ஹலால், ஹராம் என்றால் என்ன? ஏன்? எப்படி?
இப்படி எமக்கு மத்தியிலேயே சரியான புரிதலின்றிய ஒரு விடயத்தை மேடை போட்டுப் பேசி அடுத்தவர்களுக்கு விளங்கப்படுத்தி விட முடியுமா என்பது கேள்விக்குறியே!. இன்று பெரும்பான்மையினருக்கு மத்தியிலும் ஹலால் என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற தோற்றப்பாட்டை ஹலால் ஹராம் பற்றிய சரியான பார்வையைக் கொடுப்பதன் மூலமாக மாற்றியமைக்கலாம். அப்படி மாற்றியமைத்து விட்டோமென்றால் பிடிவாதமாக இருக்கும் அதிகார சக்திகள் அழைப்பு விடுத்தாலும் கூட பொது மக்கள் அதன் பின்னால் போக மாட்டார்கள். இது அப்படியான ஒரு முயற்சியாகும். இன்று பொதுவாக முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்ற சில கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயன்றதன் விளைவே இவ்வாக்கமாகும். • ஹலால் என்றால் என்ன? ஹராம் என்றால் என்ன? இவை இரண்டும் இரண்டு அரபுச் சொற்களாகும். ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது என்றும் ஹராம் என்பது அனுமதிக்கப்படாதது என்றும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படலாம். அதாவது மனித வாழ்க்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய சகல நடவடிக்கைகளிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் என...