சனி, ஆகஸ்ட் 29, 2015

பெண் சொத்துரிமை


மகளிர் நாள் ஒவ்வோர் ஆண்டும் (மார்ச் 8 இல்) கொண்டாடப்படுகிறது. உலகில் முதன் முதலில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியது இஸ்லாம். இஸ்லாமிய சொத்துரிமை சட்டங்களைப் பற்றி பல நூல்கள் எழுதலாம். விரிவான விளக்கங்களுக்குச் செல்லாமல் எந்த சூழ்நிலையில் ஆழ அறிவிக்கும் சட்டங்கள் திருக்குர்ஆனில் கூறப்பட்டன என்பதை மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது.
நபிகள் நாயகத்தின் தோழர் அவ்ஸ் பின் தாபித் அன்சாரி இறந்துவிட்டார். அவருக்கு ஒரு மனைவியும் மூன்று மகள்களும் இருந்தனர். இறந்தவரின் சிறிய தந்தையின் இரு மகன்கள் ஸýவைது, அர்பஜா ஆகிய இருவரும் சொத்துக்களை எடுத்துக் கொண்டனர். இறந்த அவ்ஸ் பின் தாபித் அன்சாரியின் மனைவிக்கோ மகளுக்கோ சொத்தில் எள்ளளவும் கொடுக்கவில்லை.
உண்ணும் உணவிற்கே வழியின்றி வாடிய அவ்ஸின் மனைவி அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்பொழுது திருக்குர்ஆனின் 4- 7 ஆவது வசனம் அருளப்பட்டது. ""பெற்றோர்களோ உறவினர்களோ விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பாகமுண்டு. பெண்களுக்கும் பாகமுண்டு. இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட பாகம்''.
இச் சொத்துக்கள் எப்படி பிரிக்கப்பட வேண்டும் என்பதை 4-11, 12 ஆவது வசனங்கள் வரையறுக்கின்றன.
இவ்வரையறைப்படி அவ்ஸின் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெண் குழந்தைகளுக்கும்
நான்கிலொரு பாகம் மனைவிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டதையும் இதுபோலவே உஹது போரில் உயிர்நீத்த ஸஅது பின் ரபீஉ என்பவரின் மனைவிக்கும் இரு மகள்களுக்கும் இறந்தவரின் சொத்திலிருந்து பாகம் பிரித்து கொடுக்கப்பட்டதையும் ஹழ்ரத் ஜாபிர் (ரலி) அறிவிப்பது புகாரி, முஸ்லிம் நூற்களில் காணப்படுகிறது.
முஆது (ரலி) யேமன் நாட்டின் ஆளுநராக இருந்தபொழுது ஒரு மகனையும் ஒரு சகோதரியையும் விட்டு இறந்தவரின் சொத்துக்களை மகளும் சகோதரியும் ஆளுக்குப் பாதி சமமாக எடுத்து கொள்ள தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பவர் அஸ்வது இப்னு யஜீது (ரலி) நூல் - புகாரி, அபூதாவூத்.
இறந்தவரின் தாய் அவருக்கு முன் இறந்திருந்தால் இறந்தவரின் பாட்டிக்கு ஆறில் ஒரு பாகம் என்று நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்ததை நினைவுபடுத்துபவர் புரைதா (ரலி) நூல்- அபூதாவூத்.
ஒருமகள், மகளின் மகளான பெயர்த்தி, ஒரு சகோதரி இறந்தவருக்கு வாரிசாக இருந்தனர். இறந்தவரின் சொத்தை ஆறாக பங்கிட்டு மகளுக்குப் பாதி மூன்று பங்கும் பெயர்த்திக்கு ஆறில் ஒரு பங்கும் மீதமுள்ள ஆறில் இரண்டு பங்கு சகோதரிக்கும் என்று ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததை ஈர்ப்புடன் இயம்புகிறார் இப்னு மஸ்வூத் (ரலி) நூல்- புகாரி, அபூ
தாவூத், திர்மிதீ.
இவ்வாரிசு பெண்களில் மனைவி பெற்ற தாய், தந்தையைப் பெற்ற பாட்டி என்று மேல் நோக்கி செல்லும். சகோதரி, மகள், மகனின் மகள் என்று மற்றொரு தொடர் கீழ்நோக்கி போகும். இப்படி எல்லா பெண்களுக்கும் சொத்துரிமை 1400 ஆண்டுகளுக்கு முன்னே இஸ்லாத்தில் வழங்கப்பட்டது. இந்தியாவில் பெண்களுக்குச் சொத்துரிமை 1969 இல் அமலான இந்து வாரிசுரிமை சட்டத்தில் தான் வழங்கப்பட்டது. அதுவரை இந்தியாவில் இந்து சமய பெண்களுக்குச் சொத்தில் உரிமை இல்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிப்பதற்கு முன் அரபியரில் ரபிஆ, முலர் முதலிய கோத்திரத்தினர் பெண் குழந்தைகளைக் கொன்றதைக் கண்டித்து விண்டுரைக்கும் குர்ஆனின் 6- 140 ஆவது வசனம், ""தங்களின் குழந்தைகளை அறிவின்றி கொலை செய்து விட்டவர்கள் திட்டமாக நட்ட
மடைந்தவர்கள்''
"உங்களுக்கு மரணம் சமீபித்து பொருளை விட்டு இறப்பவராயின் அவரின் தாய், தந்தைக்கும் பந்துக்களுக்கும் நியாயமான முறையில் பொருள் சேர மரண சாசனம் கூறுவது விதியாக்கப்பட்டுள்ளது. இது இறையச்சமுடையோரின் கடமையாகும்'' என்றுரைக்கும் குர்ஆனின் 2-180 ஆவது வசனத்தில் சொத்து பிரிவினையில் தாய்க்கே முதலிடம் தரப்படுகிறது''
மனைவிகளை விட்டு இறப்பவர் அம்மனைவிகளுக்கு ஓராண்டு வரையிலும் உணவு, உடை முதலிய செலவுகளை வழங்குமாறு வாரிசுகளுக்கு மரண சாசனம் கூற கூறும் குர்ஆனின் 2-240 ஆவது வசனத்தில் அம்மனைவியர் விரும்பினால் ஓராண்டிற்குள் முறைப்படி மறுமணம் செய்து வாழும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
"விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணுக்கும் இத்தா காலம் (100 நாள்கள்) முடியும்வரை முறைப்படி கணவனின் சொத்திலிருந்து பாரமரிப்பு செலவினைப் பெற தகுதியுண்டு. அவ்வாறு அப்பெண்களைப் பராமரிப்பது இறையச்சமுடையோரின் கடமையாகும்'' என்று கட்டளை இடுகிறது கவின்மிகு குர்ஆனின் 2-241 ஆவது வசனம்.
"அனாதை பெண்களாயினும் மஹர் (மணகொடை) கொடுக்காமல் திருமணம் செய்வது கூடாது'' என்று கூறுகிறது குர்ஆனின் 4-127 ஆவது வசனம்.
ஒருவர் மனைவிக்கு உரிய மஹரைக் கொடுக்காமல் இறந்தால் அந்த மஹரை இறந்தவரின் சொத்திலிருந்து கொடுத்த பிறகே வாரிசுதாரர்கள் சொத்தைப் பிரிக்க வேண்டும்.
குர்ஆன் கூறும் முறையில் திரு நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தவாறு சொத்துரிமை முதலிய அனைத்து உரிமைகளையும் உரிய வழியில் வழங்கி பெருமையுடன் பெண்கள் வாழ வழி வகுப்போம். வல்லோன் அல்லாஹ் நல்லருள் புரிவான்

இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் பாரபட்சமான நிலை உள்ளதா?

கேள்வி: ஆணுக்கு ஒரு பாகம் எனில் பெண்ணுக்கு பாதி பாகம்தான் என்ற பாரபட்சமான நிலை இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் உள்ளதே! இது ஏன்?
PDFPrintE-mail
டாக்டர் ஜாகிர் நாயக் பதில்:
அருள்மறை குர்ஆன் – வாரிசுகளுக்கு – முறையாக சொத்துக்களை பிரித்துக் கொடுப்பது பற்றி சரியான விளக்கமளிக்கிறது. சொத்துக்கள் பிரித்துக் கொடுப்பது பற்றி அருள்மறை குர்ஆனின் இரண்டாவது அத்தியாயம் ஸுரத்துல் பகராவின் 180வது வசனத்திலும், அதே அத்தியாயத்தின் 240வது வசனத்திலும், நான்காவது அத்தியாயம் ஸுரத்துன் நிஷாவின் 7முதல் 9வது வசனங்களிலும், அதே அத்தியாயத்தின் 19வது வசனத்திலும், 33வது வசனத்திலும், ஐந்தாவது அத்தியாயம் ஸுரத்துல் மாயிதாவின் 106 முதல் 108வது வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 11 மற்றும் 12 வது வசனமும் 176 வது வசனம் ஆகிய மூன்று வசனங்களும் நெருங்கிய உறவினர்களுக்கிடையே சொத்துக்களை பங்கிடுவது பற்றி மிகத் தெளிவான விளக்கமளிக்கிறது.
‘உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.‘ (அல்குர்ஆன் 4:11)
‘இறந்தவருக்குக் குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்குக் குழந்தை இல்லாதிருந்து, பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம். (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான். (மீதி தந்தைக்குச் சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான், உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்: ஆகையினால் (இந்த பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்: நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.’(அல்குர்ஆன் 4:11)
‘இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதிலிருந்து உங்களுக்குக் கால் பாகம்தான். (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். தவிர, உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின், நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான். தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஒரு ஆணோ, அல்லது ஒரு பெண்ணோ, இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது ஒரு சகோதரியோ இருந்தால், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் அதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். (இதுவும்) அவர்களின் மரண சாஸணத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸணத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது: (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.’. (அல்குர்ஆன் 4:12)
‘(நபியே!) கலாலா (தகப்பன், தாய், பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) கட்டளையிடுகிறான்;: ஒரு மனிதன் இறந்து விட்டால், அவனுக்கு மக்கள் இல்லாமலிருந்து ஒரு சகோதரி மட்டும் இருந்தால், அவளுக்கு அவன் விட்டுச் சென்றதிலிருந்து சரி பாதி பங்கு உண்டு. யாரும் இல்லாதிருந்தால், (அவளுடைய சகோதரனாகிய) அவன், அவள் சொத்து முழுமைக்கும் வாரிசு ஆவான். இரு சகோதரிகள் இருந்தால், அவன் விட்டுச் சென்ற சொத்தில் மூன்றில் இரண்டு பாகத்தை அடைவார்கள். அவளுக்கு உடன் பிறந்தவர்கள் ஆண்களும், பெண்களுமாக இருந்தால், இரண்டு பெண்களுக்குரிய பாகம் ஓர் ஆணுக்கு உண்டு. நீ;ங்கள் வழி தவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.‘ (அல்குர்ஆன் 4:176).
சில சந்தர்ப்பங்களில் மாத்திரம் பெண் வாரிசுகளுக்கு, ஆண் வாரிசுகள் பெறும் பங்கைவிட பாதி பாகம் அவர்களின் (பெண்வாரிசுகளின்) பங்காக கிடைக்கிறது. இறந்து போனவர் – தனக்கு வாரிசுகள் எதுவுமின்றி – தனது மனைவியின் முந்தைய கணவருக்குப் பிறந்த இரண்டு வாரிசுகள் – (அதாவது ஒரு மகனும் – மகளும்) இருந்தால் -அந்த மகனுக்கும், மகளுக்கும் – இறந்து போனவர் விட்டுச் சென்ற சொத்தில் ஆறில் ஒரு பாகமே – அவர்களது பங்காக கிடைக்கும். மேற்படி நபருக்கு வாரிசுகள் இருந்தால் – இறந்து போனவரின் சொத்தில் ஆறில் ஒரு பாகம் அவரது பெற்றோருக்கும் – கிடைக்கும்.
சில சமயங்களில் பெண் வாரிசுகள், ஆண் வாரிசுகளைவிட இரண்டு மடங்கு சொத்துக்களை தங்களது பங்காக பெறுவதும் உண்டு. இறந்து போனவர் ஒரு திருமணமாகிய பெண்ணாக இருந்து – அவருக்கு குழந்தைகளோ அல்லது சகோதர – சகோதரிகளோ இல்லாத பட்சத்தில் – அவரது கணவருக்கும் – இறந்து போன பெண்ணுடைய பெற்றோருக்கும் கிடைக்கும் பங்கு என்னவெனில் – கணவருக்கு பாதி பங்கும், இறந்து போன பெண்ணுடைய – தாயாருக்கு (உயிரோடு இருக்கும் பட்சத்தில்) மூன்றில் ஒரு பங்கும் – தந்தைக்கு ஆறில் ஒரு பங்கும் கிடைக்கும். இது போன்ற வேளையில் பெண்ணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு – ஆணுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கைவிட இரு மடங்கு அதிகமாகும்.
ஆயினும் பெண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கை விட – ஆண்களுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு அதிகம் என்பது உண்மை. கீழ்க்காணும் உதாரணங்களை அதற்கு எடுத்துக் காட்டாக கொள்ளலாம்:
1. மகளுக்கு கிடைக்கும் சொத்தின் பங்கு – மகனுக்கு கிடைக்கும் சொத்தை விட பாதி பாகம்.
2. இறந்து போனவருக்கு குழந்தைகள் இல்லை என்னும் பட்சத்தில் – இறந்த போனவரின் தாயாருக்கு எட்டில் ஒரு பகுதியும் – இறந்து போனவரின் தந்தையாருக்கு நான்கில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.
3. இறந்து போனவருக்கு குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் – இறந்த போனவரின் தாயாருக்கு நான்கில் ஒரு பகுதியும் – இறந்து போனவரின் தந்தையாருக்கு இரண்டில் ஒரு பகுதியும் சொத்தில் பங்காக கிடைக்கும்.
4. இறந்து போனவருக்கு முன் வாரிசு அல்லது பின் வாரிசு இல்லாத பட்சத்தில் – அவரது சகோதரருக்கு கிடைக்கும் பங்கைவிட பாதி பாகமே அவரது சகோதரிக்கு கிடைக்கும்.
இஸ்லாத்தில் பெண்கள் மீது பொருளாதாரச் சுமையோ அல்லது குடும்பத்தைக் கவனிக்கும் பொருப்போ சுமத்தப்படவில்லை. ஒரு பெண் திருமணம் முடிக்கப்படும் வரை அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது தந்தை அல்லது அவளது சகோதரனின் கடைமயாகும். அவளது திருமணத்திற்குப் பிறகு, அவளது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு அவளது கணவன் அல்லது அவளது மகனின் கடைமையாகும். இஸ்லாத்தில் குடும்பத்தின் பொருளதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் பொறுப்பு ஆண்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. மேற்படி குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டே இஸ்லாமிய ஆண்களுக்கு, பெண்களைவிட சொத்தில் அதிக பங்கு அளிக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு இரண்டு மக்களை உடைய ஒரு மனிதர் (ஒரு ஆண், ஒரு பெண்) இறந்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இறந்து போன மனிதருக்கு ரூபாய் 150,000 மதிப்புள்ள சொத்துக்கள் இருந்தால் – இறந்து போனவருடைய மகனுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், இறந்து போனவருடைய மகளுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள சொத்துக்களும் அவர்களது பங்காக கிடைக்கும். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக கிடைக்கப்பெற்ற மகனுக்கு குடும்பத்தில் உள்ள எல்லா செலவினங்களின் மீதும் பொறுப்பு உண்டு. அவருக்குக் கிடைக்கப்பெற்ற ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் முழுவதையுமோ அல்லது அந்து சொத்துக்களில் பெரும் பங்கையோ (ரூபாய் என்பது ஆயிரம் மதிப்பள்ள சொத்துக்களை) – அவர் குடும்பத்திற்காக செலவு செய்துவிட்டு – எஞ்சியுள்ள இருபதினாயிரம் மதிப்புள்ள சொத்துக்களை மாத்திரம் அவர் தனது பங்காக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்ற மகள் – அதிலிருந்து ஒரு பைசா கூட எவருக்கும் செலவு செய்யாது (ஏனெனில் இஸ்லாம் பெண்கள் மீது குடும்பத்தின் எந்த பொருளாதார சுமையையும் சுமத்தாத காரணத்தால்) முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்க முடியும்.
இஸ்லாமிய சொத்துரிமையால் பயன் பெறுவது யார் என்று இப்போது சொல்லுங்கள். ஒரு லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்று, அதில் என்பதாயிரம் ரூபாயைச் செலவு செய்து விட்டு மீதி இருபதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தன்னகத்தே கொண்டிருக்கும் – ஒரு இஸ்லாமிய ஆண்வாரிசா? அல்லது ஐம்பதினாயிரம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பங்காக பெற்றுக் கொண்டு, அதிலிருந்து ஒரு பைசா கூட செலவு செய்யாது முழு மதிப்புள்ள சொத்தையும் தன்னகத்தே கொண்டிருக்கும் இஸ்லாமிய பெண்வாரிசா?

இறந்தவர் விட்டுச் சென்ற பொருள் அனைத்திலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பங்குண்டு


PDFPrintE-mail
"பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்." (அல் குர்ஆன் 4 : 7)
மேற்குறிப்பிட்ட வசனம் இறங்கக் காரணம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழும் காலத்திலேயே ஹளரத் அவ்ஸ் இப்னு ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறந்து விட்டார்கள். இரண்டு மகள்கள், ஒரு பருவமடையாத மகன், மனைவி.
இறந்த செய்தி கேட்டு அவரின் அண்ணன் மகன்கள் இரண்டு பேர் வந்து, விட்டுச்சென்ற அனைத்தையும் எடுத்துச் சென்றனர். காரணம், பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது (அறிவீனர்களின் காலத்தில்). பையன் இன்னும் பருவமடையவில்லை. எனவே அவனுக்கும் சொத்து கிடையாது என்றனர்.
உடனே இறந்த ஸஹாபியின் மனைவி சொன்னார்கள்: ‘சொத்துக்களை எடுத்துக் கொண்டது போல் என் இரு மகள்களையும் நிகாஹ் செய்து கொண்டால் நான் அந்த கவலையின்றி இருப்பேனே!’ என்றார்கள்.
அதுவும் முடியாது என்ற அவர்கள் சொன்னபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி மறையிட்டார்கள்
அவர்கள் அநீதம் செய்யப்பட்ட நிலையை எண்ணி தீர்வை எதிர்பார்த்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்கும் பொழுது மேற்குறிப்பிடப்பட்ட இறைவசனம் இறங்கியது.
இறந்தவர் விட்டுச் சென்ற பொருள், கொஞ்சமோ கூடுதலோ அனைத்திலும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பங்குண்டு.
பங்கு விகிதத்தில் வித்தியாசம் இருப்பினும் அவசியம் பெண்ணுக்கும், பருவமடையாத ஆணுக்கும் கூட நிச்சயம் பங்குண்டு என்பதை இந்த வசனம் வலியுறுத்துகிறது.
இறந்தவர் உடுத்தியிருக்கம் உடை, அணிகலன்கள் இதுவும் பொதுச் சொத்தில் சேர்க்கப்பட்டு முறைப்படி பங்க வைக்கப்பட் வேண்டம். தர்மம் செய்துவிடக்; கூடாது. அதுபோன்றே அலுமினிய, பித்தளை, தட்டு முட்டு சாமான்கள் கூட பங்க வைக்கப்பட வேண்டும். பங்கை பெற்றுக் கொண்ட பங்பதாரிகள் தன் விருப்பப்படி தர்மம் செய்யலாம்.
சில இடங்களில் இறந்தவரை குளிப்பாட்ட புதிய வாளி, துடைக்க புதிய துண்டு போன்றவை வாங்கப்பட்டு பின்பு அதை உடைத்து விடுகிறார்கள். துணியை தூர எறிகிறார்கள். இதுவும் கூடாது.
எவரும் தான் உயிருடன் இருக்கும்போதே தன் சொத்துக்கள் அனைத்தையுமோ அல்லது அதில் பாதியையோ தர்மம் செய்வதை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்துள்ளார்கள். மூன்றில் ஒரு பாகம் தர்மம் செய்யலாம். இரண்டு பகுதி குடும்பத்தார்களுக்காக வைக்க வேண்டும் என்றார்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
இறந்தவரின் சொத்தில் பங்குபெறும் எவருக்கும் - தனிப்பட்ட முறையில் இறந்தவர் ஏ
Nதுனும் ஒரு சொத்தை எழுதி விட்டுச் சென்றாலோ, சொல்லி விட்டுச் சென்றாலோ அது செல்லாது. வல்ல ரஹ்மான் அவரவர்களுக்குரிய பாகங்களை ஒழுங்காக ஒப்படைக்கும் பேற்றினை தந்தருள்புரிவானாக! ஆமீன்.

சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?


சொத்துப் பங்கீடு பற்றி பலரும் இஸ்லாத்தின்மீது விமர்சனங்களை வைக்கின்றார்கள். எனவே இது பற்றிய விபரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த அன்றைய சமூக சூழலில் ஆண்கள் சகல விதங்களிலும் பெண்களை அடக்கியாண்டு உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். "பலமுள்ளவன் தான் சரியானவன்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகப்பனோ சகோதரனோ விட்டுச் செல்லும் சொத்துக்களில் பெண்களுக்குரிய பங்கினை வழங்காது பலாத்காரமாகச் சூறையாடிக் கொண்டுமிருந்தார்கள்.
தந்தையைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்துவிட்டு கண்ணீரோடு வாழும் விதவைப் பெண்களுக்கும் அச்சொத்திலிருந்து எதுவும் கிடைக்க மாட்டாது. இவர்கள் அடுத்தவர்களிடத்தில் கையேந்தி மற்றவர்களின் தயவில் வாழக்கூடிய பரிதாபகரமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் இக்கொடுமைக்கு ஆரம்ப கட்டத் தீர்வாக அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்.
"உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாராயின் அவர் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் நல்ல முறையில் (மரண சாசனம்) வஸீய்யத் செய்வது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. பயபக்தியாளர்களுக்கு இது கடமையாகும்.
எவர் அ(ம்மரணசாசனத்)தை செவியேற்ற பின்பும் அதை மாற்றி விடுகின்றாரோ அதன் குற்றம் அதை மாற்றியவர்களையே சாறும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன் நன்கறிந்தவன்.
ஆனால் வஸீய்யத் செயபவரிடம் அநீதத்தையோ பாவத்தையோ எவரேனும் அஞ்சி (சம்பந்தப்பட்ட) அவர்களுக்கிடையே (வஸீய்யத்தை சீர்செய்து) சமாதானம் செய்தால் அவர் மீது குற்றமில்லை. நிச்சமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் 2:180-182)
இதனடிப்படையில் சொத்துக்களை விட்டுச் செல்பவர் தன்னுடைய பெற்றோர் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு அச்சொத்திலிருந்து பங்குகிடைக்கக்கூடியதாக மரண சாசனம் செய்யவேண்டும். அதன் பத்திரமும் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. மரண சாசனத் தில் அநீதி காணப்படுமானால் அதனை சீர்படுத்துவதற்கும் உரிமை வழங்கப்பட்டது.
மரணசாசனம் தெரிவிக்க ஏதேனும் பொருளைப் பெற்றுள்ள எந்த முஸ்லிமுக்கும் அவர் தமது மரண சாசனத்தை எழுதி வைக்காமல் இரண்டு இரவுகளைக் கழிப்பதற்குக் கூட அனுமதியில்லை என நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
இதன் மூலம் பெண்களுக்கும் நியாயமாக பங்கீடு கிடைக்க வழி காட்டப்பட்டது.
இச்சட்டம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஸஅத் இப்னு ரபீஃஆ ரளியல்லாஹு அன்ஹு என்பவரின் மனைவி தனது இரு பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! இதோ இவ்விருவரும் ஸஃத் இப்னு ரபீஆவின் புதல்வியர்கள். இவர்களுடைய தந்தை உங்களுடன் உஹது யுத்தத்திலே பங்குகொண்டு கொல்லப்பட்டு விட்டார்.
இவர்களுடைய தந்தையின் சகோதரர் இவர்களுடைய முழுச் சொத்தையும் எடுத்துக் கொண்டார். இவர்களுக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை. இவர்களுக்கென சொத்து எதுவும் இல்லையென்றால் அவர்களைத் மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாது என்று முறையிட்டார்.
இந்த முறைப்பாட்டை செவியேற்ற நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் இதற்கோர் தீர்வை வழங்குவான் எனக் கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் இப்பெண்மணியின் முறையீட்டிற்குப் பதில் கூறுமுகமாக பின்வரும் சட்டம் அருளப்பட்டது.
1) இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்குண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்கு (சொத்துப் பங்கிடும் முறைப்பற்றி) கட்டளையிடுகின்றான்.
- (இறந்தவர் விட்டுச்செல்லும் சொத்துக்கு ஆண்பிள்ளை இல்லாமல்) இரண்டு பெண்கள் அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர் விட்டுச்சென்றதில் மூன்றில் இருபங்கு (2/3) அப் பெண்களுக்குண்டு.
- ஒரே ஒருபெண் மட்டும் இருந்தால் அவளுக்கு அதில் அரைவாசிப் (பங்கு) உரியது.
2) இறந்தவருக்குப் பிள்ளை இருப்பின் அவர் விட்டுச் சென்றதில் (அவருடைய) தாய், தந்தைக்கு ஆறில் ஒரு (1/6) பங்குண்டு.
- அவருக்கு பிள்ளை இல்லாமல் அவரது பெற்றோரே அவருக்கு வாரிசாக இருப்பின் அவரது தாய்க்கு மூன்றில் ஒரு (1/3)பங்குண்டு. (மீதி தந்தைக்குரியது)
- இறந்தவருக்கு (பிள்ளைகள் இல்லாமல்) சகோதரர்கள் இருப்பின் அவரது தாய்க்கு ஆறில் ஒரு (1/6) பங்குண்டு.
- (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரணசாசனம் அல்லது அவரது கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.
- (சொத்துப் பங்கீடு பெறுவதில்) உங்கள் பெற்றோர், மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாக பயனளிப்பதில் மிக நெருக்கமானவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
"இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டவையாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:11)
3). (இறந்துபோன) உங்கள் மனைவியருக்கு பிள்ளை இல்லையெனில் அம்மனைவியர் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு அரைவாசி (1/2) உண்டு.
- அவர்களுக்கு பிள்ளை இருப்பின் அவர்கள் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு நாலில் ஒரு (1/4) பங்குண்டு. (இது) அவர்கள் செய்த மரணசாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும.
- உங்களுக்கு (கணவனாகிய நீங்கள் இறந்த பின்) பிள்ளை இல்லையெனில் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு நாலில் ஒரு (1/4)பங்குண்டு.
- உங்களுக்கு பிள்ளை இருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு எட்டில் ஒரு (1/8) பங்குண்டு. (இது) நீங்கள் செய்த மரண சாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.
4. (பெற்றோர் பிள்ளைகள் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ மரணித்து அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு (1/6) பங்குண்டு. அவர்கள் இதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு (1/3) பங்கில் அவர்கள் பங்குதாரர்களாவார்கள். (இது) பாதிப்பு அற்றவிதத்தில் செய்யப்பட்ட மரணசாசனத்தையும் அல்லது கடனையும் நிறை வேற்றிய பின்னரேயாகும். இது அல்லாஹ்விடமிருந்துள்ள கட்டளையாகும். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனும் சகிப்புத்தன்மையுடையவனு மாவான். (அல்குர்ஆன் 4:12)
இவ்வசனம் அருளப்பட்டதும் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃத் இப்னு ரபீஃஆவின் சகோதரரை வரவழைத்து அவர் எடுத்துச் சென்ற சொத்தை பின்வருமாறு பங்கீடு செய்தார்கள்.
இரு பெண் பிள்ளைகளுக்கும் (தலா ஒருவருக்கு 1/3 என்ற பங்கு வீதத்தில்) 2/3 பங்குகளும், இவர்களின் தாய்க்கு எட்டில் ஒருபங்கும் (1/8) பங்கும் மீதியை ஸஃத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரர்களுக்கும் கொடுத்தார்கள். (நூல்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
தனக்கும் தனது பெண் பிள்ளைகளுக்கும் சொத்துரிமை விவகாரத்தில் உரியபங்கு கிடைக்கவில்லையென்று ஒரு பெண் மணி நீதி கேட்டு வந்தபோது அப்பெண் மணிக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவே வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டது.
மகன், மகள், சகோதர சகோதரி, மனைவி, தாய் தந்தை ஆகியோருக்கு இச்சட்டத்தின் மூலம் சொத்துக்களில் பங்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதைவிட பெண்ணுக்குரிய அந்தஸ்த்தும் உரிமையும் வேறு எங்கும் எந்த மதத்திலும் கோட்பாட்டிலும் காண முடியாது.
இவ்வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டபின் மரண சாசனத்தின் மூலம் சொத்துக்கள் பங்கீடு செய்யும் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதோடு வாரிசுகளுக்கு சொத்துக்கள் சம்பந்தமாக மரணசாசனம் செய்யவோ எழுதவோ அல்லது சிபாரிசு செய்யவோ தடுக்கப்பட்டது. வாரிசுகளுக்கு எத்தனை வீதம்பங்கு கொடுக்க வேண்டும்; என்று அல்லாஹ் விபரித்துக் கூறியுள்ளானோ அதே அடிப்படையிலும் இத்திருமறைக் குர்ஆனுக்கு விளக்கவுரையாக நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிச் செயல்படுத்தி பங்குவைத்துக் காட்டினார்களோ அதே அடிப்படையிலும் தான் உலகம் அழியும் வரை பங்கீடு செய்யப்பட வேண்டும். இதில் எவரும் மாற்றம் செய்ய முடியாது.
வாரிசுகள் அல்லாத வேறு எவருக்கேனும் அல்லது நற்பணிகளுக்கேதும் சொத்தில் குறிப்பிட்ட ஓர்அளவு கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அதுசம்பந்தமாக வஸீய்யத் செய்வது தடுக்கப்படவில்லை.
உதாரணமாக, சமுதாயத்தின் கல்வி அறிவு வளர்ச்சிக் காக மறுமலர்ச்சித் திட்டங்களுக்காக அல்லது ஏழை எளியவர்கள் அநாதைகள் விதவைகள் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரின் நலன்களைக் கவனத்திற் கொண்டு அவர்களது மேம்பாட்டிற்காக ஒருவர் தனது சொத்தில் குறிப்பிட்ட ஒருபங்கை மரணசாசனம் செய்ய விரும்பினால் அவர் தாராளமாக செய்யலாம். ஆனால் மொத்த சொத்தையும் தர்மஸ்தாபனங்களுக்கோ பொது நிருவனங்களுக்கோ எழுதிவைத்து விட முடியாது. அவரது மரணசாசனம் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் (1/3) அதிகமில்லாமல் இருப்பதையே இஸ்லாம் விரும்புகின்றது.
ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நான் (நபியவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது மக்காவில்) நோயுற்று விட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் அனைத்தையும் மரணசாசனம் செய்ய விரும்புகின்றேன். எனக்கு இருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (எனவே என்சொத்தில்) பாதிப் பாகத்தை மரணசாசனம் செய்யட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பாதி அதிகம்தான் என்றார்கள். அப்படி என்றால் மூன்றில் ஒரு பங்கு (1/3) என்று கேட்டேன். மூன்றில் ஒரு பங்கா? அதுவும் அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதை விட நல்லதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: புகாரி)
பெண் பிள்ளைகளுக்குரிய சொத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் தன்னிறைவுள்ளவர்களாக அவர்களை ஆக்குவதற்கும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரிய கவனம் செலுத்தினார்கள்.
வாரிசுகளை நிர்ணயிப்பதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறான அளவுகோல்கள் இருப்பதைப் பார்க்கின்றோம். வாரிசுகள் என்போர் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் வாரிசுகளாகிறார்கள்? அவர்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் யார்? அவர்களில் யாருக்கு எந்தளவு பங்கு கொடுக்கப் படவேண்டும் என்ற விபரங்களெல்லாம் இஸ்லாம் தெளிவுப் படுத்துகிறது.
சொத்துக்களுக்கு மனிதன் சொந்தக்காரனாக இருந்தாலும் அவனாக முடிவுசெய்து விரும்பிய விதத்தில் வாரிசுக்ளுக் கிடையில் பங்கிட முடியாது. இஸ்லாம் தயாரித்துத் தந்திருக்கின்ற பட்டியல் முறையில் தான் பங்கீடு செய்யவேண்டும். சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக குடும்பத்திற்குள் மாறிவருவதல்ல முக்கியம். அச்சொத்துக்களால் பலபேருடைய வாழ்வும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே முக்கியம்.
எனவே, ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் மொத்த சொத்து களையும் வழங்கிடாமல் பெண்களுக்கும், பெற்றோருக்கும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்து பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலமே குடும்பம் சீர்குலையாமல் சீரழிவுக்குள்ளாகாமல் பாதுகாக்க முடியும். ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கக்கூடிய வகையில் சொத்தைப் பங்கிடுவதன் மூலமே பொருளாதார சுபீட்சத்தினையும் சந்தோசமான கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வையும் உருவாக்கிட முடியும். அதன் காரணமாகவே வாரிசுகள் என்போர் யார்? என்ற பட்டியலை இஸ்லாம் தயாரித்துத் தந்துள்ளது.
தந்தை மரணித்துவிட்டால் அக்குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு ஆண் பிள்ளையைச்சாரும். ஆண்பிள்ளை இல்லையென்றால் தந்தையின் சகோதரனைச் சாரும். அவர் அக்குடும்பத்திற்கு- பராமரிப்பாளராக- வாரிசுதாரராக ஆக்கப்படுகின்றார். அதனால் தான் தந்தை விட்டுச் செல்லும் சொத்துக்களை பங்கு வைக்கும் போது அச்சொத்தின் மீதிப் பங்கிற்கு இவர் பங்காளியாக ஆக்கப்படுகின்றார். இதன் மூலம் ஆண் துணையில்லாத குடும்பத்திற்கு இவர் மூலம் பாதுகாப்பு அரண் போடப்படுகின்றது.
இச்சிறப்பான சட்டத்தின் வாயிலாகவே பெண் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. தங்களுடைய ஜீவனோபாயத்தை தாங்களே தேடிக்கொள்வதற்காக தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்காக தொழில் தேடிச்செல்லும் முஸ்லிம் அல்லாத பெண்களுக்குள்ள நிலை இஸ்லாமியப் பெண்ணுக்குவராது. வாரிசுரிமைச் சட்டத்தின் மூலம் அவள் பாதுகாக்கப்படுகின்றாள்.
முஸ்லிமான ஒருபெண்ணும் முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணும் தொழிலுக்குச் செல்வதில் அடிப்படையில் வேற்றுமை உண்டு. முஸ்லிமல்லாத பெண்ணைப் பொறுத்தவரை அவள் அவளது வாழ்வை அமைத்துக் கொள்ள சம்பாதித்தேயாக வேண்டும். அவளைப் பொறுப்பேற்று வளர்ப்பதற்கு வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கு எவரும் இல்லை. சொத்தில் ஒரு பங்குமில்லை. ஆகவே அவள் சார்ந்திருக்கும் மதவாதச் சிந்தனையும் சமூகக்கோட்பாடும் அவளுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளதால் அவள் பருவ வயதை அடைந்த பின் வீட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். இஸ்லாமிய பெண்ணுடைய நிலை இதை விட முற்றிலும் மாறுபட்டுள்ளது.
அவளை பொறுத்தவரை அவள் வீட்டிலிருந்து கொண்டே சகல உரிமைகளையும் அனுபவிப்பதற்கு வழிகாட்டப்பட்டிருக்கிறாள். வறுமை மற்றும் தேவை அல்லது மேலதிக வருமானம் கருதி அவள் தொழிலைத் தேடிக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையேதும் இல்லை. தங்களது மார்க்க கொள்கை ஒழுக்கவியல் மற்றும் கற்பையும் பேணிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள முடியுமான சூழல் இருக்குமானால் தொழிலுக்குச் செல்லலாம் என்ற அனுமதி அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வாரிசுரிமைச் சட்டத்தின் இறுதிவசனத்தில் அல்லாஹ் கூறும் போது "உங்கள் சொத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பயன் தரக்கூடியவர்கள் யார்? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறுவதன் விளக்கம் எவ்வளவு அற்புதமானது என்பதனை இங்கே சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் மேலே இலக்கமிட்டு வரிசைப்படுத்திக் காட்டிய வாரிசுரிமைச் சட்டத்தின் நான்காவது சட்டத்தினை மேலும் தெளிவுபடுத்தி இன்னுமொரு வசனமும் அருளப்பட்டது. இச் சட்டத்தில் ஒருவர் விட்டுச் செல்லும் சொத்துக்கு அதற்கு வாரிசுகளான தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் ஆகியோர் இல்லாமல் சகோதர சகோதரிகள் மட்டும் இருந்தால் அவர்களிடையே எப்படி பங்கீடு செய்வது என்று பின்வருமாறு விளக்கப் பட்டது. (இச்சட்டத்திற்கு கலாலா எனப்படும்).
"நபியே! உம்மிடம் அவர்கள் "கலாலா" பற்றி மார்க்கத் தீர்ப்புக்கோருகின்றனர். ''கலாலா'' குறித்து அல்லாஹ் உங்க ளுக்குத் தீர்ப்பளிப்பான் எனக் கூறுவீராக.
பிள்ளை இல்லாத ஒருவன் தனக்கு ஒரு சகோதரி இருக்கும் நிலையில் மரணித்தால் அவன் விட்டுச் சென்றவற்றில் அரைவாசி அவளுக்குண்டு. (ஒரு பெண் மரணித்து) அவளுக்குப் பிள்ளை இல்லாமல் இருந்தால் (சகோதரனான) அவன் அவளுக்கு வாரிசாவான்.
அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இருபங்கு (2/3) அவ்விருவருக்குமுண்டு. அவர்கள் ஆண்கள் பெண்கள் என் சகோதரர்களாக இருப்பின் அவர்களில் இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக் குண்டு;. நீங்கள் வழிதவறாது இருப்பதற்காக அல்லாஹ் இவ்வாறுஉங்களுக்குத் தெளிவுப்படுத்துகின்றான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாவான். (அல்குர்ஆன் 4:176)
வாரிசுரிமை தொடர்பாக இறுதியாக இறங்கிய வசனம் இது என பராஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: புகாரி 4605)
வாரிசுரிமைச் சட்டத்தின் அனைத்து விளக்கங்களையும் அல்லாஹ் விளக்கிக் கூறி விட்டு இச் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். நிரந்தரமான நரகில் இருப்பார்கள் என எச்சரிக்கின்றான்.
"இவை அல்லாஹ் விதித்த வரம்புகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் வழிப்பட்டு நடக்கிறாரோ அவரை சுவர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுகின்றானோ அவனை நரகத்தில் அவன் நுழைவிப்பான். அவன் அதில் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனையுண்டு (அல்குர்ஆன் 4:13-14)
சொத்துக்களை ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்கமுடியாது. சகல பிள்ளைகளுக்கும் வாரிசுதாரர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்தாக வேண்டும். மாறு செய்பவர்கள் குற்றத்திற்குரியவர்களாகிவிடுவர்.
இறந்தவர் விட்டுச் செல்லும் சொத்தை பங்கு வைக்கமுன் அவருடைய கடனையும் மரணசாசனத்தையும் முதலில் நிறை வேற்றவேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாகும். பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அன்புகாட்டுவதை விட அல்லாஹ் தன்படைப்புக்கள் மீது அதிக அன்புள்ளவனாக உள்ளான் என்ப தை இச்சட்டங்கள் காட்டவில்லையா?
பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்த இஸ்லாம் ஆண்களை விடக் குறைவாக கொடுத்தது ஏன்? என்ற சந்தேகம் எழுவது இயற்கையே அதனை நிவர்த்தி செய்வது நல்லது என நிகைக்கிறேன்.
ஆண் சம்பாதித்து தன்னுடைய தாய் தந்தை சகோதர சகோதரிகள் மற்றும் மனைவி என்ற வட்டத்திற்குள் உள்ள அக்குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ளவனாக இருக்கிறான். அவனுடைய உழைப்பின் கீழேயே பெண் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறாள். அப்பெண்ணை மணம்முடித்து வைக்க வேண்டிய பொறுப்பும் செலவினங்களும் அவனையே சாரும். கணவனால் தலாக் சொல்லப்பட்டால் மீண்டும் அவளை பராமரிக்கும் பொறுப்பும் மணமுடித்;து வைக்கும் கடமையும் அவனை வந்தடைகிறது.
இவன் ஒரு பெண்ணை மணக்கும் போது அவளுக்குரிய மஹரை கொடுத்து வாழ்வதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து தன்னுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தையும் பராமரிக்கக் கூடியவனாக இருக்கிறான்.மனைவி விவாகரத்தச் செய்யப்பட்டால் அப்போதும் அவளுக்கு ஏதேனும் வசதிகள் அல்லது உதவிகள் செய்திடவேண்டும்.
சொத்துப் பங்கீட்டின் போது தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் போன்றோரிடமிருந்து இவளுக்குரிய பங்குகளை பெற்றுக் கொள்ளும் அதே வேளை மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக இருக்கும் நிலைகளிலும் அவளுக்குரிய பங்குகள் வந்து சேர்கின்றன. சொத்தில் தனக்குரிய பங்குகளை பெறும் அதே வேளை கணவராக வருபவரிடத்திலிருந்தும் மஹராகவும் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளும் உரிமை படைத்தவளாக திகழ்கிறாள்.
வெளிப்படையாக பாரக்கும் போது பெண் குறைவாகவும் ஆண் அதிகமாகவும் பெறுவதாகவே தோன்றும். இஸ்லாம் கூறும் காரணங்களை கவனித்தால் பெண் அனைத்து உரிமைகளையும் அதிகமாக அனுபவிப்பதை காணலாம்.
பொருளீட்டுவதற்கான உரிமை ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டடுள்ளது போல் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவியுடைய சம்பாத்தியத்தை அவளுடைய அனுமதியில்லாமல் கணவன் தொடமுடியாது. அவளாக கணவனுக்குக் கொடுத்தால் அது தர்மம் செய்த நன்மை சாரும் என இஸ்லாம் கூறுகிறது.
பெண்களே! நீங்கள் தர்மம் செய்யுங்கள். உங்களின் நகைகளாக இருப்பினும் சரியே! தர்மம் செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் (என் கணவரான) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் வந்தேன். நீங்கள் வறுமையில் உள்ளீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தர்மம் செய்யும்படி எங்களுக்கு ஏவினார்கள். எனவே, அவர்களிடம் நீங்கள் சென்று (என் தர்மத்தை நீங்கள்) பெறலாமா? எனக் கேட்டு வாருங்கள். அது சரியாக இருந்தால் என்னிடமிருந்து அதைக் கொடுப்பது போதுமாகும். இல்லையெனில் மற்றவருக்கு நான் அதைக் கொடுப்பேன் என்று கூறினேன். அப்போது அவர் நீ போய் கேட்டுவா என்று கூறினார்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டு வாசலில் அன்ஸாரிப் பெண் ஒருவர் நினறு கொண்டிருந்தார். என் தேவையை போலவே அவர் தேவையும் இருந்தது. அப்போது எங்களிடம் பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார்கள். நாங்கள் அவரிடம் நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இரு பெண்கள் வந்து தங்களிடம் உள்ள தர்மப் பொருளை தங்களின் கணவர்களுக்கோ, தங்கள் மடியில் வளரும் அனாதைகளுக்கோ கொடுக்க விரும்புவது கூடுமா? என்று உங்களிடம் கேட்பதற்காக வாசலில் நிற்கின்றோம் என்ற செய்தியை கூறுங்கள். நாங்கள் யார் என்ற விபரத்தை அவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறினோம்.
பிலால் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டார்கள். அப்போது அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவரும் யார்? என்று கேட்டார்கள். "ஒருவர் அன்ஸாரிப் பெண் மற்றவர் ஸைனப் என்று பிலால் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். எந்த ஸைனப் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்க, அப்துல்லாஹ்வின் மனைவி என பிலால் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். அப்போது நபியவர்கள், "உறவினரை ஆதரித்தல்,தர்மம் செய்தல் என இரண்டு வகைக் கூலிகள் அந்த இரண்டு பெண்களுக்கும் உண்டு" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைனப் அத்தகபீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-1466, முஸ்லிம்-1000)
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கி வளர்த்து விட்ட பெண் சமூகத்தின் சுதந்திரத்தை பாருங்கள். சட்டரீயாக சொத்துப் பங்கீட்டின் ஒழுங்குகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட பிறகும் அவள் சம்பாதிக்கும் உழைப்பில் இருந்து கணவனுக்கு கொடுக்க வேணடிய கட்டாயம் இல்லை. அவளாக விரும்பி கொடுத்தால் தர்மத்துடைய நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
பெண்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை வாழ வைத்த மார்க்கம் எது என்பதை இப்போதாவது உங்கள் மனசாட்சி பிரகாரம் கூறுங்கள்.

இஸ்லாமின் பார்வையில் சொத்து பங்கீட்டின் அவசியம்


ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தொழுகைய நிறைவேற்றாமல் இருப்பது எப்படிக் குற்றமோ,ஸகாத் கொடுக்காமல் இருப்பது எப்படிக் குற்றமோ அதேபோன்றுதான் வாரிசுரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் இருப்பது மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றமாகும்.]
இஸ்லாமிய ஷரிஅத் என்பது பல வனக்க வழிபாடுகளை தன்னகத்தே கொண்ட மார்க்கமாகும். அந்த வணக்கங்களை வித்தியாசம் இன்றி ஒவ்வொரு முஸ்லிமும் நிறைவேற்றுவது இன்றியமையாத கடமையாகும்.
இவ்வாறான வணக்கவழிபாடுகளில் சிலதை ஏற்று சிலதை நிராகரிக்கும் மனப்பான்மை ஒரு முஸ்லிமிடத்தில் இருக்க முடியாது. அல்லாஹ்வின் அனைத்து சட்டங்களையும் தன்னுடைய வாழ்வில் செயற்படுத்துவது ஒரு முஸ்லிமின் இன்றியமையாத கடமையாகும்,
நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது.
மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள். இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (அல்குர்ஆன் 2:85)
ஆனால் இன்று எம்சமுகத்தில் என்ன நடக்கிறது என்றால் தனக்கு சாதகமான, இழப்புகள் இல்லாத, பிரச்சினைவராத சட்டங்களை மாத்திரம் பலர் ஏற்று செயல்படுகின்றனர். அல்லாஹ்வால் அழுத்தமாக முக்கியத்துவம் கொடுத்துச் சொல்லப்படுகின்ற பல சட்டங்களை நிராகரிக்கின்றனர்.
அப்படி நிராகரிக்கப் படும் சட்டங்களில் ஒன்றுதான் வராதத் எனும் சொத்துப்பங்கீட்டு சட்டமாகும்.
தொழுகை, நோன்பு, ஸகாத் எப்படி வணக்கமாக இருக்கிறதோ அதே போன்றுதான் வராதத் எனும் சொத்துப்பங்கீடும் ஒரு வணக்கமாகும்.
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தொழுகைய நிறைவேற்றாமல் இருப்பது எப்படிக் குற்றமோ, ஸகாத் கொடுக்காமல் இருப்பது எப்படிக் குற்றமோ அதேபோன்றுதான் வாரிசுரிமைச் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் இருப்பது மிகப் பெரிய தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பல முஸ்லிம்கள் உணரத் தவறிவிட்டனர்.
இதனால்தான் இன்று சொத்துப்பங்கீடென்பது சமூகத்தில் அந்நியமான நடைமுறைப் படுத்தப் படாத புதிய சட்டமாக மாறிவிட்டது.
இன்று சமுகத்தில் உள்ள அதிகமானவர்கள் தவறான சொத்துப் பங்கீட்டின் அடிப்படையிலேயே தங்களது பொருளாதாரத்தை அமைத்துக் கொள்கின்றனர். மார்கத்தில் உள்ள சுன்னத்தான காரியங்களுக்காக போர்கொடி தூக்கி சுன்னத் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த பல சகோதரர்கள் கூட சொத்துப் பங்கீட்டை நடைமுறைப்பபடுத்த வேண்டும் என்பதில் பொடுபோக்காக இருப்பது அல்லது அதை நடைமுறைப்படுத்த எண்ணம் இல்லாது இருப்பது அல்குர்ஆனை சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது.
அல்லாஹ் தனது திருமறையிலேயே வசிய்யத்தாக கூறிய இந்த சொத்துப் பங்கீட்டு விடயத்தை சமுகத்தில் நடைமுறைப்படுத்த நாம் முன்வராமல் இருப்பதோடு அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களின் குரல்வழையை நசுக்குவதற்காக முயற்சிக்கின்றோம் என்றால் அல்லது எதை வேண்டுமானாலும் பேசுங்கள் சொத்துப்பங்கீடு பற்றி பேசாதீர்கள் எனக் கூறுகிறோம் என்றால் எம்மைவிட நஷ்டவாளிகள் யார் இருக்க முடியும்?
நாம் அல்குர்ஆனை நடைமுறைப்படுத்த வில்லை என்றால் யார் நடைமுறைப் படுத்துவது? என்பதை ஈமான் உள்ள ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளான்.
தவறான சொத்துப்பங்கீட்டால் சமுகம் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கின்ற இழப்புகள் ஏராளம் ஏராளம். ஜாஹிலிய்யாக் காலத்தில் எப்படி ஆண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கப்பட்டதோ அது எமது சமுகத்தில் மாறி பெண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கும் நவீன ஐhஹிலிய்ய சிந்தனை அரங்கேறுகிறது.
அல்லாஹ் தனது திருமறையில் இருசாராருக்கும் சொத்துப் பங்குள்ளது எனக்கூறுகிறான்.பெற்றோரோ, நெருங்கிய உறவினர்களோ விட்டுச் சென்ற (சொத்)தில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு - (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும். (அல்குர்ஆன் 4:7)
ஆண்கள், பெண்கள் என இருசாராருக்கும் அவரவரின் பங்குகள் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும் என இஸ்லாம் தெளிவாக கூறுகிறது. இதில் யாரும் அநீதி இழைக்கப் படக்கூடாது. யாவற்றையும்; அறி;ந்த அல்லாஹ்வின் சட்டத்தை நடைமுறைப்படுத்த இருசாராரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
தனக்கு அதிகமாக பெற்றோர் சொத்தை தவறாக தருகிறார்கள் என்பதை ஒரு பெண் தெரிந்தால் கண்மூடித்தனமாக சொத்தின் மீது கொண்ட மோகத்தினால் தவறான இச் சொத்துப் பங்கீட்டுக்கு தானும் காரணமாக அமைந்து விடக் கூடாது.
மாறாக அவள் பெற்றோருக்கு தெளிவுபடுத்தி தனக்கு சேரவேண்டிய சொத்தை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் மனோநிலை உள்ளவளாக அவள் இருக்க வேண்டும்.
இதைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில்; இன்று சமுகத்தில் உள்ள எத்தனையோ பிரச்சினைகளுக்கு தீர்வு இலகுவாக அமைவதோடு அல்லாஹ்விடத்தில் அவனது சட்டத்தை நடைமுறைப்படுத்திய கூலியையும் அவள் பெற்றுக் கொள்வாள். அதற்கு மாற்றமாக நடந்தால் அல்லாஹ்வின் தண்டனை கடினமானது என்பதையும் மறந்து விடக் கூடாது.
''நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது''. (அல்குர்ஆன் 85:12)
மற்றவரின் சொத்தை தவறான அடிப்படையில் அனுபவிப்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அல்லாஹ் தனது திருமறையில் .''நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.'' (அல்குர்ஆன் 4:29)
''எவரேனும் (அல்லாஹ்வின்) வரம்பை மீறி அநியாயமாக இவ்வாறு செய்தால், விரைவாகவே அவரை நாம் (நரக) நெருப்பில் நுழையச் செய்வோம்;. அல்லாஹ்வுக்கு இது சுலபமானதேயாகும்.'' (அல்குர்ஆன் 4:30)
முறைகேடான அடிப்படையில் மற்றவரின் சொத்தை அபகரிக்கக் கூடாது என்பது இறைவனின் சட்டமாகும். இந்த சட்டம் மீறப்படும் போது அவனது தண்டனையும் கடினமாகவே இருக்கும் என்பதை மேலுள்ள வசனத்தில் தெளிவாகவே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். ஆனால் இ;ன்று எம் சமூகத்தில் உள்ள அதிகமான மக்கள் அல்லாஹ்வின் தண்டனையைப் பயந்து கொள்ளாமல் தங்களது சொத்துக்களை இஸ்லாம் அங்கீகரிக்காத ஹராமான அடிப்படையில் தங்களுக்கிடையில் பரிமாறிக் கொள்கின்றனர்.
முஸ்லிம் அல்லாதோரின் கலாசாரத்தைப் பின்பற்றி யார் யாருக்கெல்லாம் சேரவேண்டிய சொத்துக்களை திருமண சந்தர்ப்பங்களில் அன்பளிப்பு என்ற பெயரில் அபகரிக்கின்ற ஓர் முறையிலான தவறான சொத்துப் பங்கீட்டை இச்சமூகம் அங்கீகரித்து அரங்கேற்றி வருகிறது.
இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இப்படி தவறான அடிப்படையில் இடம்பெறும் திருமணங்களை தடுத்து நிறுத்தி அதை பாவம் என்று சமூகத்திற்கு அடையாளப் படுத்தவேண்டிய உலமாக்களே இப்படியான திருமணங்களை அரங்கேற்றி வைத்து அதற்கு வேறு நியாயங்கள் கூட கற்பிக்கின்றனர்.
இப்படியான கொடுமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய பல உலமாக்கள் இதை நியாயப்படுத்தி பெண்ணின் சொத்தை ஆண் அனுபவிப்பது தவறா? எனக்கூறி அல்லாஹ்வே அப்படி அனுபவிப்பதற்கு அனுமதித்திருக்கிறானே என ஆதாரம் வேறு காட்டுகிறார்கள்.
இந்த வசனங்கள் எல்லாம் எமது சமுகத்திற்குப் பொருந்தாது எனக்கூறி வருகிறார்கள். இஸ்லாத்தை செயல்படுத்தவேண்டிய மௌலவிமார்களின் நிலையே இதுவென்றால் மற்றவர்களின் நிலை எப்படி இருக்கும்.
எங்கள் சமுகத்தில் வேரூன்றி இருக்கும் தவறான சொத்துப் பங்கீட்டு நடைமுறையை நாம் மாற்றவில்லை என்றால் அதற்கான முயற்சியை நாம் மேற்;கொள்ளவில்லை என்றால் குறிப்பாக கொள்கை பேசக்கூடியவர்கள் இதில் பொடுபோக்காக இருந்தால், இதில் தியாகம் செய்யும் மனநிலை எம்மிடத்தில் வர வில்லை என்றால் எப்படி இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தி சுவர்கத்திற்க்குரியவர்களாக நாம் மாறுவது?தனது முழுமுயற்சியையும் பயன்படுத்தி தேடிய தனது பொருளாதரத்தில் ஸகாத் கொடுக்க கடமையான அளவை அடைந்த பின்னரும் அதற்கு ஸகாத்கொடுக்க வில்லை என்றிருந்தால் அதற்கு இரண்டுவிதமான தண்டனையை இஸ்லாம் சுட்டிக் காட்டுகிறது.
1. ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும், துறவிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்;. மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்;. இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
(நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் - (இன்னும்) ''இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது - ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்"" (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 9-34,35)
2. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
'அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்'' 'நானே உன்னுடைய செல்வம்'' ''நானே உன்னுடைய பொக்கிஷம்'' என்று கூறும். (ஆதாரம் புகாரி 1403)
தனது முழு முயற்சியுடன் தேடிய பொருளாதரத்துக்கு ஸகாத் கொடுக்கவில்லை என்பதற்காகவே இப்படியான தண்டனை என்றால் மற்றவர்களின் பொருளாதரத்தை எந்தவிதமான உரிமையும் இல்லாமல் திருமணத்தின் பெயரால் கொள்ளையடித்தால் அதற்குரிய தண்டனை அல்லாஹ்விடத்தில் எப்படி இருக்கும் என்பதை சிந்திப்பவர்கள் புரிந்த கொள்வார்கள்.
இஸ்லாத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும். என கோஷங்கள் எழுப்பும் எத்தனை சகோதரர்கள் சொத்துரிமையை நிலை நாட்ட முயற்சித்தீர்களா?
வாரிசு சொத்துரிமையை நடைமுறைப் படுத்துவதற்கு உங்களுக்கு தடைக்கல்லாக அமைந்த காரணம் என்ன?
இஸ்லாமிய தனியார் துறைச்சட்டத்தில் கூட முஸ்லிம்கள் தமது சொத்தை தனது மதத்தின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம் என்ற அனுமதி கூட இருக்கிறதே?
இப்படியான சட்டங்களையே நடைமுறைப்படுத்தாமல் எப்படி ஒரு ஆட்சியை நோக்கி கற்பனை செய்கிறீர்கள? என வினாக்களைத் தொடுத்தால் அதற்கு இவைகளெல்லாம் சில்லறை பிரச்சினை என பதில் கூறுகின்றனர்.
ஒருவரின் சொத்தை தவறாக எடுத்தால் அவரின் நிலை எப்படி இருக்கும் என்பதை நபியவர்கள் பின்வருமாறு தெளிவு படுத்துகிறார்கள்.
ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெறட்டும்.)ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
ஒருவரின் சொத்தில் ஒரு சிறியளவு நிலத்தை எடுதால் கூட அவரின் நிலை மறுமையில் எப்படி இருக்கும் என்பதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறுகிறாரகள்.
பிறரின் நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார் என ஸயீத் இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்:
எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்; அபூ ஸலமாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள்.
ஏனெனில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும்'' என்று கூறினார்கள். (புகாரி)
சிறிய ஒரு நிலத்தைக்கூட மற்றவரின் சொத்தில் இருந்து தவறாக அபகரித்தால் இப்படி தண்டனை என்றால் தவறான அடிப்படையில் சீதனத்தின் பெயரால் அபகரிக்கப்படும் சொத்துக்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்.
வாரிசு சொத்து சட்டத்தை யார் தன் விடயத்தில் நடைமுறைப்படுத்தவில்லையோ அவர் நிரந்தர நரகம் நுழைவார் என அல்லாஹ் தனது திருமறையில் பங்கிடும் முறைகளை குறிப்பிட்டுவிட்டு இறுதியில் பின்வருமாறு கூறுகிறான்.
''எவன் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் மாறு செய்கிறானோ, இன்னும் அவன் விதித்துள்ள வரம்புகளை மீறுகிறானோ அவனை நரகில் புகுத்துவான்;. அவன் அங்கு (என்றென்றும்) தங்கி விடுவான்;. மேலும் அவனுக்கு இழிவான வேதனையுண்டு.'' (4:14)
இப்படி நிரந்தர நரகத்திற்க்குச் இட்டுகச் செல்லும் விடயமாக இது இருக்கிறது என்றால் இதில் ஒரு முஸ்லிம் எப்படி அல்லாஹ்வுக்கு அஞ்சி தனது நடவடிக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நாம் எப்படி இனைவைத்தலை அஞ்சுகின்றோமோ அதேமாதிரி இந்த விடயத்திலும் எமது பயம் இருக்க வேண்டும்.
இன்று சமுகத்தில் நிகழக்கூடிய அதிகமான பாவங்களுக்கும் அடிப்படையாக இருப்பது தவறானசொத்துப் பங்கிடே. பெண்கள் வெளிநாடு செல்வதும், விபச்சாரம் சமுகத்திலே பெருகுவதும், பெண்சிசுக்கொலை அதிகரிப்பதும், பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் தங்கவைக்கப் படுவதும், பலர் தமது உயர்படிப்பை தொடரமுடியாமல் இருப்பதற்க்கும் காரணமாக இருப்பது இவ்வாறான தவறான சொத்துப் பங்கீடே என்பதை நிதானமாக சிந்திக்கும் எவரும் புரிந்து கொள்வர்.
ஒரு சமுகத்தில் என்ன பாவம் அதிகமாக நடக்கிறதோ அதை மையப் படுத்தியதாகவே தஃவாப் பணி அமைய வேண்டும் என்பதை அல்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.
அல்லாஹ் அளவை நிறுவையில் மோசமாக ஒரு சமுகம் நடந்ததற்கு அவர்களைத் திருத்துவதற்காக ஒரு நபியை அனுப்பினான். அதேபோல் ஒழுக்கசீர்கேட்டில் வாழ்ந்த சமுகத்திற்கு லூத் நபியை அனுப்பி எச்சரித்தான். இவ்வாறே நபிமார்களின் தஃவாப்பணிகளும் அமைக்கப்பட்டன.
எனவே இக்காலத்தில் எமது பகுதிகளில் வாரிசுச் சட்டம் புறக்கணிக்கப்படுவதால் சொத்துரிமையை நடைமுறைப் படுத்துவதற்கு எமது அழைப்புப்பணியில் பாரிய பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதை எமது மனதில் ஆழமாக பதித்து எமது நடவடிக்கையை மறுமைக்காக அமைத்துக் கொள்வோம். நாம் வெற்றி பெற அல்லாஹ் அருள்புரிவானாக.

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2015

பெண்களுக்கு சொத்துரிமை (P .J.)


இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.

பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.

இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.

இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.

அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கே கூடுதல் சுமை.

இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.

ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது.

பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள்.

யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும் யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?

ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.

தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது.

எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!

பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும்.

ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் இரத்த சம்மந்தமுடையவர்களுக்குச் சேர வேண்டுமென விரும்புகிறான். தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்றப் படுவதற்கு வாரிசுரிமைச் சட்டத்தில் இந்தப் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

அவனது மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது.

கணவனின் நலனுக்காகக் காதுகளில் கழுத்துகளில் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் அவளுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.
அந்த மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், அவனையும் அவளையும் பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம்.

பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பாமரிக்க வேண்டும்.

பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம்.

அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். எடுத்துக் கொள்ளப்படுவது கூட பிரச்சனையில்லை. எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவள் தள்ளப் பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும்.

அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப் பட்டால் 'பாதிச் சொத்தைப் பெற்றுச் சென்றாளே? எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.

ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும்.

சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.

பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே.

உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.

ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார்.

தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று' என்ற விகிதாச்சாரம் பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள்.

இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம்.
2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னை பதிப்பு) 'சொத்தில் சமபங்கு! கடமையில்?' என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தை சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ...
...'எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சம பங்கு அளிக்கின்றனர்.அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.
கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும்.
தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். 'உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு' என்ற நிலை வரும் போது மகனும் மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.
ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருவேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப் படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.'


இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல் படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.

'பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!


வாரிசுரிமையின் அவசியம்
     

வாழ்வின் எல்லாப் பிரச்னைகளுக்கும் வழிகாட்டும் இஸ்லாம், வாரிசுரிமைப் பற்றியும் மிகத் தெளிவானதொரு வழிமுறையைக் காட்டியுள்ளது. பல்வேறு வழிமுறைகளில் பொருளை அடைய முடிந்தாலும் அதை ஈட்டுவதற்கான சிறந்த வழி எது? அதை எந்தெந்த வழிகளில் செலவிட வேண்டும்? என்பன போன்ற வினாக்களுக்கு பொருளியல் நிபுணர்களே வியந்து பாராட்டும் வண்ணம் எக்காலத்திற்கும் பொருத்தமான தீர்வை இஸ்லாம் வழங்கியுள்ளது. அதுபோல பொருளாதாரம் ஓரிடத்தில் குவிந்து, சிலர் என்றும் பொருளாதார வசதி படைத்தோராகவும், சிலர் என்றுமே வறியவர்களாகவும் இருக்கும் நிலையை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

மனிதன் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பது தனக்கு மட்டுமின்றி, தனது பிற்கால வாழ்வு, தனது மரணத்திற்குப் பின்னர் தனது சந்ததிகள், உற்றார், உறவினர் போன்றவர்களுக்காகவும்தான். எனவே, அவன் அப்படி கடின உழைப்பின் மூலம் ஈட்டிய சொத்து, சுகங்கள் அவனது மரணத்திற்குப் பின்னர் உரியவர்களுக்குக் கிடைக்காமல் போய், ஒரு சிலரோ அல்லது உரிமையற்றவர்களோ அபகரித்து விடக்கூடாது என்ற விஷயத்தில் தனி கவனம் செலுத்தி, அதற்காக அச்சொத்தில் அவர்களுக்கு உரியது எந்த அளவு என்பதையும் இஸ்லாம் நிர்ணயித்துள்ளது. அளவு நிர்ணயிக்கப்படாதிருந்தால் பேராசையால் தனக்கே சொத்து முழுவதும் சேர வேண்டுமென்று வலியவர்கள் அதை அபகரித்து விடக்கூடும். எனவே, தகுதியானவர்களுக்கு தகுதியான விகிதத்திலேயே சொத்துரிமை அளித்துள்ளது இஸ்லாம்.

"ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு சோதனை உண்டு. எனது சமூகத்தினருக்கு பொருட் செல்வம் தான் பெரிய சோதனையாகும்" என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக கஃபு இப்னு இயாழ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : திர்மிதீ 2337, இப்னு ஹிப்பான் 2470,  
அஹ்மத் 4 :160, ஹாகிம் 4 :318

எனவே, நம் பொருட்செல்வம் என்ற சோதனையில் நாம் வெற்றி பெற, கவனமாக நடப்பது அவசியமாகும். சொத்து மனிதர்களுடன் சம்பந்தப்பட்டதாக இருப்பதால், "அடியார்கள் மன்னிக்காமல் நான் மன்னிக்க மாட்டேன்" என அல்லாஹ் குறிப்பிடும் "ஹுகூகுல் இபாத்" என்ற பிரிவுடனும் சேர்ந்ததாகும். தொழுகை, நோன்பு, ஹஜ், ஸக்காத் போன்றவைதான் கட்டாயக் கடமை என நாம் எண்ணிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சொத்துரிமையும் கட்டாயக் கடமைதான்.

(மரணமடைந்த) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. (அது போல) தாய், தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு; அச்சொத்து குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தாலும் சரியே! இந்தப் பங்கு அல்லாஹ்வினால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.
(அல்குர் ஆன் 4 :7)

4:11-வது வசனத்தில் பாகப்பிரிவினைப் பங்கீடுகளைப் பற்றிக் கூறிய பின்னர் "இது அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்" என்றும், 4:12-வது வசனத்தின் இறுதியில் "இது அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்" என்றும், 4:13-வது வசனத்தில் "இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்" என்றும் அல்லாஹ் கூறுகிறான். எனவே, வாரிசுரிமைப் பங்கீடு கட்டாயக் கடமையே.

நமது நாடுகளில் ஒருவர் இறந்தவுடன் சொத்துரிமைப் பங்கு பிரித்துக் கொடுக்கப்படாத காரணத்தால் அண்ணன், தம்பி, அக்காள், தங்கைகளுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு நீதிமன்றம் செல்லும் பலரைப் பார்க்கின்றோம். பெண்மக்களுக்கு சொத்துரிமை கொடுக்கப்படாத நிலையைப் பார்க்கின்றோம். ஆனால், இஸ்லாம் தான் பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு எனக் கட்டளையிட்டு பெண்ணுரிமை பேணிய மார்க்கம் ஆகும். எனவே, வாரிசுரிமைச் சொத்துப் பங்கீடு கட்டாயக் கடமை. அதன் மூலம் உலகில் நம்மிடையே, குடும்பங்களுக்கிடையே அமைதியை ஏற்படுத்தலாம்.சொத்துரிமை ஏற்பட்ட வரலாறு:

ஸஃது இப்னு ரபீஃ (ரலி) அவர்களின் மனைவி, ஸஃதின் மூலம் தனக்குப் பிறந்த இரு பெண் மக்களுடன் வந்து, "அல்லாஹ்வின் தூதரவர்களே! இவ்விருவரும் ஸஃது இப்னு ரபீஃ அவர்களின் (மூலம் எனக்குப் பிறந்த) புதல்விகள். இவர்களின் தந்தை ஸஃது உஹதுப் போர்க்களத்தில் கொல்லப்பட்டார். இந்தப் பெண்களுக்கு எந்தப் பொருளையும் விட்டு வைக்காமல் அவரது சொத்து முழுவதையும் அவருடன் பிறந்த சகோதரர் எடுத்துக் கொண்டார். இவ்விருவரின் சொத்துகளுக்காகவே எவரும் திருமணம் செய்ய முன்வருவார்கள்" என முறையிட்டார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "இது விஷயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான்" எனக் கூறினார்கள். அப்போதுதான் சொத்துரிமை பற்றிய பின்வரும் (4 :11,12-வது) குர் ஆன் வசனங்கள் இறக்கி அருளப்பட்டன.

உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு, இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றே கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசம் செய்கிறான். பெண்கள் மட்டும் இருந்து, அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டு இருந்தால், அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால், ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்.

இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால், இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால், இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மட்டுமே வாரிசாக இருந்தால், அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால், அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம்தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாசனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற்றோர்கள், குழந்தைகளில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள். ஆகையினால் (இந்தப் பாகப் பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு. அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து. உங்களுக்கு கால் பாகம்தான் - (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் - தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான். உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான். (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்.

தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ - இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் - அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் - (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான். ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது. (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும். இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.
அல்குர் ஆன் 4 :11,12

அப்போது, நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களின் சிறிய தந்தையை அழைத்து, ஸஃதின் புதல்விகள் இருவருக்கும் சொத்தில் மூன்றில் இரண்டு பங்கும், ஸஃதின் மனைவிக்கு எட்டில் ஒரு பங்கும் கொடுத்துவிட்டு, மீதியை அவர் எடுத்துக் கொள்ளும்படி ஆணையிட்டார்கள்.

ஆதாரம்: அபூதாவூத் 2891, திர்மிதீ 2092
இப்னுமாஜா 2720, அஹ்மத் 3307

மற்றொரு வரலாறு:

பனீஸலமா கூட்டத்தினரில் நான் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, என்னை நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் நோய் விசாரிக்க வந்தனர். என்னால் எதையும் விளங்கிக் கொள்ள முடியாத நிலையில் என்னைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீரை வரவழைத்து உளூச் செய்து, பின்னர் என் மீது தண்ணீரைத் தெளித்தார்கள். அப்போது நான் விழித்து, அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது செல்வத்தை நான் என்ன செய்யச் சொல்கிறீர்கள்? எனக் கேட்க, அப்போது 4:11வது வசனம் இறங்கிற்று என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

(புகாரி 4577, 6723, 5651, 5676 மற்றும் முஸ்லிம்)

இன்னொரு வரலாறு:

ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்களின் சகோதரரான அப்துர்ரஹ்மான் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் மரணமானபோது ஆண் வாரிசுகள் அனைவரும் வந்து, சொத்து முழுவதையும் எடுத்துக் கொண்டனர். அவரது மனைவி உம்மு கஹ்ஹா மற்றும் அவரது சகோதரிகள் ஐவருக்கும் எதுவும் கொடுக்கவில்லை. அப்போது உம்மு கஹ்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது மேற்கண்ட வசனம் இறங்கியதாகவும் வரலாறு காணப்படுகிறது. (தஃப்ஸீர் இப்னு ஜரீர்)

ஆக எது எப்படியாயினும், பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட போதுதான் சொத்துரிமை பற்றிய தெளிவான சான்றுகள் தோன்ற ஆரம்பித்தன என்பது உண்மையாகும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

பயிற்சி வினாக்கள்:

(1) வாரிசுரிமை கட்டாயக் கடமையா? அதற்கான ஆதாரங்கள் என்ன?

(2) அல்குர் ஆன் 4:11,12வது வசனங்கள் இறங்கக் காரணம் என்ன?


 2. இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் சிறப்பு

search this website