வியாழன், மே 30, 2013

இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்!

                                   
இஸ்லாத்தை சாராதவர்களின் பார்வையில் இஸ்லாம் என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்துவருகிறது. அப்படிபட்ட விமர்சகர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் 'இஸ்லாத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள்' என்பதே...
இந்த ஆயுதம் உண்மையில் கூரிய கத்தியா அல்லது அட்டை கத்தியா   என தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், இறைவனின் கட்டளைகள் இறங்கிக்கொண்டிருந்த அந்த ஆரம்ப காலகட்டத்தில்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வையின் கீழ் வாழ்ந்த இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலையை பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். சில இடங்களில் இஸ்லாமிய ஆண்கள் எல்லாம் பாவம் என சொல்ல வைக்கும் :-) மேலும்  எந்த இடங்களில் தான் (?) பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள் என்று புரியும்! அல்லது எவ்விதத்தில் இஸ்லாமிய பெண்கள் குறைந்தவர்கள் என்ற உண்மை தெரியவரும் இன்ஷா அல்லாஹ்!
இன்றைய காலகட்டத்தில் காலையில் வேலைக்கு செல்லும் கணவன் இரவு தான் வீட்டிற்கு திரும்புகிறான். ஆனால் அவன் மனைவியோ காலை முதல் இரவு  தூங்க போறதுக்குமுன் பாத்திரம் கழுவுற வரைக்கும் மிஷின்னா செயல்படணும். இது தான் இன்றைய 99 சதவீத பெண்களின் நிலை. ( மிச்சம் 1 சதவீதம்  ஆளுங்க அதிஷ்ட்டக்காரங்களா இருப்பாங்க... கண்டுக்கவேண்டாம் விட்டுதள்ளுங்க :-)  பெண்ணினத்திற்காக எழுதப்படாத  இந்த 'மாடா உழைக்கணும்' விதியில்  இன பாகுபாடே கிடையாது! இஸ்லாமும் அதையே தான் சொல்கிறது என்கிறீர்களா? ம்ம் ஆமா.. ஆனா இல்ல :-)
கணவனுக்கு பொருளாதார பொறுப்பும், மனைவிக்கு குடும்ப பொறுப்பும் கொடுத்து, ஆனால் சின்னதா மாற்றம்... நாம்  இன்று ஆண்-பெண் சமம் என்று சொல்லக்கூடிய வீட்டுவேலைகளில் ஆண்களும்  பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற சமத்துவ விதி அக்காலத்திய பெண்களுக்கும் கிடைத்திருந்தது. தன் தூதனின் வழியாக கணவன் மனைவியிடத்தில் எப்படி நடந்துக்கொள்ள வேண்டுமென படைத்தவன் எடுத்துக்காட்ட வைத்தான்!
சமுதாயத்தை மாற்றி அமைக்கும் பொறுப்பு, மக்களின் பிரச்சனைகளை தீர்க்க கூடிய பொறுப்பு, மனைவி மக்களுக்கு பொருளாதார வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டி தொழில் செய்வது, இது போக அவ்வபோது போர் செய்ய வேண்டிய சூழலில் இருக்க கூடிய நபியோ, வீட்டிற்கு வந்தால் ஹாயாக சோபாவில் அமர்ந்து தங்கதட்டில் சாப்பிட்டு, மனைவியை கால் பிடிக்க சொல்பவரா இருந்தாரா எனில்...... ம்ஹும்.... இல்லை!
தனக்கு இருக்கும் ஓய்வு நேரத்தில் வீட்டில்  கிழிந்த தன் ஆடையை தைப்பதும் , அறுந்து போன தன் செருப்பை தைக்கிறதும், மனைவிக்கு வீட்டுவேலையில் மனைவிக்கு உதவியஅக  இருக்கிறதும் என இருந்ததுடன்  தன் தனிபட்ட வேலைகளையும் செய்பவராக இருந்திருந்தாங்க! (நான் ஒரு முஸ்லீம் என பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஆண்களும்  சுயபரிசோதனை செய்துக்க வேண்டிய இடம்  இது:-) ஒரு சாம்ராஜ்யத்தை ஆளும், மக்கள் போற்றும் மனிதர், மனைவியை நடத்திய விதம் பாத்தீங்களா?
ஆணுக்கு பொருளாதார கடமை, பெண்ணுக்கு குடும்ப பொறுப்பு கடமை என  இருவருக்குமுள்ள  கடமைகளை தனித்தனியே வரையறுத்து கொடுத்தபோதிலும் கணவனுக்கு தொழிலில் உதவியாக மனைவியும், மனைவியின் வீட்டுச்சுமைகளில் பங்குபோடும் கணவனும் என பெண்ணின் உணர்வை புரிந்துக்கொண்டே நடந்தார்கள். இவ்வேலைகளெல்லாம் ஆண்களுக்கானதல்ல என்று  பெண்களின் பக்கம் சுமையை தள்ளிவிடக்கூடிய, 'ஆணாதிக்கம் தலையெடுத்ததன் அறிகுறி எங்கும் இல்லை!
அடுத்ததாக....பெட்டை கோழி கூவி பொழுது விடியாது என்ற வாசகம்  சமூகத்தில் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட பேச்சுரிமையின் பொதுவான அடையாளம். என்னதான் பெண்சம உரிமைன்னு பேசிக்கொண்டாலும் "பொம்பள (?!) பேச்ச கேக்கணுமா?" ன்னு மனசுல உறுத்தாம இருக்காது! இது ஒரு புறம் இருக்க, நவீன காலத்தில் ஏதேனும் ஒரு பொதுபிரச்சனை ஏற்பட்டால் அதை சம்மந்தப்பட்ட மக்களின் பிரதிநிதியிடம் கொண்டு செல்லவும், எதிர்த்து ஒரு வார்த்தை பேச ஆண்களுமே பேச தயங்கும், பயம் கொள்ளும் சூழலில்  பிற்போக்குத்தனமான மார்க்கம் என எல்லோராலும் எள்ளிநகையாடப்படும் இஸ்லாத்தில், அக்கால கட்டத்தில், பெரிய பகுதியை ஆள கூடிய ஜனாதிபதி ஒருவர் சட்டம் இயற்ற, ஆண்களும் பெண்களும் வீற்றிருக்கும் பொது திடலில் அதை எதிர்த்து குரல்கொடுத்தார்  ஒரு பெண்! ஆண்கள் அடங்கிய சபையில், ஒரு ஆணை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு அந்த பெண்ணுக்கு எதுவும் தடையாக  இருக்கவில்லை.
ஆண்கள் பெண்களுக்கு கொடுக்கும் மணக்கொடையின் அளவில் உச்சவரம்பை கொண்டு வரவும், அப்படியும் அதிகமாக வாங்கும்  பெண்ணிடமிருந்து  வரம்புக்கு மீறிய தொகை வசூலிக்கப்பட்டு அரசுபொதுநிதியில் சேர்க்கப்படும் என்றும்  சட்டம் கொண்டுவர நினைத்து, அதை பொதுமக்களுக்கு அறிவிக்க மேடையில் ஏறுகிறார் அதிபர் உமர். தான் கொண்டு வந்த சட்டத்தை பற்றி மக்களிடம் கூறுகிறார்.  அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் "அல்லாஹ்வும், அவனது தூதரும் கொடுத்த உரிமையை நீங்கள் எப்படி பறிக்கலாம்..? உங்கள் துணைவியரில் ஒருவருக்கு ஒரு பொருள் குவியலே கொடுத்திருந்தாலும் அதை திரும்ப பெறக்கூடாது என்றல்லவா குர் ஆன் வாசகம் சொல்கிறது" என கேள்வி எழுப்பினார். தன் தவறை உணர்ந்து உமர் ரளியல்லாஹு அன்ஹு உடனே தன் கொண்டு வந்த சட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டார்.
ஒரு சாதாரண பெண்மணி அதிகார பலம்கொண்ட அதிபர் கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து பொதுவில் கேட்கிறார்.. எவ்வித ஈகோவும் இல்லாமல் உடனே அப்பெண்ணிடம் மன்னிப்பும் கேட்டு, சட்டத்தை திரும்பவும் பெற்றுக்கொண்டார் அதிபர்! பெண் பேச்செல்லாம் கேட்க தேவையில்லை என்றோ, அனைவர் கூடும் பொதுவான இடத்தில் பெண்ணுக்கு என்ன வேலை என்றோ யாரும் சொல்லவில்லை!
பெண்ணின் கருத்து சுதந்திரத்திற்கு தடை ஏதும் இருந்ததில்லை. ஆண்கள் இருக்கும் சபையில் ஒரு பெண்ணால் குரல் எழுப்ப முடிந்தது என்பதும் கூடவே  'சட்டமியற்றும் போது பெண்களை ஒதுக்கிவிட்டு செயல்படுவில்லை! என்பதும் கவனிக்கத்தக்கது! தீர்ப்பு கூறும் விஷயத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தெளிவு, அக்கால கட்டத்தில் பெண்களுக்கு அறிவு  சார்ந்த விஷயங்கள் போதிக்க தடுக்கப்படவில்லை  என்பதை தெளிவாக காட்டுகிறது.
மேலே நான் சொன்ன அதே அதிபரின் மனைவி இரவுதொழுகைக்காக கூட்டாக தொழுகவதற்கு பள்ளிவாசல் வரக்கூடியவர். அப்படி வந்திருக்கும் போது ஒருமுறை அவரிடம் ஒருவர் வந்து 'உன் கணவர் தான் ரொம்ப ரோஷக்காரராச்சே?! பின்ன எப்படி பள்ளிவாசலுக்கு வரீங்க? இந்த விஷயம் தெரிஞ்சா அவர் கோபப்படுவாரே? அவர் ரொம்ப கோவக்காரராச்சே" என கேட்க, "அவர் எப்படி என்னை தடுப்பார்? அவர் என்னை தடுக்க முடியாது. ஏனெனில் பெண்கள் பள்ளிக்கு தொழுக வந்தால் அவர்களை தடுக்காதீர்கள்' நபி ஸல் சொல்லியிருக்காங்க!"...
கணவன் கட்டளையிட்டாலோ அல்லது கட்டுபாடுகள் விதித்தாலோ உடனே அடங்கி போக வேண்டும் என இக்காலத்திலும் நினைக்கும் நம் போன்ற பெண்களுக்கு மத்தியில்... கணவனே சொன்னாலும் கூட "படைத்தவனுக்காக தான் அடிபணிய வேண்டும், படைக்கப்பட்டவர்களுக்கல்ல" என்ற வைராக்கியத்துடன் அவர்களால் இருக்க முடிந்தது!  அதுவும் அந்த உரிமைக்கான காரணமாக அவங்க சொன்னது இஸ்லாம்!  நம்மில் எத்தனை பேருக்கு இந்த சுதந்திரம் இன்று கிடைத்துள்ளது? அல்லது இப்போது இந்த சுதந்திரம் கிடைக்கப்பெற்ற  இக்காலத்திய பெண்களுக்கு அக்காலத்திய இஸ்லாமியப் பெண்மணிகள் எவ்விதத்தில் குறைந்தவர்கள்??? தனிபட்ட மனிதனுக்காக்க தனது  உரிமையை விட்டுகொடுக்க கூடாது என்ற திமிர் தான் பெண்ணியவாதியின் அடையாளம் எனில் மேலே குறிப்பிட்ட அந்த பெண்மணி 'உரிமையை விட்டுகொடுக்காத அடிமைவர்க்கமா???'
ஹிஜாப்பின் விஷயத்திற்கு வருவோம். வழக்கம் போல்  முழுதாக உடை உடுத்துவது தப்பா என்றெல்லாம் கேட்கப்போவதில்லை! :-)
ஹிஜாப் என்பது பெண்களுக்கு மட்டுமெனில் ஆணாதிக்க மதம் என்ற வாதத்தில் உண்மை இருக்கலாம்.. ஆனால்  இருவரையும் அல்லவா பார்வை தாழ்த்த சொல்லியிருக்கிறது இஸ்லாம்?? இருவரையும் அல்லவா வெட்கத்தலங்களை பேணிகொள்ள சொல்கிறது இஸ்லாம்இதுவும் ஏற்கனவே கேட்ட மாதிரி இருக்கா :-) சரி ஒரு உதாரணம் சொல்லலாம்...
ஆலோசணை கேட்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோக்கி ஒரு பெண் வராங்க. நபியின் தோழர் ஒருவர் அந்த பெண்ணையே பார்த்துக்கொண்டிருந்தார். இதை எதேச்சையாக பார்த்துவிட்ட நபியோ அந்த பெண்ணை அதட்டவில்லை, முகத்தை மூடு என கட்டளையிடவில்லை, மறைவாக ஒளிந்துக்கொள் என சொல்லவில்லை! அந்த பெண்ணை பார்த்த அந்த தோழரின் முகத்தை, தன் கையால் வேறுபக்கம் திருப்பி விட்டாங்க... தவறு எங்கு நடக்கிறதோ அங்கே தான் தட்டப்பட்டிருக்கிறது.... எதெற்கெடுத்தாலும் பெண்களையே குறையாக கருதித்திரிந்ததில்லை!!
பிற்போக்கு மதமான  இஸ்லாத்தில் பெண்களின் சொத்துரிமை எப்படி இருக்கும்னு நெனைக்கிறோம்?
*இஸ்லாமிய பெண்களுக்கு சொத்துரிமையே கெடையாது?!!! -இப்படியா?
*அவங்க கணவன் தான் சொத்துக்கு சொந்தமானவங்க - இப்படியா?
ம்ஹும்.............. !!!!!
ஒருமுறை ஜைனப் என்ற பெண்  அவர்கள் பிலால் (இவுகதேன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நெருங்கிய தோஸ்த்) அவர்களிடம்  " என்னுடைய கணவருக்கும் என்னுடைய பராமரிப்பிலுள்ள அனாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள் என சந்தேகம் கேட்டிருக்கிறார்!
உம்மு ஸலமா என்ற பெண்  இறைதூதரிடம்  தன் கணவனான அபூ ஸலமாவின் குழந்தைகளுக்குச் செலவழிப்பதற்காக தனக்கு நன்மையுண்டா? என கேட்டிருக்கிறார்.
தன் கணவனுக்கும், தன் பராமரிப்பில் இருக்கும் அனாதைகளுக்கும், குழந்தைகளுக்கும் செலவழிக்கும் அளவுக்கு சொத்துக்கள் தனியாக நிர்வகிக்கும் உரிமை பெண்களுக்கு  அப்போதே   இருந்துள்ளது! மட்டுமல்லாமல் தனக்குரிய சொத்தை 'கையாளும் தகுதிபெண்ணுக்கே உரியது என்பது மேலே சொல்லப்பட்ட சூழ்நிலைகளை கொண்டு புரிந்துக்கொள்ள முடிகிறது.
இது என் பணம் என சொன்னாலே சண்டைக்கு வரக்கூடிய கணவன் இப்போதிருக்கும் போது தன் சொந்த தனி சொத்தை/பணத்தை வச்சு, தான்  தன்  கணவனுக்கு செலவு செய்வது பற்றி கேள்வி எழுப்பியிருக்காங்க! பெண்ணுக்கு எதுவும் தெரியாது என்றோ, அவளுக்கு நிர்வகிக்க தகுதியோ அறிவோ இல்லை என்றோ சொல்லிவிடவில்லை. நிர்வாகத்தில் ஆணுக்கு சமமாக பெண்ணுக்கு கொடுக்கப்பட்ட உரிமை அல்லவா இது?
மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் அனைத்தும் தனிபட்ட ஒரு பெண்ணின்  எதிர்க்கும் திறனை சார்ந்த விஷயம்  அல்ல! இஸ்லாம் ஒட்டுமொத்த பெண் சமூகத்திற்கும் கொடுத்த உரிமை.  இஸ்லாமிய பெண்மணிகளின்  ஒட்டுமொத்த நிலையும் இதுவே! இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக கொண்ட ஆண்கள் பெண்களை நடத்திய விதமும் இப்படியே....
இக்காலத்திய பெண்களுக்கு அக்காலத்திய இஸ்லாமியப் பெண்மணிகள் எவ்விதத்தில் குறைந்தவர்கள்??? எந்த விஷயத்தில் அவர்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது?
தன் பெண்மக்களிற்குச் செய்யவேண்டிய  - கல்வி கொடுத்து, நற்பண்புகள் போதித்து, திருமணம் செய்விப்பது - போன்ற அனைத்து கடமைகளையும் நல்லமுறையில் எந்த குறைவுமின்றி  நிறைவேற்றிய பெற்றோர், சொர்க்கத்தில் இரு விரல்களின் நெருக்கம் போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருப்பார்கள் என்ற வாக்குறுதி ஒன்று போதும்  பெண்ணை அடிமைபடுத்தும் மார்க்கம் என்ற வெற்று கூச்சலை நசுக்கிவிட....
நம் வாழும் பகுதிகளில் பாரம்பரியம், பண்பாடு, பழக்க வழக்கங்கள் ஆகியவைகளை கொண்டு, படிப்பறிவும், மார்க்க அறிவும் அற்ற சிலர் உண்மையை உணராது பெண்களை கட்டுப்படுத்துவதும்  உண்மைதான். ஆனால்  "இன்ன இன்னவை பெண்களுக்குரிய உரிமை, இதில் தலையிட யாருக்கும் அனுமதி இல்லை" என கூறி பாதுகாப்புடன் கூடிய சுதந்திரத்தை வழங்கிய இஸ்லாம் எவ்விதத்தில் பொறுப்பு ஏற்கும்?
புர்கா/ஹிஜாப்  விஷயத்தில் மட்டும்தான்  பெண்களின் நிலையை  பார்ப்பதை கொஞ்சம் தூர ஒதுக்கிவிட்டு  நிர்வாகத்தில், குடும்பத்தில், சமுதாயத்தில் ஏன் தனிமனித செயலிலும் கூட இக்காலத்திய பெண்களை போன்றே, எவ்வித அடக்குமுறைகளுக்கும் வழியில்லாது சம உரிமையுடன் வாழ்ந்த  பெண்களை, அவர்களுக்கு  அந்த சம உரிமையை கொடுத்த/ ஆண்களுக்கு நிகரான செயல்பாடுகளில் தலையிடாத இஸ்லாத்தை திறந்த மனதுடன்  ஆராயலாமே.... எத்தனை காலத்துக்குத்தான் ஒருசார்பு ஊடகமும் போலி பெண்ணியவாதிகளும் சொல்வதையே கேட்டுக்கொண்டிருக்க போகிறோம்?

ஐரோப்பாவானது 17 ம் நூற்றாண்டில் பெண்ணுக்கும் உயிர் உண்டா? என விவாதம் நடத்திக் கொண்டிருந்தபோது, அஞ்ஞான இருள் துடைக்க வந்த அரபுலகத்தில் 1420 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உள்ளன என சட்டமியற்றியது மட்டுமல்ல, பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி, தாம் ஒரு உன்னதாமாக சமூகம் எனவும் நிரூபித்தது.

இறைவனின் திருமறை வழி வந்த அந்த சமூகம் திருமறையின் கீழ்காணும் வசனம் மூலம் பெண் என்பவளும் ஆணைப் போலவே உரிமைகள் பெற்ற ஒரு படைப்பு என உணர்ந்து கொண்டது.
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (04:01)
மேலும் எதன் முலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கின்றானோ, அதனை (அடையவேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள்; ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்(வற்றில் உரிய) பங்குண்டு; எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (04:32)
பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு; அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (04:07)
மேற்கண்ட இறைவசனங்கள் ஆண்களைப் போலவே பெண்களும் அனைத்து சமபங்கு பெற்றவர்கள் என்று தெளிவாகக் கூறி அதை நடைமுறையிலும் செயல்படுத்திக் காட்டியுள்ளது. இறைவன் பெண்களுக்கென வழங்கிய உரிமைகளை ஆட்சியாளர்கள் கூட அகற்றவோ குறைக்கவோ முயன்ற போது, இறையச்சம் அச் செயல்களில் ஈடுபடுவதிலிருந்து அவர்களைத் தடுத்துக் கொண்டது என்பது வரலாற்று உண்மையாகும்.
இஸ்லாம் பெண்ணுக்கு எழுத்துரிமை, கல்வி கற்க உரிமை, பேச்சுரிமை, சொத்துரிமை, விவாக மற்றும் விவாகரத்து உரிமை (பல மதங்கள் இந்த உரிமையைப் பெண்களுக்கு இன்னும் வழங்கவில்லை) போன்ற இன்னும் ஆண் பெற்றுள்ள அனைத்து உரிமைகளையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி கௌரவித்துள்ளது மட்டுமல்லாமல், பெண்ணின் முப்பருவங்களைச் சுட்டிக்காட்டி, குழந்தை, மனைவி, தாய் ஆகிய மூன்று நிலைகளில் அவளுக்குள்ள தனிச் சிறப்புக்களையும் தெளிவாகவே சுட்டி செயல்படுத்தியும் வருகிறது.
பெண்குழந்தைகள் பெறுவது சாபக் கேடு என்று கருவிலேயே அவற்றைக் கொல்லும் இந்த நாளிலே, பெண் குழந்தையின் வளர்ப்பின் சிறப்பு பற்றி 1420 ஆண்டுக்கு முன்னரே இஸ்லாம் எவ்வளவு பெரிய சிகரத்தில் பெண்ணின் பெருமையை வைத்துள்ளது என்றால்,
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், யாரிடம் இரண்டு பெண் குழந்தைகள் இருந்து அவற்றை நல்ல முறையில் பராமரித்து கல்வி புகட்டி, ஒழுக்கத்துடன் வளர்க்கிறாரோ அவரும்நானும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என தம் இரு விரல்களையும் சமமாக நிறுத்தி சுட்டிக் காட்டினார்கள்.
அதுபோலவே, உங்களில் சிறந்தவர் யார் எனில், உங்கள் மனைவியிடம் சிறந்த முறையில் நடந்து கொள்கிறாரோ அவரே! என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்.இன்னும் ஒருமுறை ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ
¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இவ்வாறு வினவினார்கள் : என்னுடைய முதல் சேவையைப் பெற்றுக் கொள்ள உரிமை படைத்தவர் யார் என வினவியபோது, உனது தாய் என நபி ஸல்லல்லாஹ¤அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தார்கள். மீண்டும் அவர் வினவிய போதும் தாய் என்றும், மூன்றாம் முறையும் வினவிய போதும் தாய் என்றும், நான்காவது முறையாக வினவிய பொழுது தான் தந்தை எனப் பதில் கூறினார்கள்.
இவ்வாறு அன்றும் சரி இன்றும் சரி வயதானவர்களை மதிப்பதில் இஸ்லாம் கற்றுக் கொடுத்த அளவும், அதே போலப் பெண்களைக் கௌரவிப்பதில் இஸ்லாம் வழங்கியுள்ள நெறிமுறைகளும் உலகின் வேறு எந்த மதமும் வழங்காதவை.
பெண்களின் பிரசவ வலியின் போது, மருத்துவமனையில் வலியின் தீவிரத்தைக் குறைக்க மயக்க மருந்து கொடுத்து, பிரசவம் பார்ப்பதுண்டு. அந்த மயக்க மருந்து கொடுப்பதை இன்றும் ஒரு சமூகம் எதிர்த்து வருகிறது. ஏனெனில், அது ஏவாளுடன் பிறந்த, இறைவன் ஏவாளின் தவறுக்கு வழங்கிய தண்டனையான பிறவிப் பாவம் என இச்சமூகம் கருதுவது தான் காரணமாகும். மயக்க மருந்து கொடுத்து அந்தத் தண்டனையைப் பெறுவதிலிருந்து அவளை விடுவிக்கக் கூடாது என இன்றும் பெண்கள் மீத திராத பாவச் சுமையை - அதவாது அன்று ஏவாள் செய்த பாவத்திற்கு எந்த பாவமும் செய்யாத இன்றைய பெண்களும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அதிலிருந்து அவளை விடுவிக்கக் கூடது என இன்றும் பெண்கள் மீது தீராத பாவச் சுமையை ஏற்றி வருவது போல இஸ்லாம் பொறுப்பின்றி எந்த நிலையிலும் ஈடுபடவில்லை.
அவளது மாதவிடாய்க் காலத்தில் அவளைத் தீண்டத் தகாத பிறவியாக இன்னும் பல்வேறு சமூகங்கள் அவளை நடத்தியும், அக்காலத்தில் அவளை வாழும் இடங்களில் இருந்து தனிமைப்படுத்தியும் வருவது நாம அறிந்ததே.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளியில் இருக்கும் போது ஆயிஷா ரளியல்லாஹ¤ அன்ஹா அவர்களை அழைத்து ஆயிஷாவே! அந்த ஆடையை என்னிடம் எடுத்துத் தாருங்கள் என்று கேட்டார்கள். நான் தொடத் தகாதவளாக உள்ளேன். (அதாவது மாதவிடாய்ப் பெண்ணாக உள்ளேன்) என்று கூறினேன். மாதவிடாய் உனது கையில் இல்லையே, என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும், அந்த ஆடையை எடுத்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்தேன். (அறிவிப்பவர் : ஆயிஸா ரளியல்லாஹ¤ அன்ஹா (நூல் : நஸயீ).
இன்னும் ஒரு சமூகம் கணவன் இறந்து விட்டால் அவளை எரியும் நெருப்பில் ஏற்றி அவளை மாய்த்துக் கொண்டிருக்கிறது. அவளை மொட்டையடித்து, அவளுக்கென தனி ஆடை கொடுத்து, முக்கியமான நிகழ்வுகளில் அவளை தீண்டத்தகாதவளாக சமூக பகிஷ்காரம் செய்தும் வருகிறது.
மேலும், இவர்கள் மறுமணம் என்றால் என்ன என்பதையே நினைத்தும் பார்க்க தகுதியற்றவர்களாக, அச்சமூகத்தில் சிறுமைப்படுத்தப் படுகின்றனர்.
மேற்கண்ட நிலைகள் உலகின மிகப் பெரும் மதங்களில் நடைபெறம் நிகழ்வுகளாகும். இவை எல்லாம் 1420 ஆண்டுக்கு முன்னரே இஸ்லாத்தின் வரவால் துடைத்தெறியப்பட்ட சமூகக் கழிவுகளாகும்.
பெண்ணின் குழந்தைப் பருவத்தில் இருந்து ஆரம்பித்து அவள் முதமை அடையும் வரையும், அவளது இறுதி நாள் வரையும் இஸ்லாம் தந்த சமூக பாதுகாப்பு அளவிட இயலாதது. அந்தப் பாதுகாப்பை இஸ்லாம் இன்றும் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
சிசுவதையும், வரதட்சணைக் கொடுமையால் ஸ்டவ் வெடித்து பெண் சாவதும், வயதான காலத்தில் கவனிப்பாரற்று விடப்படும் முதியவர்களின் எண்ணிக்கையும் மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களிடத்தில் இவை குறைவான நிகழ்வுகளே என புள்ளி விபரங்கள் நிரூபிக்கின்றன.
இன்றைக்கு முதலாளித்துவ சிந்தனையின் தாக்கம் கம்யூனிஸ சித்தாந்தத்தையும், கடவுளே இல்லை என மறுப்போரையும் ஆட்கொண்டதன் விளைவு, இன்றைக்கு முஸ்லிம் பெண்கள் அணிந்திருக்கும் பர்தா முறையைப் பார்த்து, முதலாளித்துவம் விமர்சிப்பது போலவே இவர்களும் விமர்சிக்க ஆரம்பிக்கின்றார்கள். முதலாளித்துவத்திற்கு தன்னுடைய கடைச் சரக்கை விற்க பெண்கள் கவர்ச்சிப் பொருளாக மாற வேண்டும், அப்படி மாறினால் அந்த தன்னுடைய சரக்கு விற்பனையாகும் என்பதால், பெண்ணை அவளது மானத்தை, அவளது கண்ணியத்தை காற்றில் பறக்க விட்டு விட்டு, தன்னுடைய பணப்பையை நிரப்பிக் கொள்கின்றது.
இதனைத் தவிர்க்கும் ஒவ்வொரு பெண்ணும் பத்தாம் பசலி என அழைக்கப்படுகின்றாள். கடைச்சரக்காக, காட்சிப் பொருளாக மாறாக ஒவ்வொரு பெண்ணும் விமர்சிக்கப்படுகின்றாள். அந்த வகையில் கடைச் சரக்காக மாறாது, பெண்மையின் மென்மையை மூடி மறைத்து, அவர்களை கண்ணியப்படுத்தும் அந்த பர்தா உடையும் இன்றைக்கு விமர்சனத்திற்குள்ளாகின்றது. அந்த உடை அடக்குமுறையின் சின்னமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த விமர்சனப் பார்வைப் பழுதில், கம்யூனிஸம் பேசும் சகோதரர்களும், கடவுளே இல்லை எனப் பேசும் சகோதரர்களும் வீழ்ந்து விட்டில் பூச்சிகளாய், கிணற்றுத் தவளைகளாய்க் கத்துவது அவர்களது அறியாமையைத் தான் காட்டுகின்றது.
ஒரு மருத்துவ ஆய்வு அறிக்கை இவ்வாறு கூறுகின்றது:
ஆணுக்கு காம இச்சைத்தூண்டுதல்கள் அவன் பெண்ணைப் பார்க்கும் பார்வையிலேயே ஆரம்பமாகி விடுகின்றது. ஆனால் பெண்ணுக்கோ அவளைத் தொடும் பொழுது தான் காம இச்சை உடலிலே தூண்டப்படுகின்றது.
பெண் கவர்ச்சியானவள். கவர்ச்சியாக அவள் உடை அணிந்து செல்லும் பொழுது, அவளது அங்கங்களைப் பார்க்கும் ஆடவனுக்கு காம இச்சை தூண்டப்படுகின்றது. சமூகக் குற்றம் அவனது பார்வையிலிருந்து ஆரம்பமாகின்றது. அந்தக் குற்றம் நிகழ அவள் உடுத்தும் உடையழகு காரணமாகி விடுகின்றது. எனவே, அந்த பெண்மையின் அழகை, மென்மையை மூடி மறைத்துக் கொள்ளுங்கள் என இஸ்லாம் கூறி, ஆணையும் பெண்ணையும் சமூகக் குற்றத்தில் ஈடுபடாமல் பாதுகாக்கின்றது.
காரணம்..! இந்தப் பூமி சமூகக் குற்றங்கள் இல்லாத அமைதியான பிரதேசமாக இருக்க வேண்டும் என்பதே அல்லாமல், அவளை மூடி மறைத்து வீட்டில் முடக்கிப் போட வேண்டும் என்பதனால் அல்ல என்பதை சகோதரர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பகுத்தறிவு என்பது கண்ணுக்கும், புலனுக்கும் எட்டுவது மட்டுமல்;, அதற்கு அப்பாலும் உண்டு என்பதையும் உணர்ந்து செயல்படுவது நன்று.
இன்றைக்கு பெண்ணியம் என்றும் ஆணாதிக்கம் என்றும் தமிழுக்குப் புதுப் புது வார்த்தைகளை இந்த நவீன? சிந்தனாவாதிகள் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகின்றார்கள்.
மனித வாழ்வில் குடும்ப அமைப்பு என்பது முக்கியமானதும், இயற்கையானதும் கூட. ஆண் அவனது பொறுப்பையும், பெண் அவளது பொறுப்பையும் ஏற்று, அவரவர்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள இறைவன் வழங்கியுள்ள தகவமைப்புகளுக்குத் தக்கவாறு தங்களது பணிகளைச் செய்வதில் தான், இயற்கையிலேயே ஆண்-பெண் என இறைவன் வித்தியாசப்படுத்திப் படைத்திருப்பதன் ரகசியம் அடங்கியுள்ளது.
இன்றைக்கு இந்த குடும்ப அமைப்பை சீர்குலைத்த பெருமை மேலைநாட்டு அநாகரீகங்களின் தாக்கம் என்றால் அது மிகையில்லை. உலகப் போர்களுக்குப் பின் ஆணும், பெண்ணும் சமம் என்ற கோஷங்கள் மேலைநாடுகளில் எழும்பியதன் காரணத்தையும், அதே கோஷம் இன்னும் இஸ்லாமிய நாடுகளில் ஏன் எழும்பவில்லை, எழுப்பப்படவில்லை என்ற காரணத்தையும் ஆய்வு செய்வது நல்லது.
ஏனெனில் மேலைநாடுகளில் வாழ்ந்த அன்றைய பெண்களுக்கு உயிர் உண்டா? என்றே அவர்கள் நம்பவில்லை. ஒரு போகப் பொருளாகத் தான் நினைத்தார்கள். எனவே அவர்கள் தங்களது உரிமைகளை போராடிப் பெற வேண்டிய கட்டாயம் இருந்தது. இன்றைக்கும் நம் நாட்டில் தொட்டில் திட்டங்கள் சொல்வதென்ன? ஆணாதிக்கமும் அல்ல, பெண்ணியமும் அல்ல. பொருளாதாரம் தான் காரணமாகும். மகனுக்கு சீதனம் மற்றும் வரதட்சணை பேசுவதில் ஆணை விட பெண்ணே கறாறாக இருக்கின்றாள், அப்படிக் கேட்பவளும் பெண்தானே எனும் போது, இது பெண்ணாதிக்கம் என்று சொல்வோமா? அல்லது சமூகச் சீர்கேடு என்று சொல்வோமா?
இன்றைக்கு நம் நாட்டில் பெண்கள் இயக்கம் என்றும், பெண்களின் உரிமைப் பாதுகாப்புக் கழகங்கள் என்றும் பெண்ணியம் பேசுவோர் அதிகரித்துள்ளனர். இவை யாவும் மேலைநாடுகளின் தாக்கம் எனலாம். இந்திய கலாச்சாரத்தில் பெண்கள் வீட்டுப் பொறுப்புக்களையும், அதனுடன் குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் என பார்த்துக் கொண்டிருந்தது. போக இன்றைக்கு, ஆணாதிக்கத்திலிருந்து விடுபடுவோம் வாருங்கள் என்ற குரலைக் கேட்டு மயங்கி, வீட்டை விட்டு தங்களது பொறுப்புக்களை உதறித் தள்ளி விட்டு, சுதந்திரம்! சுதந்திரம் என நம் தேசப் பெண்கள் வீதிக்கு வருவது, இந்திய தேசத்தின் குடும்ப அமைப்புகளைச் சீரழித்துள்ளது. இதன் காரணமாக வீடு அமைதியாக இருந்த இடம் என்பது மாறி, பல்வேறு அவலங்களும், சித்ரவதைகளும், போராட்டங்களும் நடைபெறக் கூடிய களமாக மாறி வருகின்றது.
இதன் காரணமாக வீட்டில் வளரக் கூடிய இளம் பிஞ்சுகள், இளமையிலேயே வெம்பி, பிஞ்சிலே பழுத்த பழங்களாக மாறி வருகின்ற அவலம், இன்றைக்கு வீதிக்கு வீதி குற்றவாளிகளாகக் காட்டியளிக்கும் இந்திய சேத்தின் இளம் இரத்தங்களே, இதற்கான சாட்சியங்களாகும்.
இளம் குற்றவாளிகள் அதிகமாகின்றார்கள். காரணம் கண்டுபிடிக்கப்படவில்லையா? அல்லது காரணங்கள் தெரிந்தும் நம் கை மீறிச் சென்று விட்ட நம் தவறான போக்குகளா? சிந்திக்க வேண்டியது இந்திய சமூகத்தின் மீது கட்டாயமாகும்.
இத்தகைய அவலங்களைத் துடைத்தெறிந்து விட்டு, சமூகக் கழிவுகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றி, பெண்ணின் பெருமைகளைப் போற்றிப் பாதுகாத்து வரும் இஸ்லாத்தின் தூதை அறிந்து கொள்ளவது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மாற்றுமத சகோதர சகோதரிகளுக்கும் அத்தகைய உரிமை உண்டு.
ஏனெனில் இது ஒன்றே உங்களையும் எங்களையும் படைத்த ஒரே இறைவனின் வாழ்க்கை நெறியாகும். அதன் பெயர் இஸ்லாம் என்பதாகும்.
இஸ்லாமியப் பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பொதுவான உரிமைகள்
நிச்சயமாக பெண்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பொதுவான உரிமைகள் உள்ளன. அவற்றை அவள் விரும்பும் போது பூரணமாகச் செய்து கொள்வதைச் சமூகம் அங்கீகரிக்கவும் செய்கின்றது. இன்றைக்கு முஸ்லிம் பெண்களிடத்தில் இருக்கின்ற அறியாமையின் காரணமாக, இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியருக்கின்ற உரிமைகளைப் பற்றிக் கூட அறிந்திருக்காத நிலையில், பல விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழவும் அதில் அவர்களை இழக்க வேண்டிய நிலைகளும் உருவாகி விடுகின்றன.
இதற்கு இஸ்லாத்தில் ஆணாதிக்கம் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. காரணம் இஸ்லாமியச் சட்டங்களை ஆண்களும், பெண்களும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள் என்பதும், தங்களைச் சூழ்ந்துள்ள ஆணாதிக்க சமூகத்தின் தாக்கங்களில் முஸ்லிம்கள் தங்களை இழந்து விடுவதன் காரணமாகவும் நிகழ்ந்து விடுகின்ற அத்தகைய சம்பவங்கள் இஸ்லாத்திற்கு அவப் பெயரை ஈட்டித் தந்து விடுகின்றன. எனவே, ஆணோ அல்லது பெண்ணோ இஸ்லாம் தனக்கு வழங்கியிருக்கின்ற உரிமைகள் பற்றி அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டியவது அவரவர் மீதுள்ள கடமையாகும்.
பெண்களுக்கான உரிமைகளில் சில :
சொந்தமாக்கிக் கொள்ளல் :
வீடுகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள், வெள்ளி, தங்கம் போன்ற ஆபரண வகைகள், கால்நடை வகைகள் இவற்றில் விரும்பியவற்றை ஒரு பெண் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம். அப்பெண் தாயாக அல்லது மகளாக அல்லது  சகோதரியாக இருப்பினும் சரி.
திருமணம் :
திருமணம் செய்வது, கணவனைத் தேர்வு செய்வது, தனக்கு விருப்பமில்லாதவனை ஏற்க மறுப்பது, தனக்கு இடையூறு ஏற்பட்டால் திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வது போன்றவற்றிலும் அவள் உரிமை பெறுகிறாள். இவை பெண்களுக்குரிய உரிமைகள் என்பதில் இஸ்லாம் மற்ற மதங்களை விட தனித்துவமாக விளங்குகின்றது.
கல்வி கற்கும் உரிமை :
தனக்கு அவசியமானவற்றைக் கற்றுக் கொள்ளும் உரிமை படைத்தவள். இறைவனைப் பற்றியும், இறைமறையைப் பற்றியும், இறைத்தூதரின் வாழ்வு, ஒழுக்க மாண்புகள் மற்றும் இந்த உலக வாழ்வுக்குரிய அனைத்துக் கல்விகளையும், மனித சமுதாயத்திற்குப் பயன்படக் கூடியவற்றையும் கற்றுக் கொள்ளும்படி இறைமறை ஆணையும்,பெண்ணையும் வலியுறுத்திக் கூறுகின்றது.
அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குத் தகுதியானவன் வேறு யாருமில்லை என்பதை அறிந்து கொள் (47:19) என அல்லாஹ்வும், கல்வியைத் தேடுவது ஆண், பெண் அனைவர் மீதும் கடமையாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கல்வி கற்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருப்பதால், இஸ்லாத்தில் கல்வி கற்பதன் அவசியம் பற்றி நமக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
செலவு செய்தல் :
தனது பொருளில் தான் நாடியதைத் தர்மம் செய்து கொள்வதற்கும், தனக்கும் தனது கணவன், பிள்ளைகள், தாய், தந்தையர்கள் இவர்களில் தான் விரும்பியவர்களுக்கு வீண், விரயமில்லாத அளவுக்கு செலவு செய்து கொள்ள உரிமை பெறுகிறாள். இவ்விஷயத்தல் இவர்களும் ஆண்களைப் போன்றே செலவு செய்யும் உரிமையைப் பெறுகின்றார்கள்.
விருப்பு, வெறுப்புக் கொள்ளுதல் :
அவள் நல்ல பெண்களை விரும்பவும், அவர்களைச் சந்திக்கவும் செய்யலாம். இன்னும் அவர்களுக்குத் தபால்கள் அனுப்பி அவர்களின் நிலைமைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கஷ்ட காலங்களில் அவர்களுக்கு ஆறுதலும் கூறிக் கொள்ளலாம். அல்லாஹ்விற்காக கெட்ட பெண்களை வெறுத்து, அவர்களை விட்டும் ஒதுங்கி விடுவதும் கூடும். (இங்கே ஒன்றைக் கவனிக்க வேண்டும்.. அந்நிய ஆணும், அந்நியப் பெண்ணும் சந்திப்புகள் நடத்துவதையோ, ஒன்று கூடுவதையோ இஸ்லாம் அனுப்பதில்லை. திருமணம் முடிக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்ற உறவுகள் தவிர்த்து மற்ற ஆண்களுடன் பெண்கள் கலந்து பழகுவதை அனுமதிப்பதில்லை. இதன் விளைவுகளை இன்றைக்கு மேலை நாடுகள் அனுபவித்து வருகின்றன. ஒழுக்கச் சீர்கேட்டிற்கு இவை தாம் முக்கிய பங்கு வகிக்கின்றன)
மரண சாசனம் :
அவளின் சொத்தில் மூன்றில் ஒன்றை அவளது ஜீவித காலத்தில் மரண சாசனம் எழுதிக் கொள்வதற்கும் அதை எவ்வித ஆட்சேபணை செய்யாமல் செயல்படுத்துவதற்கும் அவளுக்கு உரிமையுண்டு. ஏனெனில் மரண சாசனம் எழுதுவதென்பது பொதுவான மனித உரிமைகளைச் சார்ந்ததாகும். எனவே இது ஆண்களுக்கிருப்பது போன்று பெண்களுக்குமிருக்கிறது. ஏனெனில் அல்லாஹ்விடம் நன்மையைப் பெறுவதை விட்டு யாரையும் யாரும் தடுக்க முடியாது. என்றாலும் மரண சாசனம் மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமாகமலிப்பது நிபந்தனையாகும். இதில் ஆண்களும் பெண்களும் சமமே.
பட்டாடை தங்கம் அணிதல் :
பட்டையும், தங்கத்தையும் பெண்கள் அணிந்து கொள்வது கூடும். இவ்விரண்டும் ஆண்களுக்குத் தடுக்கப்பட்டதாகும். ஒரு பெண் தனது கணவனுக்கு முன்னிலையில் தான் விரும்பும் வகையிலும், அது போல் தன் கணவன் விரும்பும் வகையிலும் அவனுடன் குறைந்த ஆடை அல்லது ஆடையற்ற நிலையில் மற்றும் தலை, கழுத்து, மார்பு முதலியவற்றை தனது கணவனுடன் தனித்திருக்கும் பொழுது திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அலங்கரித்துக் கொள்ளல் :
தனது கணவனுக்காக தன்னை அலங்கரித்துக் கொள்ள உரிமை பெறுகிறாள். எனவே அவள் சுர்மா என்ற கண்ணழகு இட்டுக் கொள்ளவும், கன்னங்களை மேக்கப் சாதனங்களையிட்டு அழகுபடுத்திக் கொள்ளுதல், உதட்டுச் சாயமிட்டுக் கொள்ளுதல், மிக அழகிய அணிகலன்களை அணிந்து கொள்ளவும் உரிமை படைத்தவளாகின்றாள். எனினும் முஸ்லிமல்லாத மற்றும் தவறான நடத்தையுள்ள மற்றும் நடிகைகளையும் அநாச்சாரத்தில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற மாடல் அழகிகளையும் போல அறைகுறை ஆடை அணிவதையும், அவர்களைப் போலத் தோற்றமளிப்பதும் கூடாது.
உண்பது, குடிப்பது :
நல்ல சுவையான பானங்களை பருகவும் அதுபோன்ற உணவுகளை உண்ணவும் அவளுக்கு உரிமையுண்டு. உண்பதிலும் குடிப்பதிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எந்தப் பாகுபாடும் இல்லை. இவ்விரண்டில் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்ட அனைத்தும் பெண்களுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான் :
உண்ணுங்கள் பருகுங்கள், ஆனால் வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக வீண் விரயம் செய்பவர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (7:31). இங்கு இருபாலரையும் நோக்கியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
                       இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு -ஓர் அறிமுகம்


இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டினை விளங்க முன் இஸ்லாத்துடன் தொடர்பான சில அடிப்படை உண்மைகளை புரிந்துக் கொள்வது இன்றியமையாததாகும். இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்க்கைத்திட்டம். அது வாழ்வின் அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி நிற்கின்றது. அதனைக் கூறு போடுவதும், அதன் ஒரு பகுதியை புறக்கணித்து விட்டு மற்றொரு பகுதியை அமுல்நடாத்துவதும் பிழையானது மாத்திரமன்றி எதிர்பார்த்த வெற்றியையும் பெற முடியாமல் போய்விடும். இந்த வகையில் இஸ்லாத்தை முழுமையாக ஏற்று அதனை முழுமையாகச் செயல்படுத்துவது பிரதானமானதாகும்.
இவ்வடிப்படையில் இஸ்லாத்தில் இருந்து இஸ்லாமிய பொருளியல் கோட்பாட்டை மாத்திரம் தனியாக இஸ்லாமல்லாத அல்லது பெயரளவில் அன்றி இஸ்லாத்தை காணமுடியாத ஒரு சமூகத்தில் செயற்படுத்த முயற்சிப்பதுவும் அல்லது நவீன பொருளாதார சிந்தனைகளுடன் அதனை இணைக்க முற்படுவதும் பிழையானதாகும்.
பொருளாதாரம் என்பது இஸ்லாத்தின் பல அடிப்படைகளில் ஒன்றாகும். அதன் ஏனைய அடிப்படைகளும் நடைமுறையில் உள்ள ஒரு சமூகத்தில் அதன் பொருளாதாரக் கொள்கை அமுல்படுத்தப்படும் போதே அது பூரண பயனளிக்கும். இல்லாத போது சில நன்மைகள் ஏற்படினும் குறைவுள்ளதாகவே அமையும்.
மேலும் மனிதன் ஆன்மா, உடல் என்ற இரு பகுதிகளைக் கொண்டவன் என்றவகையில் இவ்விரண்டிற்கும் மத்தியில் சமநிலையைப் பேணுவதன் மூலமே உண்மையான சுபீட்சத்தைக் காணமுடியும் என்பதும் இஸ்லாத்தின் ஓர் அடிப்படைக் கருத்தாகும். எனவே மனிதனது பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவது போலவே அவனது ஆத்மீகத் தேவைகளும் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என அது வலியுறுத்துகின்றது. பொதுவாக பொருளியல் என்பது சட ரீதியிலான நிறைவைப் பற்றி ஆய்வதாக இருப்பினும் அது வாழ்வின் இலட்சியத்தை அடைவதற்கான ஒரு வழியேயாகும். உடலுக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்வதே வாழ்வின் இலக்காக மாற முடியாது.
அடுத்து இஸ்லாம் தவ்ஹீதை அடிப்படையாக கொண்ட மார்க்கம் என்ற வகையில் அது ஷிர்க்கை அங்கீகரிப்பதில்லை. எனவே பொருளானது ஈமானை மிகைக்கும் நிலையை கண்டிப்பாக தவிர்க்க வேண்டுமென இஸ்லாம் எதிர்பார்க்கின்றது. பணத்தையும் பண்டத்தையும் தெய்வங்களாக பூஜித்து வணங்க அது அனுமதிப்பது இல்லை.
இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படைகள்
இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படைகளை இரு பகுதிகளாக பிரித்து நோக்குவர். அவையாவன:

   1.
மாறாத் தன்மை வாய்ந்த (நிலையான) அடிப்படைகள்
  2.
மாறும் தன்மை பெற்ற அடிப்படைகள்

இவை இரண்டையும் சற்று விளக்கமாக நோக்குவது பயனுள்ளதாய் அமையும்.

1.
மாறாத் தன்மை வாய்ந்த (நிலையான) அடிப்படைகள்

   1.
அனைத்து செல்வங்களும் வளங்களும் அல்லாஹ்வுக்குரியவையாகும். மனிதன் அவற்றில் அல்லாஹ்வின் பிரதிநிதியாவான்.

இது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் மிக முக்கியமான ஒரு விதியாகும். இவ்;விதிக்கு கீழ்வரும் அல்குர்ஆன் வசனங்கள் ஆதாராங்களாய் உள்ளன:

வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகள் அனைத்தும் அல்லாஹ்வுக் குரியவையே. (அந்நஜ்ம் : 31)

அல்லாஹ் உங்களுக்கு தந்துள்ள செல்வத்தில் இருந்து நீங்கள் அவர்களுக்கு கொடுங்கள். (அந்நூர் : 33)

உங்களை எதற்கு பிரதிநிகளாக்கினானோ அவற்றில் இருந்து செலவு செய்யுங்கள். (அல்ஹதீத் : 7)

2.
சமூகத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை ஏற்றல்:

அதாவது சமூகத்தில் உள்ள அனைத்துத் தனிமனிதர்களினதும் அடிப்படையான பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உத்தரவாதம் அளிக்கப்படல் வேண்டும் என்பது இஸ்லாமிய பொருளாதார கோட்பாட்டின் மற்றுமொரு விதியாகும். இதனையே

அவர்களின் செல்வங்களில் குறிப்பிட்ட ஓர் உரிமையுண்டு. அது கேட்போருக்கும் கேட்காதோருக்கும் உண்டு. (அல்மஆரிஜ் : 24 - 25) எனும் குர்ஆன் வசனம் கூறுகின்றது.

இது பற்றி உமர் (ரழி) அவர்கள் கீழ்வருமாறு குறிப்பிட்டார்கள்:

வசதியற்றோரைப் பொறுப்பேற்பது எனது கடமையாகும். அத்தகையோர் (ஆட்சியாளன் என்ற வகையில்) என்னிடம் வரட்டும்.

3.
சமூக நீதியைப் பேணுவதும் தனிமனிதர்களுக்கிடையிலான பொருளாதாரச் சமநிலையைப் பேணலும்.

இது பற்றி அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகின்றது:

செல்வம் செல்வந்தர்களுக்கு மத்தியில் மாத்திரம் சுழன்று வரக்கூடாது. (அல்ஹஷ்ர் : 7)

(
ஸகாத்)செல்வந்தர்களிடமிருந்து பெறப்பட்டு அவர்களில் உள்ள ஏழைகளுக்கு வழங்கப்படல் வேண்டும் என்று நபி மொழி கூறுகின்றது.

4.
தனியார் சொத்துரிமையை மதித்தல்

இவ்வடிப்படையை கீழ்வரும் சட்ட வசனங்கள் விளக்கி நிற்கின்றன:

ஆண்கள் சம்பாதித்தவை அவர்களுக்குரியதாகும். பெண்கள் தேடியவை அவர்களுக்குரியதாகும். (அந்நிஸா : 32)

திருடிய ஆணினதும் பெண்ணினதும் கைகளை வெட்டுங்கள். (அல்மாஇதா : 38)

ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமின் இரத்தம் (உயிர்), பொருள், மானம் ஆகியவை ஹராமாகும். (நபிமொழி)

தனது செல்வத்திற்காக அதனைக் காக்கும் பாதையில் கொலை செய்யப்பட்டவன் ஷஹீதாவான். (நபிமொழி)

5.
பொருளாதாரச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாய் அமைதல்

இவ்விதியின் அடிப்படையிலேயே இஸ்லாத்தில் பதுக்கல், வட்டி தொடர்பான பொருளாதார நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.

மனிதர்களின் பொருட்களை நியாயமற்ற முறையில் விழுங்காதீர்கள். (அல்பகரா : 188)

அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை விலக்கியுள்ளான். (அல்பகரா : 275)

(
முஸ்லிம்கள் மீது விலையேற்றத்தை கருத்திற் கொண்டு பொருட்களை) பதுக்குபவன் பாவியாவான். (அல்ஹதீஸ்)

இவை இவ்விதிக்கான சில ஆதாரங்களாகும்.

6.
செலவீனங்களை ஒழுங்கு படுத்தி வீண்விரயத்தையும் ஆடம்பரத்தையும் தடுத்தல்

இவ்வடிப்படைக்கு ஆதாரங்களாக கீழ்வரும் சட்ட வசனங்களை குறிப்பிடலாம்.

நிச்சயமாக வீண்விரயம் செய்வோர் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள். (அல்இஸ்ரா : 7)

புத்தி குறைந்தவர்களாக இருந்தால் வாழ்க்கைக்கே ஆதாரமாக அல்லாஹ் அமைத்திருக்கும் உங்களிடம் இருக்கும் (அவர்களின்) செல்வங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். (அந்நிஸா : 5)

இவை இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டில் என்றும் நிலைத்திருக்கும் பிரதான விதிகள் ஆகும். இத்தகைய மாறாத் தன்மை வாய்ந்த விதிகளைக் கொண்டுள்ள இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு மாறும் தன்மையும் நெகிழ்ந்து கொடுக்கும் பண்பையும் கொண்ட சில அடிப்படைகளையும் கொண்டிருக்கிறது.

   1.
மாறும் தன்மை பெற்ற அடிப்படைகள்

இவை நடைமுறையுடன் தொடர்பானவையாகும். அதாவது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படைகளை நடைமுறைப் படுத்தும் போது இஸ்லாமிய அறிஞர்கள் கைக்கொள்ளும் வழிமுறைகள், செயற்திட்டங்கள், தீர்வுகள் இப்பகுதியில் அடங்கும்.

வட்டியாக கருதப்படும் செயற்பாடுகளை தடைசெய்தல், வேதனத்திற்குரிய குறைந்தபட்ச அளவை தீர்மானித்தல், சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் தலையீட்டை தீர்மானித்தல், தனியுடமை, பொதுவுடமை ஆகியவற்றிற்கான துறைகளை வரையறுத்தல், பொருளாதார அபிவிருத்தி திட்டங்களை வகுத்தல் போன்ற (இஜ்திஹாத்) ஆய்வை வேண்டி நிற்கும் பகுதிகள் - நடைமுறை தொடர்பான அம்சங்கள் - மாறும் தன்மைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டில் இவ்விரண்டாம் பகுதி ஆய்வுக்குரியது என்ற வகையில் கால சூழ்நிலைக்கேற்பவும் அறிஞர்கள் மத்தியில் சட்ட வசனங்களை விளக்குவதில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்கு ஏற்பவும் மாறுபடும். 'கால மாற்றத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாறும் எனும் சட்ட விதி இம்மாறும் தன்மை பெற்ற அடிப்படைகளை குறித்து நிற்கின்றது.

எனவே, மாறாத் தன்மை வாய்ந்த இஸ்லாமிய பொருளாதார கோட்பாட்டின் அடிப்படைகளில் எத்தகைய வேறுபாடும் கொள்ளலாகாது. இவை எல்லாக் காலங்களுக்கும் இடங்களுக்கும் பொருத்தமான விதத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும் மாறும் தன்மைப் பெற்ற விதிகளைப் பொறுத்தவரையில் அவை இஜ்திஹாதிற்குரியவையாகும். அவற்றில் கருத்து வேறுபாடு கொள்வது பிழையானதல்ல.

இந்த வகையில் இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் நடைமுறைகள் கால சூழ்நிலைகளைப் பொறுத்து வித்தியாசப்படலாம். உதாரணமாக ஏக காலத்தில் சவூதி அரேபியாவிற்கு ஒரு பொருளாதார நடைமுறையும் திட்டமும் குவைத்திற்கு வேறுபட்ட பொருளாதார செயல் திட்டமும் இருக்க முடியும்.

இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் சிறப்பியல்புகள்

இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு தனித்துவமான பொருளியல்சார் விதிமுறைகளையும் நெறிமுறைகளையும் கொண்டிருப்பதற்கூடாக அது தனக்கே உரிய தனிப்பெரும் சிறப்பம்சங்களைப் பெற்றதாகவும் விளங்குகின்றது. இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டில் குறிப்பிடத்தக்க கீழே விளக்கப்படுகின்றன.

   1.
மாறும் தன்மையையும் மாறாத் தன்மையையும் ஏக காலத்தில் பெற்றிருத்தல்

இஸ்லாமிய பொருளாதார கோட்பாட்டின் அடிப்படைகளைப் பொறுத்தவரையில் அவை தெய்வீகமானவையாகும். அதன் நடைமுறைசார்ந்த துறையோ இஜ்திஹாத் - ஆய்வுக்குரியதாகும். இந்த வகையில் இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை நிலையான ஒன்றாகவும் மாறும் - வளரும் ஒன்றாகவும் சமகாலத்தில் விளங்குகின்றது. அதாவது தெய்வீகமான பகுதி மாறாத் தன்மைப் பெற்றதாக இருக்க - ஆய்வுக்குரிய நடைமுறைப் பகுதி மாறும் தன்மையுடையதாய் விளங்கும்.

இச்சிறப்பம்சத்தின் காரணமாக இஸ்லாமிய பொருளாதாரக் கொள்கை எல்லாக் காலங்களுக்கும் எல்லா இடங்களுக்கும் பொருத்தமானதொன்றாக இருக்கும்.

மேலும் அதன் செயற்திட்டங்கள் கால மாற்றத்திற்கேற்ப மாறக்கூடியதாகவும் இருக்கும். என்றும் எப்போதும் ஒரு குறிப்பிட்ட அமைப்பிலேயே இஸ்லாமிய பொருளாதார அமைப்பின் நடைமுறைகள் இருக்கும் என கூறுவதற்கில்லை.

   1.
தனிமனித நலனுக்கும் சமூக நலனுக்கும் இடையில் இணக்கம் காணல்

முதலாளித்துவம் போன்ற அமைப்புகள் தனிமனிதனை தமது இலக்காகக் கொண்டு அவனது நலனுக்கே முன்னுரிமை வழங்குகின்றன. சமூக நலனை விட தனிமனித நலனை முற்படுத்துகின்றன. இதனாலேயே அத்தகைய அமைப்புகள் தனிமனிதனுக்கு பொருளாதார நடவடிக்கைகளில் பூரண சுதந்திரத்தை வழங்குகின்றன.

தனிமனித நலனை கவனத்திற் கொள்ளும் போது மறைமுகமாக சமூக நலனும் நிறைவேறும்ளூ ஏனெனில் சமூகம் என்பது தனிமனிதர்களைக் கொண்ட ஒரு கூட்டமேயன்றி வேறில்லை என்பது முதலாளித்துவ வாதிகளின் வாதமாகும்.

முதலாளித்துவ அமைப்பினால் தனிமனித சுதந்திரம் கிட்டல், தனிமனித முயற்சிகளுக்கான உற்சாகமும் ஊக்கமும் கிடைத்தல் போன்ற சில அனுகூலங்கள் கிட்ட இடமிருப்பினும் பல பயங்கர பாதிப்புகளும் ஏற்படுகின்றன. உற்பத்தியின் போது அடிப்படைத் தேவைகளைக் கருத்திற் கொள்ளாது உச்ச இலாபத்தை மாத்திரம் கவனத்திற் கொள்ளல், வேலையில்லா திண்டாட்டம், சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மாத்திரம் வளங்களையும் செல்வங்களையும் பெறும் நிலை உருவாகுதல், பிழையான சொத்துப் பங்கீடும், வருமானப் பங்கீடும், பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வு, வர்க்க பேதம், அதனால் தோன்றும் போராட்டங்கள் போன்றன முதலாளித்துவத்தின் பிரதிகூலங்களாகும்.

மறுபக்கத்தில் பொதுவுடமைப் பொருளாதார அமைப்பைப் பொறுத்தவரையில் அது சமூகத்தையும் சமூக நலனையும் இலக்காகக் கொள்கின்றது. தனிமனித நலனை விட சமூக நலனே பிரதானமானது என்பது அதன் வாதமாகும். எனவே அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளிலும் அரச தலையீடு இருத்தல் வேண்டும். தனியார் சொத்துரிமை தடைசெய்யப்படல் வேண்டும் போன்ற வாதங்களை அது கொண்டுள்ளது. சமூக நலனைக் கவனிக்கும் போது தனிமனித நலன் தானாகவே பேணப்படும் என்பது பொதுவுடமை வாதிகளின் வாதமாகும்.

பொதுவுடமைக் கொள்கையில் பொதுத் தேவைகள் நிறைவேறுதல், வேலையில்லாப் பிரச்சினை தீர்தல், உற்பத்தி ஒழுங்கு படுத்தப்படல், பெரும்பாலானோரின் நலன் பேணப்படல் போன்ற சாதகங்கள் ஏற்பட இடமுண்டு. ஆயினும் தனிமனித ஊக்கம் குன்றல், அரசின் மறைமுகக் கட்டுப்பாடுகளுக்கு உற்படல், நிர்வாகக் கெடுபிடிகளுக்கு இலக்காகுதல் தனிமனித வாழ்வின் அடிப்படையான தனிமனித சுதந்திரம் பாதிப்படைதல் போன்ற பாதகங்கள் பொதுவுடமைக் கொள்கையினால் விளைகின்றன.

இஸ்லாமிய பொருளாதார கோட்பாடு இவ்விரண்டு அமைப்புகளில் இருந்தும் வேறுபட்டு தனித்துவமானதாகத் திகழ்கின்றது. அது தனிமனித நலனுக்கும் சமூக நலனுக்கும் இடையில் இணக்கம் காண்கின்றது. இஸ்லாத்தின் பார்வையில் இரண்டும் ஒன்றையொன்று பூர்த்தி செய்யும் விதத்தில் உள்ளன. இந்த வகையில் ஒன்றை பாதுகாப்பதிலேயே அடுத்ததன் நிலைப்பாடு தங்கியுள்ளது. எனவே தான் இஸ்லாம் இரு தரப்பு நலன்களையும் ஏககாலத்தில் கவனத்திற் கொள்கின்றது. அவற்றில் ஒன்றிற்காக மற்றயதை பலியிட அது விரும்பவில்லை.

ஆயினும் விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் (உதாரணம்: யுத்த வேளை, பஞ்ச காலம், தொற்று நோய்கள் பரவியுள்ள சந்தர்ப்பங்கள்) இரு தரப்பு நலன்களுக்கிடையில் இணக்கம் காண முடியாத வேளைகளில் பொது நலன்களுக்காக தனிமனித நலன்களை கவனத்தில் கொள்ளாமல் இருப்பதற்கு இஸ்லாம் தடை விதிப்பதில்லை.

தனிமனித, சமூக நலன்கள் ஏக காலத்தில் பேணப்படல் வேண்டும் என்ற இஸ்லாமிய பொருளாதார கோட்பாட்டின் கருத்தை விளக்கும் சில சட்ட வசனங்களை வருமாறு:

நீங்கள் அநியாயம் செய்யவும் கூடாது. அநியாயம் இழைக்கப்படவும் கூடாது. (அல்பகரா : 273)

ஆரம்பமாக தீங்கிழைக்கவும் கூடாது. அதற்குப் பதில் தீங்கு செய்யவும் கூடாது. (இப்னு மாஜா)

நடைமுறையில் இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் எவ்வாறு தனிமனித சமூக நலன் பேணப்படுகின்றது என்பது இங்கு நோக்கப்டல்; வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பில் தனிமனித ஆதிக்கமே மிகைத்து நிற்கும். பொதுவுடமை அமைப்பிலோ அரசின் ஆதிக்கமே மேலோங்கி இருக்கும். ஆனால் இஸ்லாமிய அமைப்பில் தனிமனித சுதந்திரமும் அரசின் தலையீடும் சம அளவில் இருக்கும். ஒன்று மற்றயதைச் சார்ந்து பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்கும். இரண்டும் அடிப்படைகளாகவே கொள்ளப்படும். இரண்டில் ஒன்று அடிப்படையாகவும் மற்றையது விதிவிலக்காகவும் கொள்ளப்படுவதில்லை.

இஸ்லாம் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட தனிமனிதர்களுக்கு சுதந்திரம் வழங்கும் போது சில கட்டுப் பாடுகளையும் விதிக்கின்றது. உதாரணமாக போதைவஸ்த்துக்களை உற்பத்தி செய்தல், வட்டி அடிப்படையிலான கொடுக்கல் வாங்கலில் ஈடுபடல், பதுக்கல், செல்வத்தை உற்பத்தியில் ஈடுபடுத்தாது தேக்குதல் அல்லது அர்த்தமற்ற முறையிலோ பிறருக்கு தீங்கேற்படும் விதத்திலோ பொருளை கையாள்தல், பொருட்களை நியாயமற்ற, மிதமிஞ்சிய விலையில் விற்பனை செய்தல் போன்றன விலக்கப்பட்டவையாகக் கொள்ளப்படுகின்றன.

நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் சீர் நிலையைக் கண்காணிக்க விஷேட ஒரு பிரிவை இயக்குவது இஸ்லாமிய அரசின் கடமைகளில் ஒன்றாகும். இக்கண்காணிப்புப் பிரிவை (அல்ஹிஸ்பா) என இஸ்லாமிய வழக்கில் அழைப்பர்.

மேலும் இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் தனியார் துறையினர் பர்ளு கிபாயா என்ற வகையில் ரயில் பாதைகளை அமைத்தல், கனரக உற்பத்திகளுக்கான தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற துறைகளில் ஈடுபடாத போது அல்லது இலாபமீட்டித் தராத, யுத்த ஆயுதங்களை உற்பத்தி செய்தல், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள் அமைத்தல் போன்ற முயற்சிகளில் ஈடுபடத் தவறும் போது அத்தகைய பணிகளை மேற்கொள்வது இஸ்லாமிய அரசின் கட்டாய கடமையாக (பர்ளு ஐன்) மாறிவிடுகின்றது.

நாட்டுப் பிரஜைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை இஸ்லாம் ஏற்றுள்ளது என்ற வகையில் இவ்விடயத்தில் அரச தலையீடு தவிர்க்க முடியாததாக இருக்கின்றது. இந்த வகையிலேயே ஸகாத் நிறுவன அமைப்பை இஸ்லாம் அறிமுகம் செய்துள்ளது. அது முழுமையாக அரசின் கையிலேயே இருக்கும்.

மேலும் சமூகத்தில் பொருளாதாரச் சமநிலை, சொத்து, வருமான பங்கீட்டில் நீதி போன்றவற்றை பேணி செல்வமானது ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் கைகளில் மாத்திரம் சுழன்று வரும் நிலையைத் தவிர்க்கவும் அரச தலையீடு அவசியப்படுகின்றது.

பனூ அந்நளீர் கோத்திரத்தவர்களிடம் இருந்து கிடைத்த சுங்க வரியை அன்ஸாரிகளை விட்டு விட்டு முஹாஜிர்களுக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்கள் பகிர்ந்தளித்தமை பொருளாதார சமநிலையைப் பேண அரசு எடுக்கும் நடவடிக்கை தொடர்பானதாகும். இந்த அடிப்படையிலேயே சில சூழ்நிலைகளில் நபியவர்கள் விவசாய நிலங்களை குத்தகைக்கு - கூலிக்கு விடுவதனையும் தடை செய்திருந்தார்கள்.

சொத்துரிமை விடயத்தில் உற்பத்திக் காரணிகள் அடிப்படையில் தனியாருக்கு சொந்தமானவை என்பது முதலாளித்துவத்தின் கருத்தாகும். பொதுவுடமை அமைப்பில் உற்பத்திக் காரணிகள் அனைத்தும் அரசுக்குச் சொந்தமானவை என்பதே அடிப்படையாகும். இரு அமைப்புக்களிலும் குறித்த நிலைகளுக்கு மாற்றமாக சில துறைகள் அமைவது விதிவிலக்கானதாகவே இருக்கும்.

ஆனால் இஸ்லாமிய அமைப்பில் தனியுடமை, பொதுவுடமை ஆகிய இரண்டும் இணைந்த ஒரு நிலையையே அவதானிக்கக் கூடியதாய் உள்ளது. இரண்டும் அடிப்படைகளாகவே கொள்ளப்படுகின்றன. ஒன்றும் விதிவிலக்கானதல்ல. அவ்வாறே இரண்டும் வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும்.

தனியாருக்கு சொத்துக்களை வைத்திருக்கும் உரிமை இருப்பினும் அடிப்படையில் செல்வங்கள் அனைத்தும் அல்லாஹ்வுடையவை. மனிதர்கள் அவற்றில் அவனின் பிரதிநிதிகள் என்றவகையில் இஸ்லாமிய வரையறைகளுக்கு ஏற்பவே அவற்றை கையாளவும் பயன்படுத்தவும் வேண்டும். இல்லாத போது அரச தலையீடு அவசியப்படும்.

மேலும் சில சொத்துக்கள் கண்டிப்பாக அரச கையில் இருக்கும். உதாரணமாக: வக்பு சொத்துக்கள், கனிப்பொருள் வளங்கள், கைப்பற்றப்பட்ட நிலப் பிரதேசங்கள் போன்றவை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும்.

செல்வப் பங்கீட்டில் முதலாளித்துவ அமைப்பானது தனியார் சொத்துரிமையை அடிப்படையாகக் கொள்ள - சமவுடமை அமைப்பு உழைப்பை அடிப்படையாகக் கொள்கின்றது. ஆனால் இஸ்லாமிய அமைப்பில் பங்கீட்டின் போது தேவையே அடிப்படையாகக் கொள்ளப்படும். அதனையடுத்து உழைப்பும் தனியார் சொத்துரிமையும் கவனத்திற் கொள்ளப்படும்.

   1.
மனிதனின் பொருளாதாரத் தேவைகளையும் ஆன்மீகத் தேவைகளையும் சமகாலத்தில் கவனத்திற் கொள்ளல்

இதுவும் ஏனைய பொருளாதார அமைப்புக்களில் காணப்படாத ஒரு சிறப்பம்சமாகும். பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இறைதிருப்தியை நாடல், (அமல்) நற்கருமங்களில் ஈடுபடுகின்ற உணர்வை பெறல் போன்றன இஸ்லாமிய பொருளாதார அமைப்பில் மாத்திரம் அவதானிக்கப்படும் தனிப்பெரும் சிறப்பம்சங்களாகும்.
இவ்வமைப்பில் அரசின் கண்காணிப்பிற்கு மாத்திரமன்றி இறைவனின் கண்காணிப்பிற்கும் அஞ்சுவோராகவே உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் இருப்பர். மேலும் இங்கு உற்பத்தியில் வெறும் இலாபம் இலக்காக கொள்ளப்படல் மாட்டாது. கடமையில் ஈடுபடும் உணர்வே மிகைத்து நிற்கும்.
 1.
தெய்வீகத்தன்மை
இவை அனைத்துக்கும் மேலாக இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடு தெய்வீகமானதாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பியல்பாகும். அதாவது ஏனைய அனைத்து பொருளாதார அமைப்புகளும் சாதாரண மனிதர்களின் சிந்தனையிலிருந்து பிறந்தவையாக இருக்க இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாடோ எல்லாம் வல்ல இறைவனிடம் இருந்து பெறப்பட்டதாய் உள்ளது.
ஏனைய பொருளாதார சிந்தனைகளில் மனித பலவீனங்களின் வெளிப்பாடுகளை காணக்கூடியதாய் உள்ளன. ஆனால் இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டில் அத்தகைய பலவீனங்களின் பாதிப்புக்களுக்குப் பதிலாக நிறைந்த ஞானம், முக்காலம் பற்றிய அறிவு, சம்பூரணத்துவம் போன்ற இறைவனது பண்புகளின் வெளிப்பாடுகளையே அவதானிக்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக