பெண்களுக்கு சொத்துரிமை (P .J.)


இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்பதும் முஸ்லிமல்லாதாரின் குற்றச் சாட்டுகளில் ஒன்றாகும்.

பலமுடையவர்களாகவும், பொருளைத் திரட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகம் பெற்றவர்களாகவும் உள்ள ஆண்களுக்குக் குறைந்த அளவும் பலவீனர்களாகவும், பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறைவாகப் பெற்றவர்களாகவும் உள்ள பெண்களுக்கு அதிக அளவும் வழங்குவதே நியாயமானதாகும். அதிகச் சொத்துரிமைக்குப் பெண்களுக்கே அதிகத் தகுதி இருக்கும் நிலையில் - இருவருக்கும் சம அளவில் வழங்குவதே நியாயமாக இராது என்ற நிலையில் - ஆணுக்குக் கிடைப்பதில் பாதியளவு தான் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டுமென்பது மாபெரும் அநீதியாகும். இப்படி அவர்களின் குற்றச்சாட்டு விரிவடைகின்றது.

இஸ்லாம் மார்க்கத்துக்கு முன் உலகில் பெண்களுக்கு சொத்துரிமை இருந்ததில்லை. பெற்றோர்களின் சொத்துக்களிலிருந்தோ ஏனைய உறவினர்களின் சொத்துக்களிலிருந்தோ பெண்கள் வாரிசுரிமை பெறுவதுமில்லை.

இஸ்லாம் மார்க்கம் தான் முதலில் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கியது. இஸ்லாம் மார்க்கம் வந்த பின்பு கூட பல நூற்றாண்டுகளாக முஸ்லிமல்லாத சமுதாயத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை இருந்ததில்லை.

பெண்களுக்குச் சொத்துரிமை உள்ளது என்று சமீப காலத்தில் தான் நமது நாட்டில் சில பகுதிகளில் சட்டமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தமிழக அரசு பெற்றோர்களின் சொத்துக்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம அளவிலான உரிமை உண்டு என்று கருணாநிதி ஆட்சியின் போது சட்டமியற்றியது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்குச் சொத்துரிமையை வழங்கியது.

அறிவுப்பூர்வமான, நியாயமான காரணங்களுக்காகவே இஸ்லாம் ஆண்களுக்கு இரு மடங்குகளும், பெண்களுக்கு ஒரு மடங்கும் எனப் பாகப்பிரிவினைச் சட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்களுக்கே கூடுதல் சுமை.

இஸ்லாமியச் சமூக அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது கூடுதலான சுமைகள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு ஆண் தனது மனைவிக்கு உணவும், உடையும், உறைவிடமும் வழங்கக் கடமைப்பட்டிருக்கிறான். ஒரு பெண் தன் கணவனுக்காக இதைச் செய்ய வேண்டியதில்லை.

ஒரு ஆண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவையும் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான். குழந்தையின் உற்பத்தியிலும் வளர்ச்சியிலும் கூடுதலாகப் பங்கெடுத்துக் கொண்ட பெண் தன் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுக்குக் கூடப் பொறுப்பாளியாக மாட்டாள்.
தாய், தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை மற்றும் தூரத்து, நெருங்கிய உறவினர்கள் ஆகியோர் சிரம தசையிலிருக்கும் போது அவர்களையும் பராமரிக்கும் கடமை ஆண்களுக்கு இருக்கின்றது.

பெண்களைப் பொறுத்த வரை இது போன்ற கடமைகள் எதுவும் அவர்களுக்குக் கிடையாது.

இஸ்லாமிய சமூக அமைப்பில் மட்டுமின்றி ஏனைய சமூகங்களிலும் கூட இந்த நிலையை நாம் காணலாம். இந்த அடிப்படையான விஷயத்தை மறந்து விடுபவர்கள் தாம் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தை குறை கூறக் கூடியவர்கள்.

யாருக்குத் தேவைகள் அதிக அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் கூடுதலாகவும் யாருக்குத் தேவைகள் குறைந்த அளவு இருக்கின்றதோ அவர்களுக்குக் குறைவாகவும் வழங்குவது எந்த விதத்தில் அநீதியாகும்?

ஒரு ஆண், வாரிசுரிமை மூலம் பெண்ணை விட இரு மடங்குகள் பெற்றாலும் அவை போதாது என்ற அளவுக்கு அவன் மீது கடமைகள் உள்ளன. ஒரு பெண் ஒரு மடங்கைப் பெற்றாலும் அவளுக்கு அது தேவையில்லை என்ற அளவுக்குப் பொறுப்புகளிலிருந்து அவளுக்கு விலக்களிக்கப்படுகின்றது.

தனக்காகக் கூட இன்னொரு ஆண் செலவு செய்ய வேண்டும் என்ற அளவுக்கு அவளது சொத்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது.

எனவே ஆண்களுக்கு இரு பங்குகளும் பெண்களுக்கு ஒரு பங்கும் என்ற இஸ்லாமிய பாகப் பிரிவினைச் சட்டம் அறிவுக்குப் பொருத்தமான நியாயமான சட்டமாகும் என்பது தெளிவு!

பெண்ணின் சொத்து அன்னியருக்குச் சேரும்.

ஒவ்வொரு மனிதனும் தனது சொத்துக்கள் தன் மரணத்திற்குப் பிறகு தன் இரத்த சம்மந்தமுடையவர்களுக்குச் சேர வேண்டுமென விரும்புகிறான். தன் குடும்பத்திற்குள்ளேயே அந்தச் சொத்துக்கள் செலவிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறான். இந்த விருப்பத்தில் நியாயமும் இருக்கின்றது. எல்லா மனிதரும் விரும்பக் கூடிய இந்த விருப்பம் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவாவது நிறைவேற்றப் படுவதற்கு வாரிசுரிமைச் சட்டத்தில் இந்தப் பாரபட்சம் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது.

உதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும், மனைவியும் சில சகோதர சகோதரிகளும் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்தச் சகோதர சகோதரிகள் மிகவும் ஏழ்மையில் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்வோம்.

அவனது மரணத்திற்குப் பின்னர் அவனது மகளுக்குச் சேரும் ஒரு பங்கு அவனது இரத்த பந்தங்களுக்குச் செலவிடப்படாது. அது இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேரும். அந்த மகள் தனக்கே அதை வைத்துக் கொள்ள முடியும் என்றாலும் கணவனுக்காக அனைத்தையும் வழங்கி விடுதல்' என்ற பலவீனம் இல்லாத பெண்கள் அரிது.

கணவனின் நலனுக்காகக் காதுகளில் கழுத்துகளில் கிடப்பதைக் கூட கழற்றிக் கொடுப்பவர்களைக் காண்கின்றோம். இந்த பலவீனத்தினால் அவளுக்குக் கிடைக்கின்ற வாரிசுச் சொத்துக்கள் தாமாக இன்னொரு குடும்பத்துக்குப் போய்ச் சேர்ந்து விடுகின்றன.
அந்த மகனுக்குக் கிடைத்த இரு மடங்குச் சொத்துக்கள் தந்தையின் இரத்த சம்மந்தமான உறவுகளுக்காகவும், அவனையும் அவளையும் பெற்ற தாய்க்காகவும் செலவிட ஏற்ற வகையில் இறந்தவனின் குடும்பத்தையே சுற்றி வருகின்றன. இறந்தவனின் இயல்பான விருப்பம் ஓரளவு நிறைவு செய்யப்பட்டு விடுகின்றது. இந்தக் காரணத்தைச் சிந்திக்கும் போது ஆண்களுக்குச் சிறிது அதிகமாக வழங்குவதில் எந்த அநியாயமும் இல்லை என்பதை உணரலாம்.

பெண் கைவிடப்பட்டால் பிறந்த வீடு தான் அவளைப் பாமரிக்க வேண்டும்.

பெண்கள் பலவீனர்களாக இருப்பதனால் அவர்களுக்குக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று முஸ்லிமல்லாதார் கூறுகின்றனர். பெண்கள் பலவீனர்களாக இருப்பதும் அவர்களின் பங்கைக் குறைத்ததற்கான காரணங்களில் ஒன்றாகும் என்று நாம் கூறுகிறோம்.

அவர்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கணவனாலும், கணவனது குடும்பத்தினராலும் அவர்களுக்குக் கிடைக்கின்ற சொத்துக்கள் எடுத்துக் கொள்ளப்படலாம். எடுத்துக் கொள்ளப்படுவது கூட பிரச்சனையில்லை. எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு அவள் தள்ளப் பட்டும் விடலாம். இந்த நிலையில் அவளது வருங்காலப் பாதுகாப்புக்கு யார் உத்திரவாதம் தருவது? அவள் பிறந்தகம் தான் வந்தாக வேண்டும். அவளது உடன் பிறந்தவன் தான் அவளையும் பராமரிக்க வேண்டும்.

அவளை விடச் சிறிது கூடுதலாக அவன் பெற்றிருந்தால் தான் உடன் பிறந்தவள் மீது பச்சாதாபம் ஏற்பட முடியும். அவளைத் தொடர்ந்து பராமரிக்க முடியும்.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பங்குகள் என்று பிரிக்கப் பட்டால் 'பாதிச் சொத்தைப் பெற்றுச் சென்றாளே? எனக்குக் கிடைத்தது போன்று தானே இவளுக்கும் கிடைத்தது? இவளை ஏன் நான் கவணிக்க வேண்டும்' என்ற எண்ணம் சகோதரர்களுக்கு ஏற்பட்டு அவள் புறக்கணிக்கப்படுவாள்.

ஆண் இரண்டு பங்கைப் பெற்றிருந்தால் நம் சகோதரிக்குக் கிடைத்தது போல் இரு மடங்கை நாம் பெற்றுள்ளோம். எனவே சகோதரியையும் இந்த இக்கட்டான நேரத்தில் நாம் தான் கவணிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இது பெண்களின் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பாக அமையும்.

சொத்தைப் பெருக்குவதில் ஆண்களின் பங்கு அதிகம்.

பெரும்பாலும் சொத்துக்களைப் பெருக்குவதில் ஆண்களே உறுதுணையாக உள்ளனர். ஒரு தந்தைக்கு ஒரு மகனும் மகளும் இருந்தால் அந்தத் தந்தைக்குச் சொந்தமான நிறுவனங்களில் தந்தைக்கு உறுதுணையாக ஆண்களே இருக்கின்றனர். சொத்து பெருகுவதில் ஆண்களுக்கே அதிக உழைப்பு உண்டு என்பதும் பாரபட்சம் காட்டப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாகும்.

பெரும்பாலும் பெண்கள் தந்தையின் சொத்து வளர்ச்சியில் ஈடுபாடு காட்டுவதில்லை. யார் சொத்து வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறார்களோ அவர்களுக்குக் கூடுதலாக பாகங்கள் வழங்குவதை அநியாயம் என்று எப்படிக் கூற முடியும்?

தந்தையிடமிருந்து அதிகம் பெறுவது பெண்களே.

உணவு, உடை போன்ற செலவினங்கள் ஆண்கள் பெண்கள் இரு பாலருக்கும் சம அளவில் செய்யப்பட்டாலும் இதர வகையில் பெண்களுக்கென்று ஆண்களை விடக் கூடுதலாக செலவு செய்யப்படுகின்றது.

ஒரு தந்தைக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தால் அந்த மகளுக்காக அந்தத் தந்தை ஆபரணங்கள், நகைகள் என்று செய்து போட்டு அழகு பார்க்கிறார். இவை வெறும் அழகு சாதனங்கள் மட்டுமல்ல. பெரும் சொத்துக்களாகவும் உள்ளன. வசதி படைத்தவர்கள் தங்கள் பெண்களுக்காக இலட்சக் கணக்கிலும் வசதியே இல்லாதவர்கள் பல ஆயிரங்களுக்கும் நகைகள் செய்து போடுகின்றனர். இது அந்தப் பெண்களின் சொத்தாகவே ஆகி விடுகின்றது. இது தவிர திருமணத்தின் போது மகளுக்காகச் சீர் என்று பல சாதனங்களையும் தந்தை வழங்குகின்றார்.

தந்தையின் சொத்தில் ஆண்கள் அனுபவிப்பதை விடக் கூடுதலாக பெண்கள் அனுபவிக்கிறார்கள். தந்தையின் மரணத்திற்குப் பிறகு எஞ்சியுள்ள சொத்துக்களில் தான் இரண்டுக்கு ஒன்று' என்ற விகிதாச்சாரம் பேணப்படுகின்றதேயன்றி தந்தை உயிருடனிருக்கும் போது பெண்களே அதிக அளவில் பெற்றுக் கொள்கிறார்கள்.

இது போன்ற நியாயமான காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளதை நாம் உணரலாம்.
2.8.2001 தினமணி நாளேட்டில் (சென்னை பதிப்பு) 'சொத்தில் சமபங்கு! கடமையில்?' என்ற கட்டுரை வெளியானது. சுதந்திர தயாகான் அவர்கள் இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள முக்கியமான அம்சத்தை சிந்தித்தால் இஸ்லாமியச் சொத்துரிமைச் சட்டம் எவ்வளவு அறிவுப்பூர்வமானது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

கட்டுரையின் முக்கியப் பகுதி இதோ...
...'எனவே, சொத்தில் சம உரிமை என்பது அதிசயிக்கத்தக்க ஒரு விஷயம் அல்ல. எனினும் சொத்தில் சம உரிமை கொடுக்கப்படும் போது, கடமையிலும் பெண் குழந்தைகள் பங்கு கொள்கிறார்களா என்பது ஆராய வேண்டிய ஒன்று. ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நல்ல வரண் பார்த்து, ஒரு லட்சத்திற்கு நகை, ஒரு லட்சம் திருமணச் செலவு எனப் பெற்றோர் மணம் முடித்து வைக்கிறார்கள். பேறு காலம் பார்த்து, விருந்துக்கு அழைத்து, விடுமுறைக்கு அழைத்து மகிழ்விக்கின்றனர். பின், ஆண் பிள்ளைகளுக்கு கொடுப்பது போல், பணம், வீடுவாசல் என சொத்திலும் சம பங்கு அளிக்கின்றனர்.அவ்வாறு செய்யும் பெற்றோர், வயதான காலங்களில், முடியாத காலங்களில், பெண் பிள்ளைகளுடன் சென்று தங்கி, அவர்கள் கண்காணிப்பில் இருக்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.
கிடைத்த வரை பெற்றுக் கொண்டு, கொடுத்தவர்களுக்கு முடியாத காலங்களில் அவர்களைக் கவனிக்க வேண்டிய கடமை மகனுக்கு மட்டுமே என்ற நடைமுறை மாற வேண்டும்.
தன் மனைவி வீட்டில் சகலமும் அனுபவிக்கும் மருமகன், தன் மாமனார், மாமியாரை, அவர்களின் வயதான காலங்களில் தம்முடன் வைத்துப் பராமரிக்க முன் வரவேண்டும். 'உரிமை மகளுக்கு கடமை மகனுக்கு' என்ற நிலை வரும் போது மகனும் மருமகளும் சற்று சோர்வடைவதில் வியப்பில்லை.
ஆண் பிள்ளைகளைப் போல், பெண் பிள்ளைகளும் தங்கள் பெற்றோரைப் பராமரிக்க வேண்டும். சொத்தில் சம உரிமை பெறுவதால், தம் சகோதரியும் பெற்றோரைக் கவனித்தால் என்ன? என்று சகோதரர்கள் நினைப்பது இயற்கை. சகோதரிகளுக்கும், பெற்றோருக்கும் கடமை செய்ய மாத்திரமே ஆண் மகன் என்ற நிலை மாற வேண்டும். உரிமையில் சமம் எனில், கடமையிலும் சமபங்கு வகிக்கப் பெண் குழந்தைகள் நிர்பந்திக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.
முதியோர் இல்லங்கள் பெருகுவது ஒருவேளை, பெண் குழந்தைகளுக்கு உரிமை (மட்டும்) சமபங்கு கொடுக்கப் படுவதால் ஏற்பட்ட கால மாற்றத்தின் விளைவோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.'


இஸ்லாம் கூறுகின்ற வாரிசுரிமைச் சட்டம் அமுல் படுத்தப்பட்டால் இந்த தீய விளைவுகளை நாம் கண்டிப்பாகத் தவிர்க்க இயலும்.

'பெண்களுக்கு ஒன்று ஆண்களுக்கு இரண்டு' என்ற வகையில் பங்கீடு செய்வது தான் அறிவுப்பூர்வமானது. பெண்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்தது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் காட்டப்படும் இந்த வித்தியாசம் முற்றிலும் நியாயமானதே! அறிவுக்குப் பொருத்தமானதே!






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!