வியாழன், அக்டோபர் 18, 2012

பரவும் டெங்கு காய்ச்சல்: தடுக்கும் வழிமுறைகள்[ டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.
நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.]
டெங்கு பாதிக்கப்பட்டோருக்கு, உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன் கூடிய தொடர் காய்ச்சல், இரண்டு நாட்களுக்கு மேல் இருக்கும். இரண்டு மாத இடைவேளைக்கு பின், இரண்டு வாரங்களாக, தமிழகத்தில், மீண்டும், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
சென்னை, வேலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த ஒன்பது மாதங்களில், 4,500-க்கும் மேற்பட்டோர், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களில், சிறுவர், சிறுமியர் உட்பட 50-க்கும் அதிகமானோர், இதுவரை இறந்துள்ளனர். இருப்பினும், "டெங்கு காய்ச்சல் குறித்து, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை' என, மாநில சுகாதார துறை அதிகாரிகள் மூலம், மத்திய சுகாதார அமைச்சர் வரை, திரும்ப திரும்ப சொல்லி வருகின்றனர்.
ஆனால், டெங்கு அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இக்காய்ச்சலால் இறப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தங்கள் பிள்ளைகள், உறவினர்களுக்கு, காய்ச்சல் வந்தாலே, அது டெங்குவாக இருக்குமோ என அச்சப்படும் அளவிற்கு, பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த பீதியில் இருந்து விடுபடவும், டெங்கு வராமல் தடுக்க, பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நிலைய மருத்துவ அதிகாரி(ஆர்.எம்.ஓ.,) பொன்னுராஜேஸ்வரி, பேட்டி:
டெங்கு காய்ச்சல் எதனால் வருகிறது? எந்த பருவத்தில், இக்காய்ச்சல் அதிகம் பரவுகிறது?: பகல் நேரத்தில் மட்டும் மனிதர்களை கடிக்கும், "ஈடிஸ்' வகை கொசுக்கள் மூலம், டெங்கு காய்ச்சல் பரவுகிறது. டெங்கு வைரஸ் இக்காய்ச்சலை உண்டாக்குகிறது. ஆண்டு முழுவதும் இக்காய்ச்சல் வந்தாலும், பருவமழை காலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.
டெங்குவின் அறிகுறிகள் என்ன?: டெங்கு பாதிப்பிற்கு ஆளாவோருக்கு, இரண்டு நாட்களுக்கு மேல், உடல் எலும்பு இணைப்புகளில் தீவிர வலியுடன்கூடிய தொடர் காய்ச்சல் இருக்கும்.
இந்த அறிகுறிகள் இருந்தால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?: நம் மக்களில் பெரும்பாலோரிடம், காய்ச்சல் என்றால், முதலில் மருத்து கடைகளுக்கு சென்று, தன்னிச்சையாக மாத்திரை உட்கொள்ளும் போக்கு உள்ளது. ஆபத்தான இப்போக்கை கைவிட்டு, உடல்வலியுடன்கூடிய காய்ச்சல் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வது அவசியம்.
டெங்கு அறிகுறியுடன் வருவோருக்கு, என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படுகின்றன? டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு, முதலில், ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அறியும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். சராசரியாக ஒரு மனிதனின் ரத்தத்தில், அவரவர் வயதிற்கேற்ப, 1.5 லட்சம் முதல் 4 லட்சம் வரை, தட்டணுக்கள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை, 60 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தால், அவர்களுக்கு டெங்கு இருக்க, அதிக வாய்ப்பு உள்ளது. அதை உறுதி செய்யவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு, கூடவே, தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான சிகிச்சையும் தரப்படும்.
டெங்குவில் எத்தனை நிலைகள் உள்ளன?: மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு, டெங்கு வைரஸ் பாதிப்பதால், மூன்று முதல் ஏழு நாட்கள் வரை, காய்ச்சல் இருக்கும். மற்றப்படி பெரிய பாதிப்புகள் இருக்காது.
இக்காய்ச்சல் வந்துபோன சில நாட்கள் இடைவெளியில், மீண்டும் டெங்கு வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவோர், காய்ச்சலின் இரண்டாம் நிலையில் உள்ளவர்களாக கருதப்படுவர். இவர்களுக்கு, ரத்தம் உறைவதற்கு தேவையான தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து, வாய், மூக்கு போன்ற பகுதிகளில் ரத்தபோக்கு ஏற்படும். இந்நிலை முற்றியவர்கள், டெங்குவின் மூன்றாம் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இவர்களுக்கு, ரத்தபோக்கின் காரணமாக, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு குறைந்து, மயக்க நிலையை அடைவர். தோலில் ஆங்காங்கே சிகப்பு புள்ளிகள் உண்டாகும்.
டெங்கு தாக்குதலுக்கு ஆளாகி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் உள்ளவர்களுக்கு தான் உயிரிழக்கும் அபாயம் அதிகம்.
ஆனால், தற்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரில், 90 சதவீதம் பேருக்கு, டெங்குவின் முதல் நிலை பாதிப்பு மட்டுமே உள்ளதால், பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.

அல்லாஹ்வின் நேசம் பெற்றவரும், நேசம் பெறாதவரும்....2:222. மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: "அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்."
3:31. (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.
3:76. அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்); நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.
3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக)நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
3:146. மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.
3:148. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்; இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்; எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக; அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக; தவிர,சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும்; பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்துவீராக! - நிச்சயமாக அல்லாஹ் தன் மீதுபொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.
5:13. அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம்; (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள்; ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பீர்; எனவே நீர் அவர்களை மன்னித்துப் புறக்கணித்து விடுவீராக. மெய்யாகவே நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
5:42. அன்றியும், இவர்கள் பொய்யையே அதிகமாகக் கேட்போராகவும், விலக்கப்பட்ட பொருட்களையே விழுங்குவோராகவும் இருக்கின்றனர்; (நபியே!) இவர்கள் உம்மிடம் வந்தால், இவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்கும்; அல்லது இவர்களைப் புறக்கணித்து விடும்; அப்படி இவர்களை விடுவீராயினும், இவர்கள் உமக்கு யாதொரு தீங்கும் செய்ய முடியாது; ஆனால், நீர் (இவர்களிடையே) தீர்ப்பளிப்பீராயின்நியாயமாகவே அவர்களிடையில் தீர்ப்பளிப்பீராக; ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் நீதிமான்களையே நேசிக்கின்றான்.
5:93. ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டு, ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது; நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான்.
9:4. ஆனால், நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்ட இந்த முஷ்ரிக்குகளில், எதையும் குறைத்துவிடாமலும், உங்களுக்கு விரோதமாக எவருக்கும் உதவி செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களைத் தவிர: அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களின் காலக் கெடுவரையில் பூரணமாக நிறைவேற்றுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:7. அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் முஷ்ரிக்குகளுக்கு எப்படி உடன்படிக்கை இருக்க முடியும்? ஆனால், நீங்கள் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபத்துல்லாஹ்) முன்(எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டீர்களோ, அவர்களைத் தவிர; அவர்கள் (தம் உடன்படிக்கைப்படி) உங்களுடன் நேர்மையாக நடந்து கொள்ளும்வரை நீங்களும் அவர்களுடன் நேர்மையாக நடந்துகொள்ளுங்கள் -நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோரை நேசிக்கின்றான்.
9:108. ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும்,தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.
10:63. அவர்கள் ஈமான் கொண்டு (அல்லாஹ்விடம்) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
49:9. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால்,அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.
60:8. மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்.
61:4. எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடைய பாதையில் போரிடுகிறார்களோ, அவர்களை நிச்சயமாக (அல்லாஹ்) நேசிக்கின்றான்.
மட்டுமா!???? எத்தகையோரை அல்லாஹ் நேசிக்கமாட்டான் என்றும் அல்லாஹ் நமக்கு சொல்லி தருகிறான். அந்த இலக்கணத்தையும் சற்று பார்த்து, அப்படிப்பட்ட குணங்களை விட்டொழிந்து வாழ்ந்தால் அல்லாஹ்வின் நேசத்தை பெறலாம்.....இறைநேசராக வாழலாம்.....வாங்க.....
2:190. உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
2:205. அவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்; கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.
2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
3:32. (நபியே! இன்னும்) நீர் கூறும்: "அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள்." ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.
3:57. ஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்குரிய நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.
3:140. உங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது; இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்; இதற்குக் காரணம், ஈமான் கொண்டோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்; இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.
4:36. மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
4:107. (நபியே!) பிறருக்கு தீமை செய்து அதனால் எவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்களோ அவர்களுக்காக நீர் வாதாட வேண்டாம்; ஏனென்றால் கொடிய பாவியான சதி செய்து கொண்டிருப்பவரை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
5:64. "அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்;அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; உம் மீது உம் இறைவனால் இறக்கப்பட்ட (இவ்வேதம்) அவர்கள் அநேகரில் வரம்பு மீறுதலையும் குஃப்ரை (நிராகரிப்பை)யும் நிச்சயமாக அதிகப் படுத்துகிறது, ஆகவே அவர்களிடையே பகைமையும், வெறுப்புணர்ச்சியையும் இறுதி நாள்வரை நாம் போட்டுவிட்டோம்; அவர்கள் யுத்த நெருப்பை மூட்டும்போதெல்லாம் அதனை அல்லாஹ் அணைத்து விடுகிறான்; (ஆயினும்) இன்னும் அவர்கள் பூமியில் குழப்பம் செய்து கொண்டே திரிகின்றனர்; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களைநேசிக்க மாட்டான்.
5:87. முஃமின்களே! அல்லாஹ் உங்களுக்கு ஹலாலாக்கி (ஆகுமாக்கி)யுள்ள, பரிசுத்தமான பொருட்களை ஹராமானவையாக (விலக்கப்பட்டவையாக) ஆக்கிக் கொள்ளாதீர்கள்; இன்னும் வரம்பு மீறியும் செல்லாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
6:141. பந்தல்களில் படரவிடப்பட்ட கொடிகளும், படரவிடப்படாத செடிகளும், பேரீத்த மரங்களும் உள்ள சோலைகளையும், புசிக்கத்தக்க விதவிதமான காய், கறி, தானியங்களையும், ஒன்றுபோலும் வெவ்வேறாகவும் தோற்றமளிக்கும் ஜைத்தூன் (ஒலிவம்) மாதுளை ஆகியவற்றையும், அவனே படைத்தான். ஆகவே அவை பலனளித்தால் அவற்றின் பலனிலிருந்து புசியுங்கள். அவற்றை அறுவடை செய்யும் காலத்தில் அதற்குரிய (கடமையான) பாகத்தைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள்- நிச்சயமாக அவன் (அல்லாஹ்) வீண் விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
7:55. (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
9:24. (நபியே!) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும்,அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டுவருவதை எதிர்பார்த்து இருங்கள் - அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை.
16:23. சந்தேகமின்றி அல்லாஹ், அவர்கள் மறைத்து வைத்திருப்பதையும்; அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும்; நிச்சயமாக அறிவான்; (ஆணவங் கொண்டு) பெருமையடிப்பவர்களை அவன் நிச்சயமாக நேசிப்பதில்லை.
22:38. நிச்சயமாக, அல்லாஹ் ஈமான் கொண்டவர்களை (முஷ்ரிக்குகளின் தீமைகளிலிருந்து) பாதுகாத்துக் கொள்கிறான் - நம்பிக்கை மோசம் செய்பவர்களையும், நன்றி கெட்ட மோசக்காரர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.
28:76. நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான்; அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன; அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம்: "நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்" என்று கூறினார்கள்.
28:77. "மேலும், அல்லாஹ் உனக்குக் கொடுத்த (செல்வத்)திலிருந்து மறுமை வீட்டைத்தேடிக் கொள்; எனினும், இவ்வுலகத்தில் உன் நஸீபை (உனக்கு விதித்திருப்பதையும்) மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லதைச் செய்திருப்பதைப் போல், நீயும் நல்லதை செய்! இன்னும், பூமியில் குழப்பம் செய்ய விரும்பாதே; நிச்சயமாக அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை" (என்றும்கூறினார்கள்).
30:45. ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்தவர்களுக்கே அவன் தன் அருளிலிருந்து (நற்) கூலி கொடுக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிக்கமாட்டான்.
31:18. "(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
42:40. இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான்.
57:23. உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

எப்பொழுதெல்லாம் உங்கள்கணவர் பொய் சொல்கிறார் தெரியுமா?கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான். அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம்.
ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று''என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு?'' என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?. உடனே ''சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா'' என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூடபெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.
மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால். ''சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே. நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு 'அதை'ப் பார்க்கணும்'' என்பார்கள்.
இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான். ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள். கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே உணர்வார்கள்.
அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். இருந்தாலும், சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள். அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம்.
கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள். உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் சில ஆண்கள்.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை மனதில் கொள்வது நல்லது.

நேர்வழி இயக்கம்அளவற்ற அன்புடனும் கண்ணியம் நிறைந்த உள்ளச்சத்துடனும் அல்லாஹ்வை சார்ந்து நிற்றல், அவனை வணங்கி வழிபடுதல், அவனை வணங்குவதற்கு அவன் வகுத்துத் தந்த கிரியைகளைத் தாண்டி அணுவளவும் அப்பால் செல்லாதிருத்தல். அவனிடமே உதவி தேடுதல்.
வாழ்வின் சகல விவகாரங்களிலும் அவனது சட்டங்களுக்கு முற்றிலும் கட்டுப்படுவது அவனது வழிகாட்டல் தவிர்ந்த அனைத்தையும் தனது வாழ்விலிருந்து புறந்தள்ளுதலும் அவனது பண்புகளில் ஒன்றையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ பிறிதொரு படைப்புக்கு வழங்கி அவனுக்கு இணைவைக்காதிருத்தல்.
அவனது ஏற்பாடுகளைப் பொருந்திக் கொள்ளுதல், அருளையும் அபிவிருத்தியையும் சௌபாக்கியங்களையும் இடைத்தரகர்களின்றி அவனிடமே நேரடியாக வேண்டி நிற்றல், உலகில் அவன் தரும் சௌபாக்கியங்களுக்கு நன்றி செலுத்துவதோடு, வாழ்வின் எந்தக் கட்டத்திலும் விரக்தியடையாமல் இருத்தல், அவனது அன்பும் சுவனமும் தன்னிகரில்லாத பேறு என்பதை உணர்ந்து செயல்படுதல்.
வழிமுறைகளில் சிறந்தது நபிகளாரின் வழிமுறை
இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எமது தலைவரும் வழிகாட்டியும் முன்மாதிரியுமாவார். அன்னாரை ஒரு முழு மனிதராகவும் அல்லாஹ்வின் தூய அடியாராகவும் தூதராகவும் சாட்சி கூறி,அவரை நேசித்து வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் அன்னாரின் முன்மாதிரிகளைப் பின்பற்றுதல். இறுதித் தூதரின் பன்முக ஆளுமையில் ஒரு பக்கத்தைக் காட்டி மற்றுமொரு பக்கத்தை மறைக்காதிருத்தல். அன்னாரது முன்மாதிரிமிக்க நடத்தைகளையும் பண்பாடுகளையும் வாழ்க்கை முறையையும் நாகரிகத்தையும் ஸ்தாபிக்கும் பணியில் அன்னாரது சிந்தனைப் பாங்கோடும் அர்ப்பணத்தோடும் ஈடுபடுதல்.
குர்ஆன், ஸுன்னாவை அணுகுதல்
குர்ஆன், ஸுன்னாவை அடிப்படை மூலாதாரங்களாகக் கொள்ளல். துணை மூலாதாரங்கள் பற்றிய அறிவையும் பெற்றிருத்தல். இறுதித் தூதரின் வாழ்க்கையான ஸீராவிலிருந்து இஸ்லாமியப் புனர்நிர்மாணப் பணி பற்றிய சிந்தனைத் தெளிவைப் பெறல். அந்த சிந்தனையோடும் குர்ஆன், ஸுன்னாவை அணுகுவதற்கு எமது முன்னோர்கள் வகுத்துத்தந்த வழிமுறைகளோடும் குர்ஆன், ஸுன்னாவை விளங்குதல். எமது சிந்தனைகளுக்கு குர்ஆன், ஸுன்னாவின் ஆதாரம் தேடும் வழிமுறையைக் கைவிட்டு குர்ஆன் ஸுன்னாவின் சிந்தனைப் போக்கைப் பிரதிபலிக்கும் வகையில் குர்ஆனினதும் ஸுன்னாவினதும் வசனங்களைக் கையாளுதல். நவீன பிரச்சினைகள் உட்பட அனைத்து விவகாரங்களிலும் குர்ஆன்,ஸுன்னாவின் கோட்பாடுகள், சிந்தனைகள், வழிகாட்டல்களின் பால் வருமாறு மக்களை அழைத்தல், இஸ்லாத்தை விளங்குவதிலும் அமுல்படுத்துவதிலும் கடை பிடிக்க வேண்டிய 20 அம்சத் திட்டமொன்றை கலாநிதி யூஸுப் அல்கர்ழாவி அவர்கள் "கோளாறு எங்கே?" என்ற தனது நூலில் தருகிறார். (பக்கம்: 85,86) அவற்றையும் இங்கு கவனத்தில் கொள்ளலாம். இன்னும் பல நூல்களையும் இது விடயத்தில் இஸ்லாமிய அழைப்பாளர்கள் படித்திருக்க வேண்டும்.
இரண்டு அறிவுகள்  
சமூகத்தை அறிவூட்டி வழிப்படுத்துவதில் முனைப்போடு செயல்படுதல். இரண்டு வகையான அறிவுகளை அல்லாஹ் மனிதனுக்கு வழங்கியுள்ளான்.
1. வானத்தையும் பூமியையும் அதிலுள்ளவற்றையும் வசப்படுத்தும் ஆற்றல் மிக்க பகுத்தறிவும் அது சார்ந்த அறிவியல்களும்.
2. மனிதர்களையும் அவனது சிந்தனைப் பாங்கு, மனப்பாங்கு மற்றும் நடத்தைகள், வாழ்க்கை முறை, பண்பாடு, நாகரிகம் என்பவற்றை நெறிப்படுத்தி வழிநடத்தும் வேத அறிவு.
இவ்விரு அறிவுகளையுமோ அல்லது அவற்றில் ஒன்றையோ புறக்கணிப்பதனால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்திருத்தல். இந்த அறிவுத் துறைகளை முடியுமானவரை வளர்ப்பதன் மூலம் அறிவுச் சமூகமொன்றைக் கட்டியெழுப்பமுனைதல்.
இஸ்லாத்தை முன்வைக்கும் முறை
ஈமான், இபாதத், அக்லாக், ஆதாப், முஆமலாத், முஆஷராத், இகாமதுத்தீன் என எப்பகுதியையும் புறந்தள்ளாமல்,மறைக்காமல், முக்கியத்துவத்தைக் குறைக்காமல் இஸ்லாத்தை அதன் மொத்த வடிவில் தூய்மையாகவும் தெளிவாகவும் முன்வைத்தல். இஸ்லாத் தின் ஒரு பகுதியைக் காட்டி மற்றொரு பகுதியை மறைப்பது சாபத்துக்குரிய செயலாகும். அது மட்டுமல்ல, அர்த்தமற்ற கதைகள் புராணங்களால் இஸ்லாத்தை அசிங்கப்படுத்தாமல் குர்ஆன், ஸுன்னாவின் அறிவுபூர்வமான கோட்பாடுகள், சிந்தனைகள், வழிகாட்டல்களால் அதன் மகிமையை உலகறியச் செய்தல்.
"இபாதத்" எனும் வணக்கமும் அதன் பரப்பும்
"இபாதத்" எனும் வணக்கம் மனிதன் படைக்கப்பட்டதன் நோக்கமாகும். வணக்கம் என்றால் வாழ்க்கை வாழ்க்கை என்றால் வணக்கம் என்பதே "இபாதத்" பற்றிய இஸ்லாத்தின் கோட்பாடாகும். இந்தக் கோட்பாட்டை சுருக்கமாய் சிதைக்காமல் செயல்படுதல். ஒரு சில செயல்களோடு "இபாதத்" சுருங்கி விடுமானால் அதிகமான நடத்தைகளில் மக்கள் அலட்சியமாக இருந்துவிட்டுப் போவார்கள். இது பிழையான புரிதலும் வழிநடத்தலுமாகும்.
நடுநிலையும் வழிகேடும்
ஒரு தீமையின் தீவிரத்தைக் காணும்போது அதன் எதிர்விளைவாக மற்றுமொரு தீமையின் பக்கம் செல்லாதிருத்தல். அவ்வாறு செல்வது ஒரு வழிகேடாகும்.
உதாரணமாக, ஒரு சாரார் அளவு கடந்து விதியை நம்பியபோது மற்றொரு சாரார் அளவு கடந்து பகுத்தறிவைப் போற்றலாயினர். ஒரு சாரார் அளவு கடந்து மத்ஹப்களைப் பின்பற்றியபோது மற்றொரு சாரார் மத்ஹபுகளையே தூக்கி எறிந்தனர். இதனால் "நடுநிலை" எனும் இஸ்லாத்தின் சிறப்பியல்பு பாதிக்கப்படுகிறது. வழிகேடு தோற்றம் பெறுகிறது. நடுநிலை என்பது இஸ்லாத்தின் அனைத்து விவகாரங்களிலும் இழையோடும் அதன் சிறப்பியல்பாகும். அந்தச் சிறப்பியல்பு மறுக்கப்படும் போது தீவிர ஒருபக்க ஈடுபாடு அல்லது தீவிர ஒரு பக்க புறக்கணிப்பு ஆகிய இரு வழிகேடுகள் தோற்றம் பெறுகின்றன.
மாறாத அடிப்படைகள், மாறிவரும் சூழ்நிலைகள்
என்றும் மாறாத இஸ்லாத்தின் அடிப்படைகள், விதிகள் எவை என்பதை அறிந்திருத்தல். கால சூழ்நிலைகளுக்கேற்ப மாற்றம் பெறுபவை எவை என்பதையும் அறிந்திருத்தல். மாற்றங்களை அறிமுகம் செய்யும்போது இஸ்லாத்தின் அடிப்படைகளோடு முரண்படாது இருப்பதை உறுதி செய்தல். மாற்றம் என்ற பெயரில் அடிப்படைகளோடு முரண்டுபம் நூதனங்களை அறிமுகம் செய்யாதிருத்தல். மாற்றம் தேவையில்லை என்ற பெயரில் மாற வேண்டியதை விடாப்பிடியாகப் பற்றிக் கொள்ளும் கடும்போக்கையும் தவிர்த்தல். சுருக்கமாகக் கூறினால், காலத்துக்குத் தேவையான மாற்றங்களை உட்படுத்தி காலத்தால் மாறாத அடிப்படைகளையும் பாதுகாத்து இஸ்லாமியப் பணியை முன்னெடுத்தல்.
மனித இனம் ஒரு குடும்பம்
படைப்பினங்கள் அல்லாஹ்வின் குடும்பம். அவற்றுள் மனிதன் அல்லாஹ்வின் பிரதிநிதி. அவனுக்காக அல்லாஹ் வானம்,பூமியையும் அவற்றிலுள்ளவற்றையும் வசப்படுத்திக் கொடுத்தான் என்ற வகையில் மனித இனத்தின் மீது அன்பு கொள்ளல்,மனிதனது கன்ணியத்தைப் பாதுகாத்தல், மனித நலனுக்காகவும் உரிமைகளுக்காகவும் உழைத்தல், இனவாதம்,பிரதேசவாதம் போன்ற நோய்களால் மனித நேயத்தை இழிவுபடுத்தாதிருத்தல், எப்போதும் நீதியின் பக்கம் நிற்றல்,உலகிலும் மறுமையிலும் எமக்கு நாம் விரும்புகின்ற அனைத்தையும் அத்தனை மனிதர்களுக்கும் விரும்புதல், மனிதனின் நல்வாழ்வுக்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளான இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சமூகங்களிடையே சமாதானத்தை யும் சகவாழ்வையும் புரிந்துணர்வையும் வளர்த்தல்.
முஸ்லிம் சமூகம் ஓர் உம்மத்தாகும்
அனைத்துப்பலம், பலவீனங்களுடனும் முஸ்லிம் சமூகத்தை ஓர் உம்மத்தாகக் கருதுதல். அதன் அறியாமைகளையும் பலவீனங்களையும் தவறுகளையும் பண்பாடாகக் களைய முயற்சித்தல். அன்பையும் சகோதரத்துவத்தை யும் சமூகத்தின் மத்தியில் வளர்த்தல், முஸ்லிம் சமூகத்தின் ஒருமைப்பாட்டை சிதைக்கும் அனைத்துக் காரணிகளையும் நிராகரித்தல், பணி செய்வதற்காகவே இயக்கங்கள் பாகுபாடு காட்டுவதற்கல்ல என்ற உண்மையை உணர வைத்தல். அனுமதிக்கப்பட்ட கருத்து வேறுபாடுகளில் கடும் போக்கைத் தவிர்த்து விட்டுக் கொடுப்போடு நடந்து கொள்ளுதல், சமூகத்தைப் பிளவுபடுத்தும் கட்சி அடிப்படையிலான அரசியலை மறந்து கொள்கை அடிப்படையிலான அரசியலை வளர்த்தல், மக்களை விரண்டோடச் செய்யும் "தன்பீர்" முறையைத் தவிர்த்து "தப்ஷீர்" முறையிலான தஃவாவை மேற்கொள்ளல். சிரமப்படுத்தும் அணுகுமுறைகளைத் தவிர்த்து இலகு படுத்தும் அணுகுமுறைகளை மார்க்கத் தீர்ப்புகளில் கைக் கொள்ளல், மாற்றங்களை ஏற்படுத்துவதில் பாய்ச்சல் போக்கை விடுத்து படிமுறைப் போக்கைக் கைக்கொள்ளல்.
குடும்ப மாண்புகள்
ஒழுக்க விழுமியங்களதும் பண்பாடுகளதும் உன்னதமான மனித இன விருத்தியினதும் பாசறையா கவும் பாதுகாப்பு அரணாகவும் விளங்கும் குடும்ப அமைப்பையும் அதன் மாண்புகளையும் பாதுகாத்தல் குடும்ப மாண்புகளைச் சீரழிக்கும் அனைத்து அறியாமைகளையும் கடுமையாக எதிர்த்து நிற்றல்.
பெண்கள்
இறுக்கமாக மூடி வைக்கமாலும் கட்டுப்பாடுகளின்றித் திறந்துவிடாமலும் இஸ்லாம் வழங்கிய உரிமைகளையும் சுதந்திரங்களையும் பெண்களுக்கு வழங்குதல். தங்களது ஆற்றல்களையும் திறமைகளையும் வெளிப்படுத்தி குடும்ப மாண்புகளைப் பாதுகாப்பதோடு இஸ்லாத்தினதும் மற்றும் சமூகம், தேசம் என்பவற்றினதும் மேம்பாட்டுக் குப் பங்களிப்புச் செய்பவர்களாக பெண்களைப் பயிற்று வித்து வழிநடத்தல்.
வெளிப்படையான செயற்திட்டம்
அல்லாஹ்வின் தூதர் செய்த பணியை அதன் தத்துவங்களோடும் கோட்பாடுகளோடும் இன்று மேற்கொள்வதற்கான தெளிவான, பகிரங்கமான செயற்திட்டத்தைக் கொண்டிருத்தல். அத்திட்டம் கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துத் துறைகளையும் தழுவியதாக இருத்தல். மறைமுகமான, இரகசிய நிகழ்ச்சி நிரல்கள் இல்லாதிருத்தல். அனைத்திலும் வெளிப்படைத் தன்மையையும் திறந்த போக்கையும் கொண்டிருத்தல், ஷீஆக்கள் போன்று தருணம் பார்த்துத் தன்னை மாற்றும் "தகிய்யா" பண்பாட்டை தனது உறுப்பினர்களிடையே வளர்க்காதிருத்தல், இயக்க நலனைப் பாதுகாப்பதற்காக இரகசிய ஏற்பாடுகள், மறைமுகமான அமைப்புகள், மூன்றாம் படை போன்றவற்றை வைத்துக் கொள்ளாதிருத்தல், திறந்த உள்ளத்தோடும் நேரிய சிந்தனையோடும் சமூகத்தையும் அதன் பிரச்சினைகளையும் சிறந்த செயற்திட்டங்கள் மூலம் அணுகுதல்.
தனி மனித வழிபாடு இல்லை
எமது இயக்கத்தைச் சார்ந்த தலைவர்கள், அறிஞர்களிடம் அன்பும் மரியாதையும் வைப்பதில் தவறில்லை. எனினும்,அவர்களிடம் மட்டுமே சத்தியம் இருக்கிறது. அவர்கள் சொல்லாத ஒன்று சத்தியமாக இருக்க முடியாது. அவர்களிடமல்லாது பிறிதொருவரிடம் மார்க்கம் கேட்க வேண்டியதில்லை. அவர்கள் சொல்லும் வரை ஒரு செய்தியை எத்தகைய மகான் வந்து சொன்னாலும் செவிமடுக்க மாட்டோம். அவர்கள் வகுத்து வைத்த வழிமுறைகளே இறுதியானவை. ஏனைய அனைத்தும் வழிகேடுகளே எனும் சிந்தனைதான் தனி மனித வழிபாட்டை வளர்க்கிறது. இந்த சிந்தனையை முற்றாக நிராகரித்து எமது நீண்ட வரலாற்றில் அன்றும் இன்றும் நட்சத்திரங்களாக இலங்கிக் கொண்டிருக்கும் அறிஞர் பெருமக்கள், இமாம்கள் அனைவரையும் கௌரவிக்கும் பண்பாட்டையும் அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் கொண்டிருத்தல். எந்த இமாமையும் இஸ்லாமிய அறிஞரையும் அவமதிக்காமலும் தூற்றாமலு மிருத்தல். அவர்களது தவறுகளை மன்னிக்குமாறு அல்லாஹ்வை இறைஞ்சுதல். ஸஹாபாப் பெருமக்களைத் தூற்றும் ஷீஆக்களின் குணங்களை முற்றாக நிராகரித்தல்.
ஒருமுகப்பட்ட சிந்தனை
நீதி, பரஸ்பரம் ஒத்துழைத்தல், மன்னித்தல், சகோதரத்துவம், பாரபட்சமின்மை, நாகரிகமான பேச்சு, கருத்து வேறுபாடுகளின்போது பேண வேண்டிய ஒழுக்கங்கள், இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கை நெறி, அதன் பன்முகத்தன்மை, சர்வதேசத் தன்மை, இஸ்லாத்தின் பொது நோக்கங்கள், முஸ்லிம் சமூகத்தில் அனைவரும் அங்கீகரிக்கின்ற பொதுவான உடன்பாடுகள் போன்ற இன்னோரன்ன அம்சங்களில் சமூகத்தின் சிந்தனையை ஒருமுகப்படுத்தும் முயற்சியில் பகிரங்கமாகவும் வெளிப் படையாகவும் ஈடுபடுதல், இத்தகைய சிந்தனை ஒருமைப் பாட்டுக்குத் தடையாக எதிரும் புதிருமான சிந்தனை களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடாதிருத்தல்.
யதார்த்தத்தை விளங்கி எதிர்கொள்ளுதல்
சமூகத்தின் எழுச்சி, வீழ்ச்சிக்கான இறை நியதிகளை அறிந்திருப்பதோடு சமூகத்தினதும் நாட்டினதும் உலகினதும் சமகால சூழ்நிலைகளையும் விளங்கியிருத்தல். எதிர்பார்ப்புக்கும் நிதர்சனத்துக்குமிடையிலான தூரத்தை மட்டிடுதல், தெளிவான தகவல்கள், தரவுகளின் அடிப் படையில் முடிவுகளை மேற்கொள்ளல். அவசரம்,  ஊகம், மேலோட்டமான கணிப்பு என்பன எம்மை வழிநடத்தலாகாது. வெறும் உணர்ச்சிமயமான செயல்பாடுகளின் விளைவு விபரீதமாகவே அமையும். எனினும்,நெறிப்படுத்தப்பட்ட உணர்ச்சிகள் அவசியமே.
அதேவேளை, அனைத்தையும் எமக்கெதிரானது என்றோ சதி என்றோ எதிர்மறையாக சிந்திப்பதைத் தவிர்த் தல்,வெற்றிகளையும் தோல்விகளையும் ஏற்கும் மனப்பான்மையைக் கொண்டிருத்தல். அவற்றுக்கான காரணி களையும் அறிந்திருத்தல். வெற்றியாளர்கள் மாற்றீடு களையும் தீர்வுகளையும் முன்வைப்பார்கள். தோல்வியடைந்தவர்கள் நியாயங்களையும் போதாமைகளையும் பேசுவார்கள். எதிலும் காரணிகளை அறிந்து விளைவுகளைத் தீர்மானித்து நலன்களை முதன்மைப்படுத்தி செயற்படும் போக்கைக் கொண்டிருத்தல்.
தூய்மையும் சரியானதும்
எண்ணத்தில் தூய்மையை வளர்த்துக் கொள்ளல். உள்ளத்தின் கட்டுப்பாடுகள் உறுப்புகளின் கட்டுப்பாடுகளை விட முக்கியம் வாய்ந்தவையாகும். உள்ளத்திள் பாவங்கள் உறுப்புகளின் பாவங்களை விட பாரதூரமானதாகும்.
அதே நேரம் சரியானதையும் செய்ய வேண்டும். தூய்மையான எண்ணத்தோடு பொருத்தமற்றவற்றை செய்வதும் அல்லது பொருத்தமானவற்றை தூய்மையான எண்ணமின்றிச் செய்வதும் பிழைகளாகும். தெளிவான மார்க்க விளக்கம் என்பது,சரியையும் பிழையையும் வேறுபடுத்தி அறிவது மட்டுமல்ல. மாறாக, இரண்டு சரிகளில் மிகச் சரியானது எது என்பதையும் இரண்டு பிழைகளில் கொடிய பிழை எது என்பதையும் அறிந்திருப்பதே. அது மட்டுமல்ல, அதிகமானோர் தமக்கு அவசிய மற்றவற்றை அறிந்திருக்குமளவு தமக்கு அவசியமானவற்றை அறிந்திருப்பதில்லை. பிழையான போக்குகளை விமர்சிக்குமளவு சரியான போக்குகளுக்கான இலக்கு களை மட்டிடத் தெரியவில்லை. இவ்வாறானதொரு நிலையில் தூய்மையான எண்ணம் ஒன்றால் மட்டும் வெற்றிகள் ஈட்டப்படுவதில்லை. அதே போன்று சரியானதைச் செய்வதால் கிடைக்கும் பாராட்டுகள், வெகுமதிகள், உயர்வுகள் என்பவற்றைத் தத்தமது குறிக்கோள்களாக ஆக்கிக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
சுய விசாரணை
ஆக்கம் தரும் நல்வினைகள், முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் தடுக்கும் எதிர்மறைகள் என்பவற்றைக் கண்டறிதல். சுய மதிப்பீடு, சுய விசாரணை என்பவற்றின் மூலம் தொடர்ச்சியாகக் குறைகளைக்களையும் முயற்சியில் ஈடுபடுதல். பிறரிடமிருந்து வரும் விமர்சனங்களை உதாசீனம் செய்யாது உண்மைகளை ஏற்றுக் கொள்ளல். தம்மை மறுசீரமைப்பதில் எப்போதும் நெகிழ்வுடனிருத்தல். நிபுணத்துவத்தை மதிப்பதன் மூலம் துறை சார்ந்தவர்களின் உள்ளீடுகளைப் பெறுதல். தமது தோல்விகளுக்கு பிறரது வெற்றிகளே காரணம் எனக் கருதாதிருத்தல்.
எதிரிகள் குறித்த எச்சரிக்கை
இஸ்லாமிய உம்மத் குறிவைக்கப்பட்ட ஓர் உம்மத்தாகும். அதன் எதிரிகள் நேற்று முளைத்தவர்களல்லர். இஸ்லாத்தின் உதயத்தோடு உள்ளும் புறமும் அவர்கள் தோன்றி விட்டார்கள். அவர்களுக்கு நீண்ட வரலாறுண்டு. அவர்களது விடயத்தில்தான் இந்த உம்மத்துக்கு எச்சரிக்கையும் அபாய உணர்வும் மிகைத்திருக்க வேண்டும். முஸ்லிமல்லாதவர்கள் அனைவரையும் எதிரிகளாக நோக்குவதைத் தவிர்க்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தினுள் எதிரிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஒரு பாரிய வழிகேடாகும். பிழையான கொள் கைகளுக்கும் அறியாமையினால் அவற்றை உண்மை என்று நம்பியவர்களுக்குமிடையில் வேறுபாடு அறிய நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
எதிர்காலம் இஸ்லாத்திற்கே
அல்லாஹ் வெற்றிகளை வாக்களிக்கிறான். அற்கான காரணிகளையும் வகுத்து விளக்கியுள்ளான். அவன் உதவி செய்தால் தோல்வியுறச் செய்வதற்கு யாரால் முடியும்? என்று அவன் வினா எழுப்புகிறான். அவ்வாறிருக்க, தோல்விகள் நிச்சயிக்கப்பட்டுவிட்டன பித்னாக்கள் மலிந்து விட்டன இறுதிக் காலம் நெருங்கி விட்டது நடப்புக்களை இனி மாற்ற முடியாது துஆவைத் தவிர எமக்கு இப்போது வழிகள் தெரியவில்லை என்றெல்லாம் அவநம்பிக்கையையும் தளர்வையும் ஏற்படுத்துவது நேர்வழியின்பாற்பட்ட செயலன்று. எதிர்காலம் இஸ்லாத்திற்கே என்ற நம்பிக்கையையும் அல்லாஹ்வின் வாக்குறுதிகள் நிறைவேறும் செயற்படுங்கள் என்ற உத்வேகத்தையுமே வழங்க வேண்டும்.
முக்காலத்தையும் பயன்படுத்தும் நிலை
கீர்த்திமிக்க எமது இறந்த காலத்தைப் பற்றிப் பேசுவதோடு தமது பணி முடிவடைவதாக நினைப்போர்... சோகமான நிகழ்காலத்தை விமர்சிப்பதால் தமது பங்களிப்பை வழங்கி விட்டோம் என்று கருதுவோர்... மஹ்தி (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வருகையின் மூலம்தான் எமது எதிர்காலம் மலரப் போகிறது என ஆசிப்போர்.... எதையும் சாதித்துவிடப் போவதில்லை. மாறாக, இறந்த காலத்திலிருந்து படிப்பினை பெற்று நிகழ்காலத்தின் வளங்களை ஒன்றுதிரட்டி எதிர்காலத்திற்காகத் திட்டமிடும் சாணக்கியர்களால்தான் இஸ்லாம் புத்தெழுச்சி பெறுகிறது. ஆக, முக்காலத்திலும் வாழ முடியுமான ஒரு செயலாற்றலைப் பெற்றிருத்தல் இஸ்லாத்தின் இலட்சியங்களுக்கு இன்றியமையாதது.
இத்தகைய பண்பு நலன்களையும் நடைமுறைகளையும் இஸ்லாமிய இயக்கங்கள் கைக்கொள்ள வேண்டும். இயக்கம் என்பது ஒரு தனி மனிதனைப் போன்றதல்ல. இயக்கத்தின் இயல்பும் நடைமுறைகளும் இலட்சியங்களும் தனி மனிதனை விட வேறுபட்டவை.
இயக்கத்தை இஸ்லாமிய விழுமியங்களாலும் இலட்சியங்களாலும் வரையறுக்கத் தவறினால் அந்த இயக்கத்தினால் இஸ்லாத்தின் வளர்ச்சியும் எழுச்சியும் பல தசாப்தங்கள் பின் தள்ளப்படலாம். எனவேதான் அற்ப காரணங்களுக்காக இயக்கங்களைப் புதிதாக உருவாக்குவதைத் தவிர்த்து இருக்கும் இயக்கங்களை நெறிப்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். ஓர் இயக்கம் நேரான பாதையில் செல்வது அங்கிருக்கும் மனிதர்களைப் பொறுத்ததல்ல. மாறாக,அந்த இயக்கத்தை வழிநடத்தும் கொள்கைகளையும் இஸ்லாமிய விழுமியங்களையும் பொறுத்ததே. ஓர் இயக்கத்திலுள்ள ஒரு சில தனி மனி தர்கள் சிலபோது தவறு செய்யலாம். ஆனால், இயக்கம் தனது கொள்கையிலோ விழுமியங்களிலோ சோரம் போக முடியாது.

பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் 'அந்தஸ்து'!பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். அதேபோல் தங்கள் பெற்றோர் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளும் விரும்புகிறார்கள்.
பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே போய், பெற்றோர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமின்றி, சமூகத்திலும் பலரால் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்துடன் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.
பெற்றோரின் அந்தஸ்து தங்களுக்கு தனி கவுரவத்தைக் கொடுப்பதாக கருதுகிறார்கள்.
பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால், எப்போதும் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். தங்கள் பிள்ளைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்கள்.
பொதுவாக எல்லா பெற்றோருக்கும் போதிய கல்வி அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது. போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். அந்த தாழ்வு மனப்பான்மையால் யார் முன்னாலும் தன் பெற்றோர் தலைதாழ்ந்து நின்றுவிடக்கூடாது என்றும் குழந்தைகள் எதிர்பார்க்கின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பிள்ளைகளின் மனது காயப்படும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும்.
பெற்றோரின் உழைப்பில்தான் குழந்தைகள் படித்து முன்னேறுகின்றன. தனது தந்தை என்ன வேலை பார்க்கிறார்? என்பதிலும், அவர் வாங்கும் சம்பளம் அல்லது சம்பாதிக்கும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கவேண்டும் என்பதிலும் குழந்தைகள் கவனமாக இருக்கின்றன. அப்பா பார்க்கும் வேலை சொல்வதற்கு மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், வாங்கும் சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் குழந்தைகள் வருத்தப்படுகின்றன என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டிய காலம் இது.
போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், போராடி ஜெயிக்க ஒவ்வொரு குழந்தையும் தயாராக இருக்கிறது. அவர்களின் போராட்டத்திற்கு சரியான முறையில் வழிகாட்டி, ஊக்குவிக்கும் பெற்றோரை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றன.
'நீ விரும்புவதால் அதில் கலந்துகொள்ள அனுமதிக்கிறேன். எந்த அளவுக்கு அதை சிறப்பாக செய்யமுடியுமோ அந்த அளவுக்கு செய்' என்று தூண்டுதல் தரும் பெற்றோர் என்றால் குழந்தைகள் அதிகம் மகிழ்கின்றன. அப்படி அனுமதிகொடுக்கும் விஷயத்தில் அவர்கள் தோற்றுப்போனால்கூட பெற்றோருக்கு அது பெரிய வெற்றியாகிவிடுகிறது. ஏன்என்றால் தானாகவே முன்வந்து பெற்றோர் அனுமதி செய்த காரியம் தோல்வி அடைந்தால், உடனடியாக அதுபற்றி குழந்தைகள் ஆய்வு செய்கின்றன. அதில் சில நல்ல தீர்மானங்களை எடுக்கின்றன. அந்த தீர்மானங்கள் காலம் முழுக்க அவர்கள் முன்னேற கைகொடுப்பதாக இருக்கிறது.
பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்கிறார்கள்.
'வேலைக்கு செல்வதால் தங்களோடு பெற்றோர் அதிக நேரம் இருப்பதில்லை' என்ற கவலை குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர் அருகில் இல்லாத நேரத்தில் தனது நேரத்தை செலவிட சரியான ஏற்பாடுகளை செய்துகொடுத்தால், அந்த பெற்றோர்களை குழந்தைகளுக்கு பிடிக்கிறது. அந்த ஏற்பாடுகள் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய சிறுமிகள் தங்களுக்கு பலவிஷயங்கள் தெரியும் என்று, தங்கள் தோழிகளிடம் கூற ஆசைப்படுகிறார்கள். அதற்காக புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பை புரிந்துகொண்டு எந்த தாய் தன் குழந்தைக்கு சமையல், அலங்காரம், தையல் கலை போன்றவைகளை சொல்லிக்கொடுக்கிறாரே, அவர் தன் குழந்தைகளிடம் அந்தஸ்துமிக்கவராக மாறிவிடுகிறார். இதை தாய் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றால், முதலில் அவர் அவைகளை கற்றுக்கொள்ளவேண்டும். நிறைய கலைகளை கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் அம்மாக்களுக்கு அவர்களது பெண் குழந்தைகள் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த விஷயமாகும்.
எப்போதும் திட்டுவது, அடிப்பது, கடிந்து கொள்வது என்று செயல்படும் பெற்றோரை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தாங்கள் எப்போதும் கிறுக்கிக்கொண்டே இருந்தாலும்,
'நீ கிறுக்குவதற்குள் ஒரு ஓவியன் ஒளிந்திருக்கிறான்' என்று கூறி ஊக்கம் அளித்து, அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பி, தங்களை ஓவியர் ஆக்கிவிட்டால் அந்த பெற்றோரை தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு குழந்தைகள் கொண்டாடுகின்றன.விளையாட்டு எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். விளையாட்டு குழந்தைகளை பலம் பெற வைக்கும். நன்றாக வளர வைக்கும். குழந்தைகள் வாழ்க்கையில் விளையாட்டு மிக அவசியம் என்பதை பெற்றோர் உணர்ந்து அதை ஊக்கப்படுத்த வேண்டும்.
படிப்புக்கும்- விளையாட்டுக்கும் சரியாக நேரத்தை ஒதுக்க முடியாமல் குழந்தைகள் தடுமாறினால், அதற்கு சரியாக திட்டமிட்டுக்கொடுத்து நேரத்தை ஒதுக்க உதவினால் குழந்தைகள் மகிழ்கின்றன. எந்த விளையாட்டு அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை பிரகாசிக்க வைக்கும் என்பதை புரிந்து, அதில் தொடர்ந்து பயிற்சியளிக்க பெற்றோர் உதவவேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனக்கு பிடித்த விளையாட்டில் பெற்றோருக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி பெற்றோர் தெரிந்துகொண்டு, அதைப் பற்றி பேசவும், ஊக்கமளிக்கவும் வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனது விளையாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் பெற்றோரை, குழந்தைகள் உயர்ந்த இடத்தில்வைத்து பார்க்கிறார்கள்.
பிள்ளைகள் விஷயத்தில் எப்படிப்பட்ட நிலையிலும் புத்திசாலி பெற்றோர் ஆவேசப்படாமல் நிதானமாக செயல்படுவார்கள். குழந்தைகளுக்கென்று ஒரு வெளியுலக இமேஜ் இருக்கிறது. அவர்களுக்கென்று மரியாதைக்குரிய ஒரு நட்பு வட்டம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டு தங்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்று அவர்கள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார்கள். தங்களது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோருக்கு பிள்ளைகள் தங்கள் மனதில் உயர்ந்த இடத்தை அளிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோரைப் பற்றி தங்கள் நட்பு வட்டத்திலும் உயர்வாகப் பேசுகிறார்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய கட்டுரை[2]


   குழந்தைகளை அடிக்கலாமா? (2)  
[ "யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான்.
எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும்.
அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன்.
தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும்.நெஞ்சுவலிக்கும்.
நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள்.
நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?... என்று!அப்புறம் உடனே ஆண்டவன் கிட்ட மன்னிப்பும் கேட்பேன்.
நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும்.
அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும்.
நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன். என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க.
எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும். பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங் களான்னு இருக்கும்.
அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும்.
கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம். இதனால சரியாவே படிக்க முடியலை.
பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க.
எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க. எல்லா பிள்ளைகளும் சிரிக்கும். சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும்.
ஏன் பொறந்தோம்னு இருக்கு. நான் யாருக்கும் பிரயோசனமில்லை. ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்" என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை.]
   குழந்தைகளை அடிக்கலாமா? (2)  
பெண் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லையா? அவர்கள்தானே நிறையப் பேசுகிறார்கள்? அப்படியே பேசினாலும் கண்டிப்பது தாய்க்குலங்கள் தான்.
 ம்ம்ம். தாய்குலங்களுக்கு, எங்கே தங்கள் குழந்தைகள் வளர்ந்து உரிய வயதில் திருமணமாகிப் போகிற குடும்பங்களில் இப்படிப் பேசி, அந்த வீட்டில் 'வளர்த்திருக்கிறதைப் பார்' என்று தங்களைத் திட்டுவார்களோ என்ற ஐயத்தினால் இப்போதிருந்தே அடக்கி ஒடுக்கி வளர்க்கிறார்கள். தங்கள் வளர்ப்பைப் பற்றின விமர்சனத்திற்கு பயந்து இப்போதே பேசவிடாமல் தடுப்பது எந்தவகையைச் சார்ந்தது?
கருத்து சுதந்திரம் இல்லாததால்தான் தன் மீது நடக்கும் வன்முறைகளைக் கூட, மௌனமாக ஏற்றுக்கொள்ளும் போக்கினை குழந்தைகள் பெற்று எவ்வித எதிர்ப்பையும் காட்ட மறுக்கிறார்கள்.இதுவே நாளடைவில் சமூகத்தில் நடைபெறும் பலவிதமான கேடுகளை எதிர்க்கத் திராணியற்று வன்முறைகளை வளர்க்கும் போக்கிற்கு மௌனமாக ஒத்துழைக்கிறார்கள். அதனால், வீடுகளில் நடக்கும் வன்முறைகளுக்கு ஓர் அளவே இல்லாமல் போய்விட்டது.
என்ன? வன்முறையா? குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் வன்முறையாளர்களா? பெற்ற குழந்தைகளை ஒழுங்காக வளர்க்க நாங்கள் என்ன பாடுபடுகிறோம்? வன்முறை செலுத்துகிறோம் என்கிறீர்கள்?
சரி. நான் அன்றாடம் நடக்கும் சில செய்திகளை சொல்லிக்கொண்டே வருகிறேன். இது வன்முறையா? இல்லையா என்று பாருங்கள்.
பெண் குழந்தைகளை உடலளவிலும் மன அளவிலும் பெரும்பாதிப்பை உண்டாக்கும் குழந்தைத் திருமணங்கள் நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் கரூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஊட்டி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நடந்து வருவதாக சமூக நலத்துறை பட்டியலிட்டிருக்கிறது. புள்ளவிபரங்கள் வெளியிட்டிருந்தால் எங்கே பிரச்சனையாகுமோ என்று வெளியிடவில்லை. இது ஒரு வன்முறையில்லையா?
குழந்தை இல்லாத ஒரு தம்பதிக்கு 15 மாதக் குழந்தை விற்கப்பட்டுள்ளது. இதற்காக பெறப்பட்டுள்ள தொகை அரிசி, மஞ்சள் கிழங்கு. (தினமணி 10-5-05) இது போன்ற பல செய்திகளைச் செய்திதாள்களில் காணமுடியும் இது வன்முறையில்லையா?
இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் நடுத்தரக் குடும்பங்களில் 1 கோடி கருக்கலைப்புகள் நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்பதால் இவை நிகழ்ந்துள்ளதாக தெரிகிறது. இந்த உலகத்தில் ஆண்குழந்தைகள் தான் இருக்கவேண்டும் என்ற கருத்தாக்கத்தால் எழுந்து இந்த வன்முறை. இவை வன்முறையில்லாமல் வேறென்ன?
ஒரு வருடத்திற்குத் திருட்டுத்தொழில் செய்ய 50 ஆயிரத்திற்கு பெற்ற மகனை விற்ற செய்தி (தினத்தந்தி 27-10-05) எதை வெளிப்படுத்துகிறது.? குழந்தை தனது சொத்து என்ற அடிப்படையில் நடந்த இந்த நிகழ்வு வன்முறையில்லையா?.
குழந்தைகளை ஆசையோடும் அன்போடும் அரவணைத்து வளர்ப்பவர்கள் பெற்றோர்கள் என்பதுதான் நம் பொதுவான கருத்து. ஆனால் பெற்ற பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நடக்கும் நிகழ்வுகள் ஏராளம். இவைகளை வன்முறை என்று சொல்லலமா? கூடாதா?
குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களால் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கைஇந்தியாவில் 6 முதல் 7 லட்சம் சிறுமிகள் என்கிறது யுனிசெஃப் அமைப்பு. இவை வன்முறைதானா? இல்லையா?
ஆக, குழந்தைகளுக்கு அங்கிங்கெணாதபடி எல்ல இடங்களிலும் வன்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதன் அடிப்படையான காணத்தைத் தோன்டும் போதுதான் சங்கிலித்தொடர் போன்று சமூகப் பிரச்சனையாகவும், அரசியல் பிரச்சனையாகவும் வடிவமெடுக்கின்றன. பாரபட்சமான, ஏற்றத்தாழ்வான சாதிய அடுக்குமுறைகளும் இதற்குக் காரணமாகின்றன என்று புலப்படுகிறது. இவற்றைக் களைய வேண்டும் என்றால் பல கட்டங்களில் நம் போராட்டம் தொடரவேண்டும்.
ஒட்டு மொத்தமாக குடும்பத்தில் உள்ள வன்முறைகளை சொல்கிறீர்கள்? ஆனால் எங்கள் வீட்டில் அவ்வாறு நடப்பதில்லை...
எவ்வளவு ஆழமாக நம்புகிறீர்கள். பெரியவர்கள் வீடுகளில் சண்டை போடுவது கூட குழந்தைகளின் மனநிலையை மிக ஆழமாக பாதிக்கிறது. நான் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு குழந்தையிடம் படம் வரையச்சொன்னேன். தன் அப்பாவும் அம்மாவும் சண்டையிடுவதால் தனக்குப் படிப்பும் வரவில்லை, இருக்கவும் பிடிக்கவில்லை என்று குழந்தை சொல்வதான கார்ட்டூன் அது. அந்தக் குழந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளாள் என்று தெரிந்தது.
"யார் யாரோடு சண்டை போட்டாலும் கடைசியில் பாதிக்கப்படுவது நான் தான். எனக்குத்தான் அடி கிடைக்கும். திட்டு கிடைக்கும். அப்போதெல்லாம் நான் அழுவேன். அழுதால் அதற்கும் அடி கிடைக்கும். அதனால் கஷ்டப்பட்டு அடங்குவேன். தொண்டையெல்லாம் அமுக்கி வலிப்பது போல இருக்கும். நெஞ்சுவலிக்கும். நிற்க வைத்து ஜெயிலுக்குள் இருப்பவர்கள் கிட்ட கேள்வி கேட்பது போல் கேட்பார்கள். நிறைய தடவை நினைப்பேன். சுனாமி வந்தப்ப இவங்க செத்து போயிருக்க கூடாதா?... என்று. அப்புறம் உடனே சாமிகிட்ட மன்னிப்பும் கேட்பேன். நான் அவங்க கிட்ட அடியும் உதையும் வாங்கறப்ப எல்லாம் எங்கயாவது ஓடிப்போலாம் போல இருக்கும்.
அப்படி போனா பொம்பளைப் பிள்ளங்கள யாரோ பிடிச்சுக்கிட்டு போயிருவாங்கன்னு எங்க பக்கத்து வீட்டு பெரியம்மா சொல்லும்.
நான் எங்கப்பாரு அடிக்கும் போதெல்லாம் கெஞ்சுவேன்.
என் சத்தம் எதையும் காதில வாங்க மாட்டாங்க.
எனக்கு எங்கம்மாவும் அப்பாவும் அன்பு செய்ய மாட்டாங்களான்னு இருக்கும்.
பக்கத்துல உட்கார்ந்து பேசமாட்டாங்களான்னு இருக்கும்.
அவங்க மடியில் படுத்து கத்தணும் போல இருக்கும்.
கோபமா இருக்கும்போது அவங்களைப் பாத்தாலே எனக்கு பயம்.
இதனால சரியாவே படிக்க முடியலை.
பள்ளிக் கூடத்திலே டீச்சரும் படிக்காட்டி அடிப்பாங்க.
எங்கம்மாவும், எங்கப்பாவும் கையில அடிச்சாங்கன்னா எங்க டீச்சர் குச்சியில அடிப்பாங்க.
எல்லா பிள்ளைகளும் சிரிக்கும்.
சிரிக்கிறப்ப செத்து போகலாம்னு இருக்கும்.
ஏன் பொறந்தோம்னு இருக்கு.
நான் யாருக்கும் பிரயோசனமில்லை.
ஒண்ணு சுனாமில நா செத்திருக்கணும்" என்று கேவிக்கேவி அழுதாள் அந்தக் குழந்தை.
மனசே தாங்கவில்லை. இப்படிப்பட்ட சின்னச்சின்ன விசயங்கள் கூட அந்தக் குழந்தைகளை எப்படிப் பாதிக்கிறது. ஒரு வார்த்தையைக் கூட தாங்க முடியாத அளவு அவ்வளவு மெல்லியதா இவர்கள் உள்ளம்? பூ என்று சொல்வார்களே, அதைப்போன்றதா? எங்களின் சொல்லும் செயலும் உங்களை அவ்வளவாகவா பாதிக்கிறது? எங்களின் நடவடிக்கை உங்களை உட்சுருக்கி சுக்குநூறாக நொறுக்கி விடுகிறதா? என் போன்றோர் திருந்தாத வரையில் ஒட்டுமொத்த பெற்றோர்கள் சார்பாக உங்களிடம் மன்னிப்பு மட்டும் தான் கேட்கமுடிகிறது என்னால். ஆனால் இதை வாசிக்கும் ஒவ்வொரு நபரும் கண்டிப்பாகத் திருந்துவார்கள். எனக்கு நம்பிக்கையிருக்கிறது.
மனதுக்கு துயரமாகத்தான் உள்ளது. ஆனால், இவ்வளவு பெரியவர்களாகிய நமக்கே சுதந்திரம் கிடைக்கலை. யார் குழந்தைகளின் சுதந்திரத்தை யோசிக்கப்போகிறார்கள்?
இங்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்களுக்கு தெரிந்து என்னென்ன சுதந்திரங்கள் உள்ளன? (பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி கற்க, இந்தியாவில் எங்கும் சுதந்திரமாக போய்வர... இப்படி கொஞ்சம் தெரியும். ஆனா எங்க.... (!?) இதெல்லாம் இருந்தும் நம்மால் செய்ய முடிகிறதா என்ன?)
உங்கள் ஆதங்கமா இது? சரி, சுதந்திரம் என்பதை இப்படியாகப் புரிந்துகொள்ள வேண்டும். குடைபிடித்துப் போவது சுதந்திரம் என்றால் அந்தக் குடையின் கம்பி அடுத்தவரது கண்ணைக் குத்தாதவரை என்பதாக அர்த்தம் கொள்ளவேண்டும். எல்லா சதந்திரமும் அனுபவிக்க முடியாதவரை நம்மைத் தடுப்பது எது? என்பதை நாம் யோசிக்கவேண்டும். நமது கல்வி அவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும்.
தந்தை பெரியார் சொன்ன சில வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. 'சேர சோழ பாண்டியர் நாயக்கர் ஆகிய மன்னர்களும் அவர்களது படையெடுப்புகள், நாட்டு எல்லைகள், ஆண்டவிதம், செய்தசீர்திருத்தம் ஆகியவை சரித்திரம் படித்த மாணவர்களுக்கு தெரிவதில்லை. மாறாக, தசரதனுக்கும், கிருஷ்ணனுக்கும் பலிச்சக்கரவர்த்திக்கும் எத்தனை மனைவிகள், எத்தனை குழந்தைகள் என்று தெரியும்.
பூகோளம் படித்தவனுக்கு உலகப்பரப்பு அதன் பிரிவுகள் சரியாக ஞாபகத்தில் இருக்காது. ஆனால் இல்லாததும், இருக்க முடியாததுமான மேல் உலகம், கீழ்உலகம், சொர்க்கம், நரகம் அதன் வர்ணனை பலன்கள். ஆகியவை முழுவதுமாக தெரியும்.
வானவியலைப் பற்றிப் படித்த மாணவனுக்கு சூரிய சந்திரனின் உண்மைத்தன்மை, அதன் தாக்கம், இயக்கம், சீதோஷ்ண நிலைக்கு காரணம் ஆகியவை சரிவரத் தெரியாது. ஆனால் சூரியனுக்கு 16 குதிரை, சந்திரன், வளரவும் தேயவும் சாபம் தான் காரணம் என்றும் இராகு, கேது விழுங்குவதால் கிரகணம் ஏற்படுகிறது என்றும், அதற்கான பரிகாரம் இன்னின்னது என்றும் தெரியும்.
விஞ்ஞானத்தைப் படித்தவர்கள் அந்தப்படிப்பின் தன்மையும் பயனும் உண்மைகளும் தெரிவதற்கு பதிலாக பாம்புப் பால்குடிக்கும் என்று புத்துக்கு பால்வார்ப்பது, போன்ற மூட நம்பிக்கைகளை வளர்ப்பதில் பெரும்பாலும் முன்னணியில் நிற்கும் அளவிற்கு தான் கல்வி முறைகள் உள்ளன' என்றார். தந்தை பெரியார் சொன்னவற்றில் ஒரு சிறு அளவு கூட மாற்றம் இல்லை.
கல்வி என்பது தீயவற்றை எதிர்க்கும் சிந்தனையை வளர்த்தெடுக்கவும், மனிதம் வளர்க்கும், மனம் வளர்க்கும், உடல் வளர்க்கும், சுதந்திரமான, அடிமைத்தனம் அற்ற, மனித ஆளுமைகளை வளர்க்கிற கல்வியாக இருக்கவேண்டும்.
குழந்தைகளின் உரிமைகளைப் புரிந்து கொள்ளாதவரை நமக்கு நாமே பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பது நிச்சயம். ஒவ்வொரு குழந்தைக் கல்வியாளர்களிடமும் கேட்டுப் பாருங்கள். தன்னிடம் படிக்கும் மாணவர்கள் மிக உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதாகத்தான் அவர்களின் எண்ணம் இருக்கும். ஆனால் வெளிப்படுத்தும் விதம்தான் மாறுபடுகிறது. மாணவர்களைத் 'திருத்துவது' என்பது அடித்து திருத்துவது, தண்டித்து திருத்துவது, பிற மாணவர்கள் மத்தியில் மனம் புண்படுகிறவரை திட்டித் திருத்துவது அல்ல.
அதன் விளைவு எதுவாக இருக்கும்? ஒரு மாணவன் எந்த நிலைக்கு வரவேண்டும் என்ற ஈடுபாட்டில் ஆசிரியர்கள் யோசித்தார்களோ அந்த நிலை மாறி அம்மாணவன் தன் ஆசிரியரை ஒரு எதிரியாகப் பாவிப்பான். வகுப்பில் சரியாகக் கவனிக்காத மாணவனை ஒரு ஆசிரியர் எல்லா மாணவர்கள் மத்தியிலும் சத்தம் போட்டு திட்டி 'வெளியே போ" என்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அம்மாணவன் மிகச் சாதாரணமாக வகுப்பை விட்டு வெளியேறினால் ஆசிரியரின் நோக்கம் வீணாகிவிடும். மாறாக, அம்மாணவனைத் தனியாக அழைத்து நேரத்தின் முக்கியத்துவத்தையும், அவன் வீட்டில் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைக்கிறார்கள் என்பதையும், வகுப்பு நேரத்தில் கவனிப்பு எந்த அளவிற்கு பிரயோசனமானது என்பதையும் உணர்த்தினால் நிச்சயமாக சிறிதளவு பயன் இருக்கும். அம்மாணவனின் உள்ளத்தில் ஆசிரியரைப் பற்றிய மதிப்பும் மரியாதையும் எண்ணமும் உயரும். ஏனென்றால் நாம் சொல்லக்கூடிய கருத்துக்களைப் பிறர் ஏற்கவேண்டும் என்றால் கேட்பவர் மத்தியில் கருத்து சொல்பவர்களைப் பற்றிய மதிப்பீடு சிறந்த முறையில் இருக்கவேண்டும்.
கொஞ்சநாளாக நானும் குழந்தைகளை அடிப்பதை நிறுத்தினேன். எவ்வளவு கோபம் வந்தாலும் பரவாயில்லை என்று என்னைக் கட்டுப்படுத்தினேன். ஆனால் என் மகன் சொன்னபடியே கேட்பதில்லை. இவனை என்ன செய்யலாம்?
அதை உங்கள் குழந்தையிடமே கேட்டுப்பாருங்கள். பலன் கிடைக்கும். நான் உன்னை அடிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ இப்படி செய்தால் கண்டிப்பாக அடிப்பேன். உனக்கு அடி கொடுக்கட்டுமா? என்று கேட்டுப்பாருங்கள்... குழந்தைகள் எப்போதும் நிறைய விசயங்களை உள் வாங்குகிறார்கள். உங்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை இந்நேரம் உணர்ந்திருப்பார்கள். உட்கார்ந்து பேசினால் போதும். நாம் நம் குழந்தைப்பருவத்தைக் கொஞ்சம் திரும்பி பார்ப்பது அவசியம். நாம் நம் சிறுவயதில் என்னவெல்லாம் செய்திருப்போம். எப்போது பார்த்தாலும் தெருவில் ஆடிக்கொண்டிருக்கவில்லையா? வெயிலும், மழையும், பனியும் நம்மை பாதிக்குமா? எப்போது பார்த்தாலும் ஒரே துள்ளல்தான். இந்த நிலையை நாம் நம் குழந்தைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா? எப்போது பார்த்தாலும் படிப்பத்தான். விளையாடுவது கூட அடைக்கப்பட்ட கூண்டுக்குள் தான். போதாதற்கு டி.வி. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நம்முடைய குழந்தைப் பருவம் எவ்வளவு நன்றாக இருந்தது? இப்போதுள்ள குழந்தைகளைப் பாருங்கள். எவ்வளவு இன்பத்தை இழக்கிறார்கள்? இவர்கள் பெரியவர்களானதும் இதைவிட இன்னும் இறுகலாகி இயந்திரங்களைப் போல ஒரு வாழ்க்கையை மேற்கொள்வார்கள். விளையாட்டு என்ற பதமே நம் அகராதியிலிருந்து இல்லாமல் போய்விடும்.
குழந்தைகளுக்கு நம்முடைய அணுகுமுறை புரியுமா?
குழந்தைகள் எவ்வளவு அறிவுத்திறன் பெற்றவர்கள் என்பதை இந்த ஒரு கவிதை வெளிப்படுத்தும்.
"எட்டாத
உயரத்தில்
எல்லாவற்றையும்
வைத்தாயிற்று
கவின் கையில்
இப்போது
ஒட்டடைக்கொம்பு"
- கவின்குறுநூறு
இது குழந்தைகளின் அறிவுத்திறனை படம்பிடித்துக்காட்டுகிறது. பெரியவர்களுக்குத்தான் எதையும் எளிதில் சொல்லிப் புரியவைக்க முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு உதாரணம் வேண்டும். அதை விளக்கிச்சொல்ல வேண்டும். காரணம் சொல்லவேண்டும். குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

ஒவ்வொரு பெற்றோரும் படிக்க வேண்டிய கட்டுரை[1]


  குழந்தைகளை அடிக்கலாமா? (1) 

[ ஒரு சிறுமியை அவள் தாய், 'நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்' என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும்.
இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள்,குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன.
நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது. 'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம்.]
படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்?
சர்க்கஸ் தான் நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களை மகிழ்விக்கும் "ரிங் மாஸ்டரை"ப் போல குழந்தைகளை அடித்து, திருத்தி வழிப்படுத்துவது யாரை மகிழ்விக்க, "குழந்தையை நல்லா வளர்திருக்கிறாங்க" என்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா?
சேட்டை செய்யும் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது?
குழந்தைகள் மீதான வன்முறை :
குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்து பார்க்க விரும்புவார்கள். அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் "எதுசரி" "எதுதவறு" என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். "சேட்டை" என்றால் என்ன? நாம் சந்தோசமாக இருக்கும் போது குழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும் போது குழந்தை சும்மானாச்சுக்கும் மண்ணைத் தொட்டால் கூட "சனியனே, "சனியனே" "பேயா பொறக்க வேண்டியது புள்ளையா பொறந்திருக்கு" என்று திட்டுவோம். ஆக "சேட்டை" என்பது குழந்தையை மையப்படுத்தி அல்ல. நம்மை மையப்படுத்தி இருக்கிறது. முதலில் அதை உணர்வோம்.
அடுத்து, குழந்தை தன்னையோ, மற்றவரையோ, மற்றவைகளையோ பாதிக்காமல் விளையாட அனுமதிக்க வேண்டும். சேட்டை செய்த பிறகு அடிக்காமல் முன்பே "விதிகளை" சொல்லிவிட வேண்டும். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாய்க் கண்டிக்கவேண்டும். நீங்க குழந்தையா இருந்தபோது சேட்டை செய்தீர்களா? இல்லையா?
அடிக்காமல் வளர்ப்பது எப்படி?
அடிப்பதைத் தாண்டி வேறு எதையுமே யோசிக்க மாட்டீர்களா? அடித்து சரிபடுத்த அவர்கள் என்ன மத்தளமா? கண்டிப்பாக என்பது "இந்தச் செயல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்த்துவது" சில குழந்தைகள் "நான் உன் கூட பேசமாட்டேன்" என்று சொன்னாலே தங்களது தவறுகளை திருத்திக்கொள்ளும். இப்படி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமான உளவியல் (சைக்காலஜி) உண்டு. பெற்றோர்களுக்கும் அவரவர் குழந்தைகளைப்பற்றி நன்கு தெரியும். பொறுமையின்மையின் காரணமாக, வேலைப்பளுவின் காரணமாக, நேரமின்மையின் காரணமாக, இப்படி ஒவ்வொரு பிரச்சனையின் ஊடே குழந்தைகள் பரிதவிக்கின்றன. அடிப்பதும், மனரீதியாக வன்முறைப்படுத்தும் விதமும் கண்டிப்பாக குழந்தை உரிமை மீறல் என்கிறது ஐக்கிய நாடுகள் சபை.
குழந்தை உரிமை மீறல் என்கிறீர்களே? குழந்தைக்கு என்ன உரிமை? குழந்தை உரிமை என்றெல்லாம் இருக்கா?
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. இன்றைய குழந்தை நாளைய மனிதனல்லவா? இப்படித்தான் நிறைய நபர்களுக்கு சந்தேகம் உள்ளது. உதாரணமாக ஒரு 8 மாத குழந்தையை அதன் தாய் இடுப்பில் வைத்து சோறுஊட்டும் போது அந்தக் குழந்தை தனக்குத் தெரிந்த மழலையில் வேண்டாம் என்று சொன்னாலும் அந்தத்தாய் எப்படியாது இன்னும் இரு கவளத்தை அந்தக் குழந்தைக்குத் திணித்துவிடுவார். அப்போதுதான் அந்தத்தாய்க்கு மனநிறைவு. மகிழ்ச்சி. தன் குழந்தைக்கு வயிறுநிறைய சோறு ஊட்டி விட்டதாகத் திருப்தி. ஆனால் அந்தக் குழந் தைக்கு வயிறு ஒத்துக்கொள்ளாமல் தான் சாப்பிட்டதை சிறிறு நேரத்திலேயே வாந்தி எடுத்துவிடும் சூழலில் 'பார் பிடிவாதத்தை. அப்படியே அது அப்பனை கணவனையும் சேர்த்துத் திட்டி தன் குழந்தைக்கும் இரண்டு அடி வைப்பார் தாய்.
இந்த நிகழ்ச்சி எதைக் காட்டுகிறது. ஒரு தாய் தன் அளவுக்குமீறிய அன்பினால் செய்யக்கூடிய வன்முறையைக் காட்டுகிறது. வாந்தி எடுத்தால் தன் குழந்தை எங்கே இளைத்துவிடப் போகிறதோ என்ற அதீத பயத்தினால், அக்கறையினால் அந்தக்குழந்தைக்கு இலவசமாக இரண்டு அடியும் கொடுக்கிறார். ஏற்கனவே வாந்தி பண்ணியதால் மூக்கிலும் வாயிலும் ஏற்படும் எரிச்சலோடு, அடிபட்டதால் அந்தக் குழந்தை மேலும் மேலும் வன்முறைக்குள்ளாகிறது. இந்த செயல் அன்பினால் ஏற்பட்ட வன்முறை.
மற்றோர் வன்முறை அதிகாரத்தால் நிகழக்கூடியது. ஒரு குடும்பத்தில் குடித்துவிட்டு வந்த தந்தை தூங்கிக்கொண்டிருந்த தன் மகனை கடைக்கு அனுப்பித் தனக்கு சாப்பாடு வாங்கிவரச் சொல்கிறார். அந்த குழந்தை, தன் தகப்பன் கேட்ட உணவு கடையில் தீர்ந்துவிட்டால், கடையில் இருப்பதை வாங்கி வருகிறான், இதற்காக மகனை கண்மண் தெரியாமல் விளாசித் தள்ளுகிறார் தந்தை. இது அதிகாரத்தினால் நடக்கும் வன்முறை.
தகப்பன் குடித்தது முதல் தவறு. தன் குழந்தைகளுக்கு தான் குடித்ததாக காட்டியது இரண்டாவது தவறு. தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தையின் தூக்கத்தை அர்த்தமில்லாமல் கெடுத்தது மூன்றாவது தவறு. அவனை அடித்தது மிக மோசமான தவறு. ஆகிய இத்தனை தவறுகளும் விளைவதற்கு காரணம் அதிகாரம். என்னால் என்னமும் செய்யமுடியும் என்கிற போக்கு, நான்தான் இந்த வீட்டில் முடிவெடுக்கும் நபர் என்ன எண்ணத்தில் எழும் சிந்தனை. இம்மாதிரி குழந்தைகளுக்கு அனுதினமும், நிறைய நேரங்களில், எல்லா நபர்களாலும் குழந்தைகளுக்கான வன்முறை நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
இதெல்லாம் வன்முறையா? நாங்கள் என்ன நினைத்தோம் என்றால் குழந்தையை ஒழுங்காகவும் நல்ல பிள்ளையாகவும் வளர்ப்பதற்கு அடித்து வளர்க்கிறோம் என்று? இப்படி ஒவ்வொரு காரியத்திற்கும் பார்த்துப் பார்த்து செய்ய முடியுமா?
கலில் கிப்ரான் என்ற கவிஞர் சொன்னதுதான் நினைவிற்கு வருகிறது.
"குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு. நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை." என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும். அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது.'அடிக்கிற கைதான் அணைக்கும்' என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் 'அடிக்கிற கை அணைக்கும்' என்று அடிப்பான்.
நாம் என்ன சொல்லிக்கொடுக்கிறோமோ அதைத்தானே குழந்தைகள் செய்வார்கள். ஒவ்வொரு காரியத்தையும் பார்த்துப் பார்த்து தான் செய்யவேண்டும். நிலத்தில் விதையைத் தூவி விட்டால் மட்டும் போதாது. தினசரி நம் கண்காணிப்பு தேவைப்படுகிறதல்லா? குழந்தைகள் விதையை விட முக்கியமானவர்கள். நல்ல பலன் தரும் விதைகளாக, விருட்சங்களாக வளர குழந்தையைப் பார்த்துப் பார்த்துத்தான் வளர்க்கவேண்டும். பக்குவமாய் சொல்லிக்கொடுத்து, பேசி வளர்க்கவேண்டும்.
சரி குழந்தைகளை அடிக்க கூடாது, திட்டி கண்டித்து வளர்க்கலாமா? இல்லை அதுவும் கூடாதா?
ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு சிறுமியை அவள் தாய், 'நீ எதுக்குத்தான் லாயக்கு. நீ பொறந்ததே வேஸ்ட்' என்று திட்டிக்கொண்டே இருந்தால் அந்தக் குழந்தைக்கு அந்த வார்த்தைகள் மனதுக்குள்ளேயே தங்கிவிடும். சிறுமிக்கும் தான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்ற நினைவால், தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு உண்மையிலேயே எந்தக் காரியத்தையும் செய்ய லாயக்கில்லாதவளாகி விடக்கூடும். அப்புறம் அந்தப்பெண்ணின் தாழ்வு மனப்பான்மையை சரிசெய்வதே பெரும்பாடாகிவிடும். இம்மாதிரியான மனநிலையை, பாதிப்புக்குள்ளாகும் சொற்களை, குழந்தைகளிடம் பேசுவது மிகப்பெரிய குற்றம். நாம் இந்தத் தவறைச் செய்கிறோம் என்று தெரியாமலேயே நிறைய பெற்றோர்கள், குழந்தைகளோடு பழகுபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். ஆனால் இத்தகைய சொற்களால் மன அளவில் பாதிக்கப்படும் குழந்தைகள் நம் சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவார்கள்.
இப்படியெல்லாம் இருக்கா? சரி நாம் கண்டிக்காம விட்டுட்டா ரொம்ப அதிகமாகப் பேசி அனைவலின் மத்தியிலும் கெட்ட பேரெடுக்குமே?
திரும்பத்திரும்பச் சொல்கிறேன், கண்டிப்பது என்பது வேறு. அந்தக் குழந்தையை மனரீதியாக தண்டிப்பது வேறு. கண்டிப்பது என்பது ஒரு செயலைச்செய்யும் போது நல்லது கெட்டது என்ன என்பதை புரியவைப்பது. அப்படியே அந்தக்குழந்தை தவறு செய்தாலும் அதனால் ஏற்படும் பாதிப்பின் அனுபவத்தைப் புரிய வைப்பது. உதாரணமாகத் தீயைத் தொட்டால் சுடும் என்பதை விளக்கிய பின்னும் அந்தக் குழந்தை அதைத் தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டு சுட்டுக்கொண்டால் கூட அதன் விளைவுகளை, அதன் பாதிப்புகளை, காயம் ஆறியபிறகே உணர்த்தவேண்டும்.
யாரேனும் ஒருவர் பிரச்சனையில் மாட்டிக்கொண்டிருக்கும் போதுதான் 'எனக்கு அப்பவே தெரியும். இப்படியெல்லாம் ஆகுமென்போம். நம் அறிவாற்றலை வெளிப்படுத்தாமல் பக்குவமாக, மனிதமனம் ஏற்றுக்கொள்ளும் விதத்தில், புரிய வைக்கவேண்டும். விளக்க வேண்டும். ஒரு பிரச்சனைக்கான தீர்வு என்பது பிரச்சனையை எப்படி எதிர்கொள்வது என்பதுதான். நாம் என்ன செய்கிறோம் என்றால் இருட்டுக்குள் போனால் பிரச்சனையாகிவிடும். ஆகவே இருட்டுக்குள்ளே போகவே கூடாது என்பதைத்தான் நாம் கற்றுக்கொடுக்கிறோம். மாறாக இருட்டுக்குள்ளே போய் பிரச்சனை வந்தால் எவ்விதம் பாதுகாத்துக்கொள்வது, எப்படி தப்பிப்பது என்பதை சொல்வதில்லை. இதற்குப்பெயர் தான் 'மதிப்பீட்டுக்கல்வி' (வேல்யூ எஜீகேசன்) என்று சொல்வார்கள்.
உங்களது அடுத்த கேள்வி அதிகமாப் பேசி கெட்ட பெயரை குழந்தைகள் எடுப்பார்கள் என்பதுதானே. நாம் பேசும் பேச்சு எல்லோருக்கும் பிடிக்கிறதா? வாய் தவறிப் பேசும் சில பேச்சுக்கள் நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் 'இது தவறு' 'இது சரி' என்று எங்கே நாம் திருத்திக்கொண்டோம்? ஒவ்வொரு முறையும் நாம் பேசுவதால் ஏற்படும் பிரச்சனைக்குப் பின்புதானே.
அந்த அனுபவத்தைக் கொண்டு குழந்தைகளைப் பேசவிட்டுப் புரியவைக்கவேண்டும். கருத்து சுதந்திரமே நாம் நம் குழந்தைகளுக்குக் கொடுத்ததில்லை. குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்குக் கொடுத்ததே இல்லை. குழந்தைகள் பேசும் அளவிற்கு வந்ததும் பெரியவர்களாகிய நாம் அமைதி காத்து, பேச்சைக் குறைத்து குழந்தைகளைப் பேச அனுமதிக்கவேண்டும். பேசும்போதே அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்ய வேண்டும். அதுதான் சரியான அணுகுமுறை. ரூசோவின் வார்த்தைகள் எனக்கு நினைவிற்கு வருகிறது. 'உன் பேச்சு சுதந்திரத்திற்காக என் உயிரையும் தரத்தயாராயிருக்கிறேன்' என்கிறார், அவர் எதிரிகளைப் பார்த்து, எதிரிகளின் பேச்சு சுதந்திரத்திற்காக தன் உயிரையும் தரத்தயாராயிருந்தபோது நாம் நம் குழந்தைகளின் பேச்சு சுதந்திரத்தைப் போற்றவேண்டும்தானே.