ஞாயிறு, நவம்பர் 27, 2011

சூனியம் ஒரு பார்வை (1)PrintE-mail

1. சூனியம் என்றால் வித்தை காட்டுதலா?
2. பூசனிக்காய் அல்லது தேசிக்காய் வெட்டிப் போடப் பட்டிருந்தால் அது சூனியமா?
3. சூனியமென்பது மார்க்க விவகாரமா? உலக விவகாரமா?
4. தெரிந்து புரிந்தவைகளும் தெரியாமல் புரியாதவைகளும்
5. சூனியமும் உலகமோகமும்
சூனிய உலகுபற்றி சற்று விரிவாக ஆராய்வோம். ‘உலகம்" எனும் சொல்லானது நாம் வாழும் புவியைச் சுற்றியுள்ள கிரகங்களை மாத்திரம் குறிப்பதில்லை. மொழி ரீதியாக சடங்களல்லாத சிலவற்றுக்கும் ‘உலகம்" என்றழைக்கின்ற வழமை புழக்கத்திலுள்ளது. மது அறுந்துவது பொதுவாக வெறுக்கத்தக்கதாயினும் மது அருந்துபவனுக்கு அதன் தரம், சுவை, வகை போன்ற விவரங்களடங்கிய மதுபான உலகொன்றைப்பற்றிய தகவல்களனைத்தும் தெரிந்திருக்கும். இவ்வாறுதான் கிரிக்கட் விளையாடும் ஒருவனுக்கு அதுவே வாழ்க்கையாகவிருக்கும் அதற்காக அவன் எதையும் செய்யத்துணிந்திருப்பான் அதைப்பற்றிய ஓருலகையே அறிந்திருப்பான். இதை எதிர்ப்பவர்களைப் பார்த்து ‘கிரிக்கட் பற்றி இவர்களுக்கென்ன தெரியும்?" என்று அவன் கூறுவான்.
விளையாட்டை ரசிப்பவர்களை விட விளையாடுபவர்களுக்கு அது ஓருலகமாகவே இருக்கும். தஃவாப்பணி செய்பவர்களைப்பார்த்து ஏனையவர்கள்’ இவர்களுக்கேன் இந்த வேளை எங்களைப்போன்று கணக்குகளைப்பார்த்துக் கொண்டு, அலுவலகமொன்றில் வேலை செய்து கொண்டு இருக்கலாமல்லவா? ஓன்றை ஸஹீஹ் என்பதும், மற்றொன்றை லயீப் என்பதும் ஹராம் என்பதும் ஹலால் என்பதும் இவர்களுக்கு வேறு வேளையில்லையா" என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் தஃவாத்துறை என்பது ஓருலகமாகும். அதிலுள்ளவர்களுக்கே அதைப்பற்றி தெரியும். இவை போலதான் சூனியம் என்பதும் ஓருலகமாகும். எனவே முதலில் சூனியம் பற்றி நாம் என்ன தெரிந்திருக்கின்றோம் என்பதைப்பற்றி ஆராய்வோம்.
1. சூனியம் என்றால் வித்தை காட்டுதலா?
சூனியம் என்றால் வித்தை காட்டுதல் என்பது சிலரின் நம்பிக்கை. இது தவறாகும். வித்தை காட்டுவதுதான் சூனியமென்றால் இதற்காக அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்களை அனுப்பி தடியைப்பாம்பாக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. நாமே இதைக்கற்று விரைவில் வித்தையைக் கண்டுபிடித்திடலாம். அல்லது வித்தை காட்டப்படும் இடத்துக்கு சற்று உயரச்சென்று பார்த்தால் என்ன நடைபெறுகின்றது என்பதை இலகுவில் அறிந்திடலாம். ஆகவே வித்தை காட்டுவதை சூனியமென்பது தவறாகும். வித்தை காட்டுவதால் ஒருவர் காபிராக முடியாது. வித்தை காட்டுவது ஒரு பெரும் பாவம் அல்லது குப்ர் என்று சொல்லவும் முடியாது. ஒருவன் பார்த்துக்கொண்டிருக்க அவனுடைய கண்களை வித்தைக்குற்படுத்தி, எப்படி அவனை ஏமாற்றலாம் என்பதைப்படிப்தே கண்கட்டி வித்தையாகும்.  இதைப்படிப்பதற்கு ஷைதானுடைய துணையெல்லாம் தேவையில்லை. முயன்றால் கற்று விடலாம். இதை சூனியமென்பது தவறாகும்.
2. பூசனிக்காய் அல்லது தேசிக்காய் வெட்டிப் போடப் பட்டிருந்தால் அது சூனியமா?
இன்னொன்றையும் நாம் சூனியமென்று விளங்கி தை;துள்ளோம். ஏதோ ஓரிடத்தில் பூசனிக்காய் அல்லது தேசிக்காய் வெட்டிப் போடப் பட்டிருந்தால், வீட்டுக்கு முன்னால் குழிதோண்டப்பட்டிருந்தால், வீட்டு வாசலில் மிருகங்கள் சிறு நீர் கழித்திருந்தால் இவற்றையும் நாம் சூனியமென்று நம்புகின்றோம். தாம் சூனியக்காரர்கள் என்று தங்களைத்தாங்களே கூறிக்கொள்ளும் சில ஏமாற்றுப்பேர்வழிகளால் மக்களைப் பயமுறுத்த செய்யப்படும் வேடிக்கைகளே இவையாகும். உண்மையில் இவை சூனியமல்ல. இவர்களை நம்பிய சிலர் இவர்களிடம் சென்று ‘இவர்களைச் சூனியம் செய்து பிரித்துவிடுங்கள்" என்று கூறுவார்கள். தாம் சூனியக்காரர்கள்தான் என்று அவரை நம்பவைப்பதற்காக உரிய நபர் பாவித்த சீப்பை எடுத்து வாருங்கள், புடவைத்துண்டை எடுத்து வாருங்கள் என்று வந்திருப்பவரிடம் கூறுவார்கள். பின்னர் சூனியம் செய்து விட்டதாகக் கூறியதும் உரிய நபருக்கு  நோயேற்பட்டால் சூனியம் செய்ததாலேயே இது ஏற்பட்டது என்று கூறுவார்கள். இவ்வாறு சூனியம் செய்வோரில் பெரும்பாலானோர் பொய்யர்களாகும். ஏமாற்றுவதற்காகவென்று சில வித்தைகளைப்படித்து வைத்திருப்பார்கள். மூலகங்களை ஒன்றோடென்று கலந்தால் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை அறிய இரசாயனவியலை ஓரளவு தெரிந்துவைத்திருப்பார்கள்.
உதாரணமாகச் சொல்வதானால் இமாம் இப்னு தைமியா அவர்கள் ரிபாஇய்யா தரீக்காவுடைய ஒரு ராதிபுக்குச் அவர்களுடைய போலிச் சடங்குகளை மக்களுக்குத் தெளிவுபடுத்தச் செல்கிறார். அங்கே ஒருவர் நெருப்பினுள் தன் கைவிரலை விட்டு மக்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறார். இதைக்கண்ட இமாம் இப்னு தைமியா தவளையிலிருந்து பெறப்படும் ஒரு வகை எண்ணெய்யை உடலில் தேய்த் நெருப்பில் விட்டால் நெருப்புக்காயங்கள் ஏற்படாது அதனாலேயே இவர் இவ்வாறு செய்கிறார் என்று மக்களுக்கு உண்மையை விளக்கினார்கள். இது போன்ற சில வித்தைகளைக்கற்று வைத்திருப்பவர்களின் செயல்பாடுகளை சூனியம் என்று நாம் கூறுவது தவறாகும். ஆகவே சூனியம் பற்றி மக்களிடையே காணப்படும் பயத்தைப் பயன்படுத்தி தந்திரங்களைப்புரிந்து மக்களை ஏமாற்றுபவர்களையே நாம் சூனியக்காரர் என்று சொல்கிறோம் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
கெகிராவையில் ஒருவர் ஆறு ஜின்களை வைத்திருப்பதாகவும் அவற்றில்; ஒரு ஜின்  ரவுடி எனவும் ஏனையவைகள் வைத்தியர்களெனவும் அந்நபர் கூறியதை நம்பி மக்கள் வெள்ளம் அவரிடம் அலைமோதியது. தான் சூனியக்காரனே என்பதை மக்களுக்கு நம்ப வைப்பதற்காக கண்ணில் கருமொழியை இல்லாமற்செய்தல், தன் தொண்டைக் குழியை நடுங்கச்செய்தல் போன்ற தந்திரங்களைப்பயன்படுத்தியுள்ளார். இத்தகையவர்களிடம் சென்று நம்மிடமுள்ள சாதாரண அறிவை வைத்து வாதித்து இது பெய்யென்பதை நிரூபித்துவிடலாம்.
சில வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானிலிருந்து ஒரு மௌலானா இலங்கைக்கு வந்ததும் இவரிடம் மருத்துவம் பெற மக்கள் அலைமோதியதும் நாம் அனைவரும் அறிந்ததே. தப்லீக் ஜமாஅத்தின் முக்கிய மௌலவி ஒருவரே அவரை இங்கு அழைத்து வந்தார். போதைப் பொருட்களை விற்கும் ஒருவரின் வீட்டிலேயே அவர் தங்கினார். இவரைப்பார்ப்பதற்காக மக்கள் திரளாக வரிசையாக நின்றிருப்பார்கள். திடீரென ஒருவர் வாகனத்தில் கொண்டு வரப்படுவார். அவருக்குக் கால் முடமாகவிருக்கும் அல்லது கண் குருடாகவிருக்கும் இவரின் பரிதாப நிலையைப்பார்த்து மௌலானாவிடம் செல்ல மக்கள் இடம் கொடுத்துவிடுவார்கள். சில நிமிடங்களின் பின்னர் இந்நபர் நோய் குணமானவராக நன்றாக வெளியில் வருவார். இவரைப்பார்த்த மக்கள் ‘இப்போதுதான் நோயோடு உள்ளே சென்றார் திரும்பி வரும் போது நோய் குணமாகிய நிலையில் வருகின்றாரே" என்று ஆச்சரியப்படுவார்கள். இதை நம்பிவிடுhர்கள். ஆனால் உண்மையில் இது முன்கூட்டியே அந்த மௌலானாவினால் திட்டமிடப்பட்டதொன்று என்பதை யாரும் அறியவில்லை. இதைச்சொன்னால் இப்போதும் சிலர் நம்பத்தயாரில்லை. பகுத்தறிவையிழப்பதனால் ஏற்படும் அவலமே இதுவாகும்.
ஆகவே எந்தவேளையிலும் நமது பகுத்தறிவை நாம் இழந்து விடலாகாது. பெரும் பெரும் பணக்காரர்கள் கூட வெளிநாடுகளிலிருந்து வரும் தங்கல்மாருக்குப்பயந்து  தமது பகுத்தறிவையிழந்து அவர்களுக்குப்பணிவிடை செய்வதைப் பார்க்க முடிகிறது.
அமெரிக்காவில் படித்த ஒரு கலாநிதியாகினும் தனது வீட்டிலே ஒரு சிலையை வைத்து, அதை அலங்கரித்து, விலையுயர்ந்த பொருட்களைக் கொண்டு அதை அழகுபடுத்தி வைத்து அதை வணங்குவார். ஆனால் அவர் வீட்டு நாய் சிலையில் சிறு நீர் கழித்து விடும் அவரைக்கண்டதும் அது பயந்து ஓடிவிடும். அவரோ அந்தச்சிலையை கழுவி, சுத்தப்படுத்தி மீண்டும்  வணங்குவார். சிலையால் எதையும் செய்ய முடியாது என்பதை அறிந்துதான் நாய் சிலையில் சிறு நீர் கழித்தது. மனிதனால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்பதை அறிந்துதான் அந்த நாய் கலாநிதியைக் கண்டதும் ஓடியது. ஒரு நாய்க்கு இருக்கும் பகுத்தறிவு கூட  இந்தக்கலாநிதிக்குக்கிடையாது என்பது இதிலிருந்து விளங்குகின்றது.
அதனாலேயே அல்லாஹ் இவர் போன்றோரை மிருகங்களைவிட மோசமானவர்கள் என அல்குர்ஆனில் குறிப்பிடுகின்றான். ஆனால் ஒரு சாதாரண முஸ்லிம் கூலித்தொழிலாளி கூட இதை நன்கு தெரிந்திருப்பான். ஆனால் இந்தக்கலாநிதிக்கு இந்த அறிவு கிடைக்கவில்லை. எனவே இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு  அல்லாஹ் வழங்கியுள்ள ஒரு மிகப் பெரும் பாதுகாப்பு பகுத்தறிவே. இதையிழப்பது போன்ற பெரிய குற்றமொன்று கிடையவே கிடையாது. சாஸ்த்திரகாரர்களுக்குப் பயந்தவர்கள் கூட நம்மில் இருக்கிறார்கள். ஆகவே நாம் இது விடயத்தில் மிக அவதானமாகவிருக்க வேண்டும்.  எனவே போலியானவற்றுக்காக நாம் நமது பகுத்தறிவை இழந்து விடக்கூடாது. ஆகவே மேற்கண்டவைகளை யாரேனும் சூனியமென்று கூறினால் அது மிகப்பெரும் தவறாகும்.
அதற்காக நமது சிந்தனைக்குப்படாதவற்றை நம்பக்கூடாது என்று பொருளல்ல. நெப்தியூன் என்று ஒரு கோளுண்டு என்று ஒருவர் சொன்னால் ஒரு சாதாரண கூலித்தொழிலாளி என் சிந்தனைக்கு விளங்கவில்லை. அதை நான் காணவில்லை. எனவே அதை நான் நம்பமாட்டேன் என்று அவர் கூறிவிடக்கூடாது. அதை ஆராய்ந்து படித்துத் தெரிந்த பின்புதான் நம்புவேன் என்று கூறுவதுதான் அறிவுபூர்வமானதாகும்.
3. சூனியமென்பது மார்க்க விவகாரமா? உலக விவகாரமா?
சூனியத்துக்கென்று தனியான ஒரு வரலாறுண்டு. சூனியம் உலகத்தில் இஸ்லாம் பரவாமல் இருக்க பரப்பிவிட்ட தவறான அறிமுகங்கள் பல. அதை அடிப்படையிலிருந்து பார்ப்போம். அதற்கு முன்பு சூனியமென்பது மார்க்க விவகாரமா? உலக விவகாரமா? என்பதை நன்கு அறியவேண்டும். தொழுகையில் ஐந்து ரக்அத்துக்கள் உண்டா? இல்லையா? என்றால் அது மார்;க்க விடயமாகும். ஸகாத் என்பது உண்டா? இல்லையா? என்றால் அது மார்க்க விடயமாகும்.
ஆடு எனும் படைப்பு உண்டா? இல்லையா? என்றால் அது உலக விடயமாகும். மாடு எனும் படைப்பு உண்டா? இல்லையா? என்றால் அது உலக விடயமாகும். பூமி சூரியனைச் சுற்றுகின்றதா? சூரியன் பூமியைச் சுற்றுகின்றதா? என்றால் அது உலக விடயமாகும். ஆடென்று, மாடென்று ஒரு படைப்பு உலகில் இல்லை என ஒருவர் கூறினால் அதனால் அவர் காபிராகிவிடமாட்டார். அதே நேரம் தொழுகை என்றொன்றில்லை என்று ஒருவர் கூறினால் அவர் காபிராகிவிடுவார். எனவே உலக விடயமொன்றை ஒருவர் இல்லையென்று கூறினால் அவர் காபிராகிடமாட்டார். மார்க்க விடயமொன்றை ஒருவர் இல்லையென்று கூறினால் அவர் காபிராகிவிடுவார்;.
சூனியம் ஒர் உலக விடயம்தானே அதை இல்லையென்று சொல்வதால் எவ்வாறு ஒருவர் எவ்வாறு மார்க்க விடயத்தில் தலையிட்டவராக ஆகுவார்? என்று ஒருவர் கேட்டால், ஆடென்று ஒன்றில்லையென ஒருவர் கூறினால் அவரைக்; காபிர் என்போம். ஏனெனில் நாற்பது ஆடு இருந்தால் ஓராடு ஸகாத் கொடுக்க வேண்டும் என்பது நபிமொழி. ஆகவே ஆடில்லையென்று சொல்வதால் ஸகாத் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டு விடும். மாடில்லைனெ;று சொல்பவருக்கும் இதே பதில்தான். அவ்வாறுதான் பன்றி என்றொன்றில்லையென்று ஒருவர் கூறினால் அவரையும் காபிர்; என்போம். ஏனெனில் அல்லாஹ்வும் அவன் தூதரும் பன்றியைப்பற்றிக் கூறியிருக்கின்றார்கள். இந்த அடிப்படையில்தான் சூனியம் மார்க்கத்தோடு தொடர்பு படுகின்றது.
மனிதனுக்கும் ஜின்னுக்கும் தொடர்புண்டா என்றால் அது உலக விடயமாகும். மார்க்கத்தில் அது பற்றி ஏதாவது சொல்லப்பட்டிருந்தால் அது மார்க்க விடயமாகின்றது. சூரியன் நிற்கின்றதா சுழல்கின்றதா எனில் அது உலக விடயமே. எப்போது அது மார்க்க விடயமாகின்றது என்றால் அல்லாஹ் அல்குர்ஆனில் சூரியன் தனது தங்குமிடத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றது என்று கூறுகின்றான். யாராவது இதை மறுத்தால் அவன் இஸ்லாத்திலிருந்து வெளியேறிவிடுவான். எனவே வஹியாகக் கூறப்பட்ட ஒரு விடயத்தில் தலையிடுவது, மாற்று விளக்கம் கொடுப்பது போன்றவை வழிகேடுகளுக்கும், இறை நிராகரிப்புக்கு இட்டுச்செல்லும் என்பதை  நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இந்த அடிப்படையிலேயே சூனியம் மார்க்கப் பிரச்சினையாகின்றது.
4. தெரிந்து புரிந்தவைகளும் தெரியாமல் புரியாதவைகளும்
உலகில் பலருக்கும் தெரிந்த விடயங்களை எவரும் இல்லையென்று கூறுவதில்லை. எல்லோருக்கும் தெரியாத, புரியாத சில விடயங்களும் உலகில் காணப்படுகின்றன. தனக்குத் தெரியாது என்பதற்காக அப்பொருள் இல்லையென்று கூறமுடியாது. எனவே நமது அறிவுக்குப்படாதவற்றையெல்லாம் இல்லiயெனக் கூறிவிடக்கூடாது. இவை பற்றி எனக்குத்தெரியாது ஆனால் இருப்பதாகச் சொல்கிறார்கள் எனக்கூறுவதே பொருத்தமாகும்.
சிலருக்கு மட்டுமே தெரியக்கூடிய சில அறிவுகளும் உலகில் இருக்கவே செய்கின்றன. நாம் ஒரு வைத்தியரிடம் செல்கின்றோம் அவர் சில மாத்திரைகளை நமக்குத் தருகின்றார் உடனே இவை எங்கு தயாரிக்கப்பட்டவை என்று நாம் அவரிடம் கேட்கப்போவதில்லை. ஏனெனில் இதுவிடயத்தில் நம்மை விட அவருக்கே முழுமையாகத்தெரியும் என்பதால் நாம் அவ்வாறு கேட்பதில்லை. ஆபிரிக்காவில் ஒரு மரமுண்டு இரத்த வாடையடித்தால் அவ்விடத்தை நோக்கி அம்மரத்தின் கிளைகள் நகரும் என்று ஒருவர் கூறினால் நாம் சிரித்து விடக்கூடாது.
நமக்கு இது தெரியாது போனாலும் தாவரவியல் ஆய்வு செய்வோருக்கு இது பற்றித்தெரிந்திருக்கும் என்பதை உணரவேண்டும். இது போன்ற ஒன்றே சூனியம். பகுத்தறிவு ரீதியான சம்பந்தம் அந்த தீய சக்திக்கு உண்டு எனினும் புரிந்துகொள்ளக் கடிமானது. உலக மோகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றே சூனியம்.
5. சூனியமும் உலகமோகமும்
ஈமான் இருந்தாலேயே இந்த உலகமோக நோயிலிருந்து தப்பலாம் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ .الحديد : 20

உங்களுக்கு மத்தியில் பெருமையடித்துக் கொள்வதும், அதிகம் குழந்தைகள் பெறவேண்டும், அதிகம் சொத்து செல்வங்களோடு வாழவேண்டும் என்பதுதான் இந்த உலக வாழ்க்கையாகும் என்று குறிப்பிடுகின்றான். (ஹதீத்:20)
ஈமானுள்ளவர்களுக்கு இதிலிருந்து தப்பிக்க முடியும் என்று கூறிவிட்டு ஈமானிருந்தாலும் இதிலிருந்து தப்பமுடியாமற்போகலாம் என்பதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.
وَلَوْلَا أَنْ يَكُونَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً لَجَعَلْنَا لِمَنْ يَكْفُرُ بِالرَّحْمَنِ لِبُيُوتِهِمْ سُقُفًا مِنْ فِضَّةٍ .الزخرف 33
"இறை நிராகரிப்பாளர்களுக்கு வெள்ளியினாலான கூரைகளை அமைத்துக் கொடுத்திருப்போமானால் முழு மனித சமுதாயமும் ஒரே சமூகமாக மாறியிருப்பார்கள்" என்று கூறுகின்றான். அதாவது காபிர்களுக்கு வெள்ளியால் கூரை போட்டுக் கொடுத்திருந்தால் முஸ்லிம்களும் காபிர்களாகியிருப்பார்கள். காபிர்களிலும் ஏழைகளிருப்பதால்தான் அவ்வாறேட்படாதிருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.
நம்மில் பலர் மேற்கு நாடுகளின் அபிவிருத்திகளைப்பார்த்து பிரமித்து முஸ்லிம் நாடுகளைக் குறைத்து மதிப்பிடுவதைப் பார்க்கின்றோம். மேற்கு நாடுகளின் பொருளாதாரத்தை வைத்து ஈமானைத் தரக்குறைவாகப் பார்க்கின்றனர். ஆகவே உலக மோகமென்பது இயல்பானது இறை நம்பிக்கை மூலமே இதைக்கட்டுப்படுத்தலாம். இறை நம்பிக்கை இல்லாது போனால் இது விடயத்தில் மனிதன் படுமோசமானவனாக மாறிடுவான். சிலரிடம் நல்லது, கெட்டது என்ற இரு குணங்களும் காணப்படும். ஆனால் சிலரின் உள்ளம் இறந்ததாகக் காணப்படுகின்றது. அல்லாஹ் இதை வரண்ட  உள்ளம் என்று செல்கின்றான். இத்தகையோர் உலக மோகத்துக்காக எதையும் செய்வார்கள். உலகை தான் அடைய வேண்டும் என்ற வேட்கைதான் எதையும் செய்யும் துணிவை அவனுக்கு ஏற்படுத்தியது எனலாம். உலகம் தேவையென்ற  முடிவுக்கு ஒருவன் வந்துவிட்டால் தன்னையிழந்தாவது அதையடைய முடியுமெனில் அதையும் அவன் செய்வான்.
மனிதனைப் பொருத்தமட்;டில் ஆசைக்குக் கட்டுப்போடாதவிடத்து எதையும் செய்யும் படுமோசமான நிலைக்கு அவன் ஆகிவிடுவான். சூனியத்தின்பால் மக்கள் நாட்டம் கொள்ள செய்தான் பயன்படுத்திய மிகப்பெரும் ஆயுதமே உலகமோகமாகும். நான் விளக்கப் போகும் வரலாறு நெடுகிலும் காணப்பட்ட சூனியம் சூனியக்காரர்களின் செயல்பாடுகளுக்கும் இதுவே நோக்கமாகும். இந்த நிலையை ஒருவர் அடைந்தால் நல்ல வசதிவாய்ப்புக்களோடு அவருக்கு வாழமுடியுமாயினும் இந்நிலையை அடைவதற்காய் அவர்படும் கொடுமைகள் மிகப்பயங்கரமானதாகும். ஒருவன் சூனியக்காரனாக வேண்டுமெனில் தனது வாழ்க்கையை செய்தானுக்கு அர்ப்பணிக்க வேண்டும். சூனியக்காரனின் தோற்றத்தை வைத்தே அவன் யார் என்பதை முடிவு செய்திடலாம்.
இன்ஷா அல்லாஹ், கட்டுரை தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக