புதன், மார்ச் 28, 2012

நபி (ஸல்) பலதார மணம் புரிந்தது ஏன்?

நபி (ஸல்) நல்ல உடல் வலிமையும் திடகாத்திரமும் கொண்ட இளமைக் காலத்தில் தன்னை விட 15 வயது அதிகமான கதீஜா (ரலி) அவர்களுடனே ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் வாழ்ந்தார்கள். கதீஜா (ரலி) மரணமான பின்பே ஸவ்தாவை மணமுடித்தார்கள். இவரும் வயதில் நபி (ஸல்) அவர்களை விட மூத்தவராக இருந்தார். அதற்குப் பின் தனது வயோதிக காலத்தில்தான் பல திருமணங்களைச் செய்தார்கள். இதை நன்கு சிந்திப்பவர் “நபி (ஸல்) பல திருமணங் களை செய்தது, அதிக ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற் காகத்தான்” என்று கூறவே முடியாது. மாறாக, அதற்குப் பல உயர்ந்த உன்னத நோக்கங்கள் இருந்திருக்க வேண்டும் என அறியலாம்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷாவையும், உமர் (ரலி) அவர்களின் மகள் ஹஃப்ஸாவையும் நபி (ஸல்) மணமுடித்து அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவருடனும் உறவை பலப்படுத்திக் கொண்டார்கள். இவ்வாறு அலீ (ரலி) அவர்களுக்குத் தனது மகள் ஃபாத்திமாவையும், உஸ்மான் (ரலி) அவர்களுக்குத் தங்களது மகள்கள் ருகைய்யா பின்னர் உம்மு குல்தூமையும் மணமுடித்துக் கொடுத்து உறவை செம்மைப்படுத்திக் கொண்டார்கள்.
இந்த நால்வரும் இஸ்லாத்தின்  வளர்ச்சிக்காக பல இக்கட்டான நேரங்களில் உடல், பொருள் தியாகங்கள் புரிந்து இஸ்லாமுக்கு வெற்றியைத் தேடித் தந்தவர்கள். எனவே, இந்த நால்வருடன் மக்கள் அனைவரும் நல்லுறவுகளை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என்று இத்திருமணங்கள் மூலம் நபி (ஸல்) முஸ்லிம்களுக்குச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அரபியர்கள் பண்டைக் கால வழக்கப்படி மாமனார் வீட்டு உறவைப் பெரிதும் மதித்தனர். இவ்வுறவு பல மாறுபட்ட குடும்பங்களுக் கிடையில் நெருக்கத்தை உண்டு பண்ணுவதற்குரிய வழிகளில் ஒன்றாக இருந்தது. மாமனார் வீட்டு உறவுகளுடன் சண்டை யிடுவதையும், போர் புரிவதையும் தங்களுக்கு மகா கேவலமாகவும் இழுக்காகவும் கருதினர். பல மாறுபட்ட வமிசங்களிலிருந்து நபி (ஸல்) தங்களது திருமணங்களைச் செய்து அந்த வமிசங்களுக்கிடையே உள்ள பகைமையையும் கோபத்தையும் தணிக்க முயற்சித்தார்கள்.
எடுத்துக்காட்டாக, உம்மு ஸலமா (ரழி) – இவர் மக்ஸூம் கிளையைச் சேர்ந்தவர். அபூ ஜஹ்லும், காலித் இப்னு வலீதும் இதே கிளையைச் சேர்ந்தவர்கள்தான். (அபூஜஹ்ல் பத்ரு போரில் கொல்லப்பட்டான்) நபி (ஸல்) அவர்களைப் பல போர்களில் எதிர்த்து வந்த காலித் இப்னு வலீத் (ரலி) தனது கிளையைச் சேர்ந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) மணமுடித்துக் கொண்டதால் தனது எதிர்ப்பைக் கைவிட்டு குறுகிய காலத்திற்குள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றார்.
இவ்வாறே உம்மு ஹபீபா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். இவர் அபூ ஸுஃப்யானின் மகளாவார். அபூ ஸுஃப்யான் இஸ்லாமுக்கும் முஸ்லிம்களுக்கும் செய்த கொடுமைகள் அனைவரும் அறிந்ததே. உம்மு ஹபீபாவை நபி (ஸல்) திருமணம் செய்தபின் அபூஸுஃப்யான் தனது தீய செயல்களிலிருந்து சற்றே பின்வாங்கினார்.
அதுபோலவே, பனூ நுளைர் மற்றும் பனூ முஸ்தலக் ஆகிய இரு யூத வமிசங்களிலிருந்து ஸஃபிய்யா மற்றும் ஜுவைரியாவை மணமுடித்தார்கள். இதனால் இவ்விரு குலத்தாரும் நபி (ஸல்) அவர்களிடம் பகைமை காட்டிவந்ததை நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமின்றி ஜுவைய்யா (ரழி) அவர்களால் அவர்களது சமூதாயத்திற்குப் பெரும் நன்மைகளும் பலன்களும் கிடைத்தன.
நபி (ஸல்) பெண்ணெடுத்த சமூகத்தார்களை அடிமையாக்கி வைப்பதா? என்று கைதிகளாக இருந்த அவர்களது சமூகத்தின் நூறு குடும்பத்தினரை  நபித்தோழர்கள் உரிமையிட்டார்கள். அவர்களின் உள்ளங்களில் இப்பெரும்  உதவி மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இவ்விதப் பயன்களுக்களுக்கும் மேலாக மற்றுமொரு பயனும் இத்திருமணங்களால் ஏற்படுகின்றது. அதன் விளக்கமாவது:
நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தினர் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் சமூகத்தை அமைப்பதற்குத் தேவையான பண்புகளை அறியாதவர்களாக இருந்தனர். இத்தகைய சமுதாயத்தைப் பண்படுத்தவும், சீர்திருத்தவும் வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் பணிக்கப்பட்டார்கள்.
இஸ்லாமிய சமூகத்தின் அடிப்படை, ஓர் ஆண் அந்நியப் பெண்ணுடன் கலப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. எனவே, ஆண்களால் பெண்களை முழுமையாக சீர்திருத்துவதென்பது இச்சட்டத்தைக் கவனித்து முடியாத ஒன்று. ஆனால், பெண்களையும் சீர்திருத்த வேண்டும் என்ற அவசியம் ஆண்களைச் சீர்திருத்த வேண்டும் என்ற அவசியத்தை விட சற்றும் குறைவானதல்ல மாறாக, அதைவிட மிக அதிகமானதே.
ஆகவே, மகத்தான இச்சீர்திருத்தப் பணியை நிறைவேற்ற அதற்குத் தகுதிவாய்ந்த மாறுபட்ட வயதும் திறமையும் கொண்ட பெண்களை தனக்குத் துணையாக தேர்ந்தெடுத்துக் கொள்வதைத் தவிர நபி (ஸல்) அவர்களுக்கு வேறு வழி கிடையாது. அப்போதுதான் வீட்டுப் பெண்களுக்கு ஒழுக்கப் பண்புகளையும் மார்க்கச் சட்டங்களையும் வழங்கலாம். அதன்மூலம் அவர்களை மற்ற கிராம, நகர, வாலிப, வயோதிகப் பெண்களுக்கு மார்க்கப் பயிற்சி தரும் ஆசிரியைகளாக உருவாக்க முடியும். அப்பெண்மணிகள் நபி (ஸல்) அவர்களின் சார்பாக பெண்ணினத்திற்கு மார்க்கத்தை எடுத்துரைக்கும் பொறுப்பையும் நிறைவேற்றுவார்கள்.
நபி (ஸல்) அவர்களின் மனைவிகளான முஃமின்களின் தாய்மார்கள், நபி (ஸல்) தங்கள் வீடுகளில் எப்படி இல்லற வாழ்க்கையை நடத்தினார்கள் என்ற செய்திகளை நமக்குத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இதில் அவர்களது பங்கு மகத்தானது. குறிப்பாக, நபி (ஸல்) அவர்களுடன் நீண்ட நாட்கள் வாழ்ந்த ஆயிஷா (ரழி) போன்ற துணைவியர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல்களின் பெரும்பாலானவற்றை சமுதாயத்திற்குத் தெரிவித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களின் திருமணங்களில் ஒன்று ஊறிப்போன அறியாமைக் கால வழக்கத்தை தகர்ப்பதற்காக நடத்தப்பட்டது. அதாவது, அரபியர்களிடம் வளர்ப்பு மகனை பெற்ற மகனாக கருதும் வழக்கம் இருந்தது. பெற்ற மகனுக்குக் கொடுக்கும் உரிமைகளையும், கடமைகளையும் வளர்ப்பு மகனுக்கும் வழங்கினர். இவ்வழக்கம் அரபியர்களிடம் ஆழமாக வேரூன்றி இருந்தது. இதைக் களைவது இலகுவானதல்ல. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்றவற்றில் இஸ்லாமின் சட்டங்களுக்கும் அடிப்படைகளுக்கும் இக்கொள்கை முரணாக இருக்கிறது.
மேலும், சமூகத்திலிருந்து எந்த மானக்கேடான அருவருக்கத்தக்க பழக்க வழக்கங்களை அழிப்பதற்காக இஸ்லாம் இந்த உலகத்தில் உதித்ததோ, அவை அனைத்தையும் இக்கொள்கை சமுதாயத்திற்குள் இழுத்து வருகிறது. இந்த சட்டத்தை நபி (ஸல்) அவர்களின் கரத்தால் நபி (ஸல்) அவர்களின் சொந்த வாழ்க்கை மூலமாகவே உடைக்க வேண்டுமென அல்லாஹ் நாடினான். நபி (ஸல்) அவர்களின் மாமி மகள் ஜைனப் பின்த் ஜஹ்ஷை ஸைதுப்னு ஹாரிதா (ரலி) மணமுடித்திருந்தார். ஜைதை சிறு வயது முதலே நபி (ஸல்) வளர்த்து வந்ததால் இவரை ஜைத் இப்னு முஹம்மது (முஹம்மதின் மகன் ஜைது) என்றே மக்கள் அழைத்தனர். ஆனால், இத்தம்பதியரிடையே சுமுகமான உறவு நிகழவில்லை. இதனால் ஸைது (ரழி) தனது மனைவியை விவாகரத்து செய்துவிட எண்ணி நபி (ஸல்) அவர்களிடம் ஆலோசித்தார்.
ஸைது (ரலி) தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டால் அவரை, தானே மணக்க நேரிடும் என அல்லாஹ்வின் அறிவிப்பு மூலம் நபி (ஸல்) அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், இத்திருமணம் நடந்தால் இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் பழிப்பார்கள். நயவஞ்சகர்களும் யூதர்களும் முஷ்ரிக்குகளும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக குழப்பங்களையும் தவறானக் குற்றச்சாட்டுகளையும் பரப்புவார்கள். அதனால், பலவீனமான நம்பிக்கையுடைய முஸ்லிம்களின் உள்ளத்தில் கெட்ட எண்ணங்கள் ஏற்படலாம். ஆகவே, ஸைது (ரழி) தலாக் விஷயமாக பேசிய போது தலாக் விடவேண்டாம் என நபி (ஸல்) அவருக்கு அறிவுரை கூறினார்கள்.
நபி (ஸல்) உணர்ந்த இந்த அச்சமும் தடுமாற்றமும் அல்லாஹ்வுக்கு பிடிக்கவில்லை. எனவே, நபியவர்களை கண்டித்து அடுத்துவரும் வசனத்தை அருளினான்.

وَإِذْ تَقُولُ لِلَّذِي أَنْعَمَ اللَّهُ عَلَيْهِ وَأَنْعَمْتَ عَلَيْهِ أَمْسِكْ عَلَيْكَ زَوْجَكَ وَاتَّقِ اللَّهَ وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ وَتَخْشَى النَّاسَ وَاللَّهُ أَحَقُّ أَن تَخْشَاهُ

(நபியே!) அல்லாஹ்வும், நீங்களும் எவருக்கு அருள் புரிந்திருந்தீர்களோ அவரை நோக்கி “நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து உங்களுடைய மனைவியை (நீக்காது) உங்களிடமே நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறிய சமயத்தில், நீங்கள் மனிதர்களுக்குப் பயந்து அல்லாஹ் வெளியாக்க இருப்பதை உங்கள் மனதில் மறைத்தீர்கள். நீங்கள் பயப்படத் தகுதி உடையவன் அல்லாஹ்தான் (மனிதர்கள் அல்ல) (அல்குர்ஆன் 33:37)
ஆனால், நடக்க வேண்டியது நடந்து விட்டது. ஜைது (ரலி) தன் மனைவியை தலாக் கொடுத்து விட்டார், நபி (ஸல்) பனூ குறைளா யூதர்களை முற்றுகையிட்ட காலக்கட்டத்தில் ஜைனப் (ரலி) அவர்களுடைய இத்தா முடிந்தவுடன் நபி (ஸல்) அவரைத் திருமணம் செய்து கொண்டார்கள். இதனை நபியவர்களின் விருப்பத்திற்கு விடாமல் தானே மணமுடித்து வைத்ததாக அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
‘ஸைது’ (என்பவர் மனம் மாறி, தன் மனைவியைத்) தலாக் கூறிவிட்ட பின்னர் நாம் அப்பெண்ணை உங்களுக்கு திருமணம் செய்து வைத்தோம். ஏனென்றால், நம்பிக்கையாளர்களால் (தத்தெடுத்து) வளர்க்கப்பட்டவர்கள் தங்கள் மனைவிகளைத் தலாக் கூறிவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள் அப்பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தடையும் இருக்கக்கூடாது என்பதற்காக, இது நடைபெற்றே தீரவேண்டிய அல்லாஹ்வுடைய கட்டளை ஆகும். (அல்குர்ஆன் 33:37)
இவ்வாறு அல்லாஹ் செய்ததற்குக் காரணம்:

ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ

ஆகவே, நீங்கள் (வளர்த்த) எவர்களையும் அவர்களுடைய (உண்மையான) தந்தைகளின் பெயர்களைக் கூறி (அன்னாரின் மகன் என்றே) அழையுங்கள். அதுதான் அல்லாஹ்விடத்தில் நீதமாக இருக்கின்றது. (அல்குர்ஆன்33:5)
மற்றும்,

مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيماً

(நம்பிக்கையாளர்களே!) உங்களிலுள்ள ஆண்களில் ஒருவருக்கும் முஹம்மது (நபி அவர்கள்) தந்தையாக இருக்கவில்லை. எனினும், அவர் அல்லாஹ்வுடைய தூதராகவும், நபிமார்களுக்கு (இறுதி) முத்திரையாகவும் (இறுதி நபியாகவும்) இருக்கிறார். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 33:40)
ஆகிய வசனங்களால் இந்தத் தவறான நடைமுறையை சொல்லால் உடைத்தது போல் செயலாலும் அதனை உடைக்க விரும்பினான்.
ஊறிப்போன எத்தனையோ பழக்க வழக்கங்களைத் தகர்ப்பது என்பது சொல்லால் மட்டும் முடியாது. அதனை மாற்ற நினைக்கும் சத்திய அழைப்பாளர்கள் தனது செயலாலும் அதனை நிரூபித்துக் காட்ட வேண்டும். இதற்கு ஹுதைபிய்யா, உம்ராவில் நடந்த நிகழ்ச்சியை அழகிய எடுத்துக்காட்டாகக் கூறலாம். நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் மீது வைத்திருந்த அன்பு, பாசம் பற்றி உர்வா இப்னு மஸ்வூத் (ரழி) கூறிய ஹதீஸிலிருந்து நாம் தெரிந்திருக்கலாம்.
“உஸ்மான் (ரழி) கொல்லப்பட்ட செய்தி உண்மையாயின் வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போர் புரிய வேண்டும் பின் வாங்கக் கூடாது” என்று நபி (ஸல்) தங்களது தோழர்களிடம் மரத்தின் கீழே சத்தியவாக்குறுதி வாங்கினார்கள். அந்நேரத்தில் நபியவர்களிடம் போட்டி போட்டுக் கொண்டு தோழர்கள் சத்திய வாக்குறுதி தந்தார்கள். மேலும், அதில் அபூபக்ர், உமர் (ரழி) போன்ற நெருக்கமான தோழர்களும் இருந்தனர்.
நபி (ஸல்) அவர்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொள்ளும் அந்தத் தோழர்களுக்குச் சமாதான உடன்படிக்கை நிறைவேறிய பின், தங்களின் குர்பானி பிராணிகளை அறுக்கும்படி நபி (ஸல்) கட்டளையிட்டார்கள். ஆனால், நபியவர்களின் இக்கட்டளையை நிறைவேற்றுவதற்கு தோழர்களில் எவரும் முன்வரவில்லை. இது நபி (ஸல்) அவர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
மனைவியின் சமயோசித ஆலோசனை
இதை உணர்ந்த உம்மு ஸலமா (ரலி) “அல்லாஹ்வின் தூதரே! தாங்களே முதலில் எழுந்து சென்று குர்பானியை நிறைவேற்றுங்கள் யாரிடமும் பேசாதீர்கள்” என்று ஆலோசனை வழங்கினார்கள். அதற்கிணங்க நபி (ஸல்) அவர்களும் அவ்வாறு செய்ய, தோழர்கள் ஒருவருக்கொருவர் முந்திக் கொண்டு குர்பானியை நிறைவேற்றினார்கள். ஆகவே, காலங்காலமாக ஊறிப்போன பழக்கத்தைத் தகர்த்தெறிவதில் சொல்லால் திருத்துவது அல்லது செயலால் திருத்துவது ஆகிய இரண்டிற்குமிடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையிலுள்ள வேறுபாடு இருப்பதை உணரலாம்.
ஜைனபை நபி (ஸல்) திருமணம் செய்த பின்பு இத்திருமணம் குறித்து நயவஞ்சகர்கள் பல தவறான பொய்ப் பிரச்சாரங்களை மக்களுக்கிடையில் பரப்பினர். இறைநம்பிக்கையில் உறுதியற்ற முஸ்லிம்களின் இதயங்களில் தீய எண்ணங்கள் உண்டாயின.
நயவஞ்சகர்களின் குழப்பங்கள்
இத்திருமணத்தால் இரண்டு விதமான குழப்பங்களை நயவஞ்சகர்கள் ஏற்படுத்தினர்.
1) நபி (ஸல்) அவர்களுக்கு இது ஐந்தாவது திருமணமாக இருந்தது. (நான்கிற்கு மேல் திருமணம் முடிப்பது அனுமதியில்லை என முஸ்லிம்கள் அறிந்திருந்தனர்.
2) ஸைது (ரலி) நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன். அவர் நபி (ஸல்) அவர்களின் மகனாகவே கருதப்பட்டு வந்தார். இதைச் சொந்த மகனின் மனைவியைச் சொந்தத் தந்தை மணமுடிப்பதைப் போன்று மானக்கேடான செயலாகக் கருதினர்.
அல்லாஹு தஆலா இவ்விரண்டையும் குறித்து தௌ்ளத் தெளிவான பதிலை சூரா அஹ்ஸாபில் இறக்கி வைத்தான். அதன் மூலம் ‘ஒருவரை வளர்ப்பு மகனாக ஆக்குவது மார்க்க சட்டத்தில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது’ என்றும் ‘நபி (ஸல்) அவர்களுக்கு பல உன்னத நோக்கங்களுக்காக ஏனைய முஸ்லிம்களைவிட திருமண விஷயத்தில் சிறப்புச் சலுகையை அல்லாஹ் வழங்கியிருக்கின்றான்’ என்றும் முஸ்லிம்கள் புரிந்துகொண்டனர்.
நபி (ஸல்) தங்களது மனைவிமார்களுடன் மிக அழகிய முறையில் உயர்ந்த பண்புகளுடனும் சிறந்த குணங்களுடனும் வாழ்க்கை நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களும் அவ்வாறே உயர்ந்த குணங்களும் சிறந்த பண்புகளும் பெற்றிருந்தனர். பொது மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு வறுமையில் வாழ்ந்தும், நபி (ஸல்) அவர்களுக்குப் பணிந்து, பணிவிடை செய்து நல்ல மனைவியர்களாகத் திகழ்ந்தார்கள்.
வறுமையிலும் செம்மை
இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: நபி (ஸல்) அல்லாஹ்விடம் சென்றடையும் வரை மெல்லிய ரொட்டியை அவர்கள் பார்த்ததாக எனக்குத் தெரியாது. பொரித்த ஆட்டுக் கறியை நபி (ஸல்) சுவைத்ததே இல்லை. (ஸஹீஹுல் புகாரி)
ஆயிஷா (ரழி) கூறுகிறார்கள்: “நாங்கள் இரண்டு மாதங்களில் மூன்று பிறைகளைப் பார்த்து விட்டோம். நபி (ஸல்) அவர்களின் வீடுகளில் எதுவும் சமைக்கப்படவில்லை.” உர்வா, “நீங்கள் எப்படி வாழ்ந்தீர்கள்? என்று ஆயிஷாவிடம் கேட்டார். அதற்கு, “பேரீத்தம் பழங்களையும் தண்ணீரையும் உண்டு வாழ்ந்தோம்” என ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள். இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் ஹதீஸ் நூற்களில் பதிவாகியுள்ளன. (ஸஹீஹுல் புகாரி)
வறுமையிலும் நெருக்கடியிலும் வாழ்ந்த போதிலும் நபி (ஸல்) அவர்களின் துணைவியர்கள் முகம் சுளித்ததோ, மனம் வருந்தியதோ, முறையீடு செய்ததோ இல்லை. ஆம்! அவர்களும் மனிதர்கள் தானே. இவ்வாறு ஒரே ஒரு முறை நிகழ்ந்தது. அதை அல்லாஹ் கண்டித்து ஒரு வசனத்தை இறக்கினான்:
நபியே! உங்களுடைய மனைவிகளை நோக்கி நீங்கள் கூறுங்கள்:

يَا أَيُّهَا النَّبِيُّ قُل لِّأَزْوَاجِكَ إِن كُنتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحاً جَمِيلاً،  وَإِن كُنتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنكُنَّ أَجْراً عَظِيماً

“நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் மட்டுமே விரும்புவீர்களாயின் வாருங்கள்! உங்களுக்கு ஏதும் கொடுத்து நல்ல முறையில் (தலாக் கொடுத்து) உங்களை நீக்கி விடுகிறேன். அன்றி, நீங்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், மறுமை வாழ்க்கையையும் விரும்புவீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள இத்தகைய நன்மையைக் கருதுபவர்களுக்கு மகத்தான (நற்)கூலியை தயார்படுத்தி வைத்திருக்கின்றான். (அல்குர்ஆன் 33:28, 29)
மனைவியா யாவரும் மறுமையைத் தேர்ந்தெடுத்தனர்
நபி (ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தேர்ந்தெடுத்து, தங்களது உயர்ந்த பண்புகளையும் சிறந்த குணங்களையும் நிலைநாட்டினர். அவர்களில் எவரும் உலகத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவில்லை. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களுக்கிடையில் அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தும் பொதுவாக சக்களத்திகள் மத்தியில் இருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படவில்லை. அவர்களும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒரு சில நிகழ்வுகள்தான் நடந்தன. அதையும் அல்லாஹ் கண்டித்து விட்டான். அத்தியாயம் தஹ்ரீமின் துவக்கத்திலிருந்து ஐந்து வசனங்கள் வரை இதுபற்றியே அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
இறுதியில்……..
பலதார மணங்களின் அடிப்படையைப் பற்றி ஆழமாக நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இந்த பலதார மணங்களைக் கடுமையாக விமர்சிக்கும் ஐரோப்பியர்களின் வாழ்க்கையையும், அவர்கள் படும் சிரமங்களையும், துன்பங்களையும், அவர்கள் புரியும் குற்றங்களையும், செய்யும் அசிங்கங்களையும் இந்த நேரிய அடிப்படையிலிருந்து விலகியதால், அவர்கள் அனுபவிக்கும் மன உளைச்சல்களையும், துயரங்களையும் ஆழிய கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து பார்த்தால் பலதார மணம் மிக அவசியமானதும், இன்றியமையாததும், மிகச் சரியான தீர்வு எனவும் புரிந்து  கொள்ளலாம். அறிவுடையோருக்கு இதில் நல்லதோர் படிப்பினை உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக