நெருப்பிலிருந்து பாதுகாக்கும் தான தர்மங்கள்!



பொருளாசை நிறைந்த இந்த உலகில் ஸதகா கொடுத்தல் என்பது மிக மிக அரிதாகி விட்டது. மனிதன் மரணிக்கும் போது எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட சேர்த்து வைப்பதில் தான் அதிக அக்கரை எடுத்துக் கொள்கிறான்.
அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்றை அல்லாஹ் தனது திருமறையில்,
  لَن تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا مِمَّا تُحِبُّونَ ۚ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ              நீங்கள் விரும்பும் பொருள்களிலில் இருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” (அல்-குர்ஆன் 3:92) என்று கூறுகிறான்.
இந்த உலகத்தில் மனிதன் விரும்பும் பிரதான பொருள் செல்வம். எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை அறிந்துக் கொள்ள வேண்டும.
மறுமை நாளில் ஏதாவது ஒரு சிறிய நன்மை இருந்தால் போதுமே! அதைக் கொண்டு நரகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே என ஆதங்கப்படுவான். முஹம்மது (ஸல்) அவர்கள்
பேரித்தம் பழத்தின் ஒரு கீற்றைக் கொண்டாவது உன்னை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்” என கூறியுள்ளார்கள். (புகாரி)
ஆகையால் பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றைத் தான தர்மம் செய்வதைக் கொண்டும் நரக நெருப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ளலாம் என தெரிய வருகிறது.நான் சம்பாதித்த சொத்து, என்னுடைய செல்வம் இதிலே என்னைத் தவிர யாருக்கும் உரிமையில்லை என்றெல்லாம் மனிதன் எண்ணிக் கொண்டு இருக்கிறான். ஆனால் அல்லாஹ் திருமறையில்,                                                    
                  وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِّلسَّائِلِ وَالْمَحْرُومِ                                                  
அவர்களுடைய செல்வத்தில் யாசிப்போருக்கும், வசதியற்றோருக்கும் (நாணம் காரணமாக கேட்காமலட இருப்போருக்கும்) உரிமையுண்டு” (அல்-குர்ஆன் 51:19)
என கூறுகிறான்உரிமை உண்டு என்று கூறுவதன் மூலம் எவர் ஒருவர் தான தர்மம் செய்ய வில்லையோ அவர் அல்லாஹ்விடத்தில் குற்றவாளி என அறிய முடிகிறது.
நாம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்து விடுகிறது என எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அல்லாஹ் திருமறையில்,
قُلْ إِنَّ رَبِّي يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَيَقْدِرُ لَهُ ۚ وَمَا أَنفَقْتُم مِّن شَيْءٍ فَهُوَ يُخْلِفُهُ ۖ وَهُوَ خَيْرُ الرَّازِقِينَ           
நீங்கள் எந்தப் பொருளை செலவு செய்தாலும் அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்” (அல்-குர்ஆன் 34:39)
என்று கூறுகிறான். நம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டும் எனில், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ள முடிகிறது. இதை வலுப்படுத்தும் வகையில் மற்றொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்,
مَّن ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً ۚ وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ وَإِلَيْهِ تُرْجَعُونَ              
“(கஷ்டத்திலிருப்போருக்கு) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கிறாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி, பன் மடங்காகச் செய்வான் (அல்-குர்ஆன் 2:245)
என்று கூறுகிறான்ஆதமுடைய மகன் ஒவ்வொருவரும் பாவியாக உள்ளான். தங்களுக்கு தாங்களே பாவம் செய்து கொண்ட அடியார்கள் என்று தான் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான். தங்களின் பாவங்களை அழிப்பதற்குப் பல வழிகள் உள்ளன. அவற்றில் சிறந்த ஒன்று ஸதகா என்னும் தான தர்மம்.
நபி (ஸல்) அவர்கள் “நீரானது நெருப்பை அணைப்பது போல் ஸதகா பாவங்களை அழித்து விடுகிறதுஎன்று கூறியுள்ளார்கள். (அஹமது, திர்மிதி).
தான தர்மங்கள் செய்யும் போது ஏதோ கடமைக்கு செய்யாமல், நம்முடைய தகுதிக்கு முடிந்த வரையில் செய்ய வேண்டும். பள்ளிவாசலிலோ அல்லது வெளி இடங்களிலோ உதவி கேட்பவர்களிடமே நம்முடைய பணப்பையை திறந்து 500, 200, 100, 50, 20, 10 போன்ற நோட்டுக்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் விட்டு விட்டு எப்படியாவது தேடிப்பிடித்து ஒரு ரூபாய் அல்லது அதைவிடக் குறைவாக கொடுக்கக் கூடியவர்களாக உள்ளோம். அதற்காக எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை. நம்மால் முடிந்த அளவு கொடுக்கலாமே!.
மேலும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில்,
 وَاعْلَمُوا أَنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَأَنَّ اللَّهَ عِندَهُ أَجْرٌ عَظِيمٌ 
குழந்தைகளும், செல்வங்களும் இந்த உலகத்தில் உங்களுக்கு சோதனைகளாகவே தரப்பட்டுள்ளது”(அல்-குர்ஆன் 8:28)
என்று சொல்கிறான். அந்த சோதனையில் இருந்து தப்பித்து வெற்றி பெற வேண்டுமெனில், அந்தச் செல்வத்தை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்தால் மட்டுமே ஈடேற்றம் பெற முடியும்.
மேலும் தர்மம் செய்யும் போது, மற்றவர்களுக்குத் தெரியாமல் செய்தால் அது சிறந்ததாகக் கருதப்படுகிறது.
முஹம்மது (ஸல்) அவர்கள், “வேறு எந்த நிழழும் இல்லாத அந்த நாளில் ஏழு பேருக்கு அல்லாஹ் தன் நிழலிருந்து நிழல் தருகிறான். வலது கை தருவதை இடது கை அறியாது மறைத்து தருபவர் அந்த ஏழு பேரில் ஒருவர் என்று கூறியுள்ளார்கள். (ஆதாரம் : புகாரி)
ஆனால் அதிகமான அறிஞர்களின் கருத்துப் படி, மற்ற செல்வந்தர்களை ஊக்கப்படுத்துவதற்காக, தான தர்மங்களை வெளிப்படையாகவும் செய்வது நன்மையான விஷயமாகவே கருதப்படுகிறது.
செல்வம் படைத்தவர்கள் தான தர்மங்கள் செய்து அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைந்து விடுகிறார்கள். வசதியில்லாதவர்கள் தான தர்மங்கள் எவ்வாறு செய்வது என்று நினைக்கத் தோன்றும். முஹம்மது (ஸல்) அவர்கள்,
தொழுகைக்காக எடுத்து வைக்கக் கூடிய ஒவ்வொரு அடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முவல் பூப்பதும் ஸதகா!” என்று கூறியுள்ளார்கள்.
இங்கே சஹாபாக்களின் கொடுக்கும் தன்மையை கூறுவது சிறப்புக்குரியதாக இருக்கும் என எண்ணுகிறேன். அவர்களின் செயல்களிலிருந்து நாமும் பாடம் கற்றுக் கொள்ளலாமே!
அபூபக்கர் (ரலி) அவர்களை குறித்து முஹம்மது (ஸல்) அவர்கள்இவருடைய செல்வம் இஸ்லாத்திற்கு உதவியது போல் வேறு யாருடைய செல்வமும் எனக்கு உதவியதில்லைஎன்று கூறினார்கள்.
தபூக் யுத்தத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டால் இங்கு பொருத்தமாக இருக்கும். தபூக் யுத்தத்திற்காக முஹம்மது (ஸல்) அவர்கள் பொருள் சேகரிக்க அறிவிப்பு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னிடம் உள்ள பொருள்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பது வழக்கமான ஒன்று. உமர் (ரலி) அவர்கள் இந்த முறை தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து, அபூபக்கர் (ரலி) அவர்களை முந்திவிட வேண்டும் என்று நினைத்து முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்த போது, முஹம்மது (ஸல்) அவர்கள் உங்களுடைய குடும்பத்தினருக்காக ஏதாவது வைத்துள்ளீர்களா? என்று கேட்கிறார்கள். “சிலதை என்னுடைய குடும்பத்தினருக்காக மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் கொடுத்து விட்டேன்என பதில் அளிக்கிறார்கள்.
அபூபக்கர் (ரலி) அவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் கொடுத்த போது உமர் (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள்அல்லாஹ்வும் அவனது தூதரும் எனது குடும்பத்தினருக்குப் போதுமானவர்களாக உள்ளனர் என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியபோது, உமர் (ரலி) அவர்கள்அபூபக்கர் (ரலி) அவர்களை என்னால் ஒருபோதும் கொடுப்பதில் முந்திவிட முடியாதுஎன்றார்கள். சஹாபாக்களிடையே கொடுப்பதில் அந்த அளவுக்குப் போட்டி இருந்தது.
தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை!
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளில் சிலர் தங்க நகைகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல்  இருக்கின்றனர். இவர்கள் பின்வரும் திருமறை வசனங்களையும் மற்றும் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் பற்றி சற்று சிந்தித்து அதன்படி செயல்பட கடமைப் பட்டுள்ளார்கள். அல்லாஹ் கூறுகிறான் 
ۗ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ.  يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَٰذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ   : -
யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்அல்-குர்ஆன் (9: 34 & 35).
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
தங்கம், மற்றும் வெள்ளியின் உரிமைகளை (ஜகாத்தை) நிறைவேற்றாதவனுக்கு மறுமை நாளில், அவை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்ட பாளங்களாக மாற்றப்பட்டு அதன் மூலம் அவனது முகத்திலும், விலாப்புறங்களிலும், முதுகிலும் சூடு போடப்படும். அந்நெருப்புப் பாளங்கள் குளிர்ந்து விடும் போதெல்லாம் மீண்டும் சூடேற்றப்படும். (மறுமையின்) அந்நாள்(இம்மையின்) ஐம்பது ஆயிரம் வருடங்களுக்கு நிகரானதாகும்என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம், நஸாயி.
யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய செல்வம்” ‘நானே உன்னுடைய புதையல்என்று கூறும்.” இதைக் கூறிவிட்டு,  

وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِن فَضْلِهِ هُوَ خَيْرًا لَّهُم ۖ بَلْ هُوَ شَرٌّ لَّهُمْ ۖ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ ۗ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்.” என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். (ஆதாரம்: புகாரி) அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! அதிக நன்மையுள்ள தர்மம் எது?’ எனக் கேட்டார். ‘நீர், ஆரோக்கியமுள்ளவராகவும் பொருள் தேவை உடையவராகவும், வறுமையைப் பயப்படுபவராகவும் செல்வத்தில் ஆசை உள்ளவராகவும் இருக்கும் நிலையில் தர்மம் செய்வதே அதிக நன்மையுள்ளதாகும். எனவே (தர்மம் செய்வதை) உயிர் தொண்டைக் குழியை நெருங்கும் வரை தாமதப்படுத்த வேண்டாம். அந்நிலையில் இன்னாருக்கு இவ்வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று கூறுவதிலும் அர்த்தமில்லை. ஏனெனில் அப்போது உம்முடைய பொருள்கள் மற்றவர்களுக்கென்று ஆகிவிட்டிருக்குமே!’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001