வியாழன், ஜூலை 12, 2012

இலவசஎரிச்சல்!தொலைக்காட்சி


இலவசத் தொலைக்காட்சி வழங்கப்பட்ட பிறகு, தமிழகத்தில் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத வீடுகளே இல்லை என்று கூறும் அளவுக்கு நிலைமை உள்ளது.

காலை எழுந்தது முதல் இரவு உறங்கும் வரையில் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே எல்லாப் பணிகளையும் செய்பவர்களும் உண்டு.
தொலைக்காட்சிச் சேனல்களில் சுயகட்டுப்பாடு இல்லாமல், நேயர்களைக் குறிப்பாக, இளைய சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்கிறோம் என்று அபத்தமாக பல்வேறு விளம்பரங்கள் புதிது புதிதாக உலா வரத் தொடங்கியுள்ளன.
ஒரு விளம்பரத்தில், இந்தியப் பெண் ஒருவர் ஓடிவந்து ரயிலில் ஏறச் செல்லும் வெளிநாட்டுக்காரரிடம் தனது பெரிதான வயிற்றைக் காண்பிப்பார். அந்த ஆண் மறுத்து சங்கடமாகத் தலையை அசைப்பார். ஆனால், அந்தப் பெண்ணோ அவரின் கையைப் பிடித்து இழுத்து ரயிலிலிருந்து இறக்குவார்.
அப்போதும் அந்த வெளிநாட்டுக்காரர் தான் காரணம் இல்லை என்று வேகமாகத் தலையை அசைப்பார். பிறகு, அந்தப் பெண் சேலைக்குள் ஒளித்து வைத்திருக்கும் நொறுக்குத் தீனி பொட்டலத்தை எடுத்து அவரிடம் காண்பிப்பார். இப்படிப் போகிறது அந்த விளம்பரம்.
இந்த விளம்பரத்தின் உள்அர்த்தம் மிகவும் கசப்பானது. தான் கர்ப்பமாக இருப்பதற்கு நீயே காரணம் என்று அந்தப் பெண் ஜாடையில் கூறுவது போலவும், அதற்கு அந்த வெளிநாட்டுக்காரர் இல்லை என்று ஜாடையிலேயே கூறுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
நதிகளுக்கு பெண்ணின் பெயரை வைத்துப் போற்றும் நாட்டில், பெண்ணின் தாய்மையைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு விளம்பரத்தில், இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும். ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வார்கள். அந்த ராணுவ வீரர்களில் ஒருவர் மட்டும் போரிடாமல், தான் கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனியைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அப்போது எதிரிகள் சுட்ட துப்பாக்கிக் துண்டு அந்த நொறுக்குத் தீனி பொட்டலத்தைத் துளைக்கும்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ராணுவ வீரர் தனது துப்பாக்கியை எடுத்துச் சுட ஆரம்பிப்பார். இறுதியில் ராணுவ வீரர் உயிரிழப்பார். அவரது ஆவி அந்த நொறுக்குத் தீனி பொட்டலத்தைப் பிடித்துக் கொண்டே மேலே செல்லும்.
இந்த விளம்பரத்தின் உள்அர்த்தமும் வேதனைக்குரியது. தனது உயிரைப் பணயம் வைத்து நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களைக் கொச்சைப்படுத்துவதுபோல் உள்ளது. எதிரி நாட்டினர் போர் தொடுத்தாலும், ஒரு ராணுவ வீரர் போரிடாமல் நொறுக்குத் தீனியைச் சுவைத்துக் கொண்டிருப்பார். அதே நேரத்தில் நொறுக்குத் தீனி கீழே விழுந்ததால் கோபமடைந்து போரிட்டு உயிரிழக்கிறார். இந்த விளம்பரங்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது நகைச்சுவையாக இருக்கும். ஆனால், அவற்றின் உள்அர்த்தம் வேதனையைத்தான் தருகிறது.
இது ஒருபுறமிருக்க, உள்ளாடை விளம்பரங்கள் தங்கு தடையின்றி ஒளிபரப்பப்படுகின்றன.
இதுபோன்ற விளம்பரங்களில் வெளிநாட்டினரையே பெரும்பாலும் அந்த நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. அவர்களுக்கு இதுபோன்ற விளம்பரங்களில் நடிப்பது சர்வ சாதாரணம். ஆனால், அந்த விளம்பரம் ஒளிபரப்பப்படுவது இந்தியாவில்தானே. சில சேனல்கள் இந்த விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அடிக்கடி ஒளிபரப்புகின்றன. உள்ளாடை விளம்பரங்கள் பார்ப்பதற்கே அருவெறுப்பாகவும், முகம் சுளிக்கும் வகையில் ஆபாசமாகவும் உள்ளன.
குடும்பத்தினருடன் சேர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இந்த மாதிரியான விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவதால் தர்மசங்கட நிலைக்கு பெரியவர்கள் தள்ளப்படுகின்றனர். போதாத குறைக்கு நாப்கின் விளம்பரங்களும் அடிக்கடி ஒளிபரப்பாகின்றன.
ஒளிபரப்பு அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்படும் இதுபோன்ற உள்அர்த்தம் மிக்க, அருவருக்கத்தக்க விளம்பரங்களுக்குத் தொடர்புடைய துறையினர் உடனே அனுமதி கொடுக்காமல், அந்த விளம்பரத்தை நன்கு ஆராய்ந்து, அதன் பின்னரே தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விளம்பரங்கள் ஒளிபரப்பப்படுவது கட்டுப்படுத்தப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக