வெள்ளி, டிசம்பர் 04, 2015

பிழைகளும் பாவங்களும் அதிகரிப்பதனால் பிரளய சகாப்தங்கள் ஏற்படுகின்றன

உலகில் மனிதன் தோன்றிய காலம் முதல் பாவம் செய்து கொண்டேயிருக்கின்றான். சகிக்க முடியாத பாவங்களில் சதாவும் மக்கள் மூழ்கி இருந்தனர். இதனால் அல்லாஹு தஆலா உலகில் பல அழிவுகளை இயற்கை அனர்த்தங்களை உருவாக்கினான். அதுபற்றி அல்குர்ஆன் என்ன சொல்கின்றது என்பது பற்றி ஆராய்வோம்
பேரிடியும், பேரலையும்
‘இதேபோல் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு, அவனையும், அவன் கட்டளைகளையும் ஏற்க மறுத்த மூஸா நபி (அலை) அவர்களின் காலத்து சமுதாயம் இடிமுழக்கம் வாயிலாக அழிக்கப்பட்டது. பிர்அவ்னும், அவனது படையினரும், கடலில் மூழ்கி அழிய மூஸா நபியும் அவரது கூட்டத்திற்கும் கடல் விலகி வழி கொடுத்தது. (அல்குர்ஆன் 44 : 24)
‘சுஐப் நபிக்கும், ஸாலிஹ் நபிக்கும் மாறுபட்ட சமுதாயம் இடிமுழக்கத்தினால் அழிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 11 – 94)
இன்னுமொரு சமுதாயத்தின் அழிவை இறைமறை இப்படி இனம் காட்டுகின்றது
அடிவேரோடு அழிக்கப்பட்டனர்
‘ஆது’ கூட்டத்தினருக்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர் ஹுதையும் இறையருளையும் மறுத்து வாழ்ந்ததனால் இச்சமூகம் வேரறுக்கப்பட்டது. அவரையும் (ஹுத் அலை) அவருடன் இருந்தோரையும் நம்முடைய அருளைக் கொண்டு காப்பாற்றினோம். நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியோரையும் (இறை) விசுவாசம் கொள்ளாதவர்களாக இருந்தோரையும் வேரறுத்துவிட்டோம். அல்குர்ஆன் (7, 72)
ஒவ்வொரு சமுதாயத்தையும் அல்லாஹ் வெவ்வேறு அழிவுகளைக் கொண்டு அழித்தான் அது பின்வரும் சமுதாயத்துக்குப் படிப்பினையாக அமைந்தது. அந்த வகையில்
பூகம்பத்தால் புதையுண்டவர்கள்
‘ஸமூது’ கூட்டத்தினர் அவர்களது சமூகத்திற்கு வந்த இறைத் தூதர் ஸாலிஹ் நபியையும் இறை கட்டளைகளையும் மறுத்த காரணத்தினால் மலையைக் குடைந்தும், மாளிகைகளைக் கட்டியும் வாழ்ந்த அச்சமுதாயத்தை பூகம்பத்தைக் கொண்டும் அல்லாஹ் அழித்தான். ஆகவே பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இறந்து குப்புற வீழ்ந்து கிடக்க காலைப் பொழுதை அடைந்தனர். (அல்குர்ஆன் 7.78)
இயற்கை அழிவுகளை இறைவன் எப்படித் திட்டமிடுள்ளான் என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது இதுமட்டுமா?
ஊரைப் புரட்டி ஒடுக்குதல்
பெண்களை விட்டு ஆண்களிடம் தமது காம இச்சையை தணித்துக் கொண்ட சமுதாயமாக வாழ்ந்தவர்களிடம் இறை தூதர் லூத் நபி (அலை) இறை கட்டளையைக் கூறி தடுத்தும் அதை உதாசீனம் செய்த மக்களை ‘அவர்கள் மீது கல்மாரியைப் பொழிந்து அவர்களை அழித்து விட்டோம் அவர்களுடைய ஊரின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியாக (தலைகீழாக) ஆக்கி விட்டோம். அன்றியும் அதற்கு முன்னர் அவ்வூரின் மீது சுடப்பட்ட செங்கற்களை மழையாகப் பொழியச் செய்தோம், (அல்குர்ஆன் 11 – 82)
அபய சப்தமும் அழித்தலும்
‘ஆகவே ஒரு பெரும் சத்தம் உண்மையாக அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்களை (வெள்ளத்தில் மிதக்கும்) குப்பை கூளங்களாய் நாம் ஆக்கிவிட்டோம். ஆகவே அக்கிரமக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது. (அல்குர்ஆன் 23. 41)
குளிர் காற்றும் கோர அழிவும்
ஆத் (எனும் ஜனங்கள்) அதி வேகமாக வீசும் குளிர் காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர். ‘ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் அவர்கள் மீது கடும் குளிர்கலந்த கொடுங்காற்றை வீசச் செய்தான் (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்திருந்தால்) வேரற்றுச் சாய்ந்த ஈச்ச மரங்களைப் போல் அந்த ஜனங்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர். (அல்குர்ஆன் 69.07)
வரலாறு முடிந்த வரம்பு மீறிய ஊர்கள்
(இவர்களைப் போன்று) நாம் வாழ்க்கை வசதிகளால் கொழுந்து(த் திமிர் கொண்டு) வாழ்ந்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கின்றோம் (அல்குர்ஆன் 28.58)
வேதனையும், சோதனையும் ஏன் வருகிறது?
மேலும் ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிந்துவிட நாடினால் அதில் சுகமாக வாழ்வோரை (நம் கட்டளைக்குக் கீழ் படிந்து நடக்குமாறு) நாம் ஏவுவோம், ஆனால் அவர்கள் நம் கட்டளைகளை மீறி) அதில் பாவம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் அதன் மீது நம்முடைய வாக்கு உறுதியாகிவிடுகிறது. ஆகவே அதனை நாம் அடியோடு அழித்து விடுகின்றோம்.
அல்குர்ஆன் (17 – 16)
எதிர்கால நிகழ்வுகளை எதிர்வுகூறும் அல்குர்ஆன்
எதிர்காலத்தில் நடைபெறப் போகும் அழிவுகளை அல்குர்ஆன் அழகாகக் கூறுகின்றது. ‘பூமி பிளக்கும் (81. 26) காதைச் செவிடாக்கும் பயங்கர சத்தம் வரும் (80. 33) சூரியன் ஒளி நீக்கப்பட்டு சுருட்டப்படும் (81 – 01) நட்சத்திரங்கள் ஒளி இழந்து உதிரும், மலைகள் பெயர்க்கப்படும் (81 – 02, 03) கடல்கள் தீமூட்டப்படும் (86. 06) வானமும் பிளந்து அகற்றப்படும் (81 – 11) வானம் வெடித்து, நட்சத்திரங்கள் உதிர்ந்து கடல்கள் பொங்கி எழும் (82, 01, 02, 03) பூமி அதன் அடிப்பாகத்திலிருந்து கடுமையான அசைவாக அசைக்கப்படும் (99. 01) அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள். இன்னும் மலைகள் கொட்டிய பஞ்சுகளைப் போல் பறக்கும் (101 – 04, 05)
ஏந்தல் நபியின் ஏற்புரை
விபசாரம் அதிகரிக்கும் போது மறுமையை எதிர்பாருங்கள் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அனஸ் (ரலி) ஆதாரம் புஹாரி, முஸ்லிம், ‘கழுதைகள் போன்று பகிரங்கமாக உடல் உறவில் ஈடுபடும் மக்கள் வாழும் போதுதான் உலகம் அழியும் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் நவாஸ் (ரலி) ஆதாரம் முஸ்லிம் ‘பாழல்பித்னா’ மேலும் நாயகம் (ஸல்) கூறினார்கள் நம்பிக்கை பாழாக்கப்பட்டால் உலக அழிவை எதிர்பாருங்கள் என்றனர். அறிவிப்பர் அபூஹுரைரா (ரலி) ஆதாரம் (புஹாரி)
‘பூகம்பங்கள் அதிகரிக்காத வரையில் உலகம் அழியாது என நபி (ஸல்) கூறினார்கள் :அபூஹுரைரா (ரலி) நூல் : புஹாரி
உலகில் பொய் பரவி, நம்பிக்கை மோசடி தலையெடுத்து, வட்டி பரந்து, விபசாரம் சர்வசாதாரணமாக மாறி, உலகெங்கும் அநீதியும் அக்கிரமமும் அரசோச்சுகின்ற போது பல்வேறு பிரலயங்களை நபி (ஸல்) அவர்கள் எதிர்பார்க்கச் சொன்னார்கள்.
பூகம்பங்களின் புரளிகள்
1906ம் ஆண்டு ஜனவரி 31ல் கொலம்பியாவில் நில நடுக்கம் 8.8 ரிக்டர் அளவு. இத்துடன் கடல் கொந்தளித்தது. ஆயிரம் பேர் வரை மரணம் 1923ம் ஆண்டு பெப்ரவரி 03ல் ரஷ்யா கம்சட்காலை பூகம்பம் உலுக்கியது இதன் தாக்கம் 8.5 ரிச்டர் அளவு
1938 ம் ஆண்டு பெப்ரவரி01ல் இந்தோனேஷியாவில் நில நடுக்கம் பண்டா கடலில் சுனாமி பெருக்கெடுத்தது.
1950 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி திபேத்தையும், இந்தியாவையும் பூகம்பம் தாக்கியது. இதன் தாக்கம் 8.6 ரிச்டர் அளவு இதனால் பிரமபுத்ரா பகுதியில் 1500 பேர் கொல்லப்பட்டனர்.
1952 ம் ஆண்டு நம்பவர் 4ம் திகதி ரஷ்யாவில் நில நடுக்கம் இதன் தாக்கம் 9.0 ரிச்டர் அளவாகும் இதில் உயிர் ஆபத்து இல்லை.
1957 ம் ஆண்டு மார்ச் 9ம் திகதி அலஸ்காவில் பூமி அதிர்ச்சி இதனால் 15 மீற்றர் உயரம் கடல் அலை எழுந்தது. 200 வருடம் பழைமைவாய்ந்த மவுண்டு வெஸ்லிடொப் எரிமலையும் வெடித்தது.
1960ம்ஆண்டு மே 22ல் சிலி நாட்டை பூகம்பம் தாக்கியது. இதன் அளவு 9.5 ரிச்டர் அளவாகும். இதனால் சந்தியாகோ, கொன்சிப்பியன் ஆகியவற்றைத் தாக்கியது. 5000க்கு மேற்பட்டோர் கடல் அலையில் காவுகொண்டனர். 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.
1964ம் ஆண்டு மார்ச் 28ல் அலஸ்காவில் மீண்டும் பூகம்பம் இதன் அளவு 9.2 ஆக பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் உயிர்ச் சேதங்களும் 311 மில்லியன் டொலர் பெறுமதியான பொருள் சேதங்களும் ஏற்பட்டது.
1965ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி அலஸ்காவில் மீண்டும் பூகம்பம் இதன் தாக்கம் 8.7 ரிச்டர் அளவாகும் ஆனால் பலமான சுனாமி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அலைகள் 10.7 மீற்றர் வரை உயர்ந்தது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தியா சுமாத்திராத் தீவில் பூகம்பம். இதன் அளவு 9.0 ரிச்டர் அளவாகும். கடலும் பலமாகக் கொந்தளித்து சுனாமி ஏற்பட்டது. இதனால் இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் கரையோரங்கள் பாதிக்கப்பட்டது. பாரிய உயிர் சேதமும் ஏற்பட்டது.
2011ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி ஜப்பானில் வட கிழக்குப் பகுதியில் பாரிய பூமியதிர்ச்சி இதன் அளவு 8.9 ரிச்டர். எனினும் இதனோடு கடல் அலையும் 20 அடி உயரத்தில் பாய்ந்தது. 1500க்கும் மேற்பட்ட மக்களைக் காவு கொண்டு பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அழிவுகளை அல்லாஹ் அமைக்கும் நேரம்
நபியே இவ்வூர்களிலுள்ளவர்கள் அவர்கள் நித்திரை செய்பவர்களாக இருக்கும் நிலையில் இரவில் நம்முடைய வேதனை அவர்களிடம் வருமென்பதைப் (பற்றி) அச்சம் தீர்ந்து இருக்கின்றார்களா? (அல்குர்ஆன் 7.97)
‘அல்லது இவ்வூரிலுள்ளவர்கள் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் லுஹா (பகல்) நேரத்தில் நம்முடைய வேதனை அவர்களிடம் வருமென்பதை(ப்பற்றி) அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா? (அல்குர்ஆன் 7.97) எனவே பிழைகளும் பாவங்களும் அதிகரித்த இக்காலத்தில் பிரளய சகாப்தம் எந்நேரத்திலும் வரலாம். தெளபாவின் மூலம் திக்ர், அமல்கள் மூலம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோம்.

புதன், அக்டோபர் 21, 2015

இஸ்லாத்தின் பார்வையில் கோபம்!!!கோபம் - இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைகளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம் மூலம் பலர் நண்பர்களை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளாக மாறியதும் உண்டு.
தாய், தந்தையர் தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக கோபிக்கிறார்கள். அதை அக்குழந்தைகள் புரிந்துகொண்டால், அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைகிறது. அக்கோபத்தை பிள்ளைகள் தவறாக புரிந்துகொண்டால், அங்கு பெற்றோர் மற்றும் பிள்ளைகளுக்கு மத்தியில் பாசம் பறிபோய்விடுகிறது.
 
அதேபோல் மனைவி தன் கணவன் மீது கோபம் கொள்கிறாள் அல்லது கணவன் தன் மனைவி மீது கோபம் கொள்கிறான். அது பொய் கோபமாக, ஊடலாக இருந்தால், அது இன்பமாக மாறிவிடுகிறது. அதே கோபம் உண்மையான கோபமாக இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நிம்மதியற்று போய்விடுகிறது. சில சமயம் அக்கோபம் புயலாக மாறி இருவரும் பிரிந்து வாழுதல் அல்லது பெரும் விவாகரத்து வரை அழைத்துச் செல்கிறது.
 
சில உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உப்புச் சப்பு இல்லாத விஷயங்களுக்காக குடும்ப உறவைத் துண்டித்து வாழ்கிறார்கள். மேலும் கோபத்தால் பலர் தங்களுடைய உடல் நலத்தையும் கெடுத்துக்கொள்கிறார்கள். இப்படி பல விளைவுகளை ஏற்படுத்தும் இந்த கோபத்தைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைக் காண்போம்.
அல்லாஹ் தன் திருமறையில் 3:134 வசனத்தில் கோபத்தைப் பற்றி குறிப்பிடும் போது, (பயபக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிப்பார்கள் என்று கூறுகிறான்.

ஒரு முறை ஒரு மனிதர் வந்து நபி (ஸல்) அவர்களிடம், 'எனக்கு உபதேசியுங்கள் என்று கேட்டார். கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் பதில் சொன்னார்கள். அவர் மீண்டும், மீண்டும் பல முறை உபதேசியுங்கள் என்று கேட்டபோது அப்போதும் நபியவர்கள் கோபம் கொள்ளாதே என்றே பதில் சொன்னார்கள்.
 (அபூஹுரைரா (ரலி) - புகாரி, திர்மிதீ, அஹ்மத்).
கோபம் கொள்ளாதே என்று நபியவர்கள் திரும்ப திரும்ப கூறியதிலிருந்து நாம் கோபத்தின் விளைவு எவ்வளவு பெரியது என்பதை விளங்கிக்கொள்ளலாம். சமுதாயத்தினரிடையே குழப்பம், உறவுகள் பிரிவு, உடல் நலக் கேடு என எல்லா வகையிலும் இந்த கோபம் முக்கிய ஆணிவேராக அமைகிறது.
யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க (உமக்கு மரணம் உண்டாகட்டும்!) என்று சற்றே மாற்றி ஸலாம் கூறினர். நபி (ஸல்) அவர்கள், வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். அப்போது அருகில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்களை கோபப்பட்டு சபிக்கும் விதமாக, அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு (உங்களுக்கு மரணமும், இழியும் உண்டாகட்டும்!) என்று (பதில்) சொன்னார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! அருவருப்பாகப் பேசுபவளாக இருக்காதே! என்று கண்டித்தார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான்தான் அவர்கள் சொன்னதற்கு, வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கும் உண்டாகட்டும்!) என்று பதில் சொல்லிவிட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று திருப்பிக் கேட்டார்கள். (ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்).
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அந்த யூதர்கள் கூறியதற்கு, இப்படி கோபமாக பதில் சொன்னதற்கு நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள். எதிரிகளிடமும் மென்மையான போக்கை கடைப்பிடித்து அவர்களை திருத்துவதே நபியவர்களின் அழகிய வழிமுறை. ஏன் நபி (ஸல்) அவர்கள் மென்மையான போக்கைக் கையாண்டார்கள்? காரணம், நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆயிஷா (ரலி) - புகாரி, முஸ்லிம்).
அதேப் போல் ஒரு முறை பள்ளியில் சிறுநீர் கழித்த கிராமவாசி ஒருவரை நபித்தோழர்கள் கோபம் கொண்டு தாக்க முயன்றபோது, அவர்களைத் தடுத்து நிறுத்தி, சிறுநீர்பட்ட அந்த இடத்தை தம் கைகளால் தண்ணீர் ஊற்றி தூய்மை செய்தது நபியவர்களின் மென்மையின் உச்சக்கட்டம். இதேப் போல் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது இறைமறுப்பாளர்கள் கடுமையாக நடந்து கொண்டார்கள். அவர்களிடமும் கோபம் கொள்ளாமல் மென்மையான போக்கைக் கையாண்டு அந்த உடன்படிக்கையில் வெற்றிப் பெற்றது மென்மைக்குக் கிடைத்த வெற்றியேத்தவிர கோபத்தால் கிடைத்த வெற்றியல்ல.
மென்மையை இழப்பவன் நன்மையை இழப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) - முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
பொதுவாக கோபம் கொள்பவர் தன் நிலையை இழந்துவிடுவார். அதனால்தான் அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், முடிவு வருத்தம் என்று சொல்வார்கள். இதேப் போல் ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: Anger is a short madness (கோபம் என்பது ஒரு அரைப்பைத்தியம்). உண்மையில் பைத்தியக்காரன் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியமாட்டான். கோபம் கொண்டவரும் அதேபோல் தான் என்ன செய்கிறோம், என்ன பேசுகிறோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். கோபத்தில் இருப்பவர்கள் கூறுவார்கள், கோபம் வந்தா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது என்று சொல்வார்கள். தமிழில் கூட கோபதைப் பற்றி ஒரு பழமொழி சொல்வார்கள்: கோபத்தோடு எழுந்தவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று சொல்வார்கள். உண்மையில் கோபம் கொண்டு எழுந்து அதற்கான செயலில் ஈடுபடும் போது அநீதீ, அட்டூழியம், உறவுகள் பிரிவு சில சமயம் கொலைக் கூட செய்வார்கள்.
சிலருக்கு கோபம் வந்தால் அந்த கோபத்திற்கு காரணமான நபரைப் பார்த்து, அசிங்கமான கெட்ட வார்த்தைகளால் திட்டுவார்கள். அதுவும் தாயையும், அக்காவையும் விபச்சாரம் செய் என்று கருத்துப்பட உள்ள வார்த்தைகளை கூறுவார்கள். இது எல்லா சமுதாயத்தினரிடமும் சர்வசாதாரணமாக இருக்கிறது. திட்டுவதுதான் சண்டைக்கும், கொலைக்கும் முக்கிய காரணமாக அமைகிறது.
கெட்டவார்த்தைகள் பேசுபவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) - அஹ்மத், இப்னுஹிப்பான்) மற்றொரு ஹதீஸில்: தன் நாவால் வெட்கம் கெட்ட விஷயங்களைப் பேசுபவனையும், கெட்டவார்த்தைகள் கூறுபவனையும் அல்லாஹ் மிகவும் வெறுக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபுதர்தா (ரலி) - திர்மிதீ). திட்டக்கூடியவனாகவோ, சாபமிடுபவனாகவோ, கெட்ட செயல்கள் செய்யகூடியவனாகவோ, கெட்டவார்த்தை பேசுபவனாகவோ ஒரு மூமின் இருக்கமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மஸ்வூத் (ரலி) திர்மிதீ, அஹ்மத், இப்னுஹிப்பான்). கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான், கெட்டவார்த்தைகளை சொல்பவர்கள் மூமின்களாக இருக்கமுடியாது என்றால் எந்த அளவுக்கு இந்த அசிங்கமான கெட்டவார்த்தைகளின் பாதிப்புக்கள் இருக்கும் என்பதை உணரவேண்டும்.
சிலர் கோபத்தினால் அதற்கு காரணமானவரை சபிப்பார்கள். சபிக்கும் போது என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் சபித்துவிடுவார்கள். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது, அதன் பின் விளைவு என்ன என்பதை பற்றிச் சிறிது கூட கவலைப்படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றவரை ஒருவர் சபிக்கும் போது அந்து சாபம் வானத்திற்கு செல்கிறது. அங்கே வானத்தின் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடியிருக்கின்றன. பின்பு அது வலது புறமும், இடது புறமும் அலைந்து திரிகின்றது. அங்கும் வழி கிடைக்காததால், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது. (அபுதர்தா (ரலி) - அபூதாவூத்). மற்றொரு ஹதீஸில், ஒருவர் மற்றவரை பாவி என்றோ, காபிர் என்றோ அழைத்தால், அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, காபிராக) இல்லையாயின், அது சொன்னவரிடமே வந்து சேருகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அபுதர் (ரலி) - புகாரி).
பொதுவாக கோபமும், பொறாமையும் உடன் பிறந்தவர்கள் என்று சொல்லலாம். காரணம் பொறாமையின் உச்சக்கட்டம்தான் கோபம். நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தினரைப் பிடித்த பொறாமை மற்றும் கோபம் ஆகிய வியாதிகள் உங்களையும் பீடித்துள்ளன. அவை (இரண்டும்) மழித்துவிடக்கூடியவை. முடியை மழிக்கும் என்று கூறமாட்டேன் எனினும் அவை மார்க்கத்தையே மழித்துவிடும் என்று கூறினார்கள். (ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) - திர்மிதீ, அஹ்மத்)
இந்த இரண்டு குணங்களான பொறாமை மற்றும் கோபம் ஆகியவற்றை கொண்ட சமுதாயத்தினர் சிறப்பாக வாழ்ந்ததாக வரலாறே கிடையாது. இருக்குமிடம் தெரியாமல் அழிந்தார்கள் என்பதே உண்மை. நபி யூஸுப் (அலை) அவர்கள் மீது பொறாமையும், கோபமும் கொண்டு, தன்னுடைய தம்பி என்றும் பார்க்காமல் பாழும் கிணற்றில் தள்ளினார்கள். இறுதியில் அவர்கள் தன் தம்பியிடம்தான் தஞ்சம் புகுந்தார்கள். இது பொறாமை மற்றும் கோபதால் விளையும் தீமையைப் பற்றி திருக்குஆன் கூறும் உண்மைச் சம்பவம்.
 
கோபம் வந்தால் நாம் என்ன பேசுகிறோம் என்று சிந்திப்பதில்லை. இப்படி கோபம் வந்து சிந்திக்காமல் பேசுவதால் எவ்வளவு பெரிய பாதிப்பு நமக்கு மறுமையில் ஏற்படும் என்பதை சற்று சிந்திக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முன்னொரு காலத்தில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் வணக்கசாலி, மற்றவர் அலட்சியவாதி. இந்த வணக்கசாலி எப்பொழுதும் மற்றவருக்கு உபதேசம் செய்து வந்தார். ஒரு நாள் அந்த அலட்சியவாதி இவரைப் பார்த்து என்னை கண்காணிப்பவனாக அல்லாஹ் உன்னை அனுப்பவில்லை. நீ உன் வேலையைப்பார் என்றார். இதைக் கேட்ட அந்த வணக்கசாலி, நிச்சயமாக அல்லாஹ் உன்னை மன்னிக்கமாட்டான் என்று கூறிவிட்டார். நாளை மறுமையில் அந்த இரண்டு பேரும் நிறுத்தப்படும் போது அல்லாஹ் அந்த அலட்சியவாதியை மன்னித்து, வனக்கசாலியைப் பார்த்து, நான் மன்னிக்கமாட்டேன் என்று கூற உனக்கு என்ன உரிமை இருக்கிறது? உன் அமல்களை நான் அழித்துவிட்டேன் என்று கூறி நரகுக்கு அனுப்பினான். (ஜுன்துப் (ரலி) - முஸ்லிம்). கோபத்தால் சிந்தனையில்லாமல் பேசப்படும் சிறு வார்த்தைக் கூட நம் மறுமை வாழ்வை சீரழித்துவிடும். கோபத்தால் சிந்திக்காமல் பேசப்படும் ஒரு வார்த்தையாக இருந்தாலும் அது நரகத்தின் எல்லைக்கே கொண்டுசெல்கிறது என்பதை உணரவேண்டும்.
சரி கோபப்படாமல் அந்தக் கோபத்தை அடக்கினால் என்ன நன்மை? நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது கோபத்தை செயல்படுத்த சக்தியிருந்தும் யார் அதை மென்று விழுங்குகிறாரோ அவரை மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் அழைத்து, அவர் விரும்புகின்ற ஹுருல் ஈன் என்னும் கன்னியரைத் தேர்வு செய்ய அவருக்கு உரிமை வழங்குவான் என்று கூறினார்கள். (முஅத் இப்னு அனஸ் அல்ஜுஹ்னீ (ரலி) - திர்மிதீ, இப்னுமாஜா, அபூதாவூத்).
வீரன் என்று சொன்னால் பலத்தால் மற்றவர்களை அடக்குபவன் என்று நாம் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் வீரனுக்கு இலக்கணம் கூறினார்கள்: பலத்தால் வீழ்த்துபவன் வீரன் அல்ல. கோபத்தின் போது கட்டுப்படுத்திக் கொள்பவனே வீரன் என்று கூறினார்கள். (அபூஹுரைரா (ரலி) - புகாரி, முஸ்லிம்).
கோபத்தை எப்படி அடக்கமுடியும்? என்று தோன்றலாம். நபி (ஸல்) அவர்கள் கோபம் தணிவதற்கான வழிமுறைகளை சொல்லியிருக்கிறார்கள். ஒருவர் நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் உட்கார்ந்து விடவும், கோபம் போய்விட்டால் சரி, இல்லையென்றால் படுத்துவிடவும் என்று கூறியிருக்கிறார்கள். (அபூதர் (ரலி) - திர்மிதீ, அஹம்த்). மற்றொறு ஹதீஸில்: கோபம் ஷைத்தானால் ஏற்படுகிறது. ஷைத்தான் நெருப்பினால் படைக்கப்பட்டவன். நெருப்பு தண்ணீரால் அணைக்கப்படுகிறது. எனவே கோபம் கொள்பவர் உளூச் செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தியா அஸ் ஸஅதீ (ரலி) - அபூதாவூத்). மேலும் கோபம் வரும் போது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜிம் என்று கூறினால் கோபம் போயிவிடும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அப்படியானால், கோபம் கொள்ளவே கூடாதா? கோபமில்லாமல் மனிதனால் வாழ முடியுமா? என்று பல கேள்விகள் நமக்கும் எழும். கோபம் என்பது மனிதனின் பண்புகளில் ஒன்று. கோபம் வரவில்லையென்றால் அவன் மனிதன் கிடையாது. ஐந்து அறிவு உள்ள மிருகங்களுக்கே கோபம் வருகிறது என்றால், ஆறு அறிவுள்ள மனிதனுக்கு கோபம் வராமல் இருக்குமா? அத்தியாவசிய, அவசியத் தேவைகளுக்காக கோபம் ஏற்படுவது இயல்பு. அது அவ்வபோது ஏற்படுகிற ஒன்றுதான். அதை அடக்கிக் கொள்வதுதான் சரியான செயல். அதே வேளையில் கோபப்படவேண்டிய சந்தர்ப்பத்தில் கோபம் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் அந்தக் கோபம் நியாயமானதாக இருக்கவேண்டும். நம்முடைய கோபத்தில் நியாயம் உண்டு என்பதை யார் மீது கோபம் கொள்கின்றோமோ அவருக்குப் புரிய செய்ய வேண்டும். இதில்தான் நாம் தவறிவிடுகிறோம். அதனால் பல விளைவுகளைச் நாம் சந்திக்கின்றோம். நம்முடைய கோபத்தின் நியாயத்தை புரியவைத்துவிட்டால், அக்கோபம் நமக்கு நன்மையில் முடியும். இல்லையென்றால், பெரும் இழப்புக்கள் ஏற்படும்.
அல்லாஹ் தன் திருமறையில் தீமையைக் கண்டால் கோபம் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான். (20:85,86) வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்: உமக்குப் பின் உமது சமுதாயத்தை நாம் சோதித்தோம். அவர்களை ஸாமிரி வழி கெடுத்துவிட்டான் என்று (இறைவன்) கூறினான். உடனே மூஸா தமது சமுதாயத்திடம் கோபமாகவும், கவலைப்பட்டவராகவும் திரும்பினார் - என்று குறிப்பிடுகிறான். தன் சமுதாயத்தை வழிகெடுத்தவன் மீது மூஸா (அலை) அவர்கள் கோபம் கொள்கிறார்கள். இது நன்மைக்காக.
 
கோபம் கொள்ளாதே என்று ஒரு நபித்தோழருக்கு உபதேசம் சொன்ன நபி (ஸல்) அவர்களே, சில சந்தர்ப்பங்களில் நன்மையான செயலுக்காக கடுமையாக கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் ஹதீஸில் காணமுடிகிறது. ஒரு தடவை குர்ஆனில் ஒரு வசனம் தொடர்பாக சண்டையிட்டுக் கொண்ட இருவரின் சப்தத்தைக் கேட்டு தமது முகத்தில் கோபம் தென்பட நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, உங்களுக்கு முன்னிருந்தோர் வேதத்தில் கருத்து முரண்பாடு கொண்டதால்தான் அழிந்துபோயினர் என்று கோபப்பட்டுக் கூறினார்கள். (அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) – முஸ்லிம்.
உக்பா இப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் புகாரியில் இடம்பெறும் மற்றொரு ஹதீஸில், நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, இன்ன மனிதர் எங்களுக்கு தொழுகையை நீட்டி (நீண்ட நேரம் ஆக்குகிறார்). இதனால் நான் சுப்ஹுத் தொழுகையில் கலந்து கொள்ள பின் தங்கி விடுகிறேன் என்று கூறினார். (உடனே நபி (ஸல்) அவர்கள் கடும் கோபம் அடைந்தார்கள்). அவர்கள் அன்று கோபம் கொண்டதைவிட வேறோரு நாளில் அதுபோல் பார்த்ததில்லை. நபியவர்கள் கூறினார்கள்: மக்களே! உங்களில் சிலர் வெறுக்க வைக்கக் கூடியவர்களாக உள்ளனர். மக்களுக்காக உங்களில் எவர் இமாமத் செய்தாலும் அவர் அதை சுருக்கமாக செய்யட்டும். அவரின் பின்னே (தொழும் மக்களில்) முதியவர், சிறியவர், தேவையுடையவர் என உள்ளனர் என்று கூறினார்கள்.
மார்க்க விஷயங்களிலும், அநீதிக்கு எதிராகவும் கோபம் கொள்வதில் இஸ்லாம் எப்பொழுதும் தடை விதிப்பதில்லை. ஆனால் நியாயமற்ற கோபம் எந்த இடத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் கட்டளையிடுகிறது.
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தக் கோபத்தை விடுவதே சிறந்தது.
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள்!
சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள்!
அல்லாஹ்வின் அடியார்களே!
 
(அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்!
அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்!
நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றுங்கள்!ஊழலற்ற சமுதாயம் உருவாக்குவதில் மாணவர்களின் பங்கு பகுதி..2

ஊழலற்ற சமுதாயம் உருவாக்குவதில்  மாணவர்களின் பங்கு
பகுதி..2
நாட்டில் எங்கும் ஊழல் மலிந்திருக்கிறதுஎன்று எல்லாரும் பேசுகிறார்கள். சர்வதேச அறிக்கை ஒன்று ஊழல்மிக்க நாடுகளில் நமதுநாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தில் இருக்கிறது என்று தெரிவிக்கிறது. அடிக்கடி நமது பேச்சிலும் எழுத்திலும் இடம் பெறும் இச்சொல்லின் பொருள் என்ன?
ஊழல் என்றால் என்ன?
சமூக ஒழுங்கிற்கு மாறாக நடத்தல், பிறரை ஏமாற்றுதல், வஞ்சித்தல், பொதுமக்களுக்குரிய பொருளைச் சட்டத்திற்குப் புறம்பான வழிகளில் கவர்தல் அல்லது கொள்ளையடித்தல் என்று இச்சொல்லுக்குப் பொருள் கூறலாம்.
தனிமனித ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என ஒழுக்கம் இரு வகைப்படும். ஒருவனது தனிமனித வாழ்க்கையை பாதிக்கும் விதமான செயல்களில் ஈடுபடும் போது அவன் தனிமனித ஒழுக்கத்தை மீறுகிறான். உதாரணமாகக் குடிப்பழக்கம், போதை மருந்துப்பழக்கம் போன்றவை ஒருவனை பாதிக்கின்றன. அப்பழக்கங்களில் ஈடுபடுகின்றவனைத் தனிமனித விதிகளை மீறுபவன் என்று சொல்லலாம். தனிமனித விதிகளை அல்லது ஒழுங்குகளை மீறுவது என்பது அப்படி மீறுபவனையும் அவனது குடும்பத்தையும் மட்டுமே பாதிக்கிறது.
சமூக ஒழுக்கம் என்பது இன்னொரு வகை. அதன் விதிகளை மீறுவது பொதுமக்களின் பெரும்பகுதியினரை பாதிக்கிறது. உதாரணமாகப் பொது இடங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது சமூக ஒழுக்கம். இதை மீறுபவர்கள் சமூகத்தில் நோய் பரவுவதற்கும் மற்றவர்கள் பாதிக்கப்படுவதற்கும் காரணமாகிறார்கள். தனிமனித ஒழுக்கத்தை மீறுவதைவிட இது மிகவும் மோசமானது.
ஊழல் என்பது சமூக ஒழுக்கத்தை மீறுகின்ற மிக மோசமான விஷயம். ஒரு நாட்டிற்குரிய அலுவலர்கள் எவராயினும் அந்நாட்டு மக்களுக்கு நன்மை தருகின்ற முறையில் நடந்துகொள்ள வேண்டும். அதனை மீறித்தங்கள் சுயநலத்தை மட்டுமே கருதி நாட்டு மக்களுக்குத் தீமை செய்யும் காரியங்களில் இறங்கும் போது ஊழல் செய்கிறார்கள். ஊழல் நடத்தை என்பது ஒரு மனப்பான்மை.
ஊழல் என்பது தனிமனித ஒழுக்கத்திற்கும் மாறானது. நேர்மை என்பது அடிப்படை மனித ஒழுக்கம். அடிப்படை மனித ஒழுக்கங்கள் மாறாதவை. உதாரணமாக, பிறரைக் கொள்ளையடிப்பவனும் தன்னைப் பிறர் கொள்ளையடிப்பதை விரும்புவதில்லை. பிறருக்குத் தீங்கு செய்பவனும், தனக்குப் பிறர் தீங்கு செய்வதை விரும்புவதில்லை. பிறன் மனைவியைச் சொந்தம்கொண்டாட முனைபவனும் தன்மனைவியைப் பிறர் காணச் சகிப்பதில்லை. மனித ஒழுக்கத்திற்குத்தன்னைப் போலவே பிறரை நினைக்கவேண்டும்என்பது அடிப்படையாக அமைகிறது. அடிப்படை மனித ஒழுக்கத்திற்கு மாறாக நடக்கும் போதுதான் ஊழல் ஏற்படுகிறது.
ஊழல் ஒரு மனப்பான்மை:
ஊழல் ஒரு மனப்பான்மை, அதைவிட ஒரு மனநோய் என்று கூடச் சொல்லலாம். பலபேர் ஊழல் என்றால், ஏதோ பணத்தைத் திருடுவது, பொதுச் சொத்தைக் கையாடுவது என்று மட்டும் நினைக்கிறார்கள். அவ்வாறல்ல. ஓர் இடத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக வரிசையில் நிற்கிறோம். பின்னால் வரும் ஒருவன் வந்து முறையற்ற விதத்தில் முன்னால்போய் நின்று கொள்கிறான். இதுவும் ஊழல்தான்.
பஸ்ஸில் ஏற நெரிசலாக இருக்கிறது. சிலர் நடத்துநரைக் கேட்டுச் சீட்டு வாங்கிக்கொண்டு ஏறுகிறார்கள். சிலர் வெளியிலிருந்தபடியே துண்டையோ பையையோ உள்ளே எறிந்துஇடம் போட்டுவிட்டுப் பின்னால் ஏறி, ஆனால்நாங்கள் ரிசர்வ் செய்து விட்டோம்என்று சொல்லி உட்கார்ந்து கொள்கிறார்கள். இதுவும் ஊழல்தான். இவை எல்லாமே சமூக ஒழுக்கத்தை மீறும் சுயநல நடவடிக்கைகள்.
அரசு அலுவலகத்தில் ஒருவன் முறைப்படி ஒரு காரியத்திற்காகச் செல்கிறான். இன்னொருவனுக்கு அவசரம். அவன் செல் வாக்கு உள்ளவனும் கூட. தனது காரியமே முதலில் ஆகவேண்டும் என்று நினைக்கிறான். உடனே தனது பணத்தைப் பயன்படுத்தி, அரசு அலுவலகருக்கு லஞ்சம் கொடுத்து, தனது சுயநலக் காரியத்தை முடித்துக்கொள்கிறான். முறையான வழியில் வருபவனுக்குக் காரியம் ஆகாமல் போகிறது. இதற்கும் முன்பு கூறியது போல வரிசையில் முறையற்ற வழியில் நுழைந்ததற்கும் வித்தியாசமில்லை. அங்கு உடல் பலம், இங்கே பணபலம். அவ்வளவுதான். நாம் முன்னதைக் குறை சொல்வதில்லை. பின்னதை மட்டும் ஊழல் என்கிறோம்.
ஊழல் என்பது சமூகத்தில் காணப்படும் ஒரு சுயநல மனப்பான்மை. ஒரு மனநோய். அது ஏதோ அரசாங்க அலுவலகங்களில், அரசாங்க ஊழியரிடம் அல்லது அரசியல்வாதிகளிடம் மட்டும் காணப்படும் பண்பு அல்ல.
தகுதிக்கேற்பப் பெறுகிறோம்:
மோசமான அரசாங்கம் அமைந்துவிடுகிறது. “உனக்கு எது பொருத்தமோ (ஏற்றதோ) அதை நீ பெறுகிறாய்என்று ஒரு பழமொழி இருக்கிறது. (You get what you deserve). இது மிகவும் சரியான கூற்றே. பெரும்பான்மை மக்கள் ஊழல் மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கும்போது அவர்களை ஆட்சிசெய்பவர்களும் வேறு எப்படி இருப்பார்கள்? அவர்களும் ஊழல் செய்பவர்களாகத் தானே இருக்கமுடியும்?
சிலஆண்டுகளுக்கு முன்னால் அரசாங்க அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அது மோசமான விதத்தில் ஒடுக்கப்பட்டது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். “இந்த அரசு அலுவலர்களுக்கு நன்றாக வேண்டும். ஊழல் செய்பவர்களுக்கு தங்கள் கடமையைச் செய்யாதவர்களுக்கு ஏற்ற தண்டனைதான் இதுஎன்று சொன்னார்கள். இந்த தண்டனை சரியா தவறா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்படிப்பட்ட அரசு அலுவலர்களை உருவாக்கியது யார்? நாம்தானே? அதாவது பொதுமக்கள்தானே?
உதாரணமாக, ஒரு பையன் பிறந்து வளரும்போதே அவன் ஊழல் செய்தாவது நன்றாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற மனப்பான்மையைப் பொது மக்கள்தான் ஏற்படுத்துகிறார்கள். நேர்மையாக நடப்பவர்கள் ஏமாளிகள், எதற்கும் லாயக்கற்றவர்கள், பைத்தியக்காரர்கள் என்கிறார்கள். ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்கும்போதே மாப்பிள்ளை சம்பளம் குறைவாக வாங்கினாலும், நன்றாக மற்றவழியில் சம்பாதித்துவிடுவான் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள். இப்படியெல்லாம் பொதுமக்களே, சாதாரண மக்களே, (அதாவது நாமே) எல்லா விதங்களிலும் ஊழலை ஆதரித்துக்கொண்டு, அதை ஏற்றுக் கொண்டு, அதைச் செய்யும் ஒருவனுக்கு தண்டனை கிடைத்தால் சந்தோஷப்படுகிறார்கள். இது எந்தவிதத்தில் நியாயம்?
நான் ஊழல் செய்யவும் இல்லை, அதை ஏற்றுக்கொள்ளவும் இல்லை; அப்படியிருக்க நான் எப்படி ஊழலுக்குத் துணை செய்வதாகக் கூறலாம்?” என்று சிலர் கேட்கிறார்கள். நாம் நம் கண்ணெதிரில் ஊழல் நடக்கும்போது தடுக்கவோ தண்டிக்கவோ முனைவதில்லை. பலசமயங்களில் பயப்படுகிறோம். அப்படியானால், நாம் எல்லாரும் ஊழலுக்குத் துணை செய்பவர்கள் என்று தான் அர்த்தம்.
ஊழல் சிறிய அளவிலிருந்துதான் தொடங்குகிறது. உதாரணமாக, ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்திற்குச் செல்லுங்கள், பதிவுக்கான கட்டணத்துடன் அங்குள்ள பதிவாளரிலிருந்து பியூன் வரை அனைவருக்குமான பங்கையும் சேர்த்தே உங்களிடம் முதலிலேயே வாங்கிவிடுவார்கள். பலபேருக்கு இப்படி நடக்கிறது என்று கூடத் தெரியாது. என்ன நடக்கிறதென்று தெரியாதவர்களும், தெரிந்தே ஏற்றுக்கொள்பவர்களும் ஒன்றுதான்.
இப்படி ஒரு தேசத்திலிருக்கும் மிகப் பெரும்பான்மை மக்கள் ஊழல் மனப்பான்மை கொண்டவர்களாக, “என்ன நடந்தால் நமக்கென்னஎன்று இருப்பவர்களாகவோ, தடுக்கச் சக்தியற்றவர்களாகவோ இருக்கும்போது அவர்களுக்கேற்ற ஊழல் ஆட்சியாளர்களும் அலுவலர்களும் அரசியல்வாதிகளும் தானே இருப்பார்கள்? பொது மக்களிலிருந்துதானே இவர்கள் எல்லாரும் உருவாகிறார்கள்?
ஊழலற்ற தேசம்:
ஆகவே ஊழலற்ற தேசம் வேண்டுமானால், பொதுமக்களின் மனப்பான்மை மாறவேண்டும். அதுதான் அடிப்படை. பொதுமக்களின் மனம் ஊழலுக்கு எதிரானதாக, ஊழலை ஏற்றுக்கொள்ளாததாக இருந்தால் ஊழல் புரிபவர்கள் அரசு அலுவலுக்கும் வரமாட்டார்கள், அரசியல்வாதிகளாகவும் மாட்டார்கள். எனவே ஊழலற்ற தேசம் வேண்டும் என்பவர்கள் பொதுமக்களின் மனப்பான்மையை மாற்றுவதற்கு என்ன செய்வது என்பது பற்றித்தான் ஆராய வேண்டும்.
இன்றைய நிலை:
ஊழல் மனப்பான்மை என்பதுஎந்தவிதத்திலேனும் நான் மட்டும் பயனடைய வேண்டும், மற்றவர்கள் எக்கேடும் கெடட்டும்என்னும் சுயநல மனப்பான்மைதான். ஊழல் மனப்பான்மை மாறுவது எப்படி?
நேர்மையான விதத்தில் நடந்தாலே நமக்குத் தேவையானது எதுவாயினும், ரேஷன் பொருளானாலும், இட ஒதுக்கீடானாலும், வேலை வாய்ப்பானாலும், டிரைவிங் லைசென்ஸ் ஆனாலும் கிடைத்துவிடும் என்ற நிலை இருந்தால் மக்கள் நியாயத்திற்குப் புறம்பான வழிகளைப் பெரும்பாலும் நாடமாட்டார்கள். நேர்மையாகவே எல்லாம் கிடைக்கும் என்றால் அநியாய வழிக்கு ஏன் போக வேண்டும்?
ஆகவே மக்கள் நியாயமான வழியில் நடந்தாலே அவர்களுக்கு உரிய காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம்தான் ஏற்படுத்தவேண்டும். ஆனால் அரசாங்கம் அப்படிச் செய்யுமா? அரசாங்கமே ஊழல் மிகுந்ததாக இருக்கும்போது நேர்மையான விதத்தில் நடப்பது நன்மை பயக்கும் என்ற உறுதியை, நம்பிக்கையை அது எப்படி அளிக்கமுடியும்? (இதனால்தான் போலும், அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி என்று பழமொழி இருக்கிறது.)
ஊழல் கூடாது என்று பிரச்சாரம் செய்வதன் வாயிலாக ஊழலை ஒழிக்க முடியாது. சிறிய குழந்தைகளுக்கே இந்தக் காலத்தில் யார் வெறுமனே சொல்கிறார்கள், யார் நடந்து காட்டுகிறார்கள் என்பது நன்றாகப் புரிகிறது. அரசாங்க அலுவலர்களும், அரசியல்வாதிகளும், செல்வாக்கு மிக்கவர்களும், குறிப்பாக ஊழல் உருவாகப் பெரும் காரணமாக இருக்கின்ற முதலாளிகளும் ஊழலற்ற விதத்தில் பெரும்பான்மையும் நடந்துகாட்டுவது வாயிலாகத்தான் ஊழலை ஒழிக்க முடியும். தாங்களே ஊழல் செய்து பல்லாயிரக் கோடிகள் கணக்கில் பணம் சம்பாதித்துக்கொண்டு மக்கள் ஊழல் செய்யக்கூடாது என்று சொல்லும் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் யார் நம்புவார்கள்?
நமது அரசாட்சிமுறை ஊழலுக்கு இடமளிப்பதாகவே இருக்கிறது. உதாரணமாகத் தேர்தல். தேர்தலுக்கு நிற்பவர்கள், ஏராளமாகப் பணம் செலவு செய்யவேண்டி இருக்கிறது. நேர்மையானவர்கள் எப்படி இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் தங்கள் தொகுதியில் வெற்றிபெறப் பணம் செலவழிக்க முடியும்? ஆகவே நேர்மையற்ற முறையில் பணம் சம்பாதிப்பவர்கள்-அந்தப் பணம் எப்படிப் போனாலும் சரி, கருப்புப் பணம் வெள்ளையாகட்டும் என்னும் மனப்பான்மை உள்ளவர்கள்தான் தேர்தலில் நிற்க முடியும். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே ஊழலை ஆதரிக்கும்விதமாக இருக்கும்போது அவர்கள் ஊழலை எப்படி ஒழிப்பார்கள்?
தேர்தல் செலவுகளுக்காகக் கட்சிகளுக்குப் பணம் வேண்டும். கட்சிகள் பெரிய முதலாளிகளை நாடுகின்றன. முதலாளிகள் கட்சிகளுக்குத் தேர்தல் நன்கொடை (நிதி) தருகிறார்கள். தேர்தலில் அக்கட்சி வெற்றிபெற்ற பிறகு அவர்கள் தங்களுக்குச் சலுகைகள் கேட்கிறார்கள். அரசுப்பொறுப்பை ஏற்ற கட்சிகள் அப்போது மறுக்க முடிவதில்லை. சட்டத்திற்குப் புறம்பாகச் சலுகைகளை அந்த முதலாளிகளுக்குத் தருகிறார்கள். இப்படி அதிகாரமும் முதலாளித்துவமும் இணைந்து ஊழலை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது சர்வதேச நாடுகளும் அடுத்த நாடுகளில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த ஊழலைப் பயன்படுத்துகின்றன.
இதையெல்லாம் பார்க்கும்போது, நேர்மையாக இருக்கின்ற, நேர்மை மனப்பான்மை படைத்த ஒருசிலருக்கும் சமூகத்தின்மீது அவநம்பிக்கைதான் தோன்றுகிறது. ஊழலுக்கு ஆதரவாகவே அரசியல்வாதிகளும், அரசாங்கமும், தேர்தல் முறையும், பெரிய அமைப்புகளும், இப்படி எல்லாமே செயல்படும்போது சாதாரண மனிதன் என்ன செய்வது? இந்த அமைப்புகளுக்கு எதிராக எப்படிப் போராடுவது என்னும் சோர்வு ஏற்படுகிறது. இன்று நாம் படித்தவர்களிடமும் பண்புள்ளவர்களிடமும் காண்பது இப்படிப்பட்ட சோர்வுதான்.
விஷச்சுழல்
ஊழல் என்பது மிகப்பெரிய விஷச்சுழல். ஏனென்றால் பணபலமுள்ளவன் ஊழல் செய்து அரசாங்கத்தில் செல்வாக்குப் பெற, அரசாங்கம் (தனது தேர்தல் போன்ற விஷயங்களுக்காக) மறுபடியும் அவனை ஆதரிக்க, இப்படி அந்தச்சுழல் விரிந்துகொண்டே போகிறது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
ஊழல் செய்யும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தாங்கள் அதைச் செய்யும்போது கண்டுகொள்வதில்லை. பிறர் செய்து, நாட்டுக்கு அது மோசமான விளைவை ஏற்படுத்தும் என்னும்போது மட்டும் உச்சநீதி மன்றம், சிபிஐ விசாரணை அது இது என்று கண்துடைப்பு விவகாரங்களில் ஈடுபடுகிறார்கள். ஒரு காலத்தில் ஏதாவது ஊழல் நடந்தால் விசாரணைக் கமிஷன் அமைப்பார்கள். இப்போது விசாரணைக் கமிஷன் என்றாலே கேலிக்கூத்தாகி விட்டது. யாருக்கும் அதில் நம்பிக்கை இல்லை. விசாரணைக் கமிஷன்களால் ஒருவரும் தண்டிக்கப்பட்டதில்லை. மாறாக, இது ஒரு ஒத்திப்போடும் உத்தி, மக்களை மறக்கச்செய்யும் உத்தி என்று எல்லாருக்கும் தெரியும்.
வழிதான் என்ன?
இப்படிப்பட்ட மிகச்சோர்வான நிலையில் பொதுமக்கள் என்ன செய்வது? மாணவர்களும் இளைஞர்களும் எப்படி ஒரு ஊழலற்ற தேசத்தை உருவாக்குவார்கள்? ஆர்வமுள்ளவர்கள் சிலஆயிரம் பேரேனும் ஓர் அமைப்பாகச் சேர்ந்து செயல்படுவது ஒரு வழி. உதாரணமாக, ஓர் அரசு அலுவலர் ஊழலில் ஈடுபடுகிறார் என்றால் தனிமனிதன் சென்று நியாயம் கேட்டால் வேலை நடப்பதில்லை. மேலும் அவனை ஒழிக்க முனைந்துவிடுவார்கள். நியாய மனப்பான்மை உள்ள பத்துப்பேர் ஒன்றாகச் சேர்ந்து கேட்டால் நியாயம் கிடைக்கலாம். ஆனால் அதற்கும் தளராத மன உறுதி உள்ள தனிமனிதர்கள் வேண்டும். அந்தப் பத்துப்பேரும் எல்லா ஊர்களுக்கும் செல்லமுடியாது. எனவே ஓர் இயக்கத்தையே உருவாக்கும் உறுதி படைத்த மனிதர்கள் வேண்டும். அதற்கும் தளராத மனமும் பணபலமும் வேண்டும். இல்லை யென்றால், தற்காலிகமாகத் திரளும் மனிதக்குழுவையும் இன்றுதீவிரவாதிகள்என்று பெயர்சூட்டியே அரசியல்வாதிகள் ஒழித்து விடுவார்கள். எல்லா பலமும் அவர்கள் கையில்!.
ஊழல் என்பது சுயநலம். பொதுநலத்தில் குறுக்கிடாதவரை, சுயநலத்தினால் தவறில்லை. உன் கண்ணைக் குத்தாதவரை நான் குடை வைத்துக் கொள்வதில் தவறில்லை. பொதுநலத்திற்கு மாறான சுயநலம் தீமை பயக்கக்கூடியது. இறுதியாக நாட்டையே (நாட்டையே என்றால் நம் அனைவரையுமே என்றுதான் அர்த்தம்) ஒழித்துவிடும், சீரழித்துவிடும், அடிமையாக்கிவிடும். இதை மக்கள் உணருமாறு செய்யவேண்டும். யார் செய்வது?
இயற்கை இதற்கு எவ்வெவ்வாறோ உதவி செய்கிறது. உதாரணமாக, நிலத்தையும், காற்றையும், நீரையும் மாசுபடுத்தியேனும் தங்களுக்கு ஆயிரமாயிரம் கோடிகள் சேர்த்துக்கொண்டால்போதும் என்று முதலாளிகள் நம்பினார்கள். ஆனால் சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் பொது மக்களை ஓரளவு விழிப்படைய வைத்திருக்கின்றன. (ஓரளவுதான்!) இப்போது சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு எதிராக மக்கள் திரளுகிறார்கள். எனவே இயற்கை நமக்கு உதவிசெய்யும் என்று மக்கள் நம்பவேண்டும்.
ஊழலுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள், தற்காலிகமாக ஆங்காங்கு ஒன்றுதிரண்டு போராடினால் போதாது, “ஊழலால் கிடைப்பது தற்காலிகத் தீர்வுதானே ஒழிய நிரந்தரத் தீர்வு அல்லஎன்பதை உணருமாறு செய்யவேண்டும். பண்புள்ளவர்கள் சிலரின் தியாகத்தினால்தான் பெரிய காரியங்கள் நிகழுகின்றன. அவர்கள்தான் ஊழலுக்கு எதிரான இயக்கங்களை உருவாக்க வேண்டும். அவற்றை முன்னெடுத்துச் செல்லவேண்டும். தங்கள் நோக்கம் தீவிரவாதமோ அரசியலோ கிடையாது என்பதை மக்களுக்குத் தெளிவுபடுத்தி, மக்களுக்கு நன்மை கிடைப்பதே தங்கள் நோக்கம் என்பதை வலியுறுத்தி, இயக்கங்களை உருவாக்க வேண்டும்.
நமது அரசியலமைப்பையும், தேர்தல்முறையையும், பிற தேர்ந்தெடுப்பு முறைகளையும், மக்களுக்கு எதிரான சட்டங்களையும் நீதிமுறையையும் மாற்றமுடியாமல் போனால், பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் ஒன்றுதிரளும் இயக்கங்கள் மட்டுமே எதிர் காலத்தில் நம்பிக்கைதரும் ஒரேவழி. ஊழலற்ற தேசத்தை உருவாக்கும் ஒரே வழி. அம்மாதிரி இயக்கங்களை உருவாக்க ஒன்று திரளுவோம், உண்மையிலேயே சிறந்த (வல்லரசாக அல்ல, அது மேலும் ஊழலில் கொண்டுபோய்விடும்), மனிதத்தன்மை மிக்க இந்தியாவை உருவாக்க!.
ஆனால், உனக்கு எது ஏற்றதோ அதை நீ பெறுகிறாய் என்று ஊழல் சமுதாயத்திடம் நேர்மையானவர்கள் அல்லது நல்லவர்கள் சொல்லிவிட்டுப் பேசாமல் செல்லும்போது தங்கள் பொறுப்பிலிருந்து நழுவுகிறார்கள். அதாவது ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கு அவர்களுக்கும் ஒரு பொறுப்பு உண்டு. வெறும் விமரிசனம் மட்டும் போதாது.