சனி, மார்ச் 12, 2016

ஸாலிஹீன்களாக வாழ முயல்வோம்

               
ஸாலிஹான நல்லடியாராக வாழ்வதென்பது அல்லாஹ் வழங்கும் அற்புதமான வரமாகும்.மகத்தான கொடையாகும்.
ஓர் ஆச்சர்யமான உண்மை என்னவென்றால் எல்லா வகையிலும் அல்லாஹ்வால் மேன்மை படுத்தப்பட்ட மேன்மக்களான நபிமார்களும் கூட ஸாலிஹீன்களாக வாழ்வதற்கு விரும்பியிருக்கின்றார்கள்.
அந்தப் பாக்கியம் கிடைக்கப் பெற அல்லாஹ்விடம் பிரார்த்தித்தும் இருக்கின்றார்கள்.
அந்த அளவிற்கு அற்புதங்களும், அருள்வளங்களும் நிறைந்த ஓர் உன்னதமான வாழ்வு தான் ஸாலிஹான நல்லடியாராக வாழ்வது.
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்..
رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ()
என் இறைவனே! எனக்கு நீ நுண்ணறிவுத்திறனை வழங்குவாயாக! மேலும், என்னை நீ ஸாலிஹான உத்தமர்களோடு சேர்த்து வைப்பாயாக!” ( அல்குர்ஆன்:26:83 )
யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள்..
رَبِّ قَدْ آتَيْتَنِي مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِي مِنْ تَأْوِيلِ الْأَحَادِيثِ فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنْتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ ()
என் இறைவனே! நீ எனக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்கினாய். மேலும், விஷயங்களின் உட்கருத்துக்களைப் புரிந்து கொள்ளும் முறையைக் கற்றுத்தந்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே! நீ தான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் இஸ்லாத்தில் இருக்கும் நிலையிலேயே என்னை மரணிக்கச்செய்வாயாக! மேலும், என்னை ஸாலிஹான ஒழுக்க சீலர்களோடு சேர்த்து வைப்பாயாக!” (அல்குர்ஆன்: 12: 101)
ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கேட்டார்கள்...
وَقَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ ()
என் இறைவா! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ புரிந்த உபகாரத்திற்கு நான் நன்றி செலுத்திக் கொண்டிருப்பதற்காகவும், நீ திருப்திப்படுகின்ற நற்செயலை செய்து வருவதற்காகவும் என்னை நீ கட்டுப்படுத்தி வைப்பாயாக! மேலும், உன் அருளால் என்னை உன் நல்லடியார்களில் சேர்த்து வைப்பாயாக! (அல்குர்ஆன்: 27: 19)
சில மேன்மக்களின் பேராவல் குறித்த அல்லாஹ்வின் அழகிய விமர்சனம்.
يَقُولُونَ رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ () وَمَا لَنَا لَا نُؤْمِنُ بِاللَّهِ وَمَا جَاءَنَا مِنَ الْحَقِّ وَنَطْمَعُ أَنْ يُدْخِلَنَا رَبُّنَا مَعَ الْقَوْمِ الصَّالِحِينَ () فَأَثَابَهُمُ اللَّهُ بِمَا قَالُوا جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ جَزَاءُ الْمُحْسِنِينَ ()
எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டு விட்டோம். எனவே, சாட்சி வழங்குபவர்களில் எங்கள் பெயர்களையும் எழுதி வைப்பாயாக! மேலும், அவர்கள் கூறுவார்கள்: எங்களுடைய இறைவன் எங்களை ஸாலிஹானவர்களோடு இணைத்தருள வேண்டுமென்று நாங்கள் பேராவல் கொண்டிருக்கின்றோம், அல்லாஹ்வின் மீதும், எங்களிடம் வந்த சத்தியத்தின் மீதும் எவ்வாறு நாங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்போம்?”..
அவர்கள் இவ்வாறு கூறியதால் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனத் தோட்டங்களை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினான். அதில் அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள். இதுவே, நன்மை புரிவோருக்கான கூலியாகும். (அல்மாயிதா: 84,85)
ஸாலிஹான அமல் என்றால் என்ன?
ஸாலிஹான அமல் எவைகள் என்பதை அறிவிற் சிறந்த அறிஞர் பெருமக்கள் ஐந்து வகைகளாகப் பிரிக்கின்றனர்.
1.
ஐந்து நேரத்தொழுகையாகும். இது தான் ஸாலிஹான அமல்களில் முதன்மையானதாகும். இவை அல்லாத வேறெந்த அமலை ஓர் அடியான் செய்தாலும் அவைகள் அல்லாஹ்விடத்தில் ஒப்புக்கொள்ளப்படாது. இஸ்லாத்தில் ஷஹாதாவிற்குப் பின்னர் உயர் மதிப்பிற்குரிய அமல் இது தான்.
2.
இஸ்லாத்தின் எஞ்சியிருக்கிற அடிப்படைக்கடமைகளாகும். ஜகாத், நோன்பு, மற்றும் ஹஜ் போன்ற வணக்கங்களாகும்.
3.
வாஜிபான கடமைகள் மற்றும் அமல்களாகும்; இவைகளை ஒருவர் செய்யாமல் விட்டு விட்டால் அவர் பெரும்பாவம் செய்தவராக கருதப்படுவார் என இஸ்லாம் வர்ணித்திருக்கிற அமல்களாகும். உதாரணமாக, பெற்றோர் நலன் பேணுவது, உறவு முறையைப் பேணுவது, நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது, மர்ம உறுப்புக்களை விபச்சாரத்தில் இருந்து பாதுகாப்பது, போன்றவையாகும்.

4.
வலியுறுத்தப்பட்டுள்ள வணக்கங்கள் ஆகும். இறையடியார்க்கடமைகளை சரிவர நிறைவேற்றுவது, பார்வையைப் பேணுவது, போன்ற வணக்கங்களாகும்.

5.
முஸ்தஹப்பான அமல்கள் ஆகும். உதாரணமாக, தர்மம் செய்வது, நஃபிலான நோன்புகள், நஃபிலான தொழுகைகள், இரவுத் தொழுகைகள், இறைத் தியானம் திக்ர் போன்றவற்றில் ஈடுபடுவது இவை சில போது ராதிபா எனும் தொடர்படியாகச் செய்யும் வணக்கங்களையும், முஅக்கதா எனும் கண்டிப்பாக செய்யும் வணக்கங்களையும், பேணுதலோடு செய்யப்படும் வணக்கங்களையும் குறிக்கும்.
மேற்கூறிய இவ்வைந்து வகை நல்லறங்களையும் ஸாலிஹான அமல்களாக நல்லறங்களாக மேதகு அறிஞர் பெருமக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனவே, இந்த அமல்களோடு அல்லாஹ்வின் ஏவல், விலக்கல் விஷயங்களையும் கவனத்தில் கொண்டு வாழவேண்டும்.

ஏனெனில், அல்லாஹ் நல்லடியார்களை ஸாலிஹீன்களை பல்வேறு சிறப்புப் பண்புகளாலும், சிறப்புப் பெயர்களாலும் அல்குர்ஆனில் அடையாளப்படுத்துகின்றான்.
ஸாலிஹீன்களை முத்தகீன் பயபக்தியாளர்கள் என்றும், (பார்க்க: அல்பகரா: 2 5 ), ஸாபிரீன் பொறுமையாளர்கள் என்றும், (பார்க்க: அல்பகரா: 2: 155,157), அல்பாயிவூன அன்ஃபுஸஹும் லில்லாஹி அல்லாஹ்விற்காக தங்களை அர்ப்பணம் செய்து கொண்டவர்கள் என்றும், (பார்க்க: அல்பகரா: 207), அல் முஸாரிவூன இலா மஃக்ஃபிதல்லாஹி அல்லாஹ்வின் மன்னிப்பின் பக்கம் விரைபவர்கள் என்றும், (பார்க்க: ஆலு இம்ரான்: 133), அர்ரப்பானிய்யூன் அறிஞர்கள், எதிரிகளைக் கண்டு நிலைகுலையாதவர்கள் என்றும், (பார்க்க: ஆலுஇம்ரான்: 146), அன்ஸாருல்லாஹ் அல்லாஹ்வின் உதவியாளர்கள் என்றும், (பார்க்க: முஜாதலா: 22)
ஹிஸ்புல்லாஹ் அல்லாஹ்வின் பட்டாளத்தினர் என்றும், (பார்க்க: முஜாதலா: 22), முதவக்கிலூன அலல்லாஹ் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைப்பவர்கள் என்றும், (பார்க்க: ஆலுஇம்ரான்: 173, 175), அல்முஃமினூன லம் யல்பிஸூ ஈமானுஹும் பிளுல்ம் இறைவனுக்கு இணை கற்பிக்காத நம்பிக்கையாளர்கள் என்றும், (பார்க்க: அல்அன்ஆம்: 82)
அல் முததஹ்ஹரூன் தூய பரிசுத்தவான்கள் என்றும், (பார்க்க: அத்தவ்பா: 108), அல் உகலா அறிவு ஞானம் மிகுந்தவர்கள் என்றும், (பார்க்க: அர்ரஃது: 19 -22), அஸ்ஸாபித்தூன அலல் ஈமான் ஈமானின் மீது நிலைத்திருப்பவர்கள் என்றும், (பார்க்க: தாஹா: 72,73), அல் அஃக்ஸாயிய்யூன அல்ஃகுபராவு சிறப்பு வாய்ந்த தகுதியாளர்கள் என்றும், (பார்க்க: அல் அன்பியா: 7, அத்தவ்பா: 122)
அல் முஅழ்ழிமூன ஹுருமாத்தில்லாஹ் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை கண்ணியப்படுத்துபவர்கள் என்றும், (பார்க்க: அல்ஹஜ்: 30,32,), அல் முஃக்பிதூன் அல்லாஹ்விற்கு வழிபடுபவர்கள், பணிந்து வாழ்பவர்கள், உள்ளச்சம் நிறைந்தவர்கள் என்றும், (பார்க்க: அல்ஹஜ்: 34,35), அல்முஹாஜிரூன் அல்லாஹ்விற்காக நாட்டை விட்டும் வெளியேறுபவர்கள் என்றும், (பார்க்க: அல்ஹஷ்ர்: 8), என்றும் வர்ணிக்கின்றான்.
ஸாலிஹான அமல்களுக்குரிய அந்தஸ்தும்ஸ ஸாலிஹீன்களின் அந்தஸ்தும்
1.
அல்லாஹ்வை சந்திக்க விரும்புபவர்களிடம் இருக்க வேண்டிய பண்பு ஸாலிஹான அமலாகும்..
فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا ()
எவர் தன் இறைவனின் சந்திப்பை எதிர்பார்த்தவராய் இருக்கின்றாரோ அவர் நற்செயல்கள் புரியட்டும்; அடிபணிவதில் தன் இறைவனுடன் யாரையும் இணையாக்காதிருக்கட்டும்!” (அல்குர்ஆன்: 18:110)
2.
வெற்றியின் வழியில் செல்ல விரும்புவோரிடம் இருக்க வேண்டிய பண்பு ஸாலிஹான அமலாகும்..
مَنْ كَفَرَ فَعَلَيْهِ كُفْرُهُ وَمَنْ عَمِلَ صَالِحًا فَلِأَنْفُسِهِمْ يَمْهَدُونَ ()
எவன் நிராகரித்தானோ அவனுடைய நிராகரிப்பு அவனுக்குக் கேடாக முடியும். மேலும், எவர்கள் நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்கள் தங்களுக்கான வெற்றியின் வழியைத் தயார் படுத்துகின்றார்கள். ( அல்குர்ஆன்: 30:44 )
3.
ஈருலக வாழ்வும் இன்பமயமாய் அமைய விரும்புவோரிடம் இருக்க வேண்டிய பண்பு ஸாலிஹான அமலாகும்..
مَنْ عَمِلَ صَالِحًا مِنْ ذَكَرٍ أَوْ أُنْثَى وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ()
ஆணாயினும், பெண்ணாயினும் எவர் இறைநம்பிக்கை கொண்டவராய் இருக்கும் நிலையில் நற்செயல் புரிகின்றாரோ அவரை (இவ்வுலகில்) நாம் தூய (நிம்மதியான) வாழ்வு வாழச்செய்வோம். (மறுமையிலும்) அத்தகையோருக்கு அவர்களின் உன்னதமான செயல்களுக்கு ஏற்ப நாம் கூலி வழங்குவோம். (அல்குர்ஆன்: 16:97)
4. தவ்பா ஏற்றுக் கொள்ளப்பட விருப்ம்புவோரிடம் இருக்க வேண்டிய பண்பு ஸாலிஹான அமலாகும்..
إِلَّا مَنْ تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا () وَمَنْ تَابَ وَعَمِلَ صَالِحًا فَإِنَّهُ يَتُوبُ إِلَى اللَّهِ مَتَابًا ()
எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும், நம்பிக்கை கொண்டு நற்செயலும் புரியத் தொடங்கி விட்டிருக்கின்றாரோ அவரைத் தவிர! இத்தகையோரின் தீமைகளை அல்லாஹ் நன்மைகளாக மாற்றிவிடுவான். மேலும், அவன் மன்னிப்பாளனும், பெரும் கிருபையாளனும் ஆவான்!
எவர் பாவமன்னிப்புக் கோரி, நற்செயலை மேற்கொள்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் எவ்வாறு திரும்பி வரவேண்டுமோ அவ்வாறு திரும்பி வந்தவராவார்.” (அல்குர்ஆன்: 25: 70, 71)

5.
நல்லோரையும், தீயோரையும் பிரித்துக்காட்டும் பண்பு ஸாலிஹான அமலாகும்..
أَمْ نَجْعَلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَالْمُفْسِدِينَ فِي الْأَرْضِ أَمْ نَجْعَلُ الْمُتَّقِينَ كَالْفُجَّارِ ()
நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும், பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம் சமமாக்கி விடுவோமா, என்ன?” இறையச்சமுள்ளோரை ஒழுக்கக் கேடர்களைப் போல் ஆக்கி விடுவோமா, என்ன?” (அல்குர்ஆன்: 38:28)
6.
சுவன வாழ்வை விரும்புவோரிடம் இருக்க வேண்டிய பண்பு ஸாலிஹான அமலாகும்..
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا () خَالِدِينَ فِيهَا لَا يَبْغُونَ عَنْهَا حِوَلًا ()
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்தார்களோ அவர்களை உபசரிப்பதற்காக ஃபிர்தௌவ்ஸ்எனும் சுவனங்கள் இருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அவற்றை விட்டு வெளியேறி வேறு எங்கேனும் சென்றிட அவர்கள் சற்றும் விரும்ப மாட்டார்கள்”. (அல்குர்ஆன்:18: 107,108)
7.
உலக மக்களின் மனதில் இடம் பிடிக்க விரும்புவோரிடம் இருக்க வேண்டிய பண்பு ஸாலிஹான அமலாகும்..
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمَنُ وُدًّا ()
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்களோ அவர்களுக்காக விரைவில் கருணை மிக்க இறைவன் (மக்களின் உள்ளங்களில்) அன்பைத் தோற்றுவிப்பான்.” (அல்குர்ஆன்: 19: 96)
8.
நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட விரும்புவோரிடம் இருக்க வேண்டிய பண்பு ஸாலிஹான அமலாகும்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: எவராவது உலகில் வாழும் காலத்தில் தன் சக முஸ்லிம் ஒருவருக்கு அநீதி இழைத்திருப்பாரேயானால், அவர் எந்த தீனாரும், எந்த திர்ஹமும் எந்த வித பயன்பாட்டையும் தந்திடாத மறுமை நாளைக்கு முன் வாழும் காலத்திலேயே, இந்த உலகத்திலேயே அவர் அதற்கான பரிகாரத்தைத் தேடிக் கொள்ளட்டும்!
அப்படி எவராவது பரிகாரம் தேடிக்கொள்ளாமல், நாளை அல்லாஹ்வின் சந்நிதானத்திற்கு கொண்டு வரப்பட்டால் அநீதம் இழைக்கப்பட்டவருக்கு பரிகாரமாக அநீதி இழைத்தவரிடத்திலிருந்து அவர் இழைத்த அநீதத்தின் அளவுக்கு நற்செயல்களை எடுத்து அல்லாஹ் கொடுத்து விடுவான்.
அப்படி, நற்செயல்கள் ஏதும் அவரிடத்தில் இல்லையெனில், அநீதம் இழைக்கப்பட்டவரிடமிருந்து பாவத்தை எடுத்து அநீதி இழைத்தவருக்கு கொடுத்து விடுவான். இதன் காரணமாக, அவர் நரகத்திற்கு தூக்கி வீசப்படுவார்.” (நூல்: புகாரி)
எனவே, நற்செயல்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்தும், நரகிலிருந்தும் ஓர் அடியானைப் பாதுகாக்கும்.
9.
அபாயகரமான சோதனையிலிருந்து விடுவிக்கப்பட விரும்புவோரிடம் இருக்க வேண்டிய பண்பு ஸாலிஹான அமலாகும்.. " .

இன்னும் ஏராளமான தன்மைகளுக்கும், சிறப்புக்களுக்கும் சொந்தமானவர்கள் தாம் ஸாலிஹீன்கள் எனும் உயரிய மேன்மக்கள் விரிவை அஞ்சி சுருக்கித் தந்திருக்கின்றோம்.
ஸாலிஹீன்களுக்கு அல்லாஹ் வழங்கும் சில அந்தஸ்துக்கள்..
1.
ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான தொழுகையாளிகள் கூறும் ஸலாமுக்கு சொந்தமாகும் பேற்றைப் பெற்றவர்கள் ஸாலிஹீன்கள்..
உலகில் வாழ்ந்து சென்ற நபிமார்கள் முதற்கொண்டு அல்லாஹ்வின் அனைத்து நல்லடியார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிற நல்லடியார்கள், யுகமுடிவு நாள் வரை வாழ இருக்கிற அத்துனை நல்லடியார்கள் தினந்தோரும் தொழுகையில் கூறும் ஸலாத்திற்கு ஏக போக உரிமையாளராய் ஸாலிஹீன்கள் திகழ்கின்றார்கள்.
ஆம்! தினந்தோரும் தொழுகையில் அத்தஹிய்யாத்திலே சொல்லப்படுகின்ற ஸலாத்திற்கு சொந்தக்காரராய் ஆகிவிடுகின்றார்கள்..
கடமையான தொழுகையை மட்டும் தொழுகிற ஓர் தொழுகையாளியின் மூலமாக 9 முறையும், கடமையான தொழுகையோடு முன் பின் சுன்னத், நஃபில் மற்றும் வித்ர் ஆகிய தொழுகையை தொழுபவரின் மூலமாக ஒரு நாளைக்கு 26 முறையும், ஸலாமுக்கு உரியவர்களாய் ஆகிவிடுகின்றனர்.
இஷ்ராக், ளுஹா, அவ்வாபீன், தஹஜ்ஜத் போன்ற தொழுகைகள் தொழும் தொழுகையாளிகளின் ஸலாமைக் கணக்கிட்டால் இன்னும் அதிகமாகும்.
ஸலாம் என்பது இலகுவாகக் கிடைக்கிற ஒன்றல்ல. நபிமார்கள் அனைவருக்கும் அல்லாஹ் மிகப்பெரிய தியாகத்திற்கும், இழப்புக்கும் பின்னரே கொடுத்தான்.
அஸ்ஸாஃப்ஃபாத் அத்தியாயத்தின் (75 முதல் 135 வரை) பல்வேறு வசனங்களில் அல்லாஹ் இதைத் தெளிவு படுத்துகின்றான்.
ஈருலக ஸர்தார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் கூட அல்லாஹ் விண்ணுலகப் பயணத்தின் போது தான் السلام عليك أيها النبي ورحمة الله وبركاته என்று ஸலாம் உரைத்தான். அந்த ஸலாமும் கூட நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல்வேறு இழப்புக்கள், அவமானங்கள், தியாகங்கள் புரிந்த பின்னர் தான் வழங்கினான்.
ஆனால், ஸாலிஹீன்கள் السلام علينا وعلى عباد الله الصالحين என்று மிக எளிதாக இந்தப் பேற்றை அடைந்து கொள்கின்றார்கள்.
2.
செய்ய இயலாமல் போன அமலுக்கும் நன்மை..

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நற்செயல்களைச் செய்து வாழ்ந்த ஓர் நல் அடியார் பிரயாணத்தின் போதோ, உடல் நலக்குறைவின் போதொ, வேறு வேலைகளின் போதோ இருந்த காரணத்தால் அவரால் இபாதத்கள் செய்ய முடியாமல் போகும் போது, அவர் உடல் ஆரோக்கியத்தோடும், ஊரில் இருக்கும் போதும் அவர் எப்படி அமல் செய்வாரோ அது போன்ற அமலின் கூலியை அவருக்கு அல்லாஹ் வழங்கி விடுகின்றான்”.


3.
சுவனத்தின் அந்தஸ்து உயர்த்தப்படுதல்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியார் சுவனத்தில் நுழைவார்; அங்கு அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அந்தஸ்தைக் கண்டு வியப்புற்று இறைவா! இந்த அந்தஸ்துக்குரிய எந்த அமல்களும் நான் செய்யவில்லையே?” என முறியிடுவார்.
அப்போது, அல்லாஹ் உனக்காக, உம் சந்ததிகள் பிள்ளைகள் செய்த துஆவின் பரக்கத்தாலும், அவர்கள் உன் பாவத்திற்காகக் கேட்ட இஸ்திஃக்ஃபாருக்காகவும் உமக்கு வழங்கப்பட்டுள்ளதுஎன்பானாம்.
4.
காணும் கனவும் கூட இபாதத்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஓர் நல்லடியார் காணும் கனவென்பது நபித்துவத்தின் நாற்பத்தி ஆறு பகுதிகள் ஒன்றாகும்.
5.
ஸாலிஹீன்களின் இதயம் இறைவனின் சிம்மாசனம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக, அல்லாஹ்விற்கென பூமியில் உள்ளவர்களிடத்தில் தங்குமிடம் உள்ளது. உங்கள் இறைவனின் தங்கும் இடம் ஸாலிஹீன்களின் இதயமாகும் அல்லாஹ் அந்த இதயங்களில் இடம் பெற்றிருக்கும் சாந்தகுணம் மற்றும் இரக்க குணம் ஆகியவற்றால் அவர்களை நேசிக்கின்றான்.
ஆக, ஸாலிஹீன்களாக வாழும் போது அல்லாஹ் ஏராளமான வெகுமதிகளையும், அந்தஸ்துகளையும் வழங்கி கௌரவிக்கின்றான்.
மேலும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவார்களோ அவர்களை நாம் திண்ணமாக, ஸாலிஹீன்களோடு சேர்த்து விடுவோம்.
எனவே, நாம் ஸாலிஹீன்களாக வாழ ஆசைப்படுவோம்! அல்லாஹ் நம் அனைவர்களையும் ஸாலிஹீன்களாக ஆக்குவானாக! ஆமீன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக