இறைவன் மன்னிக்காத குற்றம்.



மனித குலத்துக்கு வழி காட்டியாக ஏக இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் இஸ்லாமென்பது, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் நம்பிக்கை. ஏக இறைவனை ஏற்று, அவன் வழி காட்டியாகத் தேர்ந்தெடுத்த இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொண்டு அவர்களைப் பின்பற்ற வேண்டும். என்பதே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை!
இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கையை வாழ்க்கை நெறியாக் கொண்டவர்கள் ”முஸ்லிம்கள்” என்றும், இஸ்லாத்தின் கொள்கையை ஏற்காதவர்கள் ”காஃபிர்கள்” அதாவது, இஸ்லாத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் என்றும் இஸ்லாம் குறிப்பிடுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள், இஸ்லாத்தின் சட்டங்களைப் பின்பற்றிச் சரியாக உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அதற்குப் பகரமாக மறுமையில் சொர்க்கத்தை வழங்குவதாக இறைவன் வாக்களித்திருக்கிறான்.
இஸ்லாம் மார்க்கத்தை நிராகரித்தவர்கள் – மறுத்தவர்கள் இஸ்லாத்தின் கட்டளைகளைப் புறக்கணித்து, தங்கள் மனோ இச்சைகளைப் பின்பற்றி இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டதால் இவர்கள் இறைவனை நிராகரித்தவர்கள் என்பதால் மறுமையில் தண்டனை பெறுவார்கள் என்பதையும் இறைவன் வாக்களித்திருக்கிறான்.
இஸ்லாத்தை ஏற்று அம்மார்க்கத்தை சரியாகப் பின்பற்றியவர்களுக்கு பரிசாக சொர்க்கமும், இஸ்லாத்தை நிராகரித்தவர்களுக்கு தண்டனையாக நரகமும் வழங்கப்படும் என்று எவ்வித ஒளிவு, மறைவு இல்லாமல், வெளிப்படையாக இஸ்லாம் இவ்வாறு கூறுகிறது. இதில் யாருக்காகவும், எதற்காகவும் எவ்வித சலுகையும் இல்லை. எனவும் உலக மக்கள் முன் இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது.
இது பற்றி திருக்குர்ஆன் வசனங்களிலும், நபிமொழிகளிலும் சொல்லப்பட்டுள்ளது. இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் இந்த ஆதாரங்களை எடுத்துக் கொண்டு, ”இஸ்லாத்தை ஏற்காதவர்களையெல்லாம் இஸ்லாம் மறுமையில் தண்டிப்பதாகச் சொல்கிறது பாருங்கள்” என விமர்சிக்கின்றனர். திருக்குர்ஆன் முழுவதையும் மறுக்கும் இவர்கள் சில வசனங்களை மட்டும் நம்புகிறார்களா? ஆச்சரியந்தான்!
இறைவன் மன்னிக்காத குற்றம்.
ஏக இறைவனை மறுத்தவர்கள், பல கடவுட்க் கொள்கையுடைவர்கள் இவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்று இஸ்லாம் பார்க்கவில்லை. ”இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள்” என்ற வட்டத்திற்குள் ஒன்று சேர்த்து, இவர்கள் செய்த நன்மைகளும், தீமைகளும் மறுக்கப்படுகிறது. ஏக இறைவனுக்கு இணை வைத்தவர்களின் செயல்பாடுகளை இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக மறுத்து விடுகிறான் – இணை வைத்தவர்கள் ஏக இறைவனை மறுத்தது போல!

இறைவனுக்கு இணையாக எதையும் எவரையும் வணங்கக்கூடாது! இஸ்லாம் இந்தக் கொள்கையை அடிப்படையாக நிறுவியுள்ளது. ஓரிறைக் கொள்கையின் அஸ்திவாரத்தின் மீது இஸ்லாம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஓரிறைக் கொள்கையைப் புறக்கணித்தவர்கள், இறைவனால் புறக்கணிக்கப்படுவார்கள் எனும் போது அவர்களின் நன்மைகள், தீமைகள் கணக்கிடப்பட வேண்டும் என்பதும் அர்த்தமற்றதாகும்.
ஏக இறைவனை ஏற்க மாட்டோம், ஆனால் நல்லவன், கெட்டவன் என்ற கோணத்தில் இறைவன் தீர்ப்பளிக்க வேண்டும் என்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருக்கிறது. இஸ்லாம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை! இறைவனுக்கு இணை கற்பிப்பதை, பெரும் பாவங்களின் வரிசையில் முதல் இடத்தில் இஸ்லாம் நிறுத்தியுள்ளது.
”நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான்அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.”(திருக்குர்ஆன், 004:048,116)
”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.” (திருக்குர்ஆன், 004:116)
லுக்மான் தம் புதல்வருக்கு, நல்லுபதேசம் செய்யும் போது ” என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மாபெரும் அநீதியாகும்” என்று கூறியதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன், 031:013)
”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.” (திருக்குர்ஆன், 005:72)
ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயல்பாடுகளை:- பெரும் பாவம், வழிகேடு, மாபெரும் அநீதியாகவும் இறை வசனங்கள் குறிப்பிடுகிறது. இறைவனுக்கு இணை கற்பிக்கும் எவரும் மன்னிக்கப்பட மாட்டார், இணை கற்பித்தவருக்கு சொர்க்கம் விலக்கப்பட்டுள்ளது என்பதும் இறைவனின் வாக்கு!
முஸ்லிம்களுக்கும், முஸ்லிமல்லாதவர்களுக்கும்.
எவர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவருடைய நல்லறங்கள் அழிந்து விடும், அவர் நஷ்டமடைந்தவராவார். இதற்கு முஸ்லிம், முஸ்லிமல்லாதோர் என விதி விலக்கு இல்லை!

”இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தனது அடியார்களில் தான் நாடியோரை, இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான். (பின்னர்) அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.” (திருக்குர்ஆன், 006:088)
”நம்பிக்கை கொண்ட பின்னர் மறுத்து, பின்னர் (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின் மன்னிப்பு ஒரு போதும் எற்கப்படாது. அவர்களே வழி தவறியவர்கள்.” -
- (ஏக இறைவனை) ”மறுத்து, மறுத்தவராகவே மரணித்தவர்கள் பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.” (திருக்குர்ஆன், 003:090,091)
இறைத்தூதர்களுக்கும் இதே எச்சரிக்கை!
”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.(திருக்குர்ஆன், 039:065,066)
இறைவனுக்கு இணை கற்பிப்பவர் அவர் எந்த மதத்தவராக இருந்தாலும், அவரின் நல்லறங்கள் – நன்மைகள் அழிக்கப்படும் என்று சொல்லி, இதில் இறைத்தூர்களுக்கும் எவ்வித சலுகையும் வழங்கவில்லை என ஆணித்தரமாக இறைச் சட்டங்களைப் பதித்துள்ளது இஸ்லாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001