ஞாயிறு, ஜூலை 23, 2017

ஆலிம்களின் பிரச்சினைகளைக் கேட்க நாதியில்லை

ஆலிம்களின் பிரச்சினைகளைக் கேட்க நாதியில்லை

பள்ளிவாசல் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்த வழியுமில்லை

சமூக மேம்ப்பாட்டிற்காகவும் மார்க்கத்திற்காகவும் இந்த நாட்டிற்காகவும் தன்னலமற்ற சேவையை வழங்கியவர்கள் உலமா பெருமக்கள் என்பது வரலாற்று உண்மை.

பெரும்பாலான உலமா பெருமக்கள் காலங்காலமாக மிகக்குறைந்த வருமானத்தில் பல்வேறு வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் மிகவும் எளிமையாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

பள்ளிவாசலில் இமாம், அரபுக்கல்லூரியில் ஆசிரியர் பணி இவ்விரண்டுமே இவர்களின் முக்கியப்பணி.

இந்தப் பணிகூட நிரந்தரமானதா? என்றால் நிச்சயமாக இல்லை. ஒரு இமாம் எந்த நிமிடம் வேண்டுமென்றாலும் நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்படலாம். அவர் 50 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றினாலும் சரிதான். எவரும் எதையும் கேட்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து வருத்தப்பட இங்கே எவருமில்லை.

ஒரு மஹல்லாவில் பல்வேறு சிந்தனைகள்கொண்ட மக்கள், பலதரப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதென்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல. ஒவ்வொரு நிமிடமும் ஒருவித அச்சத்தோடும் பதற்றத்தோடுமே ஆலிம்கள் பணியாற்றுகிறார்கள்.

சின்ன சின்ன விசயங்களுக்காக ஆலிம்களை அவமானப்படுத்தும் நிலை மகா கேவலமானது. பள்ளிவாசலில் விளக்கு எரியவில்லையென்றாலும் கொசு கடித்தாலும் அதற்கும் அவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

வீட்டில் மனைவியை மக்களைச் சமாளிக்கவே நாம் திணறுகிறோம். ஆனால் ஆலிம்கள் ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டும். அனைவரையும் சமாளிக்க வேண்டும். இதில் வீடுகளில் செல்லாக் காசுகளாக இருப்பவர்களின் தொல்லையைத் தாங்கமுடிவதில்லை. பள்ளிவாசலில் பிரச்சினைகளை உருவாக்கி இமாம்களைக் குறைசொல்வதும் அவமானப்படுத்துவதும் ஃபேசனாகிவிட்டது. பள்ளிவாசலுக்குச் சென்று கத்தினால் அவன் பெரியமனுஷன் என்ற நிலை உருவாகிவிட்டது.

எல்லோரிடமும் குறைகள் இருக்கின்றன. ஆலிம்களிடமும் தவறுகள் உள்ளன. அவற்றை முறையாகச் சொல்கிறபோது அவர்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள். அதைவிட்டுவிட்டு, எல்லோருக்கும் முன்னால் சப்தமிடுவதும், எந்த அறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்வதும் நியாயமற்றது. பிறரை அவமானப்படுத்துவது மிகப்பெரும் குற்றம்.

இன்றைக்கு பெரும்பாலான பள்ளிவாசல்களில் இமாம்கள் தங்கள் உரைகளில் மார்க்கத்தை உள்ளது உள்ளபடியே சொல்ல முடிவதில்லை. எல்லா துறைகளுக்கும் மார்க்கம் வழிகாட்டுகிறது. ஆனால் எல்லாவற்றையும் சுதந்திரமாகப் பேச நிர்வாகம் அனுமதிப்பதில்லை. மீறி பேசினால் அடுத்த வினாடி அவரது வேலை காலி.

ஆலிம்கள் மற்றும் இமாம்களின் பலவீனங்கள்

- ஆலிம்களிடம் ஒற்றுமையின்மை.

- ஜமாஅத்துல் உலமா அமைப்பு வலுவானதாக இல்லை.
ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகளும் மூத்த ஆலிம்களும் பெரும்பாலும் பள்ளிவாசல்களில் இமாம்களாக, அரபு மத்ரஸா ஆசிரியர்களாக இருக்கிறார்கள். பணி தொடர்பான அச்சம் அவர்களுக்கும் உண்டு.

- ஆலிம்களைக் கட்டுப்படுத்துகிற நிலையில் ஜமாஅத்துல் உலமா இல்லை.

- எல்லா ஆலிம்களும் ஜமாஅத்துல் உலமாவில் உறுப்பினர்களாக இல்லை.

- வேலையில்லாப் பிரச்சினை

- ஒரு பள்ளிவாசலில் ஒரு இமாம் இருக்கும்போதே இன்னொரு ஆலிம் அதே பள்ளிவாசலில் வேலைக்கு முயற்சிப்பது.

- பணிநீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளின்போது ஆலிம்களுக்கு உதவ எந்த அமைப்பும் இல்லை.

- பெரும்பாலானவர்களிடம் காலத்திற்கேற்ற அறிவுத்தேடல் குறைவு.

- அரபு மத்ரஸாக்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டேயிருக்கிறது.

- சில ஆலிம்கள் செல்வந்தர்களையும் அரசியல் தலைவர்களையும் சார்ந்திருப்பது.

- பொருளாதாரத்திற்கு இமாமத் பணியை மட்டுமே சார்ந்திருப்பது.

- பயின்ற மத்ரஸாக்களை அடிப்படையாகக்கொண்டு வெளிப்படும் வேறுபாடுகள்

இன்னும் சில…

பள்ளிவாசல் நிர்வாக அமைப்பு:

சமீபகாலமாக பள்ளிவாசல்களில் இமாமத் பணியைக் கைப்பற்றுவதில் ஆலிம்களுக்கிடையே போட்டியும் ஒருவித வெறுப்பு அரசியலும் நிலவுகிறது.

பட்டம் பெற்ற மத்ரஸாவை அடிப்படையாகக்கொண்டு இந்தப் போட்டி தீவிரமடைகிறது. பள்ளிவாசல்களைக் கைப்பற்றுவதில் அநாகரீகமான போக்கும் நிலவுகிறது.

நிர்வாகத்தைப் பொறுத்தவரை சுன்னத் ஜமாஅத், தீவிர சுன்னத் ஜமாஅத், தப்லீக், தவ்ஹீத், ஜமாஅத்தே இஸ்லாமி, ஸலஃபி என பல்வேறு சிந்தனைக்கொண்டவர்கள் நிர்வாகத்தில், ஜமாஅத்தில் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் சிந்தனைக்கேற்ப இமாம்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் அரசியல் பின்புலம் உள்ள நிர்வாகிகள் அவர்களுடைய கட்சிக்கு ஆதரவானவர்களாக இமாம்கள் இருக்கவேண்டும் என விரும்புகிறார்கள்.
மீறினால் உடனே, பணிநீக்கம்.

உலகில் எந்தவொரு அமைப்பிலும் இத்தகைய கேடுகெட்ட நிலை இல்லை. நிர்வாகிகள் தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் தங்களுக்குக் கிடைக்கும் ஏதேனும் ஒரு சலுகையில் காலதாமதமோ அல்லது சிக்கலோ ஏற்பட்டால் சும்மா இருப்பார்களா?

இமாம்களின்ச ம்பளத்தைப் பற்றி கேட்கவே வேண்டாம் ?????

சுருக்கமாக சொல்வதானால், பள்ளிவாசல் நிர்வாகமும் இமாம்களின் அன்றாட வாழ்வும் மிகப்பெரும் பின்னடைவையும் வலிகளையும் தாங்கியதாகவே காணப்படுகிறது.

இது குறித்து உலமா பெருமக்களும், நிர்வாகிகளும், சமுதாய ஆர்வலர்களும் சிந்திக்க வேண்டும். எல்லோரும் சேர்ந்து சில பொது வரைமுறைகளை உருவாக்க வேண்டும். அவற்றைப் பதிவுசெய்து சட்டமாக்க வேண்டும்.

இறையச்சத்தை அடிப்படையாகக்கொண்ட நிர்வாகம்...

விருப்பு வெறுப்பின்றி மார்க்கத்தை உரக்க சொல்கின்ற ஆலிம்கள்...

எவரையும் எதிர்பார்க்காமல் தன்மானத்தோடு பணியாற்றுகின்ற இமாம்கள்…..

என்ன செய்யலாம்?

எப்படி செய்யலாம்?

யார் செய்யலாம்?                                              
Dr jahir Hussain Baqavi
University of Madras

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக