புதன், மார்ச் 28, 2012

குழப்பங்களின் போது ஒரு முஃமின்!


புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!
நம்பிக்கைகொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழப்பம் (பித்னா) நிறைந்த இக்கால கட்டத்தில் கட்டாயம் கடைபிடித்து ஒழுகுவதற்கான சில உபதேசங்கள்:
1- அல்லாஹ்வின் பக்கம் மீளுதல்: நாம் செய்த பாவங்கள், குற்றச் செயல்கள் காரணமாகவே தவிர இப்படியான குழப்ப நிலைகள் ஏற்படவில்லை. எனவே அவ்வாறான பாவமான, குற்றமான செயல்களில் இருந்து மீண்டு அவனிடம் பிழை பொறுக்கத் தேடவேண்டும்.
2- அல்லாஹ் விதித்ததன் அடிப்படையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு காரியத்தையும் ஓர் இறைவிசுவாசி பொருந்திக் கொள்ளவேண்டும். அனைத்திலும் ஆற்றலுடைய அவன், நடந்து கொண்டிருப்பது, நடக்கவிருப்பது அனைத்தும் அவனது நாட்டத்தின்படியாகும். அல்லாஹ் தீங்கை நாடுவதில்லை. முஃமினுக்கு சில நேரம் ஏற்படக்கூடியவைகளை அவன் (அந்த முஃமின்) தீங்காக சோதனையாக எண்ணுகிறான். ஆனால் அதன் இறுதியில் அவன் அறியாத எத்தனையோ நன்மைகள் அதில் இருக்கின்றன. அவதூறோடு தொடர்பு பட்ட நிகழ்ச்சியில் அல்லாஹ் சொல்லும் போது: “அதை உங்களுக்குத் தீங்காக எண்ணவேண்டாம் எனினும் அதில் உங்களுக்கு பல நன்மைகள் இருக்கின்றன”. (அந்நூர் 24:11).
இன்னும் அல்லாஹ் குறிப்பிடுகிறான்: நீங்கள் (அதிருப்தியின் காரணமாக) ஒன்றை வெறுக்கலாம். ஆனால் அதில் உங்களுக்கு பல நன்மைகள் இருக்கும்”. (பகரா 2: 216).
3-நமது முன்மாதிரி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த சமுதாயத்தில் தனக்குப் பின் நிகழக்கூடிய குழப்பங்களையெல்லாம் முன்னறிவிப்பு செய்துள்ளார்கள் என்பதனை ஒரு முஃமின் அறிந்து கொள்ளவேண்டும். அதே போன்று இந்தக் குழப்பங்களில் இருந்து மீளுவதற்குரிய வழிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்துள்ளார்கள்: “உங்களுக்கு மத்தியில் இரண்டு விடயங்களைவிட்டுச் செல்கிறேன் அந்த இரண்டையும் பற்றிப் பிடித்துப் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள். அது அல்லாஹ்வுடைய இறைவேதமும் எனது வழிமுறையுமாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “எனது வழிமுறையையும், இன்னும் நேர்வழி சென்ற கலீபாக்களின் வழிமுறையையும் கடைவாய்ப் பற்களால் பற்றிப்பிடித்துக் கொள்ளுமாறு நான் உங்களை உபதேசிக்கிறேன். இன்னும் மார்க்கத்தில் நூதனங்களை செய்வதைவிட்டு நான் உங்களை எச்சரிக்கிறேன், ஒவ்வொரு நூதனமும் பித்அத்தாகும், ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத் : 467). ஷைக் அல்பானி (ரஹ்) இந்த ஹதீஸை சரிகண்டுள்ளார்கள்.
அல் குர்ஆனையும் ஸுன்னாவையும் பற்றிப்பிடித்து அதன் படி வாழ்வது இன்றியமையாத ஒன்றாகும். அல்லாஹ் புனித குர்ஆனில் சொல்கிறான்: “உங்களுக்கு மத்தியில் முரண்பட்டுக் கொண்டால் நீங்கள் அல்லாஹ்வின் பக்கமும் இன்னும் அவனது தூதரின் பக்கமும் மீளுங்கள், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டும் மறுமை நாளைக்கொண்டும் நம்பிக்கை கொள்வதாக இருந்தால் இதுவே மிக்க அழகானதும் நல்லதுமாகும்”. (அந்நிஸா 4:59).
4- முஃமின் குழப்பங்களைவிட்டு விலகி இருப்பதோடு தனது நாவையும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். குழப்பங்களில் முன்னிலை வகிப்பது ஹதீஸ்களினூடாகத் தடுக்கப் பட்டுள்ளது. “விரைவில் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகும், அப்போது அவற்றுக்கிடையிலே (மௌனமாகி) அமர்ந்திருப்பவன் அவற்றுக்காக எழுந்து நிற்பவனை விடவும், அவற்றுக்கிடையே எழுந்து நிற்பவன் நடப்பவனை விடவும், அவற்றுக்கிடையே நடப்பவன் அவற்றின் பக்கம் விரைபவனை விடவும் சிறந்தவனாவான். யார் அவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறாரோ அவரை அவை அழிக்க முற்படும் அப்போது யார் ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ பெறுகின்றாரோ அவர் அதன் வாயிலாக தம்மைத் தற்காத்துக் கொள்வார்”. (புஹாரி 3601 முஸ்லிம் 2886).
5- ஊடகங்கள், சூழ்ச்சி செய்பவர்களிலிருந்து எச்சரிக்கையாக இருத்தல்:
உளரீதியான கோளாறுகளுக்கு அவர்கள் காரணமாவார்கள் தங்களுக்குள் பேசாததை சமூகத்தின் முன்னிலையில் பேசுகிறார்கள். யுத்த டாங்கிகள் குண்டுகள் என்றும், குறிப்பாக பிரபலமான ஊடகங்கள் எதிரிகளின் கைவசம் இருக்கின்றன. அல்லாஹ் நமக்குச் செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறான்: “ஒரு தீயவன் செய்தியைக் கொண்டுவந்தால், அதைத் (தீரவிசாரித்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்”. (அல்ஹுஜுராத் 49:6). அவர்களின் பெரும்பாலான, பொய்யான செய்திகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மோசமான நிலை சமூகத்தில் நிலவுகிறது.
6- நம்பகமான, தலைசிறந்த அறிஞர்களின் பக்கம் மீளுதல்:
அவர்களிடமிருந்து விடயங்களை அறிந்து கொள்வது ஒரு முஸ்லிமுக்கு மிக அவசியமாகும். அல்லாஹ் தனது திருமறையில்க் கூறுகிறான்: “மேலும் (யுத்த) அமைதியோ, அல்லது பீதியோ பற்றிய செய்தி அவர்களுக்கு வந்துவிட்டால், (உடனே) அவர்கள் அதனை (வெளியில் மக்களிடையே) பரப்பி விடுகின்றனர். (அவ்வாறு செய்யாது) அதனை (அல்லாஹ்வுடைய) தூதரிடமும், அவர்களில் (மார்க்க ஞானமுள்ள) அதிகாரமுடையவர்களிடமும் தெரிவித்திருந்தால், அவர்களிலிருந்து அதனை ஆய்ந்து எடுப்பவர்கள் அதனை நன்கு அறிந்துக் கொள்வார்கள்”. (அந்நிஸா 4:83).
சமூகத்தில் குழப்பங்கள் பரவி இருக்கும் போது மார்க்கத்தில் தெளிவான உறுதியான நிலைப்பாட்டில் இருப்பது அவசியமாகும். தெளிவான மார்க்க ஞானமும் அவனுக்கு இருக்கவேண்டும்.
7- முஸ்லிம்களின் கூட்டமைப்பை பற்றிப் பிடித்துக் கொள்வதோடு அதன் தலைவருக்குக் கட்டுப்படுவதையும் நபிகளார் (ஸல்) அவர்கள் உபதேசித்துள்ளார்கள். பிரிந்து செல்வதை எச்சரித்துள்ளார்கள். நபிகளார் (ஸல்) அவர்கள் ஹுதைபா (ரலி) அவர்களுக்கு பின்வருமாறு உபதேசித்தார்கள்: “முஸ்லிம் கூட்டமைப்பையும் அதன் தலைவரையும் பற்றிப்பிடித்துக் கொள். நான் சொல்கிறேன்: அவர்களுக்கு ஒரு கூட்டமைப்பும் தலைவரும் இல்லாதபோது அனைத்துப் பிரிவுகளை விட்டும் தூரமாகி விடு அதே நிலையில் நீ மரணத்தை அடைந்தாலும் சரியே! (முஸ்லிம் 1874).
8- குழப்பங்களை, பிரச்சினைகளை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடல், குழப்பங்களில் இருந்து விலகி இருப்பவனே மகிழ்ச்சிக்குரியவன்.
9- குழப்பமான சூழ்நிலைகளில் அமைதியையும் நளினத்தையும் கையாளுதல், அவசரம் என்பது அமைதியான காலங்களிலேயே ஆபத்தை ஏற்படுத்தும் பொழுது குழப்பமான காலங்களில் எப்படி இருக்கும்?
10- வணக்க வழிபாடுகளில், நன்மையான காரியங்களில் அதிகமாக ஈடுபடுதல். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குழப்பமான காலங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு கொள்வதென்பது என்னிடம் ஹிஜ்ரத் செய்து வருவதைப் போல”. (முஸ்லிம் 2948 -. குழப்பமான காலங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதன் சிறப்பு).
11- விசுவாசிகளின் தலைவர்களுக்குக் கட்டுப்படுதல், அவர்களுக்குரிய உரிமைகளைப் பேணுதல். இறை நிராகரிப்பாளர்களை விட்டு நீங்கி இருத்தல். அவர்களுடன் பகைமை பாராட்டல். குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக அல்லாஹ் அவர்களோடு போர் புரியுமாறு கட்டளையிடுகிறான். அல்லாஹ் கூறுகிறான்: குழப்பங்களைத் தவிர்ப்பதற்காக அவர்களுடன் போர் புரியுங்கள் (அல்அன்பால்: 39).
12- அதிகமாக பிரார்த்தனைகளில் ஈடுபடுவது. குழப்பங்கள் நீங்குவதற்கும் அவை தடுக்கப்படுவதற்கும் அவை காரணங்களாக இருக்கும். பிரச்சினைகள் இறங்குகின்றன, பிரார்த்தனைகள் அவைகளைச் சந்திக்கின்றன. மறுமை நாள் வரை அவை வானத்தில் இருக்கின்றன. எனவே பிரார்த்தனைகள், சோதனைகளில் இருந்து விடுபட முக்கியமான காரணமாக அமைகின்றன.
அல்லாஹும்மஃ ஜுர்னி பீஃ முஸீபதி வஹ்லுப் லீ ஹய்ரன் மின்ஹா
“யா அல்லாஹ்! எனக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையை விட்டு என்னைப் பாதுகாப்பாயாக, அதற்குப் பகரமாக எனக்கு நன்மையை அளிப்பாயாக!” என்ற ஒருவன் சொன்னால் அல்லாஹ் அவனுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனையை நீக்கி, அதற்குப் பகரமாக நல்லதை வழங்குகிறான். அடுத்ததாக துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் நேரம் சம்பந்தமாகக் கருத்திற் கொள்ளுதல், பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப் படுவதற்குத் தடையாக உள்ள காரணிகளில் இருந்து முழுமையாக விலகி இருத்தல், உதாரணமாக ஹராமானவைகளை உண்பது, சிந்தனைகள் வேறுபக்கம் இருப்பது போன்றவையாகும்.
13- சோதனை, குழப்பங்களின் போது பொறுமையாக இருத்தல்: இறைவிசுவாசியின் விடயம் வியப்புக்குரியதாகும். அவனுக்கொரு மகிழ்ச்சியான காரியம் நடக்கும் பொழுது அவன் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான் அது அவனுக்கு நன்மையாக மாறுகிறது, அவனுக்கு ஏதாவது சோதனைகள் வரும்போது அவன் பொறுமையோடு இருக்கிறான் அதுவும் அவனுக்கு நன்மையாக மாறுகிறது. ஆக மொத்தத்தில் முஃமினுக்கு அனைத்தும் நன்மையாகும். இந்தச் சிறப்பு முஃமினுக்கே தவிர வேறுயாருக்கும் இல்லை. அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: “நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு கணக்கின்றியே கூலி கொடுக்கப்படும்” (அஸ்ஸுமர் 39:10).
இறை விசுவாசி அல்லாஹ்வை சந்திக்கும் வரை சோதனைக் குட்படுத்தப் பட்டவனாகவே இருக்கிறான், இறுதியில் அவனிடத்தில் எந்தக் குற்றமும் இருக்காது” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
14- மார்க்கம் சம்பந்தமான விளக்கம் (ஞானம்), குழப்பங்களில் இருந்து விடுபடுவதற்குச் சிறந்த வழியாகும். “அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகிறானோ அவருக்கு மார்க்கத்தின் விளக்கத்தைக் கொடுக்கிறான்”. என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளையும், திட்டங்களையும் அறிந்து கொள்வதற்கும் அதில் இருந்து விடுபடுவதற்கும் எச்சரிக்கையாக இருப்பதற்கும் மார்க்க ஞானம் உதவியாக இருக்கும்.
15- இறைவிசுவாசிகளுக்கு மத்தியில் அமைதியை உருவாக்குதல், முஃமின்களுக்கு இரண்டு நன்மைகள் வழங்கப்பட்டிருப்பதை உணர்தல்: ஒன்றில் வெற்றி அல்லது ஷஹாதா எனும் வீர மரணம். அல்லாஹ் தனது திருமறையில் கூறுவது போல: “(நபியே)! நீர் கூறுவீராக (வெற்றி அல்லது வீர மரணம் ஆகிய) இரு அழகிய நன்மைகளில் ஒன்றைத் தவிர வேறு எதையும் நீங்கள் எங்களுக்காக எதிர் பாhக்கின்றீர்களா? ஆனால் அல்லாஹ் தன்னிடத்திலிருந்தோ, அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்கு வேதனையை ஏற்படுத்துவதை உங்களுக்காக நாங்கள் எதிர்பார்க்கின்றோம்: (ஆகவே) நீங்கள் (எங்களுக்கு வரவேண்டியதை) எதிர்ப்பாருங்கள், நிச்சயமாக நாம் (உங்களுக்கு வரவேண்டியதை) உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்”. (அத்தவ்பா: 52).
முஃமின்கள் இறைவிசுவாசிகளின் முடிவு சுவர்க்கமாகும், இறை நிராகரிப்பாளர்களின் முடிவு நரகமாகும், அதனால் அவர்கள் மரணத்துக்குப் பயப்படுகின்றனர், அவர்கள் முற்படுத்தியதை எண்ணி மரணத்தை விட்டு விரண்டோடுகின்றனர்.
16- அல்லாஹ் படைப்பினங்களிலும் இவ் உலகத்திலும் ஏற்படுத்திய அடிப்படை விதிகளை மாற்ற முடியாது என்பதை ஒரு முஃமின் அறிந்து கொள்ளல். அதை அல்லாஹ் கூறுவது போல: “ஆகவே முந்தியவர்களின் வழியைத் தவிர (வேறு எவ்வழியையும்) இவர்கள் எதிர்பார்க்கின்றனரா? (இல்லை) ஆகவே, அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் யாதொரு மாற்றத்தை நீர் காணவே மாட்டீர்: அவ்வாறே அல்லாஹ் ஏற்படுத்திய வழியில் யாதொரு திருப்பத்தையும் நீர் காணவேமாட்டீர்”.(பாதிர்: 43).
இறை வழி முறையில் முதலாவது: சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடு மறுமை நாள்வரை தெளிவானதும் நிரந்தரமானதுமாகும். நமது தந்தை ஆதம் (அலை) சுவர்க்கத்தில் இருந்து வெளியேறியது முதல், மறுபடியும் அதற்கு அவரும் அவரது சந்ததிகளில் முஃமின்களும் மீண்டு செல்லும் வரை நீடித்துக் கொண்டே இருக்கும். அல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ் நாடியிருந்தாலோ முன்னதாகவே பதிலடி கொடுத்து அவர்களை தண்டித்திருப்பான். எனினும் (போர் புரிய கட்டளையிட்டது) உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிப்பதற்கேயாகும்”. (முஹம்மத் 47: 4). – இது மகத்தான, பாதுகாப்பான ஒரு வழி முறையாகும். இதில் இருந்து நாம் விளங்கிக்கொள்ளக் கடமைப் பட்டிருப்பது ஈமான் நம்பிக்கை என்பது ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆதாரங்களுள் மிக முக்கியமானது, நிராகரிப்பாளர்களை வெறுப்பது அவர்களுடைய தீங்குகளைத் தடுப்பது ஏனென்றால் அவர்கள் அல்லாஹ்வையும் ரஸுலையும் நிராகரித்தோராவர்.
இரண்டாவது: நமக்கு முன் பல இறைத்தூதர்கள், நல்லடியார்கள் சோதனைக் குட்படுத்தப்பட்டார்கள். ஸகரிய்யா, யஹ்யா (அலைஹிமா) போன்ற நபிமார்கள் கொலை செய்யப்பட்டார்கள், மூஸா, ஈஸா, முஹம்மத் (அலைஹிமுஸ் ஸலாது வஸ்ஸலாம்) போன்ற நபிமார்கள் பல இன்னல்களைச் சந்தித்தார்கள். பிலால் (ரலி) சித்திரவதைக் குட்படுத்தப்பட்டார்கள். ஹம்ஸா (ரலி) கொலை செய்யப்படுகிறார்கள் அவரது ஈரல் சப்பித் துப்பப் படுகிறது, அவர் அல்லாஹ்விடத்தில் ஷுஹதாக்களின் தலைவராக மதிக்கப்படுகிறார்.
“மனிதர்கள், நாங்கள் விசுவாசங் கொண்டோம் என்று அவர்கள் கூறுவது கொண்டு (மட்டும்) அவர்கள் விட்டு விடப்படுவார்கள் என்றும், அவர்கள் சோதனைக்குள்ளாக்கப் படவுமாட்டார்கள் என்றும் எண்ணிக்கொண்டார்களா?”. இவர்களுக்கு முன்னிருந்தோரையும் திட்டமாக நாம் சோதித்திருக்கின்றோம் ஆகவே (விசுவாசம் கொண்டோம் என்று இவர்களில்) உண்மை சொல்பவர்களை, நிச்சயமாக அல்லாஹ் அறிவான். (அவ்வாறே இவர்களில்) பொய்யர்களையும் நிச்சயமாக அவன் அறிவான்” (அல்அன்கபூத் 29:3). ஒரு முஃமின் அவனிடமுள்ள ஈமானின் அளவிற்கு சோதனைக்குட்படுத்தப்படுவான்.
ஒரு ஹதீஸில்: “மனிதர்களுள் கடுமையான சோதனைக் குட்படுத்தப் படுபவர்கள் நபிமார்கள், பின்பு அதற்கடுத்ததாக (நம்பிக்கையில் வலுவானவர்களாக) உள்ளவர்கள், பின்பு அதற்கடுத்ததாக (நம்பிக்கையில் வலுவானவர்களாக) உள்ளவர்கள்.
மூன்றாவது: அல்லாஹ் ஏற்படுத்திய ஒழுங்கு முறை. அவன் கூறுகிறான்: “நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்தை மாற்றமாட்டான் (எது வரை எனில்) அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாத வரையில்”. (அர்ரஃத் 13:11).- இன்னும் அவன் கூறுகிறான்: “மேலும் உங்களுக்கு (உஹதுப் போரில்) ஒரு துன்பம் ஏற்பட்டபோது நிச்சயமாக நீங்கள் இது போன்று இரு மடங்குத் துன்பத்தை (பத்றுப் போரில்) ஏற்படுத்தி விட்டிருந்தீர்கள். (இவ்வாறு செய்து விட்டு) இது எவ்வாறு (யாரால்) ஏற்பட்டது? என நீங்கள் கேட் (க ஆரம்பித்து விட்)டீர்களா? உங்களிடமிருந்தே தான் இது ஏற்பட்டது என்று (நபியே) நீர் கூறுவீராக!” (ஆல இம்ரான் 3:165).
ஒருவன் தனது ஆத்மாவை மாற்றிக் கொள்ளும் போது அல்லாஹ் அவனது வெளி நிலமைகளை மாற்றி அமைக்கிறான். மனிதனது உள்ளம் சீராக இருக்கும் போது சிறந்தவனாகவும், அது மோசமாகிவிடும் பொழுது அவன் மோசமானவனாகவும் ஆக்கப்படுகிறான் உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைப்பது கிடையாது.
நான்காவது: நிச்சயமாக அல்லாஹ் நாட்களை மாறி மாறி வரச்செய்கிறான். அவன் சொல்கிறான்: “நாம் மனிதர்களுக்கு மத்தியில் நாட்களை மாறி மாறி வரச்செய்வோம் அவர்களில் ஈமான் கொண்டவர்கள் யார் என்பதையும் அவர்களில் ஷுஹதாக்கள் யார் என்பதையும் அறிவதற்காக, அல்லாஹ் அநீதி இழைப்போரை நேசிக்கமாட்டான்”. (ஆலஇம்ரான் 3:140).
இந்த வசனத்தின் மூலமாக விளங்குவது காலம், நாட்கள் அனைத்தும் அவன் கையில் இருக்கின்றன அவன் நாடிய படி அவற்றை மாற்றி அமைக்கிறான். சோதனைக்கும் மகிழ்ச்சிக்கும் மத்தியில் நாட்களை மாறி மாறி வரச்செய்வது உயிர்த்தியாகிகளை அறிந்து கொள்வதற்கும் முஃமின்களில் இருந்து முனாபிக்குகளை வேறுபடுத்தி அறிவதற்காகவுமே.
ஐந்தாவது: இதற்கு முன் பூமியில் அக்கிரமம் செய்துகொண்டிருந்த சமுதாயங்களின் முடிவு என்னானது. அவர்கள் வரம்பு மீறிச் சென்றபோது, பூமியில் அநீதி அக்கிரமம் இழைத்தபோது அல்லாஹ் எப்படி அவர்களை அழித்தான்? அல்லாஹ் அநீதி இழைப்பவர்களுக்குத் தவணை அளிக்கிறான். ஆனால் அது அவர்களைப் பிடித்துக் கொண்டால் அழிந்துவிடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்:
“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்” அவர்கள் வசித்திருந்த இடங்களில் (பிரயாணித்து) இவர்கள் நடக்கிறார்கள். (இவ்வாறு அவர்களின் குடியிருப்புத்தலங்கள் பாழடைந்து கிடப்பதைப்பார்ப்பது) இவர்களுக்கு நேர்வழி காட்ட வில்லையா? (இதற்கு) அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?” (அஸ்ஸஜதா 32:26).
அல்லாஹ் கூறுகிறான்: “பூமியில் சுற்றித் திரிந்து பாருங்கள் இதற்கு முன் சென்ற சமுதாயங்களின் கதி என்னவானது! அவர்களில் அதிகமானவர்கள் இணைவைப்பாளர்களாகவே இருந்தனர்”. (அர்ரூம் 30:42).
ஆறாவது: “நீர் அல்லாஹ்விற்கு உதவினால் அல்லாஹ் உங்களுக்கு உதவுவான்”. (முஹம்மத் 47:7).
இது அல்லாஹ்விடமிருந்துள்ள முஃமின்களுக்குரிய வாக்குறுதியாகும். அவர்கள் அல்லாஹ்விற்குரிய உதவியை உறுதி செய்துவிட்டால் அல்லாஹ் முஃமின்களுக்கு உதவுவதைப் பொறுப்பேற்றுக் கொள்கிறான். அல்லாஹ்வுடைய கட்டளைகளை ஏற்று அவனது மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்குப் பின்வருமாறு அல்லாஹ் வாக்களிக்கின்றான்:
எவன் அல்லாஹ்வுக்கு உதவி செய்கிறானோ நிச்சயமாக அவனுக்கு அல்லாஹ் உதவி செய்கிறான் நிச்சயமாக அல்லாஹ் வலிமைமிக்கவன், யாவரையும் மிகத்தவன்”. (அல்ஹஜ் 22:40).
ஏழாவது: பயபக்தியுடையவர்களுக்கு இறுதியில் வெற்றி என்பதில் உறுதியாக இருத்தல். அவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் இருந்தாலும் சரி, பல நாடுகளை அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தாலும் சரி நிச்சயமாக வெற்றி இறுதியில் முஃமின்களுக்கு, தக்வா உடையவர்களுக்கே. நீங்கள் விரும்பினால் அல்லாஹ்வின் வார்த்தைகளை உச்சரியுங்கள்:
மேலும், நம்முடைய தூதர்களாகிய நம் அடியார்களுக்கு நம்முடைய வாக்கு முந்திவிட்டது. நிச்சயமாக அவர்கள்- அவர்களேதான் உதவி செய்யப்படுபவர்கள். மேலும் நிச்சயமாக நம்முடைய படையினர்கள்தான அவர்களே திட்டமாக மிகைத்தவர்களாக இருப்பர்”. (அஸ்ஸாப்பாத்:171- 173). இன்னும் அவன் சொல்கிறான்: “மேலும் நிச்சயமாக நாம், ஸபூர் (என்னும்) வேதத்தில் நல்லுபதேசங்களுக்குப் பின்னர், “நிச்சயமாக பூமியை என்னுடைய நல்லடியார்கள் தாம் (அதை) வாரிசாக அடைவார்கள்” என்று எழுதிவிட்டோம்”. (அல்ஹஜ்: 105).
தமீம் இப்னு அவ்ஸுத்தாரி அறிவிக்கிறார்கள்: நபிகளார் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்: “இந்த இஸ்லாம் இரவு பகலை அடைவது போல அனைத்து இடங்களையும் சென்றடையும் அல்லாஹ் எந்த ஒரு வீட்டையோ பொந்தையோ விட்டு வைக்க மாட்டான் அந்த இடத்தில் கண்ணியமான முறையில் இம் மார்க்கத்தை நுழைத்தே தவிர. இஸ்லாத்தைக் கொண்டு உயர்வு வழங்குவோருக்கு அல்லாஹ் உயர்வை அளிப்பான். இறைநிராகரிப்பைக் கொண்டு அல்லாஹ் இழிவை வழங்குவோருக்கு இழிவை வழங்குவான்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அனைத்து குழப்பமான சூழ்நிலைகளிலும் அல் குர்ஆனையும் ஸுன்னாவையும் பற்றிப் பிடித்து அதன் தீர்வைப் பெறுவோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக