ஷஃபான் மாதத்தில் செய்ய வேண்டியவைகளும், செய்யக்கூடாதவைகளும் -

                                                                                                                                                                 30-May-14



ஷஃபான் மாதம் என்பது சந்திர மாத கணக்கின்படி எட்டாவது மாதமாகும், இன்னும் ரமழானுக்கு முன்னுள்ள மாதமாகும். இந்த வெளியிட்டீன் மூலம் ஷஃபான் மாத சிறப்புகளையும், இன்னும் ஷஃபான் மாதத்தில் அரங்கேற்றப்படும் ஓர் சில வழிகேடான பித்அத்துகளையும் தெளிவுபடுத்துவது தான் நமது நோக்கம்.
ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்:
நபிகளார் (ஸல்) அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முத்தபகுன் அலைஹி).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود,نسائي).
நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார். (அபூதாவுத், நஸாயி).
ஷஃபானில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன:
உஸாம இப்னு ஸைத் (ரலி) அவர்கள் நபியவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே! ஷஃபானை போன்று வேறொரு மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லை என்று கூறிய போது, நபியவர்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். எனது வணக்க வழிபாடுகள் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் உயர்த்தப்பட வேண்டுமென விரும்புகிறேன் என கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி, அஹ்மத்).
நபியவர்கள் ஷஃபான் மாதத்தை போன்று வேறொரு மாதத்தில் அதிகம் நோன்பு நோற்கவில்லை. ஷஃபானில் அதிகம் நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள். இன்னும் நபியவர்கள்: உங்களுக்கு முடியுமான வணக்க வழிபாடுகளை செய்யுங்கள், நீங்கள் சோர்வடையும் வரை அல்லாஹ் சோர்வடைவதில்லை என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள். குறைவான வணக்க வழிபாடுகளாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து செய்து வருவதுதான் நபியவர்களுக்கு விருப்பமாக இருந்தது.
நபியவர்கள் தொழுவார்கள் என்றால், தொடர்ந்து அதை நிறைவேற்றுபவர்களாக இருந்தார்கள். (முத்தபகுன் அலைஹி).
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து ஹதீஸ்களும் ஷஃபான் மாதத்தில் நபிகளார் (ஸல்) அவர்கள் அதிகம் நோன்பு நோற்றுள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும். எனவே நாமும் நபியவர்களின் இந்த நடைமுறையை செயல்படுத்துவோம். அதன் மூலம் ரமழான் மாத நோன்புக்கும் ஒரு பயிற்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நபியவர்கள் குறிப்பிட்டது போல் ஷஃபான் மாத விஷயத்தில் பெரும்பாலான முஸ்லிம்கள் பாராமுகமாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்ற இம்மாதத்தில் நாமும் அதிகம் நோன்பு வைப்பதற்கு முனைவோம்.
விடுபட்ட நோன்புகளை நோற்றல்:
'எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிரநிறைவேற்ற முடிவதில்லை' என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).
  சலுகையளிக்கப்பட்டவர்கள்:நோயாளிகள், கர்ப்பிணிப்பெண்கள்,       பாலூட்டும் தாய்மார்கள், பிரயாணிகள், தள்ளாத வயதினர்கள் ஆகியவர்களில் தள்ளாத வயதினர்கள் தவிர மற்ற அனைவரும் நோன்பை தள்ளிப் போடுவதற்கு அனுமதிக்கப் பட்டவர்கள். தள்ளாத வயதினர்கள் நோன்பை விட்டு விட்டு நோன்பொன்றுக்கு பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
(பார்க்க அல்குர்ஆன் 2:184,185 மற்றும் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)தடைசெய்யப்பட்டவர்கள்:மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டுள்ள பெண்கள் மீது நோன்பு நோற்பது தடையாகும். விடுபட்ட நோன்புகளை கணக்கிட்டு அவர்கள் சுத்தமான பிறகு மற்ற நாட்களில் நோற்க வேண்டும்.
(புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
விடுபட்ட ரமழான் மாத நோன்பை ஷஃபான் வரை பிற்படுத்துவதற்கு இந்த செய்தியிலிருந்து அனுமதி கிடைக்கிறது என்பதை அறியமுடிகிறது. மார்க்கம் கூறிய காரணங்களுக்காக ஒருவர் நோன்பை விடும் போது அல்லது குறிப்பாக பெண்கள் மாத விடாய், பிள்ளைப் பேறு ஆகியவைகளின் மூலம் நோன்பை விடும்போது, அதனை ஏனைய காலங்களில் நோற்க வேண்டும்.
ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:'ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).
உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.
ஷஃபானின் 15 வது தினத்தை சிறப்பிப்பது வழிகேடான பித்அத்தாகும்:
'நிச்சயமாக நாம் அதனை (அல்குர்ஆனை) பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம், நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக் கப்படுகிறது.' (அத்துகான் 44: 3,4).
இவ்வசனத்தில் அல்லாஹ் 'அருள் நிறைந்த இரவில்' அல்குர்ஆனை இறக்கியதாகவும், அந்த இரவில் மனிதனின் வாழ்வாதரங்களுடன் தொடர்புபட்ட விஷயங்களை தீர்மானிப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் அருள் நிறைந்த இரவு என்பது ஷஃபானின் 15 வது இரவாகும் என்று சிலர் வாதிக்கின்றனர். இது நேரடியாகவே குர்ஆனுடன் மோதக்கூடிய ஒரு வாதம் என்பதை ஏனோ அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டனர்.
அல்லாஹ் புனிதமிக்க அல்குர்ஆனில் மற்றுமோர் இடத்தில்: 'ரமழான் மாதம் எத்தகையது எனில் அதில் தான் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய அல்குர்ஆனை நாம் அருளினோம்'. (2: 185).
மற்றுமோர் இடத்தில்: 'லைலதுல் கத்ர் இரவில் நாம் இதை (அல்குர்ஆனை) அருளினோம்' என குறிப்பிடுகிறான். எனவே அத்துகான் அத்தியாயத்தில் இடம் பெற்ற 'அருள் நிறைந்த இரவு' என்பது ரமழான் மாதத்தின் லைலதுல் கத்ர் இரவு தான் என்பதை அல்குர்ஆனின் ஏனைய வசனங்களையும் பார்க்கும் போது தெளிவாக விளங்க முடிகிறது.
எனவே இவர்களில் கூறுவது போன்றுஷஃபானின் 15 வது இரவுக்கும் இதற்கும் மத்தியல் எந்த தொடர்பும் இல்லை.
ஷஃபானின் 15 வது இரவை 'பராஅத்' என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை..
   இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.
மார்க்கத்தில் எல்லை மீறி செல்கின்ற போது தனி மனித வழிபாடும், மூட நம்பிக்கைகளும், வழிகேடுகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். இந்த அபா யத்திலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் நபியவர்கள்மார்க்கத்தில் எல்லை மீறி செல்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்” (நூல் முஸ்லிம்) என்றும்எங்களுடைய கட்டளையில்லாமல் எவர் ஒரு செயலை (அமலை) செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் (நூல்: முஸ்லிம்) என்றும் கண்டித்துள்ளார்கள்.
எனவே எந்த ஒரு அமலை செய்வதானாலும் அதற்கு நபிவழியில் ஆதாரமுண்டா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கி விட வேண்டும். இதுவே சுன்னாவை கடைபிடிக்கும் ஒழுங்கு முறையாகும்.
இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக் களை) கேட்டும், மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.
ஷஃபானின் 15 வது இரவை 'பராஅத்' என்று கூறி அந்த இரவை புனிதப்படுத்துவதும், அதன் பகல் காலத்தில் நோன்பு நோற்பதும், மூன்று யாசீன்கள் ஓதி ரொட்டி போன்ற உணவு வகைகளை தயாரித்து பகிர்ந்தளிப்பதும் இந்த நாளில் செய்யப்படும் தெளிவான பித்அத்துகளாகும். மார்க்கத்தில் இவைகளுக்கு எந்த அடிப்படையுமில்லை. பித்அத்துகள் அனைத்தும் தெளிவான வழீகேடு என்பது நபியவர்களின் கூற்று என்பதை உணர்ந்து இவ்வாறான பித்அத்துகளை விட்டு விழகி இருப்பதுடன், ஏனையவர்களையும் தடுப்போமாக..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001