திங்கள், அக்டோபர் 20, 2014

ஹராமைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்


PDFPrintE-mail
ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்
o ஹராத்திற்கு வழிவகுக்கும் (இட்டுச் செல்லும்) அனைத்தும் ஹராமாகும்
o ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமுரிய ஏக அதிகாரமாகும்
o ஹலாலை ஹராமாக்குவதும் ஹராத்தை ஹலாலாக்குவதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஷிர்க்காகும்.

  ஹராத்தைச் செய்வதற்கு தந்திரமான வழிகளைக் கையாள்வதும் ஹராமாகும்  
இஸ்லாம் ஹராத்திற்கு இட்டுச் செல்லும் வழிகள் அனைத்தையும் தடைசெய்வது போன்றே ஹராத்தைச் செய்வதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ தந்திரமான வழிமுறைகளைக் கையாள்வதையும் தடை செய்துள்ளது. பனூ இஸ்ரவேலர்கள் அல்லாஹ் அவர்கள் மீது ஹராமாக்கியிருந்த சில விஷயங்களை தந்திரமான வழிகளைக் கையாண்டு ஹலாலாக்கிக் கொண்டதை இஸ்லாம் கண்டித்தது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
'யஹூதிகள் புரிந்த குற்றச் செயல்களை நீங்கள் செய்யாதீர்கள். அவர்கள் மிக அற்பமான தந்திர வழிகளைக் கையாண்டு அல்லாஹ் ஹராமாக்கியவற்றை ஹலாலாக்கிக் கொண்டார்கள்.' (நூல்: இகாஸதுல் லஹ்பான்)
அல்லாஹ் யஹூதிகளுக்கு சனிக்கிழமை மீன் பிடிப்பதைத் தடை செய்தான். ஆனால் அவர்கள் தந்திரமான முறையில் இத்தடையை மீறினார்கள். வெள்ளிக்கிழமை குழிகளை வெட்டி சனிக்கிழமை அதில் மீன்கள் விழ வழிசெய்தார்கள். பின்னர் ஞாயிற்றுக்கிழமை போய் அவற்றைப் பிடித்து வந்தார்கள். இவ்வாறு ஒரு ஹராமாக்கப்பட்ட விடயத்தை தந்திரமான வழிகளைக் கையாண்டு செய்வதும் இஸ்லாமிய நோக்கில் ஹராமாகவே கொள்ளப்படும்.
ஹராமாக்கப்பட்ட ஒரு பொருளை வேறு பெயரால் குறிப்பிட்டு அதனை ஹலாலாக்க முயல்வது, ஒன்றின் உண்மை நிலை அப்படியே இருக்க அதன் வெளித் தோற்றத்தை மாற்றி ஹராமான ஒன்றை ஹலாலாக்க முயல்வது அனைத்தும் பாவமான ஹராமான தந்திர வழிகளாகும். பொருள் மாறாதிருக்க பெயரை மாற்றுவதிலோ, உண்மை நிலை அப்படியே இருக்க உருவத்தை மாற்றுவதிலோ எத்தகைய அர்த்தமும் இல்லை. அதனால் ஹராம் என்ற நிலை மாறப்போவதுமில்லை.
வட்டிக்கும் மதுபானத்திற்கும் வேறு பெயர்களைச் சூட்டுவதால் வட்டியினாலும் மதுபானத்தினாலும் கிடைக்கும் பாவம் நீங்கப் போவதில்லை.
'எனது சமூகத்தில் ஒரு பிரிவினர் மதுவை ஆகுமாக்கிக் கொள்வார்கள்ளூ அதற்கு வேறு பெயரிட்டு அழைப்பார்கள்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மத்)
இன்று ஆபாச நடனத்தைக் கலை என்றும் மதுபானத்தை ஆன்மீகப் பானம் என்றும் வட்டியை பயன்பாடு என்றும் வெவ்வேறு நாகரிக பெயர்கள் கொண்டு அழைப்பதன் மூலம் அவற்றை ஹலாலாக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் நாம் இதுவரை விளக்கிய சட்டவிதிக்கு நல்ல உதாரணங்களாகும்.

  ஹராத்திற்கு வழிவகுக்கும் (இட்டுச் செல்லும்) அனைத்தும் ஹராமாகும்  
இதுவும் ஹலால் ஹராம் தொடர்பான ஒரு முக்கிய விதியாகும். இஸ்லாம் ஒன்றை ஹராமாக்குகின்ற போது அதற்கு இட்டுச் செல்லும் வழிகளையும் அடைத்து விடுகின்றது. உதாரணமாக விபச்சாரத்தை இஸ்லாம் தடை செய்யும் போது அதற்கு வழிவகுக்கக் கூடிய ஆண், பெண் சுதந்திரமாகக் கலந்து பழகுதல், நிர்வாணப்படங்கள், உணர்ச்சியைத் தூண்டும் பாடல்கள், ஆபாச இலக்கியங்கள், பெண்கள் தமது கவர்ச்சியை வெளிக்காட்டல் போன்றவற்றையும் தடை செய்கின்றது.
இந்த அடிப்படையிலேயே ஹராத்திற்கு இட்டுச் செல்லும் அனைத்துமே ஹராம் என்ற அடிப்படை விதியை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் நிறுவினார்கள்.
இந்தவகையில் ஹராத்திற்கான பாவம் அதனைச் செய்தவரை மட்டும் சாராது. அதற்கு ஏதோ ஒருவகையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவும் அனைவரையும் அது சாரும். தான் பங்கெடுத்துக் கொண்ட அளவுக்கு ஒவ்வொருவரும் குற்றவாளியாகக் கருதப்படுவார். மதுவைப்பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போது மது அருந்துபவரையும் மது பிழிபவரையும் அதனைச் சுமந்து செல்பவரையும் சபித்தார்கள்ளூ வட்டியைப் பொறுத்தவரையில் வட்டி சாப்பிடுபவரையும், வட்டி கொடுப்பவரையும், வட்டிக்கணக்கு எழுது பவரையும், அதற்குச் சாட்சியாக இருப்பவரையும் அன்னார் சபித்துள்ளார்கள். இவ்வாறுதான் ஹராத்திற்குத் துணை புரியக்கூடியவர்கள் எல்லோரும் அதன் பாவத்தில் பங்குகொள்கின்றார்கள்.

  ஹலாலாக்குவதும் ஹராமாக்குவதும் அல்லாஹ்வுக்கு மட்டுமுரிய ஏக அதிகாரமாகும்  
இந்த சட்டவிதி, ஒன்றை ஹலால் என்றோ அல்லது ஹராம் என்றோ தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரியது எனக் கூறுகின்றது. மனிதர்களில் எவருக்கும் இந்த உரிமை வழங்கப்படவில்லை. மதத்தலைவர்களுக்கோ, மன்னர்களுக்கோ அல்லது வேறு எவருக்குமோ ஹலால் ஹராமை நிர்ணயிக்கும் உரிமை இல்லை என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும். இவ்வாறு நடந்து கொள்பவர் அல்லாஹ்வின் ருபூபிய்யத்| என்ற தனித்துவமான பண்பில் கைவைத்தவராகக் கருதப்படுவதுடன் அவரை ஏற்றுக்கொள்வோர் அவரை அல்லாஹ்வுக்கு இணை வைத்தோராகவும் கொள்ளப்படுவார்கள். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
''அல்லாஹ் அனுமதிக்காதவற்றை மார்க்கமாக இயற்றித்தரும் அல்லாஹ்வுக்கு இணையாகக் கொள்ளத்தக்கவர்கள் அவர்களுக்கு இருக்கின்றார்களா?'' (அல்குர்ஆன் - அஷ்ஷூரா : 21)
தமது மதகுருமாருக்கு சட்டமியற்றும் அதிகாரத்தைக் கொடுத்த அஹ்லுல் கிதாப்களை அல்குர்ஆன் கண்டிக்கின்றது.
''அவர்கள் (அஹ்லுல் கிதாப்கள்) அல்லாஹ்வை விட்டுவிட்டு தங்களது மதகுருமார்களை ரப்புகளாக எடுத்துக் கொண்டு விட்டனர். மஸீஹ் பின் மர்யமையும் ரப்பாக எடுத்துக் கொண்டனர். ஒரே இறைவனை இபாதத் செய்யுமாறே அவர்கள் ஏவப்பட்டனர். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் தூய்மையானவன்.'' (அல்குர்ஆன் - தௌபா: 31)
சட்டமியற்றும் அதிகாரத்தில் தலையிட்ட முஷ்ரிக்களையும் அல்குர்ஆன் கண்டிக்கிறது.
''அல்லாஹ் உங்களுக்கு உணவுப் பொருட்களாக இறக்கிய வற்றை நீங்கள் ஹராம் ஹலால் என்று விதித்துக் கொள்கிறீர்களா? (நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ் உங்களுக்கு இதனை அனுமதித்து உள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் இட்டுக்கட்டிச் சொல்கின்றீர்களா?'' (யூனுஸ்: 59)
''உங்கள் நாவால் பொய்யாக இது ஹலால், இது ஹராம் எனக் கூறி அல்லாஹ்வின் மீது பொய்யாகப் புனைந்து கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைப்போர் வெற்றி பெறுவதில்லை.'' (அல்குர்ஆன் - அந்நஹ்ல்: 116)
இந்த வகையில் ஹலால் ஹராமை தீர்மானிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே உள்ளது. அல்குர்ஆன் மூலமோ அல்லது தனது தூதரின் ஊடாகவோ இப்பணியை அல்லாஹ் செய்கின்றான் என்பதை இஸ்லாமிய சட்ட அறிஞர்கள் (ஃபுகஹாக்கள்) தெளிவாக புரிந்து வைத்துள்ளனர். தமது பணி இறை சட்டங்களை விளக்குவதே அன்றி சட்டமியற்றுவதல்ல என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருந்தனர். அல்லாஹ் ஹலாலாக்கியவை எவை ஹராமாக்கியவை எவை என்பதை தெளிவுபடுத்துவதோடு அவர்களின் பணி மட்டுப்படுத்தப்பட்டதாக அமைந்து இருந்தது.
''உங்களுக்கு ஹராமாக்கியவற்றை அவன் உங்களுக்கு விளக்கியுள்ளான்.'' (அல்குர்ஆன் - அன்ஆம்: 120)
இதனால்தான் அல்லாஹ்வின் இந்த அதிகாரத்தில் தலையிட்ட குற்றத்திற்கு ஆளாகிவிடுவோமோ என்ற பயத்தில் பல இமாம்கள், அறிஞர்கள் தாம் பூரண தகுதியுடையோராக இருந்த நிலையிலும் ஃபத்வா - மார்க்கத் தீர்ப்புக்களை வழங்குவதில் பெரிதும் தயக்கம் காட்டினார்கள். தவறாகவேனும் ஹராத்தை ஹலாலாகவோ, ஹலாலை ஹராமாகவோ மாற்றிக் கூறிவிடுவோமோ என்ற பயத்தில் அடுத்தவரிடம் இப்பொறுப்பை சாட்டிவிட முயன்றார்கள்.
இமாம் அபூ ஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மாணவரான இமாம் அபூயூஸுப் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுவதாக இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்: எமது ஆசிரியர்களான அறிஞர்கள் பலரையும் நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் அனைவரும் குர்ஆனில் மிகவும் தெளிவாக இருந்தால் அன்றி இது ஹலால், இது ஹராம் என்று பத்வா சொல்வதை வெறுத்தார்கள்.
ஒரு முக்கிய தாபிஊன்களில் ஒருவரான ரபீஃ இப்னு கைஸம் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியதாக இப்னுஸ் ஸாஇப் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்:
அல்லாஹ் இதனை ஹலாலாக்கினான். அல்லது ஏற்றுக் கொண்டான் என்று கூறுவதையிட்டு நான் உங்களை எச்சரிக்கின்றேன். சிலவேளை நீங்கள் சொல்வது பிழையாக அமைந்து, அல்லாஹ் அதனை ஏற்காமல், நீ பொய் சொல்கின்றாய், நான் அதனை ஹலாலாக்க வில்லை. ஏற்றுக்கொள்ளவும் இல்லை எனக் கூறக்கூடும். மேலும் அல்லாஹ் இதனை ஹராமாக்கினான் என்று நீங்கள் கூறுவதையும் நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் அல்லாஹ் அவரைப் பார்த்து, நீ பொய்யுரைத்து விட்டாய், நான் அதனை ஹராமாக்கவோ தடுக்கவோ இல்லை|என்று கூறக்கூடும்.
இமாம் அபூ யூஸுஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி தொடர்ந்தும் கூறுகின்றார்கள்: எமது தோழர்களில் சிலர், கூஃபாவின் மிகப் பெரும் தாபிஈ சட்டஅறிஞர்களில் ஒருவரான இப்ராஹீம் அந்நகயீ ரஹ்மதுல்லாஹி அலைஹி தனது தோழர்கள் பற்றி பின்வருமாறு கூறியதாக அறிவிக்கின்றனர்:
அவர்கள் எதாவது ஒரு விடயத்தில் ஃபத்வா|சொன்னால், இது மக்ரூஹ், இதைச் செய்வதில் தவறில்லை|என்றே கூறுவார்கள். இது ஹலால். இது ஹராம்|என்று கூறுவது எவ்வளவு பாரதூரமான வார்த்தை என்று அவர்கள் சொல்வார்கள்.
இமாம் இப்னு தைமியா கூறியதாக இமாம் இப்னு முப்லிஹ் கூறுகின்றார்கள்: 'ஸலபுஸ்ஸாலிஹீன்கள் ஹராம் என்று திட்டவட்டமாகத் தெரிந்தவற்றையே ஹராம் என்று கூறுவார்கள்.'
இந்த வகையில்தான் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்ற இமாம்கள் ஏதாவது ஒரு விடயம் பற்றிக் கேட்கப்பட்டால் ஹராம் என்ற வார்த்தையைத் தவிர்த்து இதனை நான் வெறுக்கின்றேன், இது எனக்குத் திருப்தியாகப்படவில்லை, நான் இதை விரும்பவில்லை| போன்ற வார்த்தைகளையே பிரயோகிப்பார்கள்.
இமாம் அபூ ஹனீபா ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி போன்றவர்களும் இதே மனப் போக்கைக் கொண்டிருந்தார்கள் என்பதைக் காணமுடிகின்றது.

  ஹலாலை ஹராமாக்குவதும் ஹராத்தை ஹலாலாக்குவதும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஷிர்க்காகும்  
ஹலாலை ஹராமாக்குவது ஷிர்க் சார்ந்த ஒரு செயலாகும். எனவேதான் ஜாஹிலிய்யாக்கால முஷ்ரிக்கள் மிருகங்கள், தாவரங்களில் சிலவற்றை தமக்குத் தாமே ஹராமாக்கிக் கொண்டிருந்தமையை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கின்றது. பஹீரா,ஸாயிபத், வஸீலத்,ஹாம் என்று அழைக்கப்பட்ட சில பண்புகளைக் கொண்ட ஆடு, ஒட்டகங்களை அவர்கள் ஹராமாக்கிக் கொண்டமை இதற்கு ஓர் உதாரணமாகும்.
பஹீரா, ஸாஇபா, வஸீலா, ஹாம் என எந்த மிருகத்தையும் அல்லாஹ் (ஹராம்) ஆக்கவில்லை. ஆனால் நிராகரிப்போரே அல்லாஹ்வின் மீது பொய்யைப் புனைந்துரைக்கின்றார்கள். அவர்களில் அதிகமானோர் சிந்திப்பதில்லை. அல்லாஹ் இறக்கியதன் பக்கமும், அல்லாஹ்வின் தூதர் பக்கமும் வாருங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் எமது முன்னோர்களிடம் நாம் கண்ட வழிமுறையே எமக்குப் போதுமானது என அவர்கள் கூறுவார்கள்.அவர்களின் முன்னோர் எதுவும் அறியாதிருந்தாலும் நேர்வழியில் இல்லாதிருந்தாலுமா அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வார்கள்.
ஸூறா அல்அன்ஆமிலும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றில் ஜாஹிலிய்யக் கால மக்கள் ஹராமாக்கிக் கொண்டிருந்தவை பற்றிய விரிவான ஒரு விளக்கம் காணப்படுகின்றது. இதனைப் பரிகசிக்கும் போக்கில் அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
ஸூரா அல்அஃராபின் 32, 33ஆம் வசனங்களிலும் இவ்வகையான ஒரு விளக்கத்தைக் காண்கின்றோம். இதில் ஹராமாக்குவோருக்கு மறுப்புத் தெரிவிக்கப்படுவதோடு, நிரந்தரமாக ஹராமாக்கப்பட்டவற்றின் அடிப்படைகளும் விளக்கப்படுகின்றன.
மதீனாவில் சிலர் பேணுதல் என்ற பெயரில் ஒருவகை தீவிரப் போக்கின் காரணமாக அல்லாஹ் ஆகுமாக்கிய சிலவற்றை தம்மீது ஹராமாக்கிக் கொண்டு வாழ முற்பட்டபோது அந்தப் போக்கைக் கண்டித்து சில அல்குர்ஆன் வசனங்கள் இறங்கின.
விசுவாசிகளே! அல்லாஹ் ஹலாலாக்கிய நல்ல பொருட்களை நீங்கள் உங்களுக்கு ஹராமாக்கிக் கொள்ள வேண்டாம். அல்லாஹ் நிச்சயமாக அத்துமீறுவோரை விரும்புவதில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் நல்லதை, ஹலாலானதைச் சாப்பிடுங்கள். நீங்கள் ஈமான் கொண்டுள்ள அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்..../ (அல்குர்ஆன் ஸூரத்துல் மாஇதா: 87, 88)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக