சனி, மார்ச் 31, 2012

தொழுகையில் .... தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்
Print
முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும்.
E-mail1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல்.
2) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது.
3) தொழுகையை விட்டு விடுவோம் என்ற பயத்தில் தொழுகைக்காக விரைந்தோடுவது.
4) ருகூவுக்கு செல்லும் போது தக்பீர் அல்-இஹ்ராம் சொல்வது.
5) தொழுகைக்கான நிய்யத்தை வாயால் சொல்வது.
7) சுத்ரா (தடுப்பு) நோக்கி தொழுவதை தவிர்த்தல்.
8.) ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதை வெறுப்பது.
9) தொழுகையில் மேல் நோக்கியோ, இமாமையோ, வலது, இடது புறமோ பார்ப்பது.
10) கூட்டுத் தொழுகையில் வருசைகளில் இடைவெளி விடுவது.
11) சூரதுல் பாதிஹாவை இடைவெளி விடாமல் தொடர்ந்து ஓதுவது.
12) தொழுகையின் போது ஆடிக் கொண்டிருத்தல், கைக்கடிகாரம் பார்த்தல், விரல்களை முறித்தல், பாதத்தையோ மற்ற உறுப்புகளையோ தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல்.
13) இமாமுக்கு பின்னால் நின்று குர்ஆனை பார்த்துக் கொண்டு இமாம் ஒதுவதை சரிபார்ப்பது.
14) கூட்டுத் தொழுகையில் இமாமை முந்துவது அல்லது இமாமோடு செயல்படுவது.
15) ருகூவின் போது தலையை அதிகமாக குணிதல் அல்லது தலையை மேலாக்குதல் அல்லது முதுகை வளைவாக வைத்துக் கொள்ளுதல்.
ருகூவின் போது தலையை சாதாரணமாக வைக்கவேண்டும்; முதுகை சமமாக வைக்க வேண்டும்.
16) ருகூவு, ஸஜ்தாவின் போது கைகளை உடலோடு ஒட்டிவைத்தல் மற்றும் ஸஜ்தாவின் போது அடிவயிற்றை தொடையோடு ஒட்டிவைத்தல்.
17) பின்புறம் வெளியே தெரியுமாறு தொழுவது.
18) இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை முடிக்கும் போது 'ஆமீன்' வேகமாக சொல்வதை தவிர்ப்பது.
19) ஸஜ்தாவின் போது நெற்றியை மட்டும் தரையில் வைப்பது.
20) ருகூவு, ஸஜ்தாவை அமைதியாக நிறைவேற்றாமல் வேகமாக நிறைவேற்றுவது.
21) ஸலாம் சொல்லி தொழுகையை முடிக்கும் போது இரண்டு உள்ளங்கையை அசைத்தல்:
22) இடது கையால் தஸ்பீஹ் எண்ணுவது.
 
23) தொழுகை முடிந்தவுடன் மற்றவர்களுடன் 'தகப்பலல்லாஹ்' என்று சொல்லி கை குழுக்குவது.
24) தொழுகை முடிந்த உடனே கையை உயர்த்தி துஆ கேட்பது.
25) தொழுகை முடிந்தவுடன் திக்ரு செய்யாமல் எழுந்து செல்வது.
26) தொழுது கொண்டிருப்பவரின் முன்னால் செல்வது.
27) நோய் வாய்பட்டிருக்கும் போது தொழுகையை அலட்சியப்படுத்துவது.
28) கப்ருகளில் தொழுவது.
29) ஆண்கள் தொழுவதுபோல் அல்லாமல் பெண்கள் வேறு முறையில் தொழுவது.
முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும்.
1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல்.
இது பெரும்பாவங்களில் ஒன்று என முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். "மறுமை நாளில் மறுமையில் மூன்று பேரிடம் அல்லாஹுத்தாஆலா பேசவோ அல்லது அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவோ அல்லது அவர்களை தூய்மைப் படுத்தவோ மாட்டான். மேலும் அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு. 1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிபவர் 2) பிறரிடம் பலனை எதிர்பார்த்து அன்பளிப்பு செய்பவர் 3) பொய் சத்தியம் செய்து தன் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரி" (முஸ்லிம்)
சிலர் தொழும்போது மட்டும் கணுக்காலுக்கு மேலே இருக்குமாறு வைத்துக் கொண்டு மற்ற நேரங்களில் கணுக்காலுக்கு கீழே இருந்தால் பாவம் இல்லை என்று நினைக்கின்றனர். இன்னும் சிலர் பெறுமையின் காரணமாக அதுபோல் செய்தால் பாவம் மற்றபடி வேற ஒன்றும் தவறு இல்லை என நினைக்கின்றனர். உண்மையிலே மேலே கூறிய ஹதீஸின் படி பெருமையின் காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ கணுக்காலுக்கு கீழே ஆடை அணிந்தால் அது பெரும் பாவமாகும். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கக் கூடிய ஹதீஸ் இதை உறுதிப்படுத்துகிறது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள், "கணுக்காலுக்கு கீழே இருக்கக் கூடிய ஆடையின் பாகம் நரகத்தின் தண்டனைக் குரியதாகும்" (புகாரி)
மேலும் சில சகோதரர்கள் தொழும்போது ஆடையை கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டு தொழுகை முடிந்தவுடன் மறுபடி கீழே இறக்கி விடுகின்றனர். தொழும் போது மட்டும் ஆடை கணுக்காலுக்கு மேலே இருக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் தான் இது போல செய்கின்றனர். ஆடையை மடித்துக் கொண்டு தொழுவதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்துள்ளார்கள். (முஸ்லிம்)
2) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது:
மலக்குகள் மற்றும் தொழுகையாளிகள் தீய வாசனையை வெறுக்கின்றனர். பள்ளிவாசலுக்கு வருமுன் தன்னிடம் இருந்தால் வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு வரவேண்டும் என முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். துர் வாசனை வரக்கூடிய (பூண்டு, வெங்காயம் போன்ற)வற்றை சாப்பிட்டவர்கள் பள்ளிவாசலுக்கு வர வேண்டாம். ஏனெனில் மலக்குகள் சங்கடப்படுவார்கள்.
3) தொழுகையை விட்டு விடுவோம் என்ற பயத்தில் தொழுகைக்காக விரைந்தோடுவது:
இதுபோல் விரைந்தோடுவதால் ஏற்கனவே தொழுது கொண்டிருப்பவர்களையும் இது சிரமத்திற்குள்ளாக்கும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள், "தொழுகை ஆரம்பமாகி விட்டால் அதற்காக வேகமாக நடந்து வரவேண்டாம்; அமைதியாக சென்று கிடைத்ததை பெற்றுக்கொண்டு, (தவற)விட்டதை நிறைவு செய்யவும்". (புகாரி முஸ்லிம்)
4) ருகூவுக்கு செல்லும் போது தக்பீர் அல்-இஹ்ராம் சொல்வது:
ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வந்தவர்கள் ஜமாஅத்தாக தொழுபவர்கள் ருகூவுக்கு சென்று விட்டதை அறிந்து அந்த ரக்அத்தை அடைந்து கொள்வதற்காக தக்பீர் அல்-இஹ்ராம் கூறி நேரடியாக ருகூவிற்குச் செல்கின்றனர். இது தவறானதாகும். தக்பீர் அல்-இஹ்ராம் என்பது நின்ற நிலையில் கூறக் கூடியதாகும். எனவே தாமதமாக வந்தவர் முதலில் நின்ற நிலையில் தக்பீர் அல்-இஹ்ராம் கூறிய பிறகு பின்னர் தக்பீர் கூறி ருகூவிற்குச் செல்ல வேண்டும். இது தான் சரியான தாகும்.
5) தொழுகைக்கான நிய்யத்தை வாயால் சொல்வது:
எண்ணத்தின் இடம் இதயமாகும். தொழுவதற்கு முன்னால் இந்த தொழுகையை இத்தனை ரக்அத் தொழுகிறேன் என்று வாயால் முனுமுனுப்பது, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லது ஸஹாபாக்களோ பின்பற்றப்படாத ஒரு பித்அத் ஆகும்.
7) சுத்ரா (தடுப்பு) நோக்கி தொழுவதை தவிர்த்தல்:
சுத்ரா என்பது ஒருவர் தொழும் போது தனக்கு முன்னாள் எவரும் குறுக்கே செல்லாதபடி வைத்துக் கொள்ளும் சுவர், தூண் போன்ற ஏதாவது ஒரு தடுப்பாகும். இவற்றையல்லாமல் வேறு தடுப்புகளையும் வைத்துக் கொள்ளலாம். சுத்ரா என்பது ஒரு பொருளை நோக்கி தொழுவது. மேலும் அது மற்றவர்களுக்கு எல்லையாகவும் உள்ளது.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "சுத்ராவை நோக்கி தொழுங்கள்; மேலும் தொழும் போது யாரும் அதை மீறி செல்லக் கூடாது! அப்படி அந்த எல்லையை மீறினால் சக்தியைக் கொண்டு அவரை தடுக்கட்டும். ஏனெனில் அவன் சைத்தானோடு தொடர்பு உள்ளவனாவான்" (இப்னு குஜைமா)
சுத்ரா இல்லாமல் தொழக்கூடிய ஒருவனின் முன்னால் சைத்தான் குறுக்கிடுகிறான்; அதன் மூலம் அவனுடைய தொழுகையை வீணாக்குகிறான். யாராவது ஒருவர் திறந்த வெளியில் தொழுதால் கூட சுத்ரா வைத்துக் கொள்ளட்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: "ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்." (அல்-குர்ஆன் 7:27)
8.) ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதை வெறுப்பது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "பாங்கு சொல்வது, அதனுடைய மிகப் பெரும் கூலி, மற்றும் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பது போன்றவற்றின் கூலியை மக்கள் உணர்ந்து கொள்வார்களானால் குலுக்கல் முறையிலே அன்றி வேறெதுவும் செய்ய இயலாது. தொழுகைக்கு முன்னதாகவே வருவதன் முக்கியத்துவத்தை அறிவார்களானால் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு வருவார்கள். இஷா, பஜ்ர் தொழுகையின் மிகப் பெரும் பலனை அறிவார்களானால் தவழ்தாவது பள்ளிக்கு வருவார்கள் (முடியாதவர்கள் அதன் பலன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் தவழ்ந்து வருவார்கள்)" (முஸ்லிம்)
9) தொழுகையில் மேல் நோக்கியோ, இமாமையோ, வலது, இடது புறமோ பார்ப்பது:
இது தொழுகையில் கவணமின்மையை உண்டாக்கும். நாம் தொழுகையில் பார்வையை தாழ்த்தி ஸஜ்தா செய்யும் இடத்தை பார்க்குமாறு கட்டளை இடப்பட்டு உள்ளோம். "தொழுகையில் மேல்நோக்கி பார்ப்பவர் அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளட்டும்! இல்லை எனில் அவர் பார்வை திரும்பாமல் போய்விடும் (பார்வையை இழந்து விடுவார்)" என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (முஸ்லிம்)
10) கூட்டுத் தொழுகையில் வருசைகளில் இடைவெளி விடுவது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் :"உங்கள் வரிசைகளை நேராக்குங்கள்; தோள்பட்டைகளை சமமாக்குங்கள்; இடைவெளியை நிரப்புங்கள்; சைத்தான் இடைவெளியின் வழியாக நுழைகிறான்" (அஹ்மத்)
11) சூரதுல் பாதிஹாவை இடைவெளி விடாமல் தொடர்ந்து ஓதுவது:
"முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வசனத்தின் நடுவிலும் இடைவெளி விட்டு ஓதுவார்கள்" (அபூ தாவூத்)
12) தொழுகையின் போது ஆடிக் கொண்டிருத்தல், கைக்கடிகாரம் பார்த்தல், விரல்களை முறித்தல், பாதத்தையோ மற்ற உறுப்புகளையோ தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல்:
மேற்கூறியவைகள் அனைத்தும் தொழுகையின் கூலியை குறைத்து விடும். கீழ்படிதல் என்பது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய முக்கியமான ஒரு நிபந்தனையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: "தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள் (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்." (அல்-குர்ஆன் 2:238)
13) இமாமுக்கு பின்னால் நின்று குர்ஆனை பார்த்துக் கொண்டு இமாம் ஒதுவதை சரிபார்ப்பது:
மேற்கண்ட செயல் தொழுகையின் கவனத்தை சிதறடிக்கிறது. மேலும் இது விரும்பத்தக்க செயல் இல்லை.
14) கூட்டுத் தொழுகையில் இமாமை முந்துவது அல்லது இமாமோடு செயல்படுவது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் "உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் 'அல்லாஹ் அக்பர்' என்று கூறினால் நீங்களும் 'அல்லாஹ் அக்பர்' என்று சொல்லுங்கள்; இமாம் 'வலள்ளால்லீன்' என்று கூறினால் நீங்கள் 'ஆமீன்' என்று சொல்லுங்கள்". மற்றொரு அறிவிப்பில், "நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்" என்று கூறினார்கள். மேலும், "இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?" என்றார்கள்.
15) ருகூவின் போது தலையை அதிகமாக குணிதல் அல்லது தலையை மேலாக்குதல் அல்லது முதுகை வளைவாக வைத்துக் கொள்ளுதல்:
ருகூவின் போது தலையை சாதாரணமாக வைக்கவேண்டும்; முதுகை சமமாக வைக்க வேண்டும்.
16) ருகூவு, ஸஜ்தாவின் போது கைகளை உடலோடு ஒட்டிவைத்தல் மற்றும் ஸஜ்தாவின் போது அடிவயிற்றை தொடையோடு ஒட்டிவைத்தல்:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "(ஸஜ்தாவின் போது) உங்களில் யாரும் முன்னங்கைகளை நாயைப் போன்று ஊன்று கோலாக்க வேண்டாம். அவர் தன்னுடைய உள்ளங்கைகளை ஊன்று கோலாக ஆக்கிக்கொள்ளட்டும், மேலும் அவருடைய முழங்கைகளை உடலோடு ஒட்டாமல் வைத்துக்கொள்ளட்டும்".
17) பின்புறம் வெளியே தெரியுமாறு தொழுவது:
ஸஜ்தா. ருகூவு செய்யும் போது இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிபவர்களுக்கு அவர்களுடைய பின்பாகங்கள் வெளியே தெரிகிறது. உள் அவயங்கள் வெளியே தெரியுமாறு தொழும் தொழுகையானது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.
18) இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை முடிக்கும் போது 'ஆமீன்' வேகமாக சொல்வதை தவிர்ப்பது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : "இமாம் 'வலள்ளால்லீன்' என்று கூறும்போது 'ஆமீன்' என்று கூறுங்கள்; ஏனெனில் மலக்குகளும் 'ஆமீன்' கூறுகின்றனர். யாருடைய 'ஆமீன்' மலக்குகள் 'ஆமீனோடு' ஒத்துப் போகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன" (புகாரி மற்றும் முஸ்லிம்).
மற்றொரு அறிவிப்பில், 'ஆமீன்' கூறுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்' (முஸ்லிம்)
19) ஸஜ்தாவின் போது நெற்றியை மட்டும் தரையில் வைப்பது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 'நான் ஏழு உறுப்புகளால் ஸஜ்தா செய்ய கட்டளை இடப்பட்டுள்ளேன். முகம்(நெற்றி, மூக்கு), இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதங்கள்'
20) ருகூவு, ஸஜ்தாவை அமைதியாக நிறைவேற்றாமல் வேகமாக நிறைவேற்றுவது:
ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, "இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் இறக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் மரணிப்பார்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : 'திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். "தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)
"ருகூவை முழுமையாக செய்வது என்பது 'சுப்ஹான ரப்பியல் அளீம்' என்று நிதானமாக மூன்று முறை கூறும் நேரத்திற்கு ருகூவின் நிலையிலே இருப்பதாகும். அதே போல் ஸஜ்தாவை முழுமையாக செய்வது என்பது 'சுப்ஹான ரப்பியல் அஃலா' என்று மூன்று முறை கூறும் அளவிற்கு ஸஜ்தாவின் நிலையிலே இருப்பதாகும். "ருகூவையும், ஸஜ்தாவையும் பரிபூரணமாக நிறைவேற்றாதவருடைய தொழுகை கூடாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்)
21) ஸலாம் சொல்லி தொழுகையை முடிக்கும் போது இரண்டு உள்ளங்கையை அசைத்தல்:
சிலசஹாபாக்கள் இவ்வாறு செய்வதை பார்த்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள். "காட்டுக்குதிரையின் வால் ஆடுவதைப் போல ஏன் உங்கள் கைகளை அசைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்" அதன் பிறகு அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை (அபூ தாவூத்)
22) இடது கையால் தஸ்பீஹ் எண்ணுவது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகை முடிந்தவுடன் தன்னுடைய வலது கையின் விரல்களால் தஸ்பீஹ் எண்ணுவார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள் : 'இரண்டு நல்ல விஷயங்களை யார் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். ஆனால் ஒரு சிலர் தான் சுப்ஹானல்லாஹ் பத்து தடவை, அல்ஹம்துலில்லாஹ் பத்து தடவை, அல்லாஹ் அக்பர் பத்து தடவை என்று சொல்கிறார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய கையால் தஸ்பீஹ் செய்வதை நான் பார்த்தேன்'
இப்னு கதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள், "இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஸ்பீஹ் செய்வதற்கு தமது வலக்கரத்தைப் பயன்படுத்தினார்கள்"
மேற்கண்ட ஹதீஸில் இருந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஸ்பீஹ் செய்வதற்கு ஒரு கையை (வலக்கரத்தை) உபயோகித்துள்ளார்கள் என்று தெளிவாக தெரிகிறது.
தஸ்பீஹ் செய்வதற்கு தன்னுடைய இடது கையை பயன்படுத்தினார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் கற்பனை செய்ய முடியாது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள் : முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அசுத்தங்களை நீக்குவதற்காக மட்டும் இடது கையை உபயோகிப்பார்கள். இடது கையை தஸ்பீஹ் ஓதுவதற்காக ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை.
23) தொழுகை முடிந்தவுடன் மற்றவர்களுடன் 'தகப்பலல்லாஹ்' என்று சொல்லி கை குழுக்குவது:
இது போல் செய்வது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டதாகும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, சஹாபாக்களோ இதுபோல் செய்ததில்லை.
24) தொழுகை முடிந்த உடனே கையை உயர்த்தி துஆ கேட்பது:
இது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை அல்ல. தொழுகை முடிந்தவுடன் திக்ரைக் கொண்டு ஆரம்பிப்பது தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை ஆகும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் 'அத்தஹியாத்து ஓதிய உடன் நீங்கள் விரும்பிய துவாவை ஓதிக்கொள்ளுங்கள்' (நஸயீ).
25) தொழுகை முடிந்தவுடன் திக்ரு செய்யாமல் எழுந்து செல்வது:
திக்ரு என்றால் 33 தடவைகள் 'சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் அக்பர்' ஓதுவதும், 10 தடவை 'ஆயத்துல் குர்ஸி' ஓதுவதும் ஆகும். (பார்க்கவும் : தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்)
26) தொழுது கொண்டிருப்பவரின் முன்னால் செல்வது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள் : 'தொழுது கொண்டிருப்பவருக்கு முன்னால் செல்வதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை ஒருவன் அறிய நேரிட்டால் அப்படி முன்னால் செல்லுவதைவிட நாற்பது.. (வருடங்கள்) காத்திருப்பான்' (புகாரி மற்றும் முஸ்லிம்)
குறிப்பு : நாற்பது நாட்களா அல்லது மாதமா அல்லது வருடமா என்பதை அல்லாஹ்வே அறிவான்.
27) நோய் வாய்பட்டிருக்கும் போது தொழுகையை அலட்சியப்படுத்துவது:
தொழுகை இஸ்லாத்தின் முக்கிய தூண்களில் ஒன்று. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளிடம் சண்டைடும் போதோ நோய் வாய்பட்டிருக்கும் போதோ தொழுகையை விட்டதில்லை. எந்த நிலையிலும் தொழுகையை கடைபிடிக்க வேண்டும். ஏதாவது காரணத்தால் ஒழு செய்ய முடியவில்லை எனில், தயம்மம் செய்து கொண்டு தொழ வேண்டும். ஒருவரால் நின்று கொண்டு தொழ முடியவில்லை எனில் உட்கார்ந்து கொண்டோ, சாய்ந்துகொண்டோ தொழவேண்டும். இல்லை எனில் ருகூவுக்காக கண்களை மேலே உயர்த்தியோ ஸஜ்தாவின்போது கண்களை கீழே தாழ்தியோ வைத்து மீதமுள்ள தொழுகையை முடிக்கவேண்டும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையை விடுவதற்கு அனுமதி இல்லை.
28) கப்ருகளில் தொழுவது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் : 'கப்ருகளில் தொழாதீர்கள்! மேலும் கப்ருகளில் உட்காராதீர்கள்' (முஸ்லிம்)
29) ஆண்கள் தொழுவதுபோல் அல்லாமல் பெண்கள் வேறு முறையில் தொழுவது:
தொழுகை முறை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கற்றுத்தரப்பட்டது. வேறு இமாமுக்கோ அறிஞருக்கோ அதில் சேர்க்கவோ, நீக்கவோ உரிமை இல்லை. ஆண்கள் ஒருமுறையிலும் பெண்கள் வேறுமுறையிலும் தொழுமாறு சொல்லக் கூடிய எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இல்லை.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள் : "எண்ணை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்" (புகாரி)முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் தொழுகை முறையை வேறு படுத்தவில்லை.
சில அறிஞர்கள், பெண்கள் ஸஜ்தா செய்யும் போது எல்லா பாகங்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர். நாம் எல்லோரும் அறிந்துள்ளது போல், மற்ற வணக்க வழிபாடுகள் போல தொழுகையும் ஒரு வணக்கமாகும். ஆகையால் குர்ஆனிலோ ஹதீஸிலோ அதற்கு ஆதாரம் வேண்டும்.

நீங்க தவ்ஹீதா..? சுன்னத் ஜமாத்தா..?PrintE-mail

தவ்ஹீது (ஏகத்துவம்) என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.
அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் :
'அஹ்லுஸ் ஸுன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸுன்னத் வல்ஜமாஅத் ஆவர்
இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!
இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர் முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ - திருத்தம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான் மறையில்
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((33:36))
திருக்குர்-ஆன் மிக தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவுக்கோலை ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.
இறைவனை மையப்படுத்தும் விசயங்களிலெல்லாம் இறை நேசர்களை முன்னிலைப்படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக பார்வையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.
சுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்
அல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில் எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...
கப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.
பிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம் துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும் எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே!
அதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம்
அல்லாஹ் மட்டுமே வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும்
நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.
மேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால்
எந்த தேவைக்கும் என்னை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ
எனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்?
ஒருவரை நாம் மதிப்பது உண்மையென்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான ஒன்று. இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள் மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.
அவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெனில் மார்க்கம் அங்கீகரித்திராத செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே செய்யாத, முன்மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில் செய்வதற்கு மார்க்க ரீதியில் ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..?
இவைதான்
இப்படித்தான்
தர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில் எழுப்ப வேண்டிய கேள்விகள்...
ஆனால்,
"தர்காவுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...!"
ஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின் செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்
அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.
1.. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே நமக்கு சாத்தியம்.
2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்
இன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம் அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட வரலாறுகளே. அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள் எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
நம்பக தன்மையில் குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாக தான் இருக்கும். ஒருவர் மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில் அடைந்துக்கொள்வார் எனும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே!
மேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது. இதன் விளைவாய் தனிமனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.
மேலும்,
இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா?
இவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில் முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல..! என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல..! என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.
உங்களில் சில பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ! இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு!
அறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும் முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க கடமையும் கூட!. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்???
நபி வழியில் தான் தமது வாழ்வை அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில் நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய் செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.
இறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால். அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்!
நாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்!
அல்லாஹ் நன்கு அறிந்தவன்

எந்த ஆணுக்கும் 100 சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை, அமையப் போவதுமில்லை!Print

எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.
E-mail
'நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.
அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்!
அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்' (அல்குர்ஆன் 4:19)
இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.
திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.
ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள். திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.
இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் - மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?
அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். 'நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.
எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.
இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.
பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.
பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது - அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.
இதுபோல் தான் பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.
இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை. அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.
இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. அதை மற்றொரு வசனத்தை விளக்கும் போது குறிப்பிடுவோம்.
இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான். மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!

அல்லாஹ்வின் நண்பர்

அல்லாஹ்வுக்கு நண்பரா? ஆச்சர்யமாக இருக்கிறதா! அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை ஒன்றுமே இல்லை. அவனுக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, மனைவியும் இல்லை, மகனும் இல்லை, மகளும் இல்லை, எந்தவித சொந்தங்களும் இல்லை.ஆனாலும், ஆம்! இப்ராஹீம் நபியை தனது நண்பராக அல்லாஹ் எடுத்துக் கொண்டான். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் 4:125 ல் சொல்கிறான்.وَاتَّخَذَ اللّهُ إِبْرَاهِيمَ خَلِيلاً 
‘இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்’.
ஏனென்றால், சொந்தம் என்பது வேறு, நண்பர் என்பது வேறு, என்பதை சொல்லவும் வேண்டுமா?
சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு ஈராக் நாட்டில் உள்ள உர் என்ற ஊரில் இப்ராஹீம் நபி பிறந்தார்.
அவர் அன்புள்ளம் கொண்டவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், கலப்பற்ற நம்பிக்கை கொண்டவராகவும் திகழ்ந்தார்.
அவர் சிறுவராக இருக்கும் பொழுதே அல்லாஹ் அவருக்கு அறிவு ஞானத்தை வழங்கி இருந்தான்.
இப்ராஹீமை அல்லாஹ் மிகவும் விரும்பினான், அதனால் அவரை தனது நண்பராக ஆக்கிக் கொண்டான்.
ஒருநாள் அவர் உண்மை இறைவனை தெரிந்து கொள்ள விரும்பினார்.
இரவில் மின்னும் ஒரு நட்சத்திரத்தை கண்ட போது, ‘இது எனது இறைவன்’ என்றார். பகலில் அது மறைந்த போது, ‘மறையக் கூடியதை நான் விரும்ப வில்லை’ என்று கூறினார்.
அடுத்து, அவர் ஒளிரும், பளபளக்கும், வெள்ளியால் செய்யப்பட்டதைப் போன்ற சந்திரனைக் கண்டார். ‘இது எனது இறைவன்’ என்று சந்தோசமாகக் கூறினார். அது மறைந்த போது, ‘நான் மறையக் கூடியதை விரும்ப மாட்டேன்’ என்றார்.
பின்னர் சூரியன் உதயமாவதைக் கண்டார், ‘இது எனது இறைவன், இது எல்லாவற்றிலும் பெரியது’ என்று கூறினார். அதுவும் மறைந்த போது, ‘எனது சமூகத்தாரே! நீங்கள் இணை வைத்து வணங்கும் எல்லாவற்றையும் விட்டு விலகி விட்டேன்’ என்று கூறினார். இவை அத்தனையும் வணங்கத் தகுதி அற்றவை என்று அவருக்கு விளங்கியது.
இப்ராஹீம் நபி அவர்கள் காலத்தில் மக்கள் கற்களையும் சிலைகளையும் வணங்கினார்கள். சிறுபிள்ளையாக இருக்கும் போதே ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று வியந்தார்.
இப்ராஹீம் நபியின் தந்தை ஆஜர் கூட சிலை வணக்கத்தை நம்புவராக இருந்தார். இப்ராஹீம் தனது தந்தையிடம், ‘ஏன் நீங்கள் ஏதும் பேசாத பொருட்களை வணங்குகிறீர்கள்?’ என்று கேட்ட போது, ஆஜர் மிகவும் கோபப்பட்டார்.
ஒருநாள் ஆஜரும், அந்த ஊர் மக்களும் ஊரில் இல்லாத போது, அவ்வூர் கோவிலிலுள்ள பெரிய சிலையை தவிர, மற்ற சிலைகளை எல்லாம் இப்ராஹீம் தனது கோடரியால் உடைத்தார்.
உடைக்கப்பட்ட சிலைகளை மக்கள் கண்ட போது, ‘இதை யார் செய்தது’ என்று இப்ராஹீமிடம் கேட்டார்கள். ‘அந்த பெரிய சிலையிடம் கேளுங்கள்’ என்று அமைதியாக பதில் கூறினார். ‘பேசாத, நடக்காத, எதையும் புரிந்து கொள்ள முடியாத இவைகளை நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள்?’ என்று இப்ராஹீம் கேட்ட போது, எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டனர். ஆனாலும் அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். அவரை கொல்ல முயன்றார்கள்.
அவர்களின் கடவுள்களை அவமதித்து விட்டதால், அவரை உயிருடன் எரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அவர்கள் நெருப்புக் குண்டத்தை மூட்டினார்கள். ‘இப்ராஹீம் தொலைந்தார், அவரை நெருப்பில் போடுங்கள்’ என்று கூடியிருந்தவர்கள் கத்தினர்.
இப்ராஹீமை நெருப்பில் இட்டு பொசுக்குவது தான் அவர்களின் ஆன்மாவை சுத்தப்படுத்தும் என்றும் தீங்கிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் நினைத்தார்கள்.
இப்ராஹீம் நபியின் கண் முன்னே பெரும் நெருப்பு மூட்டப்பட்டது. அது கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் இப்ராஹீம் (அலை) முகத்தில் எந்த வித அச்ச உணர்வும் தென்பட வில்லை. ஏனெனில் அவர் அல்லாஹ்வை நம்பியவர். இந்த மனிதர்கள் செய்வது மிகப்பெரும் தவறு என்பதை நன்கு அறிந்திருந்தார்.
நெருப்பு நன்கு கொளுந்து விட்டு எரியும் போது, அவர்கள் இப்ராஹீமை பிடித்து அந்த நெருப்பில் எரிந்தார்கள். ஆனால் அல்லாஹ் அவரோடு இருந்தான். அல்லாஹ் அந்த நெருப்புக்கு, ‘நெருப்பே! இப்ராஹீமுக்கு குளிர்ச்சியை கொடு, அமைதியைக் கொடு’ என்று கட்டளையிட்டான்.
அதிசயம் நிகழ்ந்தது. நெருப்பு அவரை சுடுவதற்கு பதிலாக, குளிர்ச்சியாகவும், பாதுகாப்பான இடமாகவும் மாறியது.
அதனைப் பார்த்தவர்கள் அவர்களது கண்களையே நம்ப முடியவில்லை. பயத்தினால் அவர்களால் பேச முடியாமலும் அசையாமலும் சிலையைப் போல நின்றார்கள்.
அல்லாஹ்வை உறுதியாக நம்புவது மட்டும் தான் ஒரு முஃமினை இவ்வுலகிலும் மறுவுலகிலும் காப்பாற்றும் என்பது இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் படிப்பினையாகும்.


புதன், மார்ச் 28, 2012

பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்!ஒரு பெண் நினைத்தால் புருஷனைப் புனிதனாக்கலாம்! கணவன் செய்யும் சிறு தவறுகளையும் தலைமேல் தூக்கி வைத்துக்கொண்டு தண்டோராப் போடுவதால் தனக்கும் கேவலம்; தன் குடும்பத்துக்கும் கேவலம் என்பதை சில பெண்கள் உணர்வதில்லை.
உலகில் எல்லாக் கணவனும் உத்தமன் என்று இருக்க மாட்டான்! பித்தன் இருப்பான்! பித்தலாட்டக்காரன் இருப்பான்! குடிகாரன் இருப்பான் கூத்துக்காரன்கூட இருப்பான்.
அவனைக் குழந்தைப் போல் எண்ணிக்கொண்டு செய்யும் தவறுகளைப் பொறுத்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து - கடிக்க வேண்டிய நேரத்தில் கடித்து வைத்தால் ஒரு நாள் இல்லை... மறுநாள் அவன் நிச்சயம் திருந்துவான்.
"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?" என்பது போல அன்பையும், பண்பையும், பாசத்தையும் காட்டி கல்மனதுக் கணவனையும் கனிய வைக்கலாம்! இரும்பான இதயத்தையும் உருக வைக்கலாம்.
ஒரு குடும்பத்தில் வளர்ந்துவிட்ட வாலிபனுக்குப் பெண் பார்க்க வேண்டிய கடமை பெற்றோருக்கு வந்துவிட்டது. ஆனால், "பையன் பெயர் சொல்லி" பெண் கேட்கும் அளவுக்கு மகனுக்கு நல்ல பெயர் இல்லை என்பதை உணர்ந்து இருந்தார்கள். சொல்லி வைத்த இடங்களில் எவ்வித பதிலும் தெரிவிக்கவில்லை. தெரியாதவர்கள் வந்து பார்த்துப் போனாலும், பையனுக்குப் பெண் கொடுத்தால் குடும்ப மானம் கப்பலேறிவிடும் என்று தெரிந்து கொண்டு நழுவி விட்டார்கள்.
பையனின் நண்பர்கள் நல்லவர்கள் அல்ல! பையன் குடுமத்துக்கு அடங்கியவன் அல்ல! 'தாய் தந்தைக்கெல்லாம் முந்திப்பிறந்தவன்' (அதாவது தாய் தகப்பன் பேச்சை கேட்காதவன்) என்று சொல்வார்களே! அது போல் இருந்தான். வீட்டுக்கு வந்த மனிதர்களுக்குக் கூட மரியாதை கொடுக்கத்தெரியாதவன். வாழ்க்கைப்பட்டு வந்தவளை எப்படி மானத்தோடு வாழ வைப்பான்? என்ற கேள்வியையே எல்லோரும் கேட்டனர்.
மற்றவர்கள் கேட்டதற்கு தகுந்த பதில் சொல்ல முடியாமல், தாய், தந்தை மவுனமாகத்தான் இருந்தார்கள். பிள்ளை உருப்படியாக இருந்தால் அல்லவா துணிந்து பேச முடியும்?!
காலங்கள் சென்று கொண்டிருப்பதைப் பெற்றோர்கள் உணர்ந்தார்களே தவிர, பிள்ளை உணர்ந்த பாடில்லை. அவன் ஒரு நாள் உழைத்து வருவதும் அதைத் தானே வைத்து மறுநாள் செலவழித்து விடுவதுமாக சொகுசு வாழ்வில் திரிந்து கொண்டிருந்தான்.
கடைசி முடிவாக ஒரு உறவினரை அழைத்து உண்மை நிலாவரங்களை எல்லாம் சொன்னார்கள். குடும்ப நிலை! பையனின் நிலை! அவனின் போக்கு...! எல்லாம் இதுதான்! இப்படிப்பட்ட என் மகனுக்கு பெண் வேண்டும்! அவன் உழைத்துப் போடாவிட்டாலும் நாங்கள் அவளைக் காப்பாற்றுவோம்! எங்களை நம்பிப் பெண் பாருங்கள்! எங்கள் மானத்தைக் காப்பாற்றுவதற்காக அவனுக்கு ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்." என்று சொல்லி மன்றாடினார்கள்.
இதையெல்லாம் கேட்டவர் யோசித்துவிட்டு "எங்கள் ஊரில் எனது தூரத்து உறவில் ஒரு பெண் இருக்கிறாள். தாய் உண்டு! தந்தை இல்லை! எளிய குடும்பம்! அவர்களிடம் சொல்லிப்பார்க்கிறேன். அவர்கள் இஷ்டப்பட்டால் சொல்கிறேன்..." என்று சொல்லிச் சென்றவர் நல்ல பதிலோடு மறுமுறை சந்தித்தார்.! சம்மதம் சொன்னார்!
மாப்பிள்ளை வீட்டார் குடும்பத்தோடு ஊர் சென்று திருமணம் முடித்துப் பெண்ணை மலேசியா கொண்டு வந்து விட்டார்கள். மலையைப் பெயர்த்து மடியில் வைத்துக் கொண்ட பெருமை அவர்களுக்கு! இனிமேல் தான் இடியும் மின்னலும் என்ற கலக்கமும் ஒரு பக்கம் இருந்தது. அதுவும் வந்துவிட்டது.
ஒரு நாள் மகன், மருமகளை அழைத்துக்கொண்டு நண்பர் வீட்டு விருந்துக்குக் கிளம்பினான். திரும்பி வரும்போது ஒரு வாடகை வண்டி அவனைக் கொண்டு வந்து வீட்டு வாசலில் போட்டுவிட்டுப் போனது. மருமகள் வாந்தியும், பேதியுமாக விழி பிதுங்கி, கண் கலங்கி நின்று கொண்டிருந்தாள்.
ஜடமாகக் கிடந்த பையனை இழுத்துச் சென்று வீட்டில் போட்டுவிட்டு - மருமகளை பதவிசாக அழைத்துப் போய் உடல் கழுவி, உடை மாற்றி வைத்தார் மாமியார்.
"இப்படித்தாம்மா... எவனாவது இழுத்துப் போய் இல்லாததும் பொல்லாததும் நடந்து விடுகிறது!" என்று மாமியார் கூறினார். இடித்து வைத்த புளி போல் அமர்ந்திருந்த மருமகள் அதிர்ச்சியில் மூழ்கி இருந்தாள். செய்வதறியாது மிரண்டு போய் உட்கார்ந்திருந்தாள். தான் ஏதோ சூனியத்தில் மாட்டிக்கொண்டது போன்ற பிரமை அவளுக்கு! திருமணதுக்கு தரகு பார்த்த பெரியவரை அழைத்துப் பேசினாள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர் பேசினார்!
"அம்மா! இதெல்லாம் பழைய கதை! சின்ன விஷயம்! பையனைத் திருத்துவது உன் பொறுப்பு! பெண்ணுக்கு அடங்காத ஆணில்லை! உன்னை ஊரில் இருந்து கூட்டிக்கொண்டு வந்துவிட்டேன். உனக்கு இனி இங்குதான் வாழ்க்கை! மாமியார், மாமனார் தங்கமானவர்கள். அனுசரித்துப் பையனைத் திருத்து." என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
வெறி கொண்ட வேங்கை போல் ஆனாள். இனி யாரும் நமக்குப் பொறுப்பில்லை. ஆண்டவன் தான் பொறுப்பு! பொழுதுபோக்கான கணவன்! தண்டிக்க முடியாத பெற்றோர்! இதற்கிடையே நாம்! என்ன செய்வேன் இறைவா? என்று ஏதோ முடிவுக்கு வந்து விட்டாள்.
மாமியார், மாமனார் யாரும் தன் புருஷனுக்குப் பணம் கொடுக்கக் கூடாது. அவர் உழைத்து வந்தால் தான் அவருக்கு வீட்டில் சாப்பாடு; உழைக்காத போது வெளியிலே சாப்பிடட்டும்! கொஞ்ச நாளைக்கு அவர் மேல் யாரும் இரக்கப்படக் கூடாது. இது அவள் போட்ட சட்டம்.
இதற்கிடையே கணவனுக்குத் தேவையான மற்ற பணிவிடைகளைக் குறைவின்றிச் செய்து கொடுத்தாள். "குடும்ப வாழ்வுக்கு" ஈடு கொடுத்தாள்! மனைவி என்ற பாத்திரத்தில் இருந்து எள்ளளவும் பிசகவில்லை. ஆனால், காசு பணத்தில் மட்டும் கச்சிதம் செய்து கொண்டாள்.
தன் கணவன் அழைத்து வரும் நண்பர்களுக்கு எவ்விதப் பணிவிடையும் காட்டவில்லை. இதை அவமானம் என்று சொன்ன கணவனிடம் "இவர்கள் நம் வீட்டுக்கு வருவதே அவமானம்" என்றாள்.
கணவன் கோபமாக நடந்தாலும் மறைவில் குணம் காட்டிக் குளிர வைத்தாள். அவனின் சில குற்றங்களைத் திரை மறைவில் திருத்தினாள். பிறரிடம் சொல்லி அங்கலாய்க்கவில்லை. அவனை வீணாகப் புகழ்ந்தாள்.
"நீங்கள் நல்லவர்தான். உங்கள் கூட்டாளிகள் தான் உங்களைக் கெடுக்கிறார்கள்" என்றாள்.
"நீங்கள் வீட்டில் இருந்தால்தான் வீடு நன்றாக இருக்கிறது. வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து விடுங்கள்" என்பாள். எப்படியோ தன் மனைவி தன் மீது அக்கரை உள்ளவள் என்பதை அவன் மதில் விதைத்து விட்டாள்.
முடிவு என்ன ஆனது...!
நண்பர்களை விட்டான்! கெட்ட பழக்கங்களை விட்டான்! வேலை உண்டு வீடு உண்டு என்று மாறினான்! மனைவி பட்ட பாட்டுக்கு நல்ல பலன் கிடைத்து விட்டது.

பெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ''ஜமீலா''க்கள்


மவ்லவி S.H.முஹம்மது இஸ்மாயீல் ஸலஃபி

[ ஜமீலா எனும் பெயர் கொண்ட இந்த இரு பெண்களின் இயல்புகளும், குணங்களும் உலக அழிவு வரை நிகழும் பெண்களுக்குத் தேவையான ''இல்லற சட்டங்கள் இரண்டை'' வழங்கி விட்டன. இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை ஊணப்படுத்தாது எவ்வளவு அழுத்தங்கொடுத்து அக்கரை செலுத்துகின்றது என்பதற்கு இவர்களின் தொடர்பாக இறங்கிய இறைவசனங்கள் சான்றாக அமைந்துவிட்டன.

இஸ்லாத்தில் பெண்ணுரிமை இல்லை என்று வாய்க்கிழிய கூக்குறலிடுபவர்கள் இந்த இரு பெண்களின் சம்பவங்களை அறிந்திருப்பார்களேயானால் ஊமையாகிப்போய் நிற்பார்கள். இதற்கு ஈடான பெண் சுதந்திரத்தை இன்றைக்கும் எந்த மேற்கத்திய நாடுகளில் கூட காணமுடியாது.அல்லாஹ் மிகப் பெரியவன், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. வணக்கத்திற்குறியவன் வேறு எவருமில்லை அல்லாஹ்வைத் தவிர.]
 பெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ''ஜமீலா''க்கள்
"ஜமீலா" என்றால் அழகானவள் என்பது அர்த்தமாகும். இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு ஜமீலாக்களின் இல்லற வாழ்வு தொடர்பாக அருள்மறை வசனங்கள் இறக்கப்பட்டன. அவை இரண்டும் பெண்களின் உணர்வுகளுக்கு இஸ்லாம் எவ்வளவு மதிப்பளிக்கின்றது என்பதற்கான சிறந்த உதாரணங்களாகும்.
ஒருவர் ஜமீலா பின்து யஸார் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். இவர் தன்னை விவாவகரத்து செய்த கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ ஆர்வம் கொள்கிறார். எனினும் குடும்பம் அதற்குத் தடையாக இருக்கிறது.
அடுத்தவர், முனாஃபிக்குகளின் தலைவனான உபை இப்னு ஸலூலின் மகள் ஜமீலா ஆவார். இவர் தனது கணவர் மீது வெறுப்பு கொண்டு இல்லற வாழ்வில் வேண்டா வெறுப்புடன் இணைந்திருந்தார். அவரது உணர்வுகளுக்கும் இஸ்லாம் மதிப்பளித்து திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்பட்டன.
இல்லற வாழ்வில் ஏற்படும் சிக்கல்களுக்கு சிறந்த தீர்வாக அமைந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்களான இந்த இரண்டு ''ஜமீலா''க்களைப் பற்றிய வரலாற்றுச் சுருக்கத்தை காண்போம்.
 கணவனை நேசித்த மனைவி 
 ஜமீலா பின்து யஸார் ரளியல்லாஹு அன்ஹா:
இவர் முஅக்கல் பின் யஸார் அல் மஸ்னியின் சகோதரியாவார். இந்தப் பெண்ணை அபுல் ஃபதாஹ் ஆஸிம் இப்னு அதீயிப்னு அஜ்லான் என்பவருக்கு முஅக்கல் மணமுடித்துக் கொடுத்தார்.
ஜமீலா-அபுல் ஃபதாஹ் தம்பதிகளின் இல்லற வாழ்வு இனிமையாகத்தான் ஆரம்பித்தது. இதமான, இன்பமான உணர்வுகளுடன் மணவாழ்வில் புகுந்தனர். ஆனால், மணவாழ்வு என்பது மகிழ்ச்சிக்குறியதாக மட்டும் இருக்கவில்லை. இதமான தென்றல் காற்றுக்கு மத்தியில் திடீர் திடீரென புயலும் வீசத்தான் செய்தன. உடன்பாடுகள் மட்டுமின்றி, முரண்பாடுகளும் முளைக்கத் துவங்கின. இல்லறவாழ்வில் பிளவை உண்டாக்குவது ஷைத்தானின் முக்கிய பணிகளில் ஒன்றல்லவா? இந்த முரண்பாடுகள் இவர்களது பிரச்சனையில் ஷைத்தானை மூக்கை நுழைக்க வழிவகுத்தது. கணவனிடம் தன்மானப் பிரச்சனையை மூட்டி விடலாம், மனைவிக்கு ரோஷத்தை ஊட்டலாம். இந்த இடைவெளியைப் பயன்படுத்தி இல்லறத்தை இல்லாமலாகி விடலாம். அதுதான் அங்கும் நடந்தது.
வாழ்க்கைச்சக்கரத்தில் ஏற்றம் இருந்தால் இறக்கமும் இருக்கும். இதன் உச்சக்கட்டத்தில் அபுல் ஃபதாஹ் தன் அன்பு மனைவி ஜமீலாவை ''தலாக்'' கூறிவிட்டார். இதனால் உள்ளமும் உடலும் ஒடிந்து போய் தன் சகோதரனின் இல்லம் போய்ச் சேர்ந்தார் ஜமீலா.
நடந்ததைச் சகோதரர் முஅக்கலிடம் விபரமாக எடுத்துச் சொன்னார். முஅக்கலின் உள்ளத்திலும் ஷைத்தான் வஞ்சக எண்ணத்தைப் பாய்ச்சி விட்டான். ''என் சகோதரியைத் தலாக் கூறி விட்டானா அவன்? இதன் பின்னர் அவனாக வந்து உன்னை அழைத்தாலும் நான் உன்னை அனுப்ப மாட்டேன்'' என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
நாட்கள் நகர்ந்தன. ஒன்றாக வாழ்ந்தபோது குறைகளையும், தப்புத் தவறுகலையும் பேசி சண்டையிட்டுக் கொண்ட இரு தம்பதிகளும் தனித்திருந்து கடந்தகால அன்பு கலந்த இல்லற இன்பங்களை அசை போட்டபோது மீண்டும் அந்த மகிழ்ச்சியான இன்பகரமான மணவாழ்வு மலராதா என மனம் ஏங்கத் துவங்கினர்.
இணைந்திருந்தபோது அடுத்தவர் குரைகளைப் பேசியவர்கள் தனித்திருந்து தமது குரைகளை எண்ணி வெட்கப்பட்டனர், வேதனைப்பட்டனர். அடுஔத்தவர் தரப்பு நியாயத்தை உணரத்தலைப்பட்டனர்.
உடலால் இணைந்திருந்தபோது உள்ளத்தால் பிரிந்திருந்தனர்; இப்போதோ, உடலால் பிரிந்து உள்ளத்தால் ஒன்றித்து வாடினர், வதங்கினர்.
எனினும் ஜமீலா ஒரு பெண்! சகோதரனின் அரவணைப்பில் வாழ்பவர். அவரால் கவலைப்பட முடிந்தது. காரியம் ஆற்றும் துணிச்சல் இருக்கவில்லை. அபுல் ஃபதாஹ் அவசரப்பட்டு தலாக் கூறிவிட்டார். மீண்டும் எப்படிப் போய்ப் பெண் கேட்பது?! வெட்கமும், தன்மான உணர்வும் தடை போட்டன. நாட்கள் நகர்ந்தன. "இத்தா" காலமும் முடிந்து விட்டது.
இந்த குறிப்பிட்ட காலத்தில் அபுல் ஃபதாஹ் ரொம்பவும் நொந்து போனார். தனது மச்சானிடம் நேரடியாகச் சென்று, தான் தனது மனைவியுடன் மீண்டும் இணைந்து வாழ அனுமதி கோரினார். ஜமீலாவும் இதைத்தானே எண்ணி எண்ணி இத்தனை நாட்களாக ஏங்கினார்! அவரும் அதற்கு விரும்பினார். எனினும், முஅக்கல் முடிவு வேறாக இருந்தது.
''முடியாது, முடியவே முடியாது. எனது சகோதரியைப் பலரும் பெண் கேட்டனர். நான் அவளை உனக்கு மணம் முடித்துத்தந்தேன். உன்னை மதித்தேன். ஆனால், நீயோ எனது சகோதரியை மீட்டிக்கொள்ளத்தக்க தலாக்கை கூறியுள்ளய். இருந்தாலும் உனக்கு அவளை மீண்டும் மணம் முடித்துத் தர முடியாது. எனது சகோதரியை மணமுடிக்கப் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்'' என்று முடிவாகவே கூறிவிட்டார்.
உடைந்துபோன உள்ளத்துடன் அபுல் ஃபதாஹ் திரும்பினார். இவரை விட்டு விட்டு இன்னொரு கணவருடன் வாழ்வதா? என்ற ஏக்கம் ஜமீலாவைத் தொற்றிக் கொண்டது. தனக்குத் துணையாக நிற்கும் சகோதரனையும் மீற முடியாது; தனது கணவன் மீதுள்ள அன்பையும் அழிக்க முடியாது; உருகிப் போனார் ஜமீலா! இந்தப் பெண்ணின் உளப் போராட்டத்தை, உணர்வுகளை மதித்து அல்லாஹ்வின் அருள்மழை வசனம் அருளப்பட்டது.
"நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து அவர்கள் தங்கள் (இத்தா) காலக்கெடுவின் எல்லையை நிறைவு செய்து (மீண்டும்) அவர்கள் தமக்குள் நல்ல முறையில் உடன்பட்டுக்கொண்டால் (அப்)பெண்கள் தங்களது கணவன்மார்களை (மறுமுறை) மணமுடிப்பதை (பொருப்புதாரிகளாகிய) நீங்கள் தடுக்க வேண்டாம். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன் படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்." (அல்குர்ஆன் 2:232)
இந்த இறை வசனம் "தலாக் ரஜஈ (மீட்கத்தக்க முதல் இரு தலாக்) கூறப்பட்டு, இத்தா காலம் முடிந்த பின் அந்த இரு தம்பதிகளும் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால் குடும்பம் அதற்குத் தடையாக இருக்கக்கூடாது. அல்லாஹ்வையும், மறுமையையும் நம்புகின்றவர்கள் தன்மானப் பிரச்சனைக்காகவோ, கவுரவப் பிரச்சனைக்காகவோ அவர்கள் இணைவதற்குத் தடையாக அமையக் கூடாது என்கிறது. இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை எந்த அளவு அக்கறையுடன் மதிக்கிறது என்பதற்கு இந்த இறைவசனம் நல்ல சான்றாகும்.
இந்த வசனம் இறங்கியதும் ஜமீலா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரர் முஅக்கல், "எனது ரட்சகனின் கட்டளைக்கு நான் கட்டுப்படுகிறேன்" எனக் கூறி மீண்டும் அவர்களை மணம் முடித்து வைத்தார். (நூல்: தஃப்ஸீர் இப்னு கதீர்)
 கணவனை வெறுத்த மனைவி 
 ஜமீலா உபை இப்னு ஸலூல் ரளியல்லாஹு அன்ஹா:
இன்னொரு ஜமீலாவோ இதற்கு வித்தியாசமானவர். இவர் தனது கணவரை வெறுத்தார். அவருடன் வாழ விரும்பவில்லை. இவரது இந்த உணர்வையும் இஸ்லாம் மதித்தது. இன்றைய நவீன யுகத்தில் கூட பெண் தனது கணவனை விவாகரத்து செய்வது மிகவும் கடினம். ஆனால், இஸ்லாம் பெண்களின் உணர்வையும், இயல்பையும் புரிந்து அதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது.
இந்த ஜமீலா, உபை இப்னு ஸலூலின் மகள் ஆவார். இவரது பெயர் ஜமீலா என்றும் ஹபீபா, ஸைனப் (நூல்: பைஹகி) என்றும் கூறப்படுகிறது. இவர் ஹன்ளலா இப்னு அபூ ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவியாக இருந்தார். அவர் உஹதில் கொல்லப்பட்ட ஸஹாபியாவார்;. அதற்குப் பின் ஒரு தோட்டத்தை மஹராக வழங்கி தாபித் இப்னு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்பெண்ணை மணம் முடித்தார்கள். இவருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் போதுதான் இவருக்குக் கணவர் மீது வெறுப்பு உண்டானது.
கணவனைப் பிடிக்கவில்லை என்று மனைவி கணவனை பிரிவதற்கு விவாகரத்து பெறுவதற்கு "அல் குல்உ" எனக் கூறப்படும். இஸ்லாத்தில் முதன் முதலாக இந்த உரிமையைப் பயன்படுத்தியவர் இவரே.
தாபித் இப்னு கைஸ் ரளியல்லாஹு அன்ஹு நல்ல மனிதர். இருப்பினும் அழகற்றவர். அவரது புறத்தோற்றம் இப்பெண்ணுக்குப் பிடிக்கவில்லை. இல்லற வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில் இதைச் சகித்துக் கொண்டாலும் போகப் போக வெறுப்பேற ஆரம்பித்தது.
எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! தாபித் இப்னு கைஸ் (எனது கணவர்) நல்ல மனிதர்; அவரது மார்க்க நடத்தையிலோ, ஒழுக்க வாழ்விலோ நான் குறை கூறமாட்டேன். இருப்பினும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே நான் குஃப்ரை வெறுக்கிறேன், (கணவனுக்கு மாறு செய்வதும், நன்றி கெட்டு நடப்பதும், கட்டுப்படாமல் இருப்பதும் "குஃப்ர்" எனக் கூறப்படும்.) நான் கணவனுக்கு மாறு செய்யும் நிலை ஏற்படலாம்" என்றார்கள்.
மற்றும் சில அறிவிப்புகளில் "நான் சில ஆண்களுடன் என் கணவரைப் பார்த்தேன். அவர்களில் என் கணவரே அதிக கருப்பாகவும், அதிகம் கட்டையாகவும் இருந்தார்" என்று கணவனின் புறத்தோற்றக் குறைபாட்டைக் காரணம் காட்டுகின்றார்.
இந்த அளவு கணவன் மீது வெறுப்பு ஏற்பட்டால் அதன் பின்னும் அவர்கள் சேர்ந்து வாழ்வது தேவையற்ற சர்ச்சைகளுக்கும், ஒழுக்க சீரழிவுகளுக்குமே வழிவகுக்கும். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தாபித் மஹராக (மணக்கொடையாக) வழங்கிய தோட்டத்தை அவருக்குத் திருப்பி வழங்கிவிட சம்மதிக்கிறாயா?" எனக் கேட்டார்கள். அதற்கு அப்பெண் அதையும் கொடுத்து, இன்னும் அதிகமாகவும் கொடுக்கத் தயார்!" என்றார்கள். "அதிகமாகக் கொடுக்க வேண்டியதில்லை; அவரது தோட்டத்தை மட்டும் வழங்கினால் போதும்" எனக் கூறி, அவர்கள் இருவரையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரித்து வைத்தார்கள்.
கணவன் தன் மனைவியை விவாகரத்துச் செய்தால் கொடுத்த மஹர் ஒரு பொற்குவியல் என்றாலும் திரும்பப் பெற முடியாது. ஆனால், மனைவியே கணவனை வேண்டாம் என்று கூறினால், எடுத்த மஹரை திருப்பிக் கொடுக்க வேண்டும்.
கணவனை வேறுத்த இப்பெண்ணின் உணர்வையும் மதித்து பின்வரும் இறைவசனம் அருளப்பட்டது.
(மீட்டிக்கொள்ள உரிமை பெற்ற) தலாக் இரண்டு தடவைகளே! பின்னர் உரிய விதத்தில் (அவர்களை) வைத்துக்கொள்ளலாம். அல்லது நல்ல முறையில் விட்டு விடலாம். (மனைவியர்களாகிய) அவர்களுக்கு நீங்கள் கொடுத்தவற்றில் எதனையும் நீங்கள் எடுத்துக்கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல. எனினும், அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணமுடியாது என அஞ்சினாலும், அல்லாஹ்வின் வரம்புகளை அவ்விருவரும் பேண மாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் அஞ்சினாலும் மனைவி (தானாக விரும்பி கணவனுக்குக்) ஏதேனும் ஈடாகக் கொடுத்து (பிரித்து) விடுவதில் இருவர் மீதும் குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். ஆகவே, இவற்றை மீறாதீர்கள். யார் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றார்களோ அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்." (அல்குர்ஆன் 2:229)
இந்த இரு பெண்களின் இயல்புகளும், குணங்களும் உலக அழிவு வரை நிகழும் பெண்களுக்குத் தேவையான இல்லற சட்டங்கள் இரண்டை வழங்கி விட்டன. இஸ்லாம் பெண்களின் உணர்வுகளை ஊணப்படுத்தாது எவ்வளவு அழுத்தங்கொடுத்து அக்கரை செலுத்துகின்றது என்பதற்கு இந்த வசனங்கள் சான்றாக அமைந்துவிட்டன.
பெண்ணுரிமை பெண்ணுரிமை என்று வாய்க்கிழிய கூக்குறலிடுபவர்கள் இந்த இரண்டு சம்பவங்களை அறிந்திருப்பார்களேயானால் ஊமையாகிப்போய் நிற்பார்கள். இஸ்லாம் பெண்ணுக்கு எந்த அளவு உயர்வான அந்தஸ்தையும் உரிமையையும் வழங்கியிருக்கிறது என்பதற்கு இந்த இரு வரலாற்று சம்பவங்கள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.