அர்த்தமுள்ள அழுகை

இமாம் ஜாஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சிறு குழந்தையாய் இருந்தபோது இமாமவர்களின் தாயார் அடுப்பு பற்ற வைத்துக் கொண்டிருந்தார்கள். இமாமவர்கள் எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்து சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்து விட்டார்கள். இதைக்கண்ட அவர்களின் தாயார் மகனை தூக்கி அணைத்தவாறு அழுகைக்குறிய காரணத்தை வினவினார்கள்.
குழந்தையாக இருந்த இமாம் ஜாஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: ‘இப்படித்தானே நரக நெருப்பு பாவிகளை எரிக்கும்? பெரிய விரகை பற்ற வைக்க சிறு சுள்ளிகளை முதலில் தாங்கள் பற்ற வைத்தது போல் முதலில் சிறு குழந்தைகளை நரகிலிட்டு பிறகு பெரியவர்களை இறைவன் நரகில் போடுவான் என்று நினைத்தேன். என்னையறியாமல் அழுகை வந்துவிட்டது’ என்றார்கள்.]
‘அவர்கள் குறைவாக சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.’ (அல்குர்ஆன் 9:82)
உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் சில காரியங்களுக்காக எப்பொழுதாவது அழுதிருப்பான். எதற்காகவும் அழாத மனிதன் உலகில் எவரும் இல்லை. உலகில் வாழும் பொழுது நாம் அழுத அழுகை நமக்கு மறுமையில் பயன் தருமா? கொஞ்சம் சிந்திப்போமே!
அழுகை என்பது இருவகை. ஒன்று உலக சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக அழுவது. மற்றொன்று மறுமை சம்பந்தப்பட்ட காரியங்களுக்காக அழுவது.
இன்று சில முஸ்லிம்களின் அழுகை பெரும்பாலும் உலக சம்பந்தப்பட்ட காரியங்களையே சார்ந்திருக்கிறது. அதாவது தனக்கு ஏற்படும் துன்ப துயரங்களுக்கும், தம்மைச் சார்ந்தவர்களின் மரணம் மற்றும் துன்பத் துயரங்களுக்கும் மட்டுமே அழுகின்றனர். ஆனால், தாம் செய்துவிட்ட சிறிய, பெரிய பாவங்களை நினைத்து அல்லாஹ்வை அஞ்சி அவர்கள் அழுவதில்லை.
தன்னுடைய பொறுப்பிலுள்ள மனைவி, மக்கள் கடமையான ஐவேளைத் தொழுகைகளைத் தொழாமல், நோன்பு காலங்களில் நோன்பு நோற்காமல், பலவிதமான பாவ காரியங்களில் மூழ்கிக் கொண்டு அல்லாஹ், ரஸூலுக்கு மாறுபட்டு நடக்கின்றார்களே! நாளை நாம் அல்லாஹ்விடம் இதுபற்றி என்ன பதில் கூறுவோம்? என்று அஞ்சி அழுவதில்லை. நம்முடைய அழுகைகள் அனைத்திலும் மறுமையின் வெற்றியே குறிக்கோளாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் திருக்குர்ஆன் மூலம் எச்சரிக்கின்றான்:
‘அல்லாஹ்வையும் அவன் இறக்கியுள்ள முஃமின்களுக்கு அவர்களுடைய இதயங்கள் உண்மையான (வேதத்)தையும் நினைத்து அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா?’ (அல்குர்ஆன் 57:16)
எனவே அல்லாஹ்வுக்கு கோபமூட்டும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் நம்மையும், நம் குடும்பத்தார்களையும் தடுத்து நிறுத்துவதோடு நாம் செய்துவிட்ட பாவங்களை நினைத்து அழுது பாவமன்னிப்பு தேடுவது அவசியம்.
நன்மைகள் குறைந்து விட்டதே என்று அழுத ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் :
ஒருநாள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது அருமை மகளார் ஹளரத் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் பார்க்கச் சென்றார்கள். அப்போது ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அழுது கொண்டிருந்தார்கள். மகளின் அழுகையைப் பார்த்து வேதனைப்பட்ட பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகளின் வயிறு ஒட்டி இருந்த நிலையைப் பார்த்தார்கள். பலநாள் பசியின் கோரப்பிடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருந்த நிலை புரிந்தது. (-வசதி இருக்கிறதே என்பதற்காக மூக்குபிடிக்க வெட்டுவதும், அநியாயத்துக்கும் உணவை வீண் விரயம் செய்யும் முஸ்லிம்கள் ஒரு கணம் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருமை மகளாரின் நிலையை எண்ணிப்பார்க்க வேண்டும்.)
அருமை மகளே! பசியால் அழுகிறாயாயா?’ என்ற கேட்டார்கள்.
‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! பசியின் கொடுமையில் நான் அழவில்லை. நீங்கள்தான் கூறினீர்கள் ‘நின்று தொழுதால் நூறு நன்மைகள் என்றும், உட்கார்ந்து தொழுதால் நாற்பது நன்மைகள்’ என்றும். நான் இன்று நின்று தொழ முடியவில்லையே. அதனால் நூறு நன்மைகளை இழந்தவளாகி விட்டேனே என்று நினைத்து அழுதேன்’ என்றார்கள். இதனை செவியேற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அழுதார்கள். ஆனால் இன்று நாம் தொழாமல் இருப்பது பெரும் பாவம் என்றே கூட கருதுவதில்லை.
இன்று பலரிடம் உலக வாழ்வே முழு குறிக்கோளாக உள்ளது. அதனால் துன்பம், வறுமை, நோய், தொழில் நஷ்டம் போன்றவைகளைக் கண்டு அஞ்சி அழுகின்றார்கள். மேலும் தொழுகையாளிகளில் சிலர் கை, கால் வலிக்கின்றது, உடல் மிகவும் களைப்பாக இருக்கின்றது, மூட்டு வலி, முதுகு வலி என்றெல்லாம் பல காரணங்கள் கூறி உட்கார்ந்து தொழுது தனக்கு சேர வேண்டிய முழு நன்மைகளை குறைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் அன்னை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அழுததற்கு என்ன காரணம் கூறினார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நாளை நம் நிலை என்னவாகும்? :
ஹளரத் ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது மரணப் படுக்கையில் படுத்திருக்கிறார்கள். அவர்களின் உயிர் இறைவனின் சமூகம் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது;. அந்த நேரத்தில் ஹளரத் ஸஃதிப்னு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வருகிறார்கள். ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்ணீர் சிந்துவதைப் பார்த்து ‘ஸல்மானே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உம்மைப் பற்றி மிகவும் திருப்தி அடைந்திருந்தார்கள். அப்படி இருக்க நீர் ஏன் அழுகின்றீர்?’ என வினவினார்கள்.
அப்போது ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! மரணத்தைக் கண்டு பயந்து அல்லது உலகில் இன்னும் நீண்ட நாள் வாழ வேண்டும் எனும் பேராசையின் காரணமாக நான் அழவில்லை. நான் அழுவதின் காரணமென்னவென்றால் பெருமானார ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களுக்கு நல்லுரை வழங்கும்போது ‘ஒரு பிரயாணி எந்த அளவு தனக்காக பிரயாணத்தில் பொருளை வைத்திருப்பாரோ அந்த அளவே பொருளை நீ உலகத்தில் தேடிக்கொள்’ என்று கூறினார்கள். நானோ அதற்கதிகமாக உலகில் பொருளை தேடி வைத்திருக்கிறேனே! அதை நினைத்து அழுகிறேன்’ என்றார்கள்.
ஹளரத் ஸஃதிப்பு அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள். ‘இப்படி அவர் சொன்னதும் நான் அவர் வீட்டை நோட்டம் விட்டேன். அங்கு அதிகமாக ஒன்றுமில்லை. ஒரு தட்டும், ஏதும் பருகுவதற்கும், ஒள+ச் செய்வதற்கென்றும் ஒரு கலயம் மட்டுமே அங்கிருந்தது. இதைத்தான் அவர் உலகையே தேடிவிட்டதாக நினைக்கின்றார்.’
சத்திய ஸஹாபாக்களின் வாழ்க்கை அவ்வாறு இருக்கையில் அதற்கு முற்றிலும் மாறாக இன்று சிலர் கோடிக்கணக்கில் பணம் சேர்த்து மாடி மீது மாடி கட்டி உலகில் வாழும்பொழுது தொழில்துறை கொடுக்கல் வாங்கல் என்று முழுமூச்சாக உலக சிந்தனையிலேயே இருந்து, மரணமாகும் இறுதி நேரத்திலும் நம்முடைய இந்த தொழில் துறைகளை, சொத்து சுகங்களை அழித்து விடாமல் யார் கட்டிக் காப்பார்களோ என்ற மிகப் பெரும் கவலையில் வாடி வதங்குகிறார்கள். இவ்வளவு சொத்து சுகங்களை சேர்த்து வைத்து அனுபவித்தோமே இதற்காக அல்லாஹ்விடம் நாளை மறுமையில் என்ன பதில் சொல்லப் போகிறோம் என்பதை நினைத்து அவர்கள் அழுவதில்லை.
மறுமை சிந்தனை மட்டுமே வெற்றி தரும் :
நாம் மரணிக்கும்போது இறுதி வேளையில் மறுமை சிந்தனை மட்டுமே வெற்றி தரும். உலகில் வாழும்பொழுது மறுமை சிந்தனையோடு வாழ்ந்தால் மட்டுமே இறுதி நேரத்தில் மறுமை சிந்தனை ஏற்படும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இமாம் ஜாஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் நரக பயம் :
இமாம் ஜாஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சிறு குழந்தையாய் இருந்தபோது இமாமவர்களின் தாயார் அடுப்பு பற்ற வைத்துக் கொண்டிருந்தார்கள். இமாமவர்கள் எரிந்து கொண்டிருக்கும் அடுப்பையே பார்த்துக் கொண்டிருந்து சிறிது நேரத்தில் அழ ஆரம்பித்து விட்டார்கள். இதைக்கண்ட அவர்களின் தாயார் மகனை தூக்கி அணைத்தவாறு அழுகைக்குறிய காரணத்தை வினவினார்கள். குழந்தையாக இருந்த இமாம் ஜாஃபர் ஸாதிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்: ‘இப்படித்தானே நரக நெருப்பு பாவிகளை எரிக்கும்? பெரிய விரகை பற்ற வைக்க சிறு சுள்ளிகளை முதலில் தாங்கள் பற்ற வைத்தது போல் முதலில் சிறு குழந்தைகளை நரகிலிட்டு பிறகு பெரியவர்களை இறைவன் நரகில் போடுவான் என்று நினைத்தேன். என்னையறியாமல் அழுகை வந்துவிட்டது’ என்றார்கள்.
இங்கு ஒவ்வொரு பெற்றோரும் மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், பின்பற்ற வேண்டிய விஷயம்: இமாமவர்களின் பெற்றோர்கள் அல்லாஹ்வையும், இறைத்தூதர்களைப் பற்றியும் சுவன, நரக வாழ்வைப் பற்றியும், இதுபோன்ற சீரிய சிந்தனைகளை உணவோடு ஊட்டி வளர்த்துள்ளார்கள். நாமும் நமது குழந்தைகளை இதுபோன்று நம்முடைய குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே அல்லாஹ்வைப் பற்றியும், திருத்தூதர்கள் பற்றியும், சுவன நரகம் பற்றிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் எடுத்துக்கூறி இஸ்லாமிய முறைப்படி வளர்க்க வேண்டும்.
நரகை நினைத்து அஞ்சி அழும்போது பாவ காரியங்களில் ஈடுபட நம்மிடம் துணிவு பிறப்பதில்லை. நல்ல காரியங்களில் ஈடுபட மனம் ஆசை கொள்கிறது.
இவ்வுலகில் எங்க பார்த்தாலும் அல்லாஹ்வைப் பற்றியும் சுவனம் நரகம் பற்றியும் அத்தாட்சிகள் அதிகமுண்டு. மறுவுலக வாழ்வோ நிரந்தரமானது. ஆகவே மறுவுலக வாழ்வை நினைத்து அஞ்சி அழுவதே அர்த்தமுள்ள அழுகையாகும் என்பதை மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் நமக்கு உணர்த்துகின்றன.
கட்டுரையின் தலைப்பில் கண்ட திருவசனம் நயவஞ்சகர்களின் விஷயத்தில் இறக்கியருளப்பட்டதாக இருந்தாலும், இவ்வுலக வாழ்வே நிரந்தரமானது என்று எண்ணி அல்லாஹ்வையும், மறுமையையும், சுவன நரக வாழ்வையும் மறந்து ஹராம், ஹலால் பேணாமல் இவ்வுலகில் மனம்போன போக்கில் சம்பாதித்து பல சொத்துக்களைச் சேர்த்து எந்நேரமும் கூத்தும் கும்மாளமுமாக அதிகமாக சிரித்துக்கொண்டே வாழக்கூடிய அனைவரையும் அல்லாஹ் எச்சரிக்கின்றான் என்பதை உணர்ந்து தேவையற்ற சிரிப்புகளைத் தவிர்ந்து மறுமையை நினைத்து அர்த்தமுள்ள அழுகையாக நம் அழுகைகள் அமைவதற்கு அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

1.கணவனைக் கவரும் வழிகள் 40

பத்ருப் போர் உணர்த்தும் பாடமும் படிப்பினைகளும்!

மண்ணறை வேதனை 001