ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

நட்புடன் வாழ முத்தான மூன்று குணங்கள்


o நட்பு என்பது விட்டுக் கொடுப்பது.
o நட்பு என்பது தியாகம் செய்வது.
o நட்பு என்பது இனம் புரியாத அன்பு.
மனிதர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவற்றை அவன் நாடியவாறு புரட்டிப் போடுகிறான். அவன் உள்ளங்களை ஆளும் அரசனாக இருக்கிறான். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய இறைவனை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.]
"மேலும், (முஃமின்களாகிய) அவர்கள் உள்ளங்களுக்கிடையில் (அன்பின்) பிணைப்பை உண்டாக்கினான்; பூமியிலுள்ள (செல்வங்கள்) அனைத்தையும் நீர் செலவு செய்த போதிலும், அவர்கள் உள்ளங்களுக்கிடையே அத்தகைய (அன்பின்) பிணைப்பை உண்டாக்கியிருக்க முடியாது - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே அப்பிணைப்பை ஏற்படுத்தியுள்ளான்; மெய்யாகவே அவன் மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்." (அல்குர்ஆன்: 8 : 63)
அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
"உறவு (ரஹீம்) என்பதற்கு அளவிலா அருளாலன்(ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். ஆகவே, இறைவன் (உறவை நோக்கி) "உன்னுடன் ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுவேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக்கொள்வேன்" என்று கூறினான். (நூல்: புகாரி)

இரண்டு உள்ளங்களை ஒன்று சேர்ப்பது அல்லாஹ்வின் கையில் உள்ளது. உலகையே விலை பேசினாலும் இரண்டு உள்ளங்களை ஒன்று சேர்க்க முடியாது. அல்லாஹ் ஒன்று சேர்த்த இரண்டு உள்ளங்களை உலகையே விலை பேசினாலும் பிரிக்க நினைத்தாலும் பிரிக்கவே முடியாது.

மனிதர்களின் உள்ளங்கள் அல்லாஹ்வின் கையில் உள்ளது. அவற்றை அவன் நாடியவாறு புரட்டிப் போடுகிறான். அவன் உள்ளங்களை ஆளும் அரசனாக இருக்கிறான். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய இறைவனை அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.
எனினும், நாம் உலகில் வாழும் காலமெல்லாம் முடிந்த அளவு பிறருடன் நட்பாக வாழ பழகிக்கொள்ள வேண்டும்.
நட்பு என்பது மூன்றெழுத்து. அதில் மூன்று தத்துவங்கள்அடங்கியுள்ளன.
1. நட்பு என்பது விட்டுக் கொடுப்பது :
விட்டுக்கொடுப்பவர்கள் வாழ்க்கையில் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போனவர்கள் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்ததில்லை. விட்டுக்கொடுத்தவர்கள் நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் உண்டு. விட்டுக்கொடுக்காதவர்கள் நிம்மதியாக வாழ்ந்த சரித்திரம் உண்டா? இல்லையே! ஆனால், அழிந்த சரித்திரம் வரலாறு நெடுகிலும் உண்டு. உண்மையான நட்பு "விட்டுக்கொடுப்பதில்தான்" இருக்கிறது.
2. நட்பு என்பது தியாகம் செய்வது :
வாழ்க்கையில் (உயர்ந்த பதவி) ஒன்றை அடைய வேண்டும் என்றால் (நாம் நேசிக்கும்) ஒன்றை நட்புக்காக தியாகம் செய்துதான் ஆக வேண்டும். இதற்காக யாரும் சுயமரியாதையை இழக்க வேண்டாம். தலைக்கணத்தையும், தற்பெருமையையும் தள்ளி வைத்தாலே போதும், நட்பு கொடிகட்டிப் பறக்கும். தியாகம் செய்யாமல் நட்புடன் வாழவே முடியாது. அப்படி வாழ ஆசைப்படுவோமேயானால் நட்பு கொடிகட்டிப்பறக்காது, மாறாக கொடியைவிட்டே பறந்துவிடும். உண்மையான நட்பு "தியாகம் செய்வதில்தான்" இருக்கிறது.
3. நட்பு என்பது இனம் புரியாத அன்பு :
நட்பு என்பது அழகுக்காகவோ, ஆடம்பரத்துக்காகவோ, பணத்துக்காகவோ, பட்டத்துக்காகவோ, சொத்துக்காகவோ, சொந்தத்துக்காகவோ, வமிசத்துக்காகவோ, சந்தர்ப்பத்திற்காகவோ இருக்கக்கூடாது. அது ஓர் இனம் புரியாத அன்புக்காகவே மட்டும் இருக்க வேண்டும். அன்பு இல்லாத நட்பு அழிந்துவிடும். அன்புக்காகவே மட்டும் உள்ள நட்பு உயிர்மூச்சு உள்ளவரை வாழும்.. உண்மையான நட்பு "இனம் புரியாத அன்பு செலுத்துவதில்தான்" உள்ளது.

"இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன." (அல்குர்ஆன் 30 : 21)

ஹளரத் அபூ மூஸா அல் அஷ் அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் :
"இறைநம்பிக்கையாளர்கள் (ஒருவருக்கொருவர் நட்பு வைத்து ஒத்துழைக்கும் விஷயத்தில்) ஒரு கட்டிடத்தைப் போன்றவர்கள் ஆவர். கட்டிடத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலு சேர்க்கிறது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். பிறகு தம் கை விரல்களை ஒன்றோடொன்று கோர்த்துக் காண்பித்தார்கள். (நூல்: புகாரி 6026)
ஹளரத் நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப்போன்று நுஃமானே! நீர் காண்பீர். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமுற்றால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 6011)
ஹளரத் அபூ ஹுரைரா ரளி) அவர்கள் அறிவிப்பதாவது :
"ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கண்ணாடியைப் போன்றவர் ஆவார்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவூது)

`நாம் காட்டும் நட்பில் மேற்கூறப்பட்ட மூன்று குணங்களும் இருந்தால்தான் அது உண்மையான நட்பாகவும், பரிபூரண நட்பாகவும் அமையும். இம்மூன்று குணங்களும் இல்லையென்றால், அது போலியான நட்பாகவும் சந்தர்ப்பவாத நட்பாகவும் அமைந்துவிடும்.
குடும்ப உறவு, கூட்டுறவு, வெளியுறவு இவற்றுக்கெல்லாம் மேலாக மனித உறவுகள் நீடித்து, நிலைத்திருக்க வேண்டுமானால், நட்பு எனும் இலக்கணத்துக்கு சொல்லப்பட்ட மூன்று தத்துவ குணங்களையும் வாழ்வில் செயல்படுத்த வேண்டும். அவற்றை செயல்படுத்தாத காரணத்தினால்தன் குடும்ப உறவில் விரிசல் ஏற்படுகிறது. கூட்டுறவில் பகைமை ஏற்படுகிறது. சமய உறவில் காழ்ப்புணர்ச்சி ஏற்படுகிறது,. வெளியுறவில் பதட்டம் ஏற்படுகிறது இவற்றுக்கெல்லாம் மேலாக மனித உறவுகளே சிதைந்து போய்விடுகின்றன.
நாம் நமது சுயநலத்திற்காக வாழ ஆசைப்படக்கூடாது. பிறர் நலத்திற்காக வாழ முயற்சி செய்ய வேண்டும். நாம் வாழ நட்பை அழிக்கக்கக்கூடாது. நட்பு வாழ்வதற்கும், பிறருடன் நட்புடன் வாழ்வதற்கும் நாம் விட்டுக்கொடுப்போம். தியாகம் செய்வோம். இனம் புரியாத அன்பு செலுத்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக