இஸ்லாம் உருவாக்க விரும்பிய சமூக அமைப்பு
சமூகக் கட்டமைப்புச் சீராக அமைய சமூகத் தொடர்புகள் சீர்பெற வேண்டும். இந்த வகையில் சமூகத் தொடர்பில் அயலவர்கள் முக்கியமானவர்களாவர். குடும்பங்கள் அருகருகே வசிக்கும் போது அந்தக் குடும்பங்களுக்கு மத்தியில் சீரான தொடர்பாடல் இருக்க வேண்டும். இஸ்லாம் அண்டை அயலவருடன் அழகிய முறையில் நடப்பதை ஈமானின் அங்கமாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இஸ்லாமியப் பற்றுள்ள, இஸ்லாமிய ரூபத்தில் வாழக் கூடிய பலரும் அயலவருடன் பகைமையை வளர்த்துக் கொண்டு வழக்கு-வம்பு என வாழ்ந்து வருகின்றனர். இஸ்லாமிய சமூகக் கோட்பாட்டுக்கு இது முரணான நடைமுறையாகும். எனவே, அயலவருடன் நாம் பழகும் போது தவிர்க்க வேண்டிய சில அம்சங்களைச் சுருக்கமாக முன்வைக்க விரும்புகின்றோம். பொறாமை கொள்வது: தனது அண்டை அயலவர் நலமுடன் வாழ்வதை விரும்ப வேண்டிய முஸ்லிம், அவர்கள் மீது பொறாமை கொண்டு வாழ்வதைப் பார்க்கின்றோம். அயலவர்களின் பிள்ளைகள் கல்வியில் முன்னேறுவது, அவர்களுக்குத் தொழில் கிடைப்பது, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது, அயலவரின் பொருளாதார வளர்ச்சி என அனைத்தையும் பொறாமைக் கண் கொண்டு நோக்கும் நிலை நீடிக்கின்றது. ஈமானும், பொ...