வெள்ளி, ஜூன் 12, 2015

ஜனாஸாவின் சட்டதிட்டங்கள்


بسم الله الرحمن الرحيم
அல்லாஹ்வால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்துக்கும் மரணம் என்பது நிச்சயமான ஒன்றாகும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது.

أَيْنَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَةٍ

’நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! (அல்குர்ஆன் 4:78)
ஒரு மனிதன் இறந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக சொல்லி தந்துள்ளார்கள். நாம் அதனை தெரிந்து கொள்வது நமக்கு மிகமிக அவசியமான ஒன்றாகும்.
ஜனாஸாவின் சட்ட திட்டங்கள் இன்று பலருக்கும் தெரியாத காரணத்தால் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாகவும் அதற்கென்று பயிற்சி பெற்றவர்களை அழைத்து வந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் நிலையை காண்கிறோம். முஸ்லிம்கள் யாவரும் இதனை அவசியம் தெரிந்து அதன்படி செயல்பட வேண்டும் என்ற நோக்கில் இதனை உங்களுக்கு தொகுத்து தந்திருக்கிறோம்.
மரணத்தருவாயில்:-
ஒரு மனிதனுக்கு மரண வேளை நெருங்கும் போது அவனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை முதலில் பார்ப்போம்.
‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் யாருக்காவது மரணம் நெருங்கினால் அவருக்கு கலிமாவை எடுத்துக் கூறுங்கள். எவனுடைய பேச்சின் கடைசி சொல் ‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ என்றிருக்கிறதோ அவன் சுவனம் புகுவான். அதற்கு முன்னுள்ள பாவச் செயல்களுக்கு பரிகாரமாகவும் இருக்கும்.’ (ஆதாரம்;; : முஸ்லிம்)
நோயாளிகளிடத்தில் அல்லது மரணத்தருவாயில் உள்ளவர்களிடத்தில் நீங்கள் சென்றால் நல்லவற்றையே கூறுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுவதற்கெல்லாம் வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்;கள். (ஆதாரம் : முஸ்லிம்)
எனவே மரணத்தருவாயில் இருப்பவர்களுக்காக மேற்சொன்ன நபிமொழியின் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் அவருக்கு அருகில் இருந்து கொண்டு ஒப்பாரி வைப்பதோ யாஸின் ஓதுவதோ கூடாது. இது இன்றும் ஒரு சில இடங்களில் நடைமுறையில் இருக்கிறது. மரணத்தருவாயில் இருப்பவர்களுக்கு ‘யாஸின்’ ஓதுங்கள் என்று வரும் அனைத்து அறிவிப்புகளும் பலகீனமானதாகும்.
இறப்பு செய்தியை கேட்டவுடன் இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்’என்று கூறுமாறு நபி(ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்திருக்கிறார்கள்.
மரணமடைந்தவுடன் செய்யப்பட வேண்டியது:-
அபூஸலாமாவின் மனைவி கூறினார்கள் எனது கணவர் அபுஸலாமா மரணமடைந்தவுடன் நபி(ஸல்) அவர்கள் வந்திருந்தார்கள். அப்போது என் கணவரின் கண் திறந்திருந்தது. நபியவர்கள் லேசாக கசக்கி கண்ணை மூடிவிட்டு ‘உயர் கைப்பற்றப்பட்ட உடன் பார்வை அதனை நோக்கியே இருக்கும் என கூறினார்கள்.
இதனை கேட்டவர்கள் அனைவரும் நடுக்கமுற்று அழுதார்கள். நீங்கள் உங்களை பற்றி நன்மையான சொல்லையே உபயோகித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கூறுபவற்றுக்கு வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகிறார்கள் என்று கூறிவிட்டு பின்னர் ‘யா அல்லாஹ் அபூஸலமாவுக்கு பிழைப்பொறுப்பாயாக நேர்வழி அடைந்தவர்களில் அவர் பதவியை உயர்த்துவாயாக அவர் தமக்குப்பின் விட்டுச்செல்லும் மக்களுக்கு நீயே பிரதிநிதியாக இருந்து காப்பாற்றுவாயாக! எல்லா உலகங்களுக்கும் அதிபதியே! எங்களுக்கும் அவர்களுக்கும் பிழைப்பொறுப்பாயாக! அவரின் மண்ணறையை விசாலப்படுத்தி வைப்பாயாக! அதிலே ஒளியையும் ஏற்படுத்துவாயாக என்று பிராத்தனை செய்தார்கள். (ஆதாரம்: முஸ்லிம)
எனவே நாமும் இறந்துவிட்டவர்களுக்காக இவ்வாறு பிராத்தனை செய்து கொள்ளலாம்.
ஒருவர் மரணித்துவிட்ட பின் அந்த மைய்யித்துக்கு அருகாமையில் இருந்து கொண்டு உறவினர்கள் திருக்குர்ஆன் வசனங்களை ஓதிக்கொண்டிருப்பார்கள். சில இடங்களில் மதரசா மாணவர்களையோ அல்லது இமாம் முஅத்தின்களை கொண்டோ முழுகுர்ஆனும் ஓதப்படுவது வழக்கமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நபி(ஸல்) அவர்கள் மரணத்த போது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்யவில்லை அல்லது ஸஹாபாக்கள் மரணமடையும் போது மற்ற நபித்தோழர்கள். இவ்வாறு அவர்களுக்கு அருகில் இருந்து கொண்டு ஓதிக்கொண்டிருக்கவில்லை. எனவே இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
சோகத்தை வெளிப்படுத்துதல்:-
அன்பும் பாசமும் கொண்டுள்ள நமது மக்கள் மனைவி தாய் தந்தை உற்றார் உறவினர்கள் யாராவது மரணமடைந்துவிட்டால் நமக்கு தாங்க முடியாத துக்கமும் துயரமும் ஏற்படுகின்றது. இந்த துன்பத்தால் மனிதன் ஓலமிடுவதும் ஒப்பாரி வைப்பதும் அழுது புலம்புவதும் தன்னைத் தானே அடித்துக்கொள்வதும் நாம் பார்த்து வருகிறோம். இது பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்போம்.
நபி(ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம்(ரலி) மரண வேளையில் நபி(ஸல்) அவர்கள் தூக்கி முத்தமிட்டார்கள் முகர்ந்தார்கள் அவரது உயிர் பிரிந்து கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்களின் இரு கண்களும் கண்ணீரை சிந்தின. அப்போது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே தாங்களுமா என்று கேட்டார். அதற்கு அவ்ஃபின் மகனே இது கருணையாகும் என்று கூறிவிட்டு கண்கள் கண்ணீரை சொரிகின்றது உள்ளம் மிகவும் வருந்துகின்றது என்றாலும் எங்கள் இறைவன் பொருந்திக் கொள்ளாத வார்த்தைகளை நாம் சொல்ல மாட்டோம். இப்ராஹீமே உன் பிரிவால் நாங்கள் பெரும் கவலையில் இருக்கிறோம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : அனஸ்(ரலி) – ஆதாரம் : புஹாரி முஸ்லிம்)
சில ஊர்களில் அந்த ஊரில் நன்கு பிரபலமானவரோ அல்லது நற்செயல்கள் புரிந்த நல்லடியார்கள் யாராவது மரணமடைந்துவிட்டால் அன்றைய தினம் வானத்திலிருந்து கடுமையான மழை பெய்தால் இவரது மரணத்திற்காக வானம் கூட அழுகிறது என்று சொல்வதை நாம் பார்க்கிறோம். எவரது மரணத்திற்காகவும் இவ்வாறு நடைபெறாது. மழை பெய்வது என்பது அல்லாஹ்வின் வல்லமையின் அத்தாட்சியாகும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்களது மகனார் இப்ராஹீம்(ரலி) மரணித்த போது சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது மக்கள் இப்ராஹிமின் மரணத்தால் தான் இது ஏற்பட்டது என்று பேசிக் கொண்டார்கள். இதை செவியுற்ற நபி(ஸல்) அவர்கள் மக்களே! ஆறியாமை கால மக்கள் ஒரு மனிதரின் இறப்புக்காகத் தான் கிரகணம் பிடித்துள்ளது என்று நம்பிக்கை கொண்டிருந்தார்கள் இது தவறானதாகும். சூரிய சந்திர கிரகணங்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் ஒன்றாகும். யாருடைய பிறப்பிற்காகவும்இ இறப்புக்காகவும் அது ஏற்பட்டதல்ல. இதன் மூலம் அல்லாஹ் மக்களுக்கு எச்சரிக்கை விடுகிறான். கிரகணம் பிடிப்பதை நீங்கள் கண்டால் அல்லாஹ்வை துதித்து பிராத்தித்து பாவமன்னிப்பும் தேடிக் கொள்ளுங்கள். அடிமையை விடுதலை செய்யுங்கள் அது (கிரகணம்) நீங்கும் வரை பள்ளிவாசலுக்கு சென்று தொழுது கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
(ஆதாரம் : புஹாரி; முஸ்லிம்)
துக்கம் அனுஷ்டிப்பது:-
ஒரு மனிதன் இறந்துவிட்டால் எத்தனை நாட்கள் துக்கம் அனுபவிக்க வேண்டும் என்பதை இஸ்லாம் சொல்லித்தருகிறது. கணவன் இறந்துவிட்டால் மனைவி 4மாதம் 10நாட்கள் இத்தா இருக்க வேண்டும். கணவனைத்தவிர மற்றவர்களுக்கு 3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுபவிக்கக் கூடாது.
நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்முஹபீபா(ரலி) அவர்கள் தனது தந்தை அபுசுஃப்யான் மரணமடைந்து மூன்றாவது நாள் நறுமணத்தைலத்தை தனது கன்னங்களிலும் தோளிலும் தடவிக்கொண்டனர். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிய பெண்கள் தனது கணவனைத் தவிர வேறு யாருக்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. கணவனுக்கு மட்டும் நான்கு மாதம் பத்து நாட்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேள்விபடாவிட்டால் இந்த நறுமணம் எனக்கு தேவையற்று தான் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஜைனப்(ரலி)
(நூல் : முஸ்லிம்)
விருந்து:-
மரணித்த மனிதனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் பல இருக்க மய்யித்தை அடக்கும் முன்பே பல வீடுகளில் தட புட சமையல்கள் பிரியாணி நெய்சோறு என்று விதவிதமான சமையல்கள் செய்யப்பட்டு விருந்து; பரிமாறப்படும் நிகழ்சிகள் டீ குளிர்பானம் பரிமாறுதல் இவைகள் எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும். இதற்கு காரணம் கேட்டால் வெளியூர்களிலிருந்து வந்திருப்பவர்கள் குழந்தைகள் நோயாளிகள் வந்திருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் என்று கூறி சமாளிப்பதை நாங்கள் பார்க்கிறோம். இவர்கள் நிலமையை அனுசரித்து மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். இறந்தவரின் வீட்டாரின் துக்கத்தில் நாம் பங்கு கொள்ள வேண்டும்.
இறந்துவிட்டவரின் குடும்பத்தினருக்கு நெருங்கிய உறவினர்களோ அண்டை வீட்டாரோ உணவு சமைத்து இறந்தவரின் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும். அவர்களுக்கு ஆறுதல் கூறி உணவு உண்ணச் செய்ய வேண்டும். இதுவே நபி வழியாகும்.
ஜஃபர்(ரலி) அவர்கள் மரணமடைந்துவிட்ட போது அவரது குடும்பத்தாருக்காக உணவு சமைத்து கொடுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஜாபர்(ரலி
மையித்தை அடக்கிய பிறகு மைய்யித்து வீட்டீல் கூடுவதையும் அங்கு விருந்து சமைப்பதையும் ஒப்பாரி வைத்து ஓலமிடும் குற்றத்தை போன்றதாக நாங்கள் கருதுவோம் என்று ஜரீர் பின் அப்துல்லாஹில்பஜலி(ரலி) என்ற நபித்தோழர் கூறுகிற செய்தி அஹ்மது இப்னுமாஜா போன்ற நூல்களில் காணப்படுகிறது.
மையித்தை குளிப்பாட்டுதல்:-
இனி மையித்தை எவ்வாறு குளிப்பாட்ட வேண்டும் என்பதை பார்ப்போம்
ஒரு மன்தன் மரணித்த பின்பு அவனது உடலில் உள்ள மலம் போன்றவற்றை வெளியேற்றல் வேண்டும். இவ்வாறு செய்யும் போது தனது இடது கையில் ஒரு துண்டு துணியை சுற்றிக்கொண்டு வயிற்றை லேசாக அமுக்கி துண்டுத்துணி சுற்றப்பட்ட கைகளால் மறைவிடத்தை சுத்தப்படுத்த வேண்டும். அவ்வாறு கழுவும் போது அவர்களின் மர்ம உறுப்புகள் வெளியே தெரியாதவாறு கையை உள்ளே விட்டு கழுவ வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் மரணித்த போது அலி(ரலி) அவர்கள் அண்ணல் பெருமானாரை குளிப்பாட்டினார்கள். அவர்கள் கையில் ஒரு துண்டு துணி இருந்தது. நபி(ஸல்) அவர்களின் மேலாடைக்குள் கையை விட்டு கழுவி குளிப்பாட்டினார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஹர்ஸ்(ரலி)
(நூல் : ஹாகிம்)
குளிப்பாட்டும் போது மைய்யித்துதானே என்று கருதி அவரது உடலுறுப்புகளை கண்டபடி வளைக்கவோ இழுக்கவோ செய்யக் கூடாது. மிருதுவாகவே பயன்படுத்த வேண்டும். சில இடங்களில் ஜனாஸாவை குளிப்பாட்ட வரும் முஅத்தின்கள் அல்லது ஜமாத் பணியாளர்கள் சர்வசாதாரணமாக மைய்யித்தை அங்குமிங்கும் புரட்டி அவர்களை வளைத்து இழுத்து படாதபாடு படுத்துவதை பார்க்கிறோம். இதைத்தவிர்க்க உறவினர்களே குளிப்பாட்டுவது சிறந்தது.
அது போல் உயிருடன் இருக்கும் போது எவ்வாறு ஒருவரது மர்மஸ்தானத்தை அடுத்தவர்கள் பார்க்கக் கூடாதோ அந்த சட்டம் தான் ஜனாஸாவுக்கும். எனவே குளிப்பாட்டுபவர்கள் இதை கவனத்தில் கொண்டு பேணுதலாக நடந்து கொள்ள வேண்டும்.
ஒழுங்கு முறைகள்:-
ஒற்றைப்படையாகவே செய்ய வேண்டும். நறுமணங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டும். கற்பூரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் பெண் மைய்யித்துக்கு கொண்டையை அவிழ்த்து விட்டு நன்றாக கழுவிய பின் மூன்று பின்னல் போட்டு தலைமுடியை தொங்க விட வேண்டும்.
வலது புறத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் ஒது செய்யும் உறுப்புகளிலிருந்து துவங்க வேண்டும் என்று தான் நபிமொழியில் காணப்படுகிறது. சில இடங்களில் மைய்யித்தை குளிப்பாட்டி முடித்த பின் ஒழுசெய்யும் நடைமுறை மக்களிடம் உள்ளது. இதற்கு ஆதாரம் இல்லை. ஒழு செய்யும் உறுப்புகளிலிருந்து துவங்க வேண்டும் என்று தான் ஹதீஸ் உள்ளது. ஒழு செய்ய நபி வழியில் ஆதாரம் இல்லை. மூன்று அல்லது ஐந்து முறை தேவைப்பட்டால் அதற்கு மேலாகவோ குளிப்பாட்டலாம்.
நபி(ஸல்)அவர்களது புதல்வி ஜைனப்(ரலி) அவர்கள் மரணமடைந்த போது இலந்தை இலை போடப்பட்ட தண்ணீரால் மூன்று முறையோ அல்லது ஐந்து முறையோ தேவைப்பட்டால் அதற்கும் அதிகமாகவோ பெண்களே! நீங்கள் கழுவுங்கள். கடைசியாக கழுவும் போது கற்பூரத்தை ஆக்கிக் கொள்ளுங்கள். குளிப்பாட்டி முடித்தவுடன் எனக்கு தெரிவியுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் குளிப்பாட்டி முடித்தவுடன் அவர்களிடம் தெரிவித்தோம். அப்போது எங்களிடம் அவர்களின் கீழாடையை (வேஷ்டியை தந்து அதனால் மூடி கபனிடச் சொன்னார்கள். (அறிவிப்பாளர் : உம்மு அதிய்யா(ரலி) (நூல் : புஹாரி முஸ்லிம்)
யார் குளிப்பாட்டுவது:-
கணவனை மனைவியும் மனைவியை கணவனும் குளிப்பாட்ட தடை இல்லை. இதைத் தவிர எந்த பெண்ணையும் ஆண்கள் குளிப்பாட்டக் கூடாது. கணவன் மனைவியை தவிர ஆணை பெண்ணோ பெண்ணை ஆணோ குளிப்பாட்டக் கூடாது. நெருங்கிய உறவினர்கள் குளிப்பாட்டுவது சிறந்தது. நபித்தோழர்கள் காலத்தில் இது கடைபிடிக்கப்பட்டிருப்பதால் அதை கடைபிடி;ப்பது சிறந்தது. ஆயினும் ஆணை மற்ற ஆண்கள் குளிப்பாட்டலாம். அது போன்றே பெண்ணுக்கு மற்ற பெண்கள் குளிப்பாட்டலாம்.
நீ எனக்கு முன் இறந்துவிட்டால் நானே உன்னை குளிப்பாட்டி கபன் அணிவித்து தொழுகை நடத்தி அடக்கம் செய்வேன் என்று ஆயிஷா(ரலி)அவர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அன்னை ஆயிஷா(ரலி)அவர்களே அறிவிக்கும் செய்தி இப்னுமாஜா அஹ்மது போன்ற நூல்களில் காணப்படுகிறது
அபூபக்கர்(ரலி)அவர்கள் மரணமடைந்த போது அவர்களின் மனைவி அஸ்மா(ரலி)அவர்கள் குளிப்பாட்டினார்கள். அவர்களது துணைக்காக அப்துர்ரஹ்மான் இப்னுஅவ்ஃப் அவர்களையும் சேர்த்துக் கொண்டார்கள்.
பாத்திமா(ரலி) அவர்கள் மரணித்த போது அவர்களை அலி(ரலி) அவர்கள் குளிப்பாட்டினார்கள் என்ற செய்தி ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குளிப்பாட்டக் கூடாதவர்கள்:-
இஸ்லாத்திற்காக போர் செய்து உயிர் தியாகம் செய்தவர்களின் உடலை குளிப்பாட்டக்கூடாது. உஹது போரில் கொல்லப்பட்டவர்களை குளிப்பாட்டாமல் நபி(ஸல்) அவர்கள் நல்லடக்கம் செய்தார்கள் என்ற செய்தி புஹாரி போன்ற நூல்களிலிருந்து காணமுடிகிறது. (அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி)
இதன்படி போர்களத்தில் கொல்லப்பட்ட உயிர் தியாகிகளுக்கு மட்டுமே குளிப்பாட்டக்கூடாது என்பதை விளங்கலாம். அல்லாஹ்வின் பாதையில் வேறு வழிகளில் உயிர்தியாகம் செய்தவர்கள் ஷஹீத் அந்தஸ்து உடையவர்கள் என்றாலும் அவர்களை குளிப்பாட்டுதல் வேண்டும். காரணம் உமர்(ரலி) அவர்கள் கத்தியால் குத்தப்பட்டு மரணமடைந்த போது அவரது உடல் குளிப்பாட்டப்பட்ட செய்தி ஹதீஸ்களிலிருந்து காணமுடிகிறது.
இன்னொரு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவிஷயம் குளிப்பாட்டுபவர் மைய்யித்தின் உடம்பில் ஏதாவது குறைபாடுகளை கண்டால் அதை யாருக்கும் கூறாமல் மறைத்து விடவேண்டும். அடுத்ததாக குளிப்பாட்டுதல் கபனிடுதல் கபரு தோண்டுதல் இதற்காக இறந்தவரின் குடும்பத்தாரிடமிருந்து கூலியை எதிர்பார்க்காமல் நன்மையை நாடி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக மட்டும் செய்தால் அல்லாஹ் அதற்கு கூலி வழங்குவான்
மைய்யித்தை குளிப்பாட்டுபவர்கள் தானும் குளித்துக் கொள்வது சுன்னத்தாகும்.
‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் எவர் மைய்யித்தை குளிப்பாட்டினாரோ அவர் குளித்துக் கொள்ளட்டும். எவர் மைய்யித்தை சுமந்து சென்றாரோ அவர் ஒழு செய்து கொள்ளட்டும். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா(ரலி)) (நூல் : தாரகுத்னி)
கபன் செய்யும்முறை:-
அடக்கம் செய்வதற்கு முன் மைய்யித்திற்கு ஆடை அணிவித்தல் வேண்டும். இதற்கு ‘கபன்’ என்று சொல்லப்படும்.
‘நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்கள் சகோதரருக்கு அழகிய முறையில் கபனிடுங்கள்.’ (அறிவிப்பாளர் : ஜாபிர்(ரலி))
(நூல் : முஸ்லிம்)
வெண்மையான சுத்தமான தூய்மையான ஆடைகளை கொண்டு கபனிடுவதே சிறந்ததாகும்.
அல்லாஹவின் தூதர் நபி(ஸல்) அவர்கள் எமன் தேசத்தில் ஸஹீல்ய்யா என்ற இடத்தில் தயாரிக்கப்பட்ட மூன்று வெண்ணிற ஆடைகளினால் கபனிடப்பட்டார்கள். அவற்றில் சட்டையும் இல்லை தலைப்பாகையும் இல்லை என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம் : புஹாரி முஸ்லிம்)
இந்த ஹதீஸிலிருந்து மூன்று ஆடைகள் மைய்யித்துக்கு கபனிடுவதற்கு போதுமானது என்பது தெரிய வருகிறது. மூன்று ஆடைகள் இல்லை எனில் ஒரு ஆடை அல்லது இரண்டு ஆடைகள் இருந்தாலும் போதுமானது. ஹதீஸ்களில் இதற்கு ஆதாரம் உள்ளது. சட்டையும் தலைப்பாகையும் அணிவிப்பதற்கு எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை. மேற்கண்ட நபி மொழியே அதற்கு சான்று. பெண்களுக்கு கபனை பொறுத்தமட்டில் ஆண்களுக்குரிய சட்டமே ஹதீஸ்களில் வலுவாக உள்ளது. இருப்பினும் நபி(ஸல்) அவர்களின் மகள் உம்மு குல்ஸூம்(ரலி) மரணமடைந்த போது ‘நாங்கள் உம்மு குல்ஸூமை ஐந்து ஆடைகளில் கபன் செய்தோம். உயிருள்ளவருக்கு முக்காடு போடுவது போல அவருக்கு நாங்கள் முக்காடு போட்டோம் என்று உம்மு அதியா(ரலி) அறிவிக்கும் செய்தி கவாரிஸிமி என்ற நூலில் பதியப்பட்டுள்ளது. இது ஹஸன் என்ற தரத்தில் அமைந்ததாகும்.
இஹ்ராம் அணிந்த நிலையில் ஒருவர் மரணித்துவிட்டால் அவரை குளிப்பாட்டி அந்த இஹ்ராம் உடையிலேயே நறுமணப்பொருட்களைப் பயன்படுத்தாமல் அவரை அடக்கம் செய்ய வேண்டும். அவரது தலையை மூடக்கூடாது. இது பற்றி இப்னுஅப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி புஹாரி முஸ்லிம் போன்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மைய்யித்தை கபன் செய்து முடிந்ததும் இன்று தமிழகத்தில் பரவலாக எல்லா ஊர்களிலும் அல்பாத்திஹா ஓதி அல்லது யாஸின் ஓதி துஆ செய்யப்படுகிறது. இது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறை அல்ல.
ஒருவர் மரணமடைந்துவிட்டால் வேகமாக அடக்கம் செய்யப்படுதல் வேண்டும் இருப்பினும் உறவினர்கள் வருகைக்காக தாமதப்படுத்தி வைப்பதில் தவறு இல்லை. ஆயினும் மூன்று நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது. நபி(ஸல்) அவர்கள் மரணமடைந்த பின் மூன்றாம் நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது. நபி(ஸல்)அவர்கள் மரணமடைந்த பின் மூன்றாம் நாள் தான் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்று ஆதாரங்களை காணமுடிகிறது என்பது தான் தாமதப்படுத்தி வைக்க ஆதாரப்பூர்வமான காரணமாகும்.
கடனை நிறைவேற்றுதல்:-
ஒருவர் கடன் இருக்கும் நிலையில் இறந்துவிட்டால் அவரை அடக்கம் செய்யும் முன் அவரது உறவினர்கள் அந்த கடனை அடைத்துவிட வேண்டும். இறந்தவர் சொத்து ஏதேனும் விட்டுச்சென்றால் அதிலிருந்து கடனை அடைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உறவினர்களோ மற்றவர்களோ அந்த கடனுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இறந்தவர்களின் கடனை தீர்க்க உறவினர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இருந்தால் அந்த கடனை அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது இவர் கடனாளியா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்ட போது நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றார்கள். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு வேறு ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்ட போது இவர் கடனாளியா என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள் நபித்தோழர்கள் ‘ஆம்’ என்றனர். நபி(ஸல்) அவர்கள் அப்படியானால் இவருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகதாதா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே இவரது கடனுக்கு நான் பொறுப் பேற்றுக் கொள்கிறேன் என்று கூறியதும் அவருக்கு நபி(ஸல்)அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அறிவிப்பாளர் : ஸலமா பின் அக்வஃப்(ரலி) – நூல் : புஹாரி)
ஜனாஸாவை எடுத்துச் செல்லுதல்:-
ஜனாஸாவை எடுத்து செல்லும் போது எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என நபி(pஸல்)அவர்கள் கூறி சென்றுள்ளார்கள். அதன் அடிப்படையிலேயே நாமும் செயல்பட வேண்டும்.
ஒரு முஸ்லிமுக்கு இன்னொரு முஸ்லிம் மீதுள்ள கடமைகள் ஐந்தாகும்.
‘ஸலாம் கூறப்பட்டால் பதில் கூறுவது நோயாளியைக் கண்டு நலம் விசாரித்தல் ஜனாஸாவில் கலந்து கொள்ளுதல் விருந்துக்கு அழைக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளுதல் தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறினால் பதில் கூறுவது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’
‘ஜனாஸாவை தொடர்ந்து செல்லுங்கள் அது உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.’ (நூல் : புஹாரி முஸ்லிம்)
ஸஃத் பின் முஆத்(ரலி) மரணித்த நாளன்று (அவரது உடல் தூக்கிச் செல்லும் போது) எங்களுடைய செருப்பு வார் அறுந்து போகும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் விரைந்து சென்றார்கள். (அறிவிப்பாளர் : ராபிஃ(ரலி) – நூல் : தாரிக் (புஹாரி இமாமின் நூல்)
ஜனாஸாவை தோள்களில் சுமந்து செல்லத் தான் ஹதீஸ்கள் இருக்கிறது. ஆயினும் (போக்குவரத்து நெரிசலான) தொலைவான இடங்களிலுள்ள மையவாடிக்கு தோளில் சுமப்பது கடினமான காரியமாகும். ஜனாஸாவை தூக்கிவிட்டால் விரைவாக கொண்டு செல்ல வேண்டுமென்பதே நபிமொழி. தோலைவான இடங்களுக்கு தோள்களில் எடுத்துச் சென்றால் காலதாமதமாகும்.
‘அல்லாஹ் எந்த ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு கஷ்டத்தை கொடுப்பதில்லை.’ (திருக்குர்ஆன் : 2:286)
இதனடிப்படையில் வாகனத்தில் கொண்டு செல்ல தடை இல்லை. ஜனாஸாவை எடுத்துச் செல்லும் போது அமைதியான முறையிலே எடுத்துச் செல்ல வேண்டும். ஷஹாதத் சொல்லி எடுத்துச் செல்வது நபியுடைய வழி அல்ல. அது போன்று அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலோ பூ முதலானவற்றை ஜனாஸா பெட்டியின் மேல் இட்டு அலங்கரிக்கவோ மார்க்கத்தில் எந்தவிதமான ஆதாரமுமில்லை.
அது போல ஜனாஸாவை எடுத்துச் செல்லும் போது சில ஊர்களில் ‘இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜியூன்’ என்று ஒருவர் சொல்ல மற்றவர்கள் ஷஹாதா கலிமாவை சொல்லிக் கொண்டு எடுத்துச் செல்கிறார்கள். இது பித்அத் ஆகும். (பித்அத் என்பது மார்க்கத்தில் இல்லாத விஷயங்களை புகுத்துவது)
’பெண்களாகிய நாங்கள் ஜனாஸாவை தொடர்ந்து செல்லக் கூடாது என்று நபியவர்களால் தடுக்கப்பட்டுள்ளோம். எங்களை போகவே கூடாது என நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தினார்கள்.’(ஆதாரம் : புஹாரி முஸ்லிம்)
எனவே ஆண்கள் மட்டும் தான் ஜனாஸாவை பின் தொடர்ந்து செல்ல வேண்டும். ஜனாஸாவுடன் செல்பவர்கள் ஜனாஸாவுக்கு முன்னாலும் பின்னாலும் செல்லலாம். வாகனத்தில் செல்பவர்கள் ஜனாஸாவுக்கு பின்னால் தான் செல்ல வேண்டும். நபி மொழிகளில் இது பற்றிய அறிவிப்புகள் காணப்படுகிறது.
ஜனாஸா தொழுகை:-
யார் ஜனாஸா தொழுகையில் பங்கேற்கின்றாரோ அவருக்கு ஒரு கிராஅத் நன்மையுண்டு யார் அடக்கம் செய்யப்படும்வரை கலந்து கொள்கின்றாரோ அவருக்கு இரண்டு கிராஅத்கள் நன்மை உண்டென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இரண்டு கிராஅத்கள் என்றால் என்ன? என வினவப்பட்டது அதற்கவர்கள் ”இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்கள்: புகாரி முஸ்லிம்)
ஜனாஸா தொழுகை என்பது இறந்தவருக்காக செய்யப்படும் ஒரு பிராத்தனை ஆகும். இதில் எந்த ஜனாஸாவுக்கு தொழுகை நடத்தலாம் எதற்கு நடத்துவது கடமையில்லை என்பதை தெரிந்து கொள்வோம்.
பருவமடையாத குழந்தை:-
‘நபி(ஸல்) அவர்களின் மகன் இப்ராஹிம் பதினெட்டு மாதத்தில் மரணமடைந்துவிட்டார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல் : அஹமது அபுதாவூது)
இன்னொரு அறிவிப்பில் இறந்து பிறந்த குழந்தைக்கு தொழுகை நடத்தி அதன் பெற்றோருக்கு மன்னிப்பையும் அருளையும் கொடுக்கும்படி பிராத்தனை செய்தல் வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அது போல ‘ஸிக்து’வுக்கும் (குழந்தையாக உருப்பெறுவதற்கு முன் உள்ள சதைப்பிண்டம்) தொழ வைக்க வேண்டும். (நூல் : அபுதாவூது பைஹகீ ஹாகிம்)
அன்ஸாரிகளின் சின்னஞ்சிறு ஆண் குழந்தை ஒன்று கொண்டு வரப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் (நஸாயீ)யில் காணப்படுகிறது. எனவே மேற்கண்ட அறிவிப்புகளின் படி சிறு குழந்தைகளுக்கும் ஸிக்துவுக்கும் தொழுகை நடத்தலாம் என்பதை விளங்கிக் கொள்ளலாம். அது போல விபச்சாரம் திருட்டு அவதூறு கூறுதல் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டு ‘ஹத்’ கொடுக்கப்பட்டு இறந்தவர்களுக்கு தொழுகை நடத்த மார்க்கத்தில் தடையில்லை.
‘தற்கொலை செய்தவனுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தவில்லை என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.’
ஒரு மனிதன் ஈட்டியால் தற்கொலை செய்து கொண்டான். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தவில்லை என்று ஜாபிர் பின் ஸமூரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல் : முஸ்லிம்)
இந்த ஹதீஸ் பற்றி அறிஞர்கள் மத்தியில் நபி(ஸல்) அவர்கள் தான் தொழுகை நடத்தவில்லை. அதற்கு பதில் வேறு யாராவது தொழுகை நடத்தலாம் என்று கருத்து நிலவுகிறது. சிலர் தொழுகை நடத்துவது கூடாது என்று கூறுகிறார்கள்.
கடனாளியாக ஒருவன் மரணித்துவிட்டால் அவனது கடனை அடைத்துவிட்டு தொழவைக்க வேண்டும். அல்லது அவனது உறவினர்கள் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது. ‘அவர்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழ வேண்டாம். ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அ;ல்லாஹ்வையும் அவனது தூதரையும் நிராகரித்து பாவிகளாகவே இறந்தார்கள்’ என்று அல்லாஹ்(9:84)ல் தெளிவுபடுத்திவிட்டான்.
காயிப் ஜனாஸா:-
ஒருவர் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இறந்துவிட்டால் அவரது இறப்பு செய்தியை கேள்விப்படும் போது தாம் இருக்கும் இடத்திலிருந்து அவருக்காக தொழக்கூடிய தொழுகை ‘காயிப் ஜனாஸா’ என்று கூறப்படுகிறது.
நபி(ஸல்) அவர்கள் ஹபஷாவில் இறந்துவிட்ட நஜ்ஜாஸி மன்னருக்காக ஜனாஸாவுக்கு தொழ வைப்பது போன்று தொழ வைத்தார்கள் என்று புஹாரி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ஜனாஸாவிற்கு ஒரு முறை தொழுகை நடத்தப்பட்டால் மீண்டும் தொழுகை நடத்த வேண்டியதில்லை. துஆ செய்தால் போதுமானது. காரணம் ஜனாஸா தொழுகை எல்லோர் மீதும் கடமையா ஒன்றல்ல சில முஸ்லிம்கள் நிறைவேற்றினால் எல்லோரும் நிறைவேற்றியதாகக் கருதப்படும்.
தொழக்கூடாத நேரங்கள்:-
சூரியன் உதிக்கும்போதும் அது உச்சியில் இருக்கும்போதும் மறையும்போதும் தொழுவதையும் மரணித்தவர்களை நல்லடக்கம் செய்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
அறிவிப்பாளர் :உக்பா இப்னு ஆமிர்(ரலி) நூல் முஸ்லிம்
ஜனாஸா தொழுகை செய்யும்முறை:-
ஜனாஸா தொழுகைக்கு கைகளை உயர்த்துவதற்கு ஸஹீஹான நபி மொழி ஏதுமில்லை. கைகளை தொழுகைக்கு கட்டுவது போன்று நெஞ்சின் மீதே கட்ட வேண்டும்.
தக்பீர் கட்டியபின்பு முதல் தக்பீர் சூரத்துல் பாத்திஹாவை ஓத வேண்டும்.
2 வது தக்பீருக்கு பின் நபி(ஸல்) அவர்களின் மீது ஸலவாத்து சொல்லுதல் வேண்டும்.
3 வது 4 வது தக்பீபில் மைய்யித்துக்காக பிராத்தனை செய்தல் வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் ஜனாஸாவுக்கு தொழ வைக்கும் போது
اللَّهُمَّ اغْفِرْ لِحَيِّنَا وَمَيِّتِنَا ، وَشَاهِدِنَا وَغَائِبِنَا ، وَصَغِيْرِنَا وَكَبِيْرِنَا ، وَذَكَرِنَا وَأُنْثَانَا ، اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَّا فَأَحْيِهِ عَلَى الإِسْلاَمِ ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الإِيْمَانِ.
‘அல்லாஹூம்ம ஃபிர்லி ஹய்யினா வமய்யிதினா வஷாஹிதினா வஹாயிபினா வஸகீரினா கபீரினா வதகரினா வஉன்ஸானா அல்லாஹீம்ம மன் அஹ்யய்தஹீ மின்னாஃப அஹ்யிஹி அலல் இஸ்லாம் வமன் தவ.ப்பய்தஹூ மின்னா ஃபதவஃபஹூ அலல் ஈமான் என்று ஓதுபவர்களாக இருந்தனர்.
(அறிவிப்பாளர் : அபுஹூரைரா(ரலி) (நூல் : திர்மிதி)
اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنْ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الابْيَضَ مِنْ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلا خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ وَ مِنْ عَذَابِ النَّارِ
அல்லாஹூம்மஃபிர்லஹூ வர்ஹம்ஹூ வஆஃபிஹி வஃபு அன்ஹூ வஅக்ரிம் நுஸீலுஹூ வவஸ்ஸிஃ மத்கலஹூ வக்ஸிலீஹூ பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்தி வநக்கிஹி மின்ஹதாயாஹூ கமாநக்கைத்தஸ்ஸவ்புல் அப்யழு மினத்தனஸி வஅப்தில்ஹூ தாரன் ஹைரன் மின்தாரிஹி வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வஸவ்ஜன் ஹைரன் மின் ஸவ்ஜிஹி வஅத்ஹில்ஹூல் ஜன்னத வஅஇத்ஹூமின் அதாபில் கப்ரி வமின் அதாபின்னார்.’
(நூல்கள் : முஸ்லிம் நஸயீ இப்னுமாஜா பைஹகி)
الَّلهُمَّ عَبْدُكَ ، وَابْنُ أَمَتِكَ اِحْتَاجَ إِلَى رَحْمَتِكَ ، وَأَنْتَ غَنِيٌّ عَنْ عَذَابِهِ إِنْ كَانَ مُحْسِنًا فَزِدْ فِي إِحْسَانِهِ ، وَإِنْ كَانَ مُسِيْئًا فَتَجَاوَزْ عَنْهُ.
அல்லாஹீம்ம அப்துக வப்னு அமதிக இஹ்தாஜ இஸாரஹ்மதிக வஅன்த ஹனிய்யுன் அன் அதாபிஹி இன்கான முஹ்ஸினன் ஃபஸித்தஃபீ ஹஸனாதிஹி வஇன்கான முஸீஅன்ஃபத ஜாவிஸ் அன்ஹீ (நூல் : ஹாகிம் தப்ரானி)
ஆண் மையித்திற்கு தலைப்பகுதியில் நின்றும் பெண் மைய்யித்திற்கு அதன் நடுப்பகுதியில் நின்றும்; தெழுகை நடத்த வேண்டும்.
பிறகு தொழுகை முடித்து ஒருஸலாம் கூறுவதே நபிவழியாகும்.
கப்ரில் மையித்தை அடக்கம் செய்யும்முறை:-
நல்லடக்கம் என்பது ஜனாஸா தொழுகையையும் உள்ளடக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மரணித்தவர்களை பொது கபருஸ்தானில் அடக்கம் செய்வதே நபிவழியாகும். நபி(ஸல்) அவர்களை அவர்களது வீட்டிலேயே(மஸ்ஜிதுந் நபவியில்) அடக்கம் செய்யப்பட்டார்கள் இது நபி (ஸல்) அவர்களுக்குள்ள சிறப்பு அனுமதியாகும்.
கப்ரை ஆழமாகவும் அகலமாகவும் தோண்டவேண்டும் மையித்தை கப்ரில் வைக்கும்போது ‘பிஸ்மில்லாஹி வஅலா மில்லத்தி ரஸூலில்லாஹி’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்று இப்னு உமர்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அஹமது அபூதாவூது போன்ற நூல்களில் காணப்படுகிறது.
கப்ரில் மையித்தை வைத்த உடன் மண்ணை தள்ளி மூடிவிடவேண்டும். உயரமாக ஆக்குவதோ கூம்பு வடிவில் மண்ணை ஆக்குவதோ கூடாது.
காரணம் தரை மட்டத்துக்கு மேல் உயரமாக ஆக்கப்பட்டுள்ள எந்த கப்ரையும் தரைமட்டம் ஆக்காமல் விட்டுவிடாதே என்று நபி (ஸல்) அவர்கள் தனது மருமகன் அலி(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்ற செய்தி முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவே இதை அவசியம் பேணவேண்டும்.
மையித்தை கப்ரில் வைக்கும்போது வலதுபக்கம் சாய்வாக வைக்கவேண்டும் முகம் கிப்லாவை முன்னோக்கியதாக இருக்கவேண்டும். இது சுன்னத்தாகும்.
சில இடங்களில் மையித்தின் நெற்றிக்கு அருகில் ஒருபிடி மண் வைக்கப்படுகிறது. இது பித்அத்தாகும்.
மையித்தை அடக்கம் செய்து முடிந்தபின் அடக்கஸ்தலங்களுக்கு வந்திருப்பவர்கள் தாங்கள் கைகளால் மூன்று பிடி மண்ணை அள்ளிபோடுகிறார்கள் இது சம்பந்தமாக வரும் ஹதீஸ் பலஹீனமாகும்.
அடக்கம் செய்த பின் அடையாளத்துக்காக கல் அல்லது அது போன்றவற்றை அடையாளம் வைத்துக்கொள்ளலாம். உதுமான் இப்னு மஸ்வூது(ரலி) அவர்களை அடக்கிய பின் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததாக அபூதாவூது பைஹகி போன்ற நூல்களில் காணப்படுகிறது.
இது தவிர பச்சைமட்டை, செடிகள், பிரண்டைக்கொடி இதுபோன்றவைகளை நட்டு வைப்பதற்கு ஆதாரம் இல்லை.
இறந்தவர்களுக்கு செய்யும் கடமைகள்:-
தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் மையித்தை அடக்கி முடிந்தபின் கப்ரில் நின்று கொண்டு ‘தல்கீன்’ ஓதப்படுகிறது அல்லது குர்ஆனிலிருந்து சில வசனங்கள் ஓதப்படுகிறது இது பித்அத் ஆகும்.
அவருக்ககாக துஆசெய்வதும் தான தர்மங்கள் செய்வதும் கடமையான நோன்பை அவர் நிறைவேற்றாமல் இறந்துவிட்டால், ஹஜ் நிறைவேற்றாமல் மரணித்த விட்டால் அவர்களது வாரிசுகள் அதை நிறைவேற்றவேண்டும். மற்றவர்கள் மையித்திற்காக துஆ செய்வதே சுன்னத்தாகும். இது தவிர வேறு எந்த சடங்கு சம்பிரதாயங்களும் மார்க்கத்தில் இல்லை.
மூன்றாம் நாள் ஃபாத்திஹா, கத்தம், குர்ஆன்ஓதி ஈஸால்கபூல் செய்தல், வருடநினைவுநாள், ஆண்டு நோர்ச்சை இதுபோன்ற சடங்குகளளை இஸ்லாம் கற்று தரவில்லை. எனவே இதனை நாம் கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
இது போக கப்றுகளில் கட்டிடம் கட்டுவதையும் அதன்மேல் உட்காருவதையும் அங்கு தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.
யூதர்களின் மீதும் கிறிஸ்துவர்களின் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளை வணக்கஸ்தலங்களாக ஆக்கிக் கொண்டனர். அவர்களை நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். (அறிவிப்பாளர் : ஆயிஷா(ரலி) (நூல்கள் : புஹாரி முஸ்லிம்)
அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன் இருந்தவர்கள் தங்களது நபிமார்கள் மற்றும் நல்லவர்களுடைய கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொண்டனர். அறிந்து கொள்ளுங்கள் கப்ருகளை வணங்குமிடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். அப்படி நீங்கள் செய்வதை நான் தடுக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
கப்ருகளில் ஆடு மாடு அறுக்கக் கூடாது:-
கப்ருகளில் ஆடு மாடு கோழி போன்ற பிராணிகளை சிலர் அறுத்து அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பாத்திஹா ஓதுகின்றனர். இது இஸ்லாத்திற்கு முரணானது ஆகும். அறுத்து பலியிடுதல் என்பது அல்லாஹ்வுக்கு மட்டும் செய்யும் வணக்கமாகும். கப்ருகளில் நடக்கும் செயல் இது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாகும்.
கப்ருகளில் விழா:-
எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களது வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீர்கள் என நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அடக்கிய பின் ஜனாஸாவை வெளியே எடுக்கலாமா:-
ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எனது தந்தையுடன் மற்றொரு மனிதரையும் சேர்த்து அடக்கப்பட்டிருந்தது. அவரை கப்ரிலிருந்து வெளியே எடுத்து வேறு இடத்தில் அடக்கும் வரை எனக்கு மன அமைதி ஏற்படவில்லை. (நூல் : புஹாரி
அப்துல்லாஹ் இப்னு உபை என்ற நயவஞ்சகன் இறந்த போது (முஸ்லிமான) அவரது மகன் நபி(ஸல்) அவர்களிடம் வந்து தங்கள் மேனியில் அணிந்திருக்கும் இரண்டு சட்டைகளில் ஒன்றை எனது தந்தைக்கு கபனாக அணிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட போது நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள்.
அதற்குள் அப்துல்லாஹ் இப்னு உபை கப்ரில் வைக்கப்பட்டிருந்தார். அவரை கப்ரை விட்டும் வெளியே கொண்டு வரச் செய்து தனது எச்சில் மூலம் அவர் மேல் ஓதி தமது மேலாடையையும் அணிவித்தார்கள் என ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்கள் : புஹாரி முஸ்லிம்)
இந்த நபிமொழிகளின் அடிப்படையில் அடக்கிய பின் ஜனாஸாவை வெளியே எடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் ஒரு மனிதன் மர்மமான முறையில் மரணமடைந்து அடக்கம் செய்யப்பட்டு குற்றவாளியை கண்டு பிடிக்கும் நோக்கில் அதை வெளியே எடுத்து போஸ்மார்ட்டம் செய்வதில் தவறில்லை. அவனது மரணம் எப்படி நடந்தது என்பதை அறிந்து குற்றவாளியை இனங்கண்டு தண்டிக்க இது உதவும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதால் இவ்வாறு வெளியே எடுக்கும் நிர்பந்தத்தை மார்க்கம் அனுமதிப்பதாக மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக