புதன், மார்ச் 28, 2012

மனைவியிடம் கணவன் இப்படி இருக்கக்கூடாது...பெண் ஒருத்திக்கு தேவைப்படுவது, கணவனின் துன்புறுத்தலுக்குப் பிறகு தன் உள்ளம் எவ்வளவு புண்பட்டிருக்கிறது என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான்.
கடுஞ்சொற்களின் பாதிப்பு பெண்ணுக்குள் ஆண்டுக்கணக்கில் தங்கிவிடும். கணவன் "என்னை மன்னித்துவிடு" என்று சொல்லும் சொற்கள் மனைவிக்கு மிகவும் பிடித்தமானவையாகும். அவற்றை விரும்பிக் கேட்பாள்.
கணவன் "என்னை நீ மன்னிப்பாயா?" என்று கேட்பது தாம்பத்ய உறவில் மனைவிக்குள்ள பங்கை உணர்ந்திருப்பதன் வெளிப்பாடாகும். வெறும் "சாரி" இணக்கத்தை ஏற்படுத்திவிடாது. அது மனத்தின் அடி ஆழத்திலிருந்து வெளிப்பட வேண்டும்.
கணவன் தன் மனைவியின் மனத்தை எவ்வறெல்லாம் புண்படுத்த முடிகிறது, பாருங்கள்! தான் எப்படிப் புண்படுத்தினோம் என்பதைப் புரிந்து கொள்கிற கணவன், தன் தவற்றைப் போக்கி உறவைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
திருமணமாகி 5 ஆண்டுகளுக்குப்பிறகும் கணவன் மனைவியரிடையே தொடர்ந்து வேற்றுமை நிலவுமாயின் கணவனுக்கு அவளிடம் உண்மையான அன்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.
தாம்பத்யத்தில் பலகீனம் ஏற்பட்டிருந்தால் அதில் முக்கிய பங்கு ஆண்களிடம் தான்.
"என்ன சார் இது! எல்லாப் பழியும் என் தலை மீதா?" என்று கேட்பீர்கள். மோசமான நிலைமைகளுக்கு முழுக்க முழுக்க ஆண்களே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் உடல் அசெளகரியத்தாலோ, கடுமையான வேலைப்பளுவால், தற்காலிகமாய் கலக்கமேற்படுத்தும் சம்பவங்களோ இருவருக்குள் சச்சரவு ஏற்பட்டிருக்கலாம். அவள் தன் கணவனிடம் எதிர்மறையாய் பிரதிபலித்திருக்கலாம். இப்படி, எப்போதாவது தோன்றும் பிரச்சனைகளுக்குக் கணவனைக் குற்றம் சொல்லமுடியாதுதான். ஆனால், தங்கள் உறவில் ஏற்படும் ஒவ்வாமைகளைக் அவன் அகற்ற முடியும். மனைவியின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிக்கொண்டிருந்தால் போதும்.
தம் கணவர் தவற்றை ஒப்புக்கொள்வதில்லை, மிகவும் அகம்பாவத்துடன் இருந்து விடுகிறார் என்கிற குறை பெண்களுக்குண்டு.
"அவள் மனத்தை நான் எந்த விதத்தில் புண்படுத்தினேன் என்று பொறுமையாக அவளை சொல்லச்சொல்லுங்கள், நான் ஒப்புக்கொள்ளத் தயார்" என்பது ஆண்களின் தன்னிலை விளக்கம்.
உங்கள் மனைவியை நோகடிக்கிற போதெல்லாம் உங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்ளுங்கள்; பிரச்சனை தீர்ந்தது.
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் "செக்-லிஸ்ட்" கணவன்-மனைவி இருவருக்கும் பயன்படக்கூடியதுதான்
o மனைவியை அலட்சியப்படுத்துவது.
o அவள் கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமலிருப்பது.
o அவளைவிட மற்றவ்ர்கள் மீது அதிகம் கவனம் செலுத்துவது.
o அவள் எதை முக்கியமாகக் கருதுவாளோ அதை புரிந்து கொள்ளாதிருப்பது.
o அவளுடன் பேசாமலிருப்பது அல்லது அவள் பேச்சில் ஆர்வமற்றிருப்பது.
o அவளுக்காக நேரம் ஒதுக்காமலிருப்பது.
o அவளைப்பற்றி விஷமத்தனமாய் விமர்சிப்பது.
o அடுத்தவர் முன்னிலையில் அவளை இழிவு படுத்துவது.
o இரக்கமற்ற கண்டிப்புடன் நடந்துகொள்வது.
o சண்டையிடுவது.
o ஒரு சந்தர்ப்பம் கொடுக்காமலே நிந்திப்பது.
o ஆபாச வார்த்தைகளால் திட்டுவது. (இது அறவே கூடாது)
o நொந்திருக்கும் நிலையிலும் மேலும் நோகடிப்பது.
o அவளை ஊக்குவிக்காமலோ, மென்மையாய் நடத்தாமலோ அறிவுரை வழங்குவது.
o அடுத்த பெண்ணின் அழகை வியப்பது; அவர்களுடன் மனைவியை ஒப்பிடுவது.
o அவள் குடும்பத்தினரையும், உறவினரையும் மட்டம் தட்டிப்பேசுவது.
o எந்தக் குற்றமும் செய்யாத நிலையில் அவளைத் திருத்தவோ, தண்டிக்கவோ முயல்வது.
o தன் நன்மைக்காக அவள் உழைத்திருந்தும் அதைப் பாராட்டாமல் இருப்பது.
o அவள் தேவைகளைக் கவனியாமல் இருப்பது.
o நன்றியில்லாமல் நடந்துகொள்வது.
o அவளை நம்பாமல் இருப்பது.
o அவள் சுயவளர்ச்சியில் அக்கறை காட்டாதிருப்பது.
o இரட்டை அளவீடுகள் வைத்திருப்பது. (அவள் செய்தால் தவ்று, தான் செய்தால் சரி)
o தன் நேசத்தை, அன்பை அவளிடம் வெளிப்படுத்தாமலிருப்பது.
o கர்வத்துடனும் ஆணவத்துடனும் நடந்துகொள்வது.
o விருந்து போன்ற வைபவங்களுக்கு அவளை அழைத்துச்செல்லாமல் புறக்கணிப்பது.
o சாப்பிடும் வேளையில் கண்ணியமற்ற முறையில் நடந்துகொள்வது.
o தன் தவறுகளை கணவன் ஒப்புக்கொள்ள மறுப்பது.
o அவளின் பெண்மைக்குணங்களை மிகவும் கீழ்மைப்படுத்திப் பேசுவது.
o பணத்தைத் தாறுமாறாய்ச் செலவழித்துக் குடும்பத்தைக் கடனில் ஆழ்த்துவது.
o தங்கள் வாழ்வின் நினைவு கூரத்தக்க நாட்களை மறந்து விடுவது.
o குடிபோதை போன்ற விரும்பத்தகாத பழக்கங்களுக்கு அடிமையாவது.
o எதிர்காலத் திட்டங்களில் கடைசிவரை மனைவியை சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது.
o தன் தோல்விகளுக்கு மனைவியின் மீது குற்றம் சுமத்துவது.
o அவள் வீட்டு வேலைகளைக்கஷ்டப்பட்டு செய்து கொண்டிருக்கும்போது ஒத்தாசை செய்யாமல் இருப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக