தவிர்க்கப்பட வேண்டிய விருந்துகள்




விருந்தளிப்பதையும், விருந்துக்கு அழைக்கப்படும்போது ஏற்றுக்கொள்வதையும் வலியுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் சமுதாயத்தில் வழக்கத்தில் உள்ள விருந்துகளில் பெரும்பாலானவை விருந்துகள் அல்ல. திருமண விருந்து, அகீகா, புதுமனை புகுதல் போன்ற அனுமதிக்கப்பட்ட விருந்தாக இருந்தாலும் அந்த விருந்துகளில் இஸ்லாம் கூறும் முறைகள் பின்பற்றப்படுவதில்லை.
“செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்து தான் விருந்துகளில் மிகவும் கெட்டதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
எந்த விருந்துகளில் செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப் படுகிறார்களோ விருந்தளிக்கும் இடத்தில் மார்க்கம் அனுமதிக்காத ஆடல், பாடல், கச்சேரிகள் போன்றவை இடம்பெற்றால் அத்தகைய விருந்துகளையும் புறக்கணிக்க வேண்டும்.
நான் நபி (ஸல்) அவர்களுக்காக விருந்து தயார் செய்து அவர்களை அழைத்தேன். அவர்கள் வந்து என் வீட்டில் உருவப்படங்களை கண்டதும் திரும்பிச் சென்றுவிட்டனர். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: இப்னுமாஜா
யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புகிறாரோ அவர் மதுபானம் பரிமாறப்படும் விருந்துகளில் அமரவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதீ
மரண விருந்து
இறந்தவரின் பெயரால் மூன்றாம் நாள், ஏழாம் நாள், நாற்பதாம் நாள் மற்றும் ஆண்டு நிறைவு நாட்களில் வழங்கப்படும் விருந்துகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே!
ஜஃபர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட செய்தி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் ஜஃபரின் குடும்பத்தாருக்கு நீங்கள் உணவு தயார் செய்யுங்கள். அவர்கள் கவலையில் உள்ளனர் என்று மக்களிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி) நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா
இறந்தவரின் குடும்பத்தினரிடம் கூட்டமாகக் கூடுவதையும் அடக்கம் செய்யப்பட்டபின் விருந்து தயாரிப்பதையும் ஒப்பாரி வைப்பதன் ஒருவகையாக நாங்கள் கருதி வந்தோம்.
அறிவிப்பவர்: ஜஃபர் (ரலி) நூல்: அஹ்மத்
இறந்தவரின் குடும்பத்தினருக்காக மற்றவர்கள் தாம் விருந்தளிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தினர் விருந்தளிக்கக் கூடாது என்பதை இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. விருந்து மகிழ்ச்சியுடன் வழங்கப்பட வேண்டிய ஒன்றாகும். குடும்பத்து உறுப்பினர் ஒருவரை இழந்து நிற்பவர்கள் விருந்தளிப்பதும், அவர்களிடம் விருந்து உண்பதும் மனிதாபிமானமில்லாத செயலாகும்.
குடும்பத்தின் பொறுப்பைச் சுமந்து வந்தவன் மரணித்து அதனால் எதிர்காலம் என்னவாகுமோ என்று கலங்கி நிற்கும் குடும்பத்தினர் நகை நட்டுகளை விற்று, அல்லது அடைமானத்திற்கு வைத்து அல்லது கடன்பெற்று இத்தகைய விருந்துகளை நடத்துகின்றனர். தாங்கமுடியாத சுமை என்று தெரிந்திருந்தும் ஊருக்கும், உலகுக்கும் பயந்து இந்தச் சுமையை தங்கள் மீது ஏற்றிக் கொள்கின்றனர். எனவே மனிதாபிமானமற்ற மரண விருந்துகள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும்.
கொடியேற்றம், கந்தூரி, நேர்ச்சை விருந்து
நாகூர் ஆண்டவருக்காக, முஹ்யித்தீன் ஆண்டவருக்காக என்று முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் பிராணிகளை அறுக்கின்றனர். உண்ணுகின்றனர்.
அவ்லியாக்களுக்காக அறுப்பவர்கள் யாரும் அந்த அவ்லியா அதை உண்பார் என்று கருதி அறுப்பதில்லை. அவர் அதை உண்பதுமில்லை. அல்லாஹ் நமக்கு அருள்புரிவான் என்பதற்காக அல்லாஹ்வுக்காக அறுக்கப்படுகின்றதைப் போன்று அந்த அவ்லியா அருள்புரிவார் என்பதற்காகவும், அவருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் தான் அவருக்காக அறுக்கப்படுகின்றது. அல்லாஹ்வுக்காக அறுக்கும்போது, மாமிசமோ, இரத்தமோ, அவனைச் சென்றடையாது. உள்ளத்திலிருக்கும், பக்தியே அவனைச் சென்றடையும் என்று குர்ஆன் கூறுகிறது. அவ்லியாவுக்காக அறுக்கும்போதும் இரத்தமோ, மாமிசமோ அவரைச் சென்றடையாது. அவ்லியாக்களின் மீது அறுப்பவர் கொண்ட பக்தியே அவரைச் சென்றடைகிறது என்று அவ்லியாவுக்காக அறுப்பவர் நம்புகிறார். இவ்வாறு அறுப்பதும், உண்பதும் தடை செய்யப்பட்டுள்ளதை பின்வரும் வசனத்தின் மூலம் அறியலாம்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்கு ஹராமாக்கி (விலக்கி)யுள்ளான். யார் வலியச் சொல்லாமலும், வரம்பு மீறாமலும் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவர் மீது எந்தக்குற்றமுமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவன், கருணையுடையவன். அல்குர்ஆன் 2:173
தொழுவது, இறைவனுக்காக மட்டுமே அமையவேண்டும் என்பதுபோலவே அறுத்துப் பலியிடுவதும் அல்லாஹ்வுக்காகவே அமைய வேண்டும் என்று இந்த வசனம் கூறுகிறது.
நான் அலி (ரலி) அவர்களுடன் இருந்த போது ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு இரகசியமாகக் கூறியவை என்ன? என்று அவர் கேட்டார். அதைக் கேட்டதும் அலீ (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மக்களுக்கு மறைத்துவிட்டு எனக்கென்று எந்த இரகசியத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியதில்லை என்றாலும் என்னிடம் நான்கு போதனைகளைக் கூறியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்கள்.
அப்போது நான் அமீருல் முஃமினீன் அவர்களே! அந்த நான்கு போதனைகள் யாவை? என்று கேட்டேன். அதற்கு அலி (ரலி) அவர்கள் “யார் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கிறாரோ அவரை அல்லாஹ் சபிக்கிறான். தம் பெற்றோரை சபிப்பவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான். பித்அத் (மார்க்கத்தில் இல்லாத புதிய செயல்)களை உருவாக்குபவனுக்கு அடைக்கலம் தருபவனையும் அல்லாஹ் சபிக்கிறான். பூமியில் உள்ள எல்லைக் கற்களை மாற்றியமைப்பவனையும் அல்லாஹ் சபிக்கிறான் (இவையே அந்த நான்கு விஷயங்கள்) என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூதுஃபைல் (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்
புவானா என்ற இடத்தில் ஒட்டகத்தை (அல்லாஹ்வுக்காக) அறுப்பதாக ஒரு மனிதர் நேர்ச்சை செய்திருந்தார். இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் வழிபாடு நடத்தப்படும் அறியாமைக் கால வழிபாட்டுத் தலங்கள் ஏதும் உள்ளனவா? என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லை” என்று கூறினார்கள். அறியாமைக் கால மக்களின் திருநாட்கள் ஏதும் அங்கே கொண்டாடப்படுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் “இல்லை” என்றனர். அப்படியானால் உமது நேர்ச்சை (அந்த இடத்தில்) நிறைவேற்றுவீராக! அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் வகையில் அமைந்த நேர்ச்சைகளையும், மனிதனுடைய கைவசத்தில் இல்லாத விஷயங்களில் செய்யப்பட்ட நேர்ச்சைகளையும் நிறைவேற்றக் கூடாது என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷாபித் இப்னு லஹ்ஹாக் (ரலி) நூல்கள்: அபூதாவூத்
அல்லாஹ்வுக்காக அறுத்துப் பலியிடும்போது அல்லாஹ் அல்லாதவர்களுக்காக பலியிடப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட ஏற்படக்கூடாது என்பதற்காக அல்லாஹ் அல்லாதவர்களுக்கு வழிபாடு நடத்தப்படும் இடங்களில் அதை நிறைவேற்றக்கூடாது என்றால் அல்லாஹ் அல்லாதவர்களுக்காக என்று தெளிவாகப் பிரகடனம் செய்துவிட்டு அறுப்பது எவ்வளவு பெருங்குற்றம் என்பதை முஸ்லிம்கள் உணர வேண்டும். இதுபோல் அறுத்துப் பலியிடாமலும் அவ்வாறு பலியிடப்படும் போது தரப்படும் விருந்தை ஏற்காமலும் இருக்க வேண்டும்.
இவ்வாறு தான் அறுக்கப்படும் ஹலாலான பிராணிகள் உண்பதற்கு இரண்டு தனித்தனி நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க வேண்டும் என்பது ஒரு நிந்தனை. அல்லாஹ்வுக்காக மட்டுமே அறுக்க வேண்டும் என்பது மற்றொரு நிபந்தனை. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்படுவதால் அங்கே ஒரு கட்டளை செயல்படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுக்கக்கூடாது என்ற மற்றொரு கட்டளை மீறப்பட்டுள்ளது. யார் பெயர் கூறி அறுத்தாய்? என்று கேட்டால் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தோம் என்று இவர்கள் கூறமுடியும். யாருக்காக அறுத்தாய்? என்று கேட்டால் நாகூர் ஆண்டவருக்காக என்று தான் இவர்களால் பதில் கூறமுடியுமே தவிர அல்லாஹ்வுக்காக என்று கூற முடியாது. இரண்டு கட்டளைகளில் ஒன்று மீறப்பட்டாலும் உண்ணப்படுவதற்கான தகுதியை அது இழந்துவிடுகின்றது.
குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்காக ஏற்பாடு செய்யப்படும் விருந்துகளில் திருமண விருந்து, அகீகா விருந்து, புதுமனை புகுவிழா விருந்து ஆகிய மூன்றைத் தவிர ஏனைய விருந்துகளுக்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.
அனாச்சாரமான விருந்துகள்
கத்னாவின் விருந்துக்காக உஸ்மான் பின் அபில் ஆஸ் (ரலி) அழைக்கப்பட்டார்கள். அந்த அழைப்பை ஏற்க அவர்கள் மறுத்து விட்டார்கள். அவர்களிடம் காரணம் கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் கத்னாவுக்குச் செல்லவும் மாட்டோம் அழைக்கப்படவும் மாட்டோம். என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹஸன் (ரலி) நூல்கள்: அஹ்மத், தப்ரானி
மார்க்கத்தில் சுன்னத் என வலியுறுத்தப்பட்ட கத்னா எனும் நிகழ்ச்சிக்கே விருந்து கிடையாது என்றால் பெண்கள் பருவமடைதல், காது மூக்கு குத்துதல் போன்றவற்றுக்கு விருந்தளிப்பதும், அதில் பங்கெடுப்பதும் கூடாது என்பதை விளங்கலாம். பெயர் சூட்டுதல் கத்னாச் செய்தல் போன்ற வைபவங்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகவுள்ளதால் இதனால் ஏழைகள் படும்பாட்டைச் சொல்ல வேண்டியதில்லை.
ஹஜ்ஜின் பெயரால் நடத்தப்படும் விருந்து
ஹஜ் கடமையை நிறைவேற்றச் செல்லும் முன் அதை அனைவருக்கும் விளம்பரப்படுத்தும் வகையில் ஊரை அழைத்து விருந்து நடத்துவதும் நம் சமுதாத்தில் வழக்கத்தில் உள்ளது.
தொழுகை, நோன்பு, ஜகாத் போன்று இறைவனுக்காகச் செய்யப்படும் கடமைகளில் ஒன்று தான் ஹஜ். மற்ற அமல்களை நிறைவேற்றும்போது எப்படி நடந்து கொள்கிறோமோ அப்படித் தான் ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்லும்போதும் நடந்து கொள்ள வேண்டும்.
விருந்து கொடுக்க வேண்டிய நிகழ்ச்சிகளில் ஹஜ்ஜுக்குச் செல்வது ஹதீஸில் இடம் பெறவில்லை. திரும்பி வரும்போது தான் ஹாஜி என்பதை பிறர் அறியவும், தங்களின் பெருமையை பறைசாற்றிக் கொள்ளவும், பெருமை விரும்பினால் இது அறிமுகப்படுத்தப் பட்டிருக்க வேண்டும்.
அல்லாஹ் அல்லாதவர்களின் பெயரால் தரப்படும் விருந்து அனாச்சாரமான, ஆடம்பரமான விருந்தாக இல்லாமல் இஸ்லாம் அனுமதித்த குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் தரப்படும் விருந்து, பொதுவாக அன்பை வளர்க்கும் அடிப்படையில் முஸ்லிம்கள் தரும் விருந்தில் கலந்து கொண்டால் அதில் தரப்படும் உணவைக் குறித்து துருவித்துருவி விசாரிக்க வேண்டியதில்லை. அது நம்மீது குற்றமில்லை.
உங்களில் ஒருவர் தனது முஸ்லிமான சகோதரர் வீட்டிற்குச் சென்றால் அவர் உண்ணக் கொடுப்பவைகளை உண்ணட்டும் (அதுபற்றி) துருவிக் கேட்கவேண்டாம். அவர் குடிக்கத்தந்ததை குடிக்கட்டும். (அதுபற்றியும்) கேட்கவேண்டாம் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: பைஹகீ
முஸ்லிம்களின் உணவை துருவித்துருவி ஆராயக்கூடாது என்பதை இதன் மூலம் விளங்கமுடிகிறது. இதற்கு மேல் அவர்கள் பிஸ்மில்லாஹ் சொல்லி அறுத்திருப்பார்களா? இல்லையா? என்ற சந்தேகம் வந்தால் நாம் பிஸ்மில்லாஹ் கூறி அதை உண்ணலாம்.
புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சிலர் எங்களுக்கு மாமிசம் தருகின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறினார்களா? இல்லையா? என்பது எங்களுக்குத் தெரியவில்லை. (அதை உண்ணலாமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறி உண்ணுங்கள் என்று விடையளித்தார்கள். ஆயிஷா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.
பிற மத பண்டிகைகளின் போது தரப்படும் விருந்து
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மாற்று மதத்தவர்களிடமிருந்து அன்பளிப்புகளை, விருந்தை ஏற்றுள்ளார்கள்.
உகைதிர் தூமா என்ற மன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு பட்டாடை ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி
ஜலா நாட்டு மன்னர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிற கோவேரிக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினார். மேலும் அவர்களுக்கு மேலாடை ஒன்றையும் போர்த்தினார்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் அஸ்ஸாயிதீ (ரலி) நூல்: புகாரி
யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து விஷம் கலந்த ஆட்டிறைச்சியைக் கொடுத்தார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம்
இதுபோல் இன்னும் பல சந்தர்ப்பங்களில் முஸ்லிமல்லாத மக்களிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் அன்பளிப்புக்களைப் பெற்றுள்ளனர். பண்டிகைகளின் போது பெறக்கூடாது என்று எந்தத் தடையும் இல்லாததால் அதைப் பொதுவான அனுமதியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதே சமயத்தில் முஸ்லிம்களுக்கு என சில கட்டுப்பாடுகள் உள்ளன. உண்பதிலும், பயன்படுத்துவதிலும் சில தடைகள் உள்ளன. அவ்வாறு தடை செய்யப்பட்ட பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள் நமக்கு வழங்கினால் என்ன நிலை? இதைப் பற்றி தனியாக நாம் ஆராய வேண்டும்.
பண்டிகைகளின் போது அவர்கள் தருகின்ற உணவுப் பொருட்களில் சில நமக்குத் தடை செய்யப்பட்டதாக இருக்கக் கூடும். அதைப் பற்றி முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி மற்றும் இறைவனல்லாதவர்களுக்காக படைக்கப்பட்டவை ஆகியவற்றைத் தான் உங்களுக்கு விலக்கியுள்ளான். (அல்குர்ஆன் 2:173)
முதல் மூன்று உணவுகளையும் நம்முடைய நண்பர்களாக உள்ள மாற்று மதத்தவர்கள் நமக்குத் தரமாட்டார்கள். இவை நமக்குத் தடை செய்யப்பட்டதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.
நான்காவதாக இறைவன் குறிப்பிடக்கூடிய உணவு வகைகள் நமக்கு விலக்கப்பட்டது என்பதை அவர்கள் அறியாததால் பண்டிகைகளின் போது அவற்றை நமக்குத் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பண்டிகைகளின் போது உணவுப் பொருட்களில் சிலவற்றை ஏக இறைவனல்லாத மற்றவர்களுக்காக படையல் செய்வார்கள். ஆசாரமாக நடப்பவர்கள் படையல் செய்யப்பட்டதை வேறு மதத்தவர்களுக்குத் தரமாட்டார்கள். அவ்வாறு தரக்கூடாது என்று அவர்களின் மதநம்பிக்கையால் இருப்பதே இதற்குக் காரணம்.
ஆசாரமாக நடக்காதவர்கள் படைக்கப்பட்டவற்றை நமக்குத் தந்தால் நாம் அதை உண்ணக்கூடாது. ஏனெனில் திருக்குர்ஆனில் இது தெளிவாகத் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் மனம் புண்படமாட்டார்களா? என்றால் நிச்சயமாக மாட்டார்கள். சைவ உணவை மட்டுமே உட்கொள்ளும் மாற்று மத நண்பருக்கு அசைவ உணவை கொடுக்க மாட்டோம். அப்படிக் கொடுக்கும்போது அவர் மறுத்தால் அதற்காக கவலைப்பட மாட்டோம். அவர்களின் நம்பிக்கையை மதித்து சாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். இதுபோன்றே அவர்களும் எடுத்துக் கொள்வார்கள். எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்துக் கொள்ளாவிட்டால் நாம் நமது கொள்கையை அவர்களுக்கு விளக்கவில்லை என்பது தான் பொருள்.
இத்தனைக்குப் பிறகும் அவர்கள் மனம் கவலைப்படுவார்கள் என்று நினைத்து அவர்கள் மனம் புண்படக்கூடாது என்பதற்காக அதைப் பெற்று மற்றவர்களுக்கு வழங்கலாமா? என்ற கேள்வி வரலாம்.
பள்ளிவாசலின் முன்னால் பட்டாடை விற்கப்படுவதை உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். “அல்லாஹ்வின் தூதரே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி வெள்ளிக்கிழமையிலும், தூதுக் குழுவினரைச் சந்திக்கும்போதும் அணிந்து கொள்ளலாமே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “மறுமையில் பாக்கியம் இல்லாதவர்கள் தான் இதை அணிவார்கள்!” என்றனர். பின்னர் நபி (ஸல்) அவர்களுக்கு அந்த ஆடையிலிருந்து ஒரு ஜதை வந்தது. அதை நபி (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கொடுத்தார்கள். “பட்டாடை குறித்து அதிருப்தி வெளியிட்ட நீங்கள் அதை எனக்குத் தருகிறீர்களே?” என்று கேட்டார்கள். “நீர் அணிந்து கொள்வதற்காக நான் அதைத் தரவில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை மக்காவில் இருந்த தனது முஸ்லிமல்லாத சகோதரருக்கு வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி
முஸ்லிம் ஆண்களுக்கு பட்டாடை தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அந்த ஆடையை நபி (ஸல்) அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள். பெண்களுக்குத்தான் அனுமதி உள்ளதே என்பதற்காக அவர்கள் பெற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் அதைப் பெற்றுக் கொண்ட உமர் (ரலி) அவர்கள் முஸ்லிமல்லாத இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்குள் வராத தனது சகோதரருக்கு வழங்கியுள்ளார்கள்.
ஆண்களுக்கு இது ஹராம் என்றால் முஸ்லிம் ஆண்களுக்கு மட்டும் தான் ஹராம். முஸ்லிமல்லாத ஆண்களுக்கு இந்தத் தடையைப் போடமுடியாது. அந்த அடிப்படையில் மாற்றுமத நண்பர் மனம் புண்படுவார் என்று எண்ணினால் முஸ்லிமல்லாத யாருக்கேனும் அதைக் கொடுக்கலாம். தவறில்லை. அப்படியானால் நமக்குத் தடை செய்யப்பட்ட மதுபானத்தை யாரேனும் நமக்குத் தந்தால் அதையும் வாங்கி அடுத்தவருக்குக் கொடுக்கலாமா? என்று கேட்கக்கூடாது. ஏனெனில் இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது.
வேதம் வழங்கப்பட்டோரின் விருந்து
நமக்கு முன் வேதங்கொடுக்கப்பட்ட யூத, கிருத்துவர்களின் உணவு, இறைச்சி உட்பட உண்ணுவதற்கு மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டுள்ளது.
இன்று முதல் உங்களுக்கு (உண்ண) பரிசுத்தமானவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. வேதத்தையுடைய (யூத, கிருத்து)வர்களின் உணவு உங்களுக்கு ஆகுமானதே! உங்களுடைய உணவு அவர்களுக்கு ஆகுமானதாகும். (அல்குர்ஆன் 5:5)
இந்த வசனத்திற்கு விளக்கமளித்த இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் யூத கிறிஸ்தவர்களின் உணவு என்பது அறுக்கப்பட்ட மாமிச உணவுகள் என்றே விளக்கமளித்துள்ளனர். நூல்: புகாரி
மேலும் நபி (ஸல்) அவர்கள் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மாமிச உணவுகளை சாப்பிட்டுள்ளனர் என்பதற்கும் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர் என்பதற்கும் மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. யூதப் பெண்ணொருத்தி ஆட்டிறைச்சியில் நஞ்சூட்டி நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களது தோழர்களுக்கும் விருந்தளித்து அதை அவர்கள் சாப்பிட்டார்கள் என்பதற்கு புகாரி உட்பட பல நூல்களில் சான்றுகள் உள்ளன.
நாங்கள் கைபர் கோட்டையை முற்றுகையிட்டிருந்தோம். அப்போது ஒரு (யூத) மனிதர் ஒரு தோல் பையில் கொழுப்புகளை நிரப்பி வீசினார். அதை எடுப்பதற்காக நான் பாய்ந்து சென்றேன். (எடுத்துவிட்டு) திரும்பிப் பார்த்தபோது அங்கே நபி (ஸல்) அவர்கள் நின்றார்கள். அதனால் வெட்கமுற்றேன் என்று அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அறிவிக்கின்றார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது. முஸ்லிமில் இடம்பெற்ற இன்னொரு அறிவிப்பில் நான் திரும்பிப் பார்த்தபோது நபி (ஸல்) அவர்கள் புன்னகை செய்தவர்களாக நின்றனர் என்று காணப்படுகிறது.
யூதர்கள் அறுத்த மாமிசக் கொழுப்புகளை நபித்தோழர்கள் எடுத்ததைக் கண்ட நபியவர்கள் புன்னகை மூலம் அதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இந்தச் சான்றுகளிலிருந்து வேதமுடையவர்கள் அறுக்கும் மாமிச உணவுகள் நமக்கு ஹலால் என்பதையும், அதையே மேற்கண்ட வசனம் குறிப்பிடுகிறது என்பதையும் சந்தேகமற அறியலாம்.
இந்த இடத்தில் அடிப்படையிலில்லாமல் சிலர் எழுப்பும் சந்தேகத்திற்கான விடையையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேதம் வழங்கப்பட்டவர்களின் உணவு ஹலால் என்பதை ஒப்புக் கொண்ட பிறகும் வேறொரு சந்தேகத்தை எழுப்புகின்றனர். வேதக்காரர்கள் தற்போது யாரும் கிடையாது. இன்று வேதக்காரர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்கள் வேதங்களை மாற்றிவிட்டனர். முக்கடவுள் கொள்கையை உருவாக்கிவிட்டனர். எனவே இவர்கள் எப்படி வேதங் கொடுக்கப்பட்டவர்களாக ஆகமுடியும்? இவர்களின் உணவு எப்படி ஹலால் ஆக முடியும்? என்று கேள்வி எழுப்புகின்றனர்.
யூத, கிறிஸ்துவர்கள் தங்கள் வேதத்தை மாற்றிவிட்டனர். சொந்த சரக்குகளை அதில் நுழைத்துவிட்டனர். தங்கள் கொள்கையை அவர்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டனர் என்பது உண்மை தான். ஆனால் இந்த மாற்றம் இப்போது ஏற்பட்ட மாற்றமில்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே யூதர்கள் தங்கள் கொள்கைகள், வேதங்களை மாற்றிவிட்டனர். முக்கடவுள் கொள்கையை கடைப்பிடித்தனர்.
நபி (ஸல்) காலத்து யூத, கிறிஸ்துவர்களின் கொள்கைகள் எத்தகையனவாக இருந்தன என்பதை திருக்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
முக்கடவுள் கொள்கை அன்றே அவர்களிடம் இருந்ததை 5:73, 4:171 ஆகிய வசனங்களிலும், ஏசுவை அவர்கள் அன்றே கடவுளாக கருதி வழிபட்டதை 5:72 வசனத்திலும், வேத வசனங்களை நபி (ஸல்) காலத்திலேயே மாற்றியமைத்தனர் என்பதை 4:46, 5:13, 41, 2:79, 5:15, 3:7, 2:159 ஆகிய வசனங்களிலும் காணலாம்.
இந்த வசனங்கள் யாவும் யூத, கிறிஸ்தவர்கள் இன்றுள்ளதைப் போல் தான் அன்றும் தவறான கொள்கையில் இருந்தனர் என்பதை தெளிவாக அறிவிக்கின்றன. அவர்களின் தவறான கொள்கையைத் தெரிந்தே அவர்களின் மாமிச உணவுகளை இறைவன் அனுமதித்துள்ளான். எனவே யூத, கிறிஸ்துவர்கள் தவறான கொள்கையுடையவர்கள் என்பது வேறு. அவர்களின் உணவு அனுமதிக்கப்பட்டது என்பது வேறு.
அல்லாஹ் அனுமதித்தாலும் நபியவர்கள் வேதமுடையோரின் மாமிச உணவுகளை உட்கொண்டிருப்பதாலும், உண்ண அனுமதித் திருப்பதாலும் அன்றைய வேதக்காரர்களின் கொள்கையும் இன்றைய வேதக்காரர்களின் கொள்கையும் ஒன்றாக இருப்பதாலும் இந்த அனுமதியை மறுக்க, எந்த முகாந்திரமும் இல்லை.
இங்கு இன்னொரு முக்கியமான விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். வேதக்காரர்களின் உணவு அனுமதிக்கப்பட்டுள்ளதால் இறைவன் தடைசெய்துள்ள பன்றி, இரத்தம் போன்றவற்றை அவர்கள் கொடுத்தாலும் சாப்பிடலாம் என்று புரிந்து கொள்ளக்கூடாது. இறைவன் தடுத்தவற்றை யார் கொடுத்தாலும் அதை உண்ணக்கூடாது.
முஸ்லிம்களின் உணவில் அல்லாஹ் அல்லாதவைகளுக்காக அறுக்கப்பட்டதாகவோ அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப் பட்டதாகவோ இருந்தால் உண்பது எப்படி தடுக்கப்பட்டுள்ளதோ! அதுபோலவே வேதம் கொடுக்கப்பட்டவரின் உணவிலும் அத்தகைய உணவை உண்ணக்கூடாது.  அல்லாஹ் மிக அறிந்தவன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001