திங்கள், ஜனவரி 30, 2017

ஹஜ் செய்வோருக்காக

ஹஜ் செய்வோருக்காக!

மக்களுக்கு (அல்லாஹ்வை வணங்குவதற்காக) உருவாக்கப்பட்ட இறை இல்லங்களில் முதன்மையானது நிச்சயமாக “பக்காவில்” (மக்காவில்) உள்ளது தான். அது மகத்துவமிக்கதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழி காட்டியாகவும் உள்ளது. அதில் தெளிவான அத்தாட்சிகளும் உள்ளன. இப்றாஹீம் (தொழுகைக்காக) நின்ற (மகாமே இப்றாஹீம் என்ற) இடமும் இருக்கிறது. எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அல்லாஹ்வின் அபயம் பெற்று) அச்சமற்றவராகிறார், (எனவெ) எவர்கள் அங்கு பயணம் செய்ய வசதியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்கள் மீது , அல்லாஹுவுக்காக அவ்வில்லத்தை ஹஜ் செய்வது கடமையாகும். யாரேனும் (இதனை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹுக்கு ஒன்றும் குறையில்லை ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் படைப்பினங்களின் தேவையற்றவன். (அல்குர்ஆன் 3 : 96,97)

நபி(ஸல்) அவர்கள் : “ஓ மக்களே! உங்கள் மீது ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது” என்றார்கள். உடனே நபித்தோழர் அக்ராபின் ஹாபிஸ்(ரழி) எழுந்து : யா ரசூலுல்லாஹ்! ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? என வினவினார்கள். அதற்கு அருமை நாயகம்(ஸல்) கூறினார்கள்: “ஆமாம்” என நான் கூறி விட்டால் அது உங்கள் மீது (வாஜிப்) கடமையாகிவிடும். அது(வாஜிப்) கடமையாகி விட்டால், உங்களால் நிறைவேற்ற முடியாது. எனவே (ஆயுளில்) ஒரு தடவை செய்வது கடமை. அதற்கு மேலும் செய்வது அவரவருக்கு நன்மை பயப்பதாகும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) ஆதார நூல்கள் : அஹ்மது, நஸயீ, தாரமீ

உடலுறவு கொள்ளாமலும், வீணான சொல் செயல்களில் ஈடுபடாமலும், எவர் ஹஜ்ஜை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போல (பாவமற்றவராக) ஆகிறார். (எந்த பாவமும் கலந்திடாத) தூய ஹஜ்ஜின் வெகுமதி சுவனத்தைத் தவிர வேறில்லை என நபி(ஸல்) நவின்றார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி) ஆதார நூல்கள் : புகாரி, முஸ்லிம்

மேற்படி இறைவசனத்திலிருந்தும், நபி மொழிகளிலிருந்தும் வசதியுடைய (செல்வந்தர்) வர்கள் மீது (மட்டும்) ஆயுளில் ஒரு தடவை ஹஜ் செய்வது கடமை என்றும், தூய எண்ணத்துடன் செய்யப்படும் ஹஜ்ஜுக்கான மிகச் சிறந்த வெகுமதியும் நமக்கு தெள்ளத் தெளிவாகிறது. இவ்வருடமும் பலர் ஹஜ்ஜுக்க செல்லலாம். அவர்களுக்கு இது பலன்படட்டும்!

ஹஜ்ஜுக்கான காலம் :- ஷவ்வால் ஆரம்பத்திலிருந்து துல்ஹஜ் 9 ம்நாள் வரை (அல்குர்ஆன் 2 : 197)

நபி(ஸல்) அவர்கள் தங்களது ஆயுளில் ஒரே ஒரு ஹஜ்ஜை நிறைவேற்றினாலும் நாம் மூன்று விதமாக ஹஜ்ஜு செய்ய அனுமதித்திருப்பதை ஹதீஸ் நூல்கள் மூலம் அறிகிறோம்.

அவையாவன : 1. இப்ராத் 2. தமத்துஃ 3. இக்ரான்

இப்ராத் : ஹஜ் மட்டும் செய்வதாக நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜை நிறைவேற்றல்.

தமத்துஃ : உம்ராவும், ஹஜ்ஜும் செய்வராக நிய்யத்துடன் முதலில் இஹ்ராம் அணிந்து ஹஜ்ஜுடைய காலங்களில் உம்ராவை முடித்து – இஹ்ராமைக் களைந்து – பின் ஹஜ்ஜுக்காக துல் ஹஜ் எட்டாம் நாள் மீண்டும் இஹ்ராம் அணிந்து ஹஜ் நிறைவேற்றல், அதாவது இரு இஹ்ராம்களில் உம்ராவையும், ஹஜ்ஜையும் தனித்தனியே ஹஜ்ஜுடைய காலங்களில் நிறைவேற்றல்.

இக்ரான் : ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் நிய்யத் செய்து ஒரே இஹ்ராமில் இரண்டையும் நிறைவேற்றல், இவர்கள் துல்ஹஜ் பத்தாம் நாள் இஹ்ராமிலிருந்து விடுதலை பெற முடியும்.

இஹ்ராம் கட்ட வேண்டிய கடைசி எல்லைகள்

மதீனாவாசிகளுக்கு “துல்ஹுலைபா” என்ற இடம், இதனை “அப்யார்அலி” அல்லது “பீர் அலி” என்றும் கூறுவர்.

யமன் தேசத்தவருக்கு “யலம்லம்” என்ற இடம்

ஷாம் தேசத்தவருக்கு “ஜுஹ்பா” என்ற இடம்

நஜ்த் தேசத்தவருக்கு “கர்னுல் மனாஜில்” என்ற இடம். என நபி(ஸல்) வரையறுத்துக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : புகாரி, முஸ்லிம்

இராக் வாசிகளுக்கு “தாது இர்க்” என்ற இடம் நபி(ஸல்) குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல்கள் : அபுதாவூது , நஸயீ

மேலே குறிப்பிட்ட தேசத்தவர்களுக்கும், அவ்விடங்களை கடந்து வருபவர்களுக்கும் அந்தந்த இடங்கள் ஹஜ்ஜுக்கான இஹ்ராம் கட்ட கடைசி எல்லையாக பெருமானார்(ஸல்) கூறினார்கள். என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கின்றார்கள்.

எனவே இந்தியாவிலிருந்து செல்லும் ஹாஜிகளுக்கு எமன் தேசத்தாருக்குரிய “யலம்லம்” இஹ்ராம் கட்ட கடைசி எல்லையாக அமைகிறது. கப்பலில் செல்வோருக்கு அவ்விடம் வந்ததும் கப்பல் மாலுமிகளால் அறிவிக்கப்படும். இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். விமானங்களில் சில மணி நேரத்தில் ஜித்தா அடையும் ஹாஜிகள் இடையில் இஹ்ராம் கட்ட வசதிப்படாது. எனவே சென்னையில்ருந்தே இஹ்ராம் அணியலாம். இவ்வெல்லைக்கள் இஹ்ராம் கட்டாதவர்கள் திரும்பி அவ்வெல்லை வந்து இஹ்ராம் அணிய வேண்டும். அல்லது அதற்காக ஒரு ஆடு பரிகாரம் தர வேண்டும்.

இஹ்ராமும் நிய்யத்தும் : இஹ்ராம் கட்டவேண்டிய எல்லை வந்ததும் (விமானத்தில் செல்பவர்கள் சென்னைலேயே) இஹ்ராம் கட்ட வேண்டும். இஹ்ராம் கட்டுவதற்கு முன் மீசை, அக்குள், மர்மஸ்தான முடிகள், நகங்களை வெட்டி, குளித்து நறுமணம் பூசிக் கொள்வது சுன்னத் ஆகும். ஹஜ், உம்ராவைத் தவிர வேறு எந்த வணக்க வழிபாட்டுக்கும் நபி(ஸல்) அவர்களோ, அவரது அருமைத் தோழர்களோ, கலீபாக்களோ, இமாம்களோ நிய்யத்துடன் வாயால் சொன்னதற்கு நிரூபிக்கப்பட்ட ஆதாரங்களில்லை.

இஃப்ராத் ஹஜ் செய்பவர் “லப்பைக்கஃபி ஹஜ்ஜின்” என்றும்; தமத்துஃ ஹஜ் செய்பவர் “லப்பைக்பஃபி ஹஜ்ஜின் வ உம்ரத்தின்” என்றும், நிய்யத் செய்திடல் வேண்டும். தமத்துஃ ஹஜ் செய்பவர் இந்த இஹ்ராமில் உம்ராவை முடித்து, களைந்து, பின் துல்ஹஜ் எட்டாம் நாள் இருக்குமிடத்திலேயே (எல்லைக்கு வரவேண்டியதில்லை) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிகையில் “லப்பைக்பஃபி ஹஜ்ஜின்” என்ற நிய்யத்துடன் வாயால் சொல்ல வேண்டும்.

இஹ்ராம் கட்டும் விதம்:

ஆண்கள் தைக்கப்படாத தூய வெள்ளை ஆடைகள் இரண்டில் ஒன்றை வேட்டியாகவும் மற்றொரு மேலாடையாகவும் அணியவும், பெண்கள் தைத்த உடைகளை அணியலாம். ஆனால் அவர்களது முகமும், கையில் மணிக்கட்டு வரையும் திறந்திருக்க வேண்டும். கையுறை அணிவதோ, முகத்தை மூடுவதோ கூடாது.

இவ்வாறு இஹ்ராம் அணிந்தபின், இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும். முதல் ரக்அத்தில் “குல்யா அய்யுஹல் காபீரூன்” என்ற சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் “குல்ஹுவல்லாஹுஅஹது” என்ற சூராவையும், ஓதி தொழுவது நபி வழியாகும். பின் புறப்படுகையில் ஆண்கள் சப்தமிட்டு “தல்பியாவை” ஓத வேண்டும். பெண்கள் சப்தமின்றி மெதுவாகக் கூற வேண்டும்.

தல்பியாவும் அதன் பொருளும்

“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்

லப்பைக் லாஷரீக்க லக லப்பைக்

இன்னல் ஹம்த வன்னிஃமத்த லக வல்முல்க்

லா ஷரீக்க லக்” என்று ஒதுவது தல்பியாவாகும். வந்துவிட்டேன்! யா அல்லாஹ் உனது அழைப்பை ஏற்று வந்துவிட்டேன். ஈடிணையற்ற உன் இழைப்பை ஏற்று வந்துவிட்டேன்! புகழனைத்தும் உனக்கே! அருட்கொடையும் அரசாட்சியும் உனதே! (யா அல்லாஹ்!) உனக்கு ஈடிணையில்லை” – என்பது தல்பியாவின் பொருளாகும்.

இஹ்ராம் கட்டியபின் செய்ய கூடாதவைகள்

1. உடலிலுள்ள முடிகளை அகற்றல். (தானாக முடிகள் உதிர்வது பாவமில்லை. அதற்குப் பரிகாரம் தேவையில்லை)

2. நகங்களைக் கடித்தல், வெட்டுதல்

3. நறுமணங்கள் பூசதல்

4. உடல் உறவு கொள்ளுதல், கனவில் ஸ்கலிதமானால் குற்றமில்லை. குளித்து விட்டால் போதுமானது.

5. தரை பிராணிகளை வேட்டையாடுதல்! வேட்டையாடுபவருக்கு உதவுதல்

6. மக்கா(ஹரம்) எல்லைக்குள் புல், பூண்டுகள், மரம், செடி, கொடிகளைப் பிடுங்குதல் , வெட்டுதல்.

7. பொய், புறம் , கோள், பேசுதல்

8. கெட்ட வீணான சொல், செயல்களில் ஈடுபடல்

9. காமப் பார்வை, போகப் பேச்சுக்கள்.

10. ஆண்கள் தொப்பி, தலைப்பாகை, துண்டு கொண்டு தலையை மூடுதல் (கூரையுள்ள வாகனங்களில் சவரி செய்தல் கூடும்)

11. மணப்பெண் பேசல், திருமண ஒப்பந்தங்கள் செய்தல்

12. பெண்கள் முகம், கை, (மணிக்கட்டு வரை) களை மூடுதல்

மக்கா(ஹரம்) சென்றடைந்ததும்: தமத்துஃ ஹஜ் செய்பவர்க் உம்ரா செய்ய வேண்டும். இப்ராத், இக்ரான், ஹஜ் செய்பவர்கள் “வருகை தவாப்” (தவாபுல் குதூம்) செய்ய வேண்டும். அத்துடன் அவர்கள் “ஸயீ” (தொங்கோட்டம்) ஓடினால் துல்ஹஜ் பத்தாம் நாள் செய்ய வேண்டிய ஹஜ் ஸயீ செய்ய வேண்டியதில்லை. உம்ரா என்பது தவாப் செய்து, ஸயீ முடித்து தலைமுடி இறக்கி கொள்வதாகும். பின் அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுதலையடையலாம்.

தவாப் செய்யும் விதம் : மக்கா ஹரம் ஷரீபில் நுழைந்ததும் ஹஜருல் அஸ்வத் கல் மூலையிலிருந்து இடது தோள்புறம் கஃபாவை நோக்கிய வண்ணம் கஃபாவை இடது புறமாக (Anti clock wise) வலம் வர வேண்டும். கஃபாவின் தங்கக் கதவு மகாமே இப்றாஹீமை கடந்ததும் வரும் முதல் மூலையிலிருந்து அடுத்து மூலை வரை “U” வடிவில் உள்ள பகுதி (ஹிஜ்ருல் இஸ்மாயில்) யையும் உள்ளடக்கி வெளியில் நடக்கவும். எனெனில் ஹிஜ்ர் இஸ்மாயில் கஃபாவின் ஒரு பகுதியாகும். இவ்விதம் சுற்றி மீண்டும் ஹஜ்ருல் அஸ்வத் இடம் வருவதற்கு ஒரு சுற்று எனப்படும். முதல் மூன்று சுற்றுக்களில் தங்களது தோள் புஜத்தைச் சிறிது வேகமாக நடக்கவும். மீதி நான்கு சுற்றுக்களில் வழமையாக நடக்கவும்.

ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட முடிந்தால் முத்தமிடலாம். முடியாவிட்டால் கல்லை நோக்கிக் கை உயர்த்தி தக்பீர் சொன்னால் போதுமானது. அக்கல்லை முத்தமிடுவது சிறப்பு, பரக்கத் கிடைக்குமென நினைத்து மற்றவர்களுக்கு, முட்டி, மோதி, தொல்லைகள் கொடுப்பது சிறப்பல்ல. நபி(ஸல்) அவர்கள் ‘ஹஜருல் அஸ்வத்தையும் அதற்கு முந்திய “ருக்னுல் யமனி” என்ற மூலையையும் தவிர வேறு எந்த இடத்தையும் தொட்டு முத்தமிடவில்லை. (ஆதாரம் : புகாரி)

தவாபில் துஆ ஒதுவதற்காக அரபி தெரிந்த ஆலிம்களையோ, மெளலானா, மெளலவிகளையோ தேடாதீர்கள்; ரெடிமேட் துஆக்களை ஓதாதீர்கள். குறிப்பிட்ட துஆக்களை நபி(ஸல்) ஓதியதாக ஆதாரமில்லை. உங்களது வேணவாக்களையும், வேண்டுதல்களையும், தேவைகளையும், கஷ்ட நஷ்டங்களையும் உங்களது மொழியிலேயே கேளுங்கள். அல்லாஹ் எல்லா மொழிகளையும் அறிந்தவன்.

யக்னுல் யமனிலிருந்து ஹஜ்ருல் அஸ்வத் வரையிலுள்ள தூரத்தை கடக்கையில் நபி(ஸல்) ஓதிய “ரப்பனா ஆதினாஃபித்துன்யா ஹஸனத்தன்வபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்” போன்ற துஆவை ஓதுங்கள். ஏழு சுற்றுக்களை முடிந்ததும் மகாமே இப்றாஹீமில் இரண்டு ரக்அத் தொழுங்கள். அங்கு இடம் கிடைக்கவில்லையெனில் ஹரமின் எந்த எல்லையிலும் தொழலாம். பின் ஜம்ஜம் நீர் அருந்துங்கள்.

“ஸயீ” (தொங்கோட்டம்) ஓடுதல்: ஹஜ்ருல் அஸ்வத் நோக்கியுள்ள திசையில் மேடை ஏறினால் ‘ஸபா’ குன்று வரும். ஸபா குன்றில் ஏறி மும்முறை தக்பீர் சொல்லி தங்களுக்கான தேவைகளை அல்லாஹ்விடம் கேளுங்கள். மேலும் “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு அன்ஜச வஃதஉவநசர அபதஹு வஹஸபல் அஹ்சாப் வஹதஹு” என்ற துஆவையும் மும்முறை ஓதி ஸயீ ஓட்டத்தை ஆரம்பியுங்கள். எதிரிலுள்ள மாவா குன்றை நோக்கி உங்களுக்கு தெரிந்து திக்ருகள், துஆக்கள், குர்ஆன் ஓதிக் கொண்டு நடங்கள். குறிப்பிட்ட துஆக்கள் எதுவுமில்லை. இவ்வழியில் பச்சை அடையாளமிட்டிருக்கும் பகுதியில் சிறிது வேகமாக (சிறு ஓட்டம்) ஓடவும், மர்வா குன்றடைந்ததும் ஸபாவில் செய்தது போன்று செய்யுங்கள். இது ஒரு ஓட்டம். பின் மர்வாவிலிருந்து ஸபாவுக்கும் வாருங்கள். 2வது ஓட்டம். இவ்விதம் ஏழாவது ஓட்டம் மர்வாவில் முடியும்.

இவ்விதம் எழு ஓட்டம் ஓடி ஸயீயை முடித்ததும் தலை முடியை இறக்கவும். அல்லது சிறிது வெட்டி விட வேண்டும். இத்துடன் உம்ரா முடிவடைய இஹ்ராமை (தமத்துஉ) ஹஜ் செய்பவர்கள் மட்டும் ) களைந்து விடலாம். இப்ராது, இக்ரான், ஹஜ் செய்பவர்கள் தலை முடியை இறக்காமல், வெட்டாமல் இஹ்ராம் உடையிலேயே இருக்க வேண்டும்.

மினா செல்லல்:

தமத்துஃ ஹஜ் செய்பவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் சுப்ஹுவுக்குப் பின் “லப்பைக்க பி ஹஜ்ஜின்” என்ற நிய்யத்துடன் இஹ்ராம் அணிந்து இப்ராத், இக்ரான் ஹாஜிகளுடன் தல்பியா ஓதிக் கொண்டு மினாவிற்குச் செல்ல வேண்டும். மக்காவிலிருந்து மினா செல்ல செளதி அரசு ஒன்பது பாதைகளை செம்மை செய்துள்ளன. கால் நடையாகச் செல்பவர்கள் ஸயீ உடைய வாசலின் வெளியே வந்ததும் ஆரம்பமாகும் இரு மலைக்குகை பாதைகளில் நடந்தால் 4 கி.மீ, முதல் 5 கி.மீ தூரத்தில் மினா அடையலாம். மற்ற பாதைகள் வாகனங்களில் செல்ல 8 முதல் 12 கி.மீ. தூரமுள்ளவை .

மினா சென்றடைந்ததும் தங்கி லுஹர், அஸர், மஃரிப், இஷா தொழுகைகளை தொழ வேண்டும். லுஹர், அஸர், அஷா தொழுகைகளைக் கஸராகத் தொழ வேண்டும். பள்ளியிலோ, தங்கியிருக்கும் கூடாரங்களிலோ தொழலாம். திக்ரு, துஆ, குர்ஆன் ஓதுதல், நல்ல இறையச்ச பயான்களை பேசுதல், கேட்டல் போன்றவற்றில் ஈடுபடுங்கள்.

அரபா செல்லல்: துல்ஹஜ் ஒன்பதாம் நாள் சுப்ஹு தொழுது சூரியன் உதயமானதும் அரபாவை நோக்கி மிக அமைதியாக தல்பியாவை ஒதிக்கொண்டு எவருக்கும் தொல்லைகள் கொடுக்காமல் நடங்கள். அரபா எல்லையை அடைந்ததும் கிப்லாவை நோக்கி திரும்பி கைகளை உயர்த்தி நமக்குத் தெரிந்த துஆக்களை, தேவைகளை அல்லாஹ்விடம் மனம் உருகிக் கேட்கவும்.

அரபாவில் லுஹரையும், அஸரையும் லுஹருடைய நேரத்தில் கஸர்-ஜம் ஆக இரண்டிரண்டு ரக்அத்துக்கள் இரு இகாமத்துடன் தொழ வேண்டும். அஸருடைய நேரத்தில் அரபாத் எல்லைக்குள் நின்று மனமுருகி அல்லாஹ்விடம் நமது தேவைகளைக் கூறி அழுது சூரிய அஸ்தமனம் வரை பிரார்த்தியுங்கள், “அரபாவில் இருப்பதே ஹஜ்” என்ற நபிமொழிக்கொப்ப நமது ஹஜ் பரிபூரணமாக அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்பட இறைஞ்ச வேண்டும்.

பத்தாம் நாள் காலை சுப்ஹு தொழுகைக்குப் பின் கிப்லாவை முன்னோக்கி கை உயர்த்தி அல்லாஹ்விடம் துஆச் செய்ய வேண்டும். நமது தேவைகளைக் கேட்க வேண்டும். இது நபி(ஸல்) அவர்களின் வழிமுறையாகும். பின் ஏழு பொடி (சுண்டல் கடலை அளவு) கற்களைப் பொறுக்கிக் கொண்டு தக்பீர் கூறிய வண்ணம் மினா திரும்ப வேண்டும்.

மினா வந்தடைந்ததும் கீழ்க்காணும் கிரியைகளை நிறைவேற்றவும்.

1. பெரிய ஜமாரத்திற்கு (பெரிய ஷைத்தான்) சென்று ஏழு கற்களை ஒவ்வொன்றாக தக்பீர் கூறிய வண்ணம் எறிய வேண்டும்.

2. குர்பானி கடமையானவர்கள் தலைக்கு ஒரு ஆடு அல்லது எழு பேருக்கு ஒரு ஒட்டகம் அல்லது ஒரு மாடு குர்பானி கொடுக்க வேண்டும். தமத்துஃ, இக்ரான் ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்கக் கடமையானவர்கள். இப்ராத் ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்கக் கடமையானவர்கள். இப்ராத் ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்கலாம், அல்லது ஹஜ்ஜுடைய காலங்களில் மூன்று நோன்பும் ஊர் திரும்பியதும் ஏழு நோன்புமாக 10 நோன்புகள் வைக்க வேண்டும். (அல்குர்ஆன் 2: 196)

3. தலைமுடியை குறைக்க|வெட்ட வேண்டும். முழுமையாக வழிப்பது சாலச் சிறந்தது. பெண்கள் விரல் நுனியளவு முடியை கத்தரித்து விட வேண்டும்.

இவைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்வது சிறப்பு. முன்பின் மாற்றிச் செய்வதால் குற்றமில்லை. பெரிய ஜுமராத்தில் கல் எறிவது, தலைமுடி இறக்கலைக் கொண்டு ஒருவர் இஹ்ராமிலிருந்து விடுபடலாம். இதுவரை இஹ்ராமில் விலக்கப்பட்ட அனைத்தும் (உடல் உறவைத் தவிர) ஆகுமானதாகி விடும். குர்பானி துல்ஹஜ் 11, 12 நாட்களிலும் கொடுக்கலாம்.

பின் மக்கா சென்று ஹஜ்ஜுடைய தவாப் (ஏழுமுறை) சுற்ற வேண்டும். தமத்து ஹஜ் செய்பவர்கள் ஸயீ (தொங்கோட்டம்) ஓட வேண்டும். இப்ராத், இக்ரான் ஹஜ் செய்பவர்கள் ஹஜ் தவாப்புடன், முதலில் ஸயீ இஹ்ராமிலிருந்து பூரணமாக விடுபட்டு உடல் உறவு கொள்வது ஹலாலாகி விடும்.

ஷைத்தானுக்கு கல்லெறிதல் : துல்ஹஜ் பத்தாம் நாள் முஸ்தலிபாவிலிருந்து திரும்பியது (சுப்ஹு) முதல் மஃரிப் வரை பெரிய ஜுமராத்திற்கு மட்டும் ஏழு கற்களை தக்பீர் கூறி எறிய வேண்டும்.

துல்ஹஜ் 11, 12, 13 நாட்களில் லுஹர் பாங்கு சொன்னபின் தான் கல்லெறிய வேண்டும். சின்ன,நடு, பெரிய ஜுமராத் என வரிசையாக ஏழு கற்களை தக்பீர் கூறிய வணண்ம் எறிய வேண்டும். இதற்கான கற்களை எங்கு வேண்டுமானாலும் பொறுக்கிக் கொள்ளலாம் (முஸ்தலிபாவிலிருந்து தான் கொண்டு வரவேண்டுமென்ற கட்டாயமில்லை) . துல்ஹஜ் 11, 12 நாள் சூரிய அஸ்தமன (மஃரிபுக்கு)த்திற்கு முன் மினா எல்லையைக் கடக்கவில்லையெனில் 13ம்நாளும் தங்கி லுஹருக்குப் பின் மூன்று ஜுமராத்திற்கும் கல்லெறிந்தே திரும்ப வேண்டும்.

ஜாக்கிரதை : ஹாஜிகளீல் அதிகமானவர்களுக்கு மரணம் சம்பவிக்கும் இடம் இந்த ஜுமராத் இடம் தான், கூட்ட நெரிசரில் கீழே விழுந்து மற்றவர்களின் மிதியால் மரணிப்பவர்கள் அதிகம். எனவே ஜாக்கிரதையாக சென்று வரவேண்டும்.

நோயாளிகள், வயதானவர்களுக்குப் பகரமாக மற்றவர்கள் தங்களுக்கான கல்லை எறிந்தபின் ஒவ்வொரு ஜுமராத்திற்லும் கல் எறியலாம், இவ்விதம் 11,12,13 நாட்களில் கல்லெறிந்து விட்டு மக்கா திரும்புங்கள் ஊர் திரும்புகையில் “விடைபெறும் தவாப்” (தவாபுல்விதாஃ) செய்து புறப்படுங்கள். இத்துடன் ஹஜ் முடிவடைகிறது.

ஜியாரத் : மதீனா செல்வதும், மஸ்ஜிதுன்னபவியில் தொழுவதும், நபி(ஸல்) அவர்களது கப்ரை ஜியாரத் செய்வதும் ஹஜ் கடமைகளில் பட்டதல்ல. “பள்ளிகளில் சிறந்தது மூன்று: 1. மக்காவில் கஃபத்துல்லாஹ் 2. மதீனாவில் மஸ்ஜிதுன்னபவி 3. தாருஸ்ஸலாமில் மஸ்ஜிதுல் அக்ஸா. இவைகளில் தொழுவது சாலச் சிறந்தது” என்ற நபிமொழிக்கொப்ப மஸ்ஜிதுன்னபவியில் தொழுவதும், நபி(ஸல்) காட்டிய வழியில் கப்ரு ஜியாரத் செய்வதும் சுன்னத்தாகும்.

இச்சுன்னத்துக்களை நிறைவேற்ற எப்போது வேண்டுமானாலும், எந்த உடையிலும் செல்லலாம். இஹ்ராம் , தல்பியா போன்றவை இல்லை. அதிகமாக செலவு செய்து பல்லாயிரக்கணக்கான மைல்களைக் கடந்து, அன்னிய நாட்டினராக வந்துள்ள ஹாஜிகள் இச்சுன்னத்துக்களை செய்து வருவது சிறப்புக்குரியதாகும்.

மஸ்ஜிதுன்னபவியில் நுழைந்ததும் தஹிய்யத்துல் மஸ்ஜிது இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். பர்லான தொழுகை நேரமாயின் முதலில் அதனை முடிக்க வேண்டும். ரவ்ளாவில் (நபி(ஸல்) கபுருக்கும், அவர்களின் மிம்பருக்குமிடையிலுள்ள பகுதி) தொழுதல் சாலச் சிறப்பு அங்கு தொழ முடியவில்லையெனில் பள்ளியின் எந்தப் பகுதியிலும் தொழலாம்.

மேற்கூறிய தொழுகையை முடித்து நபி(ஸல்) கபுருக்குச் சென்று மரியாதையுடன் மெதுவாக ஸலாம் கூறி, அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும். பின் வலது புறம் சிறிது நகர்ந்து அபூபக்கர்(ரழி) அவர்களுக்கும், அடுத்து சிறிது நகர்ந்து உமர்(ரழி) அவர்களுக்கும் முறையே ஸலாம் கூறி அவர்களுக்காக துஆச் செய்ய வேண்டும்.

அக்கபுருகளைச் சுற்றியுள்ள கம்பிகளைப் பிடித்து அழுவதோ, தொட்டு முத்தமிடுவதோ தடவி உடலில் தடவிக்கொள்வதோ வெறுக்கத்தக்கது. கண்டிக்கத்தக்கது, நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாறுபட்டது. இவ்விதம் செய்வோரை அக் கபுரைச் சுற்றியுள்ள காவலாளிகள் தடுப்பதையும்; சில நேரங்களில் குச்சியால் அடிப்பதையும் காணலாம்.

அடுத்து “ஜன்னத்துல் பகீஃ” மய்யவாடிக்கும், உஹது ஷிஹதாக்கள் அடங்கிய மய்யவாடிக்கும் சென்று ஜியாரத் செய்து ஸலாம் கூறி, அவர்களுக்காக அல்லாஹுவிடம் துஆச் செய்ய வேண்டும்.

அல்லாஹ் நம்மனைவரின் ஹஜ்ஜையும், அவன் பரிபூரணமாக ஏற்றுக்கொள்ளும்படியான நபி(ஸல்) அவர்களின் வழியில் ஆக்கி வைப்பானாக!

அந் நஜாத் .காம்