சொத்துப் பங்கீட்டில் பெண்களுக்கு குறைவாக கொடுக்கப்பட்டது ஏன்?


சொத்துப் பங்கீடு பற்றி பலரும் இஸ்லாத்தின்மீது விமர்சனங்களை வைக்கின்றார்கள். எனவே இது பற்றிய விபரத்தை நாம் தெளிவாக புரிந்துக் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த அன்றைய சமூக சூழலில் ஆண்கள் சகல விதங்களிலும் பெண்களை அடக்கியாண்டு உரிமைகளைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். "பலமுள்ளவன் தான் சரியானவன்" என்ற தத்துவத்தின் அடிப்படையில் தகப்பனோ சகோதரனோ விட்டுச் செல்லும் சொத்துக்களில் பெண்களுக்குரிய பங்கினை வழங்காது பலாத்காரமாகச் சூறையாடிக் கொண்டுமிருந்தார்கள்.
தந்தையைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் அநாதைப் பிள்ளைகளுக்கும், கணவனை இழந்துவிட்டு கண்ணீரோடு வாழும் விதவைப் பெண்களுக்கும் அச்சொத்திலிருந்து எதுவும் கிடைக்க மாட்டாது. இவர்கள் அடுத்தவர்களிடத்தில் கையேந்தி மற்றவர்களின் தயவில் வாழக்கூடிய பரிதாபகரமான நிலை காணப்பட்டது. இந்நிலையில் இக்கொடுமைக்கு ஆரம்ப கட்டத் தீர்வாக அல்லாஹ் பின்வரும் வசனத்தை அருளினான்.
"உங்களில் ஒருவருக்கு மரணம் நெருங்கும் போது அவர் ஏதேனும் செல்வத்தை விட்டுச் செல்வாராயின் அவர் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் நல்ல முறையில் (மரண சாசனம்) வஸீய்யத் செய்வது உங்கள் மீது விதியாக்கப்பட்டுள்ளது. பயபக்தியாளர்களுக்கு இது கடமையாகும்.
எவர் அ(ம்மரணசாசனத்)தை செவியேற்ற பின்பும் அதை மாற்றி விடுகின்றாரோ அதன் குற்றம் அதை மாற்றியவர்களையே சாறும். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவன் நன்கறிந்தவன்.
ஆனால் வஸீய்யத் செயபவரிடம் அநீதத்தையோ பாவத்தையோ எவரேனும் அஞ்சி (சம்பந்தப்பட்ட) அவர்களுக்கிடையே (வஸீய்யத்தை சீர்செய்து) சமாதானம் செய்தால் அவர் மீது குற்றமில்லை. நிச்சமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் நிகரற்ற அன்புடையவன். (அல்குர்ஆன் 2:180-182)
இதனடிப்படையில் சொத்துக்களை விட்டுச் செல்பவர் தன்னுடைய பெற்றோர் மனைவி பிள்ளைகள் மற்றும் உறவினர்களுக்கு அச்சொத்திலிருந்து பங்குகிடைக்கக்கூடியதாக மரண சாசனம் செய்யவேண்டும். அதன் பத்திரமும் எழுதப்பட வேண்டும் என்ற சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. மரண சாசனத் தில் அநீதி காணப்படுமானால் அதனை சீர்படுத்துவதற்கும் உரிமை வழங்கப்பட்டது.
மரணசாசனம் தெரிவிக்க ஏதேனும் பொருளைப் பெற்றுள்ள எந்த முஸ்லிமுக்கும் அவர் தமது மரண சாசனத்தை எழுதி வைக்காமல் இரண்டு இரவுகளைக் கழிப்பதற்குக் கூட அனுமதியில்லை என நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)
இதன் மூலம் பெண்களுக்கும் நியாயமாக பங்கீடு கிடைக்க வழி காட்டப்பட்டது.
இச்சட்டம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஸஅத் இப்னு ரபீஃஆ ரளியல்லாஹு அன்ஹு என்பவரின் மனைவி தனது இரு பெண் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! இதோ இவ்விருவரும் ஸஃத் இப்னு ரபீஆவின் புதல்வியர்கள். இவர்களுடைய தந்தை உங்களுடன் உஹது யுத்தத்திலே பங்குகொண்டு கொல்லப்பட்டு விட்டார்.
இவர்களுடைய தந்தையின் சகோதரர் இவர்களுடைய முழுச் சொத்தையும் எடுத்துக் கொண்டார். இவர்களுக்காக எதையும் விட்டுச் செல்லவில்லை. இவர்களுக்கென சொத்து எதுவும் இல்லையென்றால் அவர்களைத் மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாது என்று முறையிட்டார்.
இந்த முறைப்பாட்டை செவியேற்ற நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் இதற்கோர் தீர்வை வழங்குவான் எனக் கூறினார்கள். இச்சந்தர்ப்பத்தில் இப்பெண்மணியின் முறையீட்டிற்குப் பதில் கூறுமுகமாக பின்வரும் சட்டம் அருளப்பட்டது.
1) இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்குண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்கு (சொத்துப் பங்கிடும் முறைப்பற்றி) கட்டளையிடுகின்றான்.
- (இறந்தவர் விட்டுச்செல்லும் சொத்துக்கு ஆண்பிள்ளை இல்லாமல்) இரண்டு பெண்கள் அதற்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர் விட்டுச்சென்றதில் மூன்றில் இருபங்கு (2/3) அப் பெண்களுக்குண்டு.
- ஒரே ஒருபெண் மட்டும் இருந்தால் அவளுக்கு அதில் அரைவாசிப் (பங்கு) உரியது.
2) இறந்தவருக்குப் பிள்ளை இருப்பின் அவர் விட்டுச் சென்றதில் (அவருடைய) தாய், தந்தைக்கு ஆறில் ஒரு (1/6) பங்குண்டு.
- அவருக்கு பிள்ளை இல்லாமல் அவரது பெற்றோரே அவருக்கு வாரிசாக இருப்பின் அவரது தாய்க்கு மூன்றில் ஒரு (1/3)பங்குண்டு. (மீதி தந்தைக்குரியது)
- இறந்தவருக்கு (பிள்ளைகள் இல்லாமல்) சகோதரர்கள் இருப்பின் அவரது தாய்க்கு ஆறில் ஒரு (1/6) பங்குண்டு.
- (இவ்வாறு பங்கீடு செய்வது) அவர் செய்த மரணசாசனம் அல்லது அவரது கடன் ஆகியவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.
- (சொத்துப் பங்கீடு பெறுவதில்) உங்கள் பெற்றோர், மற்றும் பிள்ளைகளில் உங்களுக்கு அதிகமாக பயனளிப்பதில் மிக நெருக்கமானவர்கள் யார்? என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்.
"இவை அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டவையாகும். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:11)
3). (இறந்துபோன) உங்கள் மனைவியருக்கு பிள்ளை இல்லையெனில் அம்மனைவியர் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு அரைவாசி (1/2) உண்டு.
- அவர்களுக்கு பிள்ளை இருப்பின் அவர்கள் விட்டுச் சென்றதில் (கணவராகிய) உங்களுக்கு நாலில் ஒரு (1/4) பங்குண்டு. (இது) அவர்கள் செய்த மரணசாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும.
- உங்களுக்கு (கணவனாகிய நீங்கள் இறந்த பின்) பிள்ளை இல்லையெனில் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு நாலில் ஒரு (1/4)பங்குண்டு.
- உங்களுக்கு பிள்ளை இருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதில் (மனைவியர்களான) அவர்களுக்கு எட்டில் ஒரு (1/8) பங்குண்டு. (இது) நீங்கள் செய்த மரண சாசனம் அல்லது கடன் என்பவற்றை நிறைவேற்றிய பின்னரேயாகும்.
4. (பெற்றோர் பிள்ளைகள் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ மரணித்து அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு (1/6) பங்குண்டு. அவர்கள் இதை விட அதிகமாக இருந்தால் மூன்றில் ஒரு (1/3) பங்கில் அவர்கள் பங்குதாரர்களாவார்கள். (இது) பாதிப்பு அற்றவிதத்தில் செய்யப்பட்ட மரணசாசனத்தையும் அல்லது கடனையும் நிறை வேற்றிய பின்னரேயாகும். இது அல்லாஹ்விடமிருந்துள்ள கட்டளையாகும். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனும் சகிப்புத்தன்மையுடையவனு மாவான். (அல்குர்ஆன் 4:12)
இவ்வசனம் அருளப்பட்டதும் நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஃத் இப்னு ரபீஃஆவின் சகோதரரை வரவழைத்து அவர் எடுத்துச் சென்ற சொத்தை பின்வருமாறு பங்கீடு செய்தார்கள்.
இரு பெண் பிள்ளைகளுக்கும் (தலா ஒருவருக்கு 1/3 என்ற பங்கு வீதத்தில்) 2/3 பங்குகளும், இவர்களின் தாய்க்கு எட்டில் ஒருபங்கும் (1/8) பங்கும் மீதியை ஸஃத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரர்களுக்கும் கொடுத்தார்கள். (நூல்: அஹ்மத், அபூதாவூத், திர்மிதி, இப்னுமாஜா)
தனக்கும் தனது பெண் பிள்ளைகளுக்கும் சொத்துரிமை விவகாரத்தில் உரியபங்கு கிடைக்கவில்லையென்று ஒரு பெண் மணி நீதி கேட்டு வந்தபோது அப்பெண் மணிக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவே வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டது.
மகன், மகள், சகோதர சகோதரி, மனைவி, தாய் தந்தை ஆகியோருக்கு இச்சட்டத்தின் மூலம் சொத்துக்களில் பங்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
இதைவிட பெண்ணுக்குரிய அந்தஸ்த்தும் உரிமையும் வேறு எங்கும் எந்த மதத்திலும் கோட்பாட்டிலும் காண முடியாது.
இவ்வாரிசுரிமைச் சட்டம் அருளப்பட்டபின் மரண சாசனத்தின் மூலம் சொத்துக்கள் பங்கீடு செய்யும் சட்டம் ரத்துச் செய்யப்பட்டதோடு வாரிசுகளுக்கு சொத்துக்கள் சம்பந்தமாக மரணசாசனம் செய்யவோ எழுதவோ அல்லது சிபாரிசு செய்யவோ தடுக்கப்பட்டது. வாரிசுகளுக்கு எத்தனை வீதம்பங்கு கொடுக்க வேண்டும்; என்று அல்லாஹ் விபரித்துக் கூறியுள்ளானோ அதே அடிப்படையிலும் இத்திருமறைக் குர்ஆனுக்கு விளக்கவுரையாக நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்படிச் செயல்படுத்தி பங்குவைத்துக் காட்டினார்களோ அதே அடிப்படையிலும் தான் உலகம் அழியும் வரை பங்கீடு செய்யப்பட வேண்டும். இதில் எவரும் மாற்றம் செய்ய முடியாது.
வாரிசுகள் அல்லாத வேறு எவருக்கேனும் அல்லது நற்பணிகளுக்கேதும் சொத்தில் குறிப்பிட்ட ஓர்அளவு கொடுக்க வேண்டும் என்று விரும்பினால் அதுசம்பந்தமாக வஸீய்யத் செய்வது தடுக்கப்படவில்லை.
உதாரணமாக, சமுதாயத்தின் கல்வி அறிவு வளர்ச்சிக் காக மறுமலர்ச்சித் திட்டங்களுக்காக அல்லது ஏழை எளியவர்கள் அநாதைகள் விதவைகள் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரின் நலன்களைக் கவனத்திற் கொண்டு அவர்களது மேம்பாட்டிற்காக ஒருவர் தனது சொத்தில் குறிப்பிட்ட ஒருபங்கை மரணசாசனம் செய்ய விரும்பினால் அவர் தாராளமாக செய்யலாம். ஆனால் மொத்த சொத்தையும் தர்மஸ்தாபனங்களுக்கோ பொது நிருவனங்களுக்கோ எழுதிவைத்து விட முடியாது. அவரது மரணசாசனம் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கும் (1/3) அதிகமில்லாமல் இருப்பதையே இஸ்லாம் விரும்புகின்றது.
ஸஃத் இப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: ''நான் (நபியவர்களின் இறுதி ஹஜ்ஜின் போது மக்காவில்) நோயுற்று விட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அப்போது நான்அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் அனைத்தையும் மரணசாசனம் செய்ய விரும்புகின்றேன். எனக்கு இருப்பதெல்லாம் ஒரு மகள்தான். (எனவே என்சொத்தில்) பாதிப் பாகத்தை மரணசாசனம் செய்யட்டுமா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பாதி அதிகம்தான் என்றார்கள். அப்படி என்றால் மூன்றில் ஒரு பங்கு (1/3) என்று கேட்டேன். மூன்றில் ஒரு பங்கா? அதுவும் அதிகம்தான். நீங்கள் உங்கள் வாரிசுகளை தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதை விட நல்லதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: புகாரி)
பெண் பிள்ளைகளுக்குரிய சொத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் தன்னிறைவுள்ளவர்களாக அவர்களை ஆக்குவதற்கும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உரிய கவனம் செலுத்தினார்கள்.
வாரிசுகளை நிர்ணயிப்பதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் வெவ்வேறான அளவுகோல்கள் இருப்பதைப் பார்க்கின்றோம். வாரிசுகள் என்போர் யார்? அவர்கள் எந்த அடிப்படையில் வாரிசுகளாகிறார்கள்? அவர்களில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டியவர்கள் யார்? அவர்களில் யாருக்கு எந்தளவு பங்கு கொடுக்கப் படவேண்டும் என்ற விபரங்களெல்லாம் இஸ்லாம் தெளிவுப் படுத்துகிறது.
சொத்துக்களுக்கு மனிதன் சொந்தக்காரனாக இருந்தாலும் அவனாக முடிவுசெய்து விரும்பிய விதத்தில் வாரிசுக்ளுக் கிடையில் பங்கிட முடியாது. இஸ்லாம் தயாரித்துத் தந்திருக்கின்ற பட்டியல் முறையில் தான் பங்கீடு செய்யவேண்டும். சொத்துக்கள் தலைமுறை தலைமுறையாக குடும்பத்திற்குள் மாறிவருவதல்ல முக்கியம். அச்சொத்துக்களால் பலபேருடைய வாழ்வும் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதே முக்கியம்.
எனவே, ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் மொத்த சொத்து களையும் வழங்கிடாமல் பெண்களுக்கும், பெற்றோருக்கும் உடன் பிறந்த சகோதர சகோதரிகளுக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்து பங்குதாரர்களாக ஆக்குவதன் மூலமே குடும்பம் சீர்குலையாமல் சீரழிவுக்குள்ளாகாமல் பாதுகாக்க முடியும். ஒருவரை ஒருவர் தாங்கி நிற்கக்கூடிய வகையில் சொத்தைப் பங்கிடுவதன் மூலமே பொருளாதார சுபீட்சத்தினையும் சந்தோசமான கட்டுக்கோப்பான குடும்ப வாழ்வையும் உருவாக்கிட முடியும். அதன் காரணமாகவே வாரிசுகள் என்போர் யார்? என்ற பட்டியலை இஸ்லாம் தயாரித்துத் தந்துள்ளது.
தந்தை மரணித்துவிட்டால் அக்குடும்பத்தைப் பராமரிக்கும் பொறுப்பு ஆண் பிள்ளையைச்சாரும். ஆண்பிள்ளை இல்லையென்றால் தந்தையின் சகோதரனைச் சாரும். அவர் அக்குடும்பத்திற்கு- பராமரிப்பாளராக- வாரிசுதாரராக ஆக்கப்படுகின்றார். அதனால் தான் தந்தை விட்டுச் செல்லும் சொத்துக்களை பங்கு வைக்கும் போது அச்சொத்தின் மீதிப் பங்கிற்கு இவர் பங்காளியாக ஆக்கப்படுகின்றார். இதன் மூலம் ஆண் துணையில்லாத குடும்பத்திற்கு இவர் மூலம் பாதுகாப்பு அரண் போடப்படுகின்றது.
இச்சிறப்பான சட்டத்தின் வாயிலாகவே பெண் சமுதாயம் பாதுகாக்கப்படுகின்றது. தங்களுடைய ஜீவனோபாயத்தை தாங்களே தேடிக்கொள்வதற்காக தங்கள் வாழ்வை வளமாக்கிக் கொள்வதற்காக தொழில் தேடிச்செல்லும் முஸ்லிம் அல்லாத பெண்களுக்குள்ள நிலை இஸ்லாமியப் பெண்ணுக்குவராது. வாரிசுரிமைச் சட்டத்தின் மூலம் அவள் பாதுகாக்கப்படுகின்றாள்.
முஸ்லிமான ஒருபெண்ணும் முஸ்லிம் அல்லாத ஒரு பெண்ணும் தொழிலுக்குச் செல்வதில் அடிப்படையில் வேற்றுமை உண்டு. முஸ்லிமல்லாத பெண்ணைப் பொறுத்தவரை அவள் அவளது வாழ்வை அமைத்துக் கொள்ள சம்பாதித்தேயாக வேண்டும். அவளைப் பொறுப்பேற்று வளர்ப்பதற்கு வாழ்வை அமைத்துக் கொடுப்பதற்கு எவரும் இல்லை. சொத்தில் ஒரு பங்குமில்லை. ஆகவே அவள் சார்ந்திருக்கும் மதவாதச் சிந்தனையும் சமூகக்கோட்பாடும் அவளுக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ளதால் அவள் பருவ வயதை அடைந்த பின் வீட்டை விட்டு வெளியேறியாக வேண்டும். இஸ்லாமிய பெண்ணுடைய நிலை இதை விட முற்றிலும் மாறுபட்டுள்ளது.
அவளை பொறுத்தவரை அவள் வீட்டிலிருந்து கொண்டே சகல உரிமைகளையும் அனுபவிப்பதற்கு வழிகாட்டப்பட்டிருக்கிறாள். வறுமை மற்றும் தேவை அல்லது மேலதிக வருமானம் கருதி அவள் தொழிலைத் தேடிக்கொள்ள விரும்பினால் அதற்கு தடையேதும் இல்லை. தங்களது மார்க்க கொள்கை ஒழுக்கவியல் மற்றும் கற்பையும் பேணிக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ள முடியுமான சூழல் இருக்குமானால் தொழிலுக்குச் செல்லலாம் என்ற அனுமதி அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
வாரிசுரிமைச் சட்டத்தின் இறுதிவசனத்தில் அல்லாஹ் கூறும் போது "உங்கள் சொத்துக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பயன் தரக்கூடியவர்கள் யார்? என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்" என்று கூறுவதன் விளக்கம் எவ்வளவு அற்புதமானது என்பதனை இங்கே சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் மேலே இலக்கமிட்டு வரிசைப்படுத்திக் காட்டிய வாரிசுரிமைச் சட்டத்தின் நான்காவது சட்டத்தினை மேலும் தெளிவுபடுத்தி இன்னுமொரு வசனமும் அருளப்பட்டது. இச் சட்டத்தில் ஒருவர் விட்டுச் செல்லும் சொத்துக்கு அதற்கு வாரிசுகளான தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள் ஆகியோர் இல்லாமல் சகோதர சகோதரிகள் மட்டும் இருந்தால் அவர்களிடையே எப்படி பங்கீடு செய்வது என்று பின்வருமாறு விளக்கப் பட்டது. (இச்சட்டத்திற்கு கலாலா எனப்படும்).
"நபியே! உம்மிடம் அவர்கள் "கலாலா" பற்றி மார்க்கத் தீர்ப்புக்கோருகின்றனர். ''கலாலா'' குறித்து அல்லாஹ் உங்க ளுக்குத் தீர்ப்பளிப்பான் எனக் கூறுவீராக.
பிள்ளை இல்லாத ஒருவன் தனக்கு ஒரு சகோதரி இருக்கும் நிலையில் மரணித்தால் அவன் விட்டுச் சென்றவற்றில் அரைவாசி அவளுக்குண்டு. (ஒரு பெண் மரணித்து) அவளுக்குப் பிள்ளை இல்லாமல் இருந்தால் (சகோதரனான) அவன் அவளுக்கு வாரிசாவான்.
அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவன் விட்டுச் சென்றதில் மூன்றில் இருபங்கு (2/3) அவ்விருவருக்குமுண்டு. அவர்கள் ஆண்கள் பெண்கள் என் சகோதரர்களாக இருப்பின் அவர்களில் இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக் குண்டு;. நீங்கள் வழிதவறாது இருப்பதற்காக அல்லாஹ் இவ்வாறுஉங்களுக்குத் தெளிவுப்படுத்துகின்றான். அல்லாஹ் யாவற்றையும் நன்கறிந்தவனாவான். (அல்குர்ஆன் 4:176)
வாரிசுரிமை தொடர்பாக இறுதியாக இறங்கிய வசனம் இது என பராஉ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: புகாரி 4605)
வாரிசுரிமைச் சட்டத்தின் அனைத்து விளக்கங்களையும் அல்லாஹ் விளக்கிக் கூறி விட்டு இச் சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்றவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். நிரந்தரமான நரகில் இருப்பார்கள் என எச்சரிக்கின்றான்.
"இவை அல்லாஹ் விதித்த வரம்புகள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் வழிப்பட்டு நடக்கிறாரோ அவரை சுவர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றியாகும்.
யார் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுகின்றானோ அவனை நரகத்தில் அவன் நுழைவிப்பான். அவன் அதில் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனையுண்டு (அல்குர்ஆன் 4:13-14)
சொத்துக்களை ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் அல்லது பெண்பிள்ளைகளுக்கு மட்டும் கொடுக்கமுடியாது. சகல பிள்ளைகளுக்கும் வாரிசுதாரர்களுக்கும் உரிய முறையில் பங்குவைத்தாக வேண்டும். மாறு செய்பவர்கள் குற்றத்திற்குரியவர்களாகிவிடுவர்.
இறந்தவர் விட்டுச் செல்லும் சொத்தை பங்கு வைக்கமுன் அவருடைய கடனையும் மரணசாசனத்தையும் முதலில் நிறை வேற்றவேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாகும். பெற்றோர் தங்களது பிள்ளைகள் மீது அன்புகாட்டுவதை விட அல்லாஹ் தன்படைப்புக்கள் மீது அதிக அன்புள்ளவனாக உள்ளான் என்ப தை இச்சட்டங்கள் காட்டவில்லையா?
பெண்களுக்கு சொத்தில் பங்கு கொடுத்த இஸ்லாம் ஆண்களை விடக் குறைவாக கொடுத்தது ஏன்? என்ற சந்தேகம் எழுவது இயற்கையே அதனை நிவர்த்தி செய்வது நல்லது என நிகைக்கிறேன்.
ஆண் சம்பாதித்து தன்னுடைய தாய் தந்தை சகோதர சகோதரிகள் மற்றும் மனைவி என்ற வட்டத்திற்குள் உள்ள அக்குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ளவனாக இருக்கிறான். அவனுடைய உழைப்பின் கீழேயே பெண் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறாள். அப்பெண்ணை மணம்முடித்து வைக்க வேண்டிய பொறுப்பும் செலவினங்களும் அவனையே சாரும். கணவனால் தலாக் சொல்லப்பட்டால் மீண்டும் அவளை பராமரிக்கும் பொறுப்பும் மணமுடித்;து வைக்கும் கடமையும் அவனை வந்தடைகிறது.
இவன் ஒரு பெண்ணை மணக்கும் போது அவளுக்குரிய மஹரை கொடுத்து வாழ்வதற்கான வசதிகளையும் செய்து கொடுத்து தன்னுடைய பிள்ளைகள் மற்றும் குடும்பத்தையும் பராமரிக்கக் கூடியவனாக இருக்கிறான்.மனைவி விவாகரத்தச் செய்யப்பட்டால் அப்போதும் அவளுக்கு ஏதேனும் வசதிகள் அல்லது உதவிகள் செய்திடவேண்டும்.
சொத்துப் பங்கீட்டின் போது தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் போன்றோரிடமிருந்து இவளுக்குரிய பங்குகளை பெற்றுக் கொள்ளும் அதே வேளை மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக இருக்கும் நிலைகளிலும் அவளுக்குரிய பங்குகள் வந்து சேர்கின்றன. சொத்தில் தனக்குரிய பங்குகளை பெறும் அதே வேளை கணவராக வருபவரிடத்திலிருந்தும் மஹராகவும் ஒரு பகுதியை பெற்றுக் கொள்ளும் உரிமை படைத்தவளாக திகழ்கிறாள்.
வெளிப்படையாக பாரக்கும் போது பெண் குறைவாகவும் ஆண் அதிகமாகவும் பெறுவதாகவே தோன்றும். இஸ்லாம் கூறும் காரணங்களை கவனித்தால் பெண் அனைத்து உரிமைகளையும் அதிகமாக அனுபவிப்பதை காணலாம்.
பொருளீட்டுவதற்கான உரிமை ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டடுள்ளது போல் பெண்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. மனைவியுடைய சம்பாத்தியத்தை அவளுடைய அனுமதியில்லாமல் கணவன் தொடமுடியாது. அவளாக கணவனுக்குக் கொடுத்தால் அது தர்மம் செய்த நன்மை சாரும் என இஸ்லாம் கூறுகிறது.
பெண்களே! நீங்கள் தர்மம் செய்யுங்கள். உங்களின் நகைகளாக இருப்பினும் சரியே! தர்மம் செய்யுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதைக் கேட்ட நான் (என் கணவரான) அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்களிடம் வந்தேன். நீங்கள் வறுமையில் உள்ளீர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தர்மம் செய்யும்படி எங்களுக்கு ஏவினார்கள். எனவே, அவர்களிடம் நீங்கள் சென்று (என் தர்மத்தை நீங்கள்) பெறலாமா? எனக் கேட்டு வாருங்கள். அது சரியாக இருந்தால் என்னிடமிருந்து அதைக் கொடுப்பது போதுமாகும். இல்லையெனில் மற்றவருக்கு நான் அதைக் கொடுப்பேன் என்று கூறினேன். அப்போது அவர் நீ போய் கேட்டுவா என்று கூறினார்.
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டு வாசலில் அன்ஸாரிப் பெண் ஒருவர் நினறு கொண்டிருந்தார். என் தேவையை போலவே அவர் தேவையும் இருந்தது. அப்போது எங்களிடம் பிலால் ரளியல்லாஹு அன்ஹு வந்தார்கள். நாங்கள் அவரிடம் நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இரு பெண்கள் வந்து தங்களிடம் உள்ள தர்மப் பொருளை தங்களின் கணவர்களுக்கோ, தங்கள் மடியில் வளரும் அனாதைகளுக்கோ கொடுக்க விரும்புவது கூடுமா? என்று உங்களிடம் கேட்பதற்காக வாசலில் நிற்கின்றோம் என்ற செய்தியை கூறுங்கள். நாங்கள் யார் என்ற விபரத்தை அவர்களிடம் கூறாதீர்கள் என்று கூறினோம்.
பிலால் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இது பற்றிக் கேட்டார்கள். அப்போது அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்விருவரும் யார்? என்று கேட்டார்கள். "ஒருவர் அன்ஸாரிப் பெண் மற்றவர் ஸைனப் என்று பிலால் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். எந்த ஸைனப் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்க, அப்துல்லாஹ்வின் மனைவி என பிலால் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். அப்போது நபியவர்கள், "உறவினரை ஆதரித்தல்,தர்மம் செய்தல் என இரண்டு வகைக் கூலிகள் அந்த இரண்டு பெண்களுக்கும் உண்டு" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸைனப் அத்தகபீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-1466, முஸ்லிம்-1000)
நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கி வளர்த்து விட்ட பெண் சமூகத்தின் சுதந்திரத்தை பாருங்கள். சட்டரீயாக சொத்துப் பங்கீட்டின் ஒழுங்குகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்ட பிறகும் அவள் சம்பாதிக்கும் உழைப்பில் இருந்து கணவனுக்கு கொடுக்க வேணடிய கட்டாயம் இல்லை. அவளாக விரும்பி கொடுத்தால் தர்மத்துடைய நன்மை கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.
பெண்களுக்கான உரிமைகளை வழங்கி அவர்களை வாழ வைத்த மார்க்கம் எது என்பதை இப்போதாவது உங்கள் மனசாட்சி பிரகாரம் கூறுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

மண்ணறை வேதனை 001

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!