூடம் ஆகிய பொருள்கள் அவற்றில் அடங்கும்.

பள்ளி’ என்பதுடன் வாசல்’ என்பதையும் சேர்த்து, இறைவனை அடைவதற்கான நுழைவாயில் என்ற கருத்தில் மஸ்ஜித்’ என்பதற்கு பள்ளிவாசல்’ என்கிறோம். தொழுகைகுர்ஆன் ஓதுதல்திக்ர் செய்தல்,வேண்டுதல்நீதிபோதனை ஆகிய நல்லறங்கள் நடைபெறும் அறச்சாலையாகவும் பள்ளிவாசல் திகழ்கிறது.

சிறுவர்கள் திருமறை ஓதவும் வழிபாடுகள் செய்யவும் கற்பிக்கின்ற சமய வகுப்பு நடப்பதால் பள்ளிவாசல் ஒரு பள்ளிக்கூடமாகவும் விளங்குகிறது. ஆன்மிக நெறியில் ஈடுபட்டோர் அதிகமாகத் தங்கும் இடமாக இருப்பதால் ஆசிரமம்’ என்ற பொருள்கூடப் பொருந்தும் என்பர் சிலர்.

ஆனால்நம்மில் பலர் எண்ணியிருப்பதைப் போன்றுபள்ளிவாசல் என்பது ஐவேளைத் தொழுகைகள் நடக்கும் இடமாக மட்டும் முற்காலத்தில் இருக்கவில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில்பள்ளிவாசல்தான் முஸ்லிம் சமுதாயத்தின் முக்கியக் கேந்திரமாக விளங்கியது;மாற்றத்திற்கு வித்திட்ட சமூக மையமாகத் திகழ்ந்தது.

வழிபாடு முதல் வீரவிளையாட்டுவரை
இறையுணர்வுஇறைவழிபாடுகல்வி கேள்விவழக்கு விசாரணைதூதுக்குழுவினர் சந்திப்பு,வீரவிளையாட்டு எனச் சமூகத்தின் பல்துறை நடவடிக்கைகளும் நபி (ஸல்) அவர்களது காலத்தில் பள்ளிவாசலில் - மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவியில்தான் மேற்கொள்ளப்பட்டன.

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே -அதாவது அல்லாஹ்வை வழிபடுவதற்கே- உரியவை. எனவேஅல்லாஹ்வுடன் வேறுயாரையும் அழைக்காதீர்கள் (72:18) என்று திருக்குர்ஆன் கட்டளையிடுகின்றது.
இங்கு பள்ளிவாசல்கள் ஓரிறை உணர்வை ஊட்டக்கூடியவை என்பது உறுதிசெய்யப்படுகிறது. எனவே,பள்ளிவாசல்களில் ஓரிறை உணர்வு மட்டுமே மேலோங்கியிருக்க வேண்டும். அதற்குப் பங்கம் நேரக்கூடிய வகையில் எந்தப் பிரசாரமோ நிகழ்வுகளோ நடக்க இடமளித்துவிடக் கூடாது.

இறைவழிபாடு
பள்ளிவாசல்களில் தொழுகைதிக்ர்குர்ஆன் ஓதுதல்துஆ போன்ற வழிபாடுகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். பள்ளிவாசல்களில் வழிபாடுகள் நடப்பதற்குத் தடை ஏற்படுத்துவதோ பூட்டிவைத்து வழிபாடுகளைத் தடுப்பதோ கூடாது. பாதுகாப்புக் கருதி குறிப்பிட்ட நேரங்களில் பூட்டுவது வேறு விஷயம்.

தொழுமிடம் ஒவ்வொன்றிலும் உங்கள் முகங்களை (அல்லாஹ்வை நோக்கியே) திருப்புங்கள். அவனை மட்டுமே உளத்தூய்மையோடு வழிபட்டு அவனிடமே பிரார்த்தியுங்கள் (7:29) என்கிறது திருமறை.
மதீனா பள்ளிவாசலில் தொழுமிடத்தில் சிறுநீர் கழித்துவிட்ட ஒரு நண்பரிடம் பின்வருமாறு நபி (ஸல்) அவர்கள் சாந்தமாக எடுத்துரைத்தார்கள்:

இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல்அசுத்தம் செய்தல் ஆகியவற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவுகூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆன் ஓதுவதற்கும் உரியவையாகும். (ஸஹீஹ் முஸ்லிம் - 480)

பள்ளிவாசலின் தூய்மை எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்ற அதே வேளையில்பள்ளிவாசலால் நோக்கம் என்ன என்பதையும் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ்வை நினைவுகூர்வதால் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன(13:28) எனும் இறைவசனம் திக்ரின் அவசியத்தையும்,
என்னை அழையுங்கள்உங்களுக்கு நான் பதிலளிக்கிறேன் (40:60) எனும் வசனம் துஆவின் முக்கியத்துவத்தையும் எடுத்தியம்புகின்றன.
பள்ளிவாசல்களில் நிறைவேற்றப்படும் கூட்டுத் தொழுகையின் (ஜமாஅத்) சிறப்பு குறித்தும் மகிமை குறித்தும் பல நபிமொழிகள் வந்துள்ளன. ஒரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் தொழுவதைவிடவும் தமது கடைத்தெருவில் தொழுவதைவிடவும் ஜமாஅத்துடன் தொழுவது மதிப்பில் இருபத்து ஐந்து(மடங்கு தொழுகைகள்) கூடுதலாகும்.

ஏனெனில்உங்களில் ஒருவர் அங்கத்தூய்மை (உளூ) செய்துஅதைச் செம்மையாகச் செய்து,தொழுகின்ற ஒரே நோக்கத்துடன் பள்ளிவாசலுக்கு வந்தால்அவர் பள்ளிவாசலுக்குள் நுழையும்வரை எடுத்துவைக்கும் ஒவ்வோர் எட்டுக்கும் ஒரு தகுதியை அவருக்கு அல்லாஹ் உயர்த்துகிறான்ஒரு பாவத்தை அவரைவிட்டு நீக்குகிறான்.

அவர் பள்ளிவாசலில் நுழைந்துவிட்டால்அவர் (கூட்டுத்) தொழுகையை எதிர்பார்த்து தம்மைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும்வரை அவர் தொழுதுகொண்டிருப்பவராகவே கருதப்படுகிறார். அவர் தொழும் இடத்தில் இருக்கும்வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ‘‘இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்குக் கருணை புரிவாயாக!’’ என்று பிரார்த்திக்கிறார்கள்அவருக்குச் சிறுதுடக்கு ஏற்படாமல் இருக்கும்வரை இது நீடிக்கும். (ஸஹீஹுல் புகாரீ - 477)

கல்விகேள்வி
கல்விகேள்வியின் மையமாகவும் பள்ளிவாசல் விளங்கியது. மதீனா பள்ளிவாசலில், தாம் கற்ற கல்வியை நபித்தோழர்கள்குறிப்பாகத் திண்ணைத் தோழர்கள் மற்றவர்களுக்குக் கற்பித்ததன் பலனாகவே இஸ்லாம் பரவியது.

நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகளில் ஓதுநர்கள்’ (அல்குர்ரா) என அழைக்கப்பட்டுவந்த திண்ணைத் தோழர்கள் எழுபதுபேர் இருந்துவந்தனர். இவர்கள் இளைஞர்கள். இவர்கள் மாலைவரை பள்ளிவாசலில் இருப்பார்கள். (நபி (ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆன் வசனங்கள்நபிமொழிகளைக் கேட்டறிவார்கள்.)

மாலையில் மதீனாவின் ஓர் ஒதுக்குப்புறத்தில் ஒன்றுகூடிதாங்கள் கற்றதை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வார்கள்தொழுகையிலும் ஈடுபடுவார்கள்.

இதனால் அவர்களின் குடும்பத்தார்இவர்கள் பள்ளிவாசலில்தான் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வார்கள்பள்ளிவாசலில் இருப்போர்இவர்கள் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள் என நினைத்துக்கொள்வார்கள். அதிகாலையில்இவர்கள் சுவைநீரைத் தேடிக் கொண்டுவருவார்கள்விறகு வெட்டிக் கொண்டுவந்து நபி (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவரில் சாத்திவைப்பார்கள். (முஸ்னது அஹ்மத்)

ஒரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்:

யார் நம்முடைய இந்தப் பள்ளிவாசலில் நல்ல விஷயம் ஒன்றைக் கற்றுக்கொள்ளஅல்லது கற்றுக்கொடுக்க வருகிறாரோ அவர்இறைவழியில் அறப்போர் புரிந்தவர் போன்றவர் ஆவார். இதன்றி வேறு நோக்கத்திற்காக யார் பள்ளிவாசலுக்குள் நுழைகிறாரோ அவர்தமக்கு உரிமையில்லாத ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பவர் போன்றவர் ஆவார். (முஸ்னது அஹ்மத்)

கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் ஏற்ற இடம் இறையில்லம் என்பது தெளிவாகிறதுஅத்துடன் அதற்கு மாபெரும் நன்மையும் கிடைக்கிறது என்கிறது இந்த ஹதீஸ்.

வழக்கு விசாரணை
நபி (ஸல்) அவர்களது காலத்தில் வழக்கு விசாரணைகளும் தீர்ப்பு வழங்கப்படுவதும் கைதிகள் கட்டிவைக்கப்பட்டதும் பள்ளிவாசலில்தான் நடந்துள்ளன.

நபித்தோழர் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
ஒருநாள் நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்தபோது, ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் வந்து, ‘‘நான் விபசாரம் செய்துவிட்டேன் என்று சொன்னார். இவ்வாறு நான்கு தடவை அந்த மனிதர் வாக்குமூலம் அளித்தார்.

அவர் புத்திசுவாதீனத்துடன்தான் பேசுகிறார் என்பதையும் திருமணமானவர் என்பதையும் உறுதி செய்துகொண்ட நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தண்டனை நிறைவேற்றுமாறு ஆணையிட்டார்கள்.

அவ்வாறே தொழுகை திடலுக்கு (முஸல்லா) அழைத்துச்செல்லப்பட்ட அந்த மனிதருக்கு அங்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. (ஸஹீஹுல் புகாரீ - 5270)

நபித்தோழர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் ஸுமாமா பின் உஸால். அவரைப் பள்ளிவாசலின் தூணில் கட்டிப்போட்டார்கள். அவரிடம் வந்த நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) என்ன கருதுகிறீர் ஸுமாமாவே!’’ என்று கேட்டார்கள்.

அவர் சொன்னார்: நல்லதே கருதுகிறேன்முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால்பழிக்குப் பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள்; (மன்னித்து) உபகாரம் செய்தால்நன்றி செய்யக்கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்நீங்கள் செல்வத்தை விரும்பினால்விரும்புவதைக் கேளுங்கள்.

அவர் அப்படியே விடப்பட்டார். அடுத்தடுத்த நாட்களிலும் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறே வினவ,ஸுமாமாவும் அதே பதிலைச் சொன்னார். மூன்றாவது நாள்ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள் என நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.

உடனே அவர் பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த தோட்டத்தில் குளித்துவிட்டு வந்து கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார். (ஸஹீஹுல் புகாரீ - 4372)

தூதுக்குழுவீரவிளையாட்டு
நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வெளிநாடுகளிலிருந்து தூதுக்குழுவினர் வருவதுண்டு. பெரும்பாலும் அவர்கள் மதீனா பள்ளிவாசலிலேயே தங்கவைக்கப்பட்டனர்.

இவ்வாறு ஒருமுறை யமன் நாட்டின் நஜ்ரான் பகுதி கிறித்தவர்கள் குழுவொன்று மதீனா வந்தது. அவர்களில் பேராயர்கள்மதத் தலைவர்கள் எனப் பிரமுகர்களும் இருந்தனர். பலநாட்கள் தங்கியிருந்து நபி ஈசா (அலை) அவர்கள் (இயேசு) குறித்து நபி (ஸல்) அவர்களின் கருத்து என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

நஜ்ரான் கிறித்தவர்கள் மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலில் தமது வழிபாட்டை நிறைவேற்ற முனைந்தார்கள். அப்போது முஸ்லிம்கள் தடுக்கப்போனார்கள். தடுக்க வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களைத் தடுத்துவிட்டார்கள். கிறித்தவர்கள் கிழக்கு நோக்கி தொழுதார்கள். (தஃப்சீர் இப்னு கஸீர்)

இவ்வாறே பள்ளிவாசலில் வீரவிளையாட்டுகள் நடைபெற்றதற்கும் சான்று உள்ளது. அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(ஒரு பெருநாளன்று) பள்ளிவாசலில் அபிசீனியர் (ஈட்டியெறிந்து) விளையாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது நான், (பள்ளிவாசலை ஒட்டியிருந்த) என் அறையிலிருந்து அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல்துண்டால் மறைத்துக்கொண்டிருந்தார்கள்.

நானாகச் சடைவடையும்வரை இவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தேன். விளையாட்டுமீது ஆவல் கொண்ட இளம்வயதுப் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். (ஸஹீஹுல் புகாரீ - 5236)

இதுவெல்லாம்சில எடுத்துக்காட்டுகள்தான்! முஸ்லிம்களின் மகிழ்ச்சி-கவலைஉயர்வு-தாழ்வுஅறிவு-அறியாமை எல்லாம் வெளிப்பட்டது பள்ளிவாசலில்தான். தனிமனித ஒழுக்கம்சமூகக் கட்டுப்பாடு,குடும்ப அமைதிநாட்டுப் பொருளாதாரம்பாதுகாப்புவெளியுறவு என எல்லாத் துறைகளும் அலசப்பட்டது பள்ளிவாசலில்தான்.

உயிரோட்டம் திரும்ப வேண்டும்
காலப்போக்கில் பள்ளிவாசலின் முக்கியத்துவம் குறைந்துபோய்சமூக மாற்றத்தில் அதற்கான பங்கு பெரிய அளவில் சுருங்கிவிட்டது. இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமன்றி முஸ்லிம் நாடுகளிலும் இதுதான் நிலை. இந்தியாவில்கூடபள்ளிவாசல்கள் சுதந்திரமாக இயங்க முடிகிறது. முஸ்லிம் நாடுகளில் அரசாங்கத்தின் இரும்புப் பிடியில்தான் பள்ளிவாசல்கள் சிக்கித் தவிக்கின்றன.

நாம் இங்குள்ள சூழ்நிலையில் என்ன செய்யலாம்பள்ளிவாசலின் உள்ளும் புறமும் கட்டமைப்பு சீராக்கப்பட வேண்டும்தூய்மை பேணப்பட வேண்டும். வக்ஃப் சொத்துகள் நேர்மையோடு பாதுகாக்கப்பட வேண்டும்பராமரிக்கப்பட வேண்டும்.

அல்லாஹ்வை மட்டுமே அஞ்சுகின்ற நல்லவர்கள் பள்ளிவாசல்களின் நிர்வாகிகளாக இருக்க வேண்டும். ஒரு மஹல்லாவின் நன்மை-தீமைக்கு அந்த நிர்வாகமே பொறுப்பு என்பதால்ஆக்கபூர்வமான பணிகள் நடைபெற ஆவன செய்ய வேண்டும்.

பள்ளிவாசல் இமாம் தரமான அறிஞராகசமுதாயத்தின் ஏற்றத் தாழ்வுகளையும் நாட்டு நடப்புகளையும் நன்கறிந்தவராக இருக்க வேண்டும்சமுதாயப் பிரச்சினைகளுக்கு மார்க்க அடிப்படையில் தீர்வுகாணும் ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.

ஆரம்ப குர்ஆன் மதரசா எனப்படும மக்தப்’ மதரசா சீரும் சிறப்போடும் நடக்க எல்லா ஏற்பாடுகளும் செய்ய வேண்டும். மார்க்கப் படிப்புடன் சேர்த்து உலகப் படிப்புகளைக் கற்பிக்கும் மழலையர் மற்றும் துவக்கப் பள்ளிகளை ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொடங்க வேண்டும். அடிக்கடி மகளிர் பயான் நடக்க வேண்டும்.

மஹல்லாவில் வசிக்கும் ஏழை எளியோரின் வாழ்க்கை முன்னேற்றத்தில் பள்ளிவாசல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். மஹல்லாவில் நடக்கும் சமூகத் தீமைகளைக் களைய பாடுபட வேண்டும். குறிப்பாக வரதட்சிணைவட்டிமணமுறிவுஇளைஞர்களின் ஒழுக்கச் சீர்கேடு ஆகியவற்றை இயன்றவரை தடுக்க முயல வேண்டும்.

சொத்து மற்றும் குடும்பப் பிரச்சினைகளை மார்க்க அடிப்படையில் தீர்த்துவைக்க ஷரீஆ சமரச மையங்களை உருவாக்க வேண்டும். மாணவ-மாணவியரின் கல்விக்கு முன்னுரிமை அளித்து உதவிடவும் வட்டியில்லா கடன் அளிக்கவும் பைத்துல் மால் அமைப்பை உருவாக்க வேண்டும்.

இவ்வாறெல்லாம் செய்தால் சமூக மாற்றத்தில் பள்ளிவாசலுக்கிருந்த பங்கு புத்துயிர் பெற்றுமீண்டும் அந்தப் பொற்காலம் பிறக்கும்.

இதற்கு இப்போதே முடிவுகட்டியாக வேண்டும்


காதலில் கள்ளக் காதல் என்ன? நல்ல காதல் என்ன? எல்லாக் கண்றாவியும் ஒன்றுதான். காதல் மயக்கத்தில் விழுந்த ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும், அந்தப் போதை தெளியும்வரை நிஜத்தை நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.

தன்னை மறந்து, தன்னைப் பெற்றவர்களை மறந்து, உற்றாரையும் உறவினரையும் மறந்து, சமுதாயத்தை மறந்து, சமயத்தை மறந்து... இப்படி எதார்த்தங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, அந்தச்... சுகம் ஒன்றே இலட்சியம் என்று கிறுக்குப் பிடித்து அலையும் காதல் மோகம் தேவைதானா?

அல்லது கையிலிருக்கும் காசையும் கழுத்திலிருக்கும் நகையையும் பறித்துக்கொண்டு, கற்பையும் சூறையாடிவிட்டு அந்தக் காமுகன் ஓடிப்போகும்வரை சுற்றுச்சூழலையே மறந்துகிடந்தவள் நடுத்தெருவில் நிர்க்கதியாகக் கைவிடப்படுகிறாளே அந்தப் பேதைக்கு இக்கதி தேவைதானா?

அல்லது வங்கி இருப்பெல்லாம் இல்லாமலாகி, கையிலிருந்த கடிகாரமும் அலைபேசியும்கூட மார்வாடி கடைக்குப் போனபின்பும் அந்தக் காமுகியின் கோரப்பசி அடங்காமல், உடுத்திய வேட்டி மட்டுமே அந்த முட்டாள் பையனிடம் எஞ்சியிருக்கும் நிலையில், இனி உன்னை நம்பிப் பயனில்லை என்று கை கழுவிவிட்டு வேறொரு ஏமாளியைத் தேடி அந்த விலைமாது ஓடுகிறாளே, அவனுக்கு இந்த அவலம் தேவைதானா?

அல்லது இருவரும் இணைந்து சில ஆண்டுகள் ஆனந்தமாக வாழ்ந்து, குழந்தைகளையும் பெற்றுக்கொண்டுவிட்டு, பண நெருக்கடியோ மன நெருக்கடியோ ஏற்படும்போது, உன்னை நம்பி நான் வந்தேனே! என்று ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நொந்துகொண்டு, தற்கொலையில் அல்லது மணமுறிவில் போய் நிற்குமே! இந்தக் காதல் இருவருக்கும் தேவைதானா?

ஆய்வின் முடிவு
இதை நாம் வாதத்திற்காகவோ வருத்தத்திற்காகவோ குறிப்பிடவில்லை. ஆய்வின் முடிவு இதுதான்:

ஹெலன் ஃபிஷர் என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் ஒருவர், காதலர்களின் மூளையை ஸ்கேன் செய்து பார்த்தாராம்! 1. காம்ம் 2. உணர்வுபூர்வமான காதல் 3. நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் ஆகிய மூன்று வகையான உணர்வுகள் இருப்பதைக் கண்டறிந்தார்.

இவற்றில் காமம்தான் முதலிடத்தைப் பெற்றது. இரண்டாவது இடம் உணர்வுபூர்வமான காதலுக்கு. மிகமிகக் குறைவாகவே நீண்டகாலப் பிணைப்பை முன்னிருத்தும் காதல் மூளையில் தென்பட்டதாம்!
இப்போது சொல்லுங்கள்! காதல் என்ற பெயரில் காமம்தானே விளையாடுகிறது! இதில் போலி எது? அசல் எது என்பதை அவனோ அவளோ எப்படிப் பகுத்தறிய முடியும்?

அண்ணன் – தங்கையாகத்தான் பழகுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, இளம்பெண்ணின் தாயார் தன் கரத்தால் அன்போடு சமைத்துப்போட்டதையெல்லாம் பல நாட்கள் ருசித்துவந்த ஐந்து மாணவர்கள், ஒருநாள் அவளுக்குக் குளிர்பானத்தில் மதுவைக் கலந்துகொடுத்து, இரவு முழுக்க அந்த ஐந்து நாய்களும் கடித்துக் குதறிய சம்பவம் சென்னை மட்டுமன்றி, தமிழகத்தையே உலுக்கி எடுத்ததே!அவர்களில் சிவானந்தம் (19) என்பவன் பல ஆண்டுகளாக அவளைக் காதலித்தவனாம்!


இது காதலா? காம வெறியா? அதையும் தாண்டி, மற்றவனுக்குக் கூட்டிக்கொடுக்கும் ஈனத்தனமில்லையா இது?

அது மட்டுல்ல; மணவிலக்கு (டைவர்ஸ்) கோருவோரில் கணிசமான எண்ணிக்கையினர் காதல் திருமணம் செய்துகொண்டவர்களே என்பதும் ஆய்வின் முடிவாகும்.

எதையோ எதிர்பார்த்து கண்ணும் கண்ணும் உரையாடுகின்றன. எதிர்பார்ப்பு பூர்த்தியாகிவிட்ட பிறகு, அல்லது ஏமாற்றம் ஏற்பட்ட பிறகு அதே கண்கள் உரையாடாவிட்டாலும், சாதாரணமாகப் பார்த்துக்கொள்வதுகூட இல்லை. மறுக்க முடியுமா?

கலாசாரச் சீரழிவு
கற்பும் காசும் பறிபோவதோடு காதல் போதை தெளிகிறதா என்றால், மார்க்கம் தாண்டிப்போய் ஓர் இறைமறுப்பாளனின் வாரிசை சமுதாயப் பெண்ணொருத்தி சுமக்கின்ற தாங்க முடியாத கொடுமையும் அல்லவா அரங்கேறிக்கொண்டிருக்கிறது! அல்லது ஒரு முஸ்லிமின் வாரிசு இறைமறுப்பாளியின் வயிற்றில் உருவாகி, அவள் மடியில் தவழ்கிறதே! என்ன சொல்ல?

பள்ளிவாசலுக்கு வந்திருப்பானோ வரவில்லையோ! ஓரிறைக் கோட்பாட்டை இதுவரை கைவிட்டிருக்கமாட்டான் அல்லவா? இன்று அவன் சர்ச்சில் அல்லது கோயிலில் காதலியுடன் வழிபாடு செய்கிறான். அல்லது நீ நீயாக இரு; நான் நானாக இருக்கிறேன் என்று சமத்துவம் பேசிக்கொண்டு, குழந்தைகளை நரகத்தில் தள்ளுகின்றான்.

திருக்குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
இணைகற்பிக்கும் பெண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள். இணைவைப்பவள் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமைப் பெண்ணே சிறந்தவள். 

(அவ்வாறே,) இணைகற்பிக்கும் ஆண்கள் (ஏக)இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பாளன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன். அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
இன்று முஸ்லிம் சமுதாயம் சந்தித்துவரும் இழிவு நிலைக்கு எவ்வளவு பொருத்தமான, அழுத்தமான திருவசனம் பார்த்தீர்களா? பெற்றோர்களேகையில் விளக்கைப் பிடித்துக்கொண்டே, நரகம் என்று தெளிவாகத் தெரிந்துகொண்டே உங்கள் கண்மணிகள் அதில்போய் விழுந்துகொண்டிருக்கிறார்களே!உங்களுக்கு எப்படி தூக்கம் வருகிறது? சோறு இறங்குகிறது? மானம், சூடு, சுரணை என்பதெல்லாம் உங்கள் சமுதாயத்திற்குக் கொஞ்சம்கூட இல்லையா என்று கேட்கும் மாற்றுமத நண்பர்களுக்கு என்ன பதில் சொல்வது?

எழுதிவிட்டேன் பலதடவை
முஸ்லிம் இளைஞர்களும் இளம்பெண்களும் தமிழ்நாட்டில் காதலின் பெயரால் அழிந்துகொண்டிருப்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் நானும் பலமுறை எழுதிவிட்டேன். கடந்த 2011 ஜூலை 13ல் வெளியான தமிழக அரசின் கெஜட்டில் உள்ளபடி மதம் மாறிய 106 பேரில் 9 பேர் முஸ்லிம்கள் என்ற உண்மையை வெளியுலகுக்குக் கொண்டுவந்து, சமுதாய ஏடுகள் அனைத்திற்கும் கட்டுரை அனுப்பினேன். பெரும்பாலான இதழ்களில் வெளிவந்தது.

நமது வலைத்தளத்திலும் வெளியிட்டோம். பல அன்பர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவும் செய்தார்கள். தமிழகத்தில் சென்னை, திருச்சி போன்ற இடங்களில் இக்கொடுமையைத் தடுத்துநிறுத்த ஜமாஅத் நிர்வாகிகளும் உலமாக்களும் கலந்துகொண்ட கலந்தாய்வுக் கூட்டங்களும் நடந்தன.

சென்னை மஸ்ஜித் மஃமூர் பள்ளிவாசலில் 17.01.2012 அன்று நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அதன் ஒலிப்பதிவு நமது முகநூல் பக்கத்தில் வெளியாகியும் உள்ளது. m(அதன் இணைப்புகளை க்ளிக் செய்து செவியுறலாம்) https://www.facebook.com/khanbaqavi?sk=wall http://f.cl.ly/items/1Z2A3m0K1Y432z3M3C0d/Khan%20Baqavi%20Speech%20@%20mamoor%2017.01.2012.mp3 இன்னும் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அக்கட்டுரைகளைத் தொகுத்து புத்தக வடிவில் சென்னை ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்டுள்ளது. சமுதாயத்தில் ஓர் அசைவு தென்படுகிறது. அல்ஹம்து லில்லாஹ்...

ஆனாலும், வேகம் போதாது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய ஒரு ஆபத்துக்கு, நத்தை வேகத்திலான முயற்சிகள் எப்படி ஈடு கொடுக்கும்? மதம்விட்டு மதம்மாறி காதல் செய்வதற்கும் திருமணம் செய்வதற்கும் முஸ்லிம் பெற்றோர்களே சம்மதம் தெரிவிக்கும் அடுத்த கட்டத்திற்கு சமுதாயம் போய்விட்டதாகத் தெரிகிறது.

அண்மையில் prசில திருமண அழைப்பிதழ்கள் பார்வைக்கு வந்தன. இரண்டிலும் மணமகன் முஸ்லிமல்லாதவன். மணமகள் முஸ்லிம் பெண். அவரவர் தத்தம் பெற்றோர் பெயர்களையும்அவ்வண்ணமே கோரும்’ இடத்தில் முஸ்லிம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயர்களையும் கூச்சமின்றி குறிப்பிட்டிருக்கிறார்கள். பெற்றோர், உற்றார் உறவினர் இசைவின்றி இது நடக்குமா? சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?மறுமை நாளின் அடையாளம்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பயனுள்ள) கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைப்படுவதும் மது (மலிவாக) அருந்தப்படுவதும் விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். (ஸஹீஹுல் புகாரீ – 80)
அண்மையில் ஒரு செய்தி படித்தேன்காஞ்சிபுரம், திருவள்ளூர், தூத்துக்குடி போன்ற நகரங்களில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருந்தாலும் அங்குள்ள மக்களின் வறுமை விகிதம் குறையவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையின் அளவு குறைவாக இருக்கிறது. இதற்குக் காரணம் விவசாயம். அங்கு விவசாயத் தொழில் பரவலாகவும் பாரம்பரியமாகவும் நடைபெறுவதால் பொதுமக்கள் பசி பட்டினியின்றி வாழ முடிகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,576 ஆக இருக்கிறது. தனிநபர் வருவாய் குறைவாக இருந்தாலும் அங்கு வறுமையின் விழுக்காடு 10.9 மட்டுமே. திருவாரூர் மாவட்டத்தில் தனிநபர் ஆண்டு வருவாய் ரூ. 2,341; ஆனால், வறுமை 16.6 விழுக்காடு மட்டுமே.

முஸ்லிம்களைப் பொறுத்தவரை பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் வேளாண்மை நிலங்களை விற்றுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஆண்கள் படையெடுத்துவிட்டனர். ஒரு சில முஸ்லிம்களிடம் மட்டுமே விவசாய நிலங்கள் உள்ளன. வெளிநாட்டு வாசல் ஒருநாள் அடைக்கப்பட்டால், நமது நிலை என்னவாகும் என்பதைச் சிந்திக்காமல், நிலங்களை விற்றுவிட்டு வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள்.

அயலகங்களில் ஆண்கள் பல மாதங்கள், சில வேளைகளில் பல ஆண்டுகள் தங்கிவிடும்போது உள்ளூரிலே பெண்கள் இயற்கையான உறவுகளுக்கு ஏங்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், கார் ஓட்டுநர், பால்காரன், கேபிள் டி.வி. ஆபரட்டர், பொருட்கள் விற்க வருபவன், வங்கி ஊழியன், உறவுக்காரன் எனப் பல வகையான ஆண்களுடன் பேசுவதற்கும் பழகுவதற்குமான சந்தர்ப்பங்கள் வாய்க்கின்றன.

“ஓர் ஆண் (அந்நியப்) பெண்ணுடன் தனிமையில் இருக்க வேண்டாம்! அங்கு மூன்றாவது ஆளாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். (அபூதாவூத்)
நபியவர்களின் எச்சரிக்கை பல ஊர்களில் உண்மையாகிவருகிறது. அங்கெல்லாம் ஷைத்தானின் கொடி பறக்கிறது. அக்கொடியின் நிழலில் கற்பு பறிபோகிறது.

கண்ணின் விபசாரம் பார்வை; நாவின் விபசாரம் பேச்சு; மனமோ ஆசைப்படுகிறது;இச்சிக்கிறது. உறுப்பு அதை மெய்ப்பிக்கிறது; அல்லது (விலகி) பொய்யாக்கிவிடுகிறது. என்பதும் நபிமொழிதான் (ஸஹீஹுல் புகாரீ – 6243). பார்வைக்கும் பேச்சுக்கும் ஏன் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது என்பது இப்போது தெரிகிறதா?
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, சொகுசு வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடும் பெண்கள், தம் வீட்டு ஆண்கள் அனுப்பிவைக்கும் பணம் போதவில்லை என்று சொல்லி, கொடும் பாவத்தை ஒரு தொழிலாகவே செய்யும் துணிச்சல் பெற்றுவிட்டார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

தாயே மகளை அனுப்பிவைப்பதையும் மாமியாரே மருமகளை வண்டியில் ஏற்றிவிடுவதையும் உங்களால் நம்ப முடிகிறதா? என்னால் நம்ப முடியவில்லை. பிறகு தாய்மைக்குத்தான் என்ன அர்த்தம்? குடும்பத் தலைவி என்பதற்குத்தான் என்ன பொருள்?

தீக்குண்டத்தில் நிர்வாணமாக
நபி (ஸல்) அவர்கள், தாம் நரகத்தில் கண்ட காட்சிகளை விவரித்தார்கள்; அப்போது பின்வருமாறு கூறினார்கள்:

அடுப்பு போன்ற ஒரு பொந்து. அதன் மேற்பாகம் குறுகலாகவும் அடிப்பாகம் விசாலமானதாகவும் இருந்த்து. அதற்குக் கீழ் தீ எரிந்துகொண்டிருந்தது. தீ அதிகமாகும்போது அந்தப் பொந்தின் அடியில் உள்ளவர்கள் வெளியேற முயன்றார்கள். (ஆனால், மேற்பகுதி குறுகலாகயிருந்ததால் வெளியேற முடியவில்லை.)

தீ அணைந்ததும் பழைய (கீழ்ப்) பகுதிக்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அதில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாகக் கிடந்தார்கள். நான், இவர்கள் யார்?” என்று கேட்டேன். வானவர்கள், இவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபட்டவர்கள் என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ – 1386)
அழகான பெண்கள் வசிக்கும் பகுதியில் வடநாட்டுக் கும்பல் கடைகளைத் திறப்பார்கள். அடகு கடை, நகைக் கடை, துணிக்கடை போன்ற வணிகத் தலங்களைத் திறந்து, மறைமுகமாக விபசாரத் தொழிலையும் மேற்கொள்கிறார்கள். நகை வாங்க வரும் பெண்களுக்கு வலியச்சென்று உதவுவதுபோல் உதவி செய்து வலையில் சிக்கவைத்து, இனி திரும்ப நினைத்தாலும் திரும்ப முடியாத நெருக்கடியில் தள்ளிவிடுவார்கள்.

புதுவகை நகைகள்மீதும் துணிகள்மீதும் பெண்களுக்கு இருக்கிற மோகத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள். மீளமுடியாத படுகுழியில் தள்ளிவிடுகிறார்கள். வெளியே சொன்னால் குடும்பத்தையே அழித்துவிடுவோம் என்ற மிரட்டல் வேறு.

இவர்களுக்கு வகைவகையான புரோக்கர்கள்; சட்ட சிக்கலில் இருந்து தப்பிக்க காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என எல்லாரும் துணை; கூட்டணி. இந்தப் பாவத்திற்குத் துணைபோகின்றவர்களிலும் முன்னின்று ஏற்பாடு செய்கின்றவர்களிலும் கலிமா சொன்ன முக்கியப் புள்ளிகளும் இருப்பதுதான் வன்கொடுமை.

இது ஒரு பெரிய நெட்வொர்க் என்று சொல்லப்படுகிறது. திருமண வீடியோ, பள்ளி நிகழ்ச்சிகள் வீடியோதான் பெண்களுக்கு வலைவீச இவர்களுக்குச் சரியான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றன. இவ்வாறு சிக்கும் அழகான இளம்பெண்களை மாநிலம் தாண்டி விபசாரத்திற்கு அனுப்பிவைப்பதுடன், பாலியல் படங்கள் எடுக்கவும் போதைப் பொருள் கடத்தவும் இக்கயவர்கள் பயன்படுத்துகின்றனர்.

ஆக, பெண்கள் மார்க்கத்திற்கு வெளியே; ஆண்கள் விரக்தியின் விளிம்பில். இதற்கு ஒரு முடிவு கட்டியே ஆக வேண்டும். எப்படி என்பதுதான் தெரியவில்லை. யோசித்து யோசித்து தூக்கம் கெட்டதுதான் மிச்சம்.

இது பரவிக்கொண்டுவரும் பேராபத்து. அங்குதான்; இங்கு இல்லை என்றெல்லாம் பிரித்துப் பார்க்க முடியாது. ஒவ்வொருவரும் கவலையோடும் அச்சத்தோடும் இது குறித்து சிந்திக்க வேண்டும். தனிமையில் அழுது புலம்புவதில் புண்ணியமில்லை. எப்பாடு பட்டேனும் இந்தச் சமூகக் கொடுமையை, பெண்ணினத் தீமையை தடுத்து நிறுத்தியாக வேண்டும்!

பிப்ரவரி 14ஆம் தேதி ‘காதலர் தினம்’ என்றொரு கொடுமை அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இதற்கு ஏறத்தாழ எல்லா நாடுகளும் சட்ட அனுமதி அளிக்கின்றன. இத்தகைய நரகச் சூழலில்தான் பண்பாடு மிக்க முஸ்லிம்களும் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. நாம்தான் நம் வீட்டுப் பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாக இருந்து பாதுகாத்திட வேண்டும்.


நம் வீட்டு ஆடுகள் வேலியைத் தாண்டும் அளவுக்கு வந்துவிட்ட இன்றையச் சூழலில் வேலியே இல்லாவிட்டால் என்னவாகும் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

நட்புடன் வாழ முத்தான மூன்று குணங்கள்


o நட்பு என்பது விட்டுக் கொடுப்பது.
o நட்பு என்பது தியாகம் செய்வது.
o நட்பு என்பது இனம் புரியாத அன்பு.
மனிதர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவற்றை அவன் நாடியவாறு புரட்டிப் போடுகிறான். அவன் உள்ளங்களை ஆளும் அரசனாக இருக்கிறான். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய இறைவனை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.]
"மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்." (அல்குர்ஆன்: 8 : 63)
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"உறவு (ரஹீம்) என்பதற்கு அளவிலா அருளாலன்(ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். ஆகவே, இறைவன் (உறவை நோக்கி) "உன்னுடன் ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்" என்று கூறினான். (நூல்: புகாரி)

இரண்டு உள்ளங்களை ஒன்று சேர்ப்பது அல்லாஹ்வின் கையில் உள்ளது. உலகையே விலை பேசினாலும் இரண்டு உள்ளங்களை ஒன்று சேர்க்க முடியாது. அல்லாஹ் ஒன்று சேர்த்த இரண்டு உள்ளங்களை உலகையே விலை பேசினாலும் பிரிக்க நினைத்தாலும் பிரிக்கவே முடியாது.

மனிதர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவற்றை அவன் நாடியவாறு புரட்டிப் போடுகிறான். அவன் உள்ளங்களை ஆளும் அரசனாக இருக்கிறான். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய இறைவனை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.
எனினும், நாம் உலகில் வாழும் காலமெல்லாம் முடிந்த அளவு பிறருடன் நட்பாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
நட்பு என்பது மூன்றெழுத்து. அதில் மூன்று தத்துவங்கள்அடங்கியுள்ளன.
1. நட்பு என்பது விட்டுக் கொடுப்பது :
விட்டுக்கொடுப்பவர்கள் வாழ்க்கையில் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவர்கள் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்ததில்லை. விட்டுக்கொடுத்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் உண்டு. விட்டுக்கொடுக்காதவர்கள் நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் உண்டா? இல்லையே! ஆனால், அழிந்த சரித்திரம் வரலாறு நெடுகிலும் உண்டு. உண்மையான நட்பு "விட்டுக்கொடுப்பதில்தான்" இருக்கிறது.
2. நட்பு என்பது தியாகம் செய்வது :
வாழ்க்கையில் (உயர்ந்த பதவி) ஒன்றை அடைய வேண்டும் என்றால் (நாம் நேசிக்கும்) ஒன்றை நட்புக்காக தியாகம் செய்துதான் ஆக வேண்டும். இதற்காக யாரும் சுயமரியாதையை இழக்க வேண்டாம். தலைக்கணத்தையும், தற்பெருமையையும் தள்ளி வைத்தாலே போதும், நட்பு கொடிகட்டிப் பறக்கும். தியாகம் செய்யாமல் நட்புடன் வாழவே முடியாது. அப்படி வாழ ஆசைப்படுவோமேயானால் நட்பு கொடிகட்டிப்பறக்காது, மாறாக கொடியைவிட்டே பறந்துவிடும். உண்மையான நட்பு "தியாகம் செய்வதில்தான்" இருக்கிறது.
3. நட்பு என்பது இனம் புரியாத அன்பு :
நட்பு என்பது அழகுக்காகவோ, ஆடம்பரத்துக்காகவோ, பணத்துக்காகவோ, பட்டத்துக்காகவோ, சொத்துக்காகவோ, சொந்தத்துக்காகவோ, வமிசத்துக்காகவோ, சந்தர்ப்பத்திற்காகவோ இருக்கக்கூடாது. அது ஓர் இனம் புரியாத அன்புக்காகவே மட்டும் இருக்க வேண்டும். அன்பு இல்லாத நட்பு அழிந்துவிடும். அன்புக்காகவே மட்டும் உள்ள நட்பு உயிர்மூச்சு உள்ளவரை வாழும்.. உண்மையான நட்பு "இனம் புரியாத அன்பு செலுத்துவதில்தான்" உள்ளது.

"இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன." (அல்குர்ஆன் 30 : 21)

ஹளரத் அபூ மூஸா அல் அஷ் அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
"இறைநம்பிக்கையாளர்கள் (ஒருவருக்கொருவர் நட்பு வைத்து ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டிடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டிடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள். (நூல்: புகாரி 6026)
ஹளரத் நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப்போன்று நுஃமானே! நீர் காண்பீர். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமுற்றால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6011)
ஹளரத் அபூ ஹுரைரா ரளி) அவர்கள் அறிவிப்பதாவது :
"ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கண்ணாடியைப் போன்றவர் ஆவார்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது)

`நாம் காட்டும் நட்பில் மேற்கூறப்பட்ட மூன்று குணங்களும் இருந்தால்தான் அது உண்மையான நட்பாகவும், பரிபூரண நட்பாகவும் அமையும். இம்மூன்று குணங்களும் இல்லையென்றால், அது போலியான நட்பாகவும் சந்தர்ப்பவாத நட்பாகவும் அமைந்துவிடும்.
குடும்ப உறவு, கூட்டுறவு, வெளியுறவு இவற்றுக்கெல்லாம் மேலாக மனித உறவுகள் நீடித்து, நிலைத்திருக்க வேண்டுமானால், நட்பு எனும் இலக்கணத்துக்கு சொல்லப்பட்ட மூன்று தத்துவ குணங்களையும் வாழ்வில் செயல்படுத்த வேண்டும். அவற்றை செயல்படுத்தாத காரணத்தினால்தன் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. கூட்டுறவில் பகைமை ஏற்படுகிறது. சமய உறவில் காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது,. வெளியுறவில் பதட்டம் ஏற்படுகிறது இவற்றுக்கெல்லாம் மேலாக மனித உறவுகளே சிதைந்து போய்விடுகின்றன.
நாம் நமது சுயநலத்திற்காக வாழ ஆசைப்படக்கூடாது. பிறர் நலத்திற்காக வாழ முயற்சி செய்ய வேண்டும். நாம் வாழ நட்பை அழிக்கக்கக்கூடாது. நட்பு வாழ்வதற்கும், பிறருடன் நட்புடன் வாழ்வதற்கும் நாம் விட்டுக்கொடுப்போம். தியாகம் செய்வோம். இனம் புரியாத அன்பு செலுத்துவோம்.