வெள்ளி, செப்டம்பர் 28, 2012

பெண்கள் விட்டில் இருக்கும் போது....


PDFPrintE-mail
Q.1. பெண்கள் விட்டில் இருக்கும் போதும் தலையை மூடிக்கொண்டுதான் இருக்க வெண்டுமா?
Q.2. கணவர் பெயரை என்பெயரோடு சேர்த்து சொல்லணுமா?
Q.3. மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது?
Q.4. தர்காக்களை நம்பும் பெண்களை திருமணம் முடிக்கலாமா?
Q.5. ஓடிப்போன ஒரு முஸ்லிம் பெண் அவள் உறவினரல்லாத ஆட்களை வலிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி செய்யும் திருமணம் கூடுமா?
 
Q.1 பெண்கள் விட்டில் இருக்கும் போதும் தலையை மூடிக்கொண்டுதான் இருக்க வெண்டுமா?
வீட்டில் தனிமையில் இருக்கும் பொழுது தலை திறந்து இருக்கலாம்.
யார் முன்னிலையில் ஹிஸாப்(பர்தா) தேவையோ , அவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் தலை திறந்து இருக்கலாம். கணவன் பெயரை தன் பெயருடன் சேர்ப்பது இஸ்லாமிய வழக்கில் இல்லாத செயல் ஆகும்.
முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆண்களின் (அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் சரி, நெருக்கமான உறவு முறையாக இருந்தாலும் சரி) முன்னிலையில் உடல் மற்றும் தலையை மறைத்த நிலையிலேயே இருக்க வேண்டும்.
நம் பெண்களில் அதிகமானோர் முஸ்லிம் ஆண்களுக்கு மத்தியில் மட்டும் தலையை முக்காடிட்டு பிற ஆண்களுக்கு மத்தியில் அதைபொருட்படுத்தாமல் இருப்பதை காணலாம். இது முற்றிலும் தவறாகும். பால்காரர்தானே... தயிர்காரர் தானே... தபால்காரர்தானே..மச்சான்தானே... நண்பர்தானே... என்று "தானே" போட்டுக் கொண்டு தலைமுக்காட்டை இறக்கிக் கொள்வது இஸ்லாமிய அடையாளத்தை இழப்பதாகும். எனவே அந்நிய ஆண்களுக்கு முன்னிலையில் தலை முக்காட்டை தவிர்க்கவே கூடாது.
இதுவல்லாமல், தெர்ழுகை மற்றும் ஹஜ் உம்ரா போன்ற அமல்களின் போது பெண்கள் தலையை முக்காடிட்டு மறைக்க வேண்டும்.
மற்ற எந்த சந்தர்பத்திலும் இஸ்லாம் தலைமுக்காட்டை வலியுறுத்தவில்லை.
ஒளுவின் போது
உண்ணும் போது
குடிக்கும் போது
தூங்கும் போது
பாங்கின் போதெல்லாம் நம் பெண்கள் தலைமூடிக் கொள்வதை கடைபிடிக்கிறார்கள். ஆனால் இஸ்லாம் இங்கெல்லாம் தலையில் முக்காடிட வேண்டும் என்று எந்த சட்டத்தையும் வகுக்கவில்லை.
குறிப்பாக ஒளுவின் போது தலை மூடாமல் ஒளு செய்வதே சிறப்பாகும். ஏனெனில் தலைக்கு மஸஹ் செய்யும் போது தலையில் முக்காடிருந்தால் பெண்கள் முக்காடு சரிந்து விடாமல் பிடித்துக்கொண்டே தலையை தடவுகிறார்கள். தலைமுடி முன் பக்கமிருந்து பிடரி வரை தண்ணீரால் தடவுவதே சுன்னத்தாகும். முக்காடை கையில் பிடித்துக் கொண்டு தலையை தடவும் போது இந்த சுன்னத்தை சரியாக செயல்படுத்த முடியாமல் போய்விடும். எனவே பெண்கள் தலையை திறந்த நிலையில் ஒளு செய்வதே சரியாகும்.
  
Q.2 கணவர் பெயரை என்பெயரோடு சேர்த்து சொல்ல வேண்டுமா?
பெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்ள வேண்டுமா என்பதை பார்ப்போம்.
பெயர் என்ற குறியீடு ஒருவரை அடையாளப்படுத்துவதற்கான வழியாகும். அடையாளப்படுத்துதல் என்பது சில நேரம் சூழ்நிலையைப் பொருத்து மாறுபடும்.
குழந்தைகளை தந்தையின் பெயர்களை மாற்றி அடையாளப்படுத்தக் கூடாது என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
ادْعُوهُمْ لِآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِندَ اللَّهِ فَإِن لَّمْ تَعْلَمُوا آبَاءهُمْ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ وَمَوَالِيكُمْ
நீங்கள் (எடுத்து வளர்த்த) அவர்களை அவர்களின் தந்தைய(ரின் பெய)ர் களைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள் - அதுவே அல்லாஹ்விடம் நீதமுள்ளதாகும்; ஆனால் அவர்களுடைய தந்தைய(ரின் பெய)ர்களை நீங்கள் அறியவில்லையாயின், அவர்கள் உங்களுக்கு சன்மார்க்க சகோதரர்களாகவும், உங்களுடைய நண்பர்களாகவும் இருக்கின்றனர் (அல்குர்ஆன் 33:5)
எந்த சந்தர்பத்திலும் தந்தையின் பெயரை மாற்றி குழந்தைகளை அடையாளப்படுத்தக் கூடாது என்பதை இஸ்லாம் வலியறுத்துகின்றது. தந்தையே அறியப்படாத நிலை இருந்தாலும் வேறு யாரும் தன்னை தந்தை என்று முன்மொழியக் கூடாது என்ற தெளிவான அறிவுரை மேற்கண்ட வசனத்தில் வைக்கப்பட்டுள்ளது. தந்தை இன்னாரென்று அறியப்படாவிட்டால் அத்தகையோர் நமக்கு மார்க்க சகோதரர்களாக - நண்பர்களாக ஆகிவிடுவார்கள். (தந்தை மாற்றப்படவே கூடாது என்பது இஸ்லாமிய கோட்பாடுகளில் மிக முக்கிய ஒன்றாகும்).
இந்த வசனத்தின் பொருள், எல்லா சந்தர்பத்திலும் எல்லோரையும் அவர்களின் தந்தையில் பெயரை இணைத்தே அழைக்க வேண்டும் என்பதல்ல. தந்தை மாற்றப்படக் கூடாது என்பதை வலியுறுத்தியே தந்தைப் பெயரால் அழையுங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது என்பதை அந்த வசனத்தை சிந்தித்தால் புரிந்துக் கொள்ளலாம்.
மற்றப்படி சூழ்நிலை, சந்தர்பம், தேவையை முன்னிட்டு நம் பெயருடன் பிற பெயர்கள் - குறியீடுகள் இணைந்தால் அதை தவறென்று இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை.
இதற்ககான ஆதாரங்களை காணலாம்
يَا أُخْتَ هَارُونَ مَا كَانَ أَبُوكِ امْرَأَ سَوْءٍ وَمَا كَانَتْ أُمُّكِ بَغِيًّا
"ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (அல்குர்ஆன் 19:28)
மரியம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பெற்றெடுத்துக் கொண்டு அவர் சமூகத்தாரிடம் வந்தபோது அந்த மக்கள் மர்யமே.. என்று அழைக்காமல் மரியம் (அலை) அவர்களின் குடும்பம் அல்லது கோத்திரத்தில் அல்லது சொநதத்தில் இருந்த ஒரு நல்ல மனிதரை இணைத்து அவரை "ஹாரூன் சகோதரியே.." என்று அழைக்கிறார்கள். (அந்த மக்கள் அவ்வாறு அழைத்தது தவறென்று கூட்டிக்காட்டப்படவில்லை)
ஒரு பெண் தான் இன்னாரின் சகோதரி என்பதை எழுதியோ - சொல்லியோ வெளிபடுத்தலாம் என்பதை விளங்கலாம்.
وَضَرَبَ اللَّهُ مَثَلًا لِّلَّذِينَ آمَنُوا اِمْرَأَةَ فِرْعَوْنَ
நம்பிக்கையாளர்களுக்கு பிஃர்அவுனுடைய மனைவியை இறைவன் உதாரணமாக்குகிறான். (அல்குர்ஆன் 66:11)
وَقَالَتِ امْرَأَتُ فِرْعَوْنَ
ஃபிர்அவுன் மனைவி இவ்வாறு சொன்னார் (அல்குர்ஆன் 28:9)
وَقَالَ نِسْوَةٌ فِي الْمَدِينَةِ امْرَأَةُ الْعَزِيزِ تُرَاوِدُ فَتَاهَا عَن نَّفْسِهِ قَدْ شَغَفَهَا حُبًّا إِنَّا لَنَرَاهَا فِي ضَلاَلٍ مُّبِينٍ
அப்பட்டினத்தில் சில பெண்கள்; "அஜீஸின் மனைவி தன்னிடமுள்ள ஓர் இளைஞரைத் தனக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கிறாள்; (அவர் மேலுள்ள) ஆசை அவளை மயக்கி விட்டது - நிச்சயமாக நாம் அவளை பகிரங்கமான வழிகேட்டில் தான் காண்கிறோம்" என்று பேசிக் கொண்டார்கள் (அல் குர்ஆன் 12:30)
திருமணமான ஒரு பெண்ணை தேவையின் நிமித்தம் அடையாளப்படுத்தும் போது இன்னாரின் மனைவி என்று - தந்தைப் பெயரைத் தவிர்த்து - சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனவே திருமணமான பெண்கள் தங்கள் பெயருடன் கணவர் பெயரை சேர்த்துக் கொள்வதை தவறென்று சொல்ல முடியாது. அதே சமயம் சிலதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வஹிதா அலி (அலி என்பது கணவர் பெயரா? தந்தைப் பெயரா?) என்று தெரியவில்லை. இந்தக் குழப்பம் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். அலி கணவர் என்றால் வஹிதா w/o அலி என்று எழுதுவதே மிக சரியாகும்.
உறவு முறை சுட்டிக்காட்டப்படாமல் ஒருபெயர் தன் பெயருடன் இணையும் போது அது நாம் வாழும் நாடு போன்ற இடங்களில், பதிவு ஆவனங்களில் (பாஸ்போர்ட், ரேஷன், வங்கி கணக்கு போன்றவை) பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி விடும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Q. 3 மோசமான' நல்ல கணவனை என்ன செய்வது?
கேள்வி: என் கணவர் நல்ல மனிதர். எங்களுக்கு நான்கு வருடங்களுக்கு முன் திருமணம் முடிந்தது. எனக்காக அவரும், அவருக்காக நானும் படைக்கப்பட்டது போல் ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடந்த ஒரு வருட காலமாக அவருடைய நடத்தை மோசமாக இருக்கிறது.
பிற பெண்களுடன் 'சாட்" பண்ணுகிறார். செக்ஸ் மூவி பார்க்கிறார். கேட்டால் பொழுது போக்கு என்கிறார். என்னால் இதை அலட்சியப் படுத்த முடியவில்லை. நான் கண்டித்தாலோ, கத்தினாலோ அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு 'இனி செய்ய மாட்டேன்" என்கிறார். ஆனால் மீண்டும் செய்கிறார்.
அவரது நடவடிக்கையில் எனக்கு கடும் கோபம் வருகிறது. குழந்தைகளின் எதிர்காலத்தையும் என் வாழ்க்கையையும் நினைத்து நான் குழம்புகிறேன். நான் என்ன செய்வது..? எனக்காக துஆ செய்யுங்கள். (வாசகர் நலம் கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை)
பதில்: நாம் அளவு கடந்து நேசிக்கும் எது ஒன்றும் ஒரு சின்னஞ்சிறிய அளவு நம் விருப்பத்துக்கு மாற்றமாக நடந்தாலும் அது பெருமளவு நம்மை பாதித்து விடும். நீங்கள் உங்கள் கணவரை அளவு கடந்து நேசித்துள்ளீர்கள். இன்றும் நேசிக்கிறீர்கள். அதனால் தான் அவர் சின்னதாக கருதும் தவறு கூட உங்களை பெருமளவு பாதித்துள்ளது.
உங்கள் கணவர் அன்னியப் பெண்ணைப் பார்க்கும் போதோ - பேசும்போதோ உங்கள் மனதில் விதவிதமான குழப்பம் எழும்.
'நான் அழகாக இல்லையோ..
என் அழகு குறைந்துப் போய் விட்டதோ..
அவர் என்னை வெறுத்து விடுவாரோ..
என்னை பிடிக்காமல் போனதால் தான் மற்றப் பெண்களிடம் பேசுகிறாரோ.."
என்றெல்லாம் உங்கள் மனதில் ஏக சங்கடங்கள் தலை விரித்தாடும். தெளிவு கிடைக்க வழி தெரியாத இந்த குழப்பங்கள்தான் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பின்னாளில் வாழ்வில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தும் ஆயுதம். இதற்கெல்லாம் இடங்கொடுத்து விடாமல் இருப்பதுதான் இன்றைக்குறிய முதல் தேவை.
எதையும் நிதானமாக அணுகும் பக்குவம் நமக்கு கிடைத்து விட்டால் பாதி பிரச்சனைகள் தலைத் தூக்காமலே போய்விடும்.
என்னதான் புரிந்து நேசித்து மன உவப்புடன் கணவன் மனைவியாக இணைந்தாலும் ஆணின் இயல்பும் பெண்ணின் இயல்பும் வெவ்வேறானவை என்பது மட்டும் மாறிவிடப் போவதில்லை. தன் இயல்புக்கு தக்கவாறு கணவன் மனைவியையோ, மனiவி கணவனையோ மாற்றி விடுவது என்பது சாத்தியப்படாதவைகளாகும்.
அன்னியப் பெண்களை பார்ப்பது என்பது ஆண்களுக்கு விருப்பமானதாகும். ''என் சமூகத்தில் எனக்கு பின் ஆண்களுக்குறிய பெரும் சோதனை பெண்கள் தான்" என்பது நபி மொழி (புகாரி)
இந்த சோதனையிலிருந்து ஆண்கள் தவிர்ந்து நிற்பது அவரவர்களின் இறை நம்பிக்கையைப் பொருத்ததாகும். என்னதான் பாசமிகு மனைவி பக்கத்திலிருந்தாலும் பிற பெண்களால் ஆண் கவரப்படத்தான் செய்வான். ஆண்கள் விஷயத்தில் ஷைத்தானின் பலமே பெண்கள் தான்.
உங்கள் கணவருக்கு இறை நம்பிக்கையை அதிகப்படுத்த பாடுபடுங்கள். இறை நம்பிக்கையாளர்களிடம் ஷைத்தான் ஊடுருவும் போது அவர்களின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை இறைவன் குர்ஆனில் குறிப்பிடுகிறான்.
''(நபியே!) ஷைத்தான் ஏதாவது (தவறான) எண்ணத்தை உம் மனதில் ஊசலாட செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால் அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும் யாவற்றையயும் அறிபவனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன் 7:200)
''நிச்சயமாக எவர்கள் (இறைவனுக்கு) அஞ்சுகிறார்களோ அவர்களை ஷைத்தான் தீண்டி தவறான எண்ணத்தை ஊட்டினால் அவர்கள் (இறைவனை) நினைக்கிறார்கள். துரிதமாக விழிப்படைந்துக் கொள்கிறார்கள்.'' (அல் குர்ஆன் 7:201)
இந்த வசனங்களை பார்த்தால் உங்கள் கணவர் படிப்பினை பெரும் வாய்ப்புள்ளது. சுட்டிக் காட்டுங்கள். முக்கியமாக உங்களைப் போன்ற சகோதரிகளுக்கு நாம் சுட்டிக் காட்ட ஆசைப்படுவது என்னவென்றால் கணவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளை அலட்சியப்படுத்துங்கள் என்பதேயாகும். அலட்சியப் படுத்துங்கள் என்பதன் பொருள் அலட்சியப்படுத்துவது போன்று நடிப்பதாகும். நடிப்பது என்பதன் பொருள் நேரம் வாய்க்கும் போது அவரது தவறை பக்குவமாக சுட்டிக் காட்டுவதற்குறிய பயிற்சியாகும்.
இன்னொரு முக்கிய விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் தான் தான் விரும்புவது போல் வாழ்க்கை அமைய வேண்டும் என்றே ஆசைப்படுவான். அனால் அப்படி அமைவது வெகு வெகு சொற்பமே.. இறைவன் நாடிய படிதான் வாழ்க்கை அமையும்.
நமது விருப்பத்திற்கு மாற்றமாக, நாம் விரும்பாத ஏதாவது நடக்கும் போது 'இது இறைவன் புறத்திலிருந்து வந்துள்ள சோதனையாகும்" என்று அதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் பல வழிகளில் நாம் மனிதனை சோதிப்போம் என்று இறைவன் கூறுகிறான் (பார்க்க அல் குர்ஆன் 2:155) சோதனைகள் வித்தியாசப்படலாம். ஆனால் சோதனைக்கு உட்படுத்தப்படாத மனிதர் எவருமில்லை.
இதுபோன்ற காரியங்களுக்காக கணவணுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தால் அவர் தான் செய்யும் தவறில் மேலும் முன்னேற வழிவகுத்து விடும். அதனால் அத்தகைய காரியங்களில் ஈடுபட மாட்டீர்கள் என்று நம்புகிறோம். கணவருக்காக இறைவனிடம் முறையிடுங்கள்.
Q.4. தர்காக்களை நம்பும் பெண்களை திருமணம் முடிக்கலாமா?
தமிழகத்தில் ஏகத்துவ எழுச்சிக்குப்பின் குரான் ஹதீஸை தனது வாழ்க்கைபாதையாக தேர்ந்தெடுத்தவர்களுக்கு மத்தியில் பலமாக ஒருகருத்து விதைக்கப்பட்டுள்ளது அது என்னவெனில், தர்ஹாக்களுக்கு செல்லக்கூடிய, தர்காக்களில் நம்பிக்கையுடைய பெண்களை தவ்ஹீத்வாதிகள் திருமணம் செய்யக்கூடாது என்பதுதான்!
இதற்கு ஆதாரமாக ஒருவசனம் முன்வைக்கப்படுகிறது;
அல்லாஹ் கூறுகின்றான், "(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்." (அல்குர்ஆன் 2 : 221)
இந்த வசனத்தில் மூலம் இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ் கூறிவிட்டான் எனவே தர்காக்களை நம்பும் பெண்களை திருமணம் செய்வது ஹராம் என முடிவெடுத்துவிட்டார்கள். அதே நேரத்தில் மற்றொரு இணைவைப்பாளர்களான வேதம் கொடுக்கப்பட்டோரை திருமணம் செய்யலாம் என அல்லாஹ் அனுமதியளிப்பதை வசதியாக மறைத்துவிடுவார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்; "உங்களுக்குமுன் வேதம்கொடுக்கப்பட்ட கணவனில்லாத பெண்களை வைப்பாட்டிகள் ஆக்கிகொள்ளாமலும், விபச்சாரம் செய்யாமலும், கற்புநெறி தவறாமலும் அவர்களுக்குரிய மணக்கொடைகளை வழங்கி மணமுடிப்பது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது." அல்குரான் 5:5
வேதம் கொடுக்கப்பட்டவர்கள் உசைர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ்வின் மகனென்று கூறி அல்லாஹ்வுக்கு இணைவைத்தவர்கள் அதோடு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை அல்லாஹ்வின் தூதரக ஏற்றுக்கொள்ளாதவர்கள் அப்படிப்பட்ட யூதப்பெண்ணை மணக்க அனுமதியிருக்கும்போது அல்லாஹ்வை, ரசூலை, வேதத்தை, மலக்குகளை, மறுமையை, விதியை நம்பிய ஒருபெண் அறியாமையினால் தர்காவை நம்பினால் அவளை மணக்கக்கூடாது எனசொல்லமுடியாது.
அப்படியாயின், மேற்கண்ட
2;221 வசனத்தின் விளக்கம்தான் என்ன?
இந்த வசனம் முழுக்க முழுக்க மக்கத்து முஷ்ரிக்கீங்களை மட்டும் குறிப்பதாகும்! மக்கத்து முஷ்ரிக்குகளுக்கும் இன்றைய தர்கவாதிகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை அல்லாஹ்விடத்தில் வாங்கித்தருவார்கள் என்றுநம்பி அவுலியாக்களிடம் கையேந்துவது மட்டுமே!
அதேநேரத்தில், மக்கத்து முஸ்ரிக்குகள் அல்லாஹ்வை நம்பினார்கள் ஆனால் நம்பவேண்டியவிதத்தில் நம்பவில்லை. இதுபோக அவர்கள் ரசூலை, வேதத்தை, மறுமையை, மலக்குகளை, விதியை இதுபோன்ற இஸ்லாத்தின் அடிப்படை அம்சங்களை அவர்கள் நம்பவில்லை.
இவைகளில் ஒன்றை ஏற்று ஒன்றை மறுத்தாலும் அவர்கள் நிராகரிப்பாளர்களாக ஆகிவிடுவர். அப்படியிருக்க அல்லாஹ்வை, மலக்குகளை, வேதத்தை, ரசூலை, மறுமையை, விதியை முழுமையாக நம்பியுள்ள முஸ்லிம்கள் அறியாமையினால் தர்காவில் வஸீலா தேடுகிறார்கள் என்பதற்காக அவர்களை மக்கத்து முஷ்ரிக்கீங்கள் பட்டியலில் சேர்ப்பதும், அவர்களின் பெண்களை திருமணம் செய்வது ஹராம் என பத்வா வழங்குவதும் ஏற்புடையதன்று!
வேண்டுமானால் தர்காக்களுக்கு செல்லும் பெண்ணை மணப்பதைவிட தவ்ஹீத் பெண்ணை மணப்பது சிறந்தது என்று கூறிக்கொள்ளுங்கள். அல்லாஹ் மிக அறிந்தவன்!
Q.5. ஓடிப்போன ஒரு முஸ்லிம் பெண் அவள் உறவினரல்லாத ஆட்களை வலிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி செய்யும் திருமணம் கூடுமா?
Q. 5. ஒரு முஸ்லிம் பெண் ஓடிப் போய் அவள் உறவினரல்லாத ஆட்களை வலிகளாகவும் சாட்சிகளாகவும் ஏற்படுத்தி திருமணம் முடித்தால் அந்த திருமணம் செல்லுமா..?
அவர்கள் உறவுக் கொண்டதாக கூறினால் தண்டனை வழங்க வேண்டுமா..? அல்லது அவர்களை பிரித்து வைக்க வேண்டுமா..?
பதில் : திருமணம் என்பது ஒரு சந்தைக்கடை விஷயமல்ல அது ஒரு நல்ல பாரம்பரியத்தையும் குடும்ப அமைப்பiயும் நெடிய உறவு முறைகளையும் உருவாக்கும் ஒரு காரியம் என்பதால் இஸ்லாம் இதில் மிகுந்த அக்கரை செலுத்தியுள்ளது. ஆண் பெண்ணுக்குறிய இயல்புகளை கருதி திருமண விஷயத்தில் தன் சட்டங்களை வரையறுத்துள்ளது. அப்படி வரையறுக்கப்பட்ட சட்டங்களில் ஒரு முஸ்லிம் பெண் பொறுப்புதாரர்களோ சாட்சிகளோயின்றி தான் திருமணம் செய்துக் கொள்வதற்கு தடையுள்ளது. - வலியின்றி (எந்தப் பெண்ணுக்கும்) திருமணமில்லை - என்று இறைத்தூதர் கூறியுள்ளார்கள். இந்தச் செய்தி அபூ மூஸா, அபூ ஹுரைரா, இப்னுஅப்பாஸ், அனஸ், ஆய்ஷா போன்ற நபித்தோழர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. (திர்மிதி 1107 வது ஹதீஸ்)இங்கு வலியென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குறிப்பிட்டுள்ளது யாரைக்குறிக்கும்..?
அந்தப் பெண்ணின் பாதுகாவலர் மற்றும் பொறுப்புதாரிகளைக் குறிக்கும்.வலி என்ற வார்த்தையின் கணத்தை நாம் விளங்கினால் எவர் வேண்டுமானாலும் வலியாகி விடலாம் என்ற வாதம் தவறு, அப்படி தீர்மாணிக்க முடியாது என்பதை விளங்கலாம். திருமணம் முடிப்பதாக இருந்தால் முஸ்லிம் பெண்ணுக்கு பொறுப்புதாரி அவசியம். இது அவள் மீது அக்கரை செலுத்தக்கூடிய ஆண் சொந்தங்களையே குறிக்கும். வலி என்பது ஒரு பெண் அவளாக தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை குறிக்காது. அவள் மீது இறைவன் ஏற்படுத்தின உறவைக் குறிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக