திங்கள், ஜூன் 26, 2017

இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதேன்?

இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத ஒன்றை முஸ்லீம்கள் ஆணாயினும் பெண்ணாயினும் எதிர்ப்பதில் வியப்பேதுமில்லை. ஆனால் இஸ்லாம் அனுமதிக்க கூடிய ஒன்றாகிய பலதார மணத்தை பெண்கள் குறிப்பாக தமிழக முஸ்லீம் பெண்கள் எதிர்க்கின்றார்கள் என்ற கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை. மானுடத்தின் எல்லா பிரச்னைகளுக்கும் சரியான தீர்வுகளை சொல்லும் இஸ்லாம் அதனடிப்படையிலேயே பலதார மணத்தை பரிந்துரைக்கின்றது. அப்படியிருக்க இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கான காரணத்தையும் அந்த காரணங்களின் பின்னால் உள்ள வாதங்களையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

பலதார மணம் குறித்து குர்ஆன்
திருமறையின் 4 வது அத்தியாயத்தில் இறைவன் பலதார மணத்தை பற்றி குறிப்பிடும் போது மேலும் அநாதைகளின் விஷயத்தில் நீதி செலுத்த முடியாது என நீங்கள் அஞ்சினால் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக மும்மூன்றாக நான்கு நான்காக திருமணம் செய்து கொள்ளுங்கள் நீதம் செலுத்த மாட்டீர்கள் என நீங்கள் அஞ்சுவீர்களாயின் அப்பொழுது ஒருத்தியை மட்டும் (மணந்து கொள்ளுங்கள்) அல்லது உங்களது வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவளை கொண்டு மட்டும் (போதுமாக்கி கொள்ளுங்கள்) நீங்கள் அநீதி இழைக்காதிருப்பதற்கு இதுவே நெருங்கியதாகும் (திருக்குர்ஆன் 4:3) என்று குறிப்பிட்டு காட்டுகிறான்.
இஸ்லாத்தை விமர்சிப்பவர்களின் வாதங்கள்
இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள் பெரும்பாலும் பலதார மணத்துக்கு இஸ்லாத்தின் அனுமதியை குறித்தே அதிகம் விமர்சிப்பவர்களாக இஸ்லாத்தை பெண்களுக்கு அநீதி இழைக்கும் மதமாக சித்தரிக்க படாத பாடுபடுகின்றனர். ஆனால் உண்மையில் இஸ்லாத்துக்கு முந்தைய ஜாஹிலிய்யா அரபு சமூகத்திலும் உலகில் உள்ள கிரேக்க ரோம, பாரசீக இந்தியா உள்ளிட்ட அனைத்து சமூகத்திலும் வரையறை இன்றி பெண்களை மணமுடிக்க கூடியவர்களாகவும் பெண்களுக்கு எவ்வித உரிமையும் கொடுக்காமல் வெறும் போகப் பொருளாக பாவித்து வந்துள்ளதையும் நாம் வரலாறு நெடுகிலும் பார்க்கலாம்.
உண்மையில் வரைமுறையின்றி எல்லையில்லாமல் திருமணம் செய்து கொண்டிருந்த சமூகத்தில் ஒரு வரையறையை ஏற்படுத்தியது இஸ்லாமேயல்லாமல் உலகில் உள்ள எந்தமதமும் பலதார மணத்துக்கு வரையறையை ஏற்படுத்தவில்லை. மாறாக அவர்களின் இதிகாச கதாநாயகர்கள் 1000க்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்தவர்களாக இருப்பதை பார்க்கின்றோம். உண்மையில் இஸ்லாம் பலதார மணம் செய்வதற்கு பல கட்டுபாடுகளை விதித்து அதை ஒரு கடினமான செயலாக செய்திருக்கின்றது என்பது தான் உண்மை. மாறாக அது பலதார மணத்தை ஒரு கட்டாய செயலாக ஆக்கவில்லை.
பலதார மணம் – தர்க்க ரீதியான ஆதாரங்கள்
உலகில் ஆண்களை விட பெண்கள் ஒப்பீட்டளவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உடையவர்களாக இருப்பதால் நீண்ட காலம் வாழ கூடியவர்களாக உள்ளனர். பெண்களை சிசுவில் கொலை செய்யும் பழக்கம் இன்றும் உள்ள நம் நாடு போன்ற ஒரு சில நாடுகளை தவிர பிற நாடுகளில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். பண்டைய காலங்களில் போர்களில் ஆண்கள் பங்கெடுப்பதால் அதிகம் உயிரிழக்க கூடியவர்களாக இருந்ததையும் கருத்தில் கொண்டு அனைத்தையும் அறிந்த ஏகனாகிய அல்லாஹ் பலதார மணத்தை அனுமதித்து உள்ளான். பாலியல் உணர்வுகளில் சில போது மனைவியால் கணவனை திருப்தி படுத்த முடியாமல் போகலாம். எனவே கணவன் முறையற்ற உடலுறவை நாடி செல்வதை திசை திருப்பவும் பலதார மணம் அனுமதிக்கப் பட்டிருக்கலாம். அல்லாஹ் அறிந்தவனாக உள்ளான்.
அனுமதியே தவிர கட்டாயமல்ல
நாம் பலதார மணம் குறித்து பேசும் சூரா நிஸாவின் 4வது வசனத்தை ஆழ்ந்து சிந்தித்தால் அவ்வசனத்தில் நீதி செலுத்த முடியும் என்றால் மட்டுமே இரண்டாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இட்டிருப்பதை பார்க்கலாம். உண்மையில் இது மிக கடினமான ஒன்று. இஸ்லாம் பொதுவாக மனிதர்களுக்கு மத்தியில் நீதி செலுத்தும் படி கட்டளையிடுவதை  ஒரு கூட்டத்தினரின் மீதுள்ள வெறுப்பு உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விட வேண்டாம் என்ற திருமறை வசனத்தின் மூலம் விளங்கி கொள்ளலாம். அதிலும் குறிப்பாக உறவுகளுக்கு மத்தியில் நீதி செலுத்தும் படியும் பாரபட்சமின்றியும் இருக்கும் படி சொல்லும் ஏராளமான ஹதீஸ்களை நாம் பார்க்கலாம். உதாரணத்திற்கு குழந்தைகளில் ஒருவருக்கு இனிப்போ அல்லது உடையோ வாங்கி கொடுத்தால் அது போல் பிற குழந்தைகளுக்கும் வாங்கி கொடுக்கும் படி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்.
நீதி செலுத்துதல் எளிதான ஒன்று அல்ல
ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைகளுக்கு மத்தியில் பாரபட்சமின்றி நடப்பதே மிகவும் கடினமாக இருக்கும் போது இரு வேறு குடும்பங்களிலிருந்து வந்த பெண்களிடத்தில் நீதியாக நடப்பது கடினமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதிலும் குறிப்பாக இருவரும் வெவ்வேறு குடும்பம் மற்றும் பொருளாதார பிண்ணணியுடன் வரும் போது அதிலும் பெரும்பாலும் முதல் மனைவி 40 வயதுகளில் இருக்கும் போது இன்னொரு மனைவி 20களில் இருக்கும் போது ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படும். அதனால் தான் திருமறையில் சூரா நிஸாவின் 129ம் வசனத்தில் ‘நீங்கள் (நீதமாக நடக்க) ஆசை கொண்டாலும் (உங்கள் மனைவியரிடையே) பெண்களிடையே நீங்கள் நீதமாக நடக்க சக்தி பெற மாட்டீர்கள். (ஒரு மனைவியின் பக்கமே) முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள். (அந்தரத்தில்) தொங்க விடப்பட்டவள் போல் அவளை நீங்கள் விட்டு விடாதீர்கள்’ என்று அல்லாஹ் எச்சரிப்பதை காண்கிறோம்.
இரண்டாம் திருமணம் செய்ய தேவையான தகுதிகள்
குர்ஆன் மற்றும் சுன்னாவின் வெளிச்சத்தில் நாம் ஆராய்ந்து பார்த்தால் இரண்டாம் திருமணம் செய்ய விரும்புபவர்கள் குறைந்த பட்சம் கீழ்காணும் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
1. முதலாவதாக பொருளாதார வசதி இருக்க வேண்டும்
2. அனைவரிடமும் நீதியுடன் நடக்க வேண்டும்.
3. எந்த மனைவியின் பொருட்டு இன்னொரு மனைவிக்கு அநீதி இழைக்க கூடாது
4. பெண்ணின் பாலியல் தேவைகளை நிறைவேற்ற கூடிய உடல் தகுதி.
5. எல்லா மனைவியின் குழந்தைகளையும் சரிசமமாக நடத்த வேண்டும்
இரண்டாம் திருமணம் – பெண்கள் எதிர்ப்பதேன் ?
இஸ்லாம் அனுமதிக்கும் பலதார மணத்தை முஸ்லீம் பெண்கள் எதிர்ப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இரண்டாம் திருமணம் செய்ய தேவையான தகுதிகள் இல்லாதவர்களும் வெறும் மோகம் ஆசையினால் இரண்டாம் திருமணம் செய்வதும் இரண்டாம் திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தை மேற்கோள் காட்டுவோர் திருமணத்திற்கு பின் செய்ய வேண்டிய கடமைகளில் இஸ்லாத்தை புறக்கணிப்பதும் இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
பெண்களின் இயல்பும் மனோநிலையும்
உலகில் உள்ள எல்லோரின் மனநிலையும் இயல்பும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்பதை சாதாரண உடை, உணவு விஷயத்திலேயே பார்க்கின்றோம். இன்று தமிழகத்தில் உள்ள முஸ்லீம்கள் எல்லோரும் சில தலைமுறைகளுக்கு முன் வேற்று மார்க்கத்திலிருந்து வந்தவர்களாக தான் இருப்போம். அந்த அடிப்படையில் தமிழ் கலாச்சாரத்தில் பொதுவாக பெண்கள் எதை வேண்டுமானாலும் பங்கிட்டு கொள்வார்களே தவிர கணவனை பங்கிட்டு கொள்ள முன் வர மாட்டார்கள். எப்படி தாய் தன் மகன் திருமணம் முடித்து விட்டால் எங்கே தன்னை நேசித்த மகனின் பாசம் தன்னிடமிருந்து மருமகளிடம் சென்று விடுமோ என்ற அடிப்படையில் மருமகளை எதிரியாக பாவிக்கிறாளோ அது போல் தன்னுடைய கணவன் வேறு பெண்ணை திருமணம் முடித்தால் தன் மீதான கணவனின் அன்பு திசை மாறி போய் விடும் என்ற பயமும் பெண்கள் ஆண்களின் இரண்டாம் திருமணத்தை எதிர்ப்பதற்கு காரணமாக இருக்கலாம்.
பெண்களுக்கு தெரியாமல் நடக்கும் ரகசிய திருமணங்கள்
சமீபகாலமாக இரண்டாம் திருமணம் செய்யும் பலர் தற்காலிக பிரச்னைகளை தவிர்க்க தங்கள் மனைவிக்கு தெரியாமலேயே இன்னொரு பெண்ணை திருமணம் செய்கின்றனர். குறிப்பாக அழைப்பு பணியில் ஈடுபடும் பலர் இவ்வாறு செய்வதால் அழைப்பு பணியில் ஈடுபடுவோர்க்கு பெண் கொடுப்பதற்கே யோசிக்கும் நிலையையும் பார்க்கின்றோம். ‘உங்கள் மனைவியிடத்தில் சிறந்தவர்களே உங்களில் சிறந்தவர்கள்’ எனும் பெருமானாரின் வாக்குக்கு மாறாக போர்களத்தில் கூட மனைவியின் ஆலோசனையை கேட்பதற்கு பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்வில் நமக்கு முன்மாதிரி இருக்கும் போது ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருப்பது அப்பெண்ணுக்கு கணவனின் மேல் வெறுப்பை தான் ஏற்படுத்தும். தற்காலிக சங்கடங்களுக்கு பயந்து கடைசியில் விஷயம் வெளியே தெரியும் போது அப்பெண்ணுக்கு சமுதாயத்தில் ஏற்படும் அவமானமும், குத்தல் பேச்சுகளும், நையாண்டிகளும் சொல்லி மாளாது. இவ்வளவு முக்கியமான விஷயத்தையே மறைத்த கணவன் இன்னும் எதை எதையெல்லாம் மறைத்திருப்பான் என்ற சந்தேகமும் இரண்டாம் திருமணத்தை பெண்கள் எதிர்க்கும் காரணங்களில் ஒன்றாகும்.
பெண்களின் தேவைகள் நிறைவேற்றப்படாமை
இரண்டாம் திருமணம் செய்யும் பலர் அதற்கு தேவையான பொருளாதார வசதி இல்லாமலேயே திருமணம் செய்வதால் பெண்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் தவிப்பதை பார்க்கின்றோம். ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் இரண்டாம் திருமணம் செய்பவர்கள் மனைவியிடம் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகளுக்கெல்லாம் இரண்டாம் திருமணம் செய்பவர்கள் திருமணம் முடித்தவுடன் பொருளாதார வசதியின்மை காரணமாக இருவரையும் திருப்திபடுத்த முடியாமல் தவிப்பதை பார்க்கின்றோம்.
அதிலும் முதல் மனைவியுடன் குடும்பமாக வாழ வசதியில்லா வளைகுடா மாப்பிள்ளைகள் கூட இரண்டாம் திருமணம் செய்வது இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரணானது. குழந்தை இல்லை என்று இரண்டாம் திருமணம் செய்பவர்கள் சில சமயங்களில் அதற்கு காரணமாக தாங்களும் இருக்கலாம் என்பதை மறந்து விடுகின்றனர்.  சொந்த ஊரை விட்டு வேறு ஊரிலோ அல்லது வேறு நாட்டிலோ வாழ்பவர்கள் மனைவியை வருடத்திற்கு ஒரு முறை பார்ப்பதால் தங்கள் இச்சையை தீர்த்து கொள்வதற்காக போன இடத்தில் திருமணம் செய்பவர்கள் ஏனோ ஊரில் இருக்கும் தன் மனைவிக்கும் அத்தேவை இருக்கும் என்பதை எளிதில் மறந்து விடுகின்றனர். இரண்டாம் திருமணம் செய்வதை மார்க்க கடமையாகவே பர்ளு கிபாயாவாகவே சித்தரிக்கும் நம்மவர்களில் பலர் வசதியின்மையால் சுன்னாவுக்கு மாற்றமாக இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் வைத்திருப்பவர்களாகவோ அல்லது இரண்டாம் மனைவியை அவளின் தாய் வீட்டிலேயே தங்க வைப்பவர்களாக உள்ளதை பார்க்கின்றோம்.
குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படல்
ஆண்கள் இரண்டாம் திருமணம் செய்வதால் அதிகம் பாதிக்கப்படுவது எதிர்கால சந்ததியினரான நம் குழந்தை செல்வங்கள் தான் என்றால் அது மிகையானதல்ல. இரண்டாம் திருமணம் செய்தவுடன் தன்னுடைய நேரத்தை இன்னொரு குடும்பத்துக்கும் சேர்த்து செலவிட வேண்டியவனாக இருப்பதால்  தந்தையிடமிருந்து அது வரை கிடைத்த பூரண அன்பு குறைந்து விடுவதால் குழந்தைகள் உள ரீதியாக பாதிக்கப்படுகின்றன.
அது மாத்திரமல்லாமல் குழந்தைகள் வயதை ஒத்த சிறுவர்கள் பள்ளிக்கூடத்திலும் தெருவிலும் கேலி, கிண்டல் செய்யும் போதும் மனம் உடைந்து விடுகின்றனர். ஆறுதலுக்கு தாயாரிடம் வரும் போது அவரும் கணவர் மேல் உள்ள கோபத்தை குழந்தையிடம் காட்டும் போது குழந்தைகள் வெகுவாக பாதிக்கப்படுகிறார். இன்றைய போட்டி நிறைந்த சூழலில் சிறுவர்கள் பெற்றோரின் முழு ஆதரவுடன், வழிகாட்டலுடன் மட்டுமே அமைதியான சூழலில் தங்கள் எதிர்காலத்தை நோக்கி சரியான திசையில் செல்ல இயலும். அது போல் மனைவிகள் மத்தியில் காட்டும் பாரபட்சம் குழந்தைகளின் மத்தியில் எதிரொலிப்பதை பார்க்கின்றோம். அது போல் சில சமயங்களில் தன்னுடைய தாயாரின் பிரச்னைகளுக்கு எல்லாம் தன் தந்தையின் இரண்டாம் திருமணமே காரணம் என்று நினைக்கும் குழந்தைகளின் உள்ளத்தில் தந்தை ஒரு வில்லனாக பதிந்து விடுகிறார்.
முடிவுரை
இஸ்லாம் அனுமதித்துள்ள இரண்டாம் திருமணம் தேவையான சந்தர்ப்பங்களில் அதற்கு தேவையான தகுதியுள்ளவர்களால் தங்கள் மனைவியிடத்தில் பக்குவமாக எடுத்து சொல்லி அவர்களையும் அதற்கேற்ப தயார் செய்திருந்தால் அவர்களே முன் வந்து அதனை ஆதரிப்பார்கள்.
எனவே பெண்களின் இரண்டாம் திருமணத்துக்கான எதிர்ப்புக்கான முக்கிய காரணமாக நாம் அவர்களின் கலாச்சாரம், இயல்பையும், இரண்டாம் திருமணத்தை பெண்களின் மேல் எழும் சிறு பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களை பிளாக் மெயில் செய்யும் ஒரு ஆயுதமாக கையாளும் ஆண்களையும் இரண்டாம் திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தை ஆதாரம் காட்டும் ஆண்கள் திருமணம் முடித்தவுடன் அவர்களுக்கு மத்தியில் நீதியின்றி நடப்பதும் குழந்தைகளுக்கு மத்தியில் கூட பாரபட்சம் காட்டுவதுமே முக்கிய காரணங்களாகும். இவை தவிர்க்கப்பட வேண்டுமென்றால் இஸ்லாம் சொல்லுகின்ற தகுதிகள் உள்ளோர் மட்டும் தேவைப்படும் சந்தர்ப்பங்களில் இரண்டாம் திருமணம் செய்வதை கொண்டும் அதை கொண்டு முதல் மனைவிக்கு எப்பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதிலும் அதை அவர்களுக்கு புரிய வைப்பதிலுமே உள்ளது. அப்படிப்பட்ட ஓர் சமூகத்தை இம்மண்ணில் அமைக்க அல்லாஹ் உதவி செய்வானாக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக