வெள்ளி, டிசம்பர் 04, 2015

பிழைகளும் பாவங்களும் அதிகரிப்பதனால் பிரளய சகாப்தங்கள் ஏற்படுகின்றன

உலகில் மனிதன் தோன்றிய காலம் முதல் பாவம் செய்து கொண்டேயிருக்கின்றான். சகிக்க முடியாத பாவங்களில் சதாவும் மக்கள் மூழ்கி இருந்தனர். இதனால் அல்லாஹு தஆலா உலகில் பல அழிவுகளை இயற்கை அனர்த்தங்களை உருவாக்கினான். அதுபற்றி அல்குர்ஆன் என்ன சொல்கின்றது என்பது பற்றி ஆராய்வோம்
பேரிடியும், பேரலையும்
‘இதேபோல் அல்லாஹ்வின் அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டு, அவனையும், அவன் கட்டளைகளையும் ஏற்க மறுத்த மூஸா நபி (அலை) அவர்களின் காலத்து சமுதாயம் இடிமுழக்கம் வாயிலாக அழிக்கப்பட்டது. பிர்அவ்னும், அவனது படையினரும், கடலில் மூழ்கி அழிய மூஸா நபியும் அவரது கூட்டத்திற்கும் கடல் விலகி வழி கொடுத்தது. (அல்குர்ஆன் 44 : 24)
‘சுஐப் நபிக்கும், ஸாலிஹ் நபிக்கும் மாறுபட்ட சமுதாயம் இடிமுழக்கத்தினால் அழிக்கப்பட்டது.
(அல்குர்ஆன் 11 – 94)
இன்னுமொரு சமுதாயத்தின் அழிவை இறைமறை இப்படி இனம் காட்டுகின்றது
அடிவேரோடு அழிக்கப்பட்டனர்
‘ஆது’ கூட்டத்தினருக்கு அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதர் ஹுதையும் இறையருளையும் மறுத்து வாழ்ந்ததனால் இச்சமூகம் வேரறுக்கப்பட்டது. அவரையும் (ஹுத் அலை) அவருடன் இருந்தோரையும் நம்முடைய அருளைக் கொண்டு காப்பாற்றினோம். நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியோரையும் (இறை) விசுவாசம் கொள்ளாதவர்களாக இருந்தோரையும் வேரறுத்துவிட்டோம். அல்குர்ஆன் (7, 72)
ஒவ்வொரு சமுதாயத்தையும் அல்லாஹ் வெவ்வேறு அழிவுகளைக் கொண்டு அழித்தான் அது பின்வரும் சமுதாயத்துக்குப் படிப்பினையாக அமைந்தது. அந்த வகையில்
பூகம்பத்தால் புதையுண்டவர்கள்
‘ஸமூது’ கூட்டத்தினர் அவர்களது சமூகத்திற்கு வந்த இறைத் தூதர் ஸாலிஹ் நபியையும் இறை கட்டளைகளையும் மறுத்த காரணத்தினால் மலையைக் குடைந்தும், மாளிகைகளைக் கட்டியும் வாழ்ந்த அச்சமுதாயத்தை பூகம்பத்தைக் கொண்டும் அல்லாஹ் அழித்தான். ஆகவே பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இறந்து குப்புற வீழ்ந்து கிடக்க காலைப் பொழுதை அடைந்தனர். (அல்குர்ஆன் 7.78)
இயற்கை அழிவுகளை இறைவன் எப்படித் திட்டமிடுள்ளான் என்பதைப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது இதுமட்டுமா?
ஊரைப் புரட்டி ஒடுக்குதல்
பெண்களை விட்டு ஆண்களிடம் தமது காம இச்சையை தணித்துக் கொண்ட சமுதாயமாக வாழ்ந்தவர்களிடம் இறை தூதர் லூத் நபி (அலை) இறை கட்டளையைக் கூறி தடுத்தும் அதை உதாசீனம் செய்த மக்களை ‘அவர்கள் மீது கல்மாரியைப் பொழிந்து அவர்களை அழித்து விட்டோம் அவர்களுடைய ஊரின் மேல் பகுதியை அதன் கீழ் பகுதியாக (தலைகீழாக) ஆக்கி விட்டோம். அன்றியும் அதற்கு முன்னர் அவ்வூரின் மீது சுடப்பட்ட செங்கற்களை மழையாகப் பொழியச் செய்தோம், (அல்குர்ஆன் 11 – 82)
அபய சப்தமும் அழித்தலும்
‘ஆகவே ஒரு பெரும் சத்தம் உண்மையாக அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவர்களை (வெள்ளத்தில் மிதக்கும்) குப்பை கூளங்களாய் நாம் ஆக்கிவிட்டோம். ஆகவே அக்கிரமக்கார மக்கள் மீது (இறைவனின்) சாபம் ஏற்பட்டுவிட்டது. (அல்குர்ஆன் 23. 41)
குளிர் காற்றும் கோர அழிவும்
ஆத் (எனும் ஜனங்கள்) அதி வேகமாக வீசும் குளிர் காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர். ‘ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் அவர்கள் மீது கடும் குளிர்கலந்த கொடுங்காற்றை வீசச் செய்தான் (நபியே! அச்சமயம் நீர் அங்கிருந்திருந்தால்) வேரற்றுச் சாய்ந்த ஈச்ச மரங்களைப் போல் அந்த ஜனங்கள் பூமியில் விழுந்து கிடப்பதைக் கண்டிருப்பீர். (அல்குர்ஆன் 69.07)
வரலாறு முடிந்த வரம்பு மீறிய ஊர்கள்
(இவர்களைப் போன்று) நாம் வாழ்க்கை வசதிகளால் கொழுந்து(த் திமிர் கொண்டு) வாழ்ந்த எத்தனையோ ஊரார்களை நாம் அழித்திருக்கின்றோம் (அல்குர்ஆன் 28.58)
வேதனையும், சோதனையும் ஏன் வருகிறது?
மேலும் ஏதேனும் ஓர் ஊரை நாம் அழிந்துவிட நாடினால் அதில் சுகமாக வாழ்வோரை (நம் கட்டளைக்குக் கீழ் படிந்து நடக்குமாறு) நாம் ஏவுவோம், ஆனால் அவர்கள் நம் கட்டளைகளை மீறி) அதில் பாவம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள். பின்னர் அதன் மீது நம்முடைய வாக்கு உறுதியாகிவிடுகிறது. ஆகவே அதனை நாம் அடியோடு அழித்து விடுகின்றோம்.
அல்குர்ஆன் (17 – 16)
எதிர்கால நிகழ்வுகளை எதிர்வுகூறும் அல்குர்ஆன்
எதிர்காலத்தில் நடைபெறப் போகும் அழிவுகளை அல்குர்ஆன் அழகாகக் கூறுகின்றது. ‘பூமி பிளக்கும் (81. 26) காதைச் செவிடாக்கும் பயங்கர சத்தம் வரும் (80. 33) சூரியன் ஒளி நீக்கப்பட்டு சுருட்டப்படும் (81 – 01) நட்சத்திரங்கள் ஒளி இழந்து உதிரும், மலைகள் பெயர்க்கப்படும் (81 – 02, 03) கடல்கள் தீமூட்டப்படும் (86. 06) வானமும் பிளந்து அகற்றப்படும் (81 – 11) வானம் வெடித்து, நட்சத்திரங்கள் உதிர்ந்து கடல்கள் பொங்கி எழும் (82, 01, 02, 03) பூமி அதன் அடிப்பாகத்திலிருந்து கடுமையான அசைவாக அசைக்கப்படும் (99. 01) அந்நாளில் மனிதர்கள் சிதறிக்கப்பட்ட ஈசல்களைப் போல் ஆகிவிடுவார்கள். இன்னும் மலைகள் கொட்டிய பஞ்சுகளைப் போல் பறக்கும் (101 – 04, 05)
ஏந்தல் நபியின் ஏற்புரை
விபசாரம் அதிகரிக்கும் போது மறுமையை எதிர்பாருங்கள் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர் : அனஸ் (ரலி) ஆதாரம் புஹாரி, முஸ்லிம், ‘கழுதைகள் போன்று பகிரங்கமாக உடல் உறவில் ஈடுபடும் மக்கள் வாழும் போதுதான் உலகம் அழியும் என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் நவாஸ் (ரலி) ஆதாரம் முஸ்லிம் ‘பாழல்பித்னா’ மேலும் நாயகம் (ஸல்) கூறினார்கள் நம்பிக்கை பாழாக்கப்பட்டால் உலக அழிவை எதிர்பாருங்கள் என்றனர். அறிவிப்பர் அபூஹுரைரா (ரலி) ஆதாரம் (புஹாரி)
‘பூகம்பங்கள் அதிகரிக்காத வரையில் உலகம் அழியாது என நபி (ஸல்) கூறினார்கள் :அபூஹுரைரா (ரலி) நூல் : புஹாரி
உலகில் பொய் பரவி, நம்பிக்கை மோசடி தலையெடுத்து, வட்டி பரந்து, விபசாரம் சர்வசாதாரணமாக மாறி, உலகெங்கும் அநீதியும் அக்கிரமமும் அரசோச்சுகின்ற போது பல்வேறு பிரலயங்களை நபி (ஸல்) அவர்கள் எதிர்பார்க்கச் சொன்னார்கள்.
பூகம்பங்களின் புரளிகள்
1906ம் ஆண்டு ஜனவரி 31ல் கொலம்பியாவில் நில நடுக்கம் 8.8 ரிக்டர் அளவு. இத்துடன் கடல் கொந்தளித்தது. ஆயிரம் பேர் வரை மரணம் 1923ம் ஆண்டு பெப்ரவரி 03ல் ரஷ்யா கம்சட்காலை பூகம்பம் உலுக்கியது இதன் தாக்கம் 8.5 ரிச்டர் அளவு
1938 ம் ஆண்டு பெப்ரவரி01ல் இந்தோனேஷியாவில் நில நடுக்கம் பண்டா கடலில் சுனாமி பெருக்கெடுத்தது.
1950 ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி திபேத்தையும், இந்தியாவையும் பூகம்பம் தாக்கியது. இதன் தாக்கம் 8.6 ரிச்டர் அளவு இதனால் பிரமபுத்ரா பகுதியில் 1500 பேர் கொல்லப்பட்டனர்.
1952 ம் ஆண்டு நம்பவர் 4ம் திகதி ரஷ்யாவில் நில நடுக்கம் இதன் தாக்கம் 9.0 ரிச்டர் அளவாகும் இதில் உயிர் ஆபத்து இல்லை.
1957 ம் ஆண்டு மார்ச் 9ம் திகதி அலஸ்காவில் பூமி அதிர்ச்சி இதனால் 15 மீற்றர் உயரம் கடல் அலை எழுந்தது. 200 வருடம் பழைமைவாய்ந்த மவுண்டு வெஸ்லிடொப் எரிமலையும் வெடித்தது.
1960ம்ஆண்டு மே 22ல் சிலி நாட்டை பூகம்பம் தாக்கியது. இதன் அளவு 9.5 ரிச்டர் அளவாகும். இதனால் சந்தியாகோ, கொன்சிப்பியன் ஆகியவற்றைத் தாக்கியது. 5000க்கு மேற்பட்டோர் கடல் அலையில் காவுகொண்டனர். 20 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்தனர்.
1964ம் ஆண்டு மார்ச் 28ல் அலஸ்காவில் மீண்டும் பூகம்பம் இதன் அளவு 9.2 ஆக பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் உயிர்ச் சேதங்களும் 311 மில்லியன் டொலர் பெறுமதியான பொருள் சேதங்களும் ஏற்பட்டது.
1965ம் ஆண்டு பெப்ரவரி 4ம் திகதி அலஸ்காவில் மீண்டும் பூகம்பம் இதன் தாக்கம் 8.7 ரிச்டர் அளவாகும் ஆனால் பலமான சுனாமி கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. அலைகள் 10.7 மீற்றர் வரை உயர்ந்தது.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் திகதி இந்தியா சுமாத்திராத் தீவில் பூகம்பம். இதன் அளவு 9.0 ரிச்டர் அளவாகும். கடலும் பலமாகக் கொந்தளித்து சுனாமி ஏற்பட்டது. இதனால் இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து போன்ற நாடுகளின் கரையோரங்கள் பாதிக்கப்பட்டது. பாரிய உயிர் சேதமும் ஏற்பட்டது.
2011ம் ஆண்டு மார்ச் 11ம் திகதி ஜப்பானில் வட கிழக்குப் பகுதியில் பாரிய பூமியதிர்ச்சி இதன் அளவு 8.9 ரிச்டர். எனினும் இதனோடு கடல் அலையும் 20 அடி உயரத்தில் பாய்ந்தது. 1500க்கும் மேற்பட்ட மக்களைக் காவு கொண்டு பெரும் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அழிவுகளை அல்லாஹ் அமைக்கும் நேரம்
நபியே இவ்வூர்களிலுள்ளவர்கள் அவர்கள் நித்திரை செய்பவர்களாக இருக்கும் நிலையில் இரவில் நம்முடைய வேதனை அவர்களிடம் வருமென்பதைப் (பற்றி) அச்சம் தீர்ந்து இருக்கின்றார்களா? (அல்குர்ஆன் 7.97)
‘அல்லது இவ்வூரிலுள்ளவர்கள் அவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் லுஹா (பகல்) நேரத்தில் நம்முடைய வேதனை அவர்களிடம் வருமென்பதை(ப்பற்றி) அச்சந்தீர்ந்து இருக்கின்றார்களா? (அல்குர்ஆன் 7.97) எனவே பிழைகளும் பாவங்களும் அதிகரித்த இக்காலத்தில் பிரளய சகாப்தம் எந்நேரத்திலும் வரலாம். தெளபாவின் மூலம் திக்ர், அமல்கள் மூலம் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோம்.