அரபா நோன்பு@1


May 27, 2010
“அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடும் தினத்தன்றுதான் அரபா நோன்பு என்று எந்தவொரு ஹதீஸும் கிடையாது.”
வெளிநாட்டு பிறைத் தகவலை ஏற்க வேண்டும் என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் ஏற்கத்தேவையில்லை என்று கருதுபவர்களுக்கு மத்தியிலும் அரபாவில் ஹாஜிகள் ஒன்று கூடுவதை வைத்தே அரபா தின நோன்பை நோற்க வேண்டும் என்ற ஓர் இஸ்லாமிய அடிப்படையற்ற கருத்து நிலவி வருகிறது. இச்சிந்தனை காரணமாக தொலைக்காட்சியிலும் வானொலியிலும் அரபா மைதானத்தின் நடக்கின்ற வணக்கவழிபாடுகள் ஒலி, ஒளி பரப்பப்படுகின்ற போது தாங்கள் ஏதோ மார்க்கத்திற்கு முரணான காரியத்தை செய்தது போன்று நோன்பு நோற்காதவர்களும் சவூதிற்கு முன்னர் வேறு நாடுகளில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்டும் அதை ஏற்காமல் அரபா ஒன்று கூடலை மட்டுமே வைத்து துல்ஹிஜ்ஜாவை தீர்மானிக்கும் வெளிநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கக் கூடிய சகோதரர்களும் சங்கடப்படுகின்றனர். உண்மையில் இது ஒரு நூதனமான சிந்தனையாகும். சில சகோதரர்கள் அவ்வாறு ஒரு ஹதீஸ் இருப்பதாகவும் கூறிவருகின்றனர். பின்வரும் விடயங்களைப் படிப்பவர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வார்கள்.
1 – துல்ஹிஜ்ஜா மாதத்தில் வரும் உழ்ஹிய்யா பெருநாளை பத்து வருடங்களாக எவ்வாறு தீர்மானித்தார்கள்?
நபியவர்களும் தோழர்களும் மதீனாவில் பத்து வருடங்களாக உழ்ஹிய்யாப் பெருநாளை கொண்டாடியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாதம் ஒவ்வொன்றும் பிறை தென்பட்ட பின்னரே ஆரம்பிக்கப்படுவது போல் துல்ஹிஜ்ஜா மாதமும் அவ்வாறே ஆரம்பிக்கப்படுவது அனைவரும் அறிந்த விடயம். துல்ஹிஜ்ஜா மாதத்தின் பத்தாவது நாளிலேதான் உழ்ஹிய்யாப் பெருநாள் இடம்பெறும். அவ்வாறாயின் மதீனாவில் துல்ஹிஜ்ஜா பிறை தென்பட்ட மறுநாளே துல்ஹிஜ்ஜா மாதத்தின் முதல் நாள் ஆரம்பித்துவிடும் அதன் பத்தாவது நாள் பெருநாளென்று தீர்மானிக்கப்பட்டுவிடும். அதற்கு முந்திய நாள் நபித்தோழர்கள் நோன்பும் நோற்பார்கள். அந்த நோன்பும் அரபா ஒன்று கூடலும் ஒன்பதாம் நாளன்று வருவதால் அரபா தின நோன்பு என்று அழைக்கப்டுகிறது. அன்றைய தினம் பற்றி நபியவர்களோ நபித்தோழர்களோ அலட்டிக்கொள்ளவேயில்லை.
2 – அரபாவில் ஒன்பதாம் தினமன்று கூடும் வழமை வரும்முன்னிருந்தே ஒன்பது வருடங்களாய் மதீனாவில் அரபா தின நோன்பு அனுஷ்டிக்கப்பட்டது எவ்வாறு?
நபியவர்கள் வழமையாக ஒன்பதாம் தினமன்று மதீனாவில் நோன்பு நோற்பார்கள் அக்காலப்பகுதியில் ஒன்பதாம் தினமன்று அரபாவில் கூடும் வழமை காணப்படவில்லை. அவ்வாறிருக்க எவ்வாறு நாம் அரபாவின் ஒன்று கூடலை வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று சொல்லமுடியும்? நபித்தோழர்கள் பிறையை அடிப்படையாக வைத்துத்தான் ஒன்பதாம் தின நோன்பை தீர்மானித்தார்களே அன்றி அரபா ஒன்று கூடலை வைத்தல்ல.
3 – அரபாவில் ஒன்பதாம் தினமல்லாமல் வேறு தினமொன்றில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலியாக்காலம் தொட்டே காணப்பட்டது.
சில சகோதரர்கள் நாம் மேற்குறிப்பிட்ட இருவினாக்களையும் தொடுக்கும்போது ‘அரபாவில் ஒன்று கூடி ஹஜ் கிரியைகளைச் செய்யும் வழமையே இஸ்லாம் மக்காவை வெற்றி கொண்ட பின்னர்தான் எனவே நபியவர்கள் அதற்கு முன்னர் மதீனாவின் பிறையை அடிப்படையாக வைத்தும் மக்காவை வெற்றி கொண்ட பின்னர் அரபாதின ஒன்று கூடலை வைத்தும் நோன்பைத் தீர்மானித்திருப்பார்கள்.’ என பதிலளிக்கிறார்கள். இது இருவகையில் தவறாகும்-
எனது காணாமல் போன ஒரு ஒட்டகத்தை அரபாதினமன்று நான் தேடிச்சென்றேன். அச்சமயம் அரபாவில் நபியவர்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு மார்க்கத்தில் தீவிர உணர்வுடைய குறைஷிக் குலத்தைச் சேர்ந்த இவர் இங்கே எவ்வாறு? ஏன்று எனக்குள் கூறிக்கொண்டேன். அறிவிப்பவர்:- ஜுபைர் இப்னு முத்இம்
(ஆதாரம்:- புகாரி 1664)
இது நபிப்பட்டம் கிடைப்பதற்கு முன்னர் நடந்த சம்பவமாகும். கஃபாவை ஹஜ்ஜு செய்யும் வழமை அரபிகளது தொன்று தொட்ட வழமையாகும். ஆனாலும் குறைஷிக் குலத்தவர்கள் அரபாவில் ஒன்று கூடவேண்டிய தினமன்று கஃபாவிலேயே இருப்பார்கள். அவர்கள் அரபாவிற்குச் செல்வது கஃபாவின் கண்ணியத்தை இழக்கச்செய்வது போன்றாகும் எனக்கருதினார்கள். அரபாவில் இருந்து அனைவரும் முஸ்தலிபாவிற்குச் செல்லும் போது குறைஷிகளும் அங்கு செல்வார்கள். ஆனால் ஏனைய கோத்திரத்தவர்கள் அரபாவிற்கு வந்தே முஸ்தலிபாவிற்குச் செல்வார்கள்.இதுவே ஜாஹிலீய வழமை. அதற்கு மாற்றமாக குறைஷி வம்சத்தைச் சேர்ந்த நபியவர்கள் அரபாவில் இருப்பதைக்கண்டு ஆச்சரியப்பட்டே ஜுபைர் இப்னு முத்இம் அவ்வாறு கூறுகிறார்.
(பத்ஹுல் பாரீ 3:603 604)
எனவே அரபாவில் ஒன்று கூடும் வழமை ஜாஹிலீய காலம் தொட்டே நடந்துவரும் ஒரு செயலாகும். இஸ்லாம் வந்த பின்னர் ஏற்பட்ட வழமையல்ல. இரண்டாவது:- ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு இதாப் என்ற நபித்தோழரும் 9 ஆம் ஆண்டு அபூபக்ரும் இன்னும் சில நபித்தோழர்களும் ஹஜ் செய்துள்ளார்கள். அவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 ஆம் தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னரே இவ்விருவரின் ஹஜ்ஜும் நிகழ்கிறது. ஆவர்களது அரபா ஒன்று கூடலை வைத்தும் நபியவர்கள் 9 தின நோன்பைத் தீர்மானிக்கவில்லை. மக்கா வெற்றியின் பின்னருங் கூட நபியவர்கள் அரபா ஒன்று கூடலை கவனிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது. அபூ பக்ர் (ரழி) ஹஜ் செய்ய வந்தவுடன் செய்தியை மக்காவிற்கு அனுப்பியிருக்கலாமே என்று யூகிக்கவும் முடியாது.
ஏனெனில்:-
4 – அபூ பக்ர் (ரழி) அவர்களது ஹஜ் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.
ஜாஹிலீயாக்கால மக்கள் காலக்கணிப்பீட்டு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்திருந்தார்கள். இதனால் சந்திர மாதத்தின் ஒழுங்கும் தூய்மையும் குழைந்து போயிருந்தது. பருவமாற்றங்களுடன் ஒத்துவருவதற்காக 3 வருடங்களிற்கு ஒருமுறை 1 மாதத்தை அதிகரித்து கபீஸ் என்று பெயர் சூட்டிருந்தார்கள். மாதத்தைத் தீர்மானித்துச் சொல்லும் கலம்மஸ் என்று அழைக்கப்படக் கூடிய நபரின் மூலம் மாதங்களை உரிய இடத்தை விட்டும் பிற்படுத்தியும் முற்படுத்தியும் மாற்றம் செய்தார்கள். இறுதி உரையின் போதே நபியவர்கள இதனை சரி செய்தார்கள். இதனை எச்சரித்து சரியான காலக்கணிப்பு முறையை கடைப்பிடிக்குமாறு குர்ஆன் வசனமும் இறங்கியது. ஆகையால் அவ்விருவருடைய ஹஜ்ஜும் துல்கஃதாவிலேயே இடம்பெற்றது.
(மஜ்முஃ பதாவா 25:14)
அபூ பக்ர் (ரழி) அவர்களுடைய ஹஜ் இத்திருத்தத்திற்கு முன் இடம்பெற்றதால் துல்கஃதாவிலே நடந்தது. நிலமை இவ்வாறிருக்க எவ்வாறு நபியவர்கள் அவர்களது ஒன்று கூடலை வைத்து அரபா நோன்பைத் தீர்மானித்ததாய்ச் சொல்ல முடியும்?
5 – சொந்த நாட்டில் எடுக்கப்படும் தீர்மானப்படியே துல் ஹிஜ்ஜா 9 ஆம் நாள் அரபாதின நோன்பு நோற்கப்படவேண்டும்.
இமாம் இப்னு தைமியாவின் வாதம்:-
ஒரு பிரதேசத்தில் சிலர் துல் ஹிஜ்ஜா மாதப்பிறையைக் கண்டு அப்பிரதேசத்தில் தீர்ப்பளிப்பளிப்பவரிடம் அது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் வெளித்தோற்றத்தில் 9 ஆம் நாளாகவும் உண்மையிலே 10 ஆம் நாளாகவும் இருக்கக்கூடிய அந்நாளில் நோன்பு நோற்கலாமா? (என்று இமாம் இப்னு தைமியா வினவப்பட்ட பொழுது இவ்வாறு பதிலளித்தார்) ஆம் உண்மையில் அது 10 ஆம் நாளாக இருந்தாலுங்கூட மக்களிடத்தில் 9 ஆம் நாள் என்று தீர்மானிக்கப்பட்ட நாளிலே அவர்கள் நோன்பு நோற்கலாம்
(மஜ்முஃ பதாவா 25:202)
நாம் மேற்குறிப்பிட்டவையாகவும் 9 ஆம் தினம் எதுவோ அதைவைத்துத்தான் தீர்மானிக்கப்படவேண்டுமே தவிர அரபாவில் ஒன்று கூடுவதை வைத்தல்ல என்பதை விளக்குகின்றன. எனவே பிறநாட்டுப் பிறைத்தகவலை ஏற்கலாம் என்று சொல்லக்கூடிய சகோதரர்கள் துல்ஹிஜ்ஜா மாதத்து பிறைத் தகவல் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளவேண்டும். சவூதியை மட்டும் அடிப்படையாக வைத்து அரபாவைத் தீர்மானிப்பது தவறாகும். பிறநாட்டு பிறைத்தகவலை ஏற்றுக்கொள்ளலாமா? அறிஞர்கள் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? போன்றவற்றை அறிய அது சம்பந்தமான எங்கள் வெளியீட்டைப் பார்வையிடவும்.
அல்லாஹ் நம்மனைவரதும் நல்லமல்களையும் ஏற்றுக்கொள்ளப்போதுமானவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001