மனிதன் ஒரு சந்தர்ப்பவாதி!


Print

[ அவனுக்கு நீங்கா துயர் பிடித்து கடுமையான ஏழ்மைக்குள்ளாகி விட்டால், தொப்பி தலையில் ஏறி விடும்! தாடி கீழே இறங்கி விடும்! கைலி கரண்டையை விட்டு உயர்ந்து விடும்! ஜிப்பா இடுப்புக்குக் கிழே இறங்கிவிடும்! பள்ளிவாசலும், தஸ்பீஹ் மணியும், துஆவும், பணிவும் ஸலாமும்... அல்லாஹு அக்பர்! சொல்லி மாளாது
E-mail
அந்த நேரத்தில் அவனுக்கு வேளை கிடைத்து அன்றாடம் உணவருந்த அல்லாஹ் வசதி வாய்ப்பையளித்து விட்டால், ஜிப்பா போய் சட்டை வந்துவிடும். புரமோஷன் கிடைத்து பாக்கெட்டில் பணம் தங்க ஆரம்பித்து விட்டால், தாடி காணாமல் போய் விரலிடுக்கில் சிகரெட் ஏறிவிடும். மேலும், அல்லாஹ் வசதி வாய்ப்பை அதிகமாக்கி ஒரு வீட்டிற்கும் அவனை சொந்தக்காரனாக்கி விட்டால், தொப்பியோடு காலை ஃபஜ்ரு தொழுகையும் விழுந்துவிடும்.
மென்மேலும் வசதி வர ஆரம்பித்து காரில் வந்து செல்லும் செல்வந்தராக ஆகிவிட்டால், வாரத் தொழுகையாளி என்று மாறி வருட முஸல்லியாக பரிணாமம் பெற்று விடுவான். இதுதான் இக்கால மனிதரின் முற்போக்கு!]
அரசன் ஒருவன் வேட்டையாடச் சென்றான். வேட்டையாடிக்கொண்டு காட்டிற்குள் சென்றவன் தனது பாதுகாவலர்களையும் விட்டு வெகுதூரம் வந்துவிட்டான். தனித்து வந்துவிட்டதை உணர்ந்து காவலர்களைத்தேடித்தேடி அலையும்போது தெரியாமல் ஒரு புதைகுழியில் சிக்கிக் கொண்டான். உதவி! உதவி! என்று பலமுறை அழைத்தான். எதிரொலிளைத்தவிர எவரும் அவனுக்கு பதிலளிக்கவில்லை.
அவனது கால்கள் மெல்ல மெல்ல மண்ணுக்குள் சொருக ஆரம்பித்தது. அப்போது அவன் மனதில் ஒரு எண்ணம், ‘இப்போது யாராவது நம்மைக் காப்பாற்றினால் நம் சொத்தில் கால் பகுதியை தானமாகக் கொடுத்து விடலாம்!’.
அவனது இடுப்புப்பகுதி வரை சொருகியவுடன் இப்போது நினைத்தான், ‘என்னைக் காப்பாற்றுபவனுக்கு எனது பாதி அரசாங்கத்தையே கொடுப்பேன்!’
அவனது கழுத்துப் பகுதியும் மூழ்க ஆரம்பித்ததும் மரணத்தை பயந்தவனாக, ‘யாராவது இப்போது காப்பாற்றினால் என் முழு நாட்டையே அன்பளிப்பாக அவனுக்கு தாரைவார்த்து விடுவேன்!’ என எண்ணினான். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த ஒரு பிச்சைக்காரன் புதைகுழியில் அகப்பட்டு உயிரக்குப் போராடிக்கொண்டிருந்த அரசனைக் காப்பாற்றி வெளியே கொண்டு வந்தான்.
அப்பாடா! பிழைத்தோம் என்று சந்தோஷப்பட்ட அரசன் தன்னைக் காப்பாற்றியவனைப் பற்றி விசாரித்தான். அவன் ஒரு பிச்சைக்காரன் என்று தெரிந்தவுடன், தனது விரலில் மாட்டியிருந்த மோதிரத்தை மட்டும் கொடுத்து அனுப்பி விட்டான். அதுமட்டுமின்றி தனது உடம்பில் பிச்சைக்காரனின் கைபட்ட இடத்தை நன்றாக சுத்தம் செய்து கொண்டான்.
இதுதான் மனித இயல்பு. காரியம் ஆகும்வரை காக்காப்பிடிப்பது, காலைப்பிடிப்பது, காரியம் முடிந்து விட்டால் அவனை உதறிவிட்டு விடுவது. ஒருவனால் தனக்குக் காரியம் ஆக வேண்டுமென்றால், அவனைச் சுற்றி, சுற்றி வந்து அவன் மனதைக் குளிர வைத்து அவனிடம் நல்ல பெயரெடுத்து, அவனுக்கு விசிறிவிட்டு, கொடை பிடித்து ஒருவழியாக தனது காரியத்தை சாதித்துக் கொள்வது. காரியம் முடிந்தபிறகு அவனை அம்போ என்று விட்டுவிடுவது.
இதில் அரசியல்வாதிகளை தட்டிக்கொள்ள ஆளில்லை என்றே சொல்லலாம். தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நாவில் தேன்தடவிய பேச்சாக ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசி மக்களை குளிர்விப்பது. வெற்றிபெற்ற பிறகு, மக்களை மறந்து தனக்கும் தன் குடும்பத்துக்குமட்டும் சொத்து சேர்ப்பது.
அதோ பார் நிலா, இதோ பார் கார், என்று பாசாங்கு செய்து, தனது குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் தாய், அவன் குதிரை சவாரி செய்ய தனது முதுகை வளைத்துக் கொடுக்கும் தந்தை! இவ்வாறு இருவரும் போட்டிப் போட்டுக் கொண்டு அவனைப் பாலூட்டி, தாலாட்டி, சீராட்டி, பாராட்டி, ஆளாக்கி அவன் தூங்க, தங்களின் தூக்கத்தை தூக்கிவைத்து விட்டு அவன் ஆரோக்கியத்தில் முழு பங்கெடுத்துக்கொள்ளும் பாசமிகு பெற்றோர்கள்!
அவன் வளர்ந்து ஆளானபிறகு இனி நம்மால் அவன் வாழ்க்கை முழுமைக்கும் ஒத்துழைப்பு தரமுடியாது, ஆகவே தமக்குப் பகரமாக அவனுக்கு வாழ்க்கைத்துணை ஒன்றை சேர்த்து வைப்போம் என்று திருமணம் முடித்து வைத்து, அப்பாடா என கீழே உட்கார எத்தனிக்கும்போதுதான் மகனின் வண்;டவாளம் தாண்டவமாட ஆரம்பிக்கும். பெற்றோரின் கையை எதிர்பார்க்கும்வரை அவர்களின் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன், தனது வருமானத்தில் கால் ஊன்றி தனது கையை பெற்றோர்கள் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டதும் தொப்புள் கொடியைப்போல் தனது தொடர்பை வெட்டிக்கொள்ளப் பார்க்கிறான். என்னை விட்டால் ஆளில்லை என்ற மமதையில் பெற்றோரை ஒதுக்கியும் வைத்து விடுகிறான். இதுதான் இன்றைய கம்பியூட்டர் கால குழந்தைகளின் அலங்கோலம்.
சக மனிதர்களிடத்தில்தான் இந்த நிலை என்றால் தன்னைப் படைத்த இறைவனிடத்திலும் இதே அனுகுமுறையில்தான் நடந்து கொள்கிறான். அவனுக்கு நீங்கா துயர் பிடித்து கடுமையான ஏழ்மைக்குள்ளாகி விட்டால்,
தொப்பி தலையில் ஏறி விடும்! தாடி கீழே இறங்கி விடும்!
கைலி கரண்டையை விட்டு உயர்ந்து விடும்! ஜிப்பா இடுப்புக்குக் கிழே இறங்கிவிடும்!
பள்ளிவாசலும், தஸ்பீஹ் மணியும், துஆவும், பணிவும் ஸலாமும்... அல்லாஹு அக்பர்! சொல்லி மாளாது!
அந்த நேரத்தில் அவனுக்கு வேளை கிடைத்து அன்றாடம் உணவருந்த அல்லாஹ் வசதி வாய்ப்பையளித்து விட்டால்,
ஜிப்பா போய் சட்டை வந்துவிடும்.
புரமோஷன் கிடைத்து பாக்கெட்டில் பணம் தங்க ஆரம்பித்து விட்டால், தாடி காணாமல் போய் விரலிடுக்கில் சிகரெட் ஏறிவிடும்.
மேலும், அல்லாஹ் வசதி வாய்ப்பை அதிகமாக்கி ஒரு வீட்டிற்கும் அவனை சொந்தக்காரனாக்கி விட்டால், தொப்பியோடு காலை ஃபஜ்ரு தொழுகையும் விழுந்துவிடும்.
மென்மேலும் வசதி வர ஆரம்பித்து காரில் வந்து செல்லும் செல்வந்தராக ஆகிவிட்டால், வாரத் தொழுகையாளி என்று மாறி வருட முஸல்லியாக பரிணாமம் பெற்று விடுவான். இதுதான் இக்கால மனிதரின் முற்போக்கு!
குர்ஆன் வசனம் இதையே கூறுகிறது. ‘மனிதனை ஒரு துயரம் பிடித்துக் கொண்டால், அவன் படுத்த நிலையிலோ அல்லது நின்றோ அல்லது உட்கார்ந்தோ நம்மை அழைக்கின்றான். அவன் துயரத்தை நாம் நீக்கிவிட்டால், அந்த துயரத்தை நீக்கக்கோரி நம்மை அழைக்காததைப்போன்று சென்றுவிடுகிறான்.’ (அல்குர்ஆன் 10:12)
பிறரை ஏமாற்றியே பழக்கப்பட்ட மனிதன் ஒருநாள் அதற்கான பலனை அடைந்தே தீருவான் என்பதில் ஐயமில்லை.
ஊர்நலனை உலையில் போடும் ஊழல் பெருச்சாளி அரசியல்வாதிகள் அடுத்த தேர்தலில் பொதுமக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டுவிடுவர்.
பெற்றோர்களை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் குழந்தைகள் இதர தண்டனைகளை இவ்வுலகிலேயே அவசரப்படுத்திக் கொள்கின்றனர். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
‘ஆதமுடைய மகன் செய்கின்ற அனைத்துப் பாவங்களுக்கும் அல்லாஹ் மறுமையில் தான் கூலி (தண்டனை) கொடுப்பான். ஆனால், இரண்டு தவறுகளைத் தவிர! அந்த இரண்டு தவறுகளுக்கும் இவ்வுலகத்திலேயே தண்டனையைத் தீவிரப்படுத்தி விடுவான். ஒன்று சொந்தத்தைப் பிரிந்து வாழ்வது. மற்றொன்று பெற்றோர்களை நோவினை செய்வது.' (நூல்: மிஷ்காத்)
அடியார்களை ஏமாற்றுபவருக்கே இக்கதி என்றால் ஆண்டவனை ஏமாற்றுபவனுக்கு சொல்லவா வேண்டும்?!
‘என்னை நினைவு கூறுவதைவிட்டும் புறக்கனித்தவனுக்கு நெருக்கமான வாழ்க்கை இவ்வுலகில் இருக்கிறது. மறுமையில் கடுமையான தண்டனை இருக்கிறது’ என்று அல்லாஹ் எச்சரிக்கை விடுக்கின்றான்.
ஏமாற்றுபவர்களே!
நீங்கள் ஏமாற்றுவது பிறரையா?
உங்களையா?
திருந்துங்கள்.
அல்லாஹ் தவ்ஃபீக் செய்வானாக,
ஆமீன்.
மவ்லவி, கல்லிடை ஜே. ஜாஹிர் மிஸ்பாஹி
                                                                                                         www.nidur.info

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001