ஹிஜ்ரத்ஒருபார்வை


 PrintE-mail

ஹிஜ்ரத் என நாம் வழமையாக அழைக்கும் வரலாற்று உண்மைகள் முஸ்லிம் பொதுமக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமானவை. இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தலைமையில் ஒரு சிறு கூட்டத்தினர் மக்காவிலிருந்த தம் வீடுகளை விட்டு மதீனாவுக்குப் புலம் பெயரும் நிர்ப்பந்தத்திற்குட்பட்டனர். அக்கூட்டத்தினர் தம்மிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் விட்டுசென்றது, ஈமானை மட்டும் அது சுமந்து சென்றது, நபித்துவத்தின் பின்னர் 13 ம் வருடத்தில் இது நிகழ்ந்தது. அதாவது கி.பி. 622 செப்டம்பரில் அது நிகழ்வுற்றது.
மனித மனதில் பல காட்சிகளை வரைய மூல ஊற்றாக அமைந்த, அமையும் இந்நிகழ்வு கவலையையும், மனவெழுச்சிகளையும் தூண்டும் பல நிகழ்வுகளாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் தௌர் குகை நிகழ்வு மிகுந்த மனவெழுச்சியைத் தூண்டக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. சிலந்தி குகை வாயிலில் வலைபின்னுகிறது. புறா அங்கே கூடு கட்டுகிறது. விரட்டுவோரை வழிதவறச் செய்யும் நிகழ்வுகளாக இவை அமைந்து விடுகின்றன. இறுதிமுடிவை தீர்மானிக்கும் அந்தச் சில நிமிடங்களின்போது இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் தோழர் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அப்பிரமிக்கச் செய்யும் ஆச்சரியமான வார்த்தைகளைக் கூறுகிறார்கள்:
''கவலைப் படாதீர்! அல்லாஹ் எம்முடன் இருக்கிறான்!!' (ஸூரா தவ்பா- 40)
அந்த நிகழ்வையும் அதன் தாக்கங்களையும் இன்று நாம் ஆழ்ந்து நோக்கும் போது குறிப்பாக எந்தக் கட்டங்களை, நிகழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது பொருத்தம் என்ற தடுமாற்றம் எம்மைப் பீடிக்கிறது.
அந்த நிகழ்வில் வரலாற்று வெளியில் ஒவ்வொரு நிகழ்ச்சியாக நாம் ஆராய்ந்து வரும்போது 14ம் நூற்றாண்டு முடிந்து 15ம் நூற்றாண்டில் நிற்கும் எமக்கு எந்த நிகழ்வு வெளிச்சம் போட்டுக் காட்டப்படல் பொருத்தமானது? நாம் விவரித்துப் பேச ஹிஜ்ரத்தின் எந்த நிகழ்வில் அதி கூடிய முக்கியத்துவம் காணப்படுகிறது? வாழ்க்கைக்கான கொள்கை என்றவகையில், இஸ்லாமிய சிந்தனையை வளர்த்தல் என்ற வகையில் ஹிஜ்ரத் என்ன கருத்தைக் கொடுக்கிறது? இஸ்லாமிய வரலாற்றில் ஹிஜ்ரத் ஒரு திருப்புமுனை, பிரிகோடு,
அல்குர்ஆன் இறங்கிய 23 ஆண்டு காலத்தில் அதி முக்கிய நிகழ்வு அது என ஒவ்வொரு முறையும் புதிதாக நாம் உறுதிகொள்கிறோம். பௌதீக உலகில் சூரியன் உதிப்பது எக்கருத்தைக் கொடுக்குமோ அக்கருத்தையே - ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றைப் பொருத்தவரையில் கொடுக்கிறது - மக்காவில் அந்த இரவில் முதல் வஹி இறங்கிய போதே இஸ்லாம் உதயமாகியது. என்றாலும் சூரியன் தன் முழு ஒளியோடும் மதீனாவில் தான் உதயமாகிறது அது வரையில் வெறும் ஆன்மீக இயக்கமாக இருந்த இஸ்லாம் ஹிஜ்ரத்தோடு சமூகம், அரசு, ஒருகொள்கைவாதக் கட்டமைப்பு என்ற நிலைக்குப் படிப்படியாக மாறத்துவங்கியது.
எனவே அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளல் என்பதன் மர்மங்களை நீங்கள் நேருக்கு நேர் சந்திக்க வேண்டுமானால், ஈமான் என்ற ஆழ்கடலில் நீங்கள் மூழ்க வேண்டுமானால் மக்காவில் இறங்கிய அல்குர்ஆன் ஸூராக்கள் சிலவற்றை வாசியுங்கள். ஆனால் இஸ்லாத்தை அது ஒரு சட்டத்தொகுப்பு, அரசமைப்பு என்று புரிந்து கொள்ள நீங்கள் விரும்பினால் உங்களது அந்த நோக்கத்தை நீங்கள் மதீனாவின் ஸூராக்களை ஆழ்ந்து நோக்காது அடைந்து கொள்ள முடியாது. ஹிஜ்ரத் மக்காவையும், மதீனாவையும் இணைக்கிறது. இந்தப் பாதையில் அது ஒரு மைல்கல். அது ஓர் உயர்ந்து நிற்கும் மலை. அதற்கு மேல் நீங்கள் ஏறி நின்றால் அதற்கு முன்னால் உள்ள கட்டத்தையும் பார்க்கலாம். பின்னால் உள்ள கட்டத்தையும் பார்க்கலாம். அவை இரண்டும் மட்டுமே நாம் இஸ்லாம் என்றழைக்கின்ற அக்கொள்கையை ஆக்குகின்றன. எனவே இஸ்லாமியக் காலம் எனப்படும் புதிய காலத்திற்கான உண்மையான முதற்கட்டமாக ஹிஜ்ரத் அமைகிறது.
ஹிஜ்ரத்தில் காணப்படும் ஒரே ஒரு உண்மையான, யதார்த்த பூர்வமான உண்மை இதுதான். இதே தரத்தில் உண்மையையும் யதார்த்தத்தையும் சுமந்து நிற்கும் நாம் படிப்பினைபெற இன்னொரு அம்சத்தையும் இங்கு நாம் காண்கிறோம்.
ஆம் முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் - புலம் பெயர்ந்து சென்றார்கள். ஆனால் அவர்கள் மக்காவிற்கே திரும்பி மீண்டும் வந்தார்கள்! எட்டு வருடங்கள் கழியவில்லை அதற்கிடையில் அவர்கள் வெற்றியாளர்களாக திரும்பினார்கள். அவர்கள் இணைவைத்தல், மௌட்டீக நம்பிக்கைகளின் கிப்லாவை அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்திற்கான சர்வதேசக் கிப்லாவாக்கினார்கள். அவர்கள் மக்காவிலிருந்து இணைவைப்பாளர்களின் அழுத்தங்கள், நெருக்குதலுக்கு உட்பட்டு வெளியேறிய போது பௌதீக ரீதியாகப் பலவீனமானவர்களாகவும் ஆன்மீக ரீதியாக பலமானவர்களாகவும் இருந்தார்கள். ஆனால் திரும்பி மக்காவுக்கு வந்த போது பௌதீக ரீதியாகவும்,
ஆன்மீக ரீதியாகவும் இரண்டு வகையிலும் பலமானவர்களாக இருந்தார்கள். இந்த வகையில் ஹிஜ்ரத் - சொல்லும் கருத்து தெளிவானது. அவர்கள் ஹிஜ்ரத் செய்தார்கள். வேட்டைக்காரனைக் கண்டு மிருகங்கள் தப்பி ஓடுவது போன்று ஓடுவதற்காகவல்ல. திரும்பி வருவதற்கு தம்மை தயார்படுத்திக் கொள்ளவே அவர்கள் சென்றார்கள். இதுவே உண்மையான ஹிஜ்ரத் ஆகும்.
ஆயினும் ஹிஜ்ரத்தை நாம் ஆழ்ந்து நோக்கினால் ஹிஜ்ரத்தின் வெளித் தோற்றமல்ல அகத் தோற்றமே - மானுட நிலையே - எமதறிவைக் கொள்ளைக் கொள்கிறது. ஹிஜ்ரத்தின் அந்த மானுட நிலைகள் காலம் செல்லச் செல்ல பலவீனமுற்று, அழிந்து செல்லத் துவங்கியிருப்பதை நாம் அவதானிக்கிறோம். அப்பிரபல்யமான பிரயாணத்தில் கலந்து கொண்ட அம்முகங்களை சரியாகப் பிரித்தறிந்துகொள்ள நாம் மிகக் கஷ்டப்பட வேண்டியுள்ளது.
ஹிஜ்ரத்தின் மிகப் பாரிய மிக உயர்ந்த உண்மை அந்த மனிதர்கள் அல்லாஹ்வை மிகத்தூய்மையுடன் முன்னிருத்தி செயற்பட்டதுவும், இஸ்லாத்திற்காக அவர்கள் செய்த தியாகங்களுமாகும்.
இஸ்லாத்திற்காக வாழ்ந்த அந்த வீரப்பரம்பரையினர் பற்றி ஓர் உணர்ச்சிபூர்வமான கதை எழுத கவிதா உணர்வு இல்லை எனக் கவலைப்பட மட்டுமே இங்கு முடிகிறது.
அத்தகைய கவிதா ஆற்றலைப் பெற்றில்லாவிட்டாலும் இங்கே இயல்பாகவே பல கேள்விகள் எம்மை நோக்கி வருகின்றன. இறைதூதர் அழைத்த உடனேயே தம் வீடுகளைத் தேட முன்னால் இஸ்லாத்திற்கெனப் புதிய வீடுகளைத் தேடிய அம்மனிதர்கள் யார்? அம்மனிதர்களின் யதார்த்தம், உண்மை நிலை என்ன? எம்மை விட்டு அவர்கள் ஏன் அவ்வளவு தூரம் வேறுபடுகிறார்கள்? குறிப்பாக அவர்களோடு ஒப்பிடுகையில் நாம் எந்நிலையில் இருக்கிறோம்?
இக்கேள்விகளில் அதிகமானவற்றிக்கு நாம் ஒரு வகைக் கசப்போடுதான் பதில் சொல்லவேண்டி வரும். குறிப்பாக கடைசிக் கேள்விக்கான விடை அப்படியே அமைந்துவிடப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் அப்பதில்கள் எம் ஆளுமையின் தோல்வியைக் காட்டுவதாகவே அமையும். அவர்கள்தான் தூய்மையான முஸ்லிம்கள் என்றால் நாங்கள் உண்மையில் முஸ்லிம்கள் தானா? இஸ்லாம் என்ற அம்மாபெரும் மதத்தைச் சேர்ந்தவர்களே நாம் என்று சொல்ல எமக்குரிமை இருக்கிறதா?
அவர்கள் எம்மை போன்றே லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் சொன்னார்கள்தான். ஆனால் நாம் இக்கலிமாவை திருப்பித் திருப்பிச் சொல்லும் அதேவேளை அவர்கள் நம்பிக்கை கொள்கிறார்கள். இச்சாட்சியத்தை நாம் சேர்ந்தவர்கள் தான் என்பதனை அவர்கள் தமது தியாகத்தின் மூலமும், ஹிஜ்ரத்தின் மூலமும், ஹிஜ்ரத்தைத் தொடர்ந்த அனைத்து நிகழ்வுகள் மூலமும் தம் வாழ்வில் நிறுவினர். இதற்கு நேர் முரணாக நாம் எமது அசமந்த போக்காலும், எதிர்மறைச் செயற்பாடுகளாலும், வெற்றி, பதவி, செல்வம், புகழ் என்பவற்றைத் தேடி ஓடுவதன் மூலமாகவும் எம் கண்களால் பார்ப்பவற்றை மட்டுமே நாம் நம்புகிறோம் என்பதை ஒவ்வொரு நாளும் உறுதிப் படுத்துகிறோம்.
அவர்கள் இஸ்லாத்திற்காக தம் வாழ்வை அர்ப்பணித்தார்கள். அது மட்டுமல்ல அதனைவிட மேலே போய் அவர்கள் இஸ்லாத்திற்காகவே வாழ்ந்தார்கள். ஆனால் நாமோ பயத்தாலும், மாரபடைப்பாலும், போக்குவரத்து அபாயங்களாலும், கொழுத்துப் போனதாலும், உடற்தளர்ச்சியாலும், நரம்புத் தளர்ச்சிகளாலும் இறந்து கொண்டிருக்கிறோம். நாம் இன்றிலிருந்து நாளைக்காக வாழ்கிறோம். சுருங்கச் சொன்னால் நபித்தோழர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்தார்கள். நாமோ மக்களுக்கு மட்டுமே பயப்படுகிறோம். எனவே வேறுபாடு மிகவும் பாரியது. விளைவுகளும் அப்படித்தான்.
முதல் முஸ்லிம் சமூகத்தின் மீதான சோதனைகளை ஆழ்ந்து நோக்கும் போது - ஹிஜ்ரத் அவற்றில் ஒரு பிரபல்யமான சோதனை மட்டுமே - எம்மில் பலருக்கு ஏன் இறைதூதரும் அவர்களோடிருந்த அச்சிறுகூட்டத்தினரும் சோதனைகளுக்கு உட்பட்டதன் மர்மமென்ன என்று கேட்கத் தோன்றும். ஹிஜ்ரத்தின் முன்னால் பல வகையான இழிவுகளுக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டார்கள். பின்னர் தொடர்ந்து 3 வருடங்கள் பசிக்கும், பகிஷ்கரிப்புக்கும் உட்பட்டார்கள். இறுதியில் தமது வீடுகளையும், நகரத்தையும் விட்டுச் செல்லவே அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
அல்லாஹ் சகல சக்திகளும் கொண்டவன். அவன் விரும்பியிருந்தால் ஒரு சொல் மூலமே இணைவைப்பாளர்களையும், அவர்களது சக்தியையும் அழித்துவிட்டிருக்க முடியும். அல்லது அவர்கள் மீது நோயை அனுப்பியிருக்க முடியும். அல்லது அவர்களது உள்ளத்தில் பயத்தையும், பலவீனத்தையும் போட்டிருக்கலாம். அல்லது மிகுந்த அன்போடு தம் பெயரைச் சொல்லிவாழும் அக்கூட்டத்தினரின் பாதையில் உள்ள அனைத்துத் தடைகளையும் ஏதோ ஒரு முறையில் நீக்கிவிட்டிருக்க முடியும். அப்போது தூதின் பாதை இலகுவாக மிகவும் செப்பனிடப்பட்டதாக அமைந்துவிட்டிருக்கும்.
எனினும் அல்லாஹ் இதனை விரும்பவில்லை. அச்சிறுகூட்டத்தினரை நாம் கேள்விப்பட்டுள்ள அக்கடும் துன்பங்களால் சோதித்தான்.
ஏன் அவ்வாறு செய்தான்?
இதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டுமே சொல்ல முடியும் போல் தோன்றுகிறது. அல்லாஹ் அவன் மிகப் பெரும் சக்தி படைத்தவன். மிகவும் இரக்கமும் அன்பும் கொண்டவன். அவன் உண்மையாளர்களை வேறுபடுத்த விரும்பினான். தூய்மையானோரையும் நயவஞ்சகனையும் பிரித்துக்காட்ட விரும்பினான் - நிலைத்து நின்று போராடுபவர்களையும், தடுமாறி அங்குமிங்கும் சாய்பவர்களையும் வகைப்படுத்திக்காட்ட விரும்பினான். ஏனெனில் சர்வதேசிய அப்போதைய நிலை உலகைத் தூய்மைப் படுத்தி புதிய அடித்தளத்தின் மீதெழுப்பி ஒழுங்குபடுத்தலை வேண்டி நின்றது. மனிதனும் அவனது நாகரீகமும் வழிபிறழலின் இறுதி எல்லைவரை போயிருந்தது. எனவே அந்த அழுகி நாற்றமெடுத்துப் போய்விட்ட அந்த சேற்றுக் குட்டையை தூய்மைப்படுத்த இரும்புக்கலப்பையால் உழ வேண்டியிருந்தது. அப்போதுதான் நல்ல நிலத்தில் புதிய ஒரு நாகரீகத்தின் விதைகளைத் தூவிப் பயிரிட முடியும் என்ற நிலை இருந்தது.
இத்தூதை சுமக்க யார் சக்தி பெறுவார்? அது ஒரு சாதாரண மனித பரம்பரையால் சாதிக்கக் கூடியதல்ல. இத்தூதின் பெருமையை சுமக்க தகுதிவாய்ந்ததொரு மனித பரம்பரை அவசியம். அல்லாஹ் மக்காவில் ஹிஜ்ரத்தின் பரம்பரையை இப்பெருமையை சுமக்க தெரிவுசெய்தான். அவர்கள் தம் மார்க்கத்திற்கென்று வாழ்ந்த தூய்மையாலும், தியாகத்தாலும் இத்தனித்துவ மான வரலாற்றுப் பெருமையை சுமக்க தாம் தகுதி தான் என்பதை நிறுவினார்கள்.
வரலாற்று மேடையில் நிகழ்வுற்ற அனைத்து மிகப் பாரிய மாற்றங்களையும் விவரிக்க இச்சிறிய இடம் போதாது.
இரு மிகப் பெரும் அரசுகள் இனி எழும்ப முடியாதளவு மொத்தமாக வீழ்ந்தன. புதிய பல நகர்கள் தோற்றம் பெற்றன. மாபெரும் ஒழுக்க எழுச்சியொன்று முழு உலகையும் ஆட்கொண்டது. அறிவு உலகில் மனிதன் பல புதிய துறைகளைக் கண்டுபிடித்தான். மிகச் சுருக்கமாகச் சொன்னால் புதியதொரு நாகரீகம் தோற்றம் பெற்றது.
கி.பி. 622 இல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த அச்சிறு கூட்டத்தினரே அந்நாகரீகத்தின் விதைகள் என்பதை இங்கு நாம் தெளிவாகக் காட்டுவது அவசியமாகும். அவர்களது தரத்திற்கு உயர்ந்து அவர்களோடு சமப்படுத்தி நோக்கத்தக்க எப்பரிவினரும் அக்கால உலகில் எங்கும் காணப்படவில்லை. அக்கூட்டத்தினர் தம் உள்ளங்களில் மிகத் தூய்மையான இறைநம்பிக்கையை சுமந்திருந்தார்கள். அவர்களின் அனைத்துப் பலமும் இந்த ஈமானில் - ஈமானில் மட்டுமே இருந்தது.
ஹிஜ்ரத் நிகழ்வின் பாடங்களும், படிப்பினைகளும் என்ன? என்ற அக்கேள்வியை மீண்டும் நாம் முன்வைக்கலாமா?
ஏற்கனவே நாம் சொன்ன எல்லாவற்றிக்கும் பின்னாலும் நாம் விடை சொல்லலாம் : இவ்விடயம் கேள்விக்கும், உண்மை நிலைக்குமிடையே உள்ளது. அதேனெனில் இந்நிகழ்ச்சியின் அடிப்படை உண்மைப் பொருளைப் பற்றிக் கொண்டால் கேள்வி நேற்றைப் போன்றே இன்றும் யதார்த்த செயலாக நடைமுறையாக மாறவேண்டும் என்ற கருத்தே பெறப்படுகிறது. நான் இஸ்லாத்திற்காகப் போராடப் போகிறேனா? என்பதையே இங்கு நான் கூற விரும்புகிறேன்.
ஹிஜ்ரத் செல்வதா அல்லது போகாது நின்று விடுவதா என்ற கேள்விகள் ஒரு நபித்தோழரைப் பொறுத்தவரையில் என்ன கருத்தைக் கொடுக்க முடியும்?! அவர்களில் சிலர் ஹிஜ்ரத் செல்லாது தங்கியிருப்பதைத் தெரிந்து கொண்டார்கள் என வரலாறு கூறுகிறது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அது கீழ்வரும் கருத்தைத் தருகிறது.
''நான் இஸ்லாத்தின் நன்மைக்காக எதிர்காலத்திற்காக உழைக்கப் போகிறேனா? எனது சொந்த நன்மைக்காக உழைக்கப் போகிறேனா? எனது சொந்தக் குழந்தைகளின் நலனுக்காக உழைக்கப் போகிறேனா? அல்லது உலகின் குழந்தைகளின் நலனுக்காக உழைக்கப்போகிறேனா?'
நாமனைவரும் ஹிஜ்ரத்தின் கேள்விகளுக்கு முன்னால் ஒவ்வொரு நாளும் நிற்கிறோம். கேள்வி அப்படியே இருக்கிறது. விடைகள் மாறுபடுகின்றன. நாம் ஒவ்வொருவரும் தனக்கும் அல்லாஹ்வுக்கும் முன்னால் நின்று கீழ்வரும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்:
''நான் உண்மையில் முஸ்லிமா?!' ஹிஜ்ரத் சென்ற ஸஹாபாக்களின் பதில் மிகப் பிரபல்யமானது. ஆனால் அவர்களது பதில் எமக்குப் பகரமாக அமையவில்லை. நாமே கட்டாயம் பதில் சொல்லிக் கொள்ள வேண்டும். எனினும் அவர்கள் மிக உயர்ந்ததொரு முன்னுதாரணத்தைச் சமர்ப்பித்தார்கள். அவ்வுதாரணம் ஹிஜ்ரத் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001