வெள்ளி, பிப்ரவரி 21, 2014

நரகில் பெண்கள் - ஓர் விளக்கம்


                      

''இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2911)

உலகத்தின் அனைத்து செல்வங்களையும் விட சிறந்தது நல்ல மனைவி என்று, பெண்களைப் பற்றி சிலாகித்து கூறும் இஸ்லாம், ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்றும் கூறுகிறது. (இவ்வுலக வாழ்க்கையில் தவறுகளுக்கான தண்டனைகள் அனுபவிக்கப்படும் இடமே நரகம் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை.)

''நான் (மிஃராஜ் - விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையேக் கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்''. என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3241, 5198)

மேற்கண்ட நபிமொழியை முன்வைத்து, இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்தும், ஆணாதிக்க மதம் என்று வழக்கம் போல், விமர்சிக்கக் கிளம்பியுள்ளார்கள். இதனால் இவர்கள் பெறும் ஆதாயம் என்ன? ''ஆஹா அப்படியா?'' என்று நாலு பெண்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருவார்கள், என்ற எதிர்பார்ப்பா? அல்லது ''நரகத்தில் பெண்களே அதிகம்'' என்று சொல்லும் மதம் எங்களுக்குத் தேவையில்லை என, முஸ்லிம் பெண்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவார்கள் என்ற ஆவலா? திறந்த கண் கனவாளிகள்!

ஒரு பேரூந்தில் 42 பயணிகள் அமர்ந்திருக்கிறார்கள். 20 ஆண்களும், 22 பெண்களிருந்தால், பேரூந்தில் அதிகமாக இருப்பவர்கள் பெண்களே. அதற்காக, பேரூந்தில் ஆண்களே பயணிக்கவில்லை என்று அர்த்தம் செய்வது அனர்த்தமாகும், நரகத்தில் பெண்களே அதிகம் என்ற வார்த்தையே, நரகத்தில் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. 1000 ஆண்களும், 1010 பெண்களுமிருந்தால், ஆண்களை விட பெண்களே நரகத்தில் அதிகம். இதில், ஆணாதிக்கமும் - பெண்ணடிமைத்தனமும் எங்கிருந்து வந்தது.

முழுமையான விபரங்களுடன் மற்றொரு நபிமொழி.

''எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, 'இறைவனையா அவர்கள் நிராகரிக்கிறார்கள்?' எனக் கேட்கப்பட்டதற்கு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'கணவனை நிராகரிக்கிறார்கள். உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்' என்றார்கள்'' (நூல்: புகாரி 29, 1052, 5197)

நரகத்தில் பெண்கள் அதிகமாவதற்குக் காரணம் என்ன? என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கலாம். கவனிக்க:

''அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள்.''

''உதவிகளை நிராகரிக்கிறார்கள்.''

''நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து, பின்னர் (அவளுக்குப் பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானால் 'உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை' என்று பேசிவிடுவாள்''

மனைவியின் தேவைகள் அனைத்தையும் கணவன் பூர்த்தி செய்து - மனைவி விரும்பியதையெல்லாம் கணவன் வாங்கிக் கொடுத்திருந்தாலும், அற்பமான சிறு குறைகளுக்காக ''உனக்கு வாக்கப்பட்டு என்ன சுகத்தைக் கண்டேன்? என்று கணவனை எடுத்தெறிந்து பேசி விடுவார்கள் பெண்களில் சிலர். உண்டா, இல்லையா?

மாலையில் கடை வீதிக்கு, அல்லது சினிமாவுக்கு அழைத்துப் போவதாக மனைவியிடம் சொல்லிவிட்டு காலையில் கணவன் வேலைக்குப் போவான். போன இடத்தில், எதிர்பாராத விதத்தில் மேலதிகாரியின் வருகை, அல்லது கூடுதலான பணியின் காரணமாகவும், அப்பணியை அன்றே முடிக்க வேண்டுமென்றக் கட்டாயத்தாலும் கணவன் வீடு திரும்ப தாமதம் ஆகிவிடும்.

இந்த தாமதம் மனைவிக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பது உண்மைதான் ஆனாலும் கணவனின் சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பெண்களில் சிலர், ''உன்னைக் கட்டிக்கிட்டு ஒரு சுகத்தையும் நான் காணவில்லை'' என்று நன்றி கெட்டத்தனமானப் பேசிவிட்டு, பெட்டியுடன் தாய் வீட்டுக்குச் செல்ல தயராகி விடுவார்கள். உண்டா இல்லையா? (இவற்றை மறுப்பவர்கள் மனசாட்சியை மறைத்து விட்டுத்தான் மறுக்க வேண்டும்)

இது எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. ''கணவனை நிராகரிக்கும்'' ''கணவன் செய்யும் நன்மைகளை நிராகரிக்கும்'' பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் பற்றியே, ''நல்ல கணவனுக்கு நன்றி மறக்கும்'' பெண்களே நரகத்தில் அதிகம் என்று நபிமொழியில் விளக்கப்படுகிறது. ''நல்ல மனைவிக்கு நன்றி மறக்கும்'' கணவனுக்கும் நரகம்தான் என்பதற்கும் இது பொருந்தும் - (இது பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் ஆதாரங்களுடன் பார்ப்போம் இறைவன் நாடட்டும்) - துவேசத்தை துடைத்தெறிந்து விட்டு சிந்தித்தால் மட்டுமே இதிலுள்ள நடுநிலையை விளங்க முடியும்.

 

அழைப்புப்பணியில் இருக்கும் ஆண்கள் பேண வேண்டியவை


அழைப்புப்பணியில் இருப்பவர்கள் பேண வேண்டியவை
‍‍‍‍‍‍1. எந்த காரியத்திற்கும் நிய்யத் முக்கியம் என்கிற அடிப்படையில் தாவா செய்யும் களத்திலும் கூட நமது எண்ணங்கள் சரியான முறையில் அமைவது அவசியம். மறுமையே குறிக்கோளாக கொள்ள வேண்டும்.
2. தாவா செய்வது இந்த சமுதாயத்தின் மீது விதியாக்கப்பட்டிருக்கிறதே தவிர, ஏதோ நாம் விருப்பப்பட்டு இந்த தாவா களத்தில் இருப்பதாய் நாம் நினைத்து விடக்கூடாது. நன்மையை ஏவுவதும் தீமையை விட்டும் தடுப்பதும் நபியின் உம்மத்தினராக பிறந்த நம் ஒவ்வொருவர் மீதும் கட்டாயக்கடமையாக உள்ளது (பார்க்க: அல்குர்ஆன் 3:110, 2:143)
3. நாம் ஒரு கொள்கையை கொண்டிருக்கிறோம் என்றால் அக்கொள்கையில் நாம் முதலில் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். நாம் இருப்பது தான் நேரானவழி என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை நமக்கு வேண்டும். சிறு ஊசலாட்டம் இருப்பவர்களும் தங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தாத வரை தாவாவில் இறங்கக்கூடாது.
4. எந்த கொள்கையில் நாம் இருக்கிறோமோ அந்த கொள்கையில் நின்று தாவா செய்ய வேண்டும், எந்த நிலையிலும் யாருக்காகவும் வளைந்து கொடுக்கக்கூடாது. நடுநிலை வேஷம் போடுபவர்கள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள் என்பதற்கு சனிக்கிழமை மீன் பிடித்த சம்பவம் தொடர்பான செய்தியில் அதை செய்தவர்களையும் அது தொடர்பாய் நடுநிலை வேஷம் போட்டவர்களையும் அல்லாஹ் அழித்ததை நினைவில் கொள்ள வேண்டும். (பார்க்க: அல்குர்ஆன் 7:165)
5. எதிர் கொள்கையுடையவர்கள் எத்தகைய திறமைமிக்கவர்களாக, மெத்தம் படித்தவர்களாக இருந்தாலும் அவர்கள் தவறான கொள்கையில் இருப்பதால் அவர்கள் கைவசம் எந்த ஆதாரமும் இருக்காது என்று அடிப்படையிலேயே நம்ப வேண்டும் (பார்க்க: அல்குர்ஆன் 40:35, 45:25)
6. இறைவனின் பாதையில் ஹிக்மத்தாக (விவேகமாக) அழைக்க வேண்டும். அழகிய அறிவுரைகளுடன் அழைக்க வேண்டும் (பார்க்க 16:125). நமக்கு தீங்கு இழைப்பவர்கள் தவிர, மற்ற அனைவரிடமும் அழகிய முறையிலேயே விவாதம் செய்ய வேண்டும். (பார்க்க: அல்குர்ஆன் 29:46)
7. தாவா பணி என்பது, நாளை மறுமை வரை நம்முடன் வரக்கூடிய நிலையான தர்மம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். (பார்க்க: நூல்: முஸ்லிம் 3084)
8. உண்மை எது என்பதை அறிய பெரும்பான்மை, சிறுபான்மை அளவுகோல் கூடாது. நாளை மறுமையில் பல காலம் பிரச்சாரம் செய்தும் எவருமே கேட்காத காரணத்தால் பின்னால் ஒரு மனிதன் கூட இல்லாத நிலையில் ஒரு நபி தனியாகவே வருவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறீயிருக்கிறார்கள்.
9. நாம் சொல்வதை எவருமே கேட்கவில்லை என்றாலும் கூட அதனால் நாம் துவண்டு விடக்கூடாது. ஒட்டு மொத்த சமுதாயமே நமக்கெதிராக அணி திரண்டாலும் நமது ஈமான் அதிகரிக்கவே செய்ய வேண்டும் (பார்க்க: அல்குர்ஆன் 3:173, 3:139)
10. கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புவது பொய்யனுக்கான அடையாளம் என்பதால் இதில் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். அத்துடன், அடிப்படையற்ற ஊகங்களுக்கும் நாம் இடமளிக்கக்கூடாது சில யூகம் மிகவும் கெட்டது என்று அல்லாஹ் சொல்கிறான் (பார்க்க: அல்குர்ஆன் 49:12

  

நற்குணங்கள் 

S
இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.
''உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்.'' (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)
உண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.
இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்”. (ஆதாரம்-புகாரி)
ஒவ்வொரு நல்ல வார்த்தையும் தர்மம் ஆகும், என்று நபியவர்கள் நவின்றார்கள் (ஆதாரம்-புகாரி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு சொன்னதோடு நின்று விடாமல் தானும் அவ்வாறே நடந்துள்ளார்கள்.
ஒரு முறை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்று கேட்டபோது, அவர்களுடைய வாழ்க்கை குர்ஆன் ஆகவே இருந்தது என்றார்கள்.
இவ்வாறு நற்குணங்களை இயற்கையாக கொண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அதற்காக இறைவனிடம் பிராத்தித்துள்ளார்கள்.
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய இரட்சகனே! என்னை அழகாக படைத்ததைப் போன்றே என்னுடைய ஒழுக்கத்தையும் அழகுப்படுத்துவாயாகஎன்று பிராத்தித்தார்கள். (ஆதாரம்: இப்னு ஹிப்பான்)
நற்குணத்தோடு இருக்கும் மனிதர்களுக்கு மறுமையில் கிடைக்கும் பரிசைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நல்லொழுக்கத்தை விட மறுமையின் தராசில் வேறு எதுவும் கனமானதாக இருக்காதுஎன்றார்கள் (ஆதாரம்: திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, அபூ உமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒரு மனிதன் உண்மையான கருத்துடையவனாக இருந்தும் தர்க்கம் புரியாமல் இருந்து விடும்போது அம்மனிதனுக்கு சுவனத்தின் மூலைகளில் ஒரு வீட்டைப் பெற்றுத்தர நான் பொறுப்பேற்கின்றேன். வேடிக்கையாக பேசுபவனாயினும் பொய் பேசுவதைக் கை விட்டவனுக்கு சுவனத்தின் நடுவில் ஒரு வீட்டை பெற்றுத் தர நான் பொறுப்பேற்கின்றேன் தன் குணங்களை சிறப்பாக்கிக் கொண்டவனுக்கு சுவர்க்கத்தில் மிக உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தர பொறுப்பேற்கின்றேன் (ஆதாரம்: அபுதாவூத்).
இறைவன் அளித்த அருட்கொடையான நாவை நல்வழியில் பயன்படுத்துவோரே வெற்றியாளர்கள் என்று இறைவனும் கூறிகிறான்
ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டார்கள் அவர்கள் எத்தகையவரென்றால் அவர்கள் வீணான பேச்சு செயல் ஆகியவற்றை விட்டு விலகியிருப்பார்கள். இத்தகையோர் தாம் சுவர்க்கத்தின் வாரிசுதாரர்கள் இவர்கள் ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதியை அனந்தரம் கொண்டு அதில் நிலையாக தங்கியிருப்பார்கள் (அல்குர்ஆன் 23:1-11)
மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொரு அசைவிலும் அவனின் ஒழுக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று இறைவனும் அவனின் தூதரும் கூறி உள்ளார்கள்.
இறைவனை தவிர வேறு கடவுள் இல்லை அவனின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்என்று வெறும் வாயளவில் கூறிக் கொள்வதால் மட்டும் முஸ்லிம் (இறைநம்பிக்கையாளர்) ஆகிவிட முடியாது.
 
இறைவனும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கூறிய ஒவ்வொன்றையும் தன் வாழ்வில் நம்பிக்கை கொண்டு அதைச் செயல்வடிவில் கொண்டு வருவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அதனைச் செயல்படுத்தினால்தான் முஸ்லிமின் ஈமான் என்ற இறை நம்பிக்கை முழுமைபெறும்.
வெறும் முஸ்லிம் என்று கூறிக்கொண்டு தன் மனம் போன போக்கில் செல்வபர்களை பார்த்து இறைவன் அவர்களை கால்நடைகளைக்கு ஒப்பிட்டு கூறிகிறான்.
அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள். அவர்களுக்குக் கண்கள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை. அவர்களுக்குக் காதுகள் உண்டு ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள்(நற்போதனைகளை) கேட்பதில்லை. இத்தனையோர் கால்நடைகளைப் போன்றவர்கள் இல்லை அவற்றை விடவும் வழிகேடர்கள் இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்(அல்குர்ஆன் 7:179).
இவ்வுலக வாழ்வையே சதமென மதித்து தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான் அவனுக்கு உதாரணம் நாயைப் போன்றது. அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது அல்லது அதை நீர் விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது இதுவே நம் வசனங்களை பொய்பித்தவர்க்கு உதாரணமாகும். (அல்குர்ஆன் 7:176)
உலக மக்கள் அனைவருக்கும் ஒவ்வொரு முஸ்லிமும் தன் நற்குணங்களால் தன்னை அலங்கரித்து நல் வழிகாட்டியாக இருக்க வேண்டிய நிலை மாறி தடுமாறி போனது ஏன்?
எந்த மதத்திலும் கூறாத ஒரு நற்பண்பை நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் கூறுகிறது என்று பெருமிதத்துடன் கூறும் நாம் மார்க்கம் கூறும் முறையில் வாழாததைப் பார்க்கும் போது மனம் வேதனை அடையாமல் இருக்க முடியவில்லை.
எனவே, நமது தவறுகளை களைந்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எந்த நல்லொழுக்கத்தை முழுமைபடுத்த அனுப்பட்டார்களோ அந்த நல்லொழுக்கத்தின்படி நம் வாழ்கையை அமைத்து அதன்படி வாழ்ந்து நாம் அனைவரும் இறைவனின் திருப்பொருத்ததை பெற்று பெருமையில் உயர்ந்த சுவனத்தை அடைவோமாக! ஆமீன்!