கடன் சிக்கல்... அவிழ்க்க 5 வழிகள்!

கடன்... எவ்வளவு கஷ்டப்பட்டாலும் இதை மட்டும் வாங்கவே கூடாது என்றுதான் நாம் அனைவரும் நினைக்கிறோம். ஆனால், கடனே இல்லாதவர்களை கண்டுபிடிப்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாகவே இருக்கிறது இந்த காலத்தில். ஆபீஸில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் கைமாத்தாக வாங்கும் கடனில் தொடங்கி, அடிப்படைத் தேவைகளான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கக் கடன், மனை மற்றும் சொந்த வீடு வாங்கக் கடன், வாகனக் கடன் என இன்றைக்கு கடன் வலையில் சிக்கியவர்கள் பலர்.

கடனை வாங்கும்போது அடுத்த சில மாதங்களில் எப்படியாவது கட்டிவிடலாம் என்று நினைத்துத்தான் வாங்குகிறோம்.

பிற்பாடு அதிலிருந்து வெளியே வரமுடியாத அளவுக்கு சிக்கலில் சிக்கித் திண்டாடிப் போகிறோம்.

மோகன், சென்னையில் இருக்கும் ஒரு பெரிய நிறுவனத்தின் தலைமைக் கணக்காளர். கைநிறைய சம்பாதிக்கிறார். ஆனால், மாதக் கடைசியில் அவரிடம் பைசா மிஞ்சியதில்லை. அவரிடம் இருக்கும் கிரெடிட் கார்டுதான் மாசக் கடைசியில் அவருக்குத் தேவையான பணத்தைத் தந்துவருகிறது.

 எதிர்காலத்தில் நல்ல லாபத்தை சம்பாதித்துத் தரும் என்று ஆசை ஆசையாய் வாங்கிய வீடுதான் அவரைக் கடன் பிடியில் சிக்க வைத்தது.

வீடு வாங்குவதற்குத் தேவையான டவுன் பேமண்ட்டைக்கூட பர்சனல் லோன் வாங்கிதான் கட்டினார் மனிதர். அதோடு விட்டாரா, வீட்டின் இன்டீரியர் டெக்கரேஷன்களுக்குக்கூட கிரெடிட் கார்டை சுரண்டிச் செலவு செய்தார்.

இப்படி வாங்கிய கடன்களில் இருந்து வெளியே வர அவரும் எவ்வளவோ முயற்சிகளைச் செய்துவிட்டார். ஆனால், கடனிலிருந்து அவருக்கு விடுதலைதான் கிடைத்தபாடில்லை.

இவரைப்போல லகரங்களில் சம்பளம் வாங்குபவர்களே சொத்து வாங்கவும், வெளிநாட்டு உல்லாச சுற்றுலா செல்லவும், கார் வாங்கவும் என பல கடன்களை இஎம்ஐ-ல் வாங்கி, அசலையும் வட்டியும் எப்படிக் கட்டி முடிப்பது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

உயர் வருவாய் உள்ளவர்களின் பிரச்னை இப்படியென்றால், குறைவான மாத வருமானம் உள்ளவர்களும் சொந்தத் தொழில் செய்பவர்களும் அடிப்படைத் தேவை களுக்காக சில பல லட்சங்களைக் கடன் வாங்கி, பிற்பாடு அதைக் கட்ட முடியாமல் தவிக்கிறார்கள்.

எங்கே தொடங்குகிறது கடன்?

நம் வாழ்க்கையில் கடன் என்கிற சமாச்சாரம் எங்கே தொடங்குகிறது என்பதை அறிவது முக்கியமான விஷயம். அத்தியா வசியத்துக்கும், அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இயங்குவதுதான் கடன் என்கிற பிரச்னையின் துவக்கப்புள்ளி என்கிறார்கள் நிதித் துறை நிபுணர்கள்.

உயர் பதவியிலிருக்கும் நீங்கள் அலுவலகம் சென்றுவர ஒரு கார் வாங்குவது அவசியம். இதற்கு ஆரம்ப விலையில் உள்ள ஒரு கார் போதும். ஆனால், உங்கள் வருமான எல்லையைத் தாண்டி சொகுசு கார் வாங்குவது அநாவசியம்.

நம்மூரில் இருக்கும் டாப் கல்வி நிறுவனத்தில் உங்கள் பிள்ளைகள் மேற்படிப்புப் படிப்பதற்காக அவசியம் கடன் வாங்கலாம்.

ஆனால், வாங்கும் கடனை எப்படி திரும்பச் செலுத்தப் போகிறோம், படிக்கிற படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்பதை எல்லாம் யோசித்துப் பார்க்காமல் எக்கசக்கமாக கல்விக் கடன் வாங்கி வெளிநாட்டுக் கல்லூரியில் படிக்க வைப்பது என்பது அநாவசியம்.

இதற்காக, கடன் வாங்குவதே தவறு என்று சொல்ல வரவில்லை. கடன் மூலம் நாம் வாங்கும் சொத்தின் மதிப்பு பல மடங்காக பெருகி வளரும் என்கிறபட்சத்தில் வீட்டுக் கடன் வாங்குவது தவறே இல்லை.

இதனால்தான் முதலில் வாங்கும் வீட்டுக் கடனுக்கு அரசாங்கமே வரிச் சலுகை தருகிறது. ஒரு வீடு வாங்கியபின், இரண்டாவது, மூன்றாவது வீடுகளை வீட்டுக் கடன் மூலம் வாங்குவது நிச்சயம் தவறு.

பஸ்ஸில் ஏறி ஆபீஸுக்குப் போய் வரமுடிய வில்லை. அலுவலகத்தில் பெட்ரோல் செலவுக்கு பணம் தருகிறார்கள். எனவே, வங்கியில் கடன் வாங்கி, அதை அடுத்த சில வருடங்களில் பெரிய கஷ்டம் ஏதும் இல்லாமல் திரும்பக் கட்ட முடியும் என்கிற நம்பிக்கையும் தெளிவான திட்டமும் இருக்கிறபோது, கார் கடனையும் வாங்குவது தவறே இல்லை.

தெளிவான எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கப்படும் கடன்கள் அனைத்தும் பிற்பாடு நம் கழுத்தை நெரிக்கத்தான் செய்யும் என்று நமக்கு நன்கு தெரிந்தாலும், கடன்பொறிகளான கிரெடிட் கார்டு, பர்சனல் லோன், தண்டல் போன்ற கடன்களில் சிக்கி, திணறத்தான் செய்கிறோம் நாம். இந்தக் கடன் சிக்கலிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகள் என்ன என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.

1. இஎம்ஐ-ஆக மாற்றிக்கொள்ளுங்கள்!

கிரெடிட் கார்டு கடன்:

இன்றையத் தேதியில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மிடில் கிளாஸ் மனிதர்களில் பலரும் கிரெடிட் கார்டு கடனில் மாட்டித் தவிக்கிறார்கள்.ரூ.25,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு தற்போதெல்லாம் கிரெடிட் கார்டு கடனைத் தேடி வந்துகொடுப்பதால், எல்லோரும் இந்தக் கடனை வாங்கிவிடுகின்றனர்.

தவிர, கிரெடிட் கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதும் இன்றைக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் திடீர் ஆசையை நிறைவேற்ற கிரெடிட் கார்டை தேய்ப்பதுதான் மிடில் கிளாஸ்வாசிகளின் ஒரே வழியாக இருக்கிறது.

ஆனால், இருப்பதிலே அதிக வட்டியுள்ள கடன் என்பது கிரெடிட் கார்டின் மூலம் வாங்கும் கடன்தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை. குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் செலுத்தாவிட்டால் ஆண்டுக்கு 36% வரை நீங்கள் வட்டி கட்டவேண்டி இருக்கும். இந்தத் தொகையை வாங்கியவர்கள் குறைந்தபட்ச தொகையை செலுத்திவிட்டு மீதியைச் செலுத்தாமல் போவதினால்தான் பலரும் இந்தப் பொறியில் சிக்குவார்கள்.



மீளும் வழி:

கிரெடிட் கார்டு தரும் கெடு நாட்களுக்குள் நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகையைக் கண்டிப்பாகச் செலுத்திவிடுவது அவசியம். அப்படிச் செலுத்த முடியாது என உங்களுக்கு நன்கு தெரியும்பட்சத்தில் கிரெடிட் கார்டு கடனை வாங்காமல் தவிர்த்துவிடுவதே புத்திசாலித்தனம்.

ஏதோ ஒரு அவசரத்தில் கிரெடிட் கார்டு மூலம் லட்சக் கணக்கில் கடன் வாங்கிவிட்டு, அந்தக் கடனைத் திரும்ப அடைக்க முடியாமல் தவியாய் தவிக்கிறீர்கள் எனில், கடன் தந்த நிறுவனத்திடம் பேசி, நீங்கள் வாங்கிய கிரெடிட் கார்டு கடன் தொகையை பர்சனல் லோனாக மாற்றிக் கொள்வதே சரி. இதன் மூலம் கடனுக்கு நீங்கள் கட்டும் வட்டியானது கணிசமாகக் குறையும். அதாவது, கிரெடிட் கார்டு கடனுக்கு 36% வட்டி எனில், பர்சனல் லோனுக்கு 16% முதல் 20% வரை வட்டி விதிப்பார்கள். வட்டிச் சுமை குறைவதுடன், திரும்பச் செலுத்தவேண்டிய தொகையை மாதத் தவணையாகவும்(இஎம்ஐ) கட்டலாம். சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் முன்கூட்டியே முழுத் தவணையையும் கட்டி, கணக்கு முடிக்க நினைக்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகையை (அபராதமாக) வசூலிக்கின்றன. அந்த மாதிரி கண்டிஷன் ஏதும் உண்டா என்பதைத் தெரிந்து கொண்டு மாதத் தவணையாக மாற்றுவது நல்லது.

2. கடனை முன்கூட்டியே கட்டி முடியுங்கள்!

தனிநபர் கடன்:

ஜாமீன், அடமானம் எதுவும் இல்லாமல் இருப்பதால் நம்மவர்கள் கல்யாணம் தொடங்கி காதுகுத்து வரை எதற்கெடுத்தாலும் தனிநபர் கடன் வாங்கிக் குவிக்கிறார்கள். பொதுவாக, தனிநபர் கடன் பெறுபவர்கள் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், ‘எதிர்பார்க்கும் ஒரு தொகை வந்துவிடும். அந்தப் பணத்தைக் கட்டி, பர்சனல் லோனில் இருந்து வெளியே வந்துவிடலாம்’ என்கிற நம்பிக்கையில் கடன் வாங்குகிறார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் அசல்கூட கட்ட முடியாமல் போகும்போது, வட்டி குட்டி போட்டு ‘நாணயம் தவறிய கடன்தாரர்’ என நம் போட்டோ போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது.

திருப்பூரைச் சேர்ந்த ரமேஷ், சொந்தத் தொழில் செய்துவரும் ஒரு சிறு தொழில்முனைவர். புதிய ஆர்டர்கள் விரைவில் வரும் என்கிற நம்பிக்கையில் தனிநபர் கடன் வாங்கினார். ஆனால், எதிர்பார்த்த ஆர்டர்கள் வரவில்லை. சில மாதம் கழித்துத்தான் அந்த ஆர்டர் வரவே வராது என்று தெரிந்தது. அப்படி, இப்படி என்று வந்த பணத்தை எடுத்து பர்சனல் லோனைக் கட்டி கடனை முடித்து விடலாம் என்று வங்கியை அணுகியபோதுதான் ப்ரீ-குளோஸர் பெனால்டியையும் சேர்த்து அவர் கட்டவேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டார்.

இந்தக் கடனை வாங்கும்போது நமக்கு சிபில் ஸ்கோர் நன்றாக இருக்கும்பட்சத்தில், குறைவான வட்டியில் கடன் கிடைக்கும். ஆனால், புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டியே சாத்தியமுள்ளது. இந்தக் கடன்கள் பெரும்பாலும் குறைவான காலத்தில் திரும்பக் கட்டும் விதமாக வழங்கப்படுகிறது.

நிலையான வட்டி (ஃபிக்ஸட் ரேட்) விகிதத்தில்தான் தனிநபர் கடன் வழங்குகிறார்கள். ஆர்பிஐ விதிகளின்படி, மாறுபடும் (ஃப்ளோட்டிங் ரேட் இன்ட்ரெஸ்ட்) விகிதங்களுக்கு மட்டுமே இந்த அபராதம் வசூலிக்கப்படுவதில்லை.

சில வங்கிகள் 12 - 18 மாதங்களுக்குப் பிறகு ப்ரீ-குளோசர் அபராதம் வசூலிப்பதில்லை. ஆக, தேவை இல்லாமல் கடன் வாங்கி பணத்தை பொருட்களிலோ வங்கியிலோ முடக்க வேண்டாம். இப்போதெல்லாம் முன்கூட்டியே அனுமதி (ப்ரீ அப்ரூவல்) பெற்றால் 1-2 நாட்களிலே கடன் கிடைத்துவிடும்.

மீளும் வழி:

ஒருவர் ரூ.3 லட்சம் கடனை 36 மாதத் தவணையில் 18 சதவிகித வட்டியில் வாங்கியுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். ஓராண்டு கட்டி முடித்தபின்னர், போனஸோ அல்லது வேறு வகையிலோ பணம் வரும்பட்சத்தில், யோசிக்காமல் கடன் தொகையை கட்டிவிட வேண்டும்.

முன்கூட்டியே கடனை முடிக்க பெரும்பாலும் 4% அபராத வட்டி விதிக்கப்படுகிறது. ரூ.3 லட்சத்தில் ஓராண்டு தவணை கட்டியது போக உள்ள ரூ.2.09 லட்சத்துக்கு முன்கூட்டியே செலுத்தும் தொகை ரூ.8,386. அபராத வட்டி 4% போனால் போய்த் தொலைகிறது என்று கணக்கு பார்க்காமல் கட்டிக் கடனை அடைப்பதன் மூலம் நீங்கள் 62,100 ரூபாய் வட்டியை மீதப்படுத்தலாம். கையில் பணம் இருந்தால், கடனைக் கட்டி முடிப்பது சேமிப்புக்கு ஈடான ஒன்று என்பதை மறக்கக் கூடாது.  



3. மைக்ரோ நிதி நிறுவனங்களை அணுகலாம்!

தண்டல் கடன்:

காய்கறி மார்க்கெட் போன்ற அன்றாடம் வியாபாரம் நடக்கும் இடங்களில் தண்டல் கடனை மிகச் சாதாரணமாக காணமுடியும். காலையில் 100 ரூபாய் கொடுத்தால் மாலையில் 110 ரூபாய் திரும்பச் செலுத்தவேண்டும். சில இடங்களில் வார இறுதியிலோ அல்லது மாத இறுதியிலோ கடனை வட்டியோடு திரும்பச் செலுத்தலாம்.

இந்த வட்டி ராக்கெட் வேக வட்டி என்பதால், தொகை பெரிதாக இருந்து அதை சில நாட்களுக்குள் திரும்பத் தரவில்லை எனில், கதை கந்தலாகிவிடும். இந்தக் கடனை வாங்கும் வரை சாதாரணமாகத்தான் தெரியும். வாங்கியபின் வட்டி கட்டவில்லை எனில் தொடை நடுங்க ஆரம்பித்துவிடும்.

மதுரையில் காய்கறி வியாபாரம் செய்துவரும் மாரிசாமி, ஏதோ ஒரு அவசரத்தில் தண்டல் கடன் வாங்கி, பிற்பாடு அதைத் திரும்பக் கட்டமுடியாமல் ஆளையே தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள்.

நல்லவேளையாக, அவருக்குத் தெரிந்த சிலர் கொஞ்சம் வசதியாக இருக்க, முழுப் பணத்தையும் கட்டி அவரைக் காப்பாற்றினார்கள். ஆபத்து நிறைந்த இந்தக் கடனை வாங்கும்முன் ஒன்றுக்கு நூறு முறை யோசிக்க வேண்டும். இந்தக் கடனை வாங்காமல் இருப்பதே சாலச் சிறந்தது மற்றும் பாதுகாப்பானது.

மீளும் வழி:

தற்போது பல்வேறு மைக்ரோ நிதி நிறுவனங்கள் குறைவான வட்டி விகிதத்தில் சிறு வியாபாரிகளுக்கு கடன் தந்து வருகின்றன. சுயதொழில் செய்பவர்கள் மைக்ரோ நிதி நிறுவனங்களை அணுகினால் தண்டல் போன்ற கொடூர வட்டிகளில் இருந்து தப்ப முடியும். இல்லையெனில் உழைக்கும் பணம் முழுவதும் வட்டிக்கே கட்டிவிட்டு வெறும் கையுடன் வீடு திரும்பவேண்டியிருக்கும்.

மைக்ரோ நிதி நிறுவனங்கள் பெரும்பாலும் ஆண்டுக்கு 26 சதவிகிதம் என்கிற அளவில் வட்டி விதிக்கின்றன. மேலும், கடன் பணத்தை வசூல் செய்யும் முறையும் ஏற்புடையதாகத்தான் இருக்கிறது. தற்போது சில சிறிய வங்கிகள் இரண்டு ஆண்டுகள் கண்டிப்பாக கட்டவேண்டும் என்கிற நிபந்தனையுடன் கடன் தந்து வருகின்றன.

இதில் அதிகபட்சமாக ரூ.35,000 வரை கடன் வாங்கிக்கொள்ளலாம். மாதம் அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் என அவரவர் வசதிக்கேற்ப திரும்பச் செலுத்தவும் வாய்ப்பளிக்கிறது. இன்னும் கூடுதலாக கடன் பெற்றவருக்குக் காப்பீடும் அந்த சிறு வங்கிகளே ஏற்படுத்தித் தருவதால், கடனாளியின் குடும்பத்துக்கும் பாதுகாப்பு கிடைக்கிறது.

4. முதலீட்டு பத்திரங்கள் அடமானம்!

கார் கடன்:

நகர்ப்புறத்து மத்தியதர வர்க்கத்து மனிதர்கள் எளிதில் சிக்கும் இன்னொரு கடன்தான் கார் கடன். திருச்சியைச் சேர்ந்த முருகன், ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். ‘கார் கடன் தர நாங்க ரெடி’ என வந்த விளம்பரத்தைப் பார்த்து, ஊர்க்காரர்களை அசத்த ரூ.5 லட்சம் (12% வட்டி) கடன் வாங்கி, காரை வாங்கினார். ஆனால், அவர் கார் வாங்கிய சமயம் அவர் வேலை பறிபோனது. அலுவலகத்தில் தரும் பெட்ரோல் செலவு கிடைக்காமல் போகவே, காரை வீட்டு வாசலில் சில வாரங்கள் நிறுத்தி வைத்தார். இப்படியே போனால் வட்டியும் நஷ்டம், காரின் மதிப்பும் குறையும் என்று நினைத்து, வேறு ஒரு இடத்தில் கடன் வாங்கி, கார் கடனை அடைத்தார்.

மீளும் வழி:

இதுமாதிரியான கடன்களிலிருந்து தப்பிக்க ஒரே வழி, நம்மிடம் இருக்கும் சொத்து அல்லது முதலீட்டுப் பத்திரங்களை அடமானம் வைத்து கடன் தொகையைக் கட்டி முடிப்பது நல்லது. குறிப்பாக, உங்கள் நிதி சார்ந்த முதலீடுகளான ஷேர்கள் மற்றும் பாண்டுகளை விற்பது, ஆயுள் காப்பீடு பாலிசி அடமானம் மூலம் கடன் பெறுவது அல்லது முதிர்வுக்குக் காத்திராமல் உங்கள் வைப்புத் தொகையைத் திரும்ப பெறுவதன் மூலம் நிதி ஆதாரங்களைத் திரட்டலாம்.

மேற்படி வாய்ப்புகள் எதுவும் இல்லையெனில் உங்கள் வங்கியை அணுகி, உங்கள் முந்தைய நிதிப் பரிமாற்றங்களின் அடிப்படையில் குறைவான வட்டி விகிதத்தில் கடன் கிடைக்குமா என்று கேட்டுப் பாருங்கள். இதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகுவது நல்லது. கேட்ட உடனே கடன் தொகையைத் தந்துவிட மாட்டார்கள் என்பதால் பொறுமை காப்பது அவசியம். இதனால் வட்டிச் செலவு குறையாது என்றாலும், ஓடாத கார் மூலம் உண்டாகும் நஷ்டத்தை தவிர்க்கலாம்.

5. தேவையான கடனையே பெறுங்கள்!

நெல்லையைச் சேர்ந்த நரசிம்மனுக்கு மொட்டை மாடியில் வீடு கட்ட ரூ.5 லட்சம் தேவைப்பட்டது. பர்சனல் லோன் மூலம் எளிதாகக் கிடைக்கிறது என்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்றில் வாங்கினார். வாங்கியபிறகுதான் தெரிந்தது, அதற்கான வட்டி மிக மிக அதிகம் என்று. அதே கடனை அவர் ஒரு பொதுத் துறையில் வாங்கி இருந்தால், வெறும் 10 சதவிகிதத்திலேயே வாங்கி இருக்கலாம் என்று தெரிந்துகொண்ட போதுதான் அவர் செய்த தவறு அவருக்கே தெரிந்தது.

ஆக, எந்தக் காரணத்துக்காக நீங்கள் கடனை வாங்கப் போவதாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எந்த வகை கடன் தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு அந்தக் கடனையே வாங்குவது அவசியம். காரணம், கடன் வகைக்கேற்ப வட்டி விகிதமும் மாறுபடும்.

மொத்தத்தில், கடன் வாங்க முடிவு செய்து விட்டால், எதற்காக வாங்குகிறோம், வட்டி எத்தனை சதவிகிதம், எவ்வளவு காலத்துக்குள் திரும்பக் கட்ட முடியும் என்பதையெல்லாம் யோசித்து வாங்கினால், கடன் சிக்கலில் நாம் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

எவ்வளவு வட்டி கட்டுகிறோம்?

எந்தக் கடனாக இருந்தாலும் எவ்வளவு வட்டி கட்டுகிறோம் என்பதை பலரும் துல்லியமாக கணக்குப் போட்டுப் பார்ப்பதே இல்லை. கணக்குப் பார்க்காமல் வட்டி கட்டுகிறவர்களுக்கு இதோ ஒரு கணக்கு...



இது ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு (ஓராண்டில் திரும்ப செலுத்தும்பட்சத்தில்) கட்டவேண்டிய முதல் மாத வட்டி. ஒருவர் எத்தனை லட்சம் ரூபாய்க்கு கடன் வாங்கி இருக்கிறாரோ, அந்த அளவுக்கு தொகையை பெருக்கிக் கொள்ள வேண்டியதுதான்.

தொகுப்பு: வரவனை செந்தில்

நீங்கள் வாங்கும் கடனில் எதற்கு முன்னுரிமை?

இப்படி ஒரு கேள்வியை நாணயம் ட்விட்டரில் (https://twitter.com/NaanayamVikatan) கேட்டோம். இந்த கேள்விக்கு வாசகர்கள் அளித்த பதில் இதோ:



வாசகர்கள் அளித்த முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது, பலரும் வீட்டுக் கடன் வாங்கி, சொந்தமாக வீடு வாங்கவே விரும்புகிறார்கள் என்று தெரிகிறது.

 வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க, திடீர் செலவுகளை சமாளிக்க என அவசரத் தேவைக்கு ஒரு லட்சம் ரூபாய்க்குள் அளிக்கப்படும் பர்சனல் லோன் வாங்கவும் பலரும் விரும்பவே செய்கின்றனர்.

ஆனால், பர்சனல் லோன் அளவுக்கு கிரெடிட் கார்டு கடன் வாங்க நினைப்பவர்களின் சதவிகிதமும் இருப்பது கவலைக்குரியதே. காரணம், பர்சனல் லோனுக்கு பொதுத் துறை வங்கிகளில் 16 - 18% வட்டி விதிக்கப்படுகிறது. ஆனால், கிரெடிட் கார்டு கடனுக்கு 36% வட்டி கட்டவேண்டும். இவ்வளவு வட்டி என்பதை தெரிந்துகொண்டுதான் இந்தக் கடனை வாங்குகிறார்களா என்கிற கேள்வி எழுகிறது.

கார் கடன் பெற நினைப்பவர்களின் விகிதம் மிகக் குறைவாக இருப்பது இயற்கையான விஷயமே. ஆன்லைன் மூலம் இயங்கும் டேக்ஸி வசதிகள் அனைத்து ஊர்களிலும் கிடைக்கத் தொடங்கியபின்பு, சொந்தமாக கார் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மக்களிடையே குறைந்து வருவதையே இது காட்டுகிறது.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001