ஹலால், ஹராம் என்றால் என்ன? ஏன்? எப்படி?


ஆனால் நான் வாங்கும் யோகட்டில் பன்றிக் கொழுப்பு கலந்திருக்கின்றதா? என்பதைப் பார்க்கும் ஆற்றல் எனக்கில்லை. ஏனெனில் அதனைப் பரிசோதனை செய்வதற்கு இரசாயனக் கலவைகள் தேவைப்படுகின்றன, இயந்திரங்கள் தேவைப்படுகின்றன, விஷேட தகைமைகள் தேவைப்படுகின்றன. இவையனைத்தையும் ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியாது, அப்படி யாராவது செய்ய நினைத்தால் ஒரு பிஸ்கட் பக்கற் வாங்கக் கடைக்குச் செல்வதாக இருந்தாலும் ஒரு ட்ரக் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு உள்ள இயந்திரங்கள் இரசாயனங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் அதில் தடுக்கப்பட்டவைகள் கலந்திருக்கின்றதா என்று பார்த்து வாங்க வேண்டும். இது சாத்தியமே இல்லாத விடயமாகும்.
அத்தோடு இது யாரின் மீதும் எதனையும் திணிக்கின்ற செயற்பாடும் அல்ல. முஸ்லிம்கள் தமது பேணுதலுக்காக செய்கின்ற விடயமே இது. ஆனால் இது அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடிய விடயம் என்பதில் சந்தேகமில்லை. அதையும் தாண்டி யாராவது இது தமக்குத் தேவையில்லை என்று கருதினால் அவர் தாராளமாக அவர் விரும்பியது போல் ‘சுதந்திரமாக’ வாழ்ந்து விட்டுப் போகலாம். அது அவருக்கும் அவரைப் படைத்தவனுக்கும் இடையில் உள்ள விவகாரம். ஆனால் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டிய கடமைப்பாடு ஹலால் தேவையில்லை என்று சொல்கின்ற சகோதரர்களுக்கு இருக்கின்றது. எப்படி எங்கள் மீது ஹலாலைத் திணிக்காதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கின்றதோ அதே போன்று ஹலால் தேவையில்லை என்பதை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று சொல்லும் உரிமை எங்களுக்கும் இருக்கின்றது.

இன்று ஹலால் என்ற சொல் நாடளாவிய ரீதியில் ஒரு பெரிய அலையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆனால் ஹலால் என்ற சொல் பரிச்சயமாக இருக்கின்ற அளவுக்கு ஹலால் என்றால் என்ன அது ஏன் என்பன போன்ற விடயங்கள் பரிச்சயமாக இருக்குமா என்பது சந்தேகமே. முஸ்லிம்களுக்கு மத்தியில் கூட ஹலால் என்றால் முஸ்லிம்கள் அறுத்தது ஹராம் என்றால் முஸ்லிம் அல்லாதவர்கள் அறுத்தது என்ற குறுகிய பார்வை இன்னும் பரவலாகக் காணப்படுகின்றது.
இப்படி எமக்கு மத்தியிலேயே சரியான புரிதலின்றிய ஒரு விடயத்தை மேடை போட்டுப் பேசி அடுத்தவர்களுக்கு விளங்கப்படுத்தி விட முடியுமா என்பது கேள்விக்குறியே!.
இன்று பெரும்பான்மையினருக்கு மத்தியிலும் ஹலால் என்ற சொல்லுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற தோற்றப்பாட்டை ஹலால் ஹராம் பற்றிய சரியான பார்வையைக் கொடுப்பதன் மூலமாக மாற்றியமைக்கலாம்.
அப்படி மாற்றியமைத்து விட்டோமென்றால் பிடிவாதமாக இருக்கும் அதிகார சக்திகள் அழைப்பு விடுத்தாலும் கூட பொது மக்கள் அதன் பின்னால் போக மாட்டார்கள்.
இது அப்படியான ஒரு முயற்சியாகும். இன்று பொதுவாக முஸ்லிம்களுக்கு மத்தியிலும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத்தியிலும் பரவலாகக் காணப்படுகின்ற சில கேள்விகளுக்கான பதில்களைத் தேட முயன்றதன் விளைவே இவ்வாக்கமாகும்.
• ஹலால் என்றால் என்ன? ஹராம் என்றால் என்ன?
இவை இரண்டும் இரண்டு அரபுச் சொற்களாகும். ஹலால் என்பது அனுமதிக்கப்பட்டது என்றும் ஹராம் என்பது அனுமதிக்கப்படாதது என்றும் தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படலாம்.
அதாவது மனித வாழ்க்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய சகல நடவடிக்கைகளிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் என இரு பகுதிகள் காணப்படுகின்றன. இது வெறுமனே உணவு பானங்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு விடயமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் இன்று இந்த ஹலால் ஹராம் என்ற விடயம் வெறுமனே உணவு பானங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதன் காரணமாகவே முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் அது தொடர்பான சந்தேகங்களும் சர்ச்சைகளும் நிலவுகின்றன.
• இந்த ஹலால் ஹராம் என்பன இஸ்லாத்தில் மாத்திரம் தானா காணப்படுகின்றது?
இல்லை உலகிலுள்ள சகல மதங்களிலும் ஹலால் ஹராம் காணப்படுகின்றது. அதாவது அனுமதிக்கப்பட்ட அனுமதிக்கப்படாத விடயங்கள் எல்லா மதங்களிலும் காணப்படுகின்றன. உதாரணமாக பௌத்த மதத்தை எடுத்துக் கொண்டால் அந்த மதத்தின் போதனைகளின் படி மதுபானம் அருந்துவது ஹராமாகும் (தடுக்கப்பட்டதாகும்). அநீதி இழைத்தல் ஹராமாகும், அநியாயமாக கொலை செய்தல் ஹராமாகும். பௌத்த மதத்தலைவர்கள் சுமார் பத்து வகையான இறைச்சிகளை சாப்பிடுவது ஹராமாகும்.
அதே போன்று கிறிஸ்தவ மதத்தை எடுத்துக் கொண்டால் பன்றி இறைச்சி சாப்பிடுவது அவர்களுக்கு ஹராமாகும்.
இஸ்லாத்திலும் ஏனைய அனைத்து மதங்களையும் போலவே இவ்வாறாக ஹராமான விடயங்கள் காணப்படுகின்றன. அந்த விடயங்களை தவிர்ந்து வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும்.
• உணவு பானங்களில் மாத்திரம் தானா ஹலால் ஹராம் காணப்படுகின்றது?
நிச்சயமாக இல்லை. ஏற்கனவே மேலே கூறிக்காட்டியது போல வாழ்வின் சகல விவகாரங்களிலும் அனுமதிக்கப்பட்டவைகள் அனுமதிக்கப்படாதவைகள் அதாவது ஹலால் ஹராம் என இரு பகுதிகள் காணப்படுகின்றன. உதாரணமாக பார்வையில் கூட ஹலாலான பார்வை ஹராமான பார்வை என இரண்டு வகைகள் உள்ளன. ஹலாலான பார்வை என்பது ஒரு மனிதன் தனக்கு பார்ப்பதற்கு அனுமதிக்கப்பட்டவற்றை மட்டும் பார்ப்பதாகும்.
ஒரு மனிதன் பாதையில் நடந்து செல்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள், பாதையோரத்திலிருக்;கின்ற வீடுகளை எட்டிப் பார்ப்பது அவனுக்கு ஹராமாகும். பாதையில் நடந்து செல்கின்ற பெண்களைப் பார்ப்பது ஹராமாகும். மோசமான காட்சிகளைப் பார்ப்பது ஹராமாகும். இப்படி ஹராமான பார்வையை பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.
அதே நேரம் தடுக்கப்பட்ட பார்வைகள் சிலதைத் தவிர்த்து ஏனைய அனைத்து வகையான பார்வைகளும் ஹலால் ஆகும்.
அதே போன்றுதான் ஆடைகளிலும் ஹலால் ஹராம் காணப்படுகின்றது. ஆனால் இங்கு ஷேர்ட் ஹலால் ட்றவுசர் ஹராம் என்று யாராலும் சொல்ல முடியாது. இங்கு ஹலால் ஹராமைத் தீர்மானிப்பதற்கு அடிப்படையாக சில நிபந்தனைகள் காணப்படுகின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒருவன் எந்த ஆடையை அணிந்தாலும் அது ஹலால் ஆகும். ஆந்த நிபந்தனைகளைப் புறக்கணித்து ஒருவன் எந்த ஆடையை அணிந்தாலும் அது ஹராமாகும்.
அந்த நிபந்தனைகளில் முதலாவது மட்டும் தான் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வௌ;வேறானது. ஏனைய அனைத்து நிபந்தனைகளும் இருவருக்கும் பொதுவானது.
முதலாவது நிபந்தனை உடலில் கட்டாயம் மூட வேண்டிய பகுதிகளை மறைத்ததாக குறித்த ஆடை இருக்க வேண்டும். இதில் ஆண் கட்டாயம் மூட வேண்டிய பகுதி அவனது தொப்புள் முதல் முழங்கால் வரையுள்ள பகுதியாகும். ஒரு பெண் கட்டாயம் அவளது முகம் மற்றும் மணிக்கட்டின் கீழுள்ள கையின் பகுதி ஆகியன தவிர்ந்த ஏனைய பகுதிகளை மறைக்க வேண்டும்.
அதே போன்று ஆடை மெல்லியதாக இருக்கக் கூடாது
உடலமைப்பு வெளியே தெரியும் வகையில் இறுக்கமாக இருக்கக் கூடாது
ஆண் பெண்ணின் ஆடையையும் பெண் ஆணின் ஆடையையும் அணியக் கூடாது
ஏனைய கலாச்சாரங்களை அப்படியே பின்பற்றுவதாக இருக்கக் கூடாது.
இந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுமிடத்து ஒருவன் அணியும் ஆடை எதுவாக இருப்பினும் அது ஹலாலானதாகும். இவற்றில் ஏதாவது ஒரு நிபந்தனையாவது மீறப்பட்டால் அவன் அணியும் ஆடை ஹராமானதாகும்.
அதே போன்று ஆண் பெண் உறவில் ஹலால் ஹராம் இருக்கின்றது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பேசுவதற்கும் பழகுவதற்கும் தனித்திருப்பதற்கும் அனுமதிக்கப்பட்ட ஆண்கள் பெண்களும்; இருக்கின்றனர் தடுக்கப்பட்ட ஆண்கள் பெண்களும் இருக்கின்றனர்.
உதாரணமாக ஓர் ஆண் தனது தாயுடன் மகளுடன் சகோதரியுடன் பேசுவது பழகுவது பயணம் போவது ஹலாலாகும், அதே நேரம் வேறு யாரோ ஓர் அந்நியப் பெண்ணுடன் பயணிப்பது ஹராமாகும்.
ஒருவன் தனது உடல் இச்சையை திருமணத்தின் பின்னர் தனது மனைவியூடாகத் தீர்த்துக் கொள்வது ஹலாலாகும். அதையே திருமணத்துக்கு முன்னரோ பின்னரோ வேறு வகையில் விபச்சாரத்தினூடாக தீர்த்துக் கொள்வது ஹராமாகும்.
இப்படி வாழ்வின் சகல விடயங்களிலும் ஹலாலும் ஹராமும் காணப்படுகின்றன.
• அப்படியானால் ஏன் உணவுப் பண்டங்களுக்கு மட்டும் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது? ஏனைய எல்லா விடயங்களுக்கும் வழங்கலாம் தானே! அதுவும் நபியவர்கள் என்ன ஹலால் சான்றிதழ் வழங்கினார்களா?
நியாயமான கேள்விதான், ஆனால் நிதர்சனமான கேள்வியல்ல. ஒரு மனிதன் பாதையில் செல்கின்றான் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவனுக்கு ஹலாலான பார்வையை மாத்திரம் தான் அவன் பார்க்க வேண்டும். அவனது பார்வை தடுக்கப்பட்ட ஒரு பெண்ணைப் பார்த்து விட்டால் அந்தப் பெண் ஹராம் என்று அர்த்தமில்லை. அவள் வேறு யாருக்கோ ஹலாலானவளாக இருப்பாள்.
அதே போன்று விபச்சாரம் செய்வது பிழையானது என்பது வெளிப்படையாகத் தெரியும். எனவே ஒருவன் திருமணம் செய்த பெண்ணுக்கு யாரும் ஹலால் சான்றிதழ் வழங்கத் தேவையில்லை. திருமணம் முடித்த காரணத்தினாலேயே அவள் அவனுக்கும் அவன் அவளுக்கும் ஹலாலாகி விடுவர்.
அவ்வாறே ஆடைகளிலும் குறிப்பிட்ட நிபந்தனைகள் பூர்த்தியாகினால் அந்த ஆடை ஹலால் இல்லாவிட்டால் அது ஹராம்.
இவற்றிலெல்லாம் யாருக்கும் பார்த்தவுடனே எது ஹலால் எது ஹராம் என்பது தெளிவாக விளங்கி விடும். எனவே அங்கெல்லாம் எது ஹலால் என்று பரிசோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகின்றது.
ஆனால்  உணவுப் பொருட்களைப் பொருத்தவரையில் அங்கு நிலைமை வேறாகக் காணப்படுகின்றது. தடுக்கப்பட்ட உணவுப் பொருட்கள் ஹராம் என்பது தெளிவானது. உதாரணமாக பன்றி இறைச்சி விற்பனை செய்யும் கடையில் போய் யாரும் இறைச்சி வாங்க மாட்டார்கள். ஏனெனில் அது தெளிவானது.
ஆனால் நான் வாங்கும் யோகட்டில் பன்றிக் கொழுப்பு கலந்திருக்கின்றதா? என்பதைப் பார்க்கும் ஆற்றல் எனக்கில்லை. ஏனெனில் அதனைப் பரிசோதனை செய்வதற்கு இரசாயனக் கலவைகள் தேவைப்படுகின்றன, இயந்திரங்கள் தேவைப்படுகின்றன, விஷேட தகைமைகள் தேவைப்படுகின்றன. இவையனைத்தையும் ஒவ்வொரு மனிதனும் செய்ய முடியாது, அப்படி யாராவது செய்ய நினைத்தால் ஒரு பிஸ்கட் பக்கற் வாங்கக் கடைக்குச் செல்வதாக இருந்தாலும் ஒரு ட்ரக் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு உள்ள இயந்திரங்கள் இரசாயனங்கள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு போய் அதில் தடுக்கப்பட்டவைகள் கலந்திருக்கின்றதா என்று பார்த்து வாங்க வேண்டும். இது சாத்தியமே இல்லாத விடயமாகும்.
எனவே இதற்குப் பொறுப்பாக ஒரு குழுவினர் இருந்து இவற்றைப் பரிசோதனை செய்ய வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அவ்வாறு பரிசோதனை செய்த பின்னர் எந்தப் பிரச்சினையுமில்லை என்ற நிலையில் காணப்படுகின்ற பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுகின்றது. இது தான் உணவுப் பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதற்கும் ஏனையவற்றுக்கு வழங்கப்படாமலிருப்பதற்குமான காரணமாகும்.
நபி (ஸல்) அவர்கள் ஹலால் சான்றிதழ் வழங்கினார்களா? என்ற கேள்வியும் நியாயமானது தான்.
ஆனால் அதுவும் கூட நிதர்சனமான கேள்வியல்ல. ஏனென்றால் நபியவர்களின் காலத்தில் சந்தையில் அனைத்துமே ஹலாலாகத் தான் இருந்தன. அங்கே ஹராமான எதனையும் விற்க யாருக்கும் அனுமதியிருக்கவில்லை. எனவே வாங்குவது ஹலாலா ஹராமா என்ற பிரச்சினையும் யாருக்கும் இருக்கவில்லை. எனவே ஹலால் மட்டுமே இருந்த இடத்தில் ஹலால் சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்கவில்லை.
ஆனால் இன்றைய நிலை அப்படியல்ல எது ஹலால் எது ஹராம் என்பதை நுகர்வோரினால் பிரித்தறிய முடியாத நிலையே இன்றைய சந்தையில் காணப்படுகின்றது. எனவே இதுதான் ஹலால் என்பதை நுகர்வோருக்குக் காட்டிக்கொடுக்க வேண்டிய கட்டாயத் தேவை இருப்பதன் காரணமாகத் தான் நபியவர்கள் காலத்தில் வழங்கப்படாத ஹலால் சான்றிதழ் இன்று வழங்கப்படுகின்றது.
• ஏன் ஹலால் அவசியம்? நாம் நினைத்த மாதிரி வாழ்வதற்கு நமக்கு உரிமை இல்லையா?
இந்தக் கேள்விக்கு பதிலளிக்க முன்னர் உங்களிடம் ஒரு கேள்வி, நீங்கள் படித்த பாடசாலையில் அல்லது பல்கலைக்கழகத்தில் உங்களது அனுபவம் எப்படி? நீங்கள் நினைத்த மாதிரி அங்கே நடந்து கொள்ளலாமா? நினைத்தால் வகுப்புக்கு போகலாம், நினைத்தால் போகாமல் இருக்கலாம், ஆடை அணிந்தும் போகலாம் ஆடை அணியாமல் அம்மணமாகவும் போகலாம், நினைத்தால் ஒழுக்கமாக இருக்கலாம் நினைத்தால் தறிகெட்டதனமாக நடந்து கொள்ளலாம்… இப்படியெல்லாம் எங்காவது பாடசாலைகளில் ஒழுங்குகள் வரையறைகள் சட்டங்கள் கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியவைகள் செய்யக் கூடாதவைகள் என எதுவுமே இல்லாத நிலை காணப்படுகின்றதா?
அல்லது ஏதாவது ஒரு நாட்டில் நீ விரும்பிய மாதிரி வாழ்ந்து விட்டுப் போ! உனது விருப்பம் தான் எமது வெற்றி, விரும்பினால் கற்பழி! விரும்பினால் களவெடு! விரும்பினால் கொலை செய்! என்று அனுமதியிருக்கின்றதா?
அல்லது ஏதாவது மதங்களில் ஒருவன் தான் விரும்பியது போல் வாழலாம் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது என்ற நிலை காணப்படுகின்றதா?
நிச்சயமாக இல்லை, அங்கெல்லாம் சட்டங்கள் ஒழுங்குகள் வரையறைகள் செய்யக் கூடியவைகள் செய்யக் கூடாதவைகள் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதே போன்றுதான் மனித வாழ்விலும் ஒழுங்குகள் வரையறைகள் காணப்படுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒழுங்குகள் கட்டுப்பாடுகள் வரையறைகள் அற்ற வாழ்வை மனித வாழ்வு என்று யாரும் சொல்வதில்லை. ஒழுங்கு விதிகளை வரையறைகளை மீறுகின்றவர்களை நாம் எப்படி ஏசுகின்றோம் என்பதை ஒரு முறை சிந்தித்துப் பார்த்தால் அத்தகைய வாழ்வுக்கு என்ன சொல்லப்படுகின்றது என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடியுமாக இருக்கும்.
எனவே இப்படியாக மனிதர்களுக்கே சட்டங்களை வரையறைகளை வகுக்க முடியுமாக இருந்தால் மனிதர்களையெல்லாம் படைத்த இறைவனுக்கு வரையறைகளை வகுக்க முடியாதா?! ஆனால் சட்டங்கள் வரையறைகள் அனைத்திலும் பின்பற்றப்படுவதற்கு அதிகம் தகுதியானது இறைவன் வகுத்த சட்டங்களும் வரையறைகளுமே. நாங்கள் மனிதர்களை மதிக்கின்றோம், ஆனால் அதனை விட அதிகமாக மனிதர்களைப் படைத்த இறைவனையும் அவனது சட்டங்களையும் மதிpக்கின்றோம்.
• இப்படி எல்லாமே ஹராம் என்றால் எப்படி மனிதன் இந்த உலகில் வாழ்வது?
உங்களது ஆதங்கம் புரிகின்றது. ஆனால் ஹராத்தைத் தவிர்ந்து வாழ்கின்ற முஸ்லிம்கள் எந்தப் பிரச்சினையுமில்லாமல் தானே வாழ்கின்றனர்.
ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும், ஹலாலானவற்றையும் ஹராமானவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் ஹராமானவைகள் ஹலாலானவற்றை விட மிகவும் சொற்பமானதே! அதே நேரம் வேறு எந்தக் கொள்கையிலும் இல்லாத ஒரு சிறப்பம்சம் இஸ்லாத்தின் ஹலால் ஹராம் நடைமுறையில் காணப்படுகின்றது.
இஸ்லாத்தில் ஏதாவது ஒன்று ஹராமாக்கப் பட்டிருக்குமாயின் அதற்கு ஈடாக வேறு ஒன்று நிச்சயமாக ஹலாலாக இருக்கும். உதாரணமாக விபச்சாரம் ஹராமாக்கப்பட்டுள்ளது திருமணம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. எனவே மனிதனின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்ட வழிமுறையொன்று ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
வட்டி ஹராமாக்கப்பட்டுள்ளது, வியாபாரம் ஹலாலாக்கப்பட்டுள்ளது. எனவே சம்பாதிக்க விரும்பும் எவரும் ஆகுமான வழியில் வியாபாரம் செய்து பொருளீட்டலாம்.
பன்றி இறைச்சி ஹராமாக்கப்பட்டுள்ளது இன்னும் பல வகையான இறைச்சிகள் ஹலாலாக்கப்பட்டுள்ளன. மாமிசம் உண்ண வேண்டும் என்ற மனிதனது ஆசைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளது.
அது மட்டுமல்ல இந்த ஹலால் ஹராம் தொடர்பாக ஓர் அடிப்படையான விதியே இஸ்லாத்தில் காணப்படுகின்றது. ‘இந்த உலகத்தில் இருக்கின்ற அத்தனையும் அனுமதிக்கப்பட்டதாகும் படைத்த இறைவனால் தடுக்கப்பட்டவற்றைத் தவிர’ என்பதே அந்த விதியாகும். இதன் மூலம் ஹலாலானவற்றின் எல்லை எந்தளவு விரிவானது என்பதையும் ஹராமானவற்றின் எல்லை எந்தளவு சுருங்கியது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
ஆனால் அப்படி ஹலாலின் எல்லை விரிவானதாக இருந்தாலும் இன்று இருக்கின்ற கொஞ்சம் ஹராத்தை எல்லா ஹலால்களுடனும் கலக்கின்ற வேலையை பலர் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகின்றனர். எனவே தான் ஹலால் ஹராம் போன்ற சொற்கள் முன்பில்லாத அளவு மக்களுக்கு மத்தியில் பரிச்சயமாகின்ற அளவுக்கு அது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.
அத்தோடு இது யாரின் மீதும் எதனையும் திணிக்கின்ற செயற்பாடும் அல்ல. முஸ்லிம்கள் தமது பேணுதலுக்காக செய்கின்ற விடயமே இது. ஆனால் இது அனைவருக்கும் நன்மை பயக்கக் கூடிய விடயம் என்பதில் சந்தேகமில்லை. அதையும் தாண்டி யாராவது இது தமக்குத் தேவையில்லை என்று கருதினால் அவர் தாராளமாக அவர் விரும்பியது போல் ‘சுதந்திரமாக’ வாழ்ந்து விட்டுப் போகலாம். அது அவருக்கும் அவரைப் படைத்தவனுக்கும் இடையில் உள்ள விவகாரம். ஆனால் ஒரு விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டிய கடமைப்பாடு ஹலால் தேவையில்லை என்று சொல்கின்ற சகோதரர்களுக்கு இருக்கின்றது. எப்படி எங்கள் மீது ஹலாலைத் திணிக்காதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இருக்கின்றதோ அதே போன்று ஹலால் தேவையில்லை என்பதை எங்கள் மீது திணிக்க வேண்டாம் என்று சொல்லும் உரிமை எங்களுக்கும் இருக்கின்றது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001